என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Tuesday, November 1, 2016

தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்!

 சில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப் புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச் சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப் பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.

1) தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!
   சரி: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!
மண் குதிர் என்பது மண் குவியல். ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம் விழ நேரிடும்.

2) தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
   சரி: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு?
பூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண் அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.

3) தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
   சரி: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.
ஆ நெய்  என்பது பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன். அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும்.  இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம். ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின் தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.

4) அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
இங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.

5) தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
   சரி: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை!
இங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல். அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

6) தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!
  சரி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!
நாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன் என்பதே மருவி நாயாக மாறி விட்டது.

என்.கணேசன் 

Monday, August 22, 2016

வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்!

பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது.  அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.


இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல் -

"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!'



- என்.கணேசன்


Monday, May 4, 2015

உலகப் பழமொழிகள் – 7


61. ஒரு மனிதனை அறிய அவன் பதில்களை விட்டு, அவன் கேள்விகளைக் கவனியுங்கள்.

62. தேவையில்லாத அறிவு இரட்டிப்பு மடமை.

63. மூடன் கடைசியாகச் செய்வதை ஞானி முதலில் செய்கிறான்.

64. மூடன் வெற்றி பெறுவதும் அறிவாளி தோல்வி அடைவதும் உலகின் நிகரற்ற ஆச்சரியங்கள்.

65. யானை தன் தந்தங்களைத் தாங்க நீ போய் உதவி செய்ய வேண்டியதில்லை.

66. சேற்றில் உள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூடனின் சொல்லும் அதிகமாகக் குத்தும்.

67. அறியாமையைப் போல வேறெதற்கும் அவ்வளவு துணிவு கிடையாது.

68. முட்டாள் அமைதியாக இருக்க முடியாது.

69. சிறிது மட்டுமே தெரிந்தவன் அதையே திருப்பித் திருப்பிச் சொல்வான்.

70. நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால் குச்சியை நழுவ விடலாகாது.

தொகுப்பு: என்.கணேசன்
  

Monday, March 4, 2013

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 6




உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.

ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்

இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.

உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


தொகுப்பு: என்.கணேசன்

Monday, December 24, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.

-      
  -   தொகுப்பு: என்.கணேசன்


Monday, October 29, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 4



எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?

கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?

பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?

சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?

வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.

பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

உடையவன் பாராத வேலை உருப்படாது.

தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.

எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை

ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


தொகுப்பு: என்.கணேசன்

Monday, September 3, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 3




இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்

அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.

தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.

வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.

ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.

காற்றில்லாமல் தூசு பறக்காது.

காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.

எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.

சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.

பனி பெய்து குளம் நிரம்பாது.

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.

பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.

இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?

மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


தொகுப்பு: என்.கணேசன்

Monday, July 23, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-2


  
  • காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
  
  * அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


  • ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.

  • சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.

  • இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.

  • வாய் நல்லதானால் ஊர் நல்லது.

  • கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.

  • காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.

  • மயிர் சுட்டுக் கரியாகாது.

  • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.

  • விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)

  • திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)

  • பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)

  • ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.

  • ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.

  • ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

  • தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.

  • அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.

  • அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

  • தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

  • எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.

  • வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.

- தொகுப்பு: என்.கணேசன்

Monday, May 28, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-1




  • சாமி காட்டுமே தவிர ஊட்டாது.

  • அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

  • இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.

  • உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.

  • கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.

  • தெய்வம் பாதி திறமை பாதி.

  • தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.

  • ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.

  • சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.

  • தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.

  • மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.

  • கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.

  • கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.

  • பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.

  • குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.

  • பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.

  • அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.

  • எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.

  • அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.

  • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.

  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

  • அக்காள் இருந்தால் மச்சான் உறவு.

  • முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

தொகுப்பு: என்.கணேசன் 

Monday, April 2, 2012

சத்தியம் தவறாத பசுவின் கதை

முன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், பா பா ப்ளேக் ஷீப் போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது!) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.

கர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.

அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.

புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?

புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு

புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு

பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.

அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்

அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன்.  இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.

புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக

சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. தொலைவில் மறைந்து நின்று நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.

புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.

கற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu”  அல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.

இது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா!

- என்.கணேசன்  

Monday, March 19, 2012

கண்ணதாசனின் வைரவரிகள்!



கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!

-என்.கணேசன்


  • கல்லிலே நார் உரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? ‘அரசியல்என்பது என்னவாம்?

  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

  • ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.

  • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

  • தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!

  • அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.

  • சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.

  • வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?

  • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

  • ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.

  • கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். “நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வாஎன்பதே அது.

  • வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

  • அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

  • நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!

  • ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.

  • இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.

  • தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

  • ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.

  • உங்களுக்குச் சோறு போடுவேன்என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.
- கண்ணதாசன்

Friday, June 24, 2011

படித்ததில் பிடித்தது - ”நிம்மதி சூழ்க!”



