சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 30, 2023

யாரோ ஒருவன்? 123


நாகராஜ் வாக்கிங் கிளம்பும் போது சுதர்ஷனும் வந்து விட்டான். இருவரும் வாக்கிங் போகும் பக்கத்து வீட்டின் முன் புல்வெளியில் அமர்ந்திருந்த அனைவருடைய  பார்வையும் தங்கள் மேல் இருப்பதை சுதர்ஷனால் உணர முடிந்தது. போகும் போது நாகராஜாகவே ரஞ்சனி வந்ததிலிருந்து, தீபக், தர்ஷினி இருவரும் வந்து போனது வரை நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான்.

சுதர்ஷன் கேட்டான். “நீங்க ஏன் அந்த வீட்டுக்கு வர்றதா ஒத்துகிட்டீங்க மகராஜ். பேக்கிங் வேலையெல்லாம் நான் ராத்திரி கூடப் பண்ணியிருப்பேன். அப்படி நிறைய சாமான்களும் நம்ம கிட்ட இல்லையே. ரெண்டு மூனு மணி நேரத்தில் பேக்கிங் வேலை முடிஞ்சுடும்...”

நாகராஜ்பரவாயில்லைஎன்று சொன்னான். ஆனாலும் அந்த மாபாதகன் வீட்டில் நாகராஜ் காலடி எடுத்து வைப்பது கூட சுதர்ஷனுக்கு உடன்பாடாக இருக்கவில்லை. வாக்குக் கொடுத்த பின் மறுப்பது சரியாக இருக்காது....

சுதர்ஷன் மெல்லக் கேட்டான். “தீபக் வருவான்னு எதிர்பார்த்தீங்களா மகராஜ்

ஆமா. ஆனா அந்தப் பொண்ணும் அவன் கூட ஒட்டிகிட்டே வருவான்னு நினைக்கல.”

சுதர்ஷன் புன்னகைத்தான். “நல்ல ஜோடி

நானும் பைத்தியம் தான் என்று சொன்னபடி தீபக்கின் கைகளை உறுதியாகப் பிடித்தபடி தர்ஷினி நின்றது நினைவுக்கு வர நாகராஜும் லேசாகப் புன்னகைத்தான்.

இருவரும் மௌனமாக நடந்தார்கள். தூரத்தில் பாம்பாட்டி கைகூப்பியபடி ஓரமாக நின்றிருந்தான். சுதர்ஷன் நாகராஜைப் பார்த்தான். நாகராஜ் சொன்னான். “நான் தான் வரவழைச்சேன்....”

அவர்கள் அவனை நெருங்கிய போது பாம்பாட்டி பாதி வளைந்து நமஸ்கரித்தான். நாகராஜ் அவனை என்னவென்பது போலப் பார்த்தான்.

நீங்க வரச்சொல்ற மாதிரி உத்தரவு கிடைச்சுது மகராஜ். அதான் வந்தேன்....”

நீ நான் சொன்னபடி நல்ல பாதைக்கு மாறிட்டியா?”

மாறியிருக்கேன் மகராஜ். எனக்கு ஒரு நல்ல வழி நீங்க காட்டினா பழைய தப்புகளை கண்டிப்பா பண்ண மாட்டேன் மகராஜ்என்று பாம்பாட்டி ஆத்மார்த்தமாய் சொன்னான்.

நாகராஜ் அவனை ஊடுருவி ஒரு முறை பார்த்து விட்டு அவனுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய நாகரத்தினக்கல்லை வைத்துக் கட்டிய சிவப்புப் பட்டுத்துணியை எடுத்து பாம்பாட்டியின் வணங்கிய கையைப் பிரித்து அதில் வைத்து மூடினான்.  

பின் மென்மையான குரலில் சொன்னான். “ஒரு காலத்துல நீ ரயில்ல தொலைச்சது இது. இப்ப திருந்தின வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கிற வரைக்கும், நாலு பேருக்கு நல்லது செய்துகிட்டிருக்கற வரைக்கும், இது உன் கிட்ட இருக்கும். அகம்பாவத்துலயோ, அலட்சியத்துலயோ நீ பாதை மாறிப் போக ஆரம்பிச்சா பழையபடி இதைத் தொலைக்க வேண்டி வரும்.”

பாம்பாட்டி விரிந்த கண்களுடன் பிரமித்து சிலை போல நின்றான். அவன் இது திரும்பக் கிடைக்கும் என்று கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. அவன் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய ஆரம்பித்தது. ”மகராஜ்.... மகராஜ்.....” என்று முணுமுணுத்தவன் தெருவென்றும் பார்க்காமல் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நாகராஜை வணங்கினான். தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திகைப்புடன் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள்.

நாகராஜ் சொன்னான். “எழுந்திருகலங்கிய கண்களுடன் பாம்பாட்டி எழுந்தான்.

நான் நாளைக்கு இந்த ஊரிலிருந்து போயிடுவேன். நீ அந்த வீட்டுப் பக்கம் இனி வராதே. ஆபத்து. உபயோகமான வாழ்க்கை வாழ ஆரம்பி. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.” என்று சொல்லி விட்டு நாகராஜ் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.


ஜீம் அகமதின் ரகசிய செல்போன் எண்ணுக்கு அவனுடைய ஆள் ஒருவன் அழைத்துச் சொன்னான். “நரேந்திரனுக்கு இப்ப ராபாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமடங்கா பலப்படுத்தியிருக்கு. யாருமே அவனை வீட்டிலயாகட்டும், ஆபிஸ்ல ஆகட்டும், பயணத்திலாகட்டும் சுலபமா நெருங்க முடியாதுங்கறது தான் இப்போதைய நிலைமை

அவன் இந்தியா வந்திருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று அஜீம் அகமதுக்குத் தோன்றியது. இல்லா விட்டால் இந்த அளவு ரா ஆட்கள் மகேந்திரன் மகனுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்திருக்க மாட்டார்கள்...

நெற்றியைச் சுருக்கி யோசித்த அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியின் புதிய ரகசிய செல்போன் எண்ணுக்குப் போன் செய்து பேசினான். “பீம்சிங் நேற்றே  அங்கே போய்ச் சேர்ந்துட்டான்னு தகவல் வந்து சேர்ந்திருக்குஜி.... இன்னைக்கு ராத்திரி அவன் வேலையைச் சரியா முடிச்சுட்டா மீதியை காளிங்க சுவாம் கண்டிப்பா பார்த்துப்பார் தானே?”

அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம் ஜி.” ஜனார்தன் த்ரிவேதி உறுதியாகச் சொன்னார்.

உங்க மருமகனும் மதன்லாலும் எப்படி இருக்காங்க?”

