சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 25, 2008

தோல்வி நிறைய கற்றுத் தரும்


ஒவ்வொருவரும் வெற்றியடையவே ஆசைப்படுகிறோம், பாடுபடுகிறோம் என்றாலும் வெற்றியை நோக்கிய பாதையில் தோல்விகள் என்ற மைல்கல்களை நாம் கடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கனியை சுவைக்கையில் அதன் ருசி கூடுவதும் நாம் சந்தித்த தோல்விகளின் அனுபவங்களாலேயே. ஆனாலும் தோல்வி வரும் போது அது சகிக்க முடியாததாகவே இருக்கிறது. சகிக்க முடியா விட்டாலும் தவிர்க்க முடியாத போது தோல்விகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்வியை விடச் சிறந்த முறையில் யாரும் பாடங்களைக் கற்றுத் தர முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் வெற்றி பெரிதாக எதையும் புதிதாகக் கற்றுத் தருவதில்லை. மாறாக தோல்வி நிறையவே கற்றுத் தருகிறது. நிறைய சிந்திக்க வைக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிந்திப்பதற்கு பதிலாக, கற்றுக் கொள்வதற்குப் பதிலாக நாம் வருத்தப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம். தோல்வி நம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு பதிலாக நாம் யாரையாவது குறை சொல்ல முற்படுகிறோம். தோல்வி நம் பலவீனங்களை நமக்கு உணர்த்த முனைகிறது. நாம் அதை உணர்வதற்குத் தயாராவதற்குப் பதிலாக நம் தோல்வி எப்படி நியாயமற்றது என்று மற்றவர்க்கு விளக்க முனைகிறோம். எனவே தான் தோல்விகள் வந்து போனாலும் நாம் அதன் மூலம் உண்மையான பயனடைவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வி நமக்கு பணிவைக் கற்றுத் தருகிறது. மாறாக வெற்றி பெரும்பாலும் அகம்பாவத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெற்றி சில சமயங்களில் பல காரணங்களால் தவறுதலாகக் கூடக் கிடைத்து விடுவதுண்டு. அப்போது இல்லாத உயர்வுகள் இருப்பதாக எண்ணி அடுத்த வீழ்ச்சிக்குத் தேவையான கர்வத்தை நாம் பெற்று விடுவதும் உண்டு. தோல்விகள் பல கிடைத்து பணிவைக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றி கிடைக்கும் போதும் நிலை மீறி நடப்பதில்லை.

எனவே தோல்வி வரும் போது நாம் துவண்டு விடத் தேவையில்லை. தோல்வி நம் திறமைக்கான நிரந்தரப் பிரகடனம் அல்ல. அது நாம் இன்னும் கற்க வேண்டியுள்ளதையும், செய்ய வேண்டியுள்ளதையும் நமக்கு சுட்டிக் காட்டும் பேருதவியைச் செய்கிறது. அந்த பாடங்களை வருத்தமோ, துக்கமோ இல்லாமல் நாம் கற்றுக் கொள்ள தவறி விடக்கூடாது. உண்மையான வெற்றி மற்றவர்களின் அங்கீகாரத்தாலேயோ, பாராட்டுதல்களாலேயோ கிடைப்பதல்ல. உண்மையான வெற்றி நம் உள்மனமும் ஆழத்தில் இருந்து சபாஷ் போடும் போது தான் ஏற்படுகிறது. அந்த உண்மையான வெற்றிக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இடையே கிடைக்கும் தோல்விகளில் அடங்கி உள்ளன.

எனவே தோல்வியைத் திறந்த மனத்துடன் ஆராயுங்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளத் தடையாக இருக்கும் வருத்தம், கோபம், அவநம்பிக்கை போன்ற எதிரிகளை மனதில் இருந்து விரட்டி விடுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவைப்படும் பண்புகளைச் சுட்டிக்காட்டும். அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவையான செயல்கள் இன்னதென்று தெரிவிக்கும். அந்தச் செயல்களை செய்யத் துவங்குங்கள். தோல்வி வெற்றிக்குத் தடையாக உங்களிடம் உள்ள பலவீனங்களையும், செயல்பாடுகளையும் பட்டியலிடும். அவற்றை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றி விடுங்கள்.