நெருங்கிய உறவுகளையும், நேசிக்கின்ற மனிதர்களையும் காலனிடம் பறி கொடுத்து நிற்கின்ற தருணங்கள் மிகவும் துக்ககரமானவை. அதிலும் அந்த மனிதர்களின் முகத்தை கடைசியாய் பார்த்து விட்டுத் திரும்புகையில் ‘இனி நாம் காணப் போவதில்லையே’ என்ற யதார்த்தம் உறைக்கையில் இதயம் இயல்பாகவே இமயமென கனப்பதுண்டு. சமீபத்தில் அது போன்ற ஒரு அனுபவத்தை உடுமலை எரிவாயு மயானத்தில் சந்திக்க நேரிட்டது. அப்போது அங்குள்ள சுவரில் பதித்திருந்த ‘நிம்மதி சூழ்க!’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. பிணத்தை மயானத் தீயில் தள்ளி விட்டு பின் வாங்குகையில் அந்த கவிதையை அங்கு ஒலிபரப்பவும் செய்தார்கள். சென்றிருந்த அனைவரும் அங்கு அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் ஒலித்த அந்தக் கவிதையைக் கேட்டு விழிகள் ஈரமானோம். அந்த நேரத்திற்குப் பொருத்தமான மிக அற்புதமான கவிதை அது. நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, இதயத்தைத் தடவிக் கொடுத்து லேசாக்கிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கவிதையை நீங்களும் படித்து ரசியுங்களேன்.

- என்.கணேசன்



நிம்மதி சூழ்க!


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

- கவிஞர் வைரமுத்து

Tuesday, June 7, 2011

மகான்கள் கண்ட மனம்




உலகில் மிக மிக சிரமமான செயல் எது என்றால் அது மனதைக் கட்டுப்படுத்துவது தான். மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மனதால் கட்டுப்பட்டு அது போன போக்கில் போவது தான் பெரும்பாலான மனிதர்களுக்கு சுலபமாக இருக்கிறது. அதுவே இயல்பாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையான ஆன்மீகத்தின் அடித்தளமே மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான். எனவே உண்மையான மகான்கள் எல்லாம் இறை நிலை அடையும் முன் மனதுடன் பெரும் போராட்டங்களையே நடத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம். அப்போது அவர்கள் மனதை எப்படியெல்லாம் கண்டார்கள், வர்ணித்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் பார்ப்போமா?

தாயுமானவர்:

இவர் அளவுக்கு மனதை ஏசியவர்கள் இருக்க முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு மனதை இவர் ஏசியுள்ளார். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது என்று பாடிய இவர் அந்த சிந்தையை வெல்லும் முன் அது அவரைப் பாடாய் படுத்திய போதெல்லாம் கடுமையாக விமரிசிக்கத் தவறவில்லை. இதோ சில உதாரணங்கள்-


இரும்பு நேர் நெஞ்சக் கள்வன் – (இரும்பு போல் கடினமாக இருக்கும் திருட்டு மனம்)

ஆயிரம் சொன்னாலும் அறியாத வன்னெஞ்சம் (எவ்வளவு சொன்னாலும் உண்மையை அறியாத கடுமையான நெஞ்சம்)

வஞ்சனை அழுக்காறாதி வைத்திடும் பாண்டமான நெஞ்சு (வஞ்சனை, பொறாமை முதலானவற்றை வைத்திருக்கும் பாத்திரமான நெஞ்சம்)


இரும்போ கல்லோ மரமோ எனும் நெஞ்சம் (இரும்பா கல்லா மரமா என்று தீர்மானிக்க முடியாத நெஞ்சம்)

என்னெஞ்சம் ஐயா தீயுண்டிருந்த மெழுகலவோ (தீயின்வாய்பட்ட மெழுகாய் இருக்கும் நெஞ்சம்))

உள்ளம் கனலில் வைத்த பாகோ மெழுகோ (உள்ளம் தீயில் வைத்த பாகா, மெழுகா?)

தெளியாது சுழலும் சிந்தை (தெளிந்திடாமல் சுழன்று கொண்டே இருக்கும் மனம்)

வெந்து வெடிக்கின்ற சிந்தை (வெந்து ஆத்திரத்தில் வெடிக்கின்ற மனம்)

தீதெல்லாம் ஒன்றாய் வன்மை செறிந்திருட்படலம் போர்த்த பாதகச் சிந்தை
(எல்லாத்தீமையும் ஒன்று சேர்ந்து கடுமையான இருட்படலத்தை போர்த்திக் கொண்டிருக்கும் பாதகமான மனம்)

பாதரசமாய் மனது சஞ்சலப்படுதலால் (பாதரசம் அடிக்கடி மாறக்கூடியது. அப்படி சஞ்சலப்படும் மனம்)

ஆசையெனும் பெருங்காற்றூடிலவம் பஞ்செனவும் மனமது அலையும் (ஆசை என்ற பெருங்காற்றில் இலவம் பஞ்சு சிக்கினால் எப்படி அந்தப் பஞ்சு காற்றில் எல்லா இடங்களுக்கும் அலைபாயுமோ அப்படி அலைபாயும் மனம்)

வன்னெஞ்சோ, இரங்காத மர நெஞ்சோ
இரும்பு நெஞ்சோ, வைரமான கன்னெஞ்சோ
அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம்
(கடுமையான நெஞ்சமோ, இரக்கமே இல்லாத மர நெஞ்சமோ, இரும்பாய் இறுகிய நெஞ்சமோ, வைரம் போன்ற கல் நெஞ்சமோ, அல்லது மண்ணாங்கட்டி போல் உறுதியே இல்லாத நெஞ்சமோ எனது நெஞ்சம் என்று கேட்கிறார். இதில் ஒவ்வொன்றாகவும் மனம் ஒவ்வொரு சமயங்களில் இருக்கிறதல்லவா?)

