சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 30, 2023

சாணக்கியன் 50

 

சிலர் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இலக்கை மிக முக்கியமானதாக வைத்திருப்பார்கள். அவர்கள் சிந்தனை, பேச்சு, செயல், பேச்சு எல்லாமே அந்த இலக்கைச் சுற்றியே இருக்கும். அந்த இலக்கை அடைவது முடியவே முடியாது என்ற நிலை வந்தால் அவர்கள் முழு வாழ்க்கையும் அஸ்தமித்து விட்டது போல் அவர்கள் உணர்வார்கள். அவர்களால் வேறு எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டு  மீண்டும் உற்சாகத்தை மீட்டெடுத்துக் கொள்ள முடியாது. அந்த நிலைமையைத் தான் ஆம்பி குமாரன் தன் வாழ்க்கையில் எட்டியிருந்தான். கேகய மன்னனைக் கொன்றோ சிறைப்படுத்தியோ வெற்றியை நிலைநாட்டி விட்டு அலெக்ஸாண்டரின் இணையில்லாத நண்பனாக அப்பகுதியில் உலா வர வேண்டும், அவனைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் பயப்பட வேண்டும், வணங்க வேண்டும் என்றெல்லாம் அவன் எதிர்பார்த்தது வீணாகப் போய் விட்டது. கேகய மன்னன் புருஷோத்தமன் பழைய மிடுக்குடன் அவன் எதிரிலேயே இருப்பதுடன் அலெக்ஸாண்டரின் இன்னொரு நண்பனாகவும் மாறி விட்டிருந்தது ஆம்பி குமாரனின் உற்சாகத்தை மட்டுமல்ல அவன் முக்கியத்துவத்தையும் முழுவதுமாகக் குறைத்திருந்தது.

 

அலெக்ஸாண்டர் இனி என்ன முடிவெடுத்து தெரிவிப்பான் என்றும் தெரியவில்லை. அதனால் முடிவு தெரியும் வரை ஒவ்வொரு கணமும் யுகமாக நகர்ந்தது. காந்தார அரசனும் கேகய மன்னனும் அலெக்ஸாண்டருக்கு அடிபணிந்த பிறகு தங்களைப் போன்றவர்களால் இனி செய்ய முடிந்தது வேறெதுவும் இல்லை என்று புரிந்து கொண்ட அருகில் இருக்கும் மற்ற குறுநில மன்னர்களும், தனிப்பகுதிகளின் தலைவர்களும் அலெக்ஸாண்டரைச் சந்திக்க வந்த வண்ணம் இருந்தார்கள். பரிசுப் பொருள்கள் தந்து தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்து அலெக்ஸாண்டரின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.  அவர்களைச் சந்திப்பதிலும் தன் ஆட்களுடன் ஏதோ பேசுவதிலுமே அலெக்ஸாண்டரின் நேரம் சென்று கொண்டிருந்தது.

 

ஆம்பி குமாரனுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. மெல்ல அவன் சசிகுப்தனிடம் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டான்.   சசிகுப்தன் சொன்னான். ”இப்போதைய வெற்றியின் நினைவாக போர் நடந்த இடத்தில் சக்கரவர்த்தி ஒரு நகரத்தை நிர்மாணிக்க விரும்புகிறார். அதே போல் அவருடைய இறந்த குதிரையின் நினைவாகவும் ஒரு நகரை நிர்மாணிக்க விரும்புகிறார். அந்த நகரங்கள் எப்படி நிர்மாணிக்கப் பட வேண்டும் என்பதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

 

ஆம்பி குமாரனுக்கு அந்தக் குதிரை பாக்கியசாலி என்று தோன்றியது. சசிகுப்தன் தொடர்ந்து சொன்னான். “அதோடு கேகய மன்னரை வென்றதைக் கொண்டாடும் வகையில் ஒரு நாணயம் வெளியிடுவது பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். அந்த நாணயத்தில் அலெக்ஸாண்டர் தன் குதிரையுடனும், கேகய மன்னர் தன் யானையுடனும் இருந்து போராடுவது போன்ற காட்சியை வார்ப்பதாக உள்ளார்கள்”

 

ஆம்பி குமாரன் பெருமூச்சு விட்டான். புருஷோத்தமன் அலெக்ஸாண்டரின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் யவன நாணயத்திலும் இடம் பிடிக்கப் போகிறான். நட்புக்கரம் நீட்டிய ஆம்பி குமாரனோ எதற்கும் நாதியில்லாமல் அமர்ந்து கொண்டிருக்கிறான். என்ன கொடுமையிது? அவன் மெல்ல சசிகுப்தனைக் கேட்டான். “இனி சக்கரவர்த்தியின் அடுத்த திட்டம் என்ன என்று யூகம் எதாவது இருக்கிறதா?”

 

சசிகுப்தன்  சொன்னான். “இல்லை. எப்போதும் ஒரு பெரிய வெற்றிக்குப் பிறகு சில நாட்களாவது அவர் ஓய்வெடுக்கும் பழக்கம் உள்ளவர். அதன் பின் தான் அடுத்த திட்டத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்.”

 

அவன் சொன்னபடி அலெக்ஸாண்டர் நான்கு நாட்கள் கழித்து அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஆரம்பித்தான். பாரசீகத்தில் அவன் நியமித்திருந்த அவன் பிரதிநிக்கு எதிராகக் கிளர்ச்சிகள் ஆரம்பித்துள்ளன என்ற செய்தியும் வந்ததால் முதலில் சசிகுப்தனை அங்கு அனுப்பத் தீர்மானித்தான். “சசிகுப்தா நாளையே நீ கிளம்பிச் சென்று அங்கிருக்கும் நிலைமையைச் சீர்ப்படுத்து. நீ என்னுடன் இருந்தால் எனக்கு போரில் உதவியாக இருப்பதோடு மொழிபெயர்ப்பிலும் உதவியாக இருக்கும் என்றாலும் அங்கு நீ சென்று நிலைமையைச் சீராக்குவது மிகவும் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது...”

