சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 28, 2015

உனக்குள்ளே இறைவனைப் பார்!


கீதை காட்டும் பாதை 37


ல்லாவற்றிற்கும் மூலமும் முடிவுமாய் இருப்பவன் இறைவனே. சிருஷ்டி காலத்தில் அனைத்தும் அவனிடம் இருந்தே தொடங்குகின்றன. அழிவு காலத்தில் அனைத்தும் அவனிடமே அடைக்கலம் அடைகின்றன. இதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்.

குந்தி மகனே! பிரளய காலத்தில் எல்லா உயிரினங்களும் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் சிருஷ்டி தொடங்கும் போது அவற்றைத் தோன்றச் செய்கிறேன்.

பிரகிருதிக்கு வசமானதால் தன் வசமிழந்த இந்த உயிரினங்களையும் என்னுடைய பிரகிருதியை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப சிருஷ்டி செய்கின்றேன்.

அர்ஜுனா! அந்தக் கருமங்களில் பற்று வைக்காமல் ஒதுங்கி நிற்பவன் போலுள்ள என்னை அந்தக் கருமங்கள் கட்டுப்படுத்துவதில்லை.

துவக்கத்தில் தூய்மையாக இருக்கின்றவை கடைசி வரை தூய்மையாகவே இருந்து விடுவதில்லை. எத்தனையோ மாற்றங்களை அடைந்து, பலவித  கர்மாக்களில் ஈடுபட்டு, அதற்கேற்ற பலன்களை சம்பாதித்து, கடைசியில் உயர்வையோ தாழ்வையோ பெற்று முடிவில் இறைவனை அடைகின்றன.

இறைவனை அடைந்து அங்கேயே தங்கி இருக்கின்ற சமயத்தில் உயர்ந்து போனதும், தாழ்ந்து போனதும் ஒரே போலவே இருக்கின்றன. உறக்கத்தில் உத்தமனும், அயோக்கியனும் ஒன்று தான். அவர்கள் உறக்கத்தில் அவர்களை வித்தியாசப்படுத்துவது இயலாத காரியம். விழித்துக் கொண்டபின் அவரவர் அவரவர் இயல்பின்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அது போலவே இறைவன் சிருஷ்டியை மறுபடி ஆரம்பிக்கையில் தாங்கள் அடைந்திருந்த மாற்றத்திலிருந்து மறுபடி துவங்குகிறார்கள். கர்மபலன்களை அனுபவித்துக் கொண்டே வாழ்கையில் மறுபடி மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள் கர்மாக்களிலும் கூட்டல், கழித்தல் நிகழ்கின்றன. இப்படியே பிரபஞ்சம் இயங்குகின்றது.

ஆனால் இத்தனையிலும் ஒதுங்கி நிற்பதும், பாதிக்கப்படாமலும் இருப்பது பகவானுக்கு எப்படி சாத்தியமாகிறது? திரையில் எத்தனை விதமான படங்கள் வந்து போனாலும் அந்தப் படங்கள் திரையைப் பாதிப்பதில்லை அல்லவா? மழைக்காட்சி வந்தால் அது ஈரமாவதுமில்லை. கடும் வெயில் அடித்தால் அது சூடாவதுமில்லை. திரை இல்லா விட்டால் அந்தப் படங்களே இல்லை என்பது உண்மையானாலும் அந்தப் படங்கள் திரையின் உண்மைத் தன்மையை மாற்றுவதில்லை அல்லவா? அப்படியே தான் இறைவனும் இருக்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ஜீவகோடிகளுக்கெல்லாம் மகேசுவரனான என்னுடைய மேன்மையை அறியாமல் மனித உருவிலுள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள்!

இந்த சுலோகத்தை மேலோட்டமாய் படித்தால் ஸ்ரீகிருஷ்ணர் சாதாரண மனிதர்கள் போல புலம்புவது போல் தோன்றும். ஆனால் ஆழமாய் படித்தால் தான் உண்மை விளங்கும். மனிதர்களைப் போல் இறைவன் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் மற்றவர் மதிப்பதும், அவமதிப்பதும் இறைவனை என்றுமே அசைப்பதில்லை. பின் ஏன் மனித உருவில் உள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார்?