பாழ் நெஞ்சே பொன்னைப் புவியை மடப்பூவையரை மெய்யெனவே (பொன், உலகம், பெண் ஆகியவற்றை மெய் என நினைத்து அதன் பின்னோடும் பாழாய் போன நெஞ்சமே)

இப்படியெல்லாம் பாடாய் படுத்தும் மனதை ஒரு பொருட்டாய் நினைக்க மாட்டேன் என்று மிகவும் உறுதியாக ஓரிடத்தில் கூறுகிறார்:
நெஞ்சே உனையொரு காசாய் மதியேன் நான்

இன்னொரு இடத்தில் அலைகள் இல்லாத நீர்நிலை போல தெளிவான மனத்தை அடைவேனோ என்று சலித்துக் கொள்கிறார்.
திரையிலா நீர் போல் சித்தம் தெளிவனோ

மனமோ அலைகிறது. அதன் பின்னே உறுதியில்லாது மனிதனும் அலைந்தால் அதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? இதை நேரடியாக இன்னொரு இடத்தில் மனதிடமே கேட்கிறார்.
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர்


வள்ளலார்:

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரார்த்தனை நமக்கு நினைவிற்கு வராமல் போகாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பாடிய மகான் அவர். மனம் அந்த அளவுக்குத் தூய்மையாகவும் நடிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அவரும் மனதை சில இடங்களில் பாடுகிறார்.

சும்மா அலையுமென் வேட நெஞ்சம் (வேட்டையாட காட்டுக்குச் சென்ற வேடன் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்க மாட்டான். அதே போல் அலையும் என் நெஞ்சம்)

மனத்தாசையொரு கடலோ! (கடலளவு ஆசையை உள்ளடக்கிய மனம்)

வாயொருபாற் பேச மனமொருபாற் செல்ல (வாயொரு ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கூட மனமோ அதில் நிலைக்காமல் வேறொரு பக்கம் சஞ்சரிக்கிறது)


திருவருட்பா:

திருவருட்பாவிலும் ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மனம் கடுமையாக சாடப்படுகிறது.

மாயையென்னும் நிறையாறு சூழும் துரும்பாய் சுழலுமென்னெஞ்சு (மாயை என்னும் நிறைந்த ஆற்றில் துரும்பாய் சிக்கி சுழல்கின்ற என் நெஞ்சம்)

வஞ்ச நெஞ்சம் கல்மலையோ, இரும்போ, செம்மரமோ
பாறைக்கல்லோ முருட்டுக்கட்டையோ

கன்னெஞ்சமோ கட்டை வன்னெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என்னெஞ்ச என்னெஞ்சமோ

(தாயுமானவர் வர்ணித்தது போலவே இந்த இரண்டு பாடல் வரிகளிலும் வர்ணனை ஒத்துப் போகிறது. இரண்டாவதிலோ எட்டிக்காய் போல கசக்கும் நெஞ்சம் என்பதனையும் சேர்த்து இந்த நெஞ்சம் என்ன நெஞ்சமோ என்று சலித்தும் கொள்கிறார்)

கணிகை போலெனைக் கலக்கிற்றுள்ளம் (விலைமகள் மயக்குவது போல மனம் மயக்கிக் கலக்கியது)


சிந்தை மயங்கித் திரிகின்ற நாயேனை (மனம் மயங்கி ஒரு இலக்கும் இல்லாமல் திரிகின்ற நாய் போல இருக்கிறேன்)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் (பக்குவம் இல்லாத மனமான சிறு பிள்ளை அனைத்தும் அறிந்த அறிவாகிய குருவை மதித்திட மாட்டான்.)

விகாரமெனும் பேய்க்கு நெஞ்சம் பறி கொடுத்து நிற்கின்றேன் (மன விகாரம் என்ற பேய்க்கு நெஞ்சை பறிகொடுத்து விட்டு நிற்கின்றேன். அதாவது அது ஆட்டிய படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறேன்)

நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் (ஓரிடத்தில் நிலைத்து நிற்காத நெஞ்சமும் பொல்லாத மாயையும் சேர்ந்து என்னைப் பாடாய்படுத்துகிறது.

கல்நெஞ்சமே மான் போல் குதித்துக் கொண்டாடேல் (கல் நெஞ்சமே மான் போல் தாவிக் குதித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டாட வேண்டாம்)


திருநாவுக்கரசர்:

திருநாவுக்கரசர் மனதுடன் போராடியதை விட அதைத் தூய்மைப்படுத்தி இறைவனை அங்கு இருத்தி கொண்டாட முனைவதில் அதிக கவனம் கொள்கிறார். துவக்கத்தில் ’குறிக்கோளிலாது கெட்டேன்’ என்று சுய ஆராய்ச்சியில் காண்கிறார். மனதில் குறிக்கோள் உறுதியாக இருக்கின்ற போது தடுமாற்றம் இல்லையல்லவா?

கரப்புறு சிந்தை காண்டற்கரியவன் (வஞ்சனை நிறைந்த மனதால் இறைவன் அறிய முடியாதவன்)

மனத்தினுள் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத்துள்ளார் (மனதினில் ஞான விளக்கை ஏற்றி ஆழமாக எண்ணுபவர்கள் நெஞ்சத்தில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான்)

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் (இறைவனே என் நெஞ்சத்தை உனக்கே இடமாகக் கொடுத்து விட்டேன்)

எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே! (இறைவனை தன்னுள் இருத்திய பிறகு மனதிடம் வியந்து கேட்கிறார். என்ன பெருந்தவம் செய்தாய் என் நெஞ்சமே-இறைவனை இருத்திக் கொள்வதற்கு)

இப்படி மனம் ஆன்மீகத்திற்கு இடையூறாக இருக்கும் போது மகான்களால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. மனம் அலைவதை நிறுத்தி இறைவனில் நிலைத்து அமைதியும் ஆனந்தமும் அடையும் போது பாராட்டவும் படுகிறது.இறைவனை எட்டவும் மனம் மிக அவசியம் என்பதையும் மகான்கள் மறுத்து விடவில்லை. திருமந்திரம் ”சிந்தை தெளிந்தார் சிவமாயினார்களே” என்று சொல்வது போல மனம் தெளிவடையும் போது மனிதன் தெய்வமேயாக முடிகிறது என்பதும் அவர்கள் அறிவாக இருக்கிறது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, April 15, 2011

