சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 31, 2017

இருவேறு உலகம் – 45


க்ரிஷ் உறக்க நிலையிலிருந்து மீண்ட போதிலும் அவனால் கண்விழிக்க முடியவில்லை. அரைமயக்க நிலையிலேயே அவன் இருந்தான். வேற்றுக்கிரகவாசியை இப்போது அவனால் உணர முடியவில்லை. அவன் அருகில் இல்லை போலிருக்கிறது. எங்கே போனான்?

நான் சீக்கிரமே போய் விடுவேன். இனி நீ தனியாகவே எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும்….’ என்று அவன் சொல்லியிருந்தது க்ரிஷுக்கு நினைவு வந்தது. அப்படிப் போயே விட்டானோ? சேச்சே... சொல்லிக் கொள்ளாமல் அப்படிப் போயிருக்க மாட்டான். அவன் நல்லவன்.... நண்பன்.... கசப்பான உண்மைகளைத் தேனில் குழைக்காமல் சொல்பவன்... அது கூட ‘எல்லாம் சரியாக இருக்கிறது என்கிற கற்பனை மயக்கத்தில் இருந்து விடாதே. உன் உலகில் எல்லாமே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதுஎன்பதை உணர்த்துவதற்காகச் சொல்வதாகச் சொன்னான்.

அந்த அழிவைத் தேடித்தரவிருக்கும் தீய சக்திகளை அவன் கேன்சர் செல்கள் என்றான். இப்போதிருக்கும் மயக்க நிலையிலும் கூட க்ரிஷ் மனதில் அவன் சொன்ன உவமானம் ஆழமாகப் பதிந்திருந்து பயமுறுத்தியது.

“மனிதனின் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு வேலை இருக்கிறது.    அந்த வேலையைக் கச்சிதமாய் செய்து முடித்து விட்டு அது இறந்து விடும். அது உருவாகி அழிவது உடம்பை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உண்டான, அதற்கு விதிக்கப்பட்ட வேலையைச் செய்வதற்குத் தான். அதற்கு வேறெந்த தனிப்பட்ட நோக்கமும் இல்லை. ஆனால் கேன்சர் செல்கள் அப்படி அல்ல. அவை உடல்நல நோக்கம் இல்லாமல் தனி தன்னல நோக்கத்துக்காக இயங்குபவை. அவை வேலையை முடித்து அழிந்து போகாமல், பெருகிக் கொண்டே போகிற தன்மை கொண்டவை. அப்படிப் பெருகி வலிமை அடைந்து மற்ற ஒழுங்கான செல்களைச் செயல் இழக்க வைப்பவை. அப்படியே விட்டால் தாங்கள் அழிவதற்கு முன் தாங்கள் இருக்கும் உடலை அழித்து விடும் தன்மை உடையவை....

பல்லாயிரக்கணக்கான கோடிகளில் சொத்து சேர்த்துக் குவித்தும் திருப்தி அடையாமல் அசுரப்பசியோடு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு போகும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கேன்சர் செல்களாக நினைக்கத் தான் க்ரிஷுக்குத் தோன்றியது. சில கோடிகளில் அவர்களது அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாமல் மிக ஆடம்பரத் தேவைகள் கூட முடிந்து விடும். அப்படி இருக்கையில், எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் உழன்று கொண்டிருக்கையில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய செல்வத்தைக் கூடச் சுரண்டியெடுத்து, தங்கள் தேவைகளையும், சம்பாத்தியங்களையும் நியாயம் இல்லாத முறையில் சிலர் பெருக்கிக் கொண்டே போகிற போக்கு ஒரு சமுதாயத்தின் அழிவின் போக்காகவே அவனுக்குத் தோன்றியது.

இன்று வார்டு மெம்பர்களின் சம்பாத்தியமே கோடிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் மற்றவர்களின் சம்பாத்தியம் எந்த அளவில் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவன் அண்ணன் ஒரு எம்.பி., அவன் தந்தை ஒரு அமைச்சர் என்றாலும் கூட இதை அவனால் நியாயப்படுத்த முடியவில்லை. மிக நெருக்கமான அன்பான  குடும்பமாக இருந்தாலும் கூட அவர்கள் இருவரும் அவனிடம் தங்கள் சம்பாத்தியம் பற்றிப் பேசியதில்லை. எதிர்க்கட்சிகளிடமும், ஊடகங்களிடமும் எச்சரிக்கையாக இருந்ததை விட அவர்கள் அவனிடம் அதிக எச்சரிக்கையுடன் இருந்தார்கள்....

அவன் எண்ணங்கள் அப்படியே நின்று போய் அவன் கண் முன் இருட்டினூடே ஒரு பாழடைந்த கோயில் தெரிந்தது. உள்ளே அரைகுறை வெளிச்சத்தில் கோரமான பத்ரகாளி சிலை தெரிந்தது. பத்ரகாளி உக்கிரமாகத் தெரிந்தாள். மெல்ல பத்ரகாளியின் விழிகள் அசைந்தன. பத்ரகாளியின் கண்கள் நெருப்பென ஜொலித்தன. அந்த அரைகுறை வெளிச்சமும் அந்தக் கண்களிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அந்தக் கண்கள் அவனையே பார்த்தன. அடுத்ததாக காளியின் எட்டு கைகளும்   மெல்ல அசைந்தன.  வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி இருந்தன. இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியிருந்தாள். எல்லாமே ஒரு கணம் தத்ரூபமாய்த் தோன்றின. எங்கிருந்தோ உடுக்கை சத்தம் கேட்டது. காளி நடனமாட ஆரம்பித்தாள். அவளுடன் சேர்ந்து அண்டசராசரங்களே ஆடுவது போல் க்ரிஷ் உணர்ந்தான். தாளலயத்துடன் வேகமாக காளி ஆடிய போது ஒவ்வொரு அசைவிலும் பிரம்மாண்ட அழகை க்ரிஷ் பார்த்தான். திடீரென்று உடுக்கை சத்தம் நின்றது. காளி மறுபடியும் சிலையானாள். மயான அமைதி நிலவ ஆரம்பித்தது.  

அப்போது தான் தூரத்தில் இருட்டில் நின்று கொண்டு யாரோ ஒருவன் அந்தக் கோயிலைப் பார்ப்பதைக் க்ரிஷ் கண்டான். அவன் வந்திராவிட்டால் காளியின் நடனம் தொடர்ந்திருக்குமோ? பார்க்கும் ஆளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை ஆனால் அவன் கண்கள் அந்த இருட்டில் அமானுஷ்யமாய் ஜொலித்தன. அந்த ஆள் சிறிது நேரம் சிலை போல நின்று அந்தக் கோயிலையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல அவன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கோயிலின் உள்ளே நுழைவதற்கு முன் அவன் திரும்பிப் பார்த்தான்.. உடனே எல்லாம் மறைந்து போயின.... யாரவன்?

க்ரிஷ் இது கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தான். ஏனென்றால் கனவுகள் தான் இப்படி திடுதிப்பென்று முடியும்...... இப்படி நினைக்கையிலேயே மறுபடி அந்தப் பாழடைந்த கோயில் தெரிந்தது.  இப்போது அது மாலை இளம் வெயிலில் தெரிந்தது. கனவாக இருந்தால் இப்படித் தொடராதே என்று க்ரிஷ் யோசித்தான். கோயிலுக்குள் பத்ரகாளி சிலை மறுபடி தெரிந்தது. காளி சிலையைச் சுற்றிலும் குப்பைகள் வறண்ட இலைகள் கிடந்தன. அந்தக் குப்பைகளைப் பொருட்படுத்தாமல் பத்ரகாளி மோன நிலையில் இருந்தாள். மங்க ஆரம்பித்த அந்த மாலை வேளையில் அந்தக் கோயிலை நோக்கி கம்பீரமான ஒருவர் நடந்து கொண்டிருந்தார். இவர் தான் முந்தைய காட்சியில் இருட்டில் பார்த்த ஆளோ என்ற சந்தேகம் க்ரிஷுக்கு வந்தது. இவர் கண்களும் தீட்சண்யமான கண்கள் தான். ஆனால் இந்தக் கண்களில் பரிசுத்தம் தெரிந்தது. திடீரென்று அந்தக் காட்சியும் மறைந்தது. க்ரிஷ் வேற்றுக்கிரகவாசியின் அருகாமையை உணர்ந்தான்....