சனியன்களுக்குப் பைத்தியம் பிடிச்சு நம்ம உயிரை எடுக்கறானுகஜி. ரெண்டு பேர் பொண்டாட்டிகளுக்கும் விஷயத்தைத் தெரிவிச்சு இங்கே வரவழைச்சேன். எல்லாம் சரியா முடிஞ்சுதுன்னா இவனுகள குடும்பத்தோட சேர்த்துடலாமேன்னு நினைச்சேன். பார்க்க வந்த அவன் பொண்டாட்டிகிட்ட என் மருமகன் வன் எப்பவோ வைப்பாட்டியா வெச்சிருந்த ஒருத்தி எப்படியெல்லாம் அனுசரணையா இருப்பான்னு சொல்ல ஆரம்பிச்சு, அவன் பொண்டாட்டி அவனைச் செருப்புலயே அடிச்சுட்டு அழுதுட்டே போயிட்டா. மதன்லால் அவனோட பொண்டாட்டிய பார்த்தவுடனேஉனக்கு நான் சம்பாதிச்சுக்குடுத்த சொத்துல இருந்து என் உயிரைக்காப்பாத்த ஐம்பது லட்சம் எடுத்துத் தர மனசில்லையான்னு கேட்டு அவ கழுத்தை நெரிச்சுருக்கான். அவளை அவன் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்குள்ளே நம்ம ஆளுகளுக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சுஜி. அவன் பொண்டாட்டி அவன் செத்தாலும் சொல்லியனுப்ப வேண்டாம்னு கோபமா சொல்லிட்டு போயிட்டா. அவனுக செத்தே தொலைஞ்சிருந்தாலும் நமக்கு இத்தனை தலைவலி இருக்காதுன்னு சில சமயம் தோணுது.. இன்னைக்கு ராத்திரி பீம்சிங் வேலையை முடிச்சான்னா இதுக்கும் ஒரு வழி பிறக்கும்னு காத்துகிட்டிருக்கேன்,..”

அஜீம் அகமது அடுத்ததாக வேறொரு ஆளுக்குப் போன் செய்தான். “ஜனார்தன் த்ரிவேதி வீட்டுக்கு  வெளியேயும், ஆபிஸ்க்கு வெளியேயும் ரா ஆளுக ஏற்பாடு பண்ணியிருந்த கண்காணிப்பு எல்லாம் எப்படி இருக்கு?”

பாதியா குறைஞ்சிருக்கு ஜீ. பழைய கெடுபிடி இல்லை…”

மகேந்திரன் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தியவர்கள் ஏன் ஜனார்தன் த்ரிவேதியைக் கண்காணிப்பதில் பழைய தீவிரத்தைக் குறைத்து விட்டார்கள் என்று அஜீம் அகமது யோசித்தான். ஜனார்தன் த்ரிவேதி மூலம் தெரியவர இனி எதுவுமில்லை என்றா, இல்லை வேறெதாவது காரணமா என்று அஜீம் அகமது யோசிக்க ஆரம்பித்தான்.


ஜீம் அகமது இருக்குமிடம் தெரிந்த பின் ரா தலைமையகத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடைபெற்றது. நரேந்திரன் அதில் பேசினான்.

அஜீம் அகமது ஒரு தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் இருக்கும் ஒரு வீட்ல தான் ஒளிஞ்சிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டோம். அங்கே அவனுக்கு அனுகூலமாய் இருக்கும் அம்சங்கள் நிறைய இருக்கு. ஆள்நடமாட்டம், போக்குவரத்து எல்லாம் ஒரு நாளில் மூன்று நேரங்களில் இருபது இருபது  நிமிடங்கள் மட்டுமே அதிகம் இருக்கும். அவன் அங்கிருந்து தப்பிப்பது என்றால் அந்த இருபது நிமிடங்களில் தொழிலாளர்களின் சீருடையில் தப்பிப்பது சுலபமாக இருக்கும். மற்றபடி அவன் விரும்பற அமைதியான இடம், சூழ்நிலை. யாராவது புதிதாக அந்தப் பக்கம் வந்தால் உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிற நிலைமை. வாரத்தில் மூன்று நாட்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப்பொருள்கள் ஓரிரண்டு லாரிகளில் வரும். அதே போல் தயாரிக்கப்பட்டு முடிந்த பொருள்கள் மூன்று நாட்களில் தொழிற்சாலையிலிருந்து ஓரிரண்டு லாரிகளில் போகும். ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாய் அரை மணியிலிருந்து ஒரு மணி வரை அந்த லாரிகள் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆனால் அந்த லாரிகளுக்கு வெளியில் வேலை இல்லை. தொழிற்சாலைக்குள் தான் வேலை என்பதால் பொருள்கள் போக்குவரத்திலும் அவனுக்குப் பாதகமான அம்சம் எதுவுமில்லை.. அடுத்த சாதகமான அம்சம் அந்த வீட்டின் பின்புறம் காலியிடம். சத்தமில்லாமல் அமைதியாக அவன் எப்போது வேண்டுமானாலும் பின்வழியாகவும் கூட நழுவி விடலாம்.”

“அவன் பல சமயங்களில் இது போல் பல நேர அமைதியும் சில நேர சந்தடிகளும் இருக்கிற இடங்களைத் தேர்ந்தெடுத்துப் பதுங்குவது நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. நியூசிலாந்தில் இது போல் அவன் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்து அவனைப் பிடிக்க போலீசார் போன போது பள்ளிக்கூடத்திற்கு எறிவெடிகுண்டு வீசி, உள்ளே ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் பள்ளிக்குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்று பயப்படுத்தி தான் தப்பித்திருக்கிறான்.   இங்கேயும் அவனைப் பிடிக்கப் போனால் அவன் அந்த மிரட்டலை விடும் வாய்ப்பு இருக்கிறது. 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட ஆட்கள் இருக்கையில் அவர்களைப் பணயம் வைத்து நாம் அவனைப் பிடித்து விட முடியாது… அதனால் அவன் இருக்கும் தெரிந்து விட்டால் கூட நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது….”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, January 26, 2023

சாணக்கியன் 41

 

கேகய நாட்டின் மீது போர் தொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருந்த ஆம்பி குமாரன் முழுமையாக அந்த ஆனந்தத்தில் திளைத்து விட முடியவில்லை. போருக்கான ஆயத்தங்களைப் பற்றி அலெக்ஸாண்டரிடம் பேசும் போதே அவன் சிறிதும் எதிர்பாராத மிகப்பெரிய அதிர்ச்சியை அடைய நேர்ந்தது. தட்ச சீலத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன் தன்னுடைய பிரதிநிதி ஒருவனை அலெக்ஸாண்டர் தட்சசீலத்தில் விட்டுப் போகத் தீர்மானித்திருப்பதைக் கேள்விப்பட்டது அவன் மகிழ்ச்சியை ஒரேயடியாக வடிய வைத்து விட்டது. அவனுடைய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அலெக்ஸாண்டரும் அவனுடைய ஆட்களும் கவனிக்கக்கூட இல்லை. தன்னுடைய பிரதிநிதியாக யாரை நியமிப்பது என்பது பற்றி மும்முரமாக அலெக்ஸாண்டர் செல்யூகஸுடன் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்தான்.