பிறவிகளில் உயர்ந்தது மனிதப்பிறவி. தாவரங்கள் தங்கள் இயல்பின்படியே இலைகளைத் துளிர்க்கும், காய்க்கும், பூக்கும். அவற்றை மாற்றிக்கொள்ளும் சக்தி தாவரங்களுக்கு இல்லை. வாழை மரத்தில் வாழை இலைகளே துளிர்க்கும், வாழைக்காய்களே காய்க்கும், வாழைப்பூவே பூக்கும். அவை மாறி கறிவேப்பிலையைத் துளிர்க்கவோ, ஆப்பிள்களைக் காய்க்கவோ, மல்லிகைப்பூவைப் பூக்கவோ முடியாது.

விலங்கினங்களும் தங்களுக்கென்று இருக்கும் இயல்புகளை ஒட்டியே வாழ்ந்து மடிகின்றன. பறவைகள் தங்கள் இயல்பின்படியே கூடுகட்டி அந்தக் கூடுகளில் வசிக்கின்றன, பறக்கின்றன, இரை தேடுகின்றன. விலங்குகளும் தங்கள் இயல்பின்படியே வசித்து மடிகின்றன. அவற்றிற்கு தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ளவோ, வாழும் முறையை மாற்றிக் கொள்ளவோ முடிவதில்லை.  

உயிரினங்களிலேயே மனிதப் பிறவி தான் உயர்ந்தது.  மனித இனம் தான் உருவாக்கப்பட்டது போலவே இருந்து, வாழ்ந்து, மடியும் நிர்ப்பந்தம் அற்றது. மாற முடிந்த சக்தியும் சுதந்திரமும் கொண்டது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான தற்போதைய மனித இனம், இன்று எல்லா வகைகளிலும், பிரமிக்கத்தக்க மாற்றம் அடைந்துள்ளது. வாழும் இடம் முதல் அனைத்திலும் அது அடைந்திருக்கும் பிரம்மாண்டமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் மற்ற உயிரினங்கள் அடையவில்லை.
மனம் வைத்து உறுதியோடு செயல்பட்டால் மனிதனால் எப்படியும் மாற முடியும். எதையும் சாதிக்க முடியும். மனித இனம் இதை எத்தனையோ கோடிக்கணக்கான விதங்களில் நித்தமும் நிரூபித்து வருகிறது. அதனால் அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மன் குடி இருந்தாலும் மனிதப் பிறவியில் மட்டும் சக்திகளிலும் சரி, அவற்றைச் செயல்படுத்தும் சுதந்திரத்திலும் சரி சற்று அதிகப்படியாகவே பிரகாசிக்கிறான் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.

ஆனால் அந்த மனிதப் பிறவியில் நாம் அவனை அடையாளம் காண்கிறோமா என்றால் இல்லை. சிலையிலும், படத்திலும், சின்னங்களிலும் கூட இறைவனைப் பார்க்க முடிந்த நமக்கு மனிதர்களில் அந்தர்யாமியை, சர்வசக்தி வாய்ந்தவனாய் இருக்கும் இறைவனைப் பார்க்கத் தெரியவில்லை.  மாறாக பல சமயங்களில் மனிதர்களில் மிருகங்களையும், எதிரிகளையும், சைத்தானையும் பார்க்கிறோம், அப்படியே உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறோம். உள்ளே இருக்கும் மகேசுவரனை உணராமல் வெளித்தோற்றமாய் இருக்கும் மனிதனாகவே பாவித்து தாழ்த்திப் பார்ப்பதும், தாழ்ந்து போவதும் மூடத்தனமே அல்லவா? அதையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

எல்லாம் வல்ல இறைவனை அடுத்த மனிதனிடம் பார்ப்பது அப்புறம். முதலில் நமக்குள்ளே இறைவனைப் பார்த்து அறிகிறோமா? நமக்குள்ளே உணர்கிறோமா? நமக்குள்ளே அந்த பரமாத்மாவை கௌரவப்படுத்துகிறோமா? குப்பனாகவும், சுப்பனாகவும் அல்லவா கடைசி வரை எண்ணி அப்படியே வாழ்ந்து மடிந்து போகிறோம்.

