என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, November 1, 2016

தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்!

 சில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப் புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச் சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப் பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.

1) தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!
   சரி: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!
மண் குதிர் என்பது மண் குவியல். ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம் விழ நேரிடும்.

2) தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
   சரி: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு?
பூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண் அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.

3) தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
   சரி: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.
ஆ நெய்  என்பது பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன். அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும்.  இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம். ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின் தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.

4) அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
இங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.

5) தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
   சரி: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை!
இங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல். அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

6) தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!
  சரி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!
நாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன் என்பதே மருவி நாயாக மாறி விட்டது.

என்.கணேசன் 

Monday, October 3, 2016

இறைவன் சித்தத்தை அறிந்து கொள்வது எப்படி?

இறைவனது சித்தத்தை அறிந்து நடப்பதற்கான நிபந்தனைகள் நான்கு. அவையாவன :

முக்கியமான முதல் நிபந்தனை:
பரிபூரண நேர்மை.

இரண்டாவது நிபந்தனை: ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் வெல்லுதல்.

மூன்றாவது நிபந்தனை: மனதை மௌனமாக்கி விட்டுக் கவனமாகக் கேட்டல்.

நான்காவது நிபந்தனை: ஆணை கிடைக்கும் போது உடனே அதன்படி நடத்தல்.

நீ தொடர்ந்து இந்த நிபந்தனைகளின்படி நடந்து வந்தால் இறைவனது சித்தத்தை நீ மேலும் மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்வாய். ஆனால் அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே நீ உன்னுடைய இச்சா சக்தியை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.  அப்படிச் செய்யும் போது நீ சரியான காரியத்தையே செய்யும்படியான எல்லாச் சூழ்நிலைகளும் உருவாவதை நீ காண்பாய்.

- அரவிந்தாஸ்ரமத்து அன்னை

Monday, September 26, 2016

உலகப் பழமொழிகள் – 16


151. மனிதனின் கடமை பிரபஞ்சத்தின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதல்ல. தான் செய்ய வேண்டியதைச் சரியாய் செய்வதே.

152. அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.

153. ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிந்திருக்கின்றன.

154. சில சமயங்களில் இழப்பதே பெரிய ஆதாயம்.

155. உன்னைத் தாழ்த்திப் பேசுகையில் அடக்கமாய் இருப்பதை விட, புகழ்ந்து பேசுகையில் அடக்கமாய் இருப்பதே வெற்றி.

156. தீயவனை விட புத்தி கெட்டவன் ஆபத்தானவன். தீயவன் தன் பகைவனைத் தான் தாக்குவான். புத்தி கெட்டவன் நண்பர், பகைவர் இருவரையும் தாக்கக்கூடியவன்.

157. பனிக்கட்டியில் சிலைகள் செய்து அவை கரைந்து போவதைக் கண்டு கண்ணீர் விடுகிறோம்.

158. ஆலோசனைகளும், கண்டனங்களும் மிகவும் மென்மையாய் இருக்க வேண்டும். வருத்தம் அளிக்கும் உண்மைகளையும் இதமான சொற்களில் கூற வேண்டும். பலன் அளிக்க வேண்டிய அளவுக்கு மேல் எதுவும் கூறலாகாது.

159. ஆத்மார்த்தமாய் உபதேசம் செய்ய பேரறிவு தேவையில்லை. உயிர்த்துடிப்புள்ள ஒரு மனம் போதும்.

160. சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால் மௌனம் பேரறிவின் பள்ளிக்கூடம்.


தொகுப்பு: என்.கணேசன்

Monday, August 29, 2016

உலகப் பழமொழிகள் – 15



141. அறிவாளியானவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன். அவன் முதிர முதிர தன் தலையை அதிகம் தாழ்த்திக் கொள்வான்.


142. நாம் இல்லாமல் இந்த உலகம் இயங்க முடியும். அதை என்றும் மறந்து விடக்கூடாது.


143. பேசத் தெரியாத முட்டாளும், ஊசி இல்லாத திசை காட்டும் கருவியும் ஒன்று. அதனால் திகைப்பு அதிகமாகுமே ஒழிய திசை தெரியாது.


144. அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் பயன்படுத்துவதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும்.


145. நண்பன் துக்கத்தில் பங்கு கொண்டு பாதியாகக் குறைக்கிறான். மகிழ்ச்சியில் பங்கு கொண்டு இரட்டிப்பாக்குகிறான்.


146. பரபரப்பு மனதின் பலவீனத்திற்கும், சுறுசுறுப்பு மனதின் வலிமைக்கும் அறிகுறி.


147. பழிச்சொல்லை யாரும் அழைத்து வந்து இருக்க இடம் தராவிட்டால் அது தானாகவே வாடி மடிந்து விடும்.


148. அதிர்ஷ்டம் என்றும் சுறுசுறுப்பைப் பின் தொடர்ந்தே செல்கிறது.


149. முன்னதாகத் திட்டமிட்டு அவமரியாதை செய்தவனிடம் நஷ்ட ஈடு பெற வேண்டாம். ஆனால் அதைச் செய்தவனிடமிருந்து ஒதுங்கி விடு.


150. அறிவுடைமையின் முதல் படி நாம் அறியாமையில் இருக்கிறோம் என்று உணர்வதே.


தொகுப்பு: என்.கணேசன்




Monday, August 22, 2016

வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்!

பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது.  அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.


இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல் -

"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!'



- என்.கணேசன்


Monday, August 15, 2016

இன்றைய சிந்தனை - 2

 தொலைந்த ஆட்டின் கதை:

அருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயலிலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள்.

ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது.

உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள்.

ஒரு வகுப்பறையில் எராளமான சிறந்த மாணவர்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அன்புடன் கல்வியை ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டியிருந்தது. இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

எனது நாட்டில் உள்ள தலைவர்களே, நீங்கள் ஏராளமான மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும்.

பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள், கடைசி மனிதனின் தேவையறிந்து, அவனுக்கு அல்லது அவளுக்கு பிரியமுடன் பணி செய்ய வேண்டும்.

அதை போலவே நீதி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும், பல்வேறு தடைகளைத் தாண்டிவந்து, உங்களை காண இயலாத கடைக்கோடி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

மீன்வளத்துறையாகட்டும், வேளாண்மையாகட்டும், நுண்கலையாகட்டும் அல்லது கிராமப்புற மக்களின் சிறு சாதனையாகட்டும், தேசிய வளர்ச்சியில் கூட்டாளியாக இருக்கும் ஊடகத்துறை மக்களின் வெற்றியை கொண்டாட வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பரந்துபட்ட எதார்த்தத்தில் கிராமிய நிஜங்களின் சிறு உலகம் வசித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இதை உணர வேண்டும்.

இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். அருமை குடிமக்களே நாம் எல்லோரும் இவ்வாறு செய்தால் இறைவன் நம்மோடு இருப்பார் என்பது நிச்சயம். நாடும் வளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும்.


-  அப்துல் கலாம் அவர்கள் 2006 குடியரசு தின விழாவில் பேசிய உரையிலிருந்து


Monday, August 1, 2016

இன்றைய சிந்தனை - 1

"போராட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதங்களுள் ஒன்று என்று நான் திடமாகக் கூற முடியும். அந்தப் போராட்டம் நம்மைப் பிரயோஜனமான மனிதர்களாக, உறுதியும் பொறுமையும் நிறைந்தவர்களாக மாற்றி விடுகிறது. என்னுடைய திடமான நம்பிக்கை உலகில் கேடுகளே இல்லை என்ற எண்ணத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால்

1)உலகில் நல்லவையே பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன என்ற சந்தோஷமான நம்பிக்கையையும்,

2)நல்லவையே உலகில் நிலவும் பொருட்டு அவற்றுடன் ஒத்துழைக்க மனமார்ந்த முயற்சி அவசியம் என்ற கொள்கையையும்

ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரிடத்திலும் மிகச் சிறந்தவற்றையே காண்பதற்கு கடவுள் எனக்கு அளித்துள்ள சக்தியைப் பெருக்கிக் கொள்ள நான் முயற்சிக்கிறேன். அந்தச் சிறந்த அம்சங்களை என்னில் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் நான் முயலுகிறேன்.