 

சசிகுப்தன் தலைவணங்கிச் சரியென்றான். அலெக்ஸாண்டர் அடுத்ததாக ஆம்பி குமாரனையும், புருஷோத்தமனையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆம்பி குமாரனுக்கு புருஷோத்தமனை சகித்துக் கொள்வது சுலபமாக இல்லாததை அலெக்ஸாண்டரால் கவனிக்க முடிந்தது. அவன் அளவுக்கு புருஷோத்தமன் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளா விட்டாலும் அவருக்கும் ஆம்பி குமாரனுடன் நல்லுணர்வுடன் இருப்பது முடியாத காரியம் என்பது தெளிவாகவே தெரிந்தது. அதனால் இருவரில் ஒருவரை மட்டுமே தன்னுடன் தொடர் படையெடுப்புகளுக்கு அழைத்துப் போவது புத்திசாலித்தனமாக அவனுக்குத் தோன்றியது. இருவரில் ஒருவர் என்று யோசிக்கும் போது சற்று வயதானவராக இருந்த போதிலும் புருஷோத்தமனே பல விதங்களில் சிறந்தவராக அவனுக்குத் தோன்றியது. வீரத்திலும் சரி, மனப்பக்குவத்திலும் சரி, போர் புரியும் விதங்களிலும் சரி ஆம்பி குமாரனை விட அவர் மேம்பட்டவராக இருந்தார். அதனால் ஆம்பி குமாரனை தட்ச சீலத்துக்கே அனுப்பி வைப்பது என்று அவன் தீர்மானித்தான்.

 

அவன் ஆம்பி குமாரனைப் பார்த்துச் சொன்னான். “நண்பா. பாரசீகத்தில் பிரச்சினைகள் இருப்பதால் சசிகுப்தனை அங்கே அனுப்புகிறேன். ஆனால் அடுத்து அருகிலிருக்கும் காந்தாரமும் பாதுகாக்கப்பட வேண்டியதும் மிக முக்கியம் என்பதால் நீ தலைநகர் தட்ச சீலத்திலேயே இருப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால் நாளையே நீயும் தட்சசீலத்திற்குத் திரும்பி விடு. புருஷோத்தமன் என்னுடன் தொடர் படையெடுப்புகளுக்கு வரட்டும்”

 

ஒரு விதத்தில் அவன் சொன்னதில் ஆம்பி குமாரன் நிம்மதி அடைந்தான். இந்த புருஷோத்தமனைச் சகிப்பதிலிருந்து தப்பித்துச் செல்வதே பெரிய விடுதலையாகத் தோன்றினாலும் இன்னொரு விதத்தில் அவன் இருக்க ஆசைப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு புருஷோத்தமன் அலெக்ஸாண்டரின் நண்பனாக வலம் வரப் போகிறான் என்பது பெருங்கசப்பாக இருந்தது. அதிருப்தியைக் காட்டிக் கொள்ள முடியாமல் அவன் தலையசைத்தான்.

 

ந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “ஆம்பி குமாரன் தட்சசீலத்திற்குத் திரும்பி விட்டான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அவன் மகிழ்ச்சியாக இல்லை என்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபித்துக் கொள்கிறான் என்றும் அரண்மனை வேலைக்காரர்கள் சொல்கிறார்கள்”

 

“முட்டாள்களும், சரியான முடிவுகளை எடுக்காதவர்களும் மகிழ்ச்சியாக இருந்ததாகச் சரித்திரமே இல்லை சந்திரகுப்தா. ஆம்பி குமாரன் இரண்டு ரகத்திலும் சேர்ந்தவன் என்பதால் அவன் அப்படி இருப்பதில் ஆச்சரியமே இல்லை” என்று சாணக்கியர் சொன்னார்.

 

“தோல்வியடைந்த புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் மதித்து நண்பராக ஏற்றுக் கொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே”

 

“போர்க்களத்தில் அவர் வீரத்தைக் கண்ட பின் அவரைச் சிறைப்படுத்துவதை விட நண்பனாக்கிக் கொள்வது இலாபகரமானது என்று அலெக்ஸாண்டர் நினைத்திருப்பான்....”

 

“ஆனாலும் அலெக்ஸாண்டர் நடந்து கொண்ட விதம் பெருந்தன்மை அல்லவா ஆச்சாரியரே?”

 

சாணக்கியர் யோசனையுடன் சொன்னார். “மாவீரனான அவன் வீரத்திற்கு மதிப்பு தந்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதே போல் இங்குள்ள வனத்தில் தண்டராய சுவாமியிடம் கோபத்தைக் காட்டாமல் பணிவைக் காட்டி அவரிடம் பேசி வந்ததையும் ஞானத்திற்கு அவன் மதிப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அலெக்ஸாண்டரைப் போன்றவர்கள் எல்லா நேரங்களிலும் இப்படியே பெருந்தன்மையாகவும், உயர்வை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது சந்திரகுப்தா. சில சமயங்களில் நீச்சத்தனமாக நடந்து கொள்ளவும் அவர்கள் தயங்காதவர்களாகவும் இருப்பார்கள். அந்தந்த நேரங்களில் மேல்படும் உணர்வின் படி நடந்து கொள்ளக்கூடியவன் அலெக்ஸாண்டர் என்பதே என் கணிப்பு...”

 

சந்திரகுப்தன் தலையசைத்து விட்டு பின் மெல்லக் கேட்டான். “அலெக்ஸாண்டரை விரட்ட நீங்கள் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் எந்த அளவு பயன் தருவதாக இருக்கின்றன ஆச்சாரியரே?”

 

“நான் விதைகளை நட்டிருக்கிறேன். விளைவுகள் இயற்கையின் விதிகளின் படியே அதனதன் காலத்திலேயே நடக்கும்....”

 

“இப்போது அலெக்ஸாண்டருடன் புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டதுடன் பல குறுநில மன்னர்களும் தலைவர்களும் கூட இணைந்து கொண்டிருக்கிறார்கள். என்பதால் அடுத்து அவன் படையெடுப்புகள் வேகம் எடுக்குமென்றே நினைக்கிறேன் ஆச்சாரியரே. அவன் வேகமாக முன்னேறிச் சென்றால் நானறிந்த வரையில் மகதம் எட்டும் வரை அவனை எதிர்க்க முடிந்தவர்கள் யாருமில்லை.”