நமக்குள்ளே பரமாத்மனைப் பார்க்க முடிந்தால் தவறு செய்யத் தோன்றுமா? தாழ்ந்த எண்ணங்கள் உருவாகுமா? ஜடமாய் இருக்க முடியுமா? பயமும், சந்தேகமும் பிடித்து நம்மை ஆட்டுமா? நமக்குள் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான் என்று உணர முடிந்தால் உருவாகும் சக்திப் பிரவாகத்தில் நம்மால் முடியாதது தான் என்ன?

நமக்குள் இருக்கும் இறைவனை உணராமல் தரம் குறைந்து போகும் போது நமக்குள் இருக்கும் இறைவனை அவமானப்படுத்துகிறோம். இதையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

முதலில் உனக்குள் இறைவனைக் காண ஆரம்பி. காலப்போக்கில் அனைவரிடமும் அவனைப் பார்க்க உன்னால் முடியும்.

பாதை நீளும்....

-          என்.கணேசன்

Thursday, September 24, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 64


ந்த உணவகத்தை நெருங்க நெருங்க லாரியின் வேகம் குறைந்தது போலவே பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பின் வேகமும் குறைந்தது. அங்கே முன்பே மூன்று வாகனங்கள் நின்றிருந்தன. ஒரு லாரியும் ஒரு வேனும் ஒன்றன் பின் ஒன்றாக இவர்கள் போகின்ற திசை நோக்கி நின்றிருந்தன. அவற்றிற்குப் பின்னால்  சிறிது இடைவெளி விட்டு ஒரு லாரி இவர்கள் வந்த பாதை நோக்கிச் செல்ல நின்றிருந்தது.  லாரிக்காரன் வேண்டுமென்றே அந்த இடைவெளியில் தன் லாரியை நிறுத்தினான். அதுவும் முன்னால் நிறைய இடம் காலியாக விட்டு விட்டு பின்னால் இருந்த லாரிக்கு நாலைந்து அங்குலமே இடைவெளியை விட்டு நிறுத்தினான். ஒருவேளை பின்னால் ஜீப்பில் வருபவர்கள் திடீரென்று லாரியின் பின் கதவைத் திறந்து பார்த்து விடுவார்களோ என்று அவன் பயந்தது போல் இருந்தது.

அவன் அப்படி லாரியை நிறுத்தியதால் அதன் நேர் பின்னால் ஜீப்பை நிறுத்த முடியாமல் ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். “என்ன செய்வது?

“பொறு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவனும், அவன் உதவியாளும் முதலில் லாரியில் இருந்து இறங்கட்டும்  என்று ஒடிசல் இளைஞன் சொன்னான்.  நிறுத்துவது போல் நடித்து பின்னால் வருபவர்களை நம்ப வைத்து இறங்க வைத்து பின் திடீரென்று அவர்கள் கிளம்பிச் சென்று விடலாம் என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.

ஆனால் லாரிக்காரனும் அவன் உதவியாளனும் லாரியில் இருந்து இறங்கி அவனுடைய சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அவர்கள் உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். உணவகம் சிறியதாகத் தான் இருந்தது. உள்ளே பெரிய மரபெஞ்ச் ஒன்றும் இரண்டு மேஜைகளும் இருந்தன. வெளியே மூன்று மேஜைகளும் சில நாற்காலிகளும் போட்டிருந்தார்கள். உள்ளே சற்று கதகதப்பாக இருந்ததால் அங்கு ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.

வெளியே ஒரு மேஜையில் மட்டும் தான் இரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். லாரிக்காரனும் அவன் உதவியாளனும் காலியாக இருந்த ஒரு மேஜையை ஆக்கிரமிக்க ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “நாமும் சாப்பிடலாம். பசிக்கிறது.

ஒடிசல் இளைஞன் தாங்கள் தொடர்ந்து வந்த லாரியைப் பார்த்தான். இவர்கள் வந்த வழியில் செல்லவிருந்த லாரியை கிட்டத்தட்ட ஒட்டியது போலவே அதை நிறுத்தி இருந்ததால் அந்தப் பின் கதவுகளைத் திறக்கவே வாய்ப்பில்லை....   