 

நட்புக்கரம் நீட்டி பரிசுகளும் தாராளமாக அளித்ததினாலேயே அலெக்ஸாண்டர் புளங்காகிதம் அடைந்து நட்பின் காரணமாகச் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்து விடுவான் என்று நினைத்தது தவறு என்று ஆம்பிகுமாரனுக்கு மெள்ளப் புரிந்தது. பரிதாபமாக அவர்கள் பேசுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டர் கேகயத்தை வென்ற பின் அப்படியே அடுத்தடுத்த பகுதிகளை ஆக்கிரமிக்க நினைத்தான். அதனால் திரும்பி தட்சசீலத்திற்கு அவன் வருவதாக இல்லை என்பது சசிகுப்தன் சொன்னதால் ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது…. கடைசியில் அலெக்ஸாண்டர் பிலிப் என்பவனைத் தேர்ந்தெடுத்து அந்தத் தகவலை ஆம்பி குமாரனுக்குத் தெரிவித்தான்.

 

உனக்கு பிலிப் நிர்வாகத்தில் உதவியாக இருப்பான் நண்பாஎன்று அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனிடம் சொன்னான்.

 

ஆம்பி குமாரனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. தலையை மட்டும் பரிதாபமாக அவன் ஆட்டினான்.   படையிலும் ஒரு சிறு பகுதியை பிலிப் தலைமையில் காந்தாரத்திலேயே விட்டுப் போகத் தீர்மானித்த அலெக்ஸாண்டர் அதற்குப் பதிலாக அதை விட அதிகமாக காந்தாரப்படையை கேகயப் போருக்கும் அதற்குப் பின்னால் செய்யப்போகும் போர்களுக்குமாய் அழைத்துப் போகத் தீர்மானித்தான். அதற்கு அவன் ஆம்பி குமாரனிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை. ஏன் ஆலோசனை கூடக் கேட்கவில்லை. அவன் இந்த விஷயங்களைத் தீர்மானிக்கும் போது காந்தாரம் தன்னுடைய நாடு என்பது போலத் தான் நினைத்திருக்கிறான் என்ற உணர்வு ஆம்பி குமாரனுக்கு ஏற்பட்டது.  அதற்கு ஏற்றாற் போல தட்சசீலத்தில் அங்கங்கே அலெக்ஸாண்டரின் கொடிகளும் நடப்பட்டன.  

 

சில மாதங்களுக்கு முன்பு கேகயப்படை தட்சசீலத்திற்குள் நுழைந்து அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்ட போதும் இப்படித் தான் கேகயக் கொடிகள் அங்கங்கே தட்சசீலத்தில் நடப்பட்டு இருந்தன. அப்போது கொதித்த அவன் மனம் இப்போது யவனர்களின் கொடிகளைப் பார்த்துக் கொதிக்கவும் வழியில்லாமல், ரசிக்கவும் முடியாமல் புழுங்குகின்றது. ஆம்பி குமாரன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடினான். யாரிடமும் எதையும் சொல்லவும் முடியவில்லை. மன பாரத்தை இறக்கி வைக்கவும் வழியில்லை.

 

தனியாகப் பேசக்கிடைக்கையில் சசிகுப்தனிடம் ஆம்பி குமாரன் விசாரித்தான். சசிகுப்தன் பாரசீக மன்னருக்கு எதிரான போரில் அலெக்ஸாண்டருக்கு ஆதரவு தெரிவித்து போரில் கலந்து கொண்டிருக்கிறான் என்று முன்பே கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் சசிகுப்தனின் பாக்ட்ரியா பகுதியிலும் இங்கு போலவே அலெக்ஸாண்டரின் ஒரு பிரதிநிதியும், ஒரு படையும் இப்போதும் இருக்கிறது என்பது தெரிந்தது. அதில் சசிகுப்தனுக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதும் தெரிந்தது. ஆதரவு தெரிவித்து போரில் அலெக்ஸாண்டரின் படையுடன் இணைந்தும் கூட அவனுக்கு எந்தச் சலுகையும் இல்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒரு காலத்தில் பாக்ட்ரியா பகுதி பாரசீக மன்னனின் ஆதிக்கத்தில் இருந்தது. இப்போது அலெக்ஸாண்டரின் ஆதிக்கத்தில் வந்திருக்கிறது என்பதால் சசிகுப்தனுக்கு இழக்க எதுவும் இல்லை. அவன் நிலைமையில் மாற்றமும் இல்லை. ஆனால் தன் நிலைமை அப்படி இல்லையே. காந்தாரம் அவன் பூமியாயிற்றே. அதை அவன் இப்போது தாரை வார்த்துத் தந்திருப்பது போல ஆயிற்றே என்று மனம் அவ்வப்போது ஓலமிட்டது.      

 

ஆனால் அலெக்ஸாண்டரை அழைக்காமல் இருந்திருந்தாலும் இங்கு கண்டிப்பாக வந்திருப்பான். எதிர்த்திருந்தால் போர் புரிந்திருப்பான். போரிட்டிருந்தால் தோற்கும் வாய்ப்பே அதிகம். அப்படித் தோற்றிருந்தால் வீரமரணமோ, சிறையோ கிடைத்திருக்கலாம். அதனால் நட்புக்கரம் நீட்டி அதைத் தவிர்த்திருக்கிறோம் என்ற எண்ணமும் எழுந்தது. நட்புக்கரம் நீட்டிய தனக்கே இந்த நிலைமை என்றால் கேகய மன்னன் புருஷோத்தமன் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று யோசித்து அவன் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டி வந்தது. புருஷோத்தமனின் பிணத்தைப் பார்ப்போமா, சிறைப்படுவதைப் பார்ப்போமா என்று யோசித்து இரண்டில் எதில் அதிக சந்தோஷம் கிடைக்கும் என்று யோசித்து அவமான உணர்வையும், கௌரவத்தையும் ஆம்பி குமாரன் ஒதுக்கி வைத்தான்.