க்ரிஷ் பூரண விழிப்படைந்தான். “உன்னால் எனக்கு ஒரு வித்தியாசமான கனவு பாதியில் நின்று விட்டது...

“அது கனவும் அல்ல. பாதியில் நிற்கவுமில்லை. இரண்டும் உண்மையான காட்சிகள் தான்.....

க்ரிஷ் திகைத்தான்.


மாஸ்டர் தனக்குள் எழுந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் சில வினாடிகளில் விலக்கிக் கொண்டார். கோபத்திலும், சுய பச்சாதாபத்திலும் சமநிலை இழக்க வேண்டிய தருணம் அல்ல இது. கண்களை மூடிக் கொண்டு மூச்சை நன்றாகச் சில முறை இழுத்து விட்டார். பின் திரிசூலம் வரைந்திருந்த கல்லை மெல்ல இழுத்தார். சிரமம் இல்லாமல் வந்தது. அவன் எப்படி எடுத்திருப்பான்?என்ற கேள்வி மனதில் வந்து போனது. சுவரை  உடைக்காமல், மற்ற கல்களையும் சேதப்படுத்தாமல் எப்படி கச்சிதமாக எடுத்து அப்படியே திரும்ப வைத்திருக்கிறான் என்று மனதில் வியந்தவராக அந்தக் கல்லைக் கீழே வைத்தார். கல்லைப் பெயர்த்த இடத்தில் பார்த்த போது எடுத்த கல்லின் கீழ் இருந்த கல்லின் நடுவே ஒரு பெரிய துளை தெரிந்தது. அதனுள் அவர் கையை விட்டார். சின்ன மர டப்பா ஒன்று அவர் கையில் பட்டது. அதை வெளியே எடுத்தார். டப்பாவைத் திறந்து பார்த்தார். காலியாக இருந்தது. அது கண்டிப்பாகக் காலியாக இருந்திருக்க வழியே இல்லை. மிக முக்கியத் தகவல் ஒன்று அந்த நாளில் அந்த முகூர்த்த வேளையில் அவர் கைக்குக் கிடைப்பது மிக அவசியம் என்று குரு சொல்லியிருந்தார். அவர்கள் இயக்கத்தின் ரிஷிமார்கள் பல்லாண்டு காலமாய் தவமிருந்து கட்டிக் காத்த சக்திக்கான குறிப்பு ஏதோ இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

அதை எதிரி எடுத்துக் கொண்டு போய் விட்டான்..... அவனுக்கு எப்படி இந்த இடம் பற்றியும், அந்தக் குறிப்பு பற்றியும் தெரியும்? அவன் எப்போது இங்கு வந்து எடுத்துக் கொண்டு போனான்? அந்தக் குறிப்பில் என்ன இருந்தது? அதை எதிரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் சரமாரியாக அவர்  மனதில் எழுந்தன. திரும்பவும் அந்த மர டப்பாவை அப்படியே முன்பு இருந்த இடத்தில் வைத்து விட்டு, கல்லையும் பழைய இடத்திலேயே பொருத்தி விட்டு தளர்ச்சியுடன் பத்ரகாளி சிலைக்கு முன் வந்து நின்றார்.

‘பூஜைகள் நின்று போனவுடன் உன் சக்திகளும் முடிந்து போய் விட்டதா? ரகசியமாய் வைக்க எத்தனையோ இடங்கள் இருக்கையில் உன் சன்னதியில் உன் பின்னால் உன் பாதுகாப்பில் எங்கள் ரிஷிகள் வைத்திருந்தார்களே. அதைக் காப்பாற்றியிருக்க வேண்டியது உன் கடமையல்லவா? ஏமாற்றி விட்டாயே தாயே! என்று அவர் மனம் புலம்பியது.

ஒரு கணம் காளி சிலை உயிர்பெற்றது போலத் தோன்றியது. பத்ரகாளி தத்ரூபமாய் நின்றது போல் அவர் உணர்ந்தார். அது அந்தக் கண நேரம் மாத்திரமே. அடுத்த கணம் காளி கல்லாகவே மாறியிருந்தாள். மெய்சிலிர்த்துப் போய் காளியைப் பார்த்தவர் தரையில் இருந்த குப்பைகளைப் பொருட்படுத்தாமல் சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து வணங்கி விட்டு எழுந்தார். அவர் எழுகையில் அவர் குருவின் பேனா கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் இருபகுதியாகப் பிரிந்தது. பேனாவின் உள்ளே ‘ரீஃபில்லைச் சுற்றி ஒரு காகிதம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 

திகைப்புடன் அதைக் கையில் மாஸ்டர் எடுக்கையில் யாரோ வரும் காலடியோசை கேட்டது.

(தொடரும்)
என்.கணேசன்  

மதுரை தமுக்கம் மைதானத்தில் 01.09.2017 முதல் 12.09.2017 வரை நடக்கும் புத்தகத்திருவிழாவில் என் நூல்கள் அரங்கு எண் 219ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். வாசகர் அனைவரும் வாரீர்!

என்.கணேசன்
                                                                                                                                                        

Monday, August 28, 2017

பாபா கினாராமின் அற்புதங்களும், ஆன்மிகமும்!அமானுஷ்ய ஆன்மிகம்-14


பொங்கிய கங்கை, பாபா கினாராமின் கால்களைத் தொட்டுக் கழுவி அமைதியடைந்து திரும்பியதைக் கண்டு மெய்சிலிர்த்த பாபா சிவதாஸ் அந்த இளைஞன் போக வேண்டிய பாதை நீண்டு இருப்பதையும், அதில் நிறைய சாதிக்க வேண்டிருப்பதையும் உள்மனதில் உணர்ந்து கினாராமைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ ராமானுஜர் வழி வைணவரான அவர், பாபா கினாராமுக்கு வைஷ்ணவ முறைப்படி தீட்சை தந்தார். அவருக்கு ராம நாம மந்திரமும் உபதேசித்தார். சிவனைத் தன் கடவுளாக வரித்துக் கொண்டிருந்த அகோரிகளின் முதல் குருவான பாபா கினாராமுக்கு தமிழ் வைணவாச்சாரியர் வழி வந்த ஒரு குருவிடம் வைணவ தீட்சையும் கிடைத்தது ஆச்சரியமே. (பிற்காலத்தில் பாபா கினாராம் இயற்றிய ’விவேக்சார்’ என்ற அகோரிகளின் புனித நூலின் துவக்கத்திலேயே இந்த வைணவ குருவையும், ராமநாமத்தையும் போற்றியிருக்கிறார்).


அங்கிருந்தும் பாபா கினாராமின் யாத்திரை தொடர்ந்தது. அந்த யாத்திரையில் அவரது அற்புதங்களும் தொடர்ந்தன. அற்புதங்களின் ஆரம்பமாக அவர் அகோரிகளின் குலமாதாவாகக் கருதப்படும் ‘ஹிங்க்லாஜ் மாதா’வின் அருளை பலுசிஸ்தானத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பெற்றார் என்று சொல்லப்படுகிறது. ஹிங்க்லாஜ் மாதா அவரை வாரணாசியில் க்ரிம் குண்டத்தில் ஒரு ஆசிரமம் அமைக்கும்படி சொன்னதாகவும், அங்கு தன் பரிபூரண அருள் கிடைக்கும் என்று ஆசி வழங்கியதாகவும் சொல்கிறார்கள். அதன் பின்னரே பாபா கினாராம் அற்புதங்கள் ஆரம்பமாயின.


