சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 12, 2020

யாரோ ஒருவன்? 1


ர்மோ ரக்ஷதி ரக்ஷித்” (தர்மம் காக்கப்படும் போது அதுவும் (நம்மைக்) காக்கிறது).

நரேந்திரன் ஐபிஎஸ் என்ற அந்த இளம் அதிகாரி தங்க எழுத்துகளில் மின்னிய அந்த வாசகத்தை ஒரு கணம் நின்று படித்தான். இந்திய உளவுத்துறையின் உச்ச அமைப்பான ரா (Research and Analysis Wing) வின் குறிக்கோளும் சித்தாந்தமுமாக இருந்த வாசகம் அது. ’ராவின் தலைமைச் செயலகத்தின் சுவரில் பொறிக்கப்பட்டு இருந்த அந்த வாசகத்தைப் படித்து விட்டு உள்ளே நுழைந்த போது அவன் மனம் இன்னதென்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி பல உணர்ச்சிகளின் கலவையாக கனத்தது. தர்மத்தை நாம் காக்க மறக்கும் போது அதுவும் நம்மைக் காக்காமல் கைவிட்டு விடும் என்று கறாராக அந்த வாசகம் தெரிவிப்பது போல் அவனுக்குப் பட்டது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரின் போது வெளிப்பட்ட இந்திய உளவுத்துறைக் குறைபாடுகளையும் பலவீனங்களையும் உணர்ந்து ஒரு வலிமையான உளவுத்துறை மிகவும் அவசியம் என்று முடிவு செய்து 1968ல் அமைக்கப்பட்டது தான்ராஅமைப்பு. பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் ரா அமைப்பின் தலைவர் செகரட்டரி என்று அழைக்கப் படுகிறார். ’ராவில் அதிகாரியாவது சுலபமல்ல. ஐபிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தவர்கள் மனோ தைரியம், அறிவுக்கூர்மை, அணுகுமுறை ஆகிய மூன்றிலும் கூடுதலாகச் சோதிக்கப்பட்ட பிறகே அங்கு அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நரேந்திரன் ஐபிஎஸ்ஸின் தந்தை மகேந்திரனும்ராவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் தான். தந்தை வழியில் தானும் பயணித்து ஆசைப்பட்ட இலக்கை அடைந்திருக்கும் நரேந்திரன் பிரதமரைச் சந்தித்துத் தன் தனிக் கோரிக்கையை வைத்து ஒரு சிறப்பு வேலையைத் தானே பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான்

ராவின் தலைவரின் அறைக்குள் கம்பீரமாக நுழைந்த நரேந்திரன் தலைவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெற்றிருக்கும் ஆணையைத் அவரிடம் நீட்டினான். அந்த ஆணை பிரதமர் அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சலிலும் வந்திருந்ததால் நரேந்திரன் நீட்டிய ஆணையைப் பிரித்துப்படிக்க வேண்டிய அவசியம் தலைவருக்கு இருக்கவில்லை.  

பொதுவாக, புதிதாய் சேர்ந்திருக்கும் அதிகாரிகள் நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து இப்படி ஆணைகளைப் பெற்று வருவதை தலைவர்கள் ரசிப்பதில்லை.  அதற்குக் காரணம் தங்கள் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக அவர்கள் நினைத்து விடும் வாய்ப்பு இருப்பது தான். ஆனால் நரேந்திரன் மீது தலைவருக்கு அந்த அதிருப்தி வரவில்லை. அந்த இளம் அதிகாரியின் பின்னணியையும், நோக்கத்தையும் அவர் அறிந்திருந்தது தான் அதற்குக் காரணம். மேலும் அந்த இளம் அதிகாரி நேராக அவரிடம் வந்து அந்தக் கோரிக்கையை வைத்திருந்தாலும் அவர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளாமல் அனுமதி தந்திருக்க முடியாது.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஃபைலைப் பரிசோதிக்கவும், தேவைப்பட்டால் மூடப்பட்டிருந்த அந்த வழக்கை மறுபடி திறந்து விசாரணை நடத்தவும் அவன் அனுமதி கேட்டிருக்கிறான். ஒரு முறை ரா உயர் அதிகாரிகளால் மூடப்பட்ட வழக்கை மறுபடி பரிசோதிக்கவும், அதைத் தொடரவும் பிரதமரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்க முடியாது. அந்த அனுமதியைப் பெறுவது சாதாரணம் அல்ல. ஆனால் நரேந்திரனும் சாதாரணமானவன் அல்ல.