 

கேகய மன்னருக்கு ஒற்றர்கள் மூலம் தட்சசீலத்திலிருந்து காந்தார, யவனப் படைகள் போருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி கிடைத்தது. அதற்கு முன்பே அவர் போருக்கு ஆயத்தமாகி இருந்தார். அலெக்ஸாண்டருக்கு அடிபணிய மறுத்த பின் அவன் போருக்கு வராமல் இருக்கப்போவதில்லை என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதுவும் அவர் போருக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் என்பதால் அப்போதே போருக்கான ஆயத்தத்தையும் ஆரம்பித்திருந்தார்.

 

போர் அவருக்குப் புதியதல்ல. பல முறை போரிட்டிருக்கிறார். எல்லாவற்றிலும் வென்றிருக்கிறார். பர்வதேஸ்வரன் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அதனால் அவர் உற்சாகமாகத் தானிருந்தார். ஆனால் இந்திரதத் மட்டும் ஒருவித கலக்கத்தை உள்ளுக்குள் உணர்ந்தபடியே இருந்தார். விஷ்ணுகுப்தர் அன்று வந்து பேசி விட்டுப் போயிருக்கா விட்டால் அவரும் தன் மன்னரைப் போலவே நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் தான் இருந்திருப்பார்.  ஆனால் விஷ்ணுகுப்தரின் கணிப்பு அவரை மிகவும் பாதித்திருந்தது.

 

மழைக்காலமும், விதஸ்தா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் கேகயத்துக்கு சாதகமாகத்தானிருக்கின்றன. அலெக்ஸாண்டர் அந்த நதியைத் தாண்டி வந்து போரிட்டு வெல்வது சுலபமல்ல.  கேகயத்தின் முழு படைகளையும் அவர்கள் இப்போது திரட்டியிருக்கிறார்கள். வேறு பக்கங்களில் இருந்து யாரும் போருக்கு வரவோ, ஊடுருவவோ வாய்ப்பு இல்லை என்பதால் தைரியமாக எல்லாப்படைகளையும் அவர்களால் ஒன்று திரட்ட முடிந்திருக்கிறது. எல்லாம் யோசிக்கையில் கேகயம் வலிமையாகவே இருக்கிறது. அலெக்ஸாண்டர் பக்கம் தான் பலவீனம் அதிகம். முக்கியமாக விதஸ்தா நதி….

 

புருஷோத்தமன் அனுபவம் வாய்ந்த சேனாதிபதிகளிடம் பேசும் போது இந்திரதத் உடனிருக்கையில் தான் கேட்டார். “ஒரு வேளை அலெக்ஸாண்டர் நம்மை வெல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?”

 

எதிராளியின் கோணத்திலிருந்தும் சிந்திக்க வேண்டும் என்பது புருஷோத்தமனின் அனுபவ பாடமாக இருந்திருக்கிறது.

 

அவர் கேட்டதற்கு ஒரு மூத்த சேனாதிபதி சொன்னார். “குறைந்த பட்சம் விதஸ்தா நதியில் வெள்ளம் வடியும் வரையாவது காத்திருக்க வேண்டும்”

 

படையோடு கிளம்பி விட்டு மழையும், வெள்ளமும் குறையும் வரை காத்திருக்கும் பொறுமை அலெக்ஸாண்டருக்கு இருக்கும் என்று இந்திரதத்துக்குத் தோன்றவில்லை. அப்படிக் காத்திருப்பது கால விரயம் மட்டுமல்ல, படைவீரர்களுக்குச் சோர்வையும் ஏற்படுத்தி விடும். அதனால் அதற்கு அலெக்ஸாண்டர் அனுமதிக்க மாட்டான். பின் என்ன செய்வான் என்று அவர் யோசித்துப் பார்த்தார். ஆனால் அவருக்குப் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

 

நண்பர் விஷ்ணுகுப்தர் இங்கு இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம். இந்திரதத்துக்குத் தோன்றாத சில தந்திரங்களை அவர் சொல்லியிருப்பார். விஷ்ணுகுப்தர் தட்சசீலம் வந்து சேர்ந்து விட்டார் என்று ஒற்றர்கள் அவருக்கு நேற்று தான் வந்து தெரிவித்தார்கள்.  தனநந்தன் விஷ்ணுகுப்தருக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும்… அதனால் தான் அவர் இங்கு வரவில்லை. எந்தச் செய்தியும் அனுப்பவில்லை…. ஒருவேளை தனநந்தன் அவர் கோரிக்கைக்குச் செவிமடுத்திருந்தாலும் கூட அவன் தலைமையில் போரிடுவதை கேகய மன்னர் கண்டிப்பாக விரும்பியிருக்க மாட்டார். அவரைப் பொருத்த வரையில் அலெக்ஸாண்டரும், தனநந்தனும் ஒன்று தான். அதனால் அவரை ஒத்துக் கொள்ள வைக்க இந்திரதத் பாடுபட்டிருக்க வேண்டும்…. அதனால் அந்த தர்மசங்கடமான சூழ்நிலை தற்போது இல்லை.

 

ஆனால் விஷ்ணுகுப்தர் எதையும் தோல்வி என்று ஒத்துக் கொண்டு ஒதுங்கும் நபர் அல்ல. ஒரு வழி மூடப்பட்டால் வேறு வழியைக் கண்டுபிடிக்காமல் ஓயும் பழக்கம் அவரிடம் எப்போதும் இல்லை… தன் நண்பர் இப்போது என்ன வழி கண்டுபிடித்திருக்க முடியும் என்று இந்திரதத் என்று யோசித்துப் பார்த்தார். பாவம் ஒரு தனி மனிதர் அரசியல் தீர்மானங்களில் என்ன வழி கண்டுபிடிக்க முடியும்? ஒரு தனிமனிதராக விஷ்ணுகுப்தர் பிறந்தது தான் அவருடைய துரதிர்ஷ்டம் என்று இந்திரதத்துக்குத் தோன்றியது.

 

 (தொடரும்)

என்.கணேசன்Wednesday, January 25, 2023

முந்தைய சிந்தனைகள் 91

 சிறிது சிந்திப்போமே! என் நூல்களிலிருந்து சில சிந்தனைகள்...