வழி நெடுக பல இடங்களில் துன்பத்தில் சிக்கப் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட மக்களுக்கு அவர் உதவிய சம்பவங்கள் பாபா கினாராம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் சொல்லப்படுகின்றன. வரி செலுத்த முடியாததால் ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவனை அப்பகுதி ஜமின்தார் அடிமைப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான். அந்த இளைஞனின் வயோதிகத் தாய் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்ததைக் கண்ட பாபா கினாராம் அந்த வயோதிகத் தாயிடம் காரணம் கேட்டு அறிந்து அந்த ஜமின்தாரிடம் சென்று அந்த இளைஞனை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். தனக்கு வர வேண்டிய வரி கிடைக்காமல் இளைஞனை விடுவிக்க முடியாதென்று ஜமின்தார் கறாராகச் சொல்லி விட, ”நீ நின்றிருக்கிற காலடி மண்ணிலேயே உனக்கு வர வேண்டிய வரிப்பணம் இருக்கிறது, எடுத்துக் கொள்’’ என்று பாபா கினாராம் சொன்னார். அந்த ஜமின்தார் அப்படியே தோண்டிப்பார்த்த போது அதில் அந்த இளைஞன் கட்ட வேண்டிய வரிப்பணம் சரியாக கிடைத்தது. உடனே அவர் காலில் விழுந்து வணங்கிய ஜமின்தார் அந்த இளைஞனை விடுவித்தார். அந்த இளைஞன் ‘பிஜாராம்’ என்ற பெயரில் பாபா கினாராமின் சீடனாக அவரைத் தொடர்ந்தான்.


ஜுனாகத் பகுதியின் அரசன் பிச்சை எடுத்துத் திரியும் பக்கிரிகள், சாதுக்கள் ஆகியோரைச் சிறைப்படுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தான். சிறையில் அவர்கள் தானியங்களைப் பெரிய கல்களால் ஓய்வில்லாமல் அரைக்க வேண்டி இருந்தது. அப்பகுதிக்கு வந்த போது இதை அறிந்த பாபா கினாராம் அந்தக் கல்களைத் தானாக ஆட்ட வைத்தார். சிறை அதிகாரிகள் மூலம் தகவல் அறிந்த அரசன் உடனே அவர்களை விடுவித்து, காரணம் யாரென்று அறிந்து ஓடோடி வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டான்.


சூரத் பகுதியில் விதவைப் பெண் ஒருத்தி ஒரு குழந்தை பெற்றுக் கொண்ட காரணத்தால் அவளையும், அவள் குழந்தையையும் கடலில் தூக்கியெறிய ஊரார் உத்தரவிடப்பட்ட போது அந்தப் பெண்ணையும், அவளது குழந்தையையும் பாபா கினாராம் காப்பாற்றிய செய்தியும் சொல்லப்படுகிறது. இப்படி அவர் புரிந்த அற்புதங்கள் பெரும்பாலும் அனைவராலும் கைவிடப்பட்ட பாவப்பட்ட மக்களுக்கானதாகவே இருந்தன.


குஜராத்தில் கிர்னார் மலைப்பகுதியில் பயணிக்கும் போது தான் பாபா கினாராம், அகோரிகளின் ஜகத்குருவாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும், கருதப்படும் தத்தாத்ரேயரைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது. மிகவும் பயங்கரமான கோரத் தோற்றத்தில் ஒரு சவத்தின் மேல் அமர்ந்திருந்த தத்தாத்ரேயர் கையில் மாமிசத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாபா கினாராமைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் பயத்திலும், அருவருப்பிலும் மூழ்கிப்போயிருப்பார்கள். ஆனால் அவரை அந்த நிலையில் கண்டு பாபா கினாராம் நடுங்கி விடவில்லை. காந்தமாகக் கவரப்பட்டு நின்ற பாபா கினாராமிடம், தத்தாத்ரேயர் தன் உடம்பில் இருந்தே மாமிசத்தை வெட்டி எடுத்து சாப்பிடச் சொல்லி நீட்டினார். அதிலும் அருவருப்பே அடையாமல் அந்த மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்ட பாபா கினாராம் அந்தக் கணமே அண்டசராசரம் அனைத்திலும் நடக்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் காண முடிந்த தெய்வீக நிலையை அடைந்து விட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.


அவரைச் சோதிக்க வேண்டி தத்தாத்ரேயர் ”டெல்லி சக்கரவர்த்தி” என்று சொல்லி இருக்கிறார். அப்போதே டெல்லி சக்கரவர்த்தியை மனக்கண்ணில் காண முடிந்த பாபா கினாராம் “கருப்புக் குதிரையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வெள்ளைச் சால்வை கீழே விழுந்து கொண்டிருக்கிறது” என்று முடித்திருக்கிறார். அவர் சொன்னது போலவே டெல்லி அரண்மனையில் நடந்திருக்கிறது.


அகோரிகளின் ஜகத்குருவான தத்தாத்ரேயர் பாபா கினாராமுக்கு மேலும் பல மெய்ஞான ரகசியங்களைப் போதித்து அகோரிகளின் பூவுலக குருவாக உயர்த்தி விட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். முக்கியமான பொறுப்பைச் சீடனிடம் ஒப்படைத்த குரு சீடனின் தகுதியை சில சமயங்களில் சோதித்துப் பார்ப்பதுமுண்டு அல்லவா? அப்படி ஒரு நிகழ்வு தத்தாத்ரேயருக்கும், பாபா கினாராமுக்கும் இடையே, சில காலம் கழித்து, வாரணாசியில் ‘ஹரிச்சந்திர காட்’டில் நடந்தது. அப்போது தத்தாத்ரேயர், வடிவில் பாபா காலுராம் என்ற அகோர குருவாக காட்சி அளித்திருக்கிறார். 


பாபா காலுராம் மயானத்தில் மண்டை ஓடுகளுக்குத் தீனியாக கொண்டைக்கடலைகளை வீசிக் கொண்டிருக்கையில், பாபா கினாராம் அங்கு சென்றிருக்கிறார். குருவைக் கண்டதுமே அவர் மீண்டும் தன்னைப் பரிட்சிக்கவே அங்கே வந்திருக்கிறார் என்பதை பாபா கினாராம் புரிந்து கொண்டார். உடனே அவர் விளையாட்டாக ”ஸ்தம்பன் க்ரியா” என்ற சக்தியைப் பயன்படுத்தி மண்டை ஓடுகளின் அசைவுகளை அப்படியே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். பாபா காலுராம் அந்த மண்டை ஓடுகளை அழைத்த போதும் அவை சலனமில்லாமல் அப்படியே கிடந்திருக்கின்றன.


அடுத்தபடியாக கங்கையில் ஒரு பிணம் மிதந்து வருவதை பாபா காலுராம், பாபா கினாராமுக்கு விரலால் சுட்டிக் காட்டியிருக்கிறார். உடனே பாபா கினாராம், “மகராஜ் அது பிணமல்ல” என்று சொல்லியிருக்கிறார். 


“பிணமல்லா விட்டால் அதை எழுந்து வரச்செய் பார்க்கலாம்” என்று பாபா காலுராம் சொல்ல, பாபா கினாராம் தயக்கமே இல்லாமல் அந்தப் பிணத்துக்கு எழுந்து வரக் கட்டளையிட்டிருக்கிறார். அந்தப் பிணமும் உயிர்பெற்று கங்கையிலிருந்து எழுந்து அவர்கள் அருகே வந்து வணங்கி நின்றது.


இப்படி இயங்கிக் கொண்டிருந்த மண்டையோடுகளை இயங்காமல் ஸ்தம்பிக்க வைத்தும், இறந்து போயிருந்த உடலை உயிர்ப்பிக்க வைத்தும் தன் குருவை பாபா கினாராம் திருப்திப்படுத்தினார். பாபா காலுராம் தன் சீடனை மெச்சி காசியிலிருந்த க்ரிம் குண்டத்திற்கு அழைத்துச் சென்று எல்லா ஞானங்களுக்கும் சிகரமான அகோர மந்திர ஞான தீட்சை அளித்தார். முன்பே ஹிங்க்லாஜ் மாதாவும் அங்கே ஆசிரமம் அமைக்கும்படியும், அங்கே அருள்பாலிப்பதாகவும் கூறி இருந்ததால் அன்றிலிருந்து அந்த இடத்தையே பாபா கினாராம் தன் நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டார்.