பாமரனுக்காகப் பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்




பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மக்கள் கவிஞர் என்றழைத்தார்கள். பாமர மக்களுக்காக எளிய பேச்சு வழக்கிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் அவர். அவருடைய பாடல்கள் மக்களின் அறியாமையைச் சாடி முன்னேற்றப் பாதையில் அவர்களை முடுக்கி விடும் வல்லமை படைத்ததாக இருந்தன. இன்றும் பாமர மக்களைக் கவரும் வகையில் தமிழில் பேச்சு வழக்கில் தாங்களும் பாடுவதாக எண்ணிக்கொண்டு குப்பைகளைத் திரைப்பாடல்கள் என்ற பெயரில் பலரும் பல சத்தங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அந்தந்த கால கட்டங்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் பட்டுக்கோட்டையாருடைய பாடல்களோ காலத்தை வென்று இன்றும் பேசப்படுவதே அந்த மக்கள் கவிஞரின் பாடல்களின் தரத்திற்குத் தரப்படும் சான்றிதழ்.

இன்றும் “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற பாடலை அறியாத தமிழர்கள் உண்டா? அந்தப் பாடலில் சோம்பிக் கிடக்கும் மனிதர்களுக்கு சாட்டையடி அல்லவா அவர் தருகிறார்! அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைவு. தெருக்கல்லைப் போல நாள் முழுவதும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் சும்மா இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வது முட்டாள்தனம் என்றும் பொறுப்புள்ள மனிதர்கள் சும்மா இருந்தால் அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் தடைப்பட்டு போகின்றன என்றும் இந்தப் பாடலில் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்களேன்

”நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்-சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு
அதிர்ஷ்டமில்லையென்று அலுத்துக் கொண்டார்
.... .... .... ..... ...... ......
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் – பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”

இதே போல எல்லாம் விதி என்ற முட்டாள்தனத்தை நீக்கி விட்டு வேலை செய்தால் மட்டுமே உயர்வு என்ற உண்மையை அறிவில் நிறுத்த வேண்டும் என்று இன்னொரு பாடலில் அழுத்தமாகச் சொல்கிறார் பாருங்கள்-

”விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்”

செயல்படாமல் இருக்க விதி முதலான பல காரணங்களைச் சொல்லும் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து விடாமல் இருக்க ஒன்று கூடி ஒற்றுமையாய் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பாடலிலும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பாடியுள்ளார் கல்யாண சுந்தரம்.

”கர்மவினையென்பார் பிரமனெழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி-நம்ம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி”

உழைப்பது முக்கியம் என்பது மட்டுமல்லாமல் அந்த உழைப்பையும் பலரும் ஒன்றுகூடி ஒழுங்கு முறையுடன் செய்ய வலியுறுத்தி அவர் எளிமையாக எறும்பின் உதாரணத்தை ஒரு பாடலில் கூறுகிறார்.

”எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
ஒடிஞ்சு போன நம்ம இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்”

வறுமையை விலக்கவும், பயத்தை அடக்கி வைக்கவும், கவலையைத் தீர்க்கவும் இன்னொரு இடத்தில் அறிவுரையைக் கூறுகிறார். முள் நிறைந்த காட்டை அழித்து வயல் நிலமாக மாற்றவும் அறிவுறுத்துகிறார். சுயமுன்னேற்ற சிந்தனைகளை எவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறார் பாருங்கள்:

”கொடுமையும் வறுமையும் கூடையிலே வெட்டி வை!
கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் மூலையிலே கட்டி வை!
நெடுங்கவலை தீர்ந்ததென்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை!
நெருஞ்சிக் காட்டை அழித்து அதில் நெல்லு விதையைக் கொட்டி வை!”

வளரும் பிள்ளைகள் மூடநம்பிக்கைகளிலும், பயத்திலும் சிக்கி முடங்கி இருந்து விடக்கூடாது என்று ஒரு பாடலில் எச்சரிக்கிறார்.

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்தினிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
..... .......... ..... ...........
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே”.

இது போன்ற விஷயங்களை வேடிக்கைக்காகக் கூட நம்பி விட வேண்டாம் என்று பட்டுக்கோட்டையார் எச்சரிக்க முக்கிய காரணம் ஆரம்பத்தில் மேலோட்டமாய் மனதில் மிதக்கும் அது போன்ற எண்ணங்கள் பின் சிறிது சிறிதாக வேர் விட்டு ஆழமாக மனதில் ஊன்றி விடும் என்பதனால் தான். குழந்தைகளை சிறிது நேரம் அடக்கி அமைதியாக உட்கார வைப்பதற்காகச் சொல்லும் இந்த சின்னப் பொய்கள் அவர்களது வீரத்தையும், தைரியத்தையும் முளையிலேயே கிள்ளி எறியும் செயல் என்றும் அவர் இப்பாடலில் எச்சரிக்கிறார்.

மேலும் வறுமைக் கொடுமையை சகிக்க முடியாமல் நாட்டை விட்டே அதைத் துரத்த முனையும் வீரவரிகளை இன்னொரு பாடலில் பாடுகிறார். அந்தப் பாடலில் நாம் ஏழைகள் என்று நம்பி அப்படியே இருந்து விடாமல் முதலில் மனதில் இருந்து ஏழ்மையை துரத்தி புரட்சிப் பாதையில் தமிழனைப் பயணிக்கச் சொல்கிறார் கவிஞர். எண்ணம் மாறினால் தான் எதுவும் மாறும் என்ற அருமையான மனோதத்துவ சிந்தனையை இங்கே பார்க்க முடிகிறது.

”கஞ்சியில்லை என்ற சொல்லைக் கப்பலேற்றுவோம்
செகத்தை ஒப்ப மாற்றுவோம்
பஞ்சையென்று நம்மை எண்ணும் பான்மை வெல்லுவோம்
புரட்சிப் பாதை செல்லுவோம்”

பயத்தை விட்டுத் துணிந்து முயற்சி செய்தால் வரும் துன்பமுமில்லை. பயந்தும் சோர்ந்தும் இருந்து விட்டால் அடைய முடியும் இன்பமுமில்லை என்பதை ஓரிடத்தில் பாடுகிறார்.

