சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 27, 2023

யாரோ ஒருவன்? 127


நாகராஜ் சொன்னான். “அந்தப் பாம்பாட்டி சூட்கேஸில் கொண்டு வந்தது நாகரத்தினத்தைச் சுமந்து கொண்டிருக்கிற நாகப்பாம்பைத் தான். அது சாதாரண நாகரத்தினமா இல்லாம ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய விசேஷ நாகரத்தினமாக இருக்கலாமோன்னு அவனுக்குப் பேராசையுடன் கூடிய சந்தேகம் இருந்துச்சு. சாதாரண நாகரத்தினம் ஒருத்தனிடம் இருந்தால், செல்வந்தனாகும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒன்றுக்கும் அதிகமான நாகரத்தினங்கள் கிடைத்தால் செல்வத்தோடு அபூர்வ சக்திகளும் கைகூடும். அதுவே விசேஷ நாகரத்தினமாக இருந்தால் எல்லையில்லாத தெய்வீக சக்திகள் கிடைக்கும். இது தான் பொதுவான நம்பிக்கை. அவன் தனக்குக் கிடைச்சிருக்கிறது அந்த மாதிரி விசேஷ நாகரத்தினம் சுமக்கும் பாம்பாயிருக்குமோன்னு வந்த சந்தேகத்தை அவங்களோட மூத்த சாமியாரைக் கேட்ட போது அது கடைசி மூன்று நாள்கள்ல உருவாகிற விசேஷ மணத்தை வெச்சு தான் தெரியும்னு  சொல்லியிருந்தார். அப்படி அந்தப் பாம்பு சுமப்பது  விசேஷ நாகரத்தினமாக இருந்தால் அதற்கான விசேஷ பூஜைகள் சடங்குகள் எல்லாம் செய்யணும்  அல்லது ஜம்முவில் இருக்கிற பெரிய நாகதேவதை கோயிலுக்கு அதைக் கொண்டு போய் பூஜிக்கணும். அப்படியானால் மட்டும் தான் முழுப் பலன்கள் கிடைக்கும். இல்லாட்டி பலன்கள் குறையும்னு அந்த சாமியார் சொல்லியிருந்தார். அது விசேஷ நாகரத்தினமாக இருக்கலாம் என்று நம்பின பாம்பாட்டி அதை ஜம்முவுக்கு எடுத்துக் கொண்டு போகும் போது தான் இந்த மூன்று நண்பர்களுடன் அவனோட பயணத்தில் இணைஞ்சாங்க.. அந்தப் பாம்பாட்டி அடிக்கடி குனிஞ்சு பார்த்தது அந்தப் பாம்பு கிட்ட இருந்து அந்த விசேஷ நாகரத்தினத்திற்கான மணம் வருதான்னு  பார்க்கத் தான்கிறது இவங்களுக்குத் தெரியல..”

அடுத்த காட்சி புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து நண்பர்கள் இறங்குவதைக் காட்டியது. மாதவன் அந்தப் பாம்பாட்டியிடம் அன்பாய் கைகொடுத்து விடைபெற்றான். கல்யாணும், சரத்தும் அங்கிருந்து சீக்கிரமாக நகர்ந்தால் போதுமென்று வேகமாக நகர்வது தெரிந்தது.

அதற்கடுத்த காட்சி மணாலியில் குறைந்த வாடகைக்கு அவர்களுக்குக் கிடைத்திருந்த பழைய லாட்ஜ் அறையில் விரிந்தது. மாதவன் தன் தோளில் மாட்டியிருந்த பெரிய பையை விரித்த போது அந்த நாகம் உள்ளே இருப்பதைப் பார்த்து விட்டு ”டேய் இங்கே பாருங்கடா. அந்த ஆளோட சூட்கேஸ அவசரமா மூடினப்ப நான் சரியா மூடல போலருக்கு. அந்தப் பாம்பு அங்கேயிருந்து என் பைல வந்து உட்கார்ந்திருக்கு” என்று கத்தினான்.

கல்யாணும் சரத்தும் அவனை முறைத்தார்கள். கல்யாண் சொன்னான். “அப்பவே சொன்னேனில்ல டிடிஆர் கிட்ட சொல்லிடலாம்னு. பெருசா பாவ புண்ணியம் பாத்துட்டு இங்க வரைக்கும் தூக்கிட்டு வந்துட்டியேடா முட்டாள்...”

மாதவன் அவன் திட்டினதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. அந்த நாகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் பின் திரும்பி கல்யாணிடம் மெல்லச் சொன்னான். “கல்யாண்.... இது நாகரத்தினத்தை வெச்சிருக்கு போல இருக்குடா?”

கல்யாண் முகம் திகைப்பைக் காட்டியது. ”என்னடா சொல்லறே” என்று ஆச்சரியத்துடன் மெல்லக் குனிந்து பார்த்தான். “அப்படித்தான் தோணுதுடா” என்று பலவீனமான குரலில் சொன்னான். சரத் அவசரமாக பக்கத்தில் இருந்த  தன்னுடைய சூட்கேஸை எடுத்து தள்ளி வைத்தான்.

அடுத்த காட்சி வந்தது. இப்போது அந்த ஓட்டல் அறையில் அந்தப் பாம்புக்கு வசதியான ஒரு அட்டைப்பெட்டியை மாதவன் அமைத்து வைத்திருந்தான். அதை அன்புடன் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னான். “பாத்தா இன்னைக்கு ராத்திரிக்குள்ளே அந்த நாகரத்தினத்த அது போட்டுடும்னு தோணுதுடா.... கடவுள் இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை எனக்குத் தருவாருன்னு நான் நினைச்சே பாக்கலடா”

பின் மாதவன் அவர்களுடன் கட்டிலில் படுத்துக் கொண்டு, விட்டத்தைப் பார்த்தபடி பணம் வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்று சொல்ல ஆரம்பித்தான். அவனுடைய உற்சாகம் கல்யாண், சரத் முகத்தில் தெரியவில்லை. சரத் முகம் கருத்து சிறுத்துப் போயிருந்ததை ஓரக்கண்ணால் கல்யாண் கவனிப்பது தெரிந்தது.   

அடுத்த காட்சியில் பச்சையும் நீலமுமாய் ஜொலிக்கும் சிறிய நாகரத்தினக் கல்லை உள்ளங்கையில் வைத்துப் பரவசமாக மாதவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கல்யாண் பொறாமையுடனும், சரத் சுரத்தில்லாமலும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதற்கடுத்த காட்சியில் கல்யாண் ஓட்டலிருக்கும் தெருவில் நடந்தபடி போனில் பேசிக் கொண்டிருக்கிறான். திரையில் மறுபாதியில் அவனுடன்  பக்கத்து வீட்டு லேண்ட்லைன் போனில் பேசிக் கொண்டிருக்கும் வேலாயுதம் தெரிந்தார்.  

வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். “என்னடா சொல்றே? நிஜமாவே நாகரத்தினம் தானா?”

“ஆமாப்பா. அதனால தான் அந்த ஆள் அந்தப் பாம்பை பத்திரமா ஜம்முவுக்கு எதுக்கோ எடுத்துகிட்டு போயிருக்கான். மாதவனுக்கு அதிர்ஷ்டம் அந்த சூட்கேஸிலிருந்து தாவிக் கிடைச்சிருக்கு... பணம் கிடைச்சா அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன்னு அவன் சொல்ற அலப்பறை தாங்க முடியல...”

வேலாயுதம் முகத்தில் அழமான யோசனை தெரிய ஆரம்பித்தது.

“என்னப்பா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்க?”

“பாம்பாட்டி கிட்ட இருந்து மாதவனுக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம் அவனை விட்டுட்டு ஏன் உனக்கு வரக்கூடாதுன்னு யோசிக்கிறேன்....”