-        -  குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று மிகப்பெரிய குறைபாடுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்தும் வெற்றி கண்ட ஹெலன் கெல்லர் கூறியது.



Tuesday, July 26, 2016

உலகப் பழமொழிகள் – 14


131. மனிதன் தனக்குத் தெரிந்ததை மட்டும் பேசுவானானால் உலகில் பூரண அமைதி நிலவும்.

132. கப்பலின் சிறுதுளை கப்பலையே சாய்த்து விடும்.

133. தங்கத்தை விட்டெறிபவன் நாளை செம்பைப் பொறுக்குவான்.

134. ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்க சிறந்த வழி, அது ரகசியமான விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பது தான்.

135. தவறான லாபங்கள் உண்மையில் நஷ்டங்கள்.

136. தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான்.

137. நாயிடம் கடன்பட்டால் அதை ஐயா என்றழைக்க வேண்டும்.

138. நல்லவர்கள் இறைவனை இழந்துவிடக்கூடாது என்று அஞ்சுகிறார்கள். தீயவர்கள் இறைவனைக் கண்டு கொள்ளக்கூடாதே என்று என்று அஞ்சுகிறார்கள்.

139. ஒருவரிடம் காட்டும் அன்பு அவர்கள் குறையை மறைக்கும் போர்வையாக இருந்து விடக்கூடாது.

140. சொர்க்கத்தின் வாயில்கள் அரசர்களது அரண்மனை வாயில்கள் போல உயரமாய் இருப்பதில்லை. அங்கு நுழைபவர் குனிந்து பணிந்து செல்ல வேண்டியிருக்கிறது.

தொகுப்பு: என்.கணேசன்


Monday, June 13, 2016

உலகப் பழமொழிகள் – 13


121. அறிவாளிகளுக்கு புத்திமதி தேவையில்லை. மூடர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.


122. மின்மினிப்பூச்சியைக் கண்டு சூரியன் கோபிக்கக் கூடாது.


123. ஒரு ரூபாயின் மதிப்பு தெரிய வேண்டுமானால் யாரிடமாவது கடனாகக் கேட்டுப்பார்.


124. மனிதன் சவக்குழியில் புகழப்படுகிறான்.


125. கண்ணியமானவனை நீதியில்லாமல் புகழ்ந்தால் வருந்துவான்.


126. வசையால் செத்தவனும் இல்லை. வாழ்த்தால் வாழ்ந்தவனும் இல்லை.


127. எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. ஒன்று காலம். மற்றது பொறுமை.


128. சரியாகச் செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.


129. பாய் முடைபவர்கள் பாயில் படுப்பதில்லை.


130. சிடுமூஞ்சி கடை வைக்கக் கூடாது.


தொகுப்பு: என்.கணேசன்


Monday, May 9, 2016

உலகப் பழமொழிகள் – 12


111. நீ என் முகத்தைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் படைத்தவனுக்கு; நீ என் உடையைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் தைத்தவனுக்கு; நீ என் செயலைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் எனக்குத் தான்.

112. ரோமாபுரியை ஒரு நாளில் கட்டவில்லை.

113. அசையாத மணி அடிப்பதேயில்லை.

114. வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல.

115. எதிரிகள் ஓடி விட்டால் எல்லோரும் வீரர்களே.

116. இதயம் சிறியது தான். ஆனால் பெரிய பொருள்களாலும் அதை நிரப்ப முடிவதில்லை.

117. உணர்ச்சி மனிதனை ஆட்சி செய்கையில் அறிவு வெளியே போய் விடுகிறது.

118. ஓடக்கூட பயந்து போய் நின்ற சிலரும் வீரராகப் பாராட்டப்படுவதுண்டு.

119. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கிக் கொள்பவன் இருமுறை வெற்றி பெற்றவனாகிறான்.

120. பயந்தாங்கொள்ளி தான் எச்சரிக்கையாய் இருப்பதாகவும், கஞ்சன் தான் சிக்கனமாய் இருப்பதாகவும் சொல்வான்.