நீங்கள் வெற்றியடைய இத்தனை பாடங்களைத் தோல்வியைத் தவிர வேறெதுவும் கற்றுத் தருவதில்லை. எனவே தோல்வி வரும் போது நன்றியோடு அதை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் உண்மையாகவே கற்றுக் கொண்டு செயல்பட்டால் அது மீண்டும் வருவதில்லை.

என்.கணேசன்

Friday, September 19, 2008

கனவு காணத் தயங்காதீர்கள்மாவீரன் நெப்போலியன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த ஏழ்மை அவனுடைய வாலிப வயது வரை அவன் வாழ்வில் தங்கி பாடாய் படுத்தியது. பாரிஸில் பிரைன் என்னுமிடத்தில் ராணுவப் பள்ளியில் படித்த போது தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படி நெப்போலியன் வருந்தி எழுதினான். "என்னுடைய வறுமை நிலை அன்னிய மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆழ்த்துகிறது". ஆனால் நெப்போலியனுடைய கனவுகளில் ஏழ்மை இருக்கவில்லை.

மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் சிறுவன் நெப்போலியன் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் ஆழ்ந்த கனவுகளுடன் அமர்ந்திருப்பான். கடலின் அலைகள் போர்வீரர்களாக தாக்க வருவது போலவும் தன் முன் போரிட முடியாமல் மோதி மடிவது போலவும் கற்பனை செய்து கொண்டிருப்பான். அந்தக் கருங்கல்பாறை இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரினைத் தாங்கி வருகிறது.

சத்ரபதி சிவாஜி குழந்தைப் பிராயத்தில் தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டவன். தாய் ஜீஜாபாயுடன் ஒரு மலைப்பகுதியில் தான் சிறு வயதைக் கழித்தான். தந்தை பீஜாப்பூர் சுல்தானது அரண்மனையில் ஒரு நல்ல பதவி வகித்தாலும் செல்வச்செழிப்பும், அந்தஸ்தும் சிவாஜியை எட்டியதேயில்லை. அவனது இளமைப் பருவம் குறித்து "மராட்டிய மக்கள் வரலாறு" என்ற நூலில் வரலாற்றாசிரியர்களான கின்கெய்ட், பராசனிஸ் இப்படி எழுதினார்கள்.

"அந்தி நேரத்தில் சிவாஜி என்ற சிறுவன் அந்த மயான அமைதி நிலவும் மலைப்பகுதி வீடு ஒன்றில் தன் குரு தாதாஜி கொண்டதேவிடம் பாடம் கேட்பான். பாரத வீரர்களின் தீர வரலாற்றைக் கூறும் பழம்பெரும் இதிகாசங்களிலிருந்து பல பாடல்களைக் கணீரென்று குரு வாசித்து சொல்லிக் கொடுப்பார். இரவின் ஊளைக் காற்றில் தீபச்சுடர்கள் லேசாக நடுங்குவதையும், பெரிய பெரிய இரவுப் பூச்சிகள் தூண்களில் மோதி மோதிக் கீழே விழுவதையும் உணராது உலகையே மறந்தபடி சிவாஜி அமர்ந்து இருப்பான். அவனது லட்சியங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருக்கும். சிவாஜி தனக்கென ஒரு இலக்கினை வைத்திருந்தான். 'பிரதமை சிறிதாக இருப்பினும் அது முழு மதியாகக் கண்டிப்பாக வளரும் என எல்லோரும் அறிவார்கள். இது சிவாஜிக்கே பொருந்தும்"

நெப்போலியன் ஐரோப்பாவிலும், சிவாஜி இந்தியாவிலும் சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தி சரித்திரம் படைத்தனர். இவர்கள் வாழ்வின் ஆரம்பம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமே. கனவுகளைத் தவிர்த்து அவர்களிடம் வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. அந்த இல்லாத நிலை அவர்கள் கனவுகளைச் சுருக்கி விடவில்லை. உலகம் இருப்பவர்களுக்கே சொந்தம் என்று இவர்கள் விரக்தியடைந்து கனவுகளை விட்டு விடவில்லை. கடைசியில் கனவுகள் நனவாகும் வரை அவர்கள் கனவுகளை அடைகாத்திருந்தார்கள்.

