சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 19, 2012

பரம(ன்) ரகசியம்! - 1

புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு.  சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரையும், முன்னால் இருந்த பெரிய இரும்புக் கதவையும் அவன் ஒருவித அலட்சியத்துடன் ஆராய்ந்தான். இரும்புக் கதவை ஒட்டிய சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகையில் சர்வம் சிவமயம் என்ற வாசகம் கரும்பலகையில் தங்க எழுத்துகளில் மின்னியது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. உள்ளே நாய்கள் இல்லை என்ற தகவலை அவனுக்கு அந்த வேலையைக் கொடுத்தவர்கள் முன்பே சொல்லி இருந்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் அனாயாசமாக அந்த இரும்புக் கேட்டில் ஏறி உள்ளே குதித்தான்.

வீட்டினுள்ளே அந்த நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் பயப்படவும் இல்லை. அவன் தன் சிறிய வயதில் இருந்து அறியாத ஒரு உணர்ச்சி பயம் தான். பன்னிரண்டு வயதில் திருடவும், பதினேழு வயதில் கொலை செய்யவும் ஆரம்பித்தவன் அவன். எத்தனை கொள்ளை அடித்திருக்கிறான், எத்தனை கொலை செய்திருக்கிறான் என்ற முழுக்கணக்கை அவன் வைத்திருக்கவில்லை. போலீசாரிடமும் அதன் முழுக்கணக்கு இல்லை. அத்தனை செய்த போதும் சரி, அதில் சிலவற்றிற்காக பிடிபட்ட போதும் சரி அவன் பயத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.

ஒரு அமானுஷ்ய அமைதியைத் துளைத்துக் கொண்டெழுந்த சுவர்க்கோழியின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறெந்த ஒலியும் இல்லை. அவன் சத்தமில்லாமல் வீட்டை நோக்கி முன்னேறினான்.  வீட்டை முன்பே விவரித்திருந்தார்கள். ஒரு ஹால், படுக்கையறை, பூஜையறை, சமையலறை,  குளியலறை, கழிப்பறை கொண்டது அந்த வீடு. வீட்டின் முன் கதவு மிகப்பழையது, மரத்தினாலானது, பழைய பலவீனமான தாழ்ப்பாள் கொண்டது, அதனால் உள்ளே நுழைவது அவனுக்கு அத்தனை கஷ்டமான காரியம் அல்ல என்று சொல்லி இருந்தார்கள்.

ஹாலில் தான் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஹால் ஜன்னல் திறந்து தான் இருந்தது. மறைவாக நின்று கொண்டு உள்ளே பார்த்தான். முதியவர் ஒருவர் ஹாலில் ஜன்னலுக்கு நேரெதிரில் இருந்த பூஜையறையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். பூஜையறையில் இரண்டு அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பூஜையறையில் ஒரு சிவலிங்கத்தைத் தவிர வேறு எந்த விக்கிரகமோ, படங்களோ இல்லாதது விளக்கொளியில் தெரிந்தது.

இந்த சிவலிங்கம் தான் அவர்கள் குறி. அந்த சிவலிங்கத்தை அவன் உற்றுப்பார்த்தான். சாதாரண கல் லிங்கம் தான். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருந்த அளவுக்கு அறிவுகூர்மை போதாது. அதனால் அவன் அதைத் தெரிந்து கொள்ளவும் முனையவில்லை.

அந்த முதியவர் மிக ஒடிசலாக இருந்தார். அவரைக் கொல்வது ஒரு பூச்சியை நசுக்குவது போலத் தான் அவனுக்கு. இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது பேரம் பேசுவார்கள் என்று நினைத்து இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. மூன்று லட்சமாகக் கேட்டிருக்கலாமோ?