ஒடிசல் இளைஞன் சொன்னான். “சரி நீ வண்டியை முன்னால் நிற்கிற லாரிக்கும் முன்னால் கொண்டு போய் நிறுத்து. நம் லாரிக்காரன் வண்டியை எடுத்துக் கொண்டு போனால் உடனே கிளம்ப அது வசதியாக இருக்கும். இடையில் எந்த வண்டியும் குறுக்கே வரவும் வாய்ப்பில்லை.

ஜீப் டிரைவர் அப்படியே செய்தான். இருவரும் இறங்கி உணவகத்தின் வெளியே காலியாக இருந்த மேஜைக்குப் போனார்கள். அங்கு உட்கார்ந்து பார்த்தால் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் முன்பகுதி தெரிந்ததே ஒழிய பின் பகுதி தெரியவில்லை. அது ஒடிசல் இளைஞனுக்கு நெருடலாக இருந்தது. மைத்ரேயன் ஒளிந்து கொண்டிருக்கும் லாரியின் பின் கதவைத் திறக்க வழியில்லாமல் பின்னால் நிற்கும் லாரி கிளம்பிப் போனால் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் இங்கேயே இறங்கி எங்காவது ஒளிந்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தான்.

உடனே அவன் இருப்பு கொள்ளாமல் எழுந்தான்.  “நீ என்ன சாப்பிடுகிறாயோ அதையே எனக்கும் வாங்கி வைஎன்று ஜீப் டிரைவரிடம் சொல்லி விட்டு மறுபடியும் லாரிகளின் அருகிலேயே போய்ப் பார்த்தான். அவை இரண்டுமே சாலையின் இடது கோடியில் தான் நின்றிருந்தன. அதைத் தாண்டி முள் வேலி, அதையும் தாண்டினால் செங்குத்தான பள்ளத்தாக்கு. அவர்கள் லாரியில் இருந்து இறங்கினால் கூட அந்தப் பக்கம் போய் ஒளிய எந்த வாய்ப்பும் இல்லை. இந்தப் பக்கம் வந்தால் கண்டிப்பாக அனைவருடைய பார்வையிலும் அவர்கள் படுவார்கள். அது புரிந்த பின் அவனுக்கு நிம்மதி வந்தது.

திரும்பவும் வந்த போது சுடச்சுட உணவு தயாராக இருந்தது. இருவருக்கும் நன்றாகப் பசித்திருந்ததால் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். ஜீப் டிரைவர் சுற்றுப்புறத்தையே மறந்து சாப்பிட்டான். ஆனால் ஒடிசல் இளைஞனின் முழுக்கவனமும் பக்கத்து மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லாரிக்காரன் மீதும், அவன் லாரி மீதும் இருந்தது. சீக்கிரமே சாப்பிட்டு முடித்து அவன் காத்திருந்தான்.

உணவகத்தின் உள்ளே சாப்பிட்டு முடித்து விட்டு இரண்டு பேர் வெளியே வந்தார்கள். இவர்கள் எந்த வாகன ஓட்டிகள் என்று ஒடிசல் இளைஞன் பார்த்தான். அவர்கள் இருவரும் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் பின்பக்கம் இருந்த லாரியில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் ஏறியவுடன் ஒரு காலிபாட்டிலோடு கீழே இறங்கினான். அதை எடுத்துக் கொண்டு உணவகத்துக்கு உள்ளே அவன் சென்றான்.

பக்கத்து மேஜையில் சாப்பிட்டு முடித்த லாரிக்காரன் எழுந்தான். வேகமாக சாப்பிட்டு முடித்திருந்த ஒடிசல் இளைஞனும் எழுந்தான். ஜீப் டிரைவர் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. ஆனால் ஒடிசல் இளைஞன் அவனைத் தன் பார்வையாலேயே எழுப்பினான்.

லாரிக்காரனும் அவன் உதவியாளனும் கூட லாரியில் ஏறிக்கொண்டார்கள். லாரிக்காரன் லாரியை கிளப்பினான். பின்னால் இருந்த லாரியும் கிளம்பத் தயாராகியது. உணவகத்தில் இருந்து பாட்டிலில் வெந்நீர் பிடித்துக் கொண்டு அந்த ஆள் ஓடி வந்தான். ஒடிசல் இளைஞனும் ஜீப் டிரைவரும் முன்னால் நிறுத்தியிருந்த தங்கள் ஜீப்பிற்கு விரைந்தார்கள். ஜீப் டிரைவர் ஜீப்பைக் கிளப்பி தயாராகக் காத்திருந்தான். ஒடிசல் இளைஞனின் பார்வை பின்னாலேயே இருந்தது.