அந்த இடமே இன்றும் அகோரிகளின் புனிதத்தலமாக இருக்கிறது. அந்த க்ரிம் குண்டம் பகுதியின் சக்தி பற்றி பலரும் உயர்வாகச் சொல்கிறார்கள். ஒரு உயிர்க்கொல்லி வியாதி முற்றிய நிலையில் இருந்த குழந்தை ஒன்றை எடுத்துக் கொண்டு பாபா கினாராமிடம் அதன் தாய் பெருந்துக்கத்துடன் வந்த போது அங்கிருந்த குளத்தில் அதைக் குளிப்பாட்ட பாபா கினாராம் கூறியிருக்கிறார். அந்தத் தாயும் தன் குழந்தையை அந்தக் குளத்தில் குளிப்பாட்டி இருக்கிறார். குளிப்பாட்டி விட்டுக் கரை ஏறிய போது அந்தக் குழந்தை முழுவதுமாய் குணமாகி இருந்தது. 


170 ஆண்டுகள் வாழ்ந்த பாபா கினாராம் தான் இறப்பதற்கு முன் விவேக்சார், ராம்கீதா, ராம்ரசால், மற்றும் உன்முனிராம் என்ற நான்கு நூல்களை இயற்றினார். அந்த நான்கு நூல்களில் விவேக்சார் அகோரிகளின் தலையாய புனித நூலாகக் கருதப்படுகிறது. அகோரிகளின் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தியும், சீர்திருத்தியும் தெளிவான வழிகாட்டுதலைத் தந்த பெருமை பாபா கினாராமையே சேரும்.


அவருடைய சமாதி வாரணாசியில் ’பாபா கினாராம் ஸ்தல்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் அகோரிகளின் குலமாதாவான ஹிங்க்லாஜ் மாதாவின் சக்தி எந்திரம் ஒன்றை ஸ்தாபிதம் செய்து விட்டே பாபா கினாராம் சமாதி அடைந்ததால் அங்கு செல்பவர்கள் உயர்ந்த தெய்வீக சக்தியை உணர முடிகிறது என்று சொல்கிறார்கள் 


(தொடரும்)

என்.கணேசன்

நன்றி தினத்தந்தி- 6.6.2017

Thursday, August 24, 2017

இருவேறு உலகம் – 44


ண்பனாக இருந்தும் எதிரியை அழிக்கப் போவதில்லை என்று சொல்கிறானே என்று திகைத்த க்ரிஷ் “ஏன்?என்று கேட்டான்.

“நான் அவனை அழித்து விட்டுப் போனால் அவனைப் போலவே சீக்கிரமே இன்னொருவன் உருவாகி விடுவான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உன் உலகம் இருக்கிறது. அவனை அழித்து அந்த தீமைக்கான சூழ்நிலையையும் அழித்தால் மட்டுமே உன் உலகம் காப்பாற்றப்படும். அதை வெளியிலிருந்து யாரும் செய்வது தற்காலிகத் தீர்வாகுமே ஒழிய நிரந்தரத் தீர்வாகாது. உள்ளிருந்தே, உள்ளிருப்பவர்களே அதற்கான எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும். அப்படிச் செய்து அந்த முயற்சியில் ஜெயித்து உள்ளிருக்கும் நல்லவர்கள் தங்கள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகம் அழிவிலிருந்து நிரந்தரமாக மீளும்....  

என் எதிரியைப் பேரறிவாளன் என்கிறாய், பலமானவன் என்கிறாய், சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கக் கிளம்பியிருக்கிறான் என்கிறாய், அப்படிப்பட்டவனை நான் ஜெயிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா?...

“அது உன் உறுதியையும், முயற்சியையும் பொறுத்தது...

க்ரிஷ் பெருமூச்சு விட்டான். வேற்றுக்கிரகவாசியிடம் அவன் கடந்த அமாவாசைகளில் நிறைய பேசியிருக்கிறான். இந்த பூமியையும், மனிதனையும் தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டிருப்பதாய் சொன்ன வேற்றுக்கிரகவாசிக்கு கசப்புகளைச் சாயம் பூசாமல் தெரிவிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.  உலகத்தின் ஜீவராசிகளில் உச்சமான மனிதன் இன்னும் அடைய வேண்டிய சிகரங்கள் ஏராளமானவை என்று சொன்னவன் அந்தச் சிகரங்களை அடைவதற்கு முன்பாகவே மனிதன் தன்னையும் அழித்து இந்தப் பூமியையும் அழித்து விடும் அபாயம் சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான். பிரச்னை அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் இருப்பதாக சராசரி மனிதன் எண்ணுவது சுய ஏமாற்று வேலை என்று ஆணித்தரமாகச் சொன்னான். சரியான மனிதர்கள் தவறான தலைவர்களைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றான்... தனிமனித சிந்தனைகளைப் படிக்க முடிந்தது போலவே வேற்றுக்கிரகவாசிக்கு ஒட்டு மொத்த மனித சமுதாயத்தில் மேலோங்கும் சிந்தனைகளையும் படிக்க முடிந்ததை அவன் சொன்னான். இன்று அணு ஆயுதங்கள், மதக்கலவரங்கள், இயற்கை வளம் காப்பதில் அலட்சியங்கள் முதலானவை எல்லாம் பூமி அழிவை அரங்கேற்கக் காத்திருக்கின்றன என்கிற சூழல் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூல காரணம் தனிமனிதனின் தரம் குறைவது தான் என்றான்  ....

“தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக   உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

ஒரு கணிதக் கோட்பாட்டை வரிசையாக விளக்குவது போல அவன் அழிவின் போக்கை விளக்கிய போது க்ரிஷால் அதில் தவறு காண முடியவில்லை. இது வரை உலக வரலாற்றில் உச்சம் எட்டிய எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் இருந்த சுவடில்லாமல் அழிந்த காரணங்களும் இவன் சொல்வதை ஒட்டியே அல்லவா இருக்கின்றன?

அடுத்தவர்களிடம் எதிர்பார்க்கும் தரத்தை மனிதன் தன்னிடமே எதிர்பார்ப்பதில்லை என்பதை எத்தனையோ முறை கண்டிருப்பதை க்ரிஷ் எண்ணிப் பார்த்தான்... பலதும் கலந்த சமூகத்தைச் சொல்வானேன், அவன் குடும்பத்தினரே அன்பானவர்கள் தான், நல்லவர்கள் தான்... ஆனால் அவர்களே, (சொல்வது அவன் என்பதால்) அவன் சொல்லிப் பல விஷயங்களில் மாறியிருக்கிறார்களே ஒழிய,  சொன்னது சரி என்று உணர்ந்து மாறியிருப்பதாக அவன் சொல்ல முடியாது. வேறு யாராவது சொல்லியிருந்தால் விரோதிகளாய் தான் பார்த்திருப்பார்கள்....  அவனுக்குத் தெரிந்து நல்லதை உயர்வானதாகவே நினைத்து அந்த எண்ணத்துடனேயே பின்பற்றும் ஒரு ஜீவன் ஹரிணி.... அவளைப் பற்றி எண்ணும் போது மனம் பெருமிதம் கொண்டது... லேசாகியது....

க்ரிஷ் மனதைப் பலவந்தமாக வேற்றுக்கிரகவாசியின் எச்சரிக்கைக்கு மாற்றினான். பின் சொன்னான். “இப்போதைய சூழ்நிலை மோசமாக இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரேயடியாக பூமியே அழிந்து போய் விடும் என்று நீ சொல்வது அதிகப்படுத்திச் சொல்வது மாதிரி இருக்கிறது.... எத்தனையோ நாகரிகங்கள், சாம்ராஜ்ஜியங்கள்  உச்சம் வரை சென்று பின் தரம் தாழ்ந்து அழிந்து போயிருக்கின்றன. ஆனால் மறுபடி மனிதன் மீண்டு வந்திருக்கிறான். உலகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது...