ஆனால் பண விஷயத்தில் பேரம் பேசாதவர்கள், முன்னதாகவே ஒரு லட்ச ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தவர்கள், மற்ற சில நிபந்தனைகள் விதித்தார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த முதியவரை பூஜையறையில் கொல்லக் கூடாது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் அந்த பூஜையறைக்குள் நுழையவோ,  சிவலிங்கத்தைத் தொடவோ கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருந்தார்கள். அவன் அறிவுகூர்மை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ, சொன்னதை அவன் வாயால் திரும்பச் சொல்ல வைத்துக் கேட்டார்கள். அந்த லிங்கத்தில் ஏதாவது புதையல் இருக்குமோ? தங்கம் வைரம் போன்றவை உள்ளே வைத்து மூடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு இப்போது வந்தது. அப்படி இருந்தால் கேட்ட இரண்டு லட்சம் குறைவு தான்.

கிழவர் அந்த பூஜையறையில் அமர்ந்திருப்பது இப்போது அவனுக்கு அனுகூலமாக இல்லை. முன்னால் சிவலிங்கம் சிலையாக இருக்க, முதியவரும் இன்னொரு சிலை போல அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தார். மனதுக்குள்ளே கிழவரிடம் சொன்னான். “யோவ் சாமி கும்பிட்டது போதும்யா. வெளியே வாய்யா

அவன் வாய் விட்டுச் சொல்லி அதைக் கேட்டது போல் முதியவர் கண்களைத் திறந்து அவனிருந்த ஜன்னல் பக்கம் பார்த்தார். அவனுக்கு திக்கென்றது. அவனை அறியாமல் மயிர்க்கூச்செரிந்தது. ஒருசில வினாடிகள் ஹால் ஜன்னலைப் பார்த்தார் அவர். கண்டிப்பாக இருட்டில் நின்றிருந்த அவனை அவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்றாலும் அவர் பார்வை அவனைப் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விடவில்லை. அவனைப்பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டுமே ஒழிய அவன் யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கிழவர் முகத்தில் லேசானதொரு புன்னகை அரும்பி மறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவர் அமைதியாக எழுந்து நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார். வணங்கி எழுந்து அவர் திரும்பிய போது அவர் முகத்தில் அசாதாரணமானதொரு சாந்தம் தெரிந்தது. அவர் பூஜையறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் பத்மாசனத்தில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே ஹாலில் அமர்ந்தார்.

அவன் உள்ளுணர்வு சொன்னது, அவன் அங்கே இருப்பது அவருக்குத் தெரியும் என்று. அவனுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குள் வேறு யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ? அதனால் தான் அவர் அவ்வளவு தைரியமாக அப்படி உட்கார்கிறாரோ? மெல்ல வீட்டை சத்தமில்லாமல் ஒரு சுற்று சுற்றி வந்தான். எல்லா ஜன்னல்களும் திறந்து தான் இருந்தன. அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டான். இருட்டில் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு உள்ளே வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபடி அவன் பழைய இடத்திற்கே வந்து ஹால் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தான். அவர் அதே இடத்தில் பத்மாசனத்திலேயே இன்னமும் அமர்ந்திருந்தார். பூஜையறையில் அகல்விளக்குகள் அணைந்து போயிருந்தன.

இனி தாமதிப்பது வீண் என்று எண்ணியவனாக அவன் வீட்டின் கதவருகே வந்தான். கதவு லேசாகத் திறந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். அவனுக்கு இது எல்லாம் இயல்பாகத் தெரியவில்லை. அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக அங்கே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் மெல்ல கதவைத் திறந்து ஒரு நிமிடம் தாமதித்தான். பின் திடீரென்று உள்ளே பாய்ந்தான். அவனை ஆக்கிரமிக்க அங்கே யாரும் இல்லை.

