சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, October 28, 2009

ஜென் வாழ்க்கையின் சூட்சுமம்

டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.

அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.

"ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். "வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?"


"நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது" என்றாள் அந்த மூதாட்டி.

அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

"ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா?" என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.

"தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்.

இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது. அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது. ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார். பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க்கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார். இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் "ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.

ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை. வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசிக்கச் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.

நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் சந்தோஷங்களும் தான்.

இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்துவிடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.

மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம். அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கைக்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.

சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா? இதுவே ஜென் சொல்லும் மகிழ்வான வாழ்க்கையின் மிக முக்கியமான சூட்சுமம்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Thursday, October 22, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 8

நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள் அவருடைய இளமையில் ரஷியாவில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே இராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.

1964ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுது போக்கிற்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். டாக்டர்கள் அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும் பையிலிருந்து பார்க்காமல் வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒத்துக் கொண்டார். அப்போது செய்த ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.


அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி அல்லது தம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்த சமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் ந்¢னா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.

ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அறுபதிற்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால் ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.

நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.

அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்திற்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில் சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை மேல் வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக அதை நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.

1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத்துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.

நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப் பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.

ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத்தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?

மேலும் பயணிப்போம்...

என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Monday, October 19, 2009

கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்


இராமாயணத்தில் சில கதாபாத்திரங்கள் பெயரளவில் மட்டுமே அறியப்படுபவர்கள். உதாரணத்திற்கு சுமத்திரையும், சத்ருக்கனனும். இவர்களால் இராமாயணத்தில் எந்தத் திருப்புமுனையும் கிடையாது. இவர்கள் அதிகம் பேசியதும் இல்லை. அதிகம் பேசப்பட்டதும் இல்லை. ஆனால் கம்பன் இது போன்ற கதாபாத்திரங்களையும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டால் கூட அவர்களைத் தன் கவிநயத்தால் சிகரங்களாக உயர்த்தி விடுகிறான்.

சுமத்திரை தசரதனின் மூன்றாம் மனைவி, இலக்குவன் சத்ருக்கனனின் தாய் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். அவள் பட்டத்தரசியுமல்ல, கடைசி மனைவியானாலும் கணவனின் தனியன்பிற்குப் பாத்திரமானவளும் அல்ல. பட்டத்தரசி கோசலை. தசரதனின் தனியன்பிற்குப் பாத்திரமாக இருந்தவள் கைகேயி. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான பெண்மணிகள் பொறாமையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சுமத்திரை வித்தியாசமானவள்.

கைகேயி வரத்தால் இராமன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். சீதை 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று உடன் செல்லத் துணிகிறாள். சுமத்திரை பெற்ற மகன் இலக்குவனும் அண்ணனைப் பின் தொடரத் தீர்மானிக்கிறான். இலக்குவன் தாயிடம் விடை பெற வரும் போது சுமத்திரை சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை உருக்குபவை.

"ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன் அம்மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை: என்றே
ஏகாய்! இனி இவ்வயின் நின்றலும் ஏதம்" என்றாள்.


(அந்த வனம் உனக்கு இந்த அயோத்தியாக இருக்கட்டும். இராமனை மன்னன் தசரதனாக எண்ணிக் கொள். உன் தாய்களின் நிலையில் சீதைக் காண். இந்த மனநிலையில் இங்கிருந்து புறப்படு. இனி இங்கு நீ நிற்பது கூடத் தவறு).

'அவனாவது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற காட்டிற்குப் போகிறான்? நீ ஏன் அங்கு போக வேண்டும்?' என்ற விதத்தில் பேசினாலும் அந்தத் தாய் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் நீ போகாமல் இருந்தால் தான் தவறு என்று சொன்ன மனதைப் பாருங்கள். மேலும் தாய் என்று தன் ஒருத்தியை மட்டும் சொல்லாமல் பன்மையில் சொல்லி கோசலையையும், கைகேயியையும் கூடசேர்த்துக் கொண்ட பண்பைப் பாருங்கள். அடுத்த பாடலில் சுமத்திரை இன்னும் ஒரு படி மேலே போகிறாள்.

பின்னும் பகர்வாள் "மகனே இவன் பின் செல், தம்பி
என்னும் படியன்று. அடியாரினும் ஏவல் செய்தி!
மன்னும் நகர்க்கே அவன் வந்திடில் வா! அன்றேல்
முன்னம் முடி" என்றவள் வார்விழி சோர நின்றாள்.


("மகனே இராமன் பின் தம்பியாகப் போகாதே. சேவகனை விட அதிகமாய் அவனுக்கு சேவை செய். மீண்டும் இந்த நகருக்கு அவன் வந்தால் வா! அவன் வர முடியாதபடி அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவனுக்கும் முன்னால் உன் உயிரை விட்டு விடு" என்றவள் மகனிடம் இப்படிச் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற துக்கத்தில் விழிகளில் அருவியாக கண்ணீர் வழிய நின்றாள்).

இராமனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற வார்த்தையைக் கூட அவள் சொல்லத் துணியவில்லை. அன்றேல் என்ற சொல்லில் சூட்சுமமாகவே தெரிவிக்கிறாள். 'முன்னம் முடி' என்று சொல்லியவுடன் இப்படி சொல்லி விட்டோமே என்ற துக்கத்தில் துயருடன் நிற்பதை கம்பன் நம் கண் முன்னல்லவா கொணர்கிறான்.