“அப்போதெல்லாம் மனிதன் அழிந்து போயிருந்தாலும் இயற்கை அழிக்கப்படவில்லை. பூமி அழிக்கப்படவில்லை. அதை விட்டு வைத்ததால் தான் திரும்பி மீண்டு வர பூமி இருந்திருக்கிறது. இந்த முறை மனிதன் தான் மட்டும் அழியப்போவதில்லை. தன் அழிவோடு பூமியையும் சேர்த்தே அழித்து விட்டுப் போகும் அபாயம் இருக்கிறது...

பேரறிவாளன் என்கிறாய். அவன் மூலமாகவே அழிவு நிகழும் என்கிறாய். ஒரு அறிவாளி பூமியை அழித்துக் கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளும் வேலையைச் செய்வானா?

“நல்ல குணங்களோடு சேர்ந்திருக்காத அறிவு அழிவை நோக்கியே யாரையும் கூட்டிச் செல்லும்...... அப்படி குணம் சாராத பேரறிவோ பேரழிவிலேயே முடியும்...

ஜீனியஸ் என்று சிறுவயது முதலே அழைக்கப்பட்ட க்ரிஷுக்கு மற்றவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை விடக் கூடுதல் அறிவு படைத்தவர்களாக இருந்தாலும் என்றுமே பொறாமை ஏற்பட்டதில்லை. மாறாக எனக்குக் கற்றுக் கொடுக்க இவனிடம் கூடுதல் அறிவு இருக்கிறதே. இவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்என்ற ஆவல் தான் என்றும் மேலோங்கி இருந்திருக்கிறது. வேற்றுக்கிரகவாசியே பாராட்டும் அந்தப் பேரறிவாளன் தன் கவனத்திற்கு எப்படி வராமல் போனான் என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

அவன் எண்ணத்துக்கு வேற்றுக்கிரகவாசி உடனடியாகப் பதிலளித்தான். “பிரபலம் ஆனால் மற்றவர்கள் கண்பார்வையிலேயே அதிகம் இருக்க வேண்டி வரும், தன் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதால் தன் அறிவை அடுத்தவர் பார்வைக்கு அவன் அதிகம் தெரிய விட்டதில்லை.....

அந்த அளவு சிந்தித்து, கட்டுப்பாட்டுடன் இருப்பவன், எதிரியாக இருக்கும் பட்சத்தில் மிக மிக ஆபத்தானவன் என்பதை க்ரிஷ் உணர ஆரம்பித்தான்...


அவன் உடல் இன்னும் பழைய சக்தியைப் பெற்று விடவில்லை. களைப்பாக இருந்தது. அவனை அறியாமல் கண்மூடினான். தூக்கம் அவனை ஆட்கொண்டது...


மாஸ்டர் வாரணாசி நகர எல்லையையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தார். எல்லையைத் தாண்டிய பின் மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. சில நிமிடங்களுக்கு ஒரு முறை மனிதனையோ, வாகனத்தையோ பார்க்க முடிந்தது. அவர் அன்று காவி நிற கதர்ச்சட்டையில் தன் குருவின் பேனாவை வைத்திருந்தார். இதயத்தின் அருகேயே இருந்து அந்தப் பேனா வருடிக் கொடுத்தது குரு பற்றிய நினைவுகளைக் கிளப்பி விட்டது. மனம் கனமானது....

குருவின் மரணத்திற்குப் பின் அவர் ஒரு வறண்ட தனிமையை உணர்ந்து வருகிறார். அவர்களது ரகசிய ஆன்மீக இயக்கத்தின் தலைமைக்குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் அலைவரிசைகளில் வரும் செய்திகளைப் படிக்க முடிந்தவர்கள். எனவே அந்தத் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கு  தியான நிலைக்குச் சென்று குருவின் மரணச் செய்தியை அனுப்பி விட்ட மாஸ்டர் மீதமுள்ள 95 சதவீத உறுப்பினர்களைக் கூட்டித் தகவல் சொல்லும் பொறுப்பை ஹரித்வாரில் இருந்த விஸ்வத்திடம் ஒப்படைத்து விட்டார். அந்தப் பொறுப்பை விஸ்வம் வேண்டாவெறுப்பாகவே ஏற்றுக் கொண்டார். கணக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அதிக ஈடுபாட்டை என்றுமே காட்டாத விஸ்வத்துக்கு குருவின் மரணம் சம்பந்தமான கசப்பான தகவலை உறுப்பினர்களுக்கு விவரிப்பது கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை மாஸ்டரால் கணிக்க முடிந்தது. இன்னேரம் ஹரித்வாரில் அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்... மாஸ்டருக்கு இப்போது அதிமுக்கிய வேலை ஒன்று காத்திருக்கிறது.

கடைசி சந்திப்பின் போது ஒருவேளை அவருக்கு திடீர் மரணம் சம்பவித்தால் என்ன செய்ய வேண்டும் என்று குரு சொல்லியிருந்ததை நிறைவேற்றத் தான் இப்போது மாஸ்டர் வாரணாசி வந்திருக்கிறார்.   

“வளர்பிறை சப்தமி நாளில் சந்தியா கால நேரத்தில் வாரணாசி எல்லையைத் தாண்டி இருக்கும் பாழடைந்த பத்ரகாளி கோயிலுக்குப் போ....என்று ஆரம்பித்து ரகசியமாய் மிகத் தாழ்ந்த குரலில் குரு சொன்னது இப்போதும் அவர் காதில் ஒலிப்பது போலிருந்தது.

மாஸ்டர் பாழடைந்த பத்ரகாளி கோயிலை நெருங்கி விட்டார். நேரம் சந்தியாகாலம் தான். தன் இயல்பான கட்டுப்பாட்டையும் மீறிய ஒரு சின்ன பரபரப்புடன் அவர் கோயிலுக்குள் நுழைந்தார். கோயிலில் பூஜை நடப்பது சில வருடங்களுக்கு முன்பாகவே நின்று போயிருந்ததால் கோயிலின் உள்ளே குப்பைகள் சேர்ந்திருந்தன. சில குடிகாரப் பயல்கள் அங்கு குடித்து விட்டு பாட்டில்களைப் போட்டு விட்டுப் போயிருந்தார்கள். கோயிலையும் விட்டு வைக்காத அந்த அராஜகம் அவரை முகம் கடுக்க வைத்தது.

மாஸ்டர் கர்ப்பக்கிரகத்தை நெருங்கினார். பத்ரகாளியின் கற்சிலை பயங்கரமாய் இருந்தது. குப்பைகளுக்கு மத்தியில் பத்ரகாளியின் சிலை இருந்தாலும் ஒருவித அமானுஷ்ய அலைகளை அது வெளிப்படுத்துவதாக அவர் உணர்ந்தார். பத்ரகாளியைக் கைகூப்பி வணங்கி சில வினாடிகள் நின்றவர் சிலையின் பின்பக்கமாகப் போனார். பின் சுவற்றின் ஒரு கல்லின் மத்தியில் குரு தெரிவித்தது போலவே ஒரு திரிசூலம் வரையப்பட்டிருந்தது. குரு அந்தக் கல்லை உடைத்து தான் எடுக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கோயில் கட்டிய காலத்தில் சுவரில் வைக்கப்பட்டு சிமெண்ட் பூசப்பட்டு சுண்ணாம்பும் பூசப்பட்டு, அடையாளத்திற்காக சிவப்பு நிறத்தில் திரிசூலக்குறியீடு வரையப்பட்டிருக்கும் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போதோ அந்தக் கல்லை யாரோ பெயர்த்து முன்பே எடுத்து விட்டுத் திரும்ப வைத்திருப்பது தெளிவாகவே தெரிந்தது.

எதிரி இங்கும் அவருக்கு முன்பே வந்து போயிருக்கிறான்!