கல்யாண் மெல்லக் கேட்டான். “என்னப்பா சொல்றீங்க?”

“யோசிடா....  இப்படி ஒரு வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?”

கல்யாண் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “கூட சரத்தும் இருக்கான்ப்பா”

“அவனைச் சமாளிக்கிறதெல்லாம் உனக்குப் பெரிய விஷயமாடா”

அடுத்த காட்சி விரிந்தது. கட்டிலில் கல்யாணும், சரத்தும் மட்டும் யோசனையுடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சரத் கேட்டான். “மாதவன் எங்கே போனான்?”

கல்யாண் சொன்னான். “பாம்புக்கு முட்டை அது இதுன்னு வாங்கப் போயிருக்கான்...”

சிறிது நேரம் மௌனம். பின் கல்யாண் கேட்டான். “ரஞ்சனியை நீ காதலிக்கிறதை ஏன் அவள் கிட்ட இது வரைக்கும் சொல்லலை...”

சரத் பெருமூச்சு விட்டான். “அவளும் மாதவனும் காதலிக்கிறாங்க.... அது தெரிஞ்சதுக்கப்பறம் நான் காதலிக்கிறதைச் சொல்லி என்ன பிரயோஜனம்?”

 “மாதவனுக்கு அதிர்ஷ்டம் எல்லா வகையிலயும் கிடைச்சுருக்கு. ரஞ்சனி ஏற்கெனவே கிடைச்சிருக்கா. நாகரத்தினம் கிடைச்சுட்டதால இனி கண்டிப்பா அவனுக்கு பணமும் எக்கச்சக்கமா எப்படியாவது வரும்... அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க. நம்ம ரெண்டு பேரை எதிர்காலத்துல நண்பர்களா நினைப்பாங்களாங்கறதும் சந்தேகம் தான்... பணம் எல்லாரையுமே மாத்திடும்.”

சரத் முகம் சிறுத்தது. “நம்ம தலையில அவ்வளவு தான் எழுதியிருந்தா நாம என்ன செய்ய முடியும்?” என்று சுரத்தில்லாமல் சொன்னான்.

“நம்ம தலையில எழுதியிருக்கறது பிடிக்கலைன்னா நாம நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்தி எழுதிக்க முடியும். கொஞ்சம் புத்திசாலித்தனம், கொஞ்சம் தைரியம் கூட இருந்தால் போதும்...”

சரத் கல்யாணைப் பார்த்தான். கல்யாண் மெல்லச் சொன்னான். “ரஞ்சனிக்கு உன்னையும் ரொம்ப பிடிக்கும். அவ சிலதை எல்லாம் உன் கிட்ட மனசு விட்டு பேசறவ தான்....”

“ஆனா அவ காதலிக்கிறது மாதவனைத் தான்.”

“ஒருவேளை மாதவன் இல்லாட்டி அவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா தயங்க மாட்டா”

சரத் முகம் எதிர்பார்ப்பில் லேசாக மலர்ந்தது. கல்யாண் தொடர்ந்து சொன்னான். “எத்தனை கோடி கிடைச்சாலும் காதலிக்கிறவளைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமாய் வாழ்றதுக்கு இணையாகுமாடா?”

சரத் விரக்தியுடன் சொன்னான். “சும்மா வெறுப்பேத்தாதடா. மாதவன் இருக்கிறவரைக்கும் அதுக்கு சான்சே இல்லை”

“ஒருவேளை மாதவன் இல்லாட்டி?”

சரத் கல்யாணைத் திகைப்புடன் பார்த்தான். “என்னடா சொல்றே?”

கல்யாண் கேட்டான். “உன் கிட்ட கடவுள் வந்து வேணும்கிற அளவுக்குப் பணம் வேணுமா இல்லை ரஞ்சனி வேணுமான்னு கேட்டா நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?”

“ரஞ்சனியைத் தான்....”

“என் கிட்ட கடவுள் வந்து மாதவன் வேணுமா, நாகரத்தினக்கல் வேணுமான்னு கேட்டா நான் நாகரத்தினக் கல்லைத் தான் தேர்ந்தெடுப்பேன்”

சரத் திகைப்புடன் கேட்டான். “என்னடா சொல்ல வர்றே?”

“மாதவன் இல்லைன்னா இப்ப எனக்கு நாகரத்தினக்கல் கிடைக்கும். உனக்கு ரஞ்சனி கிடைப்பாள்னு சொல்ல வர்றேன்....”

“டேய் நடக்க முடியாததை எல்லாம் பேசாதேடா”

“நடக்கும். எல்லாம் நான் பாத்துக்கறேன். எல்லாத்தையும் நான் செஞ்சுக்கறேன். நீ அமைதியா ஒத்துழைச்சா போதும்....”

காட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி, மேகலா, தீபக், தர்ஷினி நால்வரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சரத் பார்வையாலேயே நண்பனிடம் கெஞ்சினான். ’டேய் எப்படியாவது இந்த ஒளிபரப்பை நிறுத்துடா”

சற்று நகர முடிந்திருந்தாலும், சற்று சத்தமிட முடிந்திருந்தாலும் கல்யாண் அதைச் செய்திருப்பான். ஆனால் அவனுக்குக் கண்களைத் தவிர வேறெதையும் அசைக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, February 23, 2023

சாணக்கியன் 45

 

லெக்ஸாண்டர் சொன்னான். “இங்கு இருந்து நாம் எதையும் எதிரிகள் கவனிக்க முடிவது போல் அப்புறப்படுத்தப் போவதில்லை. இந்தத் திட்டத்தின் அஸ்திவாரமே இரகசியம் தான். அதனால் அவர்கள் பார்வைக்கு இங்கேயிருந்து ஒரு துரும்பு கூட நகர்த்தப்படப் போவதில்லை. கரையைக் கடக்க நாம் இங்கு கொண்டு வந்திருக்கும் படகுகள், பாலப்பலகைகள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும். அங்கே நாம் கடக்கப் புதிய படகுகள், பாலங்கள் உடனடியாகத் தயாராக வேண்டும்”

 

ஆம்பி குமாரன் தலையசைத்தான். ஆனால் அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனின் தலையசைப்பில் திருப்தி அடைந்து விடவில்லை. “உன் ஆட்களுக்கு நீ இப்போதே கட்டளையிடு. என் ஆட்களும் துணைக்கு வருவார்கள். செல்யூகஸ் நம் ஆட்களுக்கு உடனே ஆணையிடு. அவர்கள் இப்போதே வேலையை ஆரம்பிக்கட்டும். இந்த வேலை தான் நமக்கு இப்போதைய முதல் தலையாய வேலை.”