சாம்ராஜ்ஜியங்களே கனவுகளால் கைகூடும் போது வேறெது தான் கைகூடாது? ஒவ்வொரு துறையிலும் இமாலய சாதனை படைத்தவர்கள் எல்லாம் அப்படிக் கனவு கண்டவர்களே. எனவே கனவு காணத் தயங்காதீர்கள். ஒரு விதை ஒரு காட்டையே உருவாக்கும், அந்த விதை வீரியமுள்ளதாக இருந்தால். உங்கள் கனவுகளும் விதைகள் தான். அவை வீரியமுள்ளதாக இருந்தால் அவை உங்கள் எண்ணப்படியே கச்சிதமாக அமையாமல் இருப்பதில்லை.

'இப்படி ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று கற்பனை செய்து பெருமூச்சு விட்டால் அந்தக் கற்பனைக் கனவு கற்பனையாகவே இருக்கும். ஒரு நாள் பெரிய நடிகனாகும் கனவு, மறுநாள் பிரபலமான பாடகனாகும் கனவு, அதற்கடுத்த நாள் பெரிய கிரிக்கெட் வீரனாகும் கனவு என்று ஒவ்வொரு பிரபலத்தைப் பார்க்கும் போதும் நம் கனவு மாறிக் கொண்டே வருமானால் அந்தக் கனவுகளும் நனவாகாமல் போகும். கனவை நனவாக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால் அந்தக் கனவும் மலட்டுக் கனவே.

வீரியமுள்ள கனவு என்பது உங்கள் ஆழ்மனத்தில் இருந்து எழுவது. அதற்கு மகத்தான உந்து சக்தி உண்டு. சதா அதைப் பற்றியே நினைக்க வைக்கும். அது சம்பந்தப்பட்ட அனைத்திலும் பெரும் ஈர்ப்பு ஏற்படுத்தும். எத்தனை பிரச்சினைகளை சந்தித்த போதும் அந்தக் கனவின் அக்னி தணியாது. உயிரின் உயிராக சாதிக்க வேண்டிய உன்னத விஷயமாக அந்தக் கனவு திகழும். அது நனவாக வேண்டிய செயல்களை உங்களைச் செய்ய வைக்கும். வந்து வந்து போகும் எண்ணங்கள் அல்ல அவை. நிரந்தரமாக நின்று வழிநடத்தக் கூடிய லட்சியம் அது.

எனவே கனவு காணுங்கள். உங்கள் இன்றைய நிலைக்கு அது எட்டாத கனவாகக் கூடத் தோன்றலாம். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அந்தக் கனவு வீரியமுள்ளதாக இருந்தால் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.

-என்.கணேசன்

Monday, September 15, 2008

படித்ததில் பிடித்தது - The Optimist and The Pessimist

இந்த இரு வகை மனிதர்களை இவர் வர்ணித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஒருவன் சந்தோஷமாக வாழ்வானா, துக்கத்தில் மூழ்குவானா, மகுடம் சூடுவானா, மண்ணில் வீழ்ந்து கிடப்பானா, நேசிக்கப்படுவானா, தூற்றப்படுவானா என்றெல்லாம் அறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை. இந்த இரண்டில் அவன் எந்த வகை என்று மட்டும் தெரிந்தால் போதும். ஆமாம், நீங்கள் இதில் எந்த வகை?