 

“உண்மை தான் சந்திரகுப்தா. நம் முயற்சிகள் எந்த அளவு வேலை செய்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

 

(தொடரும்)

என்.கணேசன்




        

  

Monday, March 27, 2023

யாரோ ஒருவன்? 131



நாகராஜ் தொடர்ந்து சொன்னான். “அவனுக்கு மனுஷங்கள்ல அந்த சுவாமிஜியும், விலங்குகள்ல பாம்புகளும் மட்டும் தான் உறவும் நட்புமாய் இருந்தாங்க. ஹிமாச்சல் பிரதேசத்தில் காடுகள், கிராமங்கள்னு பயணத்துல  நாலு வர்ஷம் போச்சு. போற பக்கம் சுவாமிஜி தியானத்துலயும், பக்தர்கள் கிட்டயும் காலம் கழிச்சப்ப அவன் பாம்புகளோட விளையாடிகிட்டிருப்பான். எங்கே போனாலும் அவன் பாம்புகளை மோப்பம் கண்டுபிடிச்சுடுவான். பாம்புகளும் அவன் இருக்கற பக்கம் ஓடி வந்துடும். சில பாம்புகள் அவன் கூட விளையாடறப்ப கடிச்சதும் உண்டு. ஆனால் அதெல்லாம் அவன் உடம்பை திடகாத்திரமா ஆக்குச்சே ஒழிய ஆரோக்கியத்த பாதிக்கலை. பிறகு தேவ்நாத்பூர் கிராமத்துல சுவாமிஜி ஒரு ஆசிரமம் அமைச்சுகிட்டார். நாடோடி வாழ்க்கை முடிஞ்சு ஆசிரம வாழ்க்கை ஆரம்பிச்சுது. ஆசிரமத்துல அவன் சுவாமிஜி  சொல்ற வேலைகளை எல்லாம் செய்வான். ஓய்வான நேரத்துல பாம்புகளோட விளையாடுவான். ராத்திரிகள்ல கனவு கண்டு அழுவான். அவன் அழுகையை சுவாமிஜியும் நாகங்களும் மட்டும் தான் கேட்பாங்க. சுவாமிஜிக்கு அவன் கனவுல பேசற தமிழ் புரியாது. ஆனால் அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவருக்கு எதையும் புரிஞ்சுக்க மொழிகள் தேவையில்லை. இருந்த உறவுகள் தொலைஞ்சு போனப்ப, உறவுகளைத் துறந்த ஒரு சுவாமிஜி அவனுக்கு ஒரு தந்தை மாதிரி அமைஞ்சது இறைவன் அருள் தான்.... அவர் சாகற வரைக்கும் அவனுக்கு அப்படியே தான் இருந்தார். காலப் போக்குல பாம்புகள் அவனுக்கு நாகரத்தினங்கள் தந்து நாகசக்திகளை வாரி வழங்குச்சு. நாகராஜாய் அவனால பழையதெல்லாம் தெரிஞ்சுக்கவும், ஜீரணிக்கவும் முடிஞ்சாலும் தூக்கத்துல அவன் மாதவனாய் அதையெல்லாம் ஜீரணிக்க முடியாம நிறையவே கஷ்டப்பட்டுட்டான்

சுவாமிஜிக்கு அந்திமக் காலம் நெருங்கறது தெரிஞ்சு ஒரு நாள் காட்டுக்குத் தவம் பண்ணப் போறப்ப நாகராஜையும் கூட்டிகிட்டு போனார். ”உன் முன்னாடி இப்ப ரெண்டு வழி இருக்கு. நீ மாதவனாய் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப் போறதுன்னா போகலாம். உன் நாகசக்திகள் இருக்கிற வரைக்கும் உனக்கு வேண்டியபடி சிறப்பான வாழ்க்கையை அமைச்சுகிட்டு வாழலாம். இல்லாட்டி நாகராஜாய் வாழ்றதானா இந்த ஆசிரமத்தை என் காலத்துக்கப்பறம் நீ தான் நடத்தி தர்ம காரியங்களை சிறப்பா நடத்தணும். நீ ஒரு முடிவெடுக்கணும்னு சொன்னார்.”

”அவன் நல்லா யோசிச்சான். பெத்தவங்க அவன் இறந்துட்டதாய் நம்பி எப்பவோ மனசைத் திடப்படுத்திகிட்டு வாழ்றாங்க. திரும்பிப் போனாலும் அவங்க அவன் கூட வாழ முடிஞ்ச காலம் அதிகமில்லை. அவன் காதலிச்ச பொண்ணு அவன் நண்பனைக் கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்துகிட்டிருக்கா. அவனுக்குப் பிறந்த குழந்தையும் ஆரம்பத்திலிருந்தே அந்த மனுஷனையே அப்பான்னு நினைச்சு வாழ்ந்துகிட்டிருக்கான். மாதவனுக்காக காத்திருக்கிறவங்களும் இல்லை. அவனால மாத்த முடிஞ்ச நிலைமைகளும் எதுவுமில்லை. உருவத்துலயும் அவன் மாதவனாய் இல்லை. அவனுக்காகக் காத்துகிட்டிருக்கற உறவுகளும் இல்லை. நட்புகளும் இல்லை. மாதவனாய் அவன் உணர்ந்ததெல்லாம் கசப்புகளும், வேதனைகளும், ரணங்களும் தான்.   அவன் மாதவனாய் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப் போக விரும்பல. அதனால அவன் நாகராஜாகவே வாழ்க்கையைத் தொடர விரும்பறதா சொன்னான்.”

சுவாமிஜி அவனுக்கு ஞானோபதேசம் தந்தார். அவரோட தவ வலிமையால அவனுக்கு மற்ற சக்திகளையும் மந்திரோபதேசங்கள் செஞ்சு சொல்லிக் குடுத்தார். அவன் மனசுல இருந்த பழைய ரணங்களையும், துக்கங்களையும், உறவுகளையும்  முடிச்சுகிட்டு வந்து அடுத்த வர்ஷம் ஒரு குறிப்பிட்ட நாள் துறவியாய் தீட்சை வாங்கிக்க சொன்னார். சொல்லிட்டு சில நாள்கள்ல அவர் சமாதியடைஞ்சுட்டார். அவர் குறிப்பிட்ட நாள் அடுத்த திங்கட்கிழமை வருது. அதனால பழைய கணக்குகளை முடிச்சுகிட்டு நான் நாளைக்குக் கிளம்பறேன்...”

அங்கே ஒரு மயான அமைதி குடிகொண்டது. அவன் தான் மாதவன் என்றாலும், அவன் இனியும் மாதவனாய் இருக்க விரும்பவில்லை, அவன் பழைய கணக்குகளையும், உறவுகளையும் முடித்துக் கொள்ள வந்திருக்கிறான் என்ற தெளிவான செய்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் பாதித்தது.