 

ஆம்பி குமாரனும் செல்யூகஸும் உடனடியாக எழுந்தார்கள். அவர்கள் அவன் சொன்ன வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்த பின் அலெக்ஸாண்டர் அடுத்து ஆக வேண்டியதைச் சொன்னான். “நான் அறிந்த வரை இப்போது நமக்கு தட்சசீலத்தில் படைகள் தேவையில்லை. நம்மை அறிந்த யாரும் தட்ச சீலம் வந்து நம்மிடம் வம்பு செய்யத் துணியப் போவதில்லை. அதனால் தட்சசீலத்தில் விட்டு வந்திருக்கும் படைக்கு இணையான எண்ணிக்கையில் ஆட்களை இந்த நதியின் அந்தப் பகுதியைக் கடக்க நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இரகசியமாய் முதலில் நதியைக் கடந்து எதிரிகளைப் பக்கவாட்டில் இருந்து தாக்கப் போவது சிறிய படை தான் என்பதால் நமக்கு அதில் உள்ள ஒவ்வொருவரும் வீரத்திலும், திறமையிலும் சிறப்பானவர்களாக இருப்பது முக்கியம். நம்மிரு படைகளிலும் அப்படிப்பட்ட சிறந்த வீரர்களை உடனடியாகத் தேர்ந்தெடுப்போம். பின் அவர்கள் இன்றிரவு முகாம்களிலிருந்து இரகசியமாக வெளியேறி விடட்டும். அவர்களுக்குப் பதிலாக இன்றிரவே தட்சசீலத்தில் விட்டு வந்திருக்கும் படைவீரர்கள்  இங்கே வந்து சேர்ந்து கொள்ளட்டும். நாளை காலையில் நம் படைகள் இங்கே கரையில் கூடும் போது எதிரிகள் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. அந்தச் சிறந்த வீரர்களை என் தலைமையில் நான் இரகசியமாக அழைத்துச் சென்று பக்கவாட்டில் இருந்து கேகயப் படை மீது திடீர்த் தாக்குதல் நடத்துகிறேன். அந்தத் தாக்குதல் எதிரிகள் சிறிதும் எதிர்பார்த்திராத தாக்குதலாக இருக்கப் போவதால் அவர்கள் நிலைகுலைந்து போவார்கள். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

ஆம்பி குமாரன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “என்ன தான் நீங்கள் நம் தலைசிறந்த வீரர்களை சிறு படையாக அழைத்துப் போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் நிலைகுலைந்து போனாலும் உடனடியாக அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள் அல்லவா? அவர்கள் பெரும்படையை நீங்கள் எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும்?”

 

அலெக்ஸாண்டர் புன்னகைத்தான். “அந்த நேரத்தில் தான் இங்கேயிருந்து நீங்கள் கிளம்பி அக்கரைக்கு வர வேண்டும். அவர்களுடைய படை நமது இரு பக்கத் தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும்”

 

அலெக்ஸாண்டரின் படைத்தலைவன் ஒருவன் சொன்னான். “நாம் ஏற்கெனவே சொன்னது போல் இங்கிருந்து நாம் செல்லும் போது பயமுறுத்துவது போல் முன்னே நிற்பது அவர்கள் யானைப்படை….”

 

அலெக்ஸாண்டர் சொன்னான். “நாங்கள் பக்கவாட்டிலிருந்து தாக்கும் போது அந்த யானைகளை நிலைகுலைய வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம். நம் வீரர்கள் ஈட்டிகளை எறிந்து யானைகளைத் தாக்குவார்கள். சில யானைகள் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடினால் மீதி யானைகளும் அதையே செய்யும். அருகிலிருப்பது அவர்கள் வீரர்களும், குதிரைகளும் என்பதால் யானைகள் மதம் பிடித்து அங்குமிங்கும் ஓடுவதால் பாதிப்படைவது அவர்கள் தான். அவர்களுக்குப் பெரும்பலமாக இருக்கும் யானைப்படையே அவர்களுக்குப் பெரும்பாதகமாக ஆக்கி விடுவோம். அப்படி நிறைய பாதிப்புகளைச் சந்தித்து அவர்கள் படைகள் நிலைகுலைந்திருக்கும் நேரத்தில் நீங்களும் வந்து சேர்ந்து கொண்டால் இருபக்கமிருந்தும் அவர்களை நாம் வெல்வது மிகவும் எளிது.”

 

ஆம்பி குமாரன் பிரமித்தான். ‘எப்படியெல்லாம் யோசிக்கிறான் இவன்’ என்று அவனுக்குத் தோன்றியது. சசிகுப்தனும் மற்றவர்களும் அலெக்ஸாண்டரைப் பாராட்டினார்கள். அலெக்ஸாண்டர் சொன்னான். “ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கே நான் இல்லை என்பது எந்தக் காரணம் கொண்டும் எதிரிகளுக்குத் தெரிந்துவிடக்கூடாது. அது தெரிந்தால் எங்கே போனேன் என்று யோசிப்பார்கள். யோசிக்க ஆரம்பித்தால் அவர்கள் விரைவாக உண்மையைக் கண்டுபிடித்து உஷாராகி விட முடியும். அதனால் என் உடைகளையும், தலைக்கவசத்தையும், உடற்கவசத்தையும் அணிந்து அலெக்ஸாண்டராக இங்கே நிற்கும் மனிதனை நீங்கள் அலெக்ஸாண்டராகவே பார்க்க வேண்டும். அப்படியே வெளிப்பார்வைக்கு நீங்கள் மதிப்பும் மரியாதையும் தர வேண்டும்.  எதிர்க்கரையில் இருந்து நம்மையே கவனித்துக் கொண்டிருப்பவர்கள் எந்த வித்தியாசத்தையும் உணர்ந்து விட நீங்கள் அனுமதித்து விடக்கூடாது”

 

அனைவரும் சம்மதித்தார்கள்.

 

விதஸ்தா நதியின் காந்தாரக் கரைப்பகுதியில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் கேகய நாட்டின் ஒற்றன் இரண்டு நாட்களாக வித்தியாசமான காட்சிகளைக் காண நேர்ந்தது. நள்ளிரவில் காந்தார யவனப்படை வீரர்கள் போர் முகாம்களிலிருந்து தட்ச சீலம் நோக்கிப் போவதும், தட்சசீலத்திலிருந்து அதே அளவிலான வேறு வீரர்கள் போர் முகாம் நோக்கி வருவதும் அவனைச் சந்தேகப்பட வைத்தன. என்ன நடக்கிறது?

 

குடியானவனாக அந்தக் கிராமத்தில் வசித்து வரும் அவன் பகல் நேரங்களில் ஏதோ ஒரு வேலையாக நடப்பது போலவும்,  இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கியும் அந்தப் பகுதிகளில் வலம் வந்தான். ஒரு பக்கத்தில் நிறைய ஆட்கள் அதிகாலையிலிருந்து, இருட்டும் வரையில் படகுகள், மரப்பாலங்கள் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் நள்ளிரவு நேரங்களில் விதஸ்தா நதியின் மேல் பகுதிக் கரைப் பக்கம் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சதித்திட்டத்தின் பகுதியாகவே அது அவனுக்குத் தோன்றியதால் அவன் மேலும் உன்னிப்பாக அவர்களைக் கண்காணிக்க முடிவு செய்தான்.

 

ஒரு நாளிரவு அவன் அந்தப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பகுதிக்குப் போன போது தொலைவில் அந்தப் பணியாளர்களுடன் ஒரு யவன வீரன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.  மிகவும் எச்சரிக்கையுடன் அந்த ஒற்றன் மறைவிடங்களின் வழியே மேலும் முன் சென்று பார்த்த போது அந்த யவன வீரன் அலெக்ஸாண்டர் என்பது அவனுக்குத் தெரிய வந்தது. மிகத் தாழ்ந்த குரலில் அலெக்ஸாண்டர் அந்தப் பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது கேகய ஒற்றனுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

 

ஆனால் அவர்களுடைய செயல்களை அவனால் தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. அவர்கள் தயாரித்திருந்த மரப்பாலங்களின் நீளங்களை ஒரு நீண்ட கயிற்றினால் அளந்து கொண்டிருந்தார்கள்.   பின் அவர்கள் அந்தக் கயிற்றில் அந்த அளவுகளைக் குறிக்கும் விதமாக முடிச்சுகள் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் அலெக்ஸாண்டர் ஒரு குதிரையிலும் அந்தப் பணியாளர்களில் நால்வர் இரண்டிரண்டு பேராக இரண்டு குதிரைகளிலும் அங்கிருந்து போனார்கள். ஒற்றன் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மறைவுப் பகுதிகள் வழியாகவே ஓடிப் பின் தொடர்ந்தான்.