The Optimist and The Pessimist

The optimist lives under a clear sky; the pessimist lives in a fog.

The pessimist hesitates, and loses both time and opportunity; the optimist makes the best use of everything now, and builds themselves up, steadily and surely, until all adversity is overcome and the object in view realized.

The pessimist curbs their energies and concentrates their whole attention upon failure; the optimist gives all their thought and power to the attainment of success, and arouses their faculties and forces to the highest point of efficiency.

The pessimist waits for better times, and expects to keep on waiting; the optimist goes to work with the best that is at hand now, and proceeds to create better times.

The pessimist pours cold water on the fires of their own ability; the optimist adds fuel to those fires.

The pessimist links their mind to everything that is losing ground; the optimist lives, thinks and works with everything that is determined to press on.

The pessimist places a damper on everything; the optimist gives life, fire and go to everything.

The optimist is a building force; the pessimist is always an obstacle in the way of progress.

The pessimist lives in a dark, soggy unproductive world, the optimist lives in that mental sunshine that makes all things grow.

- Christian D Larson

Tuesday, September 9, 2008

என்றேனும் ஓர் நாள்

பெரும்பாலானவர்கள் பல முக்கியமான செயல்களை ஒரு நாள் செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை என்றாவது ஒருநாள் செய்வார்கள். அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய மற்ற பல காரியங்கள் இருக்கின்றன. அல்லது எடுக்க வேண்டிய ஓய்வும், ஈடுபட பல பொழுதுபோக்குகளும் நிறைய அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளை அவர்கள் சுத்தமாக மறந்து விடவில்லை. அவ்வப்போது அது பற்றி சொல்வார்கள். ஒரு நாள் செய்வார்கள்.

ரிடையர் ஆனவுடன் படிப்பேன் என்று வேலையில் இருக்கும் போதே எத்தனையோ புத்தகங்களை வாங்கி வைத்த ஒருவரை எனக்குத் தெரியும். நல்ல நல்ல புத்தகங்கள் அவை. அதெல்லாம் மேலோட்டமாய் படிக்கக் கூடிய புத்தகங்கள் அல்ல என்றும் ஆழ்ந்து படிக்க வேண்டிய அந்த புத்தகங்களை ரிடையர் ஆனவுடன் படிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார். ரிடையரானவுடன் மறுநாளே அவர் அந்தப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கவில்லை. பி.எ·ப் க்ரேடியுட்டி வரக் காத்திருந்தார். பிறகு மகள் ஒருத்தி பிரசவத்துக்கு வந்தாள். பேரன் பிறந்து கொஞ்சி விளையாடினார். பேரன் போய் வீடு வெறிச்சென்று இருப்பதாய் நினைத்தார். தானே மகள் வீட்டுக்குப் போய் சில மாதங்கள் இருந்தார். பிறகு காசி யாத்திரை போனார்.... காலம் போய்க் கொண்டே இருந்தது. அவர் வீட்டு அலமாரியில் அந்த புத்தகங்கள் இன்னும் திறக்கப்படாமல் தான் இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் நாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் பரண்கள் எல்லோருடைய வீட்டிலும் இருக்கின்றன. அதற்கென்று நாம் ஒரு குறிப்பிட்ட நாள், நேரம் ஒதுக்கி, அந்த நாள், நேரத்தில் அதை செய்தே தீர்வது என்று உறுதியாக இல்லாத வரை நமது பரண் சுத்தம் செய்யப்படப் போவதில்லை. அதைச் செய்யாமல் அந்தப் பரணைப் பார்க்கிற போதெல்லாம் 'இதை ஒரு நாள் சுத்தம் செய்யணும்' என்று சொல்லிக் கொண்டே இருப்பதெல்லாம் சும்மா தான்.