Monday, January 23, 2023

யாரோ ஒருவன்? 122


தீபக் பக்கத்து வீட்டிற்குள் நுழையும் தன் பின்னாலேயே வந்த தர்ஷினியிடம் சொன்னான். “நான் போய்ட்டு வர்றேன். நீ இங்கேயே இரு”

“நானும் வருவேன். அந்த ஆள் ஆபத்தானவரா தெரியறாரு. உன்னை எதாவது செஞ்சாலும் செஞ்சுடுவாரு” என்ற தர்ஷினியைக் காதலுடனும், கெஞ்சலுடனும் பார்த்தபடி தீபக் சொன்னான். “எங்கப்பாவைக் கொலைகாரர்னு எங்கம்மா கிட்ட சொல்லியிருக்காரு. அதை ஏன் சொன்னார், எப்படிச் சொன்னார்னு தெரிஞ்சுக்காட்டி என் மண்டை வெடிச்சுடும்னு கேட்கப்போறேன். தயவு செஞ்சு வீட்டுக்குப் போடி. வந்துடறேன்”

“உங்கப்பாவை மட்டுமா கொலைகாரன்னு சொன்னாரு. எங்கப்பாவையும் தான். அப்ப நான் வந்து கேட்க வேண்டாமா? எனக்கு மட்டும் உண்மை தெரிய வேண்டாமா?”  

“எனக்காவது அவர் கூடப்பேசி பழக்கம் இருக்கு. உன்னையும் பார்த்தா அவர் ஒன்னுமே சொல்லாம அனுப்பிச்சுடுவார்டி. சொன்னா கேளு. பத்து நிமிஷத்துல வந்துடறேன்”

“பத்து நிமிஷத்துல நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இங்கேயிருந்து போயிடலாம்டா” என்று தர்ஷினி உறுதியாகச் சொல்லவே வேறு வழியில்லாமல் அவளுடனேயே உள்ளே போனான்.

வரவேற்பறையில் அதே நாற்காலியில் இப்போதும் அமர்ந்திருந்த நாகராஜ் இறுகிய முகத்துடன் தீபக்கிடம் சொன்னான். “நான் உங்க ரெண்டு பேருக்கு அப்பாயின்மெண்ட் தரலையே”

“சாரி அங்கிள். நீங்க எங்க ரெண்டு பேர் அப்பாவையும் கொலைகாரங்கன்னு சொன்னது வீட்டையே சுடுகாடு மாதிரி ஆக்கிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி ஆள்களல்ல. நீங்க எப்பவுமே சரியா சொல்வீங்க. ஆனா இன்னைக்கு சொன்னதுல உண்மையில்லை. நீங்க இன்னொரு தடவை யோசிச்சு பார்த்து சரியா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும். அப்புறம் நான் வந்து தொந்திரவு செய்ய மாட்டேன்... ப்ளீஸ்”

“நான் சொன்னது உண்மையில்லைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் ஏன் கவலைப்படறே. நான் போலீசும் அல்ல. போலீஸ் கிட்ட புகார் குடுக்கறவனும் அல்ல. அதனால பயப்படாதே. உதறித்தள்ளிட்டு போயிட்டே இரு” என்று நாகராஜ் நாற்காலியிலிருந்து எழுந்தான்.

“அங்கிள் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க. எங்க ரெண்டு பேர் நிலைமைல ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க. உங்க அப்பாவை கொலைகாரர்னு யாராவது சொன்னா அதை உதறித்தள்ளிட்டு போயிட்டே இருப்பீங்களா?”

“உண்மையில்லைன்னு தெரிஞ்சா கண்டிப்பா அதைக் கண்டுக்க மாட்டேன்...”

“ஆனா சொன்ன ஆள் நீங்க ரொம்ப மதிக்கற ஆளாயிருந்தா... ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார்னு தெரிஞ்சுக்காம உங்களால நிம்மதியாய் இருக்க முடியுமா?”

“எங்கப்பா மேல எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தா என்னால நிம்மதியாய் இருக்க முடியும்”

“நீங்க மதிக்கற அந்த ஆள் ஏன் அப்படிச் சொன்னார்னு தெரிஞ்சுக்க நீங்க முயற்சியே பண்ண மாட்டீங்களா?”

நாகராஜ் ஏளனமாகச் சொன்னான். “ஒருத்தர் உண்மைகளைத் தெரிஞ்சு சொல்வார்னு ஒருத்தர் கிட்ட போறீங்க. அப்பறம் அவர் உண்மை சொன்னார்னா ஏன் அப்படிச் சொல்றார்னு ஆதங்கப்படறீங்க. இப்படி நீங்களே முரண்பாட்டோட மொத்த வடிவமா இருந்தா நான் என்ன செய்ய முடியும்? உன் கிட்ட பேச எனக்கு நேரமில்லை தீபக். எனக்கு வாக்கிங் போக நேரமாயிடுச்சு. நீ போகலாம்”

தீபக் முகமும் இறுகியது. ”எங்கப்பா அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு அந்த அளவு தைரியமும் கிடையாது. அந்த மாதவன் அவரோட எதிரியும் அல்ல. அந்த நண்பனை சாகடிச்சு அவர் அடைய முடிஞ்ச லாபமும் எதுவும் இருக்கலை. அப்படி இருக்கறப்ப நீங்க ஏன் எங்கம்மா கிட்ட அப்படி சொன்னீங்கன்னு என் கிட்ட சொல்லாம நான் இங்கேயிருந்து போக மாட்டேன்....”

தீர்மானமாகச் சொன்ன அவனை நாகராஜ் எரித்து விடுவது போல் பார்த்தான்.   தீபக் அந்த எரிபார்வையில் அசரவில்லை.   “நான் உனக்கு ரொம்பவே இடம் கொடுத்து தப்பு பண்ணிட்டேன்” என்று கடுமையான குரலில் அவனிடம் சொன்ன நாகராஜ் தர்ஷினியிடம் சொன்னான். “இந்தப் பைத்தியக்காரனைக் கூட்டுகிட்டு போம்மா?”

“நானும் பைத்தியம் தான். எங்கப்பாவை நீங்க ஏன் கொலைகாரன்னு சொன்னீங்கன்னு எனக்கும் தெரியணும். உண்மையைத் தான் சொல்றீங்கன்னு சொன்னா ஆதாரம் காட்டுங்க. போயிடறோம். அப்பறம் உங்களை எப்பவுமே தொந்திரவு செய்ய மாட்டோம்…” என்று தீபக்கின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு தர்ஷினி சொன்னாள்.

நாகராஜ் சிறிது நேரம் அவர்களிருவரும் உறுதியாய் நிற்பதைப் பார்த்து விட்டு வறண்ட குரலில் கேட்டான். “ஆதாரத்தை நான் உங்க ரெண்டு பேருக்கு மட்டும் காட்டணுமா. இல்லை உங்க குடும்பத்துக்கே ஒட்டு மொத்தமா காட்டணுமா?”

தீபக்கும் தர்ஷினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  தீபக் சொன்னான். “எங்கம்மா அவங்க கண்ணால பார்க்காம எதையும் நம்ப மாட்டாங்க. அவங்க இதுல ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால எங்க குடும்பத்துக்கே ஆதாரத்தை காட்டினா யாருமே இனி எப்பவுமே சந்தேகப்பட முடியாது. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்னென்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம்”

“சரி வாக்கிங் போயிட்டு வந்து காட்டறேன்” என்ற நாகராஜை இருவரும் நம்ப முடியாத திகைப்போடு பார்த்தார்கள்.