 

அவர்களுடைய குதிரைகள் விதஸ்தா நதியின் நடுவில் தீவுத்திடல் ஒன்று இருக்கும் பகுதியருகே போய் நின்றன. பணியாளர்களில் ஒருவன் அந்தக் கயிற்றை வயிற்றில் கட்டிக் கொண்டு நதியில் இறங்கினான்.  ஒற்றன் என்ன நடக்கிறது என்பதை ஒரு மறைவிடத்தில் ஒளிந்திருந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

நதியில் இறங்கிய பணியாளன் அந்தத் தீவுத் திடலை எட்டியவுடன் அந்தக் கயிற்றை தீவுத்திடலில் கரையோரம் இருந்த ஒரு மரத்தில் கட்டினான். அந்தக் கயிற்றின் ஒரு பகுதியை இந்தக் கரையில் இருந்த ஒரு பணியாளன் தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்கள் அந்தக் கரையிலிருந்து அந்தத் தீவுத்திடல் வரை உள்ள நீளத்தை அந்தக் கயிற்றில் அளக்கிறார்கள் என்பது மெள்ள அந்த ஒற்றனுக்கு விளங்கியது. பின் இன்னொரு பணியாளனும் இப்பகுதியிலிருந்து தீவுத்திடல் போய்ச் சேர்ந்தான். அவன் இன்னொரு கயிறை தீவித்திடலின் மறு கரையின் ஓரத்திலிருந்த மரத்தில் கட்டி நதியில் இறங்கி நீந்தி கேகயக் கரையோரம் போய்ச் சேர்ந்தான். அங்கும் அவர்கள் அந்தக் கயிறை அளப்பது தெரிந்தது.

 

கேகய ஒற்றனுக்கு மெள்ள அவர்களுடைய திட்டம் புரிய ஆரம்பித்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்   

 

 

 

Monday, February 20, 2023

யாரோ ஒருவன்? 126டுத்த காட்சியாக மாதவன் வீட்டில் அவன் தாய் பரிமாற நான்கு பேரும் தரையில் சம்மணமிட்டுச் சாப்பிடும் காட்சியாக விரிந்தது. மாதவனின் தந்தை பரந்தாமன் அவர்கள் நகைச்சுவையாக எதோ பேசிக் கொண்டு சாப்பிடுவதை, சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று முன் தான் ரஞ்சனி அவர்களைப் பற்றிச் சொல்லி இருந்தாள் என்பதால் பார்த்துக் கொண்டிருந்த மேகலாவுக்கு அவர்கள் தான் மாதவனின் பெற்றோராக இருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவள் அந்தக் காட்சிகளில் ஐக்கியமாக ஆரம்பித்தாள்.

பரந்தாமனையும் அலமேலுவையும் பார்த்தவுடன் தீபக் அடைந்த திகைப்புக்கு அளவேயில்லை.  காட்சியிலிருந்து கண்களை எடுக்காமல் அவன் தர்ஷினி காதில் சொன்னான். “இவங்க வீட்டு முன்னாடி தான் எங்க கார் நின்னது. இந்தப் பாட்டி தாத்தாவைப் பத்தி தான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்” தர்ஷினியும் திகைத்தாள். அவர்கள் இருவரும் கூட தங்களை மறந்து அந்தக் காட்சியில் கலந்து போனார்கள்.

தன் மனைவியும், மகளும் காட்டிய ஈடுபாட்டைக் கவனித்த கல்யாண் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நினைத்தான். “ஏதோ மாய சக்திகளை வைத்துக் கொண்டு திரைப்படம் எடுக்கிற மாதிரி கொஞ்சம் உண்மையையும், நிறையப் பொய்களையும் கலந்து காட்டி என் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறாயா? வெளியே போ.” என்று கத்தி நாகராஜை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தான். அவன் மகளும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்தாலும் அவர்களையும் வாயை மூடுங்கள் என்று திட்டி அடக்க நினைத்தான். பிறகு எப்படியாவது அவர்களைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். இப்போது இவனைத் துரத்துவது மிக முக்கியம்...

ஆனால் அவன் எத்தனை முயன்றாலும் அவனால் வாயை அசைக்க முடியவில்லை. சகல பலத்தையும் திரட்டி எழப் பார்த்த வேலாயுதமும் தன் முயற்சியில் தோல்வியடைந்தார். சரத் எல்லாம் தங்கள் கைமீறிப் போய் விட்டதென்ற விரக்தியுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று பேரும் சிலை போல் அமர்ந்திருக்க அடுத்த காட்சியில் ரஞ்சனியும் மாதவனும் தெரிந்தார்கள்.

ரஞ்சனி மாதவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். “பாரு. நான் எது காதல்னு ஒரு கவிதை எழுதியிருக்கேன். படிக்கட்டுமா?”

மாதவன் ஆர்வத்துடம் சொன்னான். “படி”

கணக்குப் பார்ப்பது காதல் அல்ல;
காதல் கணக்கறியாதது.
மாறச் சொல்வது காதல் அல்ல;
காதல் மாற்ற விரும்பாதது.
காணாத போது
காணாமல் போவது காதல் அல்ல;
காதல் என்பது காத்திருப்பது.
இளமையிலும் இனிமையிலும் மட்டுமே
இருப்பது காதல் அல்ல;
முள் பாதை கடந்து
முதுமை வரை வந்து - உயிர்
மூச்சோடு முடிவது தான் காதல்.

கவிதையைக் கேட்டு முடித்து மாதவன் கைதட்டி விட்டு அவளைக் காதலுடன் பார்த்தபடி நம்ம காதல் மாதிரியா?” என்று கேட்கிறான்.

ரஞ்சனியின் கண்களில் அருவியாய் நீர் வழிய, அவளிடமிருந்து அடக்க முடியாத ஒரு விம்மலும் வெளிப்பட, தீபக்கும் தர்ஷினியும் ரஞ்சனியை திகைப்புடன் பார்த்தார்கள். ரஞ்சனியோ வேறு உலகில், வேறு காலத்தில் இருந்தாள். அவர்கள் பார்ப்பதைக் கூட அவள் உணரவில்லை…

தீபக்குக்கும், தர்ஷினிக்கும் ரஞ்சனியின் இன்றைய நிலைமையை இப்போது நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நண்பன் என்ற நிலையைத் தாண்டி காதலனாக இருந்தவன் மற்ற நண்பர்களால் கொல்லப்பட்டான் என்று கேள்விப்பட்டால் அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? கவிதைகளில் ஆர்வம் அம்மாவிடம் இருந்து தான் அவனுக்கு வந்திருக்கிறது என்பது தீபக்குக்கு மெல்லப் புரிந்தது. அம்மா இந்த அளவு அழகான, அர்த்தமுள்ள கவிதைகள் எழுதுவாள் என்பதைத் தெரிவித்ததே இல்லை. அவள் காதலனின் மரணத்தோடு அவள் கவிதைகளும் நின்று போயிருக்க வேண்டும். அதை எண்ணுகையில் அவன் கண்கள் கலங்கின. அம்மா நீ எத்தனை கனத்தை உன் மனதில் சுமந்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறாய்!

அவர்களுடைய பெற்றோர்களுடைய வாழ்க்கையே சுவாரசியமான சினிமாப்படம் போல நிகழ்வுகள் காட்டப்படுகிறது என்பதால் அடுத்து என்ன என்று ஆர்வத்தோடு அவர்கள் காத்திருக்க நாகராஜ் அடுத்த காட்சியை வரவழைத்தான்.

நாதமுனி பேசப் பேச கல்யாணும், மாதவனும் மிகச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்னணியாக நாகராஜ் சொல்ல ஆரம்பிச்சான். ”இதோ இந்தக் காட்சியில் தெரியறவர் நாதமுனி. மாதவன் அப்பாவோட நெருங்கிய நண்பர். பேராசிரியர். பாம்புகளைப் பத்தி ஆராய்ச்சி செய்தவர். பல அபூர்வமான தகவல்கள் சொல்வார். மாதவனுக்கு பாம்புகள் ரொம்ப பிடிக்கும்...”