அவன் தொடர்ந்தான். “சுவாமிஜி நாகராஜ் அவரோட இருந்த காலங்கள்ல செய்த வேலைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஒரு சம்பளம் மாதிரி அவன் அக்கவுண்ட்ல போட்டுகிட்டே வந்திருந்தார். அவர் சமாதி அடையறதுக்கு முன்னால் அதை அவன் கிட்ட ஒப்படைச்சார். பதிமூன்று லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து சில்லறை இருந்துச்சு. பழைய கணக்குகளை நேர் பண்ண வந்த நாகராஜ் முதல்ல மாதவனோட அப்பா கிட்ட ஒரு கதை சொல்லி அந்தப் பணத்தை அவர் அக்கவுண்டுக்கு அனுப்பிச்சுட்டான். மகனாய் அவங்க கூட இருந்து அவன் ஆறுதல் தர முடியாட்டியும் சம்பாதிச்ச பணத்தையாவது அவங்களுக்குக் கொடுக்க முடிஞ்சதுல அவனுக்குச் சின்னத் திருப்தி. நாகராஜாய் அவன் அவங்களுக்குக் கோடிக்கணக்குல தந்துட முடியும்னாலும் அது தர்மம் தர்ற மாதிரியாயிடும்அவன் அப்பா யார் கிட்டயும் எப்பவும் தானதர்மம் வாங்கி வாழ்ந்தவரில்லை. அதனால அவன் வேலை செஞ்சு சம்பாதிச்ச காசை மட்டும் மகனாய் அவங்கப்பாவுக்குத் தந்தான். அவன் போன நாள் அவங்கம்மா அவனுக்கு திவச நாள் சமையல் செஞ்சிருந்தாங்க. அவங்க மகனோட நண்பனா அறிமுகப்படுத்திகிட்டுப் போன அவனை சாப்பிட்டுட்டு போகச் சொன்னாங்க. சொந்த திவச நாள் சமையல் சாப்பிட்ட முதல் ஆள் மாதவனாய் தான் இருக்கணும். தாய் கையால் சமைச்ச சாப்பாட்டை அவன் கடைசியாய் சாப்பிட்டுட்டு அங்கிருந்து கோயமுத்தூர் வந்தான்.” சொல்கையில் அவன் குரல் கரகரத்தது.

சிறு மௌனத்திற்குப் பின் தொடர்ந்தான். “அவன் நினைச்சிருந்தா அவன் அவனைக் கொல்ல முயற்சி செய்த நண்பர்களை எப்பவோ பிச்சைக்காரங்களாக்கி இருக்கலாம். சாவே தேவலைன்னு நினைக்கிற அளவுக்கான வியாதிகளை உருவாக்கியிருக்கலாம். விபத்துகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதுக்கான அத்தனை கொடுமையும் அவங்க அவனுக்குச் செஞ்சிருக்காங்க. கொன்னதைக் கூட அவனால புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனால் அவன் அவங்கம்மாவுக்காகக் கடைசியாய் வாங்கின அந்தக் குங்குமச்சிமிழையும், அவன் காதலிக்காக வாங்கின வளையல்களையும் கீழே விழுந்திருக்கிறதைப் பார்த்தும் அதை எடுத்து அவன் சூட்கேஸில் போடாமல் அப்படியே அலட்சியமாய் வேணும்னே அவங்க விட்டுட்டு வந்ததை அவனால் ஜீரணிக்க முடியல. பெத்தவங்களைப் பார்க்கப் போனப்ப திடீர்னு அவனுக்கு மணாலில வாங்கின அந்தப் பொருள்கள் ஞாபகத்துக்கு வந்துச்சு. அவங்க அதை என்ன செஞ்சாங்கங்கறதை நாகராஜாய் நாகசக்தியைப் பயன்படுத்தித் தெரிஞ்சுகிட்டிருக்க முடியும்னாலும் நாகராஜாய் அந்தச் சக்தியைப் பயன்படுத்தப் போகாம மாதவனாய் அவன் நண்பர்கள் மணாலில இருந்து அள்ளிப் போட்டுகிட்டு எடுத்துகிட்ட வந்த சூட்கேஸ்ல அதிருக்கான்னு பார்த்தான். இருக்கல. பிறகு தான் அவன் சக்திகளைப் பயன்படுத்தி என்ன ஆச்சுன்னு பார்த்தப்ப நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த காட்சி அவனுக்குத் தெரிஞ்சுது. மாதவனோட தாய் கையால எத்தனையோ நாள் சாப்பிட்டவங்க அவங்க. மாதவன் கடைசியாய் தாய்க்காக வாங்கிய பொருளையாவது அந்தத் தாய் கிட்ட அவங்க சொல்லிக் கொடுத்திருக்கலாம். அதைக்கூட அவங்க செய்யல. இத்தனையும் செஞ்சு இப்பவும் அதை ஒத்துக்கவோ, அதுக்காக வருத்தப்படவோ செய்யாத இந்த ஈனப்பிறவிகளுக்கு என்ன தண்டனை தந்தா அது சரியாயிருக்கும்னு தயவு செஞ்சு சொல்லுங்க. நடந்ததை எல்லாம் கதையாய் சொல்லாம நேர்ல பாக்கவே வெச்சாச்சு. நீங்களும் பார்த்துட்டீங்க. இப்ப இந்த நேரத்துல நாகராஜாய் உங்க முன்னாடி நிக்கறவன் விசேஷ நாகரத்தினத்தை அடைஞ்சு உச்ச சக்திகளைக் கையில் வெச்சிட்டிருக்கிறவன். அவனால் எதுவும் செய்ய முடியும். மாதவனுக்கு இவங்க செஞ்ச மாபாதகத்துக்கு என்ன தண்டனை தந்தா சரியாயிருக்கும்...”

சரத்தும், கல்யாணும், வேலாயுதமும் உள்ளூர நடுங்கினார்கள். அவன் வெறுமனே குற்றம் சாட்டிவிட்டுப் போக வரவில்லை, குற்றத்தைப் படமாகக் காட்டி தண்டித்து விட்டுப் போக விரும்புகிறான் என்பது புலனான போது திகிலடைந்தார்கள். அவன் சொல்வது போல இப்போது அவன் சர்வசக்தி வாய்ந்தவன். அவனால் எதையும் செய்ய முடியும் என்கிற நிலைமையில் இருக்கிறான்...

பீதி நிறைந்த அவர்கள்  மூவரின் முகத்தை மற்ற நால்வரும் திரும்பியும் பார்க்கவில்லை. விழிகள் தாழ்த்தி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவன் என்ன தண்டனை தந்தாலும் அது அதிகம் என்று நியாய உணர்வுள்ள யாரும் சொல்ல முடியாது.