அவன் பாய்ந்து வந்த சத்தம் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் தியானம் கலையவும் இல்லை. அவனுக்கு அவர் நடவடிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. என்ன இழவுடா இது. இந்த ஆள் மனுசன் தானா?என்று தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான்.  உடனடியாக வேலையை முடித்து விட்டு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

அதற்குப் பின் அவன் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்திருந்த அவர் கழுத்தை அசுர பலத்துடன் நெரித்தான். அவர் உடல் துடித்தாலும் அவரது பத்மாசனம் கலையவில்லை. அவர் அவனைத் தடுக்கவோ, போராடவோ இல்லை. அவர் உயிர் பிரியும் வரை அவன் தன் பிடியைத் தளர்த்தவில்லை.  அவர் உயிர் பிரிந்த அந்த கணத்தில் பூஜையறையில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது. அவன் திகைத்துப் போனான். ஒளி தோன்றியது பூஜை அறையின் எந்த விளக்காலும் அல்ல, அந்த சிவலிங்கத்தில் தான் என்று ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. யாரோ சிவலிங்கத்தில் வெள்ளை ஒளியை பாய்ச்சியது போல, ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான். அது என்ன என்று அவனுக்கு விளக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான்.

முதல் முறையாக இனம் புரியாத ஒரு பயம் அவனுள் எட்டிப்பார்த்தது. யோசித்துப் பார்க்கையில் அந்த முதியவர் சாகத் தயாராக இருந்தது போலவும் அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது.  கடவுளை நம்பாத அவனுக்கு, அமானுஷ்யங்களையும் நம்பாத அவனுக்கு, சிவலிங்கத்தில் வந்து போன ஒளி கண்டிப்பாக வெளியே இருந்து யாரோ டார்ச் மூலம் பாய்ச்சியதாகவோ, அல்லது ஃப்ளாஷ் காமிராவில் படம் எடுத்ததாகவோ தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்ப வேகமாக வெளியே ஓடி வந்து வீட்டை சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. தோட்டத்தில் யாராவது ஒளிந்து இருக்கலாமோ? அவனுக்கு இந்த வேலை தந்தவர்களில் யாராவது ஒருவரோ, அவர்கள் அனுப்பிய ஆள் யாராவதோ  இருக்கலாமோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது.  ஆனால் அதே நேரத்தில் அவனை வந்து தீண்டியதாக அவன்  உணர்ந்த சக்தி என்ன? அது பிரமையோ?

அவனுக்கு குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. அவர்கள் ஒரு மொபைல் போனைத் தந்து அதில் ஒரு எண்ணிற்கு வேலை முடிந்தவுடன் அழைக்கச் சொல்லி இருந்தார்கள். அவன் வெளியே வந்து அவர்கள் சொன்னபடியே அந்த மொபைல் போனை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்.

“கிழவனைக் கொன்னாச்சு

“பூஜையறைக்கு வெளிய தானே?

“ஆமா

“நீ பூஜையறைக்குள்ளே போகலை அல்லவா?

“போகலை

“அந்த சிவலிங்கத்தை தொடலை அல்லவா?

அவனுக்குக் கோபம் வந்தது. “உள்ளே போகாம எப்படி அதைத் தொட முடியும்? என் கை என்ன பத்தடி நீளமா

அந்தக் கோபம் தான் அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தியது போல இருந்தது. அமைதியாகச் சொன்னார். “அங்கேயே இரு. கால் மணி நேரத்தில் என் ஆட்கள் அங்கே வந்து விடுவார்கள்

அவன் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக மிக மந்தமாக நகர்ந்தது போல இருந்தது.  வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான். முதியவரின் உடல் சரிந்து கிடந்தாலும் கால் பத்மாசனத்திலேயே இருந்தது இயல்பில்லாத ஒரு விஷயமாகப் பட்டது. அப்போது தான் அந்தக் கிழவரின் முகம் பார்த்தான். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்திருந்தாலும் அந்த முகத்தில் வலியின் சுவடு கொஞ்சம் கூட இல்லை. மாறாக பேரமைதியுடன் அந்த முகம் தெரிந்தது. உள்ளே நுழைந்து ஹாலில் இருந்தபடியே அந்த சிவலிங்கத்தைக் கவனித்தான். சிவலிங்கம் சாதாரணமாகத் தான் தெரிந்தது.