ஒரு குறிப்பிட்டு சொல்லாத காலத்தை நாம் சந்திக்கப் போவதேயில்லை. 2010ல் இதை செய்து முடித்திருப்பேன் என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி அதற்காகத் திட்டமிட்டு செயல்படுபவன் அக்காரியத்தை செய்து முடிக்க சாத்தியமுண்டு. கொஞ்சம் பணம் சேர்த்து பேங்கில் போட்டு விட்டு பிறகு இதைச் செய்ய நினைத்திருக்கிறேன் என்பவன் என்றுமே அதை செய்து முடிக்கப் போவதில்லை. 'கொஞ்சம் பணம்' என்ற தொகை எவ்வளவு என்பது நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகும். தெளிவில்லாத இலக்குகள் அடையப்படுவதில்லை.

அதே போல யதார்த்தத்திற்கு ஒத்துவராத இலக்குகளும் கைகூடுவதில்லை. ஒரு வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி வந்த இன்னொரு நபரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாயிற்கு வீடு வாங்க முற்பட்டவர் தான் வாங்க இருக்கும் வீட்டில் பத்து லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள வசதிகளை எதிர்பார்த்தார். நடப்பு நிலவரம் பற்றிக் கவலைப் படாமல் வீடு பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் தொடக்கத்தில் வாங்கியிருக்கக்கூடிய வீடுகளுக்கு எல்லாம் தற்போது மும்மடங்கு மதிப்பு உள்ளது. இன்று அவரால் நிலம் மட்டுமே அவருடைய பணத்துக்கு வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இதுவரை சொன்ன செயல்கள் எல்லாம் தலை போகிற விஷயங்கள் அல்ல என்பது உண்மை. இது போன்ற விஷயங்கள் நாம் தினமும் சந்திக்கக் கூடிய விஷயங்கள். என்றேனும் ஓர் நாளில் செய்வோம் என்று சிறிய, மற்றும் பெரிய விஷயங்களில் நம்மை நாமே எப்படி ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

உண்மையாகவே ஒரு காரியம் உங்களுக்கு முக்கியம் என்றால் அதை என்றேனும் ஒரு நாள் செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். நாம் யாரும் சிரஞ்சீவிகள் அல்ல. அந்த என்றேனும் ஓர் நாள் வரை யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. "ஏதாவது செய்யணும்", "ஒரு நாள் செய்யணும்" என்று மொட்டையாக சொல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் ஒழிய எதையும் எப்போதும் நீங்கள் செய்யப் போவதேயில்லை.

என்.கணேசன்

Tuesday, September 2, 2008

புன்னகைத்தார் பிள்ளையார்

பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு அடிக்கடி வந்து மனதாரப் பிள்ளையாரைத் திட்டி விட்டுப் போவது அவள் வழக்கம். 'இனி இந்த கோயில் வாசப்படியை மிதிக்க மாட்டேன்' என்று சவால் விட்டுப் போவாள். ஆனால் மறுபடி வருவாள்.

திருமணமாகிப் பல வருடங்கள் கழிந்து அவளுக்குப் பிறந்த ஒரே மகன் சரவணன். சுறுசுறுப்பாக, புத்திசாலியாக , ஆஜானுபாகுவாக இருந்து அவளைப் பெருமிதப்படுத்திய மகன். ஒரு நாளைக்கு நூறு முறை 'அம்மா, அம்மா' என்றழைத்து அவளையே சுற்றி சுற்றி வந்த மகன்.

"சாயங்காலம் வந்தவுடன் பேல்பூரி சாப்பிட வெளியே போகலாம். ரெடியா இரு" என்று சொல்லிவிட்டுக் காலையில் கல்லூரிக்குப் போனவன், வீடு திரும்பியது பிணமாகத்தான். கல்லூரித் தேர்தலில் மாணவர்களுக்குள் நடந்த கைகலப்பில் கத்தியால் அவன் குத்திக் கொல்லப்பட்டுப் பதினாறு வருடங்களாகி விட்டன. இப்போது நினைத்தாலும் அவள் இதயத்தில் ரத்தம் கசிகிறது.