(தொடரும்)

என்.கணேசன்  

Wednesday, August 23, 2017

முந்தைய சிந்தனைகள் - 20

என் நூல்களில் இருந்து சில சிந்தனை வரிகள் - 


என்.கணேசன்

Monday, August 21, 2017

அகோரிகளை அறிவோமா?கோரிகள் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது, உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு நிர்வாணமாக அலையும் அமானுஷ்ய சாமியார்கள் தான். சுடுகாடுகளில் வசிப்பவர்கள், அங்கு நள்ளிரவில் பூஜை செய்பவர்கள் எனவும் கூடுதலாகச் சிலர் அறிந்திருப்பார்கள். அகோரிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மற்றும் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நமக்குக் குறைவு தான். அப்படிப் பார்க்க நேர்ந்தாலும் ஓரிருவரைத் தான் பார்க்க முடியும். கும்பமேளா சமயத்தில் மட்டும் கூட்டமாக புனித நீராடலுக்கும் வருவார்கள். எனவே ஹரித்வார், அலகாபாத், உஜ்ஜயின் மற்றும் நாசிக் நகரங்களில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவுக்குச் செல்பவர்கள் அகோரிகளைக் கூட்டமாகப் பார்க்கலாம்.  அப்படிப்பட்ட அகோரிகள் தேர்ந்தெடுத்திருக்கும் ஆன்மிக முறையும், அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களும் மிக மிக சுவாரசியமானவை. அவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

சிவபுராணத்தில் சிவமகிமா ஸ்தோத்திரத்தில் ஒரு சமஸ்கிருத சுலோகம் இருக்கிறது.
அகோரன்ன பரோ மந்த்ரோ
நசித்வம் குரோ பரம்.

(பொருள்: எல்லா மந்திரங்களையும் விட உயர்ந்த மந்திரம் அகோர் என்ற மந்திரமே. குருவின் உண்மையான இயல்பை விட அறிய வேண்டியது வேறொன்றும் இல்லை.)


அகோரா என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஆழத்திலும் ஆழமான, ஞானமடைந்த, இருளற்ற என்ற பொருள்கள் கொண்டது. முதலாம் அகோரியாக சிவனையே சொல்வார்கள். அதனால் அகோரா என்ற சொல் சிவனுடைய பெயராகவும் இருக்கிறது. அகோரிகளின் ஆன்மிகம் இருளில் இருந்து ஒருவரை ஒளிக்கு அழைத்துச் செல்வதாகவும், அறியாமையில் இருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கருதப்படுகிறது.


மற்ற எல்லா ஆன்மிக மார்க்கங்களிலும் இல்லாத கோரக்காட்சிகளும், அருவருப்பூட்டும் நடைமுறைகளும் அகோரிகளிடத்தில் உள்ளன. அவர்களது சுடுகாட்டு வழிபாட்டு முறைகள் கோரமானவை. பிணங்களும் அவர்கள் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தப்படும். அவர்களுக்கும் சுத்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது. மனிதக்கழிவுகள், அழுகிய பிணங்களுக்கு மத்தியில் வசிப்பார்கள். கபால மண்டை ஓட்டைக் கையில் வைத்திருப்பார்கள். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகத் தொங்க விட்டுக் கொள்வதும் உண்டு. அவர்கள் தலைமுடியை வெட்டுவதோ, கழுவுவதோ கிடையாது. மாமிசத்தைப் பச்சையாகவே உண்பதும், மது அருந்துவதும், கஞ்சா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதும் கூட அவர்கள் ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல. பேச்சிலும் பெரும்பாலும் இனிமை இருக்காது. தங்களை நெருங்குபவர்களை கடுமையான வார்த்தைகளையே பயன்படுத்தி விரட்டியடிப்பார்கள். இதெல்லாம் வேறு எந்த ஆன்மிக மார்க்கத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாதவை.


இப்படி ஆன்மிகத்திற்கு முரண் போலத் தோன்றும் பல பழக்க வழக்கங்கள் இந்த அகோரிகளிடம் இருப்பது உலகெங்கும் அவர்கள் பால் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையான அகோரிகளிடம் அமானுஷ்ய சக்திகளும் நிறைய இருப்பதாகச் சொல்லப்படுவதால் அவர்களை அறியவும், ஆராயவும், மேலைநாட்டு அறிஞர்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் முயன்று வருகிறார்கள்.


அகோரிகளைப் பொருத்த வரை உலகமே இறை மயம் தான். எல்லாவற்றிலும் இறைவனையே அவர்கள் பார்க்கிறார்கள். இறைவன் இல்லாத இடமில்லை என்று நம்புகிறார்கள். எங்கும் எதிலும் இறைவன் இருக்கிறான் என்றால் சுத்தத்தில் மட்டுமல்லாமல் அசுத்தத்தில் கூட இறைவன் இருக்கிறான் என்றல்லவா அர்த்தம். அதனால் எங்கும், எதிலும் அருவருப்படையாமல் இறைவனையே காணும் பக்குவம் படைத்தவர்களாக இருப்பவர்கள் அகோரிகள். இதே பக்குவம் நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, அழகு, அருவருப்பு போன்ற நேரெதிர் நிலைகளிலும் அவர்களிடம் இருக்கிறது.

சாதாரண மனிதன் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். ஆனால் அகோரிகள் மரணத்தை எக்கணமும் மறப்பதில்லை. சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வதில், மண்டையோட்டை கையில் வைத்துக் கொள்வதில், சுடுகாட்டில் வாழ்வதில் மரணத்தை எக்காலமும் நினைவுபடுத்துகிற சூழலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மரணத்தையே குருவாக எடுத்துக் கொள்கிறார்கள். மயானமே அவர்களது ஆன்மிக குருகுலமாக இருக்கிறது. அங்கேயே அவர்கள் அனைத்தும் கற்கிறார்கள். சில பயிற்சிகள் மூலமும், முயற்சிகள் மூலமும், அசாதாரண சக்திகளை அவர்கள் பெறுகிறார்கள்.


அகோரிகள் சிவனின் அவதாரமான தத்தாத்ரேயரைத் தங்கள் கடவுளாகவும், ஜகத்குருவாகவும், கருதுகிறார்கள். காசியே அவர்களது பிறப்பிடமாகவும், புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது.  அகோரிகளின் ஆரம்ப காலம் குறித்த தெளிவான ஆதாரங்கள் இல்லை. பல காலங்களில் பல பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். உதாரணத்திற்கு கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கபாலிகர்கள் பற்றிய வர்ணனைகள் கிட்டத்தட்ட அகோரிகளை ஒத்தே இருக்கின்றன. கபாலிகர்களும் சிவனை வழிபட்டார்கள். அவர்களும் மண்டை ஓட்டைக் கையில் வைத்திருந்தார்கள். கபால ஓட்டைக் கையில் வைத்திருந்ததால் கபாலிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். அவர்களது வழிபாடுகள் அகோரிகளைப் போலவே ரகசியமானதாக இருந்தன. அவர்களும் பல சக்திகளைப் பெற்றிருந்ததாகப் பேசப்பட்டார்கள்.


தற்போது நாம் அறியும் அகோரிகளில் முதலாவதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரும், அகோரிகளின் ஆன்மிக முறையில் திட்டவட்டமான மாற்றங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியவருமானவர்  பாபா கினாராம். இவர்  கி.பி 1601 ஆம் ஆண்டு வாரணாசிக்கு அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பல காலம் பிள்ளையில்லாமல் வருந்தி வாழ்ந்த அக்பர் சிங் மற்றும் மானசதேவி  தம்பதியருக்கு பாபா கினாராம் குழந்தையாய் பிறந்த போது கிராமத்து மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனராம். ஆனால் பிறந்த குழந்தை அழவில்லை. குழந்தை அழும் போது தாய் மகிழும் ஒரே தருணம் குழந்தையின் முதல் அழுகையின் தருணம் தான் என்பார்கள். பின் எப்போதும் தன் குழந்தையின் அழுகையைப் பார்க்கவோ, கேட்கவோ சகிக்காத தாய் அதன் முதல் அழுகை சத்தத்தில் மனம் மகிழ்வாள் என்பார்கள். ஆனால் குழந்தை உயிரோடு இருந்து, ஆரோக்கியமாகவும் இருந்து அழவில்லை என்பது மட்டுமல்லாமல் தாய்ப்பாலும் குடிக்காமல் இருந்தது பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் கவலையையும் தந்தது.