தீபக்குக்கு மாதவனின் செய்கைகள் எல்லாம் அவனையே இன்னொரு உருவத்தில் இருப்பதாக அடையாளம் காட்டின. மாதவன் அவனைப் போலவே பேசுகிறான். அவனைப் போலவே பாம்புகள் மீது ஆர்வமாக இருக்கிறான். மாதவன் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு அவனுக்கு உருவாக ஆரம்பித்தது. ஒரு முறை நாகராஜ் “நீ வேறொருவனை ஞாபகப்படுத்துகிறாய்” என்று சொன்னது இந்த மாதவனைத் தான் என்பது இப்போது புரிகிறது.

“நாதமுனி சொன்னதில் நாகங்கள் உருவாக்கும் நாகரத்தினக்கல் மேல் கல்யாணுக்கும் ஆர்வம் அதிகம். ஏன்னா  அந்த நாகரத்தினக்கல் வெச்சிருக்கிறவனுக்கு அதிர்ஷ்டம் தானாய் வரும்னு உலகத்துல பல இடங்கள்ல நம்பிக்கை இருக்கிறதா அவர் சொன்னார். ஏழ்மை நிலைமைல இருந்த மாதவனுக்கும் கல்யாணுக்கும் அந்த மாதிரி ஒரு நாகரத்தினக்கல் கிடைச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்னு எப்பவுமே கனவுகள் உண்டு. அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிற சமயத்துல அதிகமாய் பேசிகிட்டது அந்த விஷயமாய் தான் இருந்துச்சு. ஏதோ கற்பனைக்கதையானாலும் அப்படி மட்டும் நடந்துட்டா வாழ்க்கையே மாறிடுமில்லையான்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அந்தச் சமயத்தில் நிஜமாவே ஒரு நாகரத்தினக்கல் அவங்க வாழ்க்கையை எப்படியெப்படியோ மாத்திடப் போகுதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலை.”

“ஒரு ரயில் பயணத்தில் அவர்கள் வாழ்க்கைப்பயணமும் வழி மாறிடுச்சு. குளு, மணாலிக்கு சுற்றுலா போய் அங்கே ட்ரெக்கிங்கும் போகணும்னு ஒரு நாள் முடிவு பண்ணினாங்க. அவங்க ரயில்ல போறப்ப அவங்க கூட ஒரு பாம்பாட்டியும் பிரயாணம் பண்ணினான்.....”

காட்சி அன்றைய ரயில் பயணத்திற்கு மாறியது. அந்தப் பாம்பாட்டி படபடப்பான மனநிலையில் இருப்பது தெரிந்தது. அவனும், மாதவனும் அருகருகில் அமர்ந்திருக்க எதிர் வரிசையில் கல்யாணும் சரத்தும் அமர்ந்திருந்தார்கள். நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க பாம்பாட்டி அடிக்கடி குனிந்து கீழே இருக்கும் தன் உடைமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாதவன் அந்தப் பாம்பாட்டியிடம் சிரித்துக் கொண்டே சொன்னான். “எல்லாம் பத்திரமா தான் இருக்கு. கவலைப்படாதீங்க. உள்ளே விலையுயர்ந்த பொருள் எதாவது இருக்கோ?”

பாம்பாட்டி அந்த இளைஞனின் பேச்சால் சிறிது இறுக்கம் தளர்ந்தான். “அப்படி எல்லாம் இல்லை.... அப்படி இருந்தா இந்த வெயில் காலத்துல சாதாரண ஸ்லீப்பர் கோச்ல ஏன் வர்றேன்..” என்று சிரித்தான்.

சிறிது நேரம் கழித்து பாம்பாட்டி பாத்ரூம் போக எழுந்து போனான். அவன் போனவுடன் கல்யாண் மாதவனிடம் சொன்னான். “டேய் என்னவோ ஒரு மாதிரியான சத்தம் அங்கே அடியிலிருந்து கேட்குதுடா”

மாதவன் சொன்னான். “எனக்கும் கூட கேட்டுது. எதோ பாம்பு சீறுற மாதிரி. ஆனா பாம்பெல்லாமா பிரயாணத்துல எடுத்துகிட்டு வருவாங்க...”

கல்யாண் சொன்னான். “டேய் அவன் இப்ப தான போனான். ரெண்டு நிமிஷத்துக்கு கண்டிப்பா வரமாட்டான். என்னன்னு பாருடா?”

மாதவன் மெல்லக் குனிந்து சத்தம் வரும் அந்த சூட்கேஸை மெல்லத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு பெரிய பாம்பு சுருண்டு கிடந்தது.

திகைத்து நிமிர்ந்த மாதவன் கல்யாணிடம் சொன்னான். “டேய் பாம்புடா”

சரத் உடனடியாக கால்களை மேலே மடித்து வைத்துக் கொண்டான். கல்யாண் சொன்னான். “டிடிஆர் கிட்ட சொல்லலாமாடா”

“பாவம்டா விடுடா” மாதவன் சொன்னான்.

சரத் சொன்னான். “டேய் நீ லூஸாடா? அது கடிச்சுதுன்னா என்ன ஆகும்னு தெரியுமாடா?”

“டேய் நாம இன்னும் ஒரு மணி நேரத்துல டெல்லில இறங்கப் போறோம். இவன் ஜம்மு போறவன். டிடிஆர் கிட்ட சொன்னா அந்த ஆளு இவனை இங்கேயே இறக்கி விட்டுடுவான். நம்மனால இவனுக்கு எதுக்குடா பிரச்சனை. அப்படி அது வெளியில வராதுடா”

பாம்பாட்டி வரும் சத்தம் கேட்க மாதவன் சூட்கேஸை மூடி விட்டு அவசரமாய் நிமிர்ந்தான்.

கல்யாணும் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்தான். அவன் மாதவனைப் பார்த்து கால்களை மேலே வைத்துக் கொள்ள சைகை செய்தான். மாதவன் ‘அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுடா’ என்று பார்வையிலேயே தெரிவித்து விட்டு கால்களைத் தொங்கப்போட்டபடியே உட்கார்ந்திருந்தான்.

கல்யாணும் சரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மாதவனை முறைக்க மாதவன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்....

ரஞ்சனி இந்தக் காட்சியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ரயில் ஏறிய பிறகு என்ன நடந்தது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. மாதவனின் மரணம் வரை இனி என்ன நடக்கிறது என்பதை அவள் அறிந்தாக வேண்டும்....

நாகராஜ் காட்டிக் கொண்டிருந்த இந்தக் காட்சி ஆரம்பித்த போது கல்யாண், சரத் இருவர் முகத்திலும் பீதி தெரிய ஆரம்பித்தது. ஆதாரம் காட்சியாகவே வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்Thursday, February 16, 2023

சாணக்கியன் 44

லெக்ஸாண்டர் மழை பலமாகத் தன் மேல் விழுவதையும் குளிர்வதையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருந்தான். விதஸ்தா நதி அவன் போகும் திசைக்கு எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. நதியில் வெள்ள நீர் அதிகரித்திருப்பதை அவனால் காண முடிந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த நதியின் ஓட்டத்தை ரசித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் ஓரிடம் வந்தவுடன் குதிரையை நிறுத்தினான். அது மேட்டுப் பகுதி. நதிக்கு நடுவே ஒரு குட்டித் தீவு போல் மரங்கள் நிறைந்த பகுதி ஒன்று தெரிந்தது. அங்கு மட்டும் நதி இருபிரிவாகப் பிரிந்து அந்தப் பகுதியின் இருமருங்கிலும் ஓடி மீண்டும் பிறகு ஒன்று சேர்ந்து கொண்டது. அந்தப் பகுதியை சிறிது நேரம் நின்று அலெக்ஸாண்டர் ஆராய்ந்தான். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் வந்த வழியில் நதி வளைந்து சென்றிருந்ததால் அவர்கள் படைகளும், அவன் கிளம்பி வந்த இடமும் சிறிதும் தெரியாமல் பார்வைக்கு மறைந்திருந்தது. அலெக்ஸாண்டர் புன்னகை செய்தான்.