தொகுப்பு: என்.கணேசன்


Monday, February 29, 2016

உலகப் பழமொழிகள் – 11



101. உண்மை என்ற பாணத்தை விடும் முன் அதன் முனையைத் தேனில் தோய்த்துக் கொள்.


102. உன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாக நினைக்க வேண்டுமென்று நீ விரும்பினால் மௌனமாயிரு.


103. பூமி தழலாய் கொதித்தாலும் நாம் அதன் மீது தான் நடக்க வேண்டி இருக்கிறது.


104. அவமரியாதைகளையும் மாத்திரைகளையும் சுவைத்து ருசி பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே முழுங்கி விட வேண்டும்.


105. பிச்சைக்காரனுக்கு நீ எதுவும் போடாவிட்டாலும் பரவாயில்லை. அவன் பையைக் கிழிக்க வேண்டாம்.


106. மனிதர்கள் மலை தடுக்கி விழுவதில்லை. கல் தடுக்கியே விழுகிறார்கள்.


107. அதிசாமர்த்தியம் வேண்டாம். உன்னை விட அதிக சாமர்த்தியசாலிகள் சிறையில் இருக்கிறார்கள்.


108. தூக்க முடியாத கல்லை உருட்டு.


109. நல்லது போனால் தெரியும். கெட்டது வந்தால் தெரியும்.


110. அறிவின்மை கேவலம். அதை விடக் கேவலம் அறிய மனமில்லாமை.



-         தொகுப்பு: என்.கணேசன்



Monday, January 18, 2016

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 13


·         நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.


·         கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.


·         குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.


·         கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.


·         உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.


·         விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.


·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.


·         பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.


·         கூப்பாட்டால் சாப்பாடாகுமா?


·         இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.


·         திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.


·         ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.



தொகுப்பு: என்.கணேசன்



Monday, December 7, 2015

உலகப் பழமொழிகள் – 10


91. தீய பழக்கம் முதலில் யாத்திரிகனாய் வந்து, விருந்தினனாய் தங்கி பின் முடிவில் அதுவே ஒருவனது எஜமானாகியும் விடுகிறது.


92. நல்லவன் சத்திரத்தில் தங்கினால் கெடுவதுமில்லை. தீயவன் ஆலயத்தில் தங்கினால் திருந்தி விடுவதுமில்லை.


93. நெருப்பிலிருந்து தப்பித்து வந்தவன் வெயிலில் வாடுவதில்லை.


94. காலிப் பாத்திரமே அதிகமான் ஓசையை உண்டாக்கும்.


95. சொற்களை எண்ணாதே; எடை போட்டுப் பார்.


96. கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.


97. கோபமுள்ளவர் சோகத்தைத் தேட வேண்டியதில்லை.


98. கழுதையை விருந்துக்கழைத்தால் அது விருந்தில் விறகு சுமக்கத் தான்.


99. கோபத்தால் போனது சிரித்தால் வராது.


100. கையினால் தட்டி விட வேண்டியதற்கு கத்தியை உருவுவது மடத்தனம்.


தொகுப்பு: என்.கணேசன்


Tuesday, October 20, 2015

உலகப் பழமொழிகள் – 9


81. கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே. உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.

82. கவனமில்லாத காவல் கவனமுள்ள பகைவனை அழைக்கும்.

83. போக்கிரி முத்தமிட்டால் உன் பற்கள் சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்.

84. தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர் குறைகளைக் கவனிக்க நேரம் இருக்காது.

85. மரியாதை காட்டினால் பூனைக்கும் மகிழ்ச்சி தான்.

86. வெளியே வர வழி தெரிந்து கொண்டு உள்ளே நுழை.

87. அரசன் பிரபுவை உண்டாக்கலாம். ஆனால் கனவானைக் கடவுளே உண்டாக்க வேண்டும்.

88. நூல்கள் மனதோடும், நண்பர்கள் இதயத்தோடும், இறைவன் ஆன்மாவோடும், மற்றவர்கள் செவியுடனும் பேசுகிறார்கள்.

89. குதிரையைக் கண்டதும் பிரயாணி நொண்டியாகி விடுகிறான்.