அன்றைய நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி அது. 'கல்லூரிகளில் வன்முறை' என்று தலையங்கம் எழுதாத பத்திரிக்கையே இல்லை. மகன் போன அதிர்ச்சியில் அவள் கணவனும் சீக்கிரமே போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் மரணம் அவளிடம் மட்டும் இன்னும் கருணை காட்டவில்லை. கணவரின் அரசாங்க உத்தியோகம் அவளுக்குப் பென்ஷன் வாங்கித் தந்து முதியோர் இல்லத்தில் காப்பாற்றி வருகிறது.

"என் பிள்ளையைக் கொன்னவன் பணக்கார வீட்டுப் பிள்ளையாம். பணத்தைக் கொடுத்து ஏழு வருஷ தண்டனையோட தப்பிச்சுட்டான். இப்படி எல்லாத்தையும் நடத்தறது பணம் தான்னா அப்பறம் நீ என்னத்துக்கு? உனக்கு ஒரு கோயில் என்னத்துக்கு? தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்வாங்க. நீ எதுவுமே செஞ்ச மாதிரி தெரியலையே. உங்கிட்ட பேசிப் பிரயோசனம் இல்லை. இதுவே கடைசி. இனிமே உன்னை எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்".

பிள்ளையாரைக் கோபமாக முறைத்து விட்டு பர்வதம் கிளம்பினாள். நடையில் தளர்ச்சியும், மனதில் கனமும் கூடி இருந்தது. முதியோர் இல்லத்தை அடைந்த போது வாட்ச்மேன் சொன்னான். "பர்வதம்மா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க"

பர்வதம் வராந்தாவுக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நின்றான்.

"வணக்கம்மா! என் பெயர் அருண். சரவணனோட க்ளாஸ்மேட்" அவன் தயங்கித் தயங்கி சொன்னான். மகன் பெயரைக் கேட்டதும் பர்வதம் கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனை உன்னிப்பாகப் பார்த்தாள். கடைசியில் அடையாளம் தெரிந்தது. பத்திரிக்கைகளில் பல முறை பார்த்து அவள் மனதில் பதிந்து போன முகம். அவள் மகனைக் கொன்றவன். உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க, கைத்தாங்கலாக அருகிலிருந்த ஒரு நாற்காலியைப் பிடித்துக் கொண்டாள்.

சுதாரித்துக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள். சினிமாவில் பார்க்கிற கொலைகாரர்கள் போல முகத்தில் குரூரம் இல்லை.

"என்னை அடையாளம் தெரியுதாம்மா....?" அவன் தயங்கியபடி கேட்டான்.

"தெரியுது. உட்கார்"

உட்கார்ந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் குழம்பியது போலத் தெரிந்தது. பல முறை பேச வாயைத் திறந்து, வார்த்தைகள் வராமல் சங்கடப்பட்டு, நிலத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

அந்த கனத்த மௌனம் அவளுக்கும் என்னவோ போல் இருந்தது. மகன் பற்றி பேசவும் மனம் வராமல், ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள்.

"கல்யாணம் ஆயிடுச்சா?"

"ஆயிடுச்சு"

"குழந்தைகள்?"

"ஒரு பையன் இருந்தான்...போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டான்...." - தலையைக் குனிந்தபடியே சொன்னான்.

அவளையும் அறியாமல் அவள் மனம் இளகியது. குழந்தைகள் பற்றிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

அவன் நிமிர்ந்த போது அவன் கண்கள் நிரம்பியிருந்தன.

"நான் அன்னிக்கு அப்படி ஏன் செஞ்சேன்னு இன்னும் எனக்கு விளங்கலை. பல பேர் தூபம் போட்டாங்க. சின்னச்சின்னதா நிறைய வெறுப்பை வளர்த்துக்கிட்டோம். எல்லாமாகச் சேர்ந்து என் அறிவை மறைச்சுடுச்சுன்னு தோணுது"

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்ததை அவள் உணர்ந்தாள். ஒன்றுமே பேசாமல் அவனையே கூர்ந்து பார்த்தபடி நின்றாள்.