இரண்டே பாடல்களில் நம் மனதில் சிகரமாக உயரும் சுமத்திரையின் பேச்சை பின்பு இராமாயணத்தில் வேறெங்கும் நாம் கேட்பதில்லை.

அடுத்ததாக சத்ருக்கனன். சொன்ன நாளில் இராமன் அயோத்திக்குத் திரும்பாததைக் கண்ட பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகிறான். தனக்குப் பின் அயோத்தியின் அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்படி சத்ருக்கனனை வேண்டுகிறான்.

அதைக் கேட்ட சத்ருக்கனனின் நிலையை கம்பர் அழகாகச் சொல்கிறான். சத்ருக்கனன் காதுகளைப் பொத்திக் கொள்கிறான். நஞ்சை உண்டது போல் மயங்கி நிற்கிறான். மாபெரும் துயரத்துடன் பரதனைக் கேட்கிறான். "நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?" நான் உனக்கு என்ன தவறு செய்தேன் என்று இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று மருகி நின்றவன் அடுத்து சொல்வது மிக அழகான பாடல்.

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு
போவானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது
யானாம் இவ்வரசு ஆள்வேன்? என்னே இவ்வரசாட்சி? இனிதே அம்மா!


(காட்டை ஆள நாட்டை விட்டுப் போகிறவனைக் காவல் காக்க பின் தொடர்ந்து போனவன் ஒரு தம்பி. சென்ற அண்ணன் வரவேண்டிய நாளில் வரவில்லை என்று உயிர் விட ஏற்பாடு செய்தவன் ஒரு தம்பி. இப்படிப்பட்டத் தம்பிகள் இருக்கும் போது நான் மட்டும் வெட்கமில்லாமல் இந்த அரசை ஆள்வதா? நன்றாகத் தான் இருக்கிறது என்று இகழ்வாகச் சொல்கிறான் சத்ருக்கனன்.)

இன்றைய அரசியலில் பதவிக்காகத் தம்பிகள் செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்களைப் பார்க்கையில் அந்தத் தம்பிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் அல்லவா? பரதனுக்காவது தாயின் வரம் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் சத்ருக்கனனுக்கு அந்தக் காரணமும் சொல்ல முடியாது. அவன் இராமனின் தம்பிகளில் தானும் குறைந்தவன் அல்ல என்று காட்டுகிறான் அல்லவா?

சிறிய கதாபாத்திரங்களையும் மிக அழகாகக் காட்டி மனதில் என்றென்றும் நிறுத்தும் கம்பனின் கவித் திறமைக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களே சான்று.

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Tuesday, October 13, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 7

எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்திற்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி ·புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது. தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால் தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ·புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார் என்றாலும் அபோதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.

அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் விளையாட்டாக "உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்" என்று சொல்ல அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.


இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டிற்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டிற்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.

பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ் "இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?" என்று சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டிடத்திற்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.


1967ல் இய்சன்பட் "டெட் சிரியோஸின் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒருசில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும் இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.

பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Friday, October 9, 2009

தெருவில் படித்த பாடம்

அறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.

அப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.

குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது. மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவன். மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவனோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தான்.

எனக்கு முதலில் தோன்றியது அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தான். ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமெல்லாம் இல்லாமல் அவன் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.

அடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவன் மாற்ற முடியாது. ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா? அவன் அதைத்தான் செய்து கொண்டிருந்தான். மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவன் பாடல்களின் இனிமையை உணர்ந்தான். அவர்களுக்கு வேலை நேரம் அவனுக்கு பாட்டு நேரம் ஆகியது. அதே நேரத்தில் அவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தோன்றியது போய் அவன் தான் மனநிலை சரியானவன் என்று தோன்றியது. லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம். கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவனிடம் இருந்ததாகத் தோன்றியது.

இன்னொரு நிகழ்ச்சி. 1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை. தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது. அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள் நின்று கொண்டிருந்த கார்களின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாக மாறி விட்டது. முதலில் தீ பரவியது... பிறகு வெள்ளம்... இப்போதோ பூகம்பம். காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே... என்ன தான் செய்வது?" என்று மனிதர் பொரிந்து தள்ளினார்.

அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்டார். அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். "காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் தானாகும். ஆனால் ஐந்து மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது. அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும். நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ·ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் பிரச்னையில்லை. போய் சேர்கிற போது போய் சேர்ந்தால் போதும். அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்."

பல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் இருக்க அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது. அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள். காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா?

உலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது. நம் சூழ்நிலைகள் பலவற்றையும் மாற்றும் சக்தியும் நம்மிடம் இல்லை. அழுவதாலோ, புலம்புவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, வேறு விதமாய் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மட்டும் நம் கையிலேயே இருக்கிறது. நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம். மேலே குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளரும், காரோட்டியும் பெரிய மேதைகள் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர்களும் அல்ல. ஆனால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா?

என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, October 5, 2009

ஸ்டாலினை வியக்க வைத்த ஆழ்மனசக்தி

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-6

ஸ்டாலினை வியக்க வைத்த ஆழ்மனசக்தி

விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார். ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார். ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார். விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரணதண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர். பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.


ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். "வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்" என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார். செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

-என்.கணேசன்

நன்றி:விகடன்

Thursday, October 1, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5

எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.


"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்.

-என்.கணேசன்

நன்றி:விகடன்