அவன் தந்தை சம்பந்தப்பட்டிருக்கும் கடைசி வழக்கு அது. அது மூடப்பட்ட விதத்தில் அவனுக்கும் அவன் தாய்க்கும் திருப்தி இல்லை. அந்த ஒரு வழக்கின் பின் உள்ள உண்மையை அறியவும், குற்றவாளிகள் இப்போதும்  உயிரோடு இருந்தால் தண்டிக்கவும் தான் அவன் ஐபிஎஸ் அதிகாரியாகவே ஆகியிருக்கிறான். அவன் வாழ்வின் லட்சியமாக, மூச்சாக அந்தக் குறிக்கோளே இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட இளைஞன் ஐபிஎஸ் அதிகாரி ஆகி கூடுதல் திறமைகளும், மனோதிடமும் நிரூபித்துராவின் அதிகாரியுமாகி வந்து அந்த வழக்கின் விவரங்களையும் சொல்லி அனுமதி கேட்டு நின்ற போது பிரதமருக்கும் மறுக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிறகு அவர் உடனடியாகத் தன் உதவியாளரை அழைத்து ஆணையைத் தயார் செய்யச் சொன்ன போது நரேந்திரன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினான்.  

முதலாவதாக அவன் அவரைக் கண்டு பேச அனுமதி எளிதில் கிடைக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அனுமதி கிடைத்துப் பேசினாலும் முழுவதுமாகப் பொறுமையுடன் காதுகொடுத்துக் கேட்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.  அப்படிக் கேட்டாலும் உடனடியாக ஆணையைத் தயார் செய்து கொடுப்பார் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

பிரதமர் கையெழுத்திட்டு ஆணையை அவன் கையில் கொடுத்த போது அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கண்ணீர் வழியத் தான் அவரிடமிருந்து அந்த ஆணையை அவன் வாங்கினான். அவனும் அவன் தாயும் வருடக்கணக்கில் செய்த பிரார்த்தனைகள்  வீண்போகவில்லைஅவனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இருக்கவில்லை. பிரதமர் அவனைத் தட்டிக் கொடுத்துஏதாவது கூடுதல் உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து கேள்என்றார்.

கூப்பிய கைகளுடன் தலைவணங்கிய நரேந்திரன் பிரதமர் அறையிலிருந்து வெளியே வந்து வராந்தாவில் அமர்ந்து மனம் விட்டு இரண்டு நிமிடங்கள் அழுது தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு தான் கிளம்பினான். மிக அழுத்தமானவன், மன உறுதிபடைத்தவன் என்று நண்பர்களிடம் பெயர்பெற்ற அவன் வாழ்க்கையில் இந்த அளவு உணர்ச்சிவசப்படுவது இதுவே முதல் முறை.. 

ராவின் தலைவர் நரேந்திரனிடம் ஒரு உறுதிமொழிக் கடிதத்தை நீட்டினார். இந்த ஃபைலை ரா அலுவலகத்தை விட்டு வெளியே கொண்டு செல்வதில்லை என்றும், அதில் உள்ள டாக்குமெண்டுகளின் நகல்களையும் எந்த வகையிலும் எடுத்துக் கொள்வதில்லை என்றும், எந்த விவரங்களையும் வெளியே கசிய விடாமல் ரகசியம் பாதுகாப்பேன் என்றும் சொல்லும் உறுதிமொழி அது. இது போன்ற உயர் ரகசிய வழக்குகள் மறுபடியும் திறக்கப்படுமானால் அதை விசாரிக்கவிருக்கும் அதிகாரி அந்த உறுதிமொழியில் கையெழுத்திட்ட பிறகே அந்த ஃபைலைப் பெற முடியும். அந்த முறைப்படியான உறுதிமொழிக் கடிதத்தில் நரேந்திரன் கையெழுத்திட்டான்.

அதை வாங்கிக் கொண்ட பின்ராவின் தலைவர் ஒரு கனமான சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு சென்றார். பத்து நிமிடங்களில் ஒரு பெரிய ஃபைலை எடுத்துக் கொண்டு வந்தார்அந்த ஃபைலில் MF7865 என்ற எண் குறிக்கப்பட்டிருந்தது.