“அப்ப எல்லாரையும் கூட்டிகிட்டு எப்ப வரட்டும்?” தீபக் ஆவலோடு கேட்டான்.

“நாளைக்கு வீட்டைக் காலி பண்ணிட்டு போகப்போறேன். அதனால இங்கே பேக்கிங் வேலையெல்லாம் இருக்கு. ஆட்சேபணை இல்லைன்னா நான் பக்கத்து வீட்டுக்கே வந்து ஆதாரத்தைக் காட்டறேன்”

பக்கத்து வீட்டின் பக்கம் பார்வையைக் கூட அதிகம் திருப்பாத நாகராஜ் அவனே அங்கு வந்து ஆதாரத்தைக் காட்டுவதாகச் சொன்னது இருவரையும் திகைக்க வைத்தது. ரொம்ப நன்றிஎன்று இருவரும் சேர்ந்து சொன்னார்கள். தீபக் கேட்டான். “எத்தனை மணிக்கு வர்றீங்க?”


“ஆறு மணிக்கு”

“தேங்க்ஸ் அங்கிள்” என்று சொன்ன தீபக்கின் குரலில் உண்மையாகவே நன்றியுணர்வு இருந்தது.


நாகராஜ் இறுக்கம் குறையாமல் தலையசைத்து விட்டு உள்ளே போனான்.  

இருவரும் வெளியே வந்தார்கள். கல்யாண் வீட்டில் எல்லோருமே வீட்டு முன் உள்ள புல்வெளியில் இந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். மேகலாவுக்கு இவர்களிருவரும் போய் ஏடாகூடமாய் ஏதாவது பேசி நாகராஜ் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் இருந்தது. வேலாயுதம் கவலையுடன் மகனிடம் சொன்னார். “அவன் பாம்பு எதாவது மேல விட்டாலும் விடுவான்”. சரத்துக்கும் கல்யாணுக்குக் கூட அந்தப் பயம் லேசாக இருந்தது. அவர்கள் ரஞ்சனியைப் பார்க்க அவள் வேறெதோ உலகில் இருந்தாள். மகனும் தர்ஷினியும் போனபிறகு அவள் வாயே திறக்கவில்லை. மௌனமாகவும் சோகமாகவும் பழைய நினைவுகளில் அவள் தங்கி இருந்தது போலிருந்தது.

தீபக் தர்ஷினி இருவரையும் பார்த்தவுடன் அவர்கள் நிம்மதியடைந்தார்கள். தீபக்கிடம் நாகராஜ் என்ன சொல்லியிருப்பான் என்ற ஆவல் அனைவருக்கும் இருந்தது.  ரஞ்சனியும் தன் நினைவுகளிலிருந்து மீண்டு மகனைப் பார்த்தாள். சரத், கல்யாண், வேலாயுதம் மூவரும் பரபரப்புடன் எழுந்து விட்டார்கள்.

ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தீபக்கும், தர்ஷினியும் மாறி மாறி அங்கு என்ன நடந்தது என்று சொன்னார்கள். ஆதாரத்துடன் ஆறு மணிக்கு அவனே வருவதாய் சொன்னதை அணுகுண்டு போட்டது போல உணர்ந்தவன் சரத் தான். அவன் சர்வ பலத்தையும் சேகரித்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.  

“ஆதாரமா? அவனே கொண்டு வர்றதா சொன்னானா? அவன் கொண்டு வர்றது என்ன ஆதாரமாம்?“ என்று கேட்ட வேலாயுதத்தை தீபக்கும், தர்ஷினியும் எரிச்சலுடன் பார்த்தார்கள்.

இன்னும் ஒரு மணி நேரம் பொறுக்க முடியாதா தாத்தா?” என்று தர்ஷினி அவரைத் திட்டினாள்.

“இல்லை…. அவன் எதாவது சொன்னானான்னு கேட்டேன். அவ்வளவு தான்” என்று வேலாயுதம் சமாளித்தபடி கல்யாணை யோசனையுடன் பார்த்தார்.

நேரடியாகவே வந்து ஆதாரத்தைக் காட்டுவதாக நாகராஜ் சொன்னது கல்யாணை அதிர வைத்திருந்தது. கல்யாண் அது என்ன ஆதாரமாக இருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்தான். எதுவும் இருக்க வழியில்லை. அப்படி இருக்கையில் நாகராஜ் எப்படி அவ்வளவு தைரியமாக சொன்னான்?

வேலாயுதம் சொன்னார். “எனக்கென்னவோ அவன் உங்களைத் துரத்த வேற வழி தெரியாமல் அதைச் சொல்லியிருப்பான்னு தோணுது. அவனெல்லாம் நம்ம வீட்டுக்கு வர மாட்டான்….”

தீபக் உறுதியாகச் சொன்னான். “சொன்னால் அவர் செய்வார். அனாவசியமாய் வாக்கு குடுக்கற ஆள் அவரல்ல…. அவர் சொல்ற ஆதாரத்தை நம்மால ஏத்துக்க முடியுதா இல்லையாங்கறது வேற விஷயம்…”

பரிதாபமாக உட்கார்ந்திருந்த சரத்தைப் பார்க்கையில் அவனுக்குப் பாவமாக இருந்தது. ‘யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வது போல இந்த விஷயத்தில் நாகராஜ் அங்கிள் கணிப்பிலும் எதோ தவறு நேர்ந்திருக்கிறது. அவரே உணர்ந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்பார்.’ என்று தீபக் நினைத்துக் கொண்டான்.