பாபா கினாராம் பிறந்து மூன்று நாட்கள் கழித்து  மூன்று துறவிகள் அக்பர்சிங், மானசதேவி வீட்டுக்கு வந்து குழந்தையின் காதுகளில் ஏதோ முணுமுணுத்திருக்கிறார்கள். பின் தான் குழந்தை அழ ஆரம்பித்திருக்கிறது. தாய்ப்பால் குடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாபா கினாராம் தெய்வாம்சம் பொருந்திய குழந்தை என்றும், வந்து சென்ற துறவியர் சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளே என்றும் அனைவரும் நம்ப ஆரம்பித்தார்கள்.


பாபா கினாராம் வளர வளர ஞான மார்க்கத்தில் நாட்டம் உள்ளவராக இருந்தார். ஆனால் இளமைக் காலத்தில் மெய்ஞான உண்மைகளை வெளிப்படுத்தியதை விட அதிகமாய் சமூக அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள் முதலியோரின் நலனிலும், அவர்கள் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினார்.


சென்ற இடமெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார் என்று சொன்னாலும் அவர் அற்புத சக்திகளை அப்போது வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை. அவரிடம் அற்புத சக்தி உள்ளது என்பதை முதலில் அறிந்தவர் கங்கைக் கரையில் வாழ்ந்து வந்த பாபா சிவதாஸ் என்ற  சாது. (அந்த சாதுவை சிவராம் என்றும் சிலர் அழைக்கிறார்கள்) யாத்திரை சென்று கொண்டிருந்த வழியில் பாபா சிவதாஸின் ஆசிரமத்தில் பாபா கினாராம் சில நாட்கள் தங்கினார்.


தன் ஆசிரமத்திற்கு வந்திருக்கும் இளைஞன் வெறும் மெய்ஞான ஈடுபாட்டுடையவனோ, சமூக சேவகனோ அல்ல என்பதை பாபா சிவதாஸ், பாபா கினாராம் வந்த ஓரிரண்டு நாட்களிலேயே உணர்ந்தார். பாபா சிவதாஸ் சாமுத்திரிகா லட்சணங்களையும், ஒருவரது செயல்களின் பின் இருக்கும் சூட்சும காரணங்களையும் அறிய முடிந்தவர். அதனால் தெய்வாம்சம் பொருந்திய இளைஞன் இவன் என்று அனுமானித்த அவர் அதைச் சில நாட்களிலேயே உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. 


அன்று கங்கையில் குளிக்கப் போகும் முன் பாபா சிவதாஸ் தன் உடைகளையும், அணிந்திருந்த சில அணிகலன்களையும் பாபா கினாராமிடம் தந்து விட்டுப் போனார். பாபா கினாராம் கங்கைக் கரையில் நின்றிருந்தார். குளிக்கையில் கங்கையின் அலைகளில் அசாதாரண சுழற்சியைக் கண்ட பாபா சிவதாஸ் திகைத்தார். இது போல் கங்கை என்றும் இருந்ததில்லையே என்று ஆச்சரியப்பட்ட பாபா சிவதாஸுக்கு இதன் காரணம் பாபா கினாராமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. உடனே அங்கிருந்த புதர் ஒன்றின் பின் மறைவாக நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தார்.


கங்கையின் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டே வந்து பாபா கினாராமின் கால்களைத் தொட்டு நனைத்த பின் அமைதியடைந்து அடங்கித் திரும்பிய போது பாபா சிவதாஸுக்கு மயிர்க்கூச்செறிந்தது.    (தொடரும்)
என்.கணேசன்      

நன்றி: தினத்தந்தி- 30.5.2017


Thursday, August 17, 2017

இருவேறு உலகம் – 43


ர்ம மனிதனின் முதல் எண்ணம் சதாசிவ நம்பூதிரி கதையை அன்றைய இரவே முடித்துக் கட்டுவதாக இருந்தது. எந்தவொரு மனிதனும் அவனை முழுமையாக அறிந்து உயிருடன் இருக்கவில்லை. அவன் இருக்க விட்டதில்லை.  சிலருக்கு அவன் பற்றிய சில விஷயங்கள் தெரியும். மற்றவர்களுக்கு மற்ற சில விஷயங்கள் தெரியும். சிலருக்கு அவனை குறிப்பிட்ட ஒருவனாகத் தெரிந்தால் மற்ற சிலருக்கு அவனை வேறு ஒருவனாகத் தெரியும். சிலர் அவனைத் தங்களில் ஒருவனாக நினைத்திருந்தார்கள். அவர்களுடைய எதிரிகள் சிலர் அவனைத் தங்களில் ஒருவனாக நினைத்திருந்தார்கள். ஒருவர் பார்த்த முகம் வேறொருவர் பார்த்ததில்லை. வேறொருவர் பார்த்த முகம் மூன்றாம் நபர் பார்த்ததில்லை. பலரும் அவனை ஒரு ரகசிய மனிதனாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவன் ரகசியங்கள் இத்தனை அடுக்குகள், பரிமாணங்கள் கொண்டது என்று யாரும் சந்தேகப்பட்டது கூட இல்லை. இப்படி ரகசியமாகவே அவன் பல பாத்திரங்களை தரித்து கச்சிதமாகவே வாழ்ந்து வந்தான்.  

அப்படிப்பட்டவனின் பல திறமைகளை, பல தனித்தன்மைகளை சதாசிவ நம்பூதிரி தன் ஆருட சாஸ்திர அறிவால் எட்டியிருந்தார். அவர் இப்படியொரு ஜாதகம் பார்த்ததில்லை. இப்படியொரு உச்ச சக்தி மனிதனை அறிந்ததில்லை. அப்படிப்பட்ட மனிதன் இப்போது வந்து வெளியே இருட்டில் இருந்து அவரைக் கண்காணிப்பது எதற்கு என்று அவருக்குப் புரியவில்லை. யோசித்ததில், முன்பு பார்த்துக் கொண்டிருந்த ஜாதகங்கள் தான் காரணம் என்று புரிந்தது. அதற்கும் மேலே போய் அந்த ஜாதகங்களின் மேல் இந்த மனிதனுக்கு என்ன அக்கறை என்று அறிய நினைத்தார். அந்த நேரத்தில் மின் விளக்கு அணைந்தது. தூரத்தில் ஒரு நாய் அமானுஷ்யமாய் ஓலமிட்டது.

சதாசிவ நம்பூதிரி தன் கையில் இருந்த பேனாவைக் கீழே போட்டார். இனி அவர் மேற்கொண்டு ஆராய்வது அவரை மரணம் வரை கொண்டு போய் விடும் என்று பிரபஞ்சம் எச்சரிக்கை விடுப்பதாக உணர்ந்தார்.  ஒவ்வொரு கணமும் பிரபஞ்சம் நம்முடன் பேசிக் கொண்டு தானிருக்கிறது. நாம் தான் நம் உள்மன இரைச்சலில் அதைக் கேட்க முடியாத செவிடர்களாக இருந்து விடுகிறோம் என்ற அசைக்க முடியாத அபிப்பிராயம் அவருக்குண்டு. ஆருட சாஸ்திரம் மூலம் அப்படியொரு எச்சரிக்கையைத் தற்போது அறிய முடிந்த சதாசிவ நம்பூதிரிக்கு உடனே சாக மனமில்லை. மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என்றும் அது தானாக நிகழ வேண்டும் என்று நினைத்த சதாசிவ நம்பூதிரி தற்போது போட ஆரம்பித்த கணக்குகள் கொண்ட தாள்களைத் தள்ளி வைத்தார். சில வினாடிகளில் மின் விளக்கு எரிந்தது. நாயின் ஊளை ஓலம் நின்றது.

சதாசிவ நம்பூதிரி இதயம் பயங்கரமாய் படபடத்தது. இனி எந்த ஜாதகத்தையும் கணக்கையும் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை. நாளை காலை அந்த முதலிரண்டு ஜாதகங்களைப் பார்க்க வேண்டும். ஒரு முடிவை அவர் எட்ட வேண்டும். ஏனென்றால் அவர் பார்ப்பதாய் ஏற்றுக் கொண்ட ஜாதகங்கள் அவை. அதற்கான தொகையை அவர் மகன் வாங்கியும் ஆயிற்று.  இந்த ஆருட ஜாதகம் ஆபத்தான ஜாதகம்.... இதை அவர் பார்க்கப் போவதில்லை....