ராவின் தலைவர் அதை அவனிடம் நீட்டினார். விதிமுறைகளை அவன் அறிவான் என்றாலும் சம்பிரதாயமாக அவர் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.  “இது உன் அறையை விட்டுத் தாண்டக்கூடாது. நீ இல்லாத நேரங்களில் கண்டிப்பாக உன் மேஜை டிராயரில் வைத்துப் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.  என் அனுமதி இல்லாமல் இதில் உள்ள விவரங்களை நம் ஆட்களிடமே கூட நீ கலந்தாலோசிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இதை நீ என்னிடம் திரும்பத் தரும் போது எந்த டாக்குமெண்டுமே இதிலிருந்து நீங்கி இருக்கக்கூடாது

கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்றுவேன் சார்என்று நரேந்திரன் உறுதிமொழி அளித்தான்.

ராவின் தலைவர் மெல்லப் புன்னகைத்து மென்மையாகச் சொன்னார். “இதில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாதுமிகப் பழைய வழக்குகளை மறுபடி விசாரிப்பதில் இருக்கும் சிக்கலே இது தான்ஆனால் உன்னைப் போன்ற திறமைசாலிக்கு, இந்த வழக்கின் உண்மையை அறிவதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு இருப்பவனுக்கு, சிக்கல்களை மீறிச் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்!”

மிக்க நன்றி சார்என்று தலைவணங்கிச் சொல்லி விட்டு நரேந்திரன் கிளம்பினான்.

அவன் அலுவல் அறைக்குச் சென்று ஃபைலில் ஆரம்பத்திலிருந்து அந்த முழு வழக்கு விவரங்களையும் படிக்க ஆரம்பித்தான். சில விவரங்களை இரண்டாவது முறையாகப் படிக்க வேண்டியிருந்தது. சில விவரங்களை சிறிது நேரம் கழித்து மறுபடி பின்னுக்கு வந்து அவன் படிக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் யோசித்து அந்தச் சூழ்நிலையை அவன் மனதினுள் உருவகப்படுத்த வேண்டி இருந்தது. .அவன் அனைத்தையும் படித்து முடிக்கையில் இரவாகியிருந்தது.

அவன் கண்களை மூடிச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பின் ஆழ்ந்த வருத்தத்துடன் மெல்ல முணுமுணுத்தான். “அப்பா தர்மம் ஏன் உங்களைக் காக்கத் தவறி விட்டது?”  

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV



19 comments:

  1. Super. Ganesh Sir, This is posted daily /weekly

    ReplyDelete
  2. Great opening ji. Very interesting

    ReplyDelete
  3. சூப்பர் ஆரம்பம் கணேசன் சார். ஆரம்பத்திலேயே எங்களை எதிர்பார்க்க வைக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  4. கதையின் ஆரம்பமே ரபேல் விமானம் கிளம்புவது போல் மிகுந்த எதிர்பார்ப்புடன்
    துவங்குகிறது.ம் ம் பறந்து சாதனை செய்யட்டும் jai hind!!!

    ReplyDelete
  5. Came to check for Illuminati update and found the new novel!! Excellent first chapter Sir, from the times of 'Nee Naan Thamirabarani' till now, your words always captivates any reader. I have bought 4 books of yours, thank you for the excellent writing!

    ReplyDelete
  6. புதிய தொடருக்கு நன்றி ஐயா....

    இந்த தொடர் எங்கு செல்லும்? எப்படி பட்டது? என்பதை முழுமையாக கணிக்க முடியவில்லை...

    ReplyDelete
  7. Tell me Akshay is in this and all novel's of yours Anna... that will make me comfortable to read.

    ReplyDelete
  8. உங்களுடைய எந்த நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் போதும் அதில் அக்ஷய் வருவாரோ என்ற ஆவலே முன்னிற்கிறது... இந்த தொடரிலும் அதே எண்ணம்...
    இந்த கதையின் ஆரம்பமும் அருமை !!

    ReplyDelete
  9. இதில் அக்‌ஷய் வர மாட்டார்.

    ReplyDelete
  10. அக்ஷய் ஒரு "சூப்பர் ஹீரோ"

    ReplyDelete
  11. wow interesting starting as usual. unkada novel weekly vaasikka porumai illa.. book eppa publish pannuveenka sir? eager to read the full novel continuously..

    ReplyDelete
    Replies
    1. Book will be published in December 2020

      Delete
    2. im from Sri Lanka sir, inka kidaikka koodiya pola kindle la sale pannuveenkala?

      Delete
    3. Since the printed book is to be released in December 2020 there is no plan to publish in kindle.

      Delete
    4. ok sir, No problem, i will try my best to buy it from India.
      Thank you sir

      Delete