”துணிந்தால் துன்பமில்லை. சோர்ந்து விட்டால் இன்பமில்லை”

மேலும் அறிவு வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை அவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்.

”ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி-உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி”

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று திருவள்ளுவர் கூறியதைப் போல குழந்தையைப் பெற்றவுடன் பெறும் இன்பத்தைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அவன் அறிவாளியாக உலகால் அறியப்படும் போது தான் என்பதனை எவ்வளவு எளிமையாக பட்டுக்கோட்டையார் பாடியிருக்கிறார் பாருங்கள்.


உண்மைகளை உணராமல் யாரோ சொன்ன தத்துவங்களை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்வதில் ஒரு பயனுமில்லை. ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று பாடி வைத்த பாடலின் உண்மைப் பொருளை உணராது மேலோட்டமாக உடம்பை அலட்சியப்படுத்துவது முட்டாள்தனம் என்றுணர்த்த அந்தப் பாடலிற்கு எதிர்ப்பாட்டு ஒன்று பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

”காயமே இது மெய்யடா – இதில்
கண்ணும் கருத்தும் வையடா
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா

இறக்கும் வரை உடல் மெய் தான். அதனைக் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொள்வது முக்கியம். எனவே நோய்கள் நெருங்காமல் காத்து உய்வடைய வேண்டும் என்று கூறுகிறார்.

காலன் இவ்வுலகில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை நீண்ட காலம் வாழ விடவில்லை. ஆனாலும் குறுகிய காலத்தில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். அவர் பாடிய பாடல்களில் ஒரு வார்த்தை கூட படிக்காத பாமரனுக்குப் புரியாத வார்த்தையாக இருந்ததில்லை. இந்த அளவு எளிமையாகப் பாடி இருந்தாலும் பாடல்களின் பொருளோ, தரமோ குறைவாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாமரனின் எண்ணத்தையும், அறிவையும், உழைப்பையும் உயர்த்தும் உயர்ந்த சிந்தனைகளை பசுமரத்து ஆணி போல பதிய வைக்கும் அவரது பாடல்களை தமிழறிந்த யாரும் மறந்து விட முடியாது.

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Wednesday, January 19, 2011

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு




சில பேர் கவிதைகள் எழுதினால் அதில் ஒரு பொருளை அர்த்தம் செய்து கொள்வதே மிகவும் கஷ்டம். வார்த்தை ஜாலங்கள் இருக்குமே ஒழிய என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பட்டிமன்றமே நடத்த வேண்டி வரும். ஆனால் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த கவி காளமேகம் என்ற புலவர் ஒரே பாடலில் நேர் எதிரான இரு கருத்துகளைக் கூற வல்லவர்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகம் காத்தான் சத்திரம் சென்று சேர்ந்த சமயம் அகாலமானதால் அங்கு சமைத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனாலும் இவருக்காக அவர்கள் சமைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவு தயாரிக்க நேரம் அதிகமானது. பசி தாங்காத காளமேகம் கோபத்தில் “நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் மாலையில் தான் அரிசியே வரும். அதை சுத்தம் செய்து உலையில் போடும் போது நள்ளிரவாகி விடும்.அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில் பரிமாறுவதற்குள் பொழுது விடிந்து விடும்” என்று பொருள்பட பழித்துப் பின் வரும் பாட்டைப் பாடினார்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்-குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பின் அவருக்கு உணவு பரிமாறினார்கள். ருசியான உணவைத் திருப்தியாக அவர் உண்டு முடித்த பின் சத்திரத்து அதிகாரி அவரிடம் வந்து “உணவு சமைக்க குறைந்த பட்ச நேரமாவது ஆகும் அல்லவா? அதற்குப் போய் எங்கள் சத்திரத்தை இப்படிப் பழித்துப் பாடி விட்டீர்களே” என்று கூறி வருந்தினார். கவி காளமேகத்திற்கு மனம் நெகிழ்ந்தது.

ஆனால் சமயோசிதமாக தன் பாடலுக்கு வேறு விதமாக அவர் விளக்கம் அளித்தார். “ஐயா! என் பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் பாடிய பாடலின் பொருள் இது தான். “உலகமெங்கும் பஞ்சம் வந்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்” இப்போது சொல்லுங்கள். உங்கள் சத்திரத்தை நான் பழித்துப் பாடாமல் பாராட்டி அல்லவா பாடி இருக்கிறேன்”

சத்திரத்து அதிகாரி மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவா வேண்டும்.

இந்தப் பாடலைக் கோபத்தில் திட்டிப் பாடினாலும் தன் சாதுரியத்தால் அதன் பொருளை அப்படியே திருப்பிப் போட்டு விட்டார் காளமேகப் புலவர். ஆனால் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாட்டுவதிலும் அவர் வல்லவராக இருந்தார். அதற்கு இன்னொரு உதாரணம்-

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சென்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள். காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.

சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்
அஞ்சு அக்கரத்தர் – பஞ்சாட்சர சொரூபமானவர்
முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாளர் – முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் – உலகமெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் – சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்
அஞ் சக்கரத்தார் – அழகிய சக்கரத்தை உடையவர்
முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் – முன்னாளில் மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் மையாகர் – உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல் பொருள் கொண்டு வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப் பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல. அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?