 

ழை காலையில் நின்று விட்டது. இருபக்கப் படைகளும் நதிக்கரையில் தயார் நிலைக்கு வந்து நின்று விட்டன. கேகய அரசர் புருஷோத்தமன் மறு கரையில் தெரிந்த எதிரிப்படைகளைப் பார்வையிட்டார். பெரிய படைகள் தான் என்றாலும் கேகயப்படைகளுக்கு இணையான அளவில் பெரிதல்ல என்பதைக் கவனித்த போது அவருக்கு திருப்தியாக இருந்தது. கேகய நாட்டுக்கு மற்ற எல்லைப் பகுதிகளில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவரால் முழுப் படையையும் இங்கே கொண்டு வந்து குவிக்க முடிந்தது. ஆனால் காந்தாரத்திற்கு அந்த நிலைமை இல்லை. அதனால்  அவர்கள் ஒரு கணிசமான பகுதியை மற்ற இடங்களில் நிறுத்தியிருந்தார்கள். தட்சசீலத்திலும் ஒரு படையை தலைநகரப் பாதுகாப்புக்காக விட்டு வந்திருக்கிறார்கள் என்பது ஒற்றர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

 

புருஷோத்தமன் தன் சேனாதிபதியிடம் கேட்டார். ”இருபக்க படை நிலவரத்தைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது சேனாதிபதி?”

 

சேனாதிபதி புன்னகையுடன் சொன்னார். “நம் படைபலத்திற்கு அவர்கள் படைபலம் போதாது அரசே. அவர்களுடைய நிலைமையும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அவர்கள் இந்த வெள்ள காலத்தில் நதியைக் கடந்து வருவதே சற்று பிரயாசையான செயல் தான். அப்படிக் கடந்து வரும் போதே நாம் இங்கிருந்து தாக்க ஆரம்பித்து விடலாம். அதை மீறியும் வருவதென்றாலும் ஒரேயடியாக அவர்களுடைய முழுப்படையும் இங்கே வந்து சேர முடியாது.  பகுதி பகுதியாக வந்தாலோ அவர்களுக்கு வெற்றிக்கு வாய்ப்பு சிறிதும் கிடையாது.”

 

புருஷோத்தமனும் திருப்தியுடன் புன்னகைத்தார். “பாவம் அலெக்ஸாண்டர். அவன் இது வரை தோல்வியே காணாதவனாம். நம்மிடம் வந்து முதல் தோல்வியை அவன் காண வேண்டும் என்று அவன் தலையில் எழுதி இருக்கிறது. ஆம்பி குமாரனுடன் கூட்டு சேர்ந்த நேரம் அலெக்ஸாண்டருக்குச் சரியில்லை போல இருக்கிறது.”

 

இருவரும் பேசிக் கொண்டதை அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்த இந்திரதத்துக்கு அவர்களைப் போலத் திருப்தியடைந்து விட முடியவில்லை.  அவர் சொன்னார். “கரை வரை வந்து விட்ட படைகள் அங்கேயே ஏன் நின்று கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லையே

 

சேனாதிபதி சொன்னார். “வெள்ளம் குறையக் காத்துக் கொண்டிருக்கலாம். அல்லது பொறூமையிழந்து போய் நாமே நதியைக் கடந்து சென்று போரிடுவோம் என்று பேராசைப்பட்டு நின்றிருக்கலாம்……”

 

இந்திரதத் சொன்னார். “அல்லது நம் படையைப் பார்த்த பிறகு மேலும் படையைத் தருவிக்க ஆணையிட்டு அது வரக்காத்திருக்கவும் செய்யலாம்….”

 

புருஷோத்தமன் சொன்னார். “அதற்கும் வாய்ப்பு இருக்கிறது…. அலெக்ஸாண்டர் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் நிற்கும் பொறுமை இல்லாதவனாகவும் தெரிகிறான். அவன் அடிக்கடி ஆம்பி குமாரனையும், மற்ற தளபதிகளையும் அழைத்துக் கொண்டு போய் கலந்தாலோசிப்பது போலத் தெரிகிறது…. ”

 

சேனாதிபதி சொன்னார். “ஆமாம் நேற்றும் நீண்ட நேரம் போய்ப் பேசியிருந்து விட்டு வந்தார்கள். பாருங்கள் இப்போதும் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறான். போய் அப்படி என்ன பேசுவார்களோ தெரியவில்லை. மழைக்காலம் முடிந்த பின் போருக்கு வந்திருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்களோ என்னவோ? அரசே ஒன்றைக் கவனித்தீர்களா? அலெக்ஸாண்டர் மிக உயரமானவன் கிடையாது. அவனுடைய தலைக்கவசம் இல்லா விட்டால் அவன் வீரர்களில் பலரை விட அவன் உயரம் குறைவானவன் தான். அதனால் தான் மற்றவர்களை விட நீண்ட தலைக்கவசம் அணிந்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்

 

புருஷோத்தமன் சிரித்தார். இந்திரதத் பேச்சு போகும் விதத்தை ரசிக்கவில்லை. அலெக்ஸாண்டரைப் பற்றிய நண்பர் விஷ்ணுகுப்தரின் கணிப்பு இப்போதும் அவருக்கு மனதில் நெருடலாக இருப்பதால் சொன்னார். “அவன் தலைக்கு மேல் என்ன அணிந்திருக்கிறான் என்பது முக்கியமல்ல சேனாதிபதி. அவன் தலைக்குள் என்ன இருக்கிறது என்பதல்லவா முக்கியம்? அவன் போர் வியூகங்களை வகுப்பதிலும், நிலைமைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் வல்லவன் என்று சொல்கிறார்கள். அதனால் அவனை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.”  

 

சேனாதிபதி சொன்னார். “நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே.”

 

புருஷோத்தமன் சொன்னார். “நாம் வெறுமனே இங்கு வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருப்பது அனாவசியம் என்று தோன்றுகிறது. வாருங்கள் நாமும் முகாமில் ஓய்வெடுப்போம். அவர்கள் ஆலோசனை முடிந்து திரும்பவும் வந்த பிறகு வருவோம்

 

அலெக்ஸாண்டரும், ஆம்பி குமாரனும் பேசி முடித்து திரும்பவும் வந்தவுடன் தெரிவிக்கும்படி படைவீரர்களிடம் தெரிவித்து விட்டு புருஷோத்தமனும், இந்திரதத்தும், சேனாதிபதியும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.

 

லெக்ஸாண்டர் நேற்றிரவு தான் பார்த்த இடத்தைப் பற்றி ஆம்பி குமாரனிடமும், சசிகுப்தனிடமும், தங்கள் இரு படைத்தளபதிகளிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். “….. அந்த இடத்தின் மிகப்பெரிய அனுகூலம், நாமும் சரி, நம் எதிரிகளும் சரி இங்கிருந்து கொண்டு அந்த இடத்தைப் பார்க்க முடியாதது தான். அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கிருப்பவர்கள் அறிந்து கொள்ள வழியில்லை. இப்போது நான் அறிய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ஒரு வேளை நம்முடைய சிறு படை ஒன்று அந்தப் பகுதி வழியாக மறு கரையை அடைந்தால் அக்கரையில் நாம் போய்ச் சேரும் பகுதியில் உள்ள நிலவரம் என்ன? அங்கே உள்ள பகுதியில் மக்கள் வசிக்கிறார்களா, படைக்காவல் ஏதாவது இருக்குமா?”