இந்த முடிவை அவர் எட்டியவுடன் அவர் மன ஓட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மர்ம மனிதன் புன்னகைத்தான். கிழவருக்கு ஆயுசு கெட்டி. கிழவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார்.  அவர் அவனுடைய ஆருட ஜாதகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக அந்த இரு ஜாதகங்களையே பார்த்திருந்தால் இன்னேரம் ஒரு திடமான முடிவை எட்டியிருப்பார். அவர் அப்படி எட்டியிருந்தால் அதை அவன் இன்றே அறிந்தும் இருக்கலாம். ஆனால் அவர் ஆரம்பத்தில் சொன்னபடியே நாளை தான் அவன் அவரிடம் வந்து நேரில் அறிய முடியும்... பரவாயில்லை. நாளையே அவன் வரலாம்.

அவனுக்கு தன் விதி குறித்து வேறொரு மனிதன் ஒரு முடிவை எட்டுவதை அறிய விருப்பமில்லை. அவன் விதி அவன் எழுதிக் கொள்வது.... அவனே தீர்மானிப்பது..... அதைக் கடவுளே தீர்மானிக்கக்கூட அவன் அனுமதிக்க மாட்டான். அவனுடைய எதிரிகள் இருவருடைய விதி மட்டும் எப்படி இருக்கிறது என்று அறிய அவன் ஆசைப்படுவதும் அதற்கேற்றாற்போல தன் விதியை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே ஒழிய வேறு எதற்கும் அல்ல. அவன் ஜோதிட சாஸ்திரம் மூலம் அவர்கள் விதி பற்றி ஒரு முடிவை எட்டியிருக்கிறான். அதில் அவனுக்குச் சில சந்தேகங்கள் தங்கி விட்டிருந்தன. அவற்றை இன்னொரு ஜோதிட விற்பன்னர் மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறான். அவ்வளவு தான்....

சதாசிவ நம்பூதிரி விளக்கை அணைத்து விட்டு உறங்கப் போனார்.  மர்ம மனிதனும் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.....யார் என் எதிரி?க்ரிஷ் கேட்டான்.

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான். ஆனால் அவற்றை எல்லாம் தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு ஒரு பேரறிவாளி  ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கக் கிளம்பியிருக்கிறான். அவன் தான் உனக்கு இப்போது பலமான எதிரி.....

க்ரிஷ் குழப்பத்துடன் கேட்டான். அவனுக்கு என்னிடம் என்ன பிரச்னை? ஏன் என்னை எதிரியாக அவன் நினைக்கிறான்?

“நீ உலகத்திற்கு நல்லது செய்யப் போகிறாய். அதனால் அவன் வழியில் கண்டிப்பாகக் குறுக்கிடப்போகிறாய். அவன் எந்தக் குறுக்கீட்டையும் விரும்பாதவன்.

யாரவன்?

“சமயம் வரும் போது அவனை நீயே சந்திப்பாய்.... அவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் மிக ஆபத்தானவன்

க்ரிஷ் புன்னகைத்தான். மரணம் வரை ஒரு முறை வந்தாகி விட்டது. அதனால் இனி அதைப்பற்றிய பயம் எனக்கில்லை. என் ஒரே கவலை என் சாவால் என் குடும்பம் துக்கப்படும் என்பது தான்.

சொல்லும் போதே அவன் மனதில் அப்பா, அம்மா, உதய், ஹரிணி வந்தார்கள். அவர்கள் கண்ணீர் நிரம்பிய விழிகள் மனக்கண்ணில் நிழலாடின. குடும்பம் என்று சொல்லும் போதே அதில் ஹரிணி சேர்ந்து கொண்டதை ஒரு கணம் ஆச்சரியத்தோடு உணர்ந்தான். காதல் எவ்வளவு வலிமையானது!

“நீயே இறந்த பின் உனக்கென்ன கவலை இருக்கப்போகிறது? அவர்கள் துக்கத்தை எப்படி உணர்வாய்? நீ இந்த உலகத்தில் இருந்தால் அல்லவா எதையும் உணர முடியும்?

“நான் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்கள் துக்கத்தை நான் உணர முடியும் என்று நினைக்கிறேன்க்ரிஷ் உறுதியாகச் சொன்னான். சில பந்தங்கள் வலிமையானவை. மரணத்தால் கூட அவற்றை முழுமையாக முடித்து விட முடிவதில்லை என்று அவன் இப்போதும் நினைக்கிறான்....

க்ரிஷ். உன் அன்பும், பாசமும் தான் உன் மென்மையான பகுதியாகவும், பலவீனமாகவும் இருக்கிறது... நாளை உன் எதிரி  அங்கு தான் தாக்க முயற்சிப்பான், ஜாக்கிரதை

க்ரிஷ் அந்த அக்கறையில் நெகிழ்ந்தான். யாரிவன்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவன் என்னைக் காப்பாற்றியிருக்கா விட்டால் நான் அந்த அமாவாசை அன்றே இறந்து போயிருப்பேனே. ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து வந்து இவன் இந்தக் கிரகத்தின் நலத்தில் காட்டும் அக்கறையும், என் மீது காட்டும் கரிசனமும் இவன் சொல்லும் அதே மென்மை அல்லவா? இந்த மென்மை, இந்த நேசம் இல்லாவிட்டால் பிரபஞ்சத்தில் நன்மை என்பதே இல்லாமல் போய் விடுமே!

கடந்த சில அமாவாசைகளில் அவனிடம் வேற்றுக்கிரக வாசி நெருக்கமாகப் பழகி வந்தாலும் அவன் உண்மை உருவத்தை க்ரிஷால் பார்க்க முடியவில்லை. புறக்கண்ணால் பார்க்க முடியாது. ஏன், உன் ஐம்புலன்களாலும் கூட என்னை நீ உணர முடியாது. அதற்கும் மீறிய ஒன்றால் நீ என்றாவது என்னைப் பார்க்கலாம். அது வரை என்னுடன் இப்படிப் பழகுவதில் நீ சிரமத்தை உணர்ந்தால் சொல். நான் அந்தக் கருப்புப் பறவை வடிவம் எடுத்தது போல் உனக்குப் பிடித்த ஏதாவது வடிவம் எடுத்து வருகிறேன்...என்று ஆரம்பத்தில் வேற்றுக்கிரகவாசி சொல்லியிருந்தான். ஆனால் அப்படி ஒரு வடிவம் எடுக்கும்படி க்ரிஷ் அவனிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. இறைவனையே அப்படி உருவமில்லாமல் உணர முடியாமல் போனதால் அல்லவா நாம் எத்தனையோ வடிவங்கள் கொடுத்து விட்டிருக்கிறோம் என்று நினைத்த அவன் இறைவனுக்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியை உருவமில்லாமலேயே உணரவும், பழகவும் முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று எண்ணினான். ஆரம்பத்தில் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எதையும் எப்படியும் மாற்றாமல் உள்ளதை உள்ளபடியே அறிவது தான் உண்மையான ஞானம் என்று உறுதியாக அவன் முயன்றதில் போகப் போக அது சாத்தியமானது. உருவமில்லாத ஒரு நல்ல நண்பனாய் அவனை க்ரிஷ் உணர்ந்தான்.....

க்ரிஷ் அவனைக் கேட்டான். “நீ என்னை இப்படி எச்சரிப்பதற்கும் பயமுறுத்துவதற்கும் பதிலாக என் எதிரியை நீ அழித்தே விடலாமே. அவன் உன் சக்திக்கும் மிஞ்சியவனாய் இருக்க வாய்ப்பே இல்லையே

“அப்படி நான் அவனை அழிக்கப் போவதில்லைஉறுதியாக வந்தது வேற்றுக்கிரகவாசியின் பதில்.

க்ரிஷ் திகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்