90. மற்றெல்லாப் பொருள்களும் அதிக மென்மை அடைந்தால் ஒடிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் அதிக வலிமை அடைந்தால் ஒடிந்து விடுகிறான்.

தொகுப்பு: என். கணேசன்

Monday, September 7, 2015

உலகப் பழமொழிகள் – 8



71. கற்ற மனிதன் ஒரு குளம். அறிவுடையவன் ஒரு ஊற்று.


72. துன்பத்தில் இருப்பவனைப் போய்ப் பார். செல்வத்தில் இருப்பவன் கூப்பிட்டால் போ.


73. யானை காணாமல் போனால் அடுப்படியிலா தேடுவார்கள்.


74. கன்றுக்குட்டி அருகிலும் கடன்காரன் அருகிலும் இருக்கக்கூடாது.


75. எத்தனை புடமிட்டாலும் இரும்பு பொன்னாகாது.


76. மனோ தைரியம் தான் வறுமையின் விளக்கு.


77. தவிட்டுக்கு வந்த கை தான் தங்கத்திற்கும் வரும்.


78. கங்கையிலே பிறந்த நத்தை சாலிக்கிராமம் ஆகாது.


79. ஒரு பெண் இரு முறை தான் வீட்டை விட்டுப் போகலாம். ஒன்று திருமணம் முடிந்து. இன்னொன்று இறந்த பின்பு.


80. சுக சரீரம் கழுதைப் பிறப்பு.



தொகுப்பு: என்.கணேசன்.



Monday, August 17, 2015

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 12



·       மலை இலக்கானால் குருடனும் அம்பெய்துவான்.


·       மரம் சுட்டுக் கரியாக வேண்டுமே அல்லாமல் மயிர் சுட்டுக் கரியாகப் போகிறதா?


·       வணங்கின புல் பிழைக்கும்


·       முட்ட நனைந்தவனுக்கு ஈரமில்லை. முழுதும் கெட்டவனுக்குத் துக்கமில்லை.


·       முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்.


·       வலிமைக்கு வழக்கில்லை.


·       கல்யாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?


·       மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல.


·       ஒரு ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறுவென்று சுற்றுகிறது.


·       வளர்ந்த உயரத்தை வாசற்படியிலா காட்டுவது?


·       வியாதிக்கு மருந்து உண்டு. விதிக்கு மருந்து உண்டா?




தொகுப்பு: என்.கணேசன்

Monday, May 4, 2015

உலகப் பழமொழிகள் – 7


61. ஒரு மனிதனை அறிய அவன் பதில்களை விட்டு, அவன் கேள்விகளைக் கவனியுங்கள்.

62. தேவையில்லாத அறிவு இரட்டிப்பு மடமை.

63. மூடன் கடைசியாகச் செய்வதை ஞானி முதலில் செய்கிறான்.

64. மூடன் வெற்றி பெறுவதும் அறிவாளி தோல்வி அடைவதும் உலகின் நிகரற்ற ஆச்சரியங்கள்.

65. யானை தன் தந்தங்களைத் தாங்க நீ போய் உதவி செய்ய வேண்டியதில்லை.

66. சேற்றில் உள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூடனின் சொல்லும் அதிகமாகக் குத்தும்.

67. அறியாமையைப் போல வேறெதற்கும் அவ்வளவு துணிவு கிடையாது.

68. முட்டாள் அமைதியாக இருக்க முடியாது.

69. சிறிது மட்டுமே தெரிந்தவன் அதையே திருப்பித் திருப்பிச் சொல்வான்.

70. நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால் குச்சியை நழுவ விடலாகாது.

தொகுப்பு: என்.கணேசன்
  

Monday, September 1, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 11


  
·         நித்தம் சாவாருக்கு அழுவார் உண்டோ?


·         நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.


·         நெருப்பு சிறியதென்று முந்தானையில் முடியலாமா?


·         பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பு மூட்டாமல் விடுவதா?


·         பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்.


·         நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.


·         போன மாட்டைத் தேட மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாட்டான்.


·         பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.


·         படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்.


·         மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல.


·         பாதி சுரைக்காய் கறிக்கும், பாதி சுரைக்காய் விதைக்குமா?



தொகுப்பு: என்.கணேசன்