என்.கணேசன்

நன்றி: ஈழ நேசன்

Friday, September 10, 2010

பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்





இராமாயணத்தில் கும்பகர்ணன் நிலை மிக தர்மசங்கடமானது. அவனுடைய பாசத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் எதிரெதிர் அணியில் இருக்கின்றனர். அண்ணன் மீது அவனுக்கிருந்த அன்பை இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். அவன் தம்பி மேல் வைத்திருந்த பாசமும் சற்றும் குறைந்ததல்ல.

ஒரு வீட்டில் கடைக்குட்டி மீது அனைவருக்கும் பாசம் அதிகம் இருப்பது சகஜம். அதுவும் அந்தத் தம்பி மிக நல்லவனாகவும், குணவானாகவும் இருந்தால் அந்தத் தம்பி மீது இருக்கும் பாசம் மேலும் அதிகப்படும். அதனால் தம்பி மீது கும்பகர்ணனுக்கு அளவு கடந்த பாசம் இருந்ததில் வியப்பில்லை. ஆறு மாதம் உறக்கத்திலும் ஆறு மாதம் விழிப்பிலும் இருக்கும் கும்பகர்ணன் உறங்கப் போகும் போது விபீடணன் இலங்கையில் இருந்தான். ஆனால் கும்பகர்ணன் விழிக்கையிலோ விபீடணன் எதிரணிக்குப் போய் விட்டிருந்தான்.

அவன் மறுபடி விபீடணனைச் சந்தித்தது போர்க்களத்தில் தான். அந்த போர்க்களத்தில் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அண்ணனைப் பார்த்தவுடன் விபீடணன் விரைந்து வருகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

விபீடணன் எதிரணியிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன் அவன் இராமனை விட்டு இந்த அணிக்குச் சேரவே வருகிறான் என்று தவறாக நினைத்து விடுகிறான். இந்த அணிக்குத் தோல்வி நிச்சயம் என்பதை முன்பே அறிந்தவன் அவன். அதை அவன் இராவணனிடம் சூசகமாகத் தெரிவித்துக் கூட இருந்தான். அதனால், விபீஷணன் இங்கு வந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்ததால், அவன் மனம் வருந்தியது.

தன்னை வந்து வணங்கிய தம்பியிடம் கும்பகர்ணன் சொல்கிறான். “ (நம் குடும்பத்தில்) நீ ஒருவனாவது தப்பிப் பிழைத்தாய் என்று நான் எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தேன். நான் நினைத்தது தவறு என்னும்படி புத்தி கெட்டவர் போல் நீ அங்கிருந்து தனியாகப் பிரிந்து வந்தது ஏன்”. சொல்லும் போது துக்கமிகுதியால் அவன் கண்களில் மழையாக நீர் வடிகிறது.

முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய்
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.


விபீடணன் வந்தது வேறு காரணத்திற்காக. தன் அண்ணன் கும்பகர்ணன் மிக நல்லவன் என்பதால் அவனை தன்னைப் போலவே தர்மம் இருக்கும் இடமாகிய இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் சொல்கிறான்.

“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் எனவே என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இராமனிடம் போய் சேர்ந்து கொள்” என்கின்றான்.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.


மேலும் சொல்கிறான். ”முட்டாள்தனமாக அண்ணன் (இராவணனை இங்கு இறைவன் என்கிறான்) ஒரு தீமையைச் செய்தால், முடிந்தால் அவனை அப்போதே திருத்தப் பார்க்கலாம். அது முடியாமல் போனால் அவனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. போரில் ஈடுபட்டு அவனுக்கு முன்னால் இறப்பதே அவன் உப்பைத் தின்று வளர்ந்தவனுக்குப் பொருத்தமானது)

கருத்திலா இறைவன் தீமை
கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றே
திருத்தலாம்; தீராது ஆயின்
பொருத்துறு பொருள் உண்டாமோ!
பொருதொழிற்(கு) உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்(கு) உரியது அம்மா



எதிரில் இருந்த இராமனின் சேனையைப் பார்த்தபடி கும்பகர்ணன் மேலும் சொல்கிறான். “அந்தப்பக்கம் கடவுளான வில்லேந்திய இராமன் நிற்கின்றான். அவன் தம்பி இலக்குவன் நிற்கின்றான். மற்றும் பலரும் நிற்கின்றார்கள். எங்களைக் கொல்லப் போகிற விதியும் அவர்கள் பக்கமே நிற்கின்றது. தோல்வியே எங்கள் பக்கம் நிற்கின்றது”


ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்

அதைக்கேட்டு மீளாத சோகத்தில் ஆழ்கிறான் விபீடணன். அண்ணன் மேல் உள்ள பாசத்தில் அவன் துக்கப்படுவதைப் பார்த்து கும்பகர்ணன் எல்லா தத்துவங்களையும் அறிந்த விபீடணனைத் தேற்றுகிறான். “நடக்க இருப்பது நடந்தே தீரும். அழியும் காலம் வந்தால் அழிவதும் நிச்சயம். என்ன தான் செய்தாலும் இறப்பது உறுதியே. இதை உன்னை விட அறிந்தவர்கள் யாரிருக்கிறார்கள்? என்னை நினைத்து வருந்தாமல் போ”. கடைசியில் என்றும் உள்ளாய் என்று தம்பியிடம் ‘நாங்கள் இறந்தாலும் நீ இருப்பாய்” என்ற நிம்மதியில் சொல்லும் அழகையும் பாசத்தையும் பாருங்கள்.

ஆகுவது ஆகும் காலத்து
அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்;
சே(கு) அறத் தெளிந்தோர் நின்னில்
யார் உளர்? வருத்தம் செய்யா(து)
ஏகுதி; எம்மை நோக்கி
இரங்கலை; என்றும் உள்ளாய்!

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தீர்மானித்த கும்பகர்ணன் அதே போல் விபீடணன் செய்யத் தவறியது தவறு என்பது போல் நினைக்கவில்லை. “தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்கு தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை” என்று தம்பியிடம் சொல்கிறான்.

தலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே; ஆல்
புலைஉறு மரணம் எய்தல் எனக்கிது புகழதே ஆல்.


இனி என்ன சொன்னாலும் அண்ணன் கும்பகர்ணன் மனம் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்து களத்தில் விபீடணன் கும்பகர்ணனை வணங்கிப் பிரியும் காட்சி கல்லையும் கரைக்கும். கம்பன் சொல்கிறான். “அண்ணனை வணங்கிய விபீடணன் கண்கள், முகம், மனம், பேசும் சக்தி எல்லாம் வாடி உயிரோடு இருக்கையிலேயே சவம் போல் ஆனான். இனி மேலும் பேசிப் பிணங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் குணங்களால் உயர்ந்தவனான விபீடணன் எழுந்து திரும்பிப் போனான். அப்போது இரு சேனையின் கரங்களும் அந்தக் காட்சியில் மனமுருகி கூப்பின”

வணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை செய்து இன்னும்
பிணங்கினால் ஆவதில்லை பெயர்வது என்று எழுந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனைக் கடலெல்லாம் கரங்கள் கூப்ப.


தொடர்ந்து நடந்த போரில் வீழ்ந்த போதும் இராமனிடத்தில் தம்பிக்காக வேண்டுவது கல்லையும் கரைக்கும். இராமனிடம் சொல்கிறான். “நீதியால் வந்த பெரும் தர்ம நெறி தவிர என் தம்பி எங்கள் அரக்கர் குலத்திற்கான எந்த சிறு நெறியும் அறியாதவன். அவன் எல்லாம் நீயே என்று உன்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு உன்னிடம் நான் அடைக்கலம் வேண்டுகிறேன்”

நீதியால் வந்த(து) ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்(கு) அடைக்கலம் யான் வேண்டினேன்


மேலும் இராமனிடம் மனமுருகக் கும்பகர்ணன் கேட்கிறான். “என் அண்ணன் இராவணன் விபீடணனைத் தம்பி என நினைத்து மன்னிக்க மாட்டான். அந்தப் பெருந்தன்மை அவனுக்கு இல்லை. இவன் அகப்பட்டால் அவன் இவனைக் கண்டிப்பாகக் கொன்று விடுவான். தயவு காட்ட மாட்டான். எனவே உன்னையும், உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் என் தம்பி என்றும் பிரியாதவனாய் இருக்கும்படி எனக்கு வரம் கொடு”

தம்பியென நினைந்(து) இரங்கி
தவிரான் அத்தக(வு) இல்லான்;
தம்பி இவன் தனைக் காணின்
கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான் உன்னைத் தான்
அனுமனைத் தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியான் ஆக
அருளுதி! யான் வேண்டினேன்.


யுத்த காண்டத்தில் இக்காட்சிகள் கம்பன் வர்ணனையால் உயிர் வடிவம் பெற்று நம்மைக் கண்கலங்க வைக்கக் கூடியவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் கும்பகர்ணன் என்ற அந்த மிக உயர்ந்த மனிதன் இரு வேறு அணிகளில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் ஒரு இணையற்ற சகோதரனாய் வாழ்ந்து மடிந்தான் என்பதே கால காலத்திற்கும் அவன் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகம் உண்டோ?

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Wednesday, July 28, 2010

அன்புத் தம்பி கும்பகர்ணன்



ராமனைப் போலவே இராவணனும் நல்ல தம்பிகளைப் பெற்றிருந்தவன். இரு தம்பியருமே அண்ணன் நலனில் அக்கறை கொண்டவர்கள். இருவருமே அவன் மீது பாசம் கொண்டவர்கள். ஆனால் அறிவுரை சொல்லி அவன் கேட்காத போது இருவரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறு வேறாக இருந்தது. விபீஷணன் இராமன் பக்கம் போய் சேர்ந்தான். கும்பகர்ணனோ தன் அண்ணன் பக்கமே இருந்து போரிட்டு உயிரை விட்டான்.

கும்பகர்ணன் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக உயர்ந்த கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் கம்பன் கைவண்ணத்தில் மேலும் மெருகு பெறுகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணன் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் அவன் பண்பும், யதார்த்த அறிவும் வெளிப்படுகிறது. “சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே. அழிவுக் காலம் நெருங்கி விட்டதோ?” என்று அவன் வருந்துகிறான்.


(ஆனதோ வெஞ்சமர்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும், வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதே! புகுந்ததோ பொன்றும் காலமே?)


தன் அண்ணனிடம் வந்தும் தன் கருத்தை அவன் தயங்காமல் தெரிவிக்கிறான். “கடுமையான விஷமான அந்த கற்புக்கரசியை நீ இன்னும் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல் தான்”. சீதை அரக்கர் குலத்திற்கே விஷம் என்று சூசகமாக அண்ணனை எச்சரிக்கிறான்.


(திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே)


தர்மம், நியாயம் புரியா விட்டாலும் ரோஷமாவது வருகிறதா என்று பார்க்கலாம என்ற எண்ணத்தில் அண்ணனை அவன் கேலியும் செய்திருக்கிறான். “பெரிதாக மானத்தைப் பற்றிப் பேசுகிறாய் ஆனால் காமத்தைத் தான் பின்பற்றுகிறாய். இதில் மானிடரை இழித்துரைக்கவும் செய்கிறாய். நன்றாக இருக்கிறது நம் அரசாட்சி”

(பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்)


இங்கும் உன் கொற்றம் என்று சொல்லாமல் நம் கொற்றம் என்று பழித்துரைக்கும் சொற்களின் கூர்மையைக் குறைக்கும் அவன் பண்பைக் கவனியுங்கள்.