லாரிக்காரன் மெல்ல அவர்களைத் தாண்டிக் கொண்டு முன்னால் செல்ல ஜீப்பும் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது. அந்த இடத்தைக் கடந்தவுடன் ஒடிசல் இளைஞன் திரும்பிப் பார்த்தான். அந்த இன்னொரு லாரியும் அவர்கள் வந்த பாதையில் போய்க் கொண்டிருந்தது. இப்போது ஒரு லாரியும் வேனும் மட்டுமே உணவகத்தின் முன்னால் இருந்தன. ஒடிசல் இளைஞன் கண்களைக் கூர்மையாக்கி அந்தப் பகுதியை அலசிப் பார்த்து விட்டுத் திருப்தி அடைந்தான்.  

பழையபடி இரு வாகனங்களும் ஒரே சீரான வேகத்தில் போக ஆரம்பித்தன. சிறிது தூரம் போன பிறகு சாலை அகலமாக ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தடாலென்று லாரியின் பின் கதவுகள் திறந்து கொண்டன. ஒடிசல் இளைஞனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் வலது கை தானாக துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டது. ஜீப் டிரைவர் முகத்தில் பீதி தெளிவாகத் தெரிந்தது. லாரியின் பின்பகுதியில் அடுக்கி வைத்திருந்த அந்தக் காலிப் பெட்டிகளைத் தாண்டி ஒளிந்து கொண்டிருக்கும் அந்த நரம்பு வர்மம் தெரிந்தவன் என்னேரமும் தங்கள் மீது தாவிக் குதிக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தான். எந்த நரம்பை எப்படிச் சுண்டுவானோ? பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் தரும் ஒன்றரை மடங்குப் பணத்தைச் செலவு செய்ய உயிரோடாவது இருப்போமா? என்றெல்லாம் நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்தான்.

திடீரென்று எதிரில் சென்று கொண்டிருந்த லாரி நின்றது. படபடக்கும் இதயத்துடன் தன் ஜீப்பையும் டிரைவர் நிறுத்தினான்.  ஒடிசல் இளைஞன் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்தானே ஒழிய மற்றபடி எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் சிலை போல உட்கார்ந்து இருந்தான். கதவுகள் உள்ளே இருந்து திறந்து விடப்பட்டனவா இல்லை தற்செயலாகத் தானாகத் திறந்து கொண்டனவா என்ற சந்தேகம் அவனுக்குள் முதலில் எழுந்தது. பின் தான் வெளியிலிருந்து தானே தாள் போடப்பட்டிருந்தது என்ற பிரக்ஞை வந்தது. வெளியே இடப்பட்டிருந்த தாழ்ப்பாள் வண்டி ஓட்டத்தின் குலுக்கலில் தானாக விடுபட்டுத் திறந்திருக்கலாம் என்று எண்ணிய ஒடிசல் இளைஞன் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி பெட்டிகளை மிகவும் கூர்மையாக ஆராய்ந்தான்.   

லாரி டிரைவர் கீழே இறங்கி பின்னால் வந்தான். லாரியின் திறந்திருந்த கதவுகளை ஒரு முறை பார்த்து விட்டு  கோபத்துடன் ஜீப்பில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தான். அவர்கள் தான் ஏதோ செய்து அந்தக் கதவுகள் திறந்து விட்டன என்று அவன் நினைத்த மாதிரி இருந்தது. பின் வேகமாக அவர்கள் அருகே வந்தான். “என்ன தான் வேண்டும் உங்களுக்கு?என்று சலிப்புடன் கேட்டான்.

ஒடிசல் இளைஞன் பார்வை லாரியின் பின்பகுதியிலேயே இருந்தது. கதவுகளைத் திறந்து விட்டு, இந்த டிரைவரைப் பேச விட்டு விட்டு, அவன் கவனம் டிரைவர் மேலிருக்கையில் அந்தப் பாதுகாவலன் வேகமாக மேலே பாயக்கூடும் என்று எதிர்பார்த்தது அவன் எச்சரிக்கை உணர்வு. கூடவே இன்னொரு சந்தேகமும் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் உள்ளே தான் இருக்கிறார்களா?