"விபத்துல என் மகன் பலியானதுக்கப்புறம் தான் என் கொடுமையான செயலோட விபரீதம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. மூணு வருஷம் வளர்த்த என் குழந்தையோட சாவையே என்னால தாங்க முடியலையே.... இருபது வருஷம் வளர்த்து ஆளாக்கிய சரவணனின் இழப்பை நீங்கள் எப்படி தாங்கியிருக்க முடியும்னு நினைச்சப்ப எனக்கு என்னையே மன்னிக்க முடியலை....."

"உங்களைப் பத்தி விசாரிச்சு இங்கே நீங்க இருப்பதைக் கண்டுபிடிச்சு ஒரு மாசமாச்சு. பல தடவை இந்த கேட் வரை வந்து திரும்பிப் போயிருக்கேன். உள்ளே வந்து உங்களைப் பார்க்க எனக்கு தைரியம் வரலை. நான் சரியா சாப்பிட்டு, தூங்கி ரொம்ப நாளாச்சு. என் மனசாட்சி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது. எனக்கு மன்னிப்பு கேட்கிற அருகதை கூட இல்லை. மன்னிக்கக் கூடிய தப்பையா நான் செய்திருக்கேன்? எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன்."

அவன் முகத்திலும் வார்த்தைகளிலும் அளவில்லாத வேதனை தெரிய, ஒரு குழந்தையைப் போல அவன் கெஞ்சிக் கேட்ட விதம் பர்வதத்தை என்னவோ செய்தது. சில மணி நேரம் முன்பு வரை அவள் சேர்த்து வைத்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் பேச்சு கரைத்தது.

கனிவுடன் அவனைப் பார்த்துக் குரல் கரகரக்கச் சொன்னாள். "வேகம் மட்டுமே நிறைஞ்ச, பக்குவமில்லாத வயசில் உன்னையும் அறியாமல் நீ செஞ்ச தப்புக்குச் சட்டப்படியும், மத்தபடியும் நீ அதிகமாகவே தண்டனை அனுபவிச்சுட்டே...."

இந்த வார்த்தைகளைச் சிறிதும் எதிர்பார்த்திராத அருண் திகைத்து "அம்மா..." என்றான். மறுகணம் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தான். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத அவன் உணர்வுகளை அவன் அழுகை சொன்னது. நிறைய நேரம் அழுது ஓய்ந்த பின், கண்களைத் துடைத்துக் கொண்டு அவளருகே வந்து நின்று கேட்டான்.

"உங்களாலே எப்படி அம்மா என்னை மன்னிக்க முடியுது? என்னால தானே நீங்க ஆதரவில்லாமல் தனியா இங்கே இருக்கீங்க...?"

அவன் மனதில் இது விஷயமாக இனி எந்தக் குற்றவுணர்வும் இருக்கக்கூடாது என்று அவளது தாயுள்ளத்துக்குப் பட்டது. "குழந்தைகள் செத்தாத்தான் அவங்களை இழக்கணும்னு இல்லை. அவங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாக்கூட இழக்க வாய்ப்பு இருக்குன்னு நான் இங்கே வந்த பிறகு புரிஞ்சுகிட்டேன். அப்படி இங்கே நிறைய பேர் இருக்காங்க. அதனால் என் மகன் சாகாமல் இருந்திருந்தாக்கூட நான் இங்கே வந்திருக்கலாம் இல்லியா?"

"என்னைச் சமாதானப்படுத்த இப்படிச் சொல்றீங்களாம்மா?"