எப்படிப்பட்டவன் நீ? இப்படிச் செய்யலாமா? இந்த அவமானம் தேவையா? இத்துடன் இதெல்லாம் நிற்குமா? யோசித்துப் பார் என்கிற வகையில் அண்ணனுக்கு அவன் எடுத்துச் சொல்லும் விதம் இதயபூர்வமானது. அறிவுபூர்வமானது. அவன் சொல்கிறான். “அண்ணனே! பிரம்ம தேவனுடைய வம்ச பரம்பரையில் முதல்வனாக இருக்கின்றாய். ஆயிரமாயிரமாய் விரிந்த வேதங்களை அவற்றின் பொருளோடு உணர்ந்த நல்லறிவு படைத்திருக்கின்றாய். அப்படிப்பட்ட நீ செய்யத் தகுந்த காரியங்களில் தீயை விரும்புவதும் சரியென்று நினைக்கின்றாய். நமக்கு இப்போது நேர்ந்த அவமானங்களும், தீமைகளும் இவ்வளவோடு நிற்குமோ? இன்னும் எத்தனைக்கு நாம் ஆளாக நேரிடுமோ?

(நீ அயன் முதற்குலம் இதற்(கு) ஒருவன் நின்றாய்!
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்(து) அறிவு அமைந்தாய்!
தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய்!
ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ?)


தவறைத் தெரிந்தே செய்கிறவர்களுக்குப் புத்திமதி சொன்னால் அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு தான் வரும். இராவணனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் தம்பியிடம் எரிந்து விழுகிறான். “மானிடர்களான இராமனையும், இலக்குவனையும் வணங்கி, அந்தக் கூன் விழுந்த குரங்கான அனுமனையும் கும்பிட்டு பிழைப்பு நடத்துவது உனக்கும் உன் தம்பி விபிஷணனுக்கும் தான் முடியும். எனக்கு அது முடியாது. நீ எழுந்து போ”. இங்கு தம்பி சொன்ன எதையுமே அல்ல என்று அவன் மறுக்கவில்லை. விஷயத்தை அப்படியே திசை திருப்பிப் பேசுகிறான் இராவணன். இது கம்பன் மனவியலை நன்கு அறிந்தவன் என்பதற்கு அழகான சான்று.

(மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்)


என்ன சொன்னாலும் அண்ணன் கேட்கப் போவதில்லை என்று புரிந்த பின்னர் கும்பகர்ணன் போருக்குச் செல்ல சம்மதிக்கிறான். போருக்குச் செல்லும் முன் அண்ணனிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும். அவச் சொல்கிறான். “நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்ல மாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா”

(வென்று இவன் வருவன் என்றுரைக்கிலேன் விதி
ஒன்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவன் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று அரோ.)


”என்னை அவர்கள் வென்று விட்டார்களே ஆனால் இலங்கையின் அரசனே அவர்கள் உன்னையும் வென்று விடுவது நடக்கவே போகிறது. ஆதலால் அப்படியான பின்பு யோசிப்பது தவறு. அந்த சீதையை அவர்களுக்குத் தந்து உன் தவப்பலனை தக்க வைத்துக் கொள்”

என்னை வென்றுளர் எனில் இலங்கைக் காவல
உன்னை வென்று உயருதல் உண்மை. ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அப்பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.


இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும், ’நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’ என்று சொன்னதும் அவனுடைய பண்பின் உயரத்தை நமக்குப் பறையறிவிக்கிறது பாருங்கள். அதுவும் ‘இலங்கையின் அரசனே’ என்றழைத்து அவன் சூட்சுமமாகச் சொல்லாமல் சொல்கிறான். “நீ தனி மனிதன் அல்ல. இலங்கையின் வேந்தன். உன் முட்டாள்தனத்தால் நாட்டுக்குக் கேடிழைத்து விடாதே”

அழியும் காலத்தில் நல்ல அறிவுரைகள் யாரையும் மாற்றி விடுவதில்லை. இராவணன் மனம் மாறாததைக் கண்டவன் போருக்குப் போகும் முன் “இன்று வரை நான் ஏதாவது தவறிழைத்திருந்தால் என்னை மன்னித்தருள்” என்று மன்னிப்பு கேட்டு விட்டு போர்க்களம் செல்கிறான்.

(இற்றை நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனில் பொறுத்தி கொற்றவ!)



போரில் கை கால்கள் இழந்து போர்க்களத்தில் வீழ்ந்திருக்கும் போதும் தன் நிலை பற்றி வருந்தாமல் அண்ணனுக்காக வருந்துகிறான் அந்த அன்புத்தம்பி கும்பகர்ணன். “இராமனின் வில்வித்தைக்கு ஆயிரம் இராவணர்கள் இணையாக மாட்டார்கள். ஐயோ நானும் கை கால்கள் இழந்து செயலிழந்து கிடக்கிறேனே. அண்ணனுக்கு வேறு வகையில் உதவ எனக்கு வழியில்லையே. காம நோயால் பீடிக்கப்பட்ட அண்ணன் இனி பிழைப்பது கஷ்டம்” என்று உணர்ந்ததால் அவன் துயரப்பட்டான் என்கிறான் கம்பன்.

(ஐயன் வில் தொழிலிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென்: வேறின் உதவலாம் துணை காணேன்
மையல் நோய் கொடு முடித்தவாதான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன் உள்ளத்தின் உணர்ந்தொரு துயருற்றான்)

அப்படிப்பட்ட தம்பி இறந்த போது இராவணன் மிகுந்த துக்கப்படுவது இயல்பே அல்லவா? “உன்னைப் பிரிய மாட்டேன். நீ தனியே செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். நானும் உன் பின் தொடர்ந்து வருகிறேன்” என்று மனதாரச் சொல்கிறான் இராவணன்.


(பிரியேன், தனிப்போகத் தாழ்க்கிலேன்
வந்தேன் பின் தொடர மதக்களிறே வந்தேனால்)


அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது விபிஷணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசி வரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப்போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்