அவனையே வெறித்துப் பார்த்தபடி சோகமே வடிவாக அமர்ந்திருந்த ரஞ்சனியைப் பார்க்கையில் தீபக்கின் மனம் உருகியது. அவன் அம்மாவை இப்படித் தளர்வான சோகமான நிலைமையில் என்றுமே பார்த்தது கிடையாது. தாய் அருகே அமர்ந்து அவள் தோளை இறுக்கிப் பிடித்தபடி சொன்னான். “இந்தக் குழப்பம் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல தீர்ந்துடும்மா. கவலைப்படாதே. அபூர்வமாய் அவர் கணக்கில் எதோ தப்பாயிருக்கு.”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, January 19, 2023

சாணக்கியன் 40

 

ற்ற மாணவர்கள் உறங்கச் சென்று விட்ட பிறகும் கூட சந்திரகுப்தன் நள்ளிரவு வரை சாணக்கியருடன் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் முன்னால் சொல்ல வேண்டாம் என்று நினைத்து, பிறகு இருவரும் தனியாக இருக்கையில் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளக்கூடிய விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரை தனநந்தன் அவமானப்படுத்தியதற்காக நிறையவே மனம் கொதித்தான். அவருடைய முடியாத குடுமி எப்போதும் அதை நினைவுபடுத்தும் விதமாகத் தொங்கிக் கொண்டிருப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. உணர்வுகளை எப்போதும் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய அவரே அவ்வளவு கொந்தளித்து சபதமெடுத்துக் கொண்டு இருக்கிறாரென்றால் எவ்வளவு வேதனையையும், அவமானத்தையும் அவர் அந்தக் கணத்தில் உணர்ந்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கையில் அவனுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதை அவன் குரலடைக்க அவரிடம் தெரிவித்த போது அவர் வருத்தத்துடன் புன்னகைத்தார்.

 

எனக்காக நான் உணர்ந்த அவமானம் மிகச்சிறியது சந்திரகுப்தா. ஆனால் நான் என் தேசத்திற்காக உணர்ந்த அவமானம் மிகப் பெரியது. குறுகிய மனங்களும். மரத்துப் போன இதயங்களும் உள்ள மனிதர்கள் இந்தப் புனித  தேசத்தில் நிறைந்து விட்டார்களே என்று தான் அதிக வருத்தப்பட்டேன். விஷ்ணுகுப்தன் என்ற தனியொரு மனிதன் கால ஓட்டத்தில் தோன்றி மறையக்கூடிய ஒரு புள்ளி. அதற்கு பெருமையென்ன, அவமானமென்ன? ஆனால் இந்த வேத பூமி அப்படியல்ல. தனநந்தன் தன்னுடைய இலாபம் கருதியாவது படையெடுத்து இங்கு வரச் சம்மதித்திருந்தால் அவன் என்  தந்தையைக் கொன்றதைக்கூட நான் மன்னித்திருப்பேன். ஆனால் தாயகத்தைக் காப்பாற்ற முடிந்த வலிமையிருந்தும், கடமைப்பட்டவனாக இருந்தும், அவனுக்கு லாபமிருந்தும் கூட அவன் மறுத்தது தான் என்னைக் கோபமூட்டி பழைய பகையையும் சேர்த்துப் புதுப்பித்தது. கோபத்தை அடக்குவதற்குப் பதிலாக அதை வளர்த்திக் கொண்டு அதையே ஒரு சக்தியாக்கி அஸ்திவாரமாக்கி தான் சபதம் போட்டேன். நான் என்றும் பின்வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே அதைச் செய்தேன்...”

 

அவர் தன் அவமானத்தை விட அதிகமாய் தாய்நாட்டுக்காக உணர்ந்தது அதிகம் என்று மறுபடியும் புரிந்த போது சந்திரகுப்தன் மனம் பிரமித்தது. எத்தனை பேரால் இப்படி உணர முடியும் என்று யோசித்துப் பார்த்தான். அவனாலேயே கூட அப்படி முடிந்திருக்காது. பாரதம் என்ற சொல்லையே அவன் அவர் மூலமாக அல்லவா கேட்டும் புரிந்து கொண்டும் இருக்கிறான்....

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “சரியாகப் பார்த்தால் நான் ஆம்பி குமாரன் மீது தான் அதிக கோபம் கொண்டிருக்க வேண்டும். அவன் தான் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டி இந்த மண்ணிற்குள் காலடி எடுத்து வைக்க அனுமதி தந்தவன். ஆனால் அந்த முட்டாள் மீது அதிக கோபம் எனக்கு வராததற்கு என்ன காரணம் என்றால் அவன் நட்புக்கரம் நீட்டியிருக்கா விட்டால் அலெக்ஸாண்டருடன் போர் புரிந்து தோற்றுத் தான் போயிருப்பான். அவன் புருஷோத்தமனிடம் சேர்ந்து அலெக்ஸாண்டருடன் போரிட்டிருந்தால்  மட்டும் தான் வெல்லும் வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆம்பி குமாரனின் தந்தை உயிரோடும், பழைய வலிமையோடும் இருந்திருந்தால் முன்பிருந்தே கொண்ட நட்பால் அவரும் புருஷோத்தமனும் இணைந்திருக்கலாம். இருவரும் இணைந்து அலெக்ஸாண்டரை வென்று துரத்தியடித்தும் இருக்கலாம். ஆனால் ஆம்பி குமாரன் ஆரம்பத்திலிருந்தே புருஷோத்தமனை எதிரியாக நினைப்பவன். புருஷோத்தமனும் அப்படித்தான். அப்படி இருக்கையில் அவர்கள் இணைந்து செயல்படும் வாய்ப்பே அவர்கள் மனநிலைப்படி இல்லை. ஆம்பி குமாரனின் அறிவு வளர்ச்சியும் அதற்கு உதவுவதாக இல்லை....”


சந்திரகுப்தன் மெல்லக் கேட்டான். “இனி நாம் என்ன செய்யப் போகிறோம் ஆச்சாரியரே? அலெக்ஸாண்டரை வெல்ல கேகய நாட்டுக்கு ஏதாவது வகையில் உதவி செய்யப் போகிறோமா?”

 

சாணக்கியர் மறுக்கும் பாவனையில் தலையசைத்தார். “கேகய நாடு கண்டிப்பாக அலெக்ஸாண்டரை வெல்ல முடியாது சந்திரகுப்தா. அதற்கு நாம் அவர்களுக்கு உதவவும் வழியில்லை.”

 

சந்திரகுப்தன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “தாங்கள் கேகய நாட்டுப் படையையும், புருஷோத்தமரின் வீரத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக எனக்குத் தோன்றுகிறது ஆச்சாரியரே. பர்வதேஸ்வரன் என்ற பெயர் படைத்த அந்த மாவீரர் இப்போது பெரும்படையையும் வைத்திருக்கிறார். அவருடைய சமீபத்திய வெற்றிகள் அவர் படையைப் பெருமளவு வளர்த்தியிருக்கின்றன. அதனால் அவர் மனம் வைத்தால் அலெக்ஸாண்டரை வெல்ல முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் இப்போது மழைக்காலம். மழையும், விதஸ்தா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் கூட ஓரளவு கேகய நாட்டுக்கே அனுகூலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் இந்த வெள்ளத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். யவன வீரர்கள் அதற்குப் பழக்கப்படாதவர்கள்…”

 