 

கேகய நாட்டுக்குப் பல முறை போன அனுபவமுள்ள காந்தாரத் தளபதி ஒருவன் சொன்னான். “இந்தப் பகுதி போலவே அந்தப் பகுதியிலும் மக்கள் குடியிருப்போ, காவலோ இல்லை. அதனால் நம்மில் சிலர் அந்தப் பகுதியை அடைந்தால் அக்கரைப்பகுதியில் இருந்து யாரும் உடனடியாகக் கவனித்து அறிவிக்கும் அபாயம் இல்லை.”

 

அலெக்ஸாண்டர் உற்சாகமடைந்தான். “நதிக்கு நடுவே தீவுத்திடல் ஒன்று இருப்பதால் நாம் அப்பகுதியில் கரையிலிருந்து அந்தத் தீவுத்திடலுக்கும், அந்தத் தீவுத்திடலிலிருந்து அக்கரைக்கும் தற்காலிகப் பாலங்கள் அமைப்பது எளிது. படகுவழியாகப் போவதிலும் பிரச்சினை இருக்காது.  அப்படிப் போவதை ரகசியமாக வைத்திருப்பது ஒன்று தான் மிக முக்கியம்….”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “இங்கிருந்து ஒரு படை அந்தப் பகுதிக்கு நகர்வதைப் பார்த்தாலே கேகயப்படை எச்சரிக்கை ஆகி விடுமே நண்பா. அவர்கள் என்ன நடக்கிறது என்பதை யூகித்து விட மாட்டார்களா?”


அலெக்ஸாண்டர் சொன்னான். “அதற்கு நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் நண்பா. எதிரிகள் பார்வைக்கு இங்கே ஒரு மாற்றமும் தெரியாது”.      

அதெப்படி முடியும் என்று ஆம்பி குமாரன் யோசித்துப் பார்த்தான். அவன் சிற்றறிவுக்கு எதுவும் எட்டவில்லை. 


அலெக்ஸாண்டரின் படைத்தளபதி ஒருவன் மெல்லக் கேட்டான். “இங்கே நீங்கள் நீண்ட நேரம் காணப்படவில்லையானாலும் அவர்கள் சந்தேகப்படும் அபாயம் இருக்கிறதே சக்கரவர்த்தி”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “அங்கிருப்பவர்கள் என்னுடைய முகத்தைப் பார்த்து அடையாளம் காண வழியில்லை. என்னுடைய உடை, உடல்கவசம், தலைக்கவசம் ஆகியவை வைத்து தான் என்னை அடையாளம் காண்பார்கள். கிட்டத்தட்ட என் உயரம், என் உடல்வாகு உள்ள நம் வீரன் ஒருவன் என்னுடைய உடை, உடல்கவசம், தலைக்கவசம் அணிந்து கொண்டு நான் நிற்கும் இடத்தில் இங்கே நின்று கொண்டிருந்தால் மறு கரையில் இருப்பவர்களுக்கு வித்தியாசம் தெரிய வழியே இல்லை…”

 

(தொடரும்)

என்.கணேசன்          

 

 


  

Monday, February 13, 2023

யாரோ ஒருவன்? 125வேலாயுதம் வெளியே வந்து பார்க்கையில் நாகராஜ் பக்கத்து வீட்டு கேட் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் கையில் எதுவும் இருக்கவில்லை. வேகமாகத் தன் அறைக்கு ஓடிப் போய் சொன்னார். “அவன் வர்றான். அவன் கையில ஒன்னுமில்லை.

ஆதாரத்தோடு வருகிறேன் என்று சொல்லி விட்டு வெறுங்கையுடன் ஏன் அவன் வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கல்யாண் யோசித்தான். என்னவாக இருந்தாலும் சரி, போய் நாகராஜை வரவேற்க அவனுக்கு விருப்பமில்லை. வா என்றழைக்காத இடத்தில் நுழைய நாகராஜுக்குச் சுயகௌரவம் விடா விட்டால் இன்னும் நல்லது. அவன் கோபத்தோடு திரும்பிப் போனால் சனியன் விட்டது என்று இருந்து விடலாம். வீட்டில் இருப்பவர்களின் தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்காது. அவன் பைத்தியக்காரன் என்று இப்போதாவது புரிகிறதா என்று கேட்கலாம்….

அவன் எண்ணங்களைப் புரிந்து கொண்ட வேலாயுதமும் வேகமாக உள்ளே வந்து ஹாலில் சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். நாகராஜின் பார்வை ஒன்று இந்தப்பக்கம் வருவதற்காக தவமாய் தவமிருந்தவர் இனி அவனால் எதுவும் ஆக வேண்டியதில்லை, வருவது உபத்திரமே என்று புரிந்து கொண்டதால் இனி எந்த மரியாதையும் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டார்.

நாகராஜை தீபக்கும் தர்ஷினியும் மட்டுமே வெளியே இருந்து இன்முகத்துடன் வரவேற்றார்கள். “வாங்க அங்கிள்

நாகராஜ் அவர்கள் இருவர் மட்டுமே வெளியே இருந்து வரவேற்பதையும் மற்றவர்கள் யாருமே தென்படாததையும் அவமரியாதையாக காட்டிக் கொள்ளாமல் லேசாகத் தலையை மட்டும் அசைத்தான். புன்னகையும் இல்லை.

அவர்கள் இருவரும் அவனை உள்ளே அழைத்துப் போன போது மேகலாவும் ரஞ்சனியும் எழுந்து நின்றார்கள். ஆனால் வேலாயுதம், சரத், கல்யாண் மூன்று பேரும் ஒரு சோபாவில் இறுகிய முகத்துடன் அமர்ந்தே இருந்தார்கள்.

அவர்கள் அப்படி அமர்ந்தேயிருப்பது சரியில்லை என்று தீபக்கும், தர்ஷினியும் நினைத்தாலும் அந்த நேரத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரிய ஹாலில் மூன்று பேர் அமரக்கூடிய சோபா, இரண்டு பேர் அமரக்கூடிய சோபா, ஒற்றை சோபா என்று இரண்டிரண்டு வட்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்தனஒற்றை சோபா ஒன்றில் அமர தீபக் மரியாதையுடன் சற்று குனிந்து கை காட்டினான்.

அமைதியாக அமர்ந்த நாகராஜ் நின்றிருந்த மற்றவர்களையும் உட்காரச் சொல்லி சைகை காண்பித்தான்.

வேலாயுதம் உள்ளுக்குள்ளே வெடித்தார். ’யார் வீட்டுல யார் வந்து உட்காரச் சொல்றது. இவன் என்னவோ ராஜா மாதிரி தன்னை நினைச்சுக்கறான். அரசவையில இவன் உட்கார்ந்த உடனே மத்தவங்களை உட்கார்ந்துக்கலாம்னு கை காட்டற மாதிரி கை காட்டறான். இந்த தீபக் தேவையில்லாம இந்த நாய்க்கு ரொம்ப மரியாதை காட்டறான்….’

ரஞ்சனியும் மேகலாவும் ஒரு சோபாவில் அமர, தீபக்கும், தர்ஷினியும் ஒரு சோபாவில் அமர்ந்தார்கள்.