தன் சந்தேகத்தை உடனே நிவர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்த ஒடிசல் இளைஞன் வலது கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டி இடது கையால் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு அடையாள அட்டையை லாரி டிரைவரிடம் நீட்டினான். “போதைத் தடுப்புத் துறை.... உன் லாரியில் நீ போதை மருந்து கடத்திக் கொண்டு போவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது..

லாரி டிரைவர் பதறினான். “ஐயா இது அபாண்டம். நீங்கள் இப்போதே வேண்டுமானாலும் என் லாரியைப் பரிசோதித்துக் கொள்ளலாம்....

ஒடிசல் இளைஞன் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தான். பின் மெல்ல கேட்டான். “சம்யே மடாலயத்தில் இருந்து உன் லாரியைப் பின் தொடர்ந்து வருகிறோம். எங்களிடமிருந்து தப்பிக்க நீ பல விதமான ஜகஜாலம் செய்தது எதற்கு?

“நான்.... நான்.... உங்களைக் கொள்ளையர்கள் என்று நினைத்து விட்டேன்....

“கொள்ளையடிக்க உன்னிடம் என்ன இருக்கிறது?

“ஏழைக்கு இருக்கும் கொஞ்சமே பெரிய சொத்து தானே.... இந்தக் காலிப் பெட்டிகளுக்குக் கூட இப்போது விலை அதிகம்....

நீ இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?”

அவன் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து நகரத்தின் பெயரைச் சொன்னான்.  அங்கே உள்ள பெரிய கடையில் இருந்து தான் சம்யே மடாலயத்திற்குப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் மறுபடி இந்தப் பெட்டிகளை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றான்

“இத்தனை தொலைவில் இருக்கும் ஒரு கடையில் இருந்து சம்யே மடாலயம் பொருள்கள் வாங்குவது ஏன்?ஒடிசல் இளைஞன் சந்தேகத்துடன் கேட்டான்.

“அந்தக்கடைக்காரர் புத்தபிரானின் பக்தர். லாபமே வைத்துக் கொள்ளாமல் பொருள்களை அந்த மடாலயத்துக்குத் தருகிறார்....
   
ஒடிசல் இளைஞன் சொன்னான். “உன் ஆளைக் கூப்பிடு. நீயும் உன் ஆளுமாய் சேர்ந்து அந்தக் காலிப் பெட்டிகளை எடுத்துக் கீழே வையுங்கள்.

லாரிக்காரன் சிறிது தயங்கினான். ஒடிசல் இளைஞன் அவனை கண்டிப்பான பார்வை பார்க்கவே வேறு வழியில்லாமல் தன் உதவியாளனை கூவி அழைத்தான். அவனும் வந்தான். அவன் லாரிக்குள் ஏறி இரண்டு முறை அந்த எண்ணெய்ப் பசை வழுக்கலில் வழுக்கி விழுந்தான். பின் ஒருவழியாக சமாளித்து நின்றான். பின் அவன் அந்தக் காலிப் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தர லாரி டிரைவர் அவற்றைக் கீழே வைத்தான்.... கடைசி சில பெட்டிகள் இருக்கும் போதே உள்ளே யாரும் ஒளிந்திருக்கவில்லை என்பது ஒடிசல் இளைஞனுக்குத் தெரிந்து விட்டது.

கடைசிப் பெட்டியையும் இறக்கி வைத்து விட்டு லாரி டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். ‘திருப்தி தானே என்று அவன் பார்வை கேட்டது.  

துப்பாக்கி முனையில் இவனிடம் உண்மையை வரவழைத்தால் என்ன என்று ஒடிசல் இளைஞன் யோசித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்Monday, September 21, 2015

நீரிலும் எரியும் விளக்கு!