சாணக்கியர் தன் மாணவனின் புத்திசாலித்தனமான புரிதலை மெச்சும் வகையில் புன்னகைத்தார். பிற்காலத்தில் ஜீலம் நதி என்றழைக்கபடவிருக்கும் விதஸ்தா நதியை வெள்ளப்பெருக்கோடும் காலத்தில் கடப்பது சுலபமல்ல. யவனப்படைக்கு அது மிகவும் சிரமம் மட்டுமல்ல. புதிய அனுபவமாகவும் இருக்கும். காந்தாரப்படைக்கு அருகில் உள்ள பகுதியைப் பார்த்துப் பழக்கமிருக்கலாம் என்பதால் யவனப்படையை விட ஓரளவு சிரமம் குறைவாக இருக்கலாம் என்றாலும் அவர்களுக்கும் அதில் பயணித்துப் பழக்கமில்லை. இதை எல்லாம் வைத்து தான் சந்திரகுப்தன் சொல்கிறான்…

 

சாணக்கியர் சொன்னார். “நீ நினைக்கிற படி தான் புருஷோத்தமனும் கேகய படையும், நினைத்து சற்று அலட்சியமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் சந்திரகுப்தா. ஆனால் அலெக்ஸாண்டர் பல விதங்களில் வித்தியாசமாக சிந்தித்துப் பழக்கப்பட்டவன். அதனால் அவன் இந்தப் போரை வித்தியாசமாக அணுக வாய்ப்பு இருக்கிறது. அவனைப் போன்ற புத்திசாலி எதிலும் அலட்சியம் காட்ட மாட்டான். அதனால் அவன் ஏதாவது ஒரு வழி கண்டுபிடிப்பான்… பல நேரங்களில் வெல்வது படையின் வலிமையை விட யுக்தியின் வலிமை தான் சந்திரகுப்தா…”

 

சந்திரகுப்தனுக்கு அவரளவுக்குத் தீர்மானமாக எதையும் சொல்ல முடியவில்லை. அவன் மூளை ஒன்றைச் சொல்கிறது. ஆனால் ஆச்சாரியரின் மூளை இன்னொன்றைச் சொல்கிறது. எந்தக் கணக்கு பலிதமாகும் என்பது போருக்குப் பின்னால் தான் தெரியும்….

 

சந்திரகுப்தன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே. நீங்கள் சொல்வது போல் அலெக்ஸாண்டர் வென்றால் அது நமக்கு இன்னும் ஆபத்தல்லவா? அவன் தொடர்ந்து பாரதத்தின் உள்ளே முன்னேறிச் சென்று கொண்டே இருப்பானே. நீங்கள் எதற்குப் பயந்தீர்களோ அது முழுமையாகவல்லவா நடந்தேறி விடும். இதை நாம் எப்படிக் கையாளப்போகிறோம்? நாம் இனி செய்ய வேண்டியது என்ன?”

 

சாணக்கியர் சொன்னார்.  ”பாடலிபுத்திரத்திலிருந்து கிளம்பிய கணத்திலிருந்து நான் இதைப் பற்றியே தான் யோசித்துக் கொண்டு வந்தேன் சந்திரகுப்தா. இப்போது நமக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள். தெற்கில் தனநந்தன். வடக்கில் அலெக்ஸாண்டர். இருவரையும் நாம் வென்றாக வேண்டும்…”

 

சந்திரகுப்தன் திகைத்தான். இரண்டு பேரும் மாபெரும் படைகளை வைத்திருக்கக்கூடிய பேரரசர்கள். இவர்களோ தனி மனிதர்கள். இவர்களிடம் நாடும் இல்லை. படைகளும் இல்லை. செல்வமும் இல்லை….

 

அவனுடைய திகைப்பைப் பார்த்து சாணக்கியர் புன்னகை பூத்தார். ”சந்திரகுப்தா என்ன யோசிக்கிறாய்?”

 

சந்திரகுப்தன் திகைப்பின் காரணத்தை வாய்விட்டே சொன்னான். “ஆச்சாரியரே. நீங்கள் எதிரிகளாகச் சொல்பவர்கள் பேரரசர்கள். படைவலிமை கொண்டவர்கள். அவர்களிடம் செல்வத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் நாம் எப்படி அவர்களை வெல்லப் போகிறோம்? நம்மிடம் என்ன இருக்கிறது?”

 

சாணக்கியர் சொன்னார். “நம்மிடம் சிந்திக்கும் அறிவு இருக்கிறது. நம்மிடம் நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் உறுதி இருக்கிறது. காரியம் முடியும் வரை காத்திருக்கும் பொறுமையும் இருக்கிறது. இன்று நாம் தனியர்கள். இதுபோலவே நாம் கடைசி வரை இருந்து விடப்போவதில்லை. எதெல்லாம் இப்போது நம்மிடம் இல்லை என்று சொல்கிறாயோ அதெல்லாம் இனியும் இல்லாமலேயே போய்விடும் என்று அர்த்தமில்லை. இல்லாதவைகளை அறிவுடையவன் பெற்றுக் கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் முயற்சிகள் தேவை. அதைச் செய்யத் தயாராவோம்.”

 

அவர் வார்த்தைகள் மிக நிதானமாக வந்தன. உணர்ச்சி வேகத்தில் சொல்லப் பட்ட வார்த்தைகள் அல்ல அவை. கணக்கிட்டு உறுதியுடன், தெளிவுடன், தீர்மானமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. வார்த்தைகளை வெறுமனே அள்ளி வீசுபவரல்ல அவர் என்பதால் சந்திரகுப்தனுக்கு திகைப்புடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் தன் திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அலெக்ஸாண்டரைத் துரத்த ஒரு திட்டம். தனநந்தனை வெல்ல ஒரு திட்டம். சாணக்கியர் படிப்படியாக எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்தார். அவர் சொல்லி முடித்த பிறகும் சந்திரகுப்தனுக்கு இதெல்லாம் முடியுமா, ஆகிற காரியமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஆனால் அவன் எல்லாவற்றையும் விட அவரை அதிகமாக நம்பினான். அவனுடைய ஆச்சாரியர் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அவன் அறிவு எழுப்பிய சந்தேகங்களை விட மேலானது. அவரிடம் இம்மியளவு சந்தேகமும் தென்படவில்லை. அதை அவனால் உணர முடிந்தது. இது வரை அவர் அவ்வளவு உறுதியாகச் சொன்ன எதுவும் நடக்காமல் போனதில்லை…

 

சந்திரகுப்தன் மெல்லக் கேட்டான். “அப்படியானால் இப்போதைக்கு இந்தப் போரைப் பொருத்த வரை…”

 

சாணக்கியர் சொன்னார். “நாம் எதுவும் செய்யப் போவதில்லை. வேடிக்கை பார்ப்போம்”

 

(தொடரும்)

என்.கணேசன்