அதைத் தொடக்கூடாது, பூஜையறைக்குள் நுழையக் கூடாது என்று திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி இருந்ததும், இப்போதும் கூட அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு ரகசியம் இந்த சிவலிங்கத்தைச் சூழ்ந்து இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே செய்யாதே என்பதை செய்து பழகியவன் அவன்.... அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அவர் சொன்ன கணக்குப்படி அவர்கள் வர இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் அந்த சிவலிங்கத்தில் அப்படி என்ன தான் ரகசியம் புதைந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வலிமையாக அவனுக்குள்ளே எழ அவன் அந்தப் பூஜையறைக்குள் நுழைந்தான்.


(தொடரும்)   

- என்.கணேசன்


(பரம(ன்) இரகசியம் நாவல் புத்தக வடிவில் வெளியாகி பரபரப்பான விற்பனையில் உள்ளது. கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனி அல்லவா? நாவலை வாங்கிப் படிக்க விருப்பம் உள்ளவர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்)

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGVதற்போது முதலிரண்டு பதிப்புகள் முடிந்து மூன்றாம் பதிப்பு வெளியாகியுள்ளது.  


51 comments:

 1. very interesting starting very good sir.
  manohar

  ReplyDelete
 2. Classic. Waiting for the next episode. Please post it soon.

  ReplyDelete
 3. சுந்தர்July 19, 2012 at 7:25 PM

  அட்டகாசமான ஆரம்பம் கணேசன் சார். அடுத்த வியாழன் வரை காத்து இருக்கறது தான் கஷ்டமாய் தோணுது.

  ReplyDelete
 4. சிவமயம் புத்தகம் படித்து இருக்கேன், அது போல பல உண்மைகள் வரும் என்று ஆவலுடன் இருக்கேன் . . .

  வாழுதுகள் . . .

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்!! அன்புடன் கே எம் தர்மா..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்!! அன்புடன் கே எம் தர்மா..

  ReplyDelete
 7. GOOD AND CONTINUE YOUR WORK

  ReplyDelete
 8. விறுவிறுப்பாக உள்ளது... அடுத்த பதிவை படிக்கும் ஆவல் மேலோங்குகிறது... நன்றி...

  ReplyDelete
 9. அசத்தலான துவக்கம்... ஜெட் வேகம்.. அடுத்த பாகம் எப்போது., காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அமானுஷ்யமான ஆரம்பம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. arumaiyana arambam..........

  ReplyDelete
 13. Nice start... Eagerly waiting for the next episode..

  ReplyDelete
 14. காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 15. spiritual thriller...

  ReplyDelete
 16. அன்பின் திரு கணேசன்,

  சுவையான ஆரம்பம்.. முதல் பகுதியே முத்தான பகுதியாக அமைந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரரே. தொடர்ந்து படிக்க ஆவலாகக் காத்திருக்கிறோம். நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 17. srk_5580@yahoo.comJuly 21, 2012 at 2:16 AM

  superph

  ReplyDelete
 18. started like a crime novel.very nice

  ReplyDelete
 19. Wow...after Amanushayan......Parama Ragasiyam...super Start....
  Thanks ....Ganesan....Mangal-Q8

  ReplyDelete
 20. Excellent starting. Very much interesting. Good Luck.

  ReplyDelete
 21. Very interesting and i think it will be very informative also

  Thanks lot

  Sakthikarthi
  Tiruppur

  ReplyDelete
 22. very good start.....thrill started in very first episode itself....
  congrats...!!!

  ReplyDelete
 23. Excellen start up. Continue to enlighten the spritual world.
  Suresh

  ReplyDelete
 24. Sir, Can I get to know... where can i get 'Amanushyam' to read?
  Thank u.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Amanushyan is published in August 2014.

   Delete
 25. Very nice. Awaiting for the subsequent posts.

  ReplyDelete
 26. if Thursday comes to tomorrow. i am very happy

  ReplyDelete
 27. arumaiyaaana aarambam..

  ReplyDelete
 28. வசீகரிக்கும் நடை..
  அருமை..

  ஆவலுடன் காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 29. ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான்.//
  எல்லாம் பரமன் ரகசியம்.