மற்றவர்கள் மனநிலையை அவர்கள் மூவரும் உணர முடிந்ததால் பீதி கூடியது. வேலாயுதம் மட்டும் நாகராஜின் சக்தியால் கட்டுண்டிரா விட்டால் வயதைப் பொருட்படுத்தாமல் அவன் காலில் விழுந்திருப்பார். அதனால் இந்த நான்கு பேரில் ஒருவராவது அதைச் செய்து நாகராஜின் மனதை இளகச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் நீதி உணர்வால் கட்டுண்டவர்களாக மன்னிப்போ, சலுகையோ கேட்க முடியாத நிலையிலிருந்தார்கள்...

                       

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, March 23, 2023

சாணக்கியன் 49

லெக்ஸாண்டர் தொலைவிலிருந்து வரும் புருஷோத்தமனைக் கூர்ந்து பார்த்தபடி நின்றான். மேருநாதனுடன் மிகுந்த தளர்ச்சியுடன் நடந்து வந்து கொண்டிருந்த போதும் புருஷோத்தமனிடம் ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. யவனப்படையும், காந்தாரப்படையும் அவர்களைச் சூழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.  

 

ஆம்பி குமாரனுக்கு புருஷோத்தமன் சரணடைந்து கைதியாக நடந்து வருவது பெருமகிழ்ச்சியைத் தந்தாலும் அவரைச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வராமல் நடக்க வைத்துக் கூட்டிக் கொண்டு வருவது பெரிய குறையாகவும் அவனுக்குத் தோன்றியது. பேச்சு வார்த்தைக்கு மேருநாதனை அனுப்பியிருக்க வேண்டியிருக்கவில்லை.  அனுப்பியதால் அல்லவா தோற்றவனைக் கட்டி இழுத்து வராமல் கௌரவமாக நடத்தி கூட்டிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஆனாலும் தன் மனதில் எழுந்த எண்ணத்தை வாய்விட்டு அலெக்ஸாண்டரிடம் சொல்ல அவனால் முடியவில்லை.

 

ஆனால் மேருநாதனுடன் வந்து கொண்டிருந்த புருஷோத்தமனின் மனமோ இப்படி வருவதையும் மிகுந்த அவமானமாக உணர்ந்தது. சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்து எதிரிகள் படை சூழ கைதியாக நடந்து வருவது சகிக்க முடிந்ததாய் இல்லை. எல்லாவற்றையும் விட அதிகக் கொடுமையாக அவர் உணர்ந்தது அலெக்ஸாண்டர் அருகில் ஆம்பி குமாரனைக் கண்டது தான். இதற்குப் பதிலாக இறந்தே போயிருக்கலாமே என்று அவர் மனம் ஒரு முறை ஓலமிட்டது. ஆனால் இப்போது எதுவும் செய்வதற்கில்லை…

 

தன் எதிரில் வந்து நின்ற புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் சலனமில்லாமல் அமைதியாகக் கூர்ந்து பார்த்தான். ஆம்பி குமாரன் முடிந்த அளவு முகத்தில் ஏளன உணர்ச்சியைக் கொண்டு வந்து பார்த்தான். புருஷோத்தமன் பார்வையோ ஆம்பி குமாரனின் பக்கமே திரும்பவில்லை. அந்த நீச்சனை அங்கீகரிக்கும் விதமாக எதைச் செய்யவும் அவர் விரும்பவில்லை.  கூர்ந்து பார்க்கும் அலெக்ஸாண்டரை அவரும் நேர் பார்வை பார்த்து நின்றார்.

 

அலெக்ஸாண்டர் அவர் தைரியத்தை மனதிற்குள் மெச்சினான். வெற்றி தோல்விகள் ஒரு வீரனுக்கு மிகவும் சகஜமே. ஆனால் தோல்வியிலும் கூனிக் குறுகிப் போய்விடாமல் அடுத்தது என்ன என்கிற தோரணையில் அவர் நின்ற விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. மாவீரர்களால் மட்டுமே முடிகிற தன்மை அது.

 

அலெக்ஸாண்டர் தன் மனதில் ஓடிய எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டபடியே புருஷோத்தமனைக் கேட்டான். “உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் புருஷோத்தமா?”

 

சற்று தள்ளி நின்றிருந்த சசிகுப்தன் முன்னுக்கு வந்து புருஷோத்தமனை வணங்கும் பாவனையில் சற்று பவ்யமாகத் தலையைக் கீழே சாய்த்து விட்டு “சக்கரவர்த்தி உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார் கேகய மன்னரே” என்று மொழிபெயர்த்துச் சொன்னான்.

 

புருஷோத்தமன் சசிகுப்தனை நோக்கி நட்பின் பாவனையில் சிறு புன்னகை பூத்து விட்டு அலெக்ஸாண்டருக்கு இணையாக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அலெக்ஸாண்டரை நேர் பார்வை பார்த்தவராகப் பதில் சொன்னார். “ஒரு அரசன் இன்னொரு அரசனை எப்படி நடத்துவானோ அப்படியே நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் அலெக்ஸாண்டர்”

சசிகுப்தனும் ஆம்பி குமாரனும் திகைத்தார்கள். சக்கரவர்த்தி என்றழைப்பதற்குப் பதிலாக பெயர் சொல்லி புருஷோத்தமன் பதிலுக்கு அழைத்தது அவர்கள் இருவருக்கும் சரியாகத் தோன்றவில்லை. அதுவும் போரில் தோற்று சரணடைய வந்தவர் பேசும் பேச்சாக இல்லையே என்றே நினைத்தார்கள்.  சசிகுப்தன் மறு கணமே சுதாரித்துக் கொண்டு அதை மொழி பெயர்த்து அலெக்ஸாண்டரிடம் சொன்னான்.  

 

ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரிடம் கடுங்கோபத்தை எதிர்பார்த்தான். தோற்றவன் பேசும் பேச்சா இது என்று அலெக்ஸாண்டர் ஆத்திரமடைந்து புருஷோத்தமனைத் தண்டிக்கும் கட்டளை ஏதாவது பிறப்பிப்பான் என்றும் அது தான் சரியென்றும் அவன் நினைத்தான்.

 

ஆனால் அலெக்ஸாண்டர் முகம் சிறிதளவும் மாறவில்லை. “தனிப்பட்ட முறையில் வேறென்ன எதிர்பார்க்கிறாய் புருஷோத்தமா?” என்று கேட்டான்.