"இல்லை இப்போதைய யதார்த்ததைச் சொல்றேன்"

நன்றி மிகுதியோடு அவளது வயோதிகக் கரங்களைப் பிடித்துக் கொண்டு அவன் கேட்டான். "அம்மா நீங்க என் கூட வந்துடறீங்களா...? நான் கடைசி வரைக்கும் உங்களை என் தாயார் மாதிரி பார்த்துக்கறேன்"

பர்வதத்தின் கண்களும் மனதும் நிறைந்தன. "நீ கேட்டதே எனக்கு சந்தோஷமா இருக்குப்பா. ஆனா நான் இங்கே சௌகரியமா இருக்கேன். என் வயசுக்காரங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அந்தக் காலத்து நினைவுகளை ஒருத்தொருக்கொருத்தர் பல தடவை சொல்லிப் பகிர்ந்துப்போம். அதில் ஒரு மனநிறைவு இருக்குப்பா. சண்டை போட பக்கத்துக் கோயிலில் ஒரு பிள்ளையார் இருக்கார். நான் திட்டறதை எல்லாம் மௌனமா கேட்டுப்பார். எதிர்த்துப் பேச மாட்டார்."

அவன் ஏமாற்றத்துடன் கேட்டான். "நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதும்மா. என்ன செய்யட்டும்?"

"ஒண்ணு செய்யேன்!"

"என்னம்மா?"- ஆர்வத்துடன் கேட்டான்.

"நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நீ வந்து பார்த்துக் கொண்டிரு. அடுத்த முறை உன் மனைவியைக் கூட்டிட்டு வா. சீக்கிரமாகவே உனக்கு இன்னொரு மகன் பிறப்பான். அவனையும் கூட்டிட்டு வா. இந்தக் கிழவி போய்ச் சேர்கிற வரை ஞாபகம் வச்சு வந்து பாரு..."

கண்கள் குளமாக அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான் அவன். குனிந்து அவள் கால்களைத் தொட்டு அவன் வணங்கிய போது அவள் கால்களை அவன் கண்ணீர் கழுவியது.

"வர்ற ஞாயிற்றுக் கிழமை அவளையும் கூட்டிட்டு வர்றேம்மா..." என்று சொல்லி அவன் விடைபெற்றான்.

அவன் கிளம்பிய பிறகு அவசர அவசரமாகப் பிள்ளையார் கோயிலுக்கு விரைந்தாள் பர்வதம்.

"ஏன் பிள்ளையாரப்பா.....இவனை விடப் பெரிய பெரிய கொடுமை எல்லாம் செய்து, ஊரையே ஏமாத்தி உலையில போடறவனெல்லாம் பிள்ளைகுட்டியோட நல்லாத்தான் இருக்கான். ஆனா, அறியாம செஞ்ச தவறுக்கு சட்டப்படி தண்டனை அனுபவிச்சு, மனசார வருத்தப்பட்ட பிறகும் அருணின் குழந்தையைப் பறிச்சிருக்கியே, நியாயமா? என் மகனுக்கு விதி முடிஞ்சுது. போயிட்டான். இவனையாவது நிம்மதியா இருக்க விடு. எனக்கு இப்ப உன்னைத் தவிர, வேறு யார் மேலயும் வருத்தமில்லை. அருணுக்கு இன்னொரு மகனைக் கொடு. அந்தக் குழந்தைக்குத் தீர்க்காயுளைக் கொடு. அருண் சந்தோஷமாயிருக்கட்டும். நான் வரேன்!"

சொல்லிவிட்டுப் பிள்ளையாரைப் பார்க்கையில் பிள்ளையார் முகத்தில் சற்று புன்னகை கூடினது போல் பர்வதத்திற்குப் பட்டது. "சிரிப்பென்ன வேண்டிக்கிடக்கு. இப்ப எனக்கு நேரமாச்சு. நாளைக்கு வந்து பேசிக்கறேன்" என்று பொய்க் கோபத்தோடு கோயிலை விட்டு வெளியேறினாள்.

முதியோர் இல்லம் நோக்கி நடக்கையில், தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு மனநிறைவு அவளுக்கிருந்தது.

- என்.கணேசன்

(இச்சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகி இலக்கிய சிந்தனையால் 2002 ஜூன் மாத சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)