  அருமையான கதை.

  ReplyDelete
 30. அருமை கணேசன்! நன்றிகள் பல

  ReplyDelete
 31. I just read your Amanushyan story in nilacharal. Wonderful writing and thrilling novel. It could be very well made into a movie. Eagerly waiting for the next chapter of paraman ragasiyam.

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 33. full book dowload link kedaikuma??

  ReplyDelete
 34. I just happen to see your blog. Wonderful writing. Will get a chance to read the full story... Little thrilled

  ReplyDelete
 35. Good novel paraman ragashiyam I read twice again and again.I purchased in chennai book fair.after that I read amanushyam really un forgetable story.previously iam fan of indrasounfarrajan.I got all hisbooks.like that now iam purchasing n.ganesan books.while reading this type of boo I feel that it creats good humanity,good thoughts,and control m mind and path.for being a good human I want read this types of stories again and again.

  ReplyDelete
 36. migavum arumaiyana kadhai.....I am waiting

  ReplyDelete
 37. When I read this book second time, had not controlled the tears when Swamiji realizes that he is associating with the negative minded people and his thoughts for Ganapathy. The transformation of the entire family towards Eswar was very inspiring. It does not end, if I say this was a great novel...every time, it is an experience and I personally enjoy it while reading and thinking.

  ReplyDelete
 38. Ganesan sir i have read ur amanushyan story wat a createful mind u got sir i feel like amanyshyan is in real still cant believ its jus a story i wish amanushyan part 2 release please sir

  ReplyDelete
  Replies
  1. Amanushyan part 2 is published as buddham saranam kacchami recently. Thank you.

   Delete
 39. என்.கணேசன் அவர்களுக்கு வணக்கம்! நான் நேற்றுத்தான் ‘பரம(ன்) இரகசியம்’ வாசித்து முடித்தேன். வாசித்து முடிக்கும் வரையில் அதைக் கீழே வைக்க முடியவில்லை. வெறும் நாவலாக மட்டும் அன்றி, இதுவரை நான் அறியாத ஒரு அதீத ஆன்மீக உணர்வை உங்களது நாவல் எனக்குள் ஊட்டிவிட்டிருக்கிறது. வெறும் கதையாக இல்லாமல், கதை மாந்தர்களும் சரி, ஏனைய சம்பவங்களும் சரி... நிஜத்தில் நடந்தது போன்றே உணர்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூங்கிக் கிடக்கின்ற அதீத சக்தியை அவன் அடையாளம் கண்டுகொண்டால், செயற்கரிய செயல்களைச் செய்யலாம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாவலில் பல அருமையான வசனங்கள் (வாழ்க்கை என்பது வரைபடத்தோடு தரப்படுவதல்ல) உங்களது ஆழ்ந்த மொழி அறிவையும் வெளிப்படுத்துகிறது. இதை வெறும் புகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம். நான் கூறியதனைத்தும் உண்மையே! ஆன்மீக தளத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நான் பயணப்படவேண்டியதை உங்கள் நாவல் சுட்டிக் காட்டியுள்ளது. அட்டையில் நீங்கள் எழுதியிருப்பதைப் போலவே, எனக்குள்ளும் மறைந்திருக்கும் மானச லிங்கத்தை உணர வெகு ஆவலாக இருக்கிறேன். ஆன்மீகத்தில் நான் அடையக்கூடிய எந்தவொரு முன்னேற்றத்திலும் உங்களது இந்த நாவலுக்கும் பங்கு உண்டு. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்களது எழுத்துக்களை வாசிக்க விழைகிறேன்.

  ReplyDelete
 40. வாசித்த நூல்களில் ஆகச் சிறந்த நூல்களில் ஒன்று...

  ReplyDelete
 41. I bought this book during 2016 for just rupees 50 in a old paper and book shop. You know something I just started to on 06/1/23. After 5 years I had read this novel with my mom. Really the characters are still in my deep down heart. Such an amazing experience after reading this.

  ReplyDelete