நாகராஜ் தீபக்கையும், தர்ஷினியையும் பார்த்துப் பேச ஆரம்பித்தான். ”நான் அடுத்தவங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சு பல வருஷங்களாச்சு. முதல் முறையாய் இங்கே வந்திருக்கேன்னா அது உங்க ரெண்டு பேருக்காகத் தான் தீபக். உன் அம்மா என் கிட்ட கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் உங்க வீட்டையே சுடுகாடு மாதிரி ஆக்கிடுச்சு, நீங்க சொன்னது உண்மையாய் இருக்க வழியே இல்லை, ஆதாரம் இருந்தா காண்பிங்கன்னு சொன்னாய். உனக்கும், தர்ஷினிக்கும் வழக்கு என்னன்னே தெரியலகுற்றச்சாட்டு என்னன்னே சரியாய் புரியலை. என்ன நடந்துச்சு, எப்ப நடந்துச்சுன்னும் தெரியல, முக்கியமா இறந்தவனைப் பத்தி உங்க ரெண்டு பேருக்கு எதுவுமே தெரியல. முதல்ல நீங்க அவங்க நட்பைத் தெரிஞ்சுக்கணும். பிறகு குற்றவாளிகளையும் தெரிஞ்சுக்கணும். அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டா குழப்பமா தான் இருக்கும்ஆரம்பத்துல இருந்து பார்க்கறீங்களா?”

அவன் பார்க்கறீங்களா என்று கேட்டதன் அர்த்தம் அவர்கள் இருவருக்கும் விளங்கவில்லை. ஆனாலும் கேட்கறீங்களா என்று சொல்வதற்குப் பதிலாகத் தவறி பார்க்கறீங்களா என்று சொல்லி விட்டிருக்க வேண்டும் என்று எண்ணித் தலையசைத்தார்கள்.

கல்யாணும் அப்படியே நினைத்தாலும் மெல்ல அதில் ஆபத்தை உணர்ந்தான். ஆரம்ப காலக் கதையிலிருந்து இவன் சொல்ல ஆரம்பிப்பது அவசியமில்லாதது, ஆபத்தானது என்று உணர்ந்த அவன் வேலாயுதத்தை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தான்.  

அதைப் புரிந்து கொண்ட வேலாயுதம் கறாரான குரலில் சொன்னார். “பாரு. இங்க யாருக்கும் கதை கேட்க நேரமில்லை. இவங்க ரெண்டு பேரும் இவங்க நண்பனைக் கொலை செஞ்சாங்கன்னு சொல்லியிருக்கே. ஆதாரம் உன் கிட்ட இருக்குன்னு சொல்லியிருக்கே. அந்த ஆதாரத்தை முதல்ல காட்டு. போட்டோவா, போலீஸ் ரிப்போர்ட்டா, இல்லை சாட்சி யாராவதா சீக்கிரம் காட்டிகிட்டு போய்கிட்டே இரு…”

தர்ஷினி தாத்தாவைப் பார்த்துச் சொன்னாள். “நீங்க சும்மா இருங்க தாத்தா. எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து எல்லாம் தெரிஞ்சாகணும். நீங்கல்லாம் சேர்ந்து திடீர்னு என்னென்னவோ பேசிக்கிறீங்க, சொல்லிக்கிறீங்க, கூடிக்கூடிப் பேசிக்கறீங்க. நாங்க ரெண்டு பேரும் குழப்பத்தோட உச்சத்துல இருக்கோம். எங்க அப்பா அம்மா சம்பந்தப்பட்ட ரகசியம் எதுவா இருந்தாலும் எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து தெரிஞ்சாகணும். அங்கிள் நீங்க ஆரம்பத்துல இருந்தே சொல்லுங்க..”

நாகராஜ் முதல் முறையாக வேலாயுதம், சரத், கல்யாண் பக்கம் திரும்பினான். மூன்று வினாடிகள் பார்த்து விட்டுப் பார்வையை மறுபடி தீபக் தர்ஷினி பக்கம் அவன் திருப்பினான். ஆனால் அந்த மூன்று வினாடிப் பார்வையிலேயே மூவரும் ஏதோ ஒரு சக்தி தங்களைக் கட்டிப்போடுவது போல் உணர்ந்தார்கள். வாயைத் திறக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. வெளிப்பார்வைக்கு அவர்கள் சாதாரணமாக அமர்ந்திருப்பது போலவே தெரிந்ததால் மற்றவர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் நாகராஜ் என்ன சொல்லப்போகிறான் என்பதிலேயே கவனமாய் இருந்தார்கள்.

நாகராஜ் தன் தலைக்கு மேல் கையை நீட்டினான். அவன் தலைக்கு மேல் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. திரைப்படம் பார்ப்பது போல் வெட்ட வெளியில் தெரிவது அவர்களைப் பிரமிக்க வைத்தன.

முதலில் மாதவன் புன்னகையும், உற்சாகமுமாய் தெரிய அவன் அருகில் ரஞ்சனி தெரிய அவர்களுக்கு இருபக்கங்களிலும் கல்யாணும் சரத்தும் தெரிந்தார்கள்.

நாகராஜ் சொன்னான். “இது தான் சத்தியமங்கலம்கிற சின்ன ஊர்ல இருந்த ஒரு காலேஜ்ல படிச்ச நால்வர் அணி. அப்படித்தான் எல்லாரும் இவங்கள கூப்பிடுவாங்க. ஏழ்மை நிலைமைல தான் நான்கு பேர் குடும்பங்களும் இருந்துச்சு. ஆனாலும் எல்லையில்லாத சந்தோஷத்தோடவும், எதிர்காலக் கனவுகளோடவும் இருந்தாங்க....”

எல்லோருமே திகைப்புடன் பார்த்தார்கள். அந்த நால்வரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுத்த புகைப்படத்தை ஒரு பெரிய திரையில் இப்போது போட்டுக் காட்டுவது போல் தோன்றியது. அடுத்து இரண்டு பேர்களாக, மூன்று பேர்களாக அவர்கள் சேர்ந்திருந்த காட்சிகள் வர ஆரம்பித்தன. எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலையில்லாமல் அவர்கள் இருந்த நட்பின் தருணங்கள் வந்து திரையில் தங்கித் தங்கிப் போயின. ரஞ்சனியின் கண்கள் விரிந்து ஈரமாயின. கல்யாணும், சரத்தும், வேலாயுதமும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த மாயாவி பழைய படங்களை எப்போது எடுத்தான். எப்படி வெட்ட வெளியில் அதைப் போட்டுக் காட்டுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாம் தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருந்தன.

கல்யாணுக்கு பாம்பாட்டி அந்த விசேஷ நாகரத்தினம் மட்டும் அந்த ஆளுக்குக் கிடைத்தால் கடவுள் மாதிரியாயிடுவான் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. நாகராஜ் பழைய நிகழ்வுகளைப் படங்களாக பிரபஞ்ச வெளியிலிருந்து வரவழைக்கிறானோ

படமாகத் தெரிந்தது அடுத்தபடியாக வீடியோ காட்சிகளாக விரிய ஆரம்பித்தன. மாதவன், சரத், கல்யாண் மூன்று பேர்களும் சைக்கிளில் போவது தெரிந்தது. போகும் போது ஏதோ அந்தக் காலச் சினிமாப்பாட்டை சத்தமாகப் பாடிக் கொண்டே போனார்கள். நகருக்கு வெளியே எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் நீர்வீழ்ச்சி தெரிந்தது. நெருங்கி வரும் போது அது கொடிவேரி நீர்வீழ்ச்சியாக இருந்தது. அடுத்த காட்சியில் மூன்று பேரும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

தீபக் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவன் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று வந்த காட்சி இது. இவர்கள் மூவர் தான் அன்று அரைகுறையாய் அவனுக்குத் தெரிந்தவர்கள். தீபக் அருகில் இருந்த தர்ஷினியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.


அவளுக்குப் புரிந்தது. அவளிடம் ஏற்கெனவே அவன் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது மனத்திரையில் தத்ரூபமாய் வந்து போன காட்சியைப் பற்றி சொல்லி இருக்கிறான்.... இது தான் அவன் பார்த்த காட்சியா என்று அவள் வியந்து பார்த்தாள்

(தொடரும்)
என்.கணேசன்