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் புருஷோத்தமன் சொன்னார். “என் முதல் எதிர்பார்ப்பிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது அலெக்ஸாண்டர்”  

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் அலெக்ஸாண்டரால் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போர் புரிந்த விதத்திலும் சரி, தோற்று சரணடைய வந்திருக்கும் இந்த வேளையிலும் சரி அந்த மனிதர் ஒரு மன்னனாகவே கம்பீரமாக நடந்து கொள்ளும் விதம் எல்லோராலும் பின்பற்ற முடிந்ததல்ல.

 

“நீ கேட்டாய் என்பதற்காக அல்ல, எனக்காகவும் உன்னை அப்படியே நடத்த விரும்புகிறேன் நண்பனே. உன் வீரத்தை மெச்சி இந்த நாட்டை மறுபடி உனக்கே திரும்பத் தருகிறேன். என் பெயரில் நீயே இதை ஆள்வாயாக” என்று அலெக்ஸாண்டர் சொல்ல சசிகுப்தன் மொழி பெயர்த்துச் சொல்ல அங்கிருக்கும் அனைவருமே திகைத்தார்கள்.

 

ஆம்பி குமாரன் தான் நிற்கும் பூமி பிளந்து அவனை உள்வாங்குவது போல் உணர்ந்தான். அவனை நண்பா என்றழைத்த அலெக்ஸாண்டர் புருஷோத்தமனையும் நண்பா என்றழைக்கிறானே. வென்ற கேகய நாட்டை அலெக்ஸாண்டரின் பெயரால் ஆள அவனுக்கே திருப்பித் தருவதாய் சொல்கிறானே. அப்படியானால் ஆம்பி குமாரனுக்கும், புருஷோத்தமனுக்கும் இடையில் என்ன தான் வித்தியாசம் இருக்கிறது. என்ன அநியாயம் இது? நட்புக்கரம் நீட்டியவனுக்கும் ஒரே மரியாதை, போர் தொடுத்து தோற்றவனுக்கும் ஒரே மரியாதையா? அப்படி உயர்த்தி மரியாதை தர புருஷோத்தமன் என்ன செய்துவிட்டான்?

 

மேருநாதன் முகத்தில் அளவில்லாத சந்தோஷம் தெரிந்தது. பேசி சரணடைய சம்மதிக்கச் சொல்ல அவரை அலெக்ஸாண்டர் அனுப்பி வைத்த போது சரணடையும் புருஷோத்தமனுக்கு ஓரளவாவது அலெக்ஸாண்டர் மரியாதை தருவான் என்று அவர் எதிர்பார்த்தாரே ஒழிய இந்த அளவு பெருந்தன்மையாக நடத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.  

 

புருஷோத்தமனே இதை எதிர்பார்க்கவில்லை. இந்த யவனன் அவர் நினைத்த அளவுக்கு மோசமானவனில்லை. ஆம்பி குமாரனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன்.  லேசாக அவர் கண்கள் பனித்தன. அலெக்ஸாண்டருக்கு அவர் உணர்வுகளைப் படிக்க சசிகுப்தன் உதவி தேவைப்படவில்லை. புன்னகையுடன் அவன் இரு கைகளையும் விரிக்க புருஷோத்தமன் நன்றி உணர்வுடன் சென்று அவனை அணைத்துக் கொண்டார்.

 

அதன் பின் நடந்தது எதிலும் ஆம்பிகுமாரனுக்கு உடன்பாடிருக்கவில்லை என்றாலும் அவனால் தன் மனக்கசப்பை வெளிப்படுத்த முடியவில்லை. அலெக்ஸாண்டர் உடனடியாக புருஷோத்தமனின் வலது தோள் காயத்துக்கு மருந்திடக் கட்டளையிட்டான்.  புருஷோத்தமன் முகாமுக்கு மிகுந்த மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டார். போகும் போது சசிகுப்தன் புருஷோத்தமனிடம் பேசிக் கொண்டே போவதைப் பார்த்த போது ஆம்பி குமாரனுக்குத் தாங்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனையும் புருஷோத்தமனிடம் அழைத்துக் கொண்டு போனான். இருவரும் அவனுக்கு நண்பர்கள் என்பதால் இனி அவர்கள் தங்களுக்குள்ளும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் இரண்டு நாடுகளும் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் அவன் சொல்ல வேண்டாவெறுப்பாக இரண்டு பேரும் தழுவிக் கொள்ள வேண்டி வந்தது.

 

புருஷோத்தமன் தோல்விக்கும் மேலாக, சரண் அடைந்ததற்கும் மேலாக இந்த ஒரு கணத்துக்காக வருந்தினார். தந்தையையே கொன்ற இந்த மகாபாவியை நண்பனாகத் தழுவும் தருணம் வரும் என்று அவர் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஆம்பி குமாரனும் ஒரு குஷ்ட ரோகியை அணைக்க வேண்டிய நிலைக்கு வந்தது  போல  கூனிக் குறுகினான். யாரை வெற்றி கொண்டு அழிப்பதற்காக அவன் அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டினானோ அந்த நபரிடமே நட்புக்கரம் நீட்ட வேண்டிய தருணம் அலெக்ஸாண்டர் மூலம் வந்து சேரும் என்பதை அவனும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இதையே எத்தனையோ முறை அவன் தந்தையும் அறிவுறுத்தியிருக்கிறார். ”என் நண்பரை நீ உன் நண்பராகவும் நினைக்க வேண்டும். இரண்டு அண்டை நாடுகளும் நட்புறவில் இருப்பது இரண்டு நாடுகளுக்கும் அனுகூலமானது…” என்றெல்லாம் சொன்னதற்காகவே ஆம்பி குமாரன் அவரை வெறுத்திருக்கிறான். இப்போது அதே நிலைமை கட்டாயமாக அவன் மீது திணிக்கப்படுகிறது.

 

அலெக்ஸாண்டர் அவனிடம் கருத்து கேட்பவனாக இல்லை; மாறாக கட்டளையிடுபவனாக இருக்கிறான். புருஷோத்தமனும், அவனும் அலெக்ஸாண்டரை அனுசரித்துப் போக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விதி தங்களை இப்படி இணைத்துக் கட்டிப்போடும் என்று இருவருமே சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இனி அலெக்ஸாண்டர் என்ன செய்யப் போகிறான் என்று தெரியாமல் இருவரும் குழம்பினார்கள். ஏனென்றால் அவன் எடுக்கப் போகும் தீர்மானத்திலேயே அவர்கள் இருவர் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது…

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, March 20, 2023

யாரோ ஒருவன்? 130



வேதாளத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் அசராமல் ஆக்ரோஷமாய் பேசி விட்டு கல்யாண் மனைவியையும் மகளையும் பார்த்தான். ஆனால் அவர்கள் அவனைச் சிறிதும் நம்பாமல் இழிவாகப் பார்த்தார்கள். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் வரை அவர்களும் மாதவனைக் கொல்ல எந்த நோக்கமும் கல்யாணுக்கு இல்லை என்பதை உறுதியாக நம்பியிருந்தார்கள். ஆனால் நாகரத்தினக்கல்லைப் பார்த்தவுடனேயே அவர்களால் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ள முடிந்தது. கல்யாண் அதை எவ்வளவு பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தான் என்று அவர்கள் அறிவார்கள். சமீபத்தில் அந்த நாகரத்தினக்கல்லைத் தொலைத்து விட்டு தந்தையும் மகனுமாய் சேர்ந்து பரிதவித்ததும், இந்தச் சின்னக் கல்லுக்கு ஏனித்தனை ஆர்ப்பரிப்பு என்று அவர்கள் நினைத்ததும் கூட நினைவுக்கு வந்தது. அவர்கள் அப்படிப் பார்த்ததும் கல்யாண் தன் காலடி மண்ணே பிளந்து கீழே அதளபாதாளத்துக்கு இழுக்கப்படுவது போல் உணர்ந்தான்.

நிலைமையை உணர்ந்த வேலாயுதம் எழுந்து மகன் உதவிக்கு வந்தார். “நீ சொல்றது சரிதான். இவன் இங்கே பக்கத்து வீட்டுக்கு வந்ததே நம்ம மேல வாய்க்கு வந்தபடி அபாண்டமான புகாரைச் சொல்லி நம்ம வாழ்க்கைல குழப்பத்தை ஏற்படுத்த தான். வந்தவுடன மொட்டைக் கடுதாசி அனுப்பிச்சான், அதுல நாம அசரலைன்னவுடனே மொட்டைக் கடுதாசி எழுதி ரா அதிகாரிய வரவழைச்சான். அதுலயும் நீங்க சரியா பதில் சொன்னதால அந்த அதிகாரி போயிட்டான். இப்ப இந்த அணுகுண்டை இப்ப போடறான்…. நாகராஜ், எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம். நீ இங்கே வந்ததுக்கு  உண்மையான காரணம் என்ன? அபாண்டமா பழி சொல்லத் தானா? அது முடிஞ்சதால நீ நாளைக்கே ஊரை விட்டுப் போகறியா? உனக்கு எங்க மேல என்ன கோபம். வெளிப்படையா சொல்லு. உனக்கிருக்கற சக்திக்கு நீ நாங்க தான் ராஜீவ் காந்திய கொன்னோம்னு கூடப் படமா காண்பிக்க முடியும்னு நான் ஒத்துக்கறேன். ஆனா இத்தனையும் ஏன்? அதை சொல்லிட்டு போ

இவர்கள் இருவரும் பேசிய பிறகு தானும் எதாவது சொல்லா விட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணிய சரத்தும் எழுந்து சொன்னான். “கல்யாண் சொன்ன மாதிரி நீ ஆரம்பத்துலயும், கடைசிலயும் காண்பிச்ச காட்சிகள் நிஜம். ஆனால் நடுவுல எல்லாம் கற்பனை வளத்தை நல்லாவே ஓட விட்டிருக்கறே. பார்க்கறவங்க உண்மைன்னு நம்பிடற மாதிரி காட்சிகளை அமைச்சிருக்கே. இத்தனையும் ஏன்? நாங்க உனக்கு என்ன கெடுதல் பண்ணினோம்?.”

கல்யாண் திருப்தி அடைந்தான். முதல் முறையாக முக்கியமான நேரத்தில் அப்பாவும், சரத்தும் கச்சிதமாகப் பேசியிருக்கிறார்கள்.

நாகராஜ் அவர்கள் மூவரையும் இகழ்ச்சியாகப் பார்த்தபடியே சொன்னான். “காட்டிய காட்சிகள் எதுவும் கற்பனை இல்லை சரத். அதுல நீங்க உட்பட இங்கே யாருக்குமே சந்தேகமுமில்லை. உங்களைக் குழப்பறது நான் யாரு, ஏன் இங்கே வந்தேன், ஏன் இந்த உண்மைகளை எல்லாம்  வெளிப்படுத்தினேன்கிறது தானே?   பூர்வீகத்துல என் பேரு மாதவன். ஒரு காலத்துல உங்களோட நண்பன், பழைய கணக்கைத் தீர்த்துட்டு போக தான் இங்கே வந்தேன்...”

அனைவருமே அதிர்ச்சியுடனும், நம்பமுடியாமலும் அவனைப் பார்த்தார்கள்கல்யாண் ஆவேசமாகச் சொன்னான். “சரியா மாட்டிகிட்டே அண்டப்புளுகா. நீயே காமிச்ச ஆரம்ப படங்கள்ல மாதவன் எப்படி இருக்கான்னு இருக்கு. அவன் குரல் எப்படி இருக்கும்னு இருக்கு. அதுக்கும் உனக்கும், உன் குரலுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? நீ மனப்பிராந்தி புடிச்சவன்னு உன்னைப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன். அது இப்ப உறுதியாயிடுச்சு. சரி தம்பி. இனி நீ போய்க்கோ. எங்களுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு. உன்னை மாதிரி ஒரு பைத்தியக்காரன் கிட்ட இனி கேட்க எங்களுக்கு எதுவுமில்லை...”

நாகராஜ் புன்னகைத்தான். “கல்யாண் நீ இடைவேளை வரைக்கும் தான் படம் பார்த்திருக்கிறாய். முழுசும் பார். எல்லா சந்தேகங்களும் தீர்ந்துடும்..”

கல்யாண் இனி எந்தப் படமும் பார்க்கவோ, மற்றவர்கள் பார்ப்பதை அனுமதிக்கவோ தயாராக இல்லைஇவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ அவன் சொன்ன ஒரு வாக்கியத்தை வைத்து இவனைப் பைத்தியக்காரன் என்ற சந்தேகத்துக்கிடமான ஒரு கருத்தை உருவாக்கியாகி விட்டது. அதையே பிடித்துக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்று நினைத்தவனாய்வெளியே போஎன்று சொல்ல வாயெடுத்தான்.

நாகராஜ்உட்கார்என்று சொன்னான். அப்படியே பின்னாலிருந்து யாரோ இழுத்து உட்கார வைப்பது போல கல்யாண் உணர்ந்தான். தடாலென்று உட்கார்ந்தவனை சரத்தும் வேலாயுதமும் திகைப்புடன் பார்த்தார்கள். ஆனால் அடுத்த கணம் அவர்களும் அப்படியே உட்கார வைக்கப்பட்டார்கள். முன்பு போல் மறுப்படியும் நாக்கையோ உடலையோ அசைக்க முடியாத நிலை

நாகராஜ் மேலே கை காட்டினான். மறுபடியும் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. கல்யாணால் மலையுச்சியிலிருந்து தள்ளி விடப்பட்ட மாதவன் ஒரு பெரிய பாறையில் குப்புற விழுந்து அங்கிருந்து வழுக்கி ஒரு மரக்கிளையில் சிக்கி ரத்தம் உடலெல்லாம் வழியத் தொங்கினான். அந்தக் கிளையும் அவன் உடல் பாரத்தால் முறிகிற மாதிரி இருந்தது. அவனால் சத்தமிட முடியவில்லை; மிகப் பலவீனமாக குரலில் அரற்ற மட்டுமே அவனால் முடிந்தது. பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்த அவனை அந்த மரத்திலிருந்த இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்தபடி பார்த்தனபின் ஒரு நாகம் மரத்தின் ஒரு பகுதியில் நன்றாகச் சுற்றி பின் தொங்கும் கிளையையும் சுற்றிக் கொண்டது. முறியப் போகும் கிளையின் பாரத்தை நாகமும், நாகத்தோடு சேர்ந்த மரப்பகுதியும் சேர்ந்து பகிர்ந்ததால் அந்தக் கிளை முறியாமல் இருந்தது

அடுத்த காட்சியில் ஒரு துறவி ஒரு பாறையின் மீது ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒரு நாகம் சுற்றி சுற்றி வந்து சீறியது. கண்களைத் திறந்த அந்தத் துறவியை அந்த நாகம் பயமுறுத்தவில்லை. அவர் என்ன என்பது போல் அதைப் பார்த்தார். நாகம் அங்கிருந்து பக்கத்துப் பாறைக்குச் சென்றது. பக்கத்துப் பாறையை அவர் பார்த்த போது தான் அதைத் தாண்டி சிறிது தூரத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் அவர் பார்வைக்குத் தெரிந்தான்.

அடுத்த காட்சியில் அந்தத் துறவியுடன் ஏழு திடகாத்திரமான காட்டுவாசிகள் தெரிந்தார்கள். அவர்கள் தலைவன் போலிருந்த ஒருவன் அவர்களிடம் எதோ சொன்னான். பின் நீண்ட கம்புகளும், கயிறுகளுமாக அவர்கள் பாறைகளில் தவழ ஆரம்பித்தார்கள்.

அடுத்த காட்சியில் மாதவனை துறவி இருந்த பாறையில் அந்தக் காட்டுவாசிகள் கிடத்துவது தெரிந்தது. ஒரு ஈரத்துணியால் அவன் உடலைத் துடைத்துப் பார்த்த போது அவன் முகமெல்லாம் காயங்கள்மூக்கும், தொண்டையும் உடைந்திருந்தன. தலையில் இரண்டு காயங்களும், கை கால்களில் காயங்களும் இருந்தன.  

அடுத்த காட்சியில் ஆம்புலன்ஸில் மாதவன் ஏற்றப்படுவது தெரிந்தது. காட்சிகள் நின்று போய் நாகராஜ் பேச ஆரம்பித்தான்.

மாதவனுக்கு நினைவு திரும்பினப்ப அவன் ஆஸ்பத்திரில இருந்தான். முகம் காயங்களாலயும், மூக்கு உடைஞ்சதாலயும் கோரமாக இருந்ததால அவனுக்கு முகத்துல சர்ஜரி பண்ணினாங்க. தொண்டை உடைஞ்சு அங்கேயும் ஆபரேஷன் பண்ணினதால அவன் குரல் மாறிடுச்சு. அவன் யாரு என்னன்னு கேட்டாங்கஅவனுக்கு எந்தப் பழைய நினைவுமில்லை. பேர் கூட ஞாபகம் இருக்கலை. சுவாமிஜி அவன் நாகப்பாம்புகளால் காப்பாற்றப்பட்டவன்கிறதால நாகராஜ்னு பேர் வெச்சார். அவர் கூடவே அவன் இருந்தான். அவர் போன இடங்களுக்குப் போனான். குடுத்தத சாப்பிட்டான். யார் கிட்டயும் எதுவும் பேசாம அவன் ஊமை மாதிரி வாழ்ந்தான். பகல் வாழ்க்கை ரொம்ப அமைதியாய் இருந்துச்சு. ஆனா ராத்திரில அவனுக்கு வந்த கனவுகள் அமைதியானதாய் இருக்கல. எவனோ ஒருத்தன் அவனைத் திரும்பத் திரும்ப மலையுச்சியில இருந்து தள்ளினான். ஒவ்வொரு தடவையும் அலறலோடயும் துக்கத்தோடவும் மாதவன் எழுந்துடுவான். சில சமயங்கள்ல சில முகங்கள் நினைவுக்கு வந்துச்சு. தலையெல்லாம் நரைச்சு பெருசா குங்குமப் பொட்டு வெச்சிட்டிருந்த ஒருத்தி, சாய்வு நாற்காலில உட்கார்ந்து நியூஸ்பேப்பர் படிச்சுகிட்டிருந்த ஒருத்தர், ஒரு சின்னப் பேப்பரைக் கைல வெச்சிட்டு எதையோ படிச்சுக்காட்டின ஒரு பொண்ணுஎல்லாருமே நெருக்கமானவங்களா தோணுச்சு. ஆனா யாரு என்னன்னு தெரியலை…”


ரஞ்சனி தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழ, தீபக்கும் கண்கலங்க, அதைப் பார்த்த தர்ஷினியும் மேகலாவும் கூடக் கண்கலங்கினார்கள். மாதவனின் அனுபவங்களை வேறு யாரோ ஒருவரது வரலாற்றைச் சொல்வது போல நாகராஜ் சொன்னது அந்த நிகழ்வுகளின் கனத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டுவது போலிருந்தது.  

(தொடரும்)
என்.கணேசன்