மகாசக்தி மனிதர்கள் - 37

து வரை நாம் பார்த்த யோகிகள் அனைவரும் தங்கள் காலத்தவர்களை ஆச்சரியப்பட வைத்தவர்கள். அவர்களில் சிலர் தங்களுக்கென்று சீடர்களையும், ஆசிரமங்களையும் உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் புகழ் பெற்றவர்களாகவும், சீடர்களால் ஆராதிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் யாருமே கடவுளுக்கு இணையாக பூஜிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் இனி அற்புதங்கள் செய்து காட்டி, பக்தர்கள் பலரைத் தன் காலத்திலேயே ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பூதவுடலை நீத்த பின்பும் லட்சக்கணக்கான மக்களால் கடவுளாகவே தொடர்ந்து பூஜிக்கப்பட்டு வரும் ஒரு மகானைப் பற்றி பார்ப்போமா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பிராமணத்தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர்.  பிறந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முஸ்லீம் தம்பதியிடம் ஒப்படைக்கப் பட்டவர்.  சில ஆண்டுகள் அந்த முஸ்லிம் தம்பதியால் வளர்க்கப்பட்ட அவர் அந்த முஸ்லீம் வளர்ப்புத்தந்தையின் மரணத்திற்குப் பின் உள்ளூர் ஜமீந்தாரும், திருப்பதி வேங்கடநாதனின் பரமபக்தருமான கோபால்ராவ் தேஷ்முக் என்பவர் ஆதரவில் வாழ்ந்தவர். கோபால்ராவ் தேஷ்முக்கின் மரணத்திற்குப் பின் ஷிரடி என்ற ஊரில் வந்து சேர்ந்து அங்கேயே வாழ ஆரம்பித்தவர். ஊர் பெயரைச் சொன்னவுடன் அந்த மகான் யார் என்று யூகித்திருப்பீர்கள். ஆம் அவர் தான் ஷிரடி சாய்பாபா.

ஷிரடி பாபா வாழ்க்கை வரலாறு பற்றி எத்தனையோ பேர் எழுதியிருந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுபவை மூன்று நூல்கள். அவை-

1)      ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே ஷிரடியில் வாழ்ந்து தன் நேரடி அனுபவங்களை ஷிரடி டயரி (Shirdi Diary) என்ற தலைப்பில் கணேஷ் ஸ்ரீகிருஷ்ண காபார்டே (Ganesh Shrikrishna Khaparde )என்பவர் எழுதிய நூல்


2)      ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே அவர் ஷிரடியில் வாழ்ந்த கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் (Govindrao Raghunath Dabholkar) என்ற இன்னொரு பக்தர் ஸ்ரீ சாய் சத்சரிதம் (the Shri Sai Satcharita)  என்ற பெயரில் எழுதிய நூல். இவரை ஷிரடி சாய்பாபா ஹேமத்பந்த் என்ற செல்லப்பெயரில் அழைத்தார். இதன் மூலம் இவருக்கு ஷிரடி பாபாவிடம் இருந்த நெருக்கம் தெரிகிறது. இவர் இந்த நூலை மராத்தியில் எழுதி இருக்கிறார்.

3)      சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு (Life of Sai Baba) என்ற பெயரில் பி.வி. நரசிம்ம ஸ்வாமி (B.V. NARASIMHA SWAMI) என்பவர் எழுதிய நான்கு தொகுதிகள் கொண்ட நூல். இது ஷிரடி சாய்பாபாவின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டது என்ற போதும் ஷிரடி சாய்பாபா காலத்தில் வாழ்ந்தவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டறிந்து தொகுத்த நூல்.

இந்த நூல்களின் மூலமாக ஷிரடி பாபாவின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்துடன் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும், அவர் அறிவுறுத்திய உபதேசங்களையும், நம் தலைப்பிற்கு உட்படக்கூடிய மற்ற சுவாரசிய நிகழ்வுகளையும் பார்ப்போமா?


முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் இஸ்லாம் மார்க்கத்திலும், கோபால்ராவ் தேஷ்முக்குடன் சில ஆண்டுகள் வாழ்ந்ததால் இந்து முறை வழிபாட்டிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த ஷிரடி சாய்பாபா தன் இளமையிலேயே இரண்டு மார்க்கங்களின் சாராம்சத்தையும் தனக்குள் முழுமையாக கிரகித்துக் கொண்டவராக விளங்கினார். உலகியல் வாழ்க்கையில் எந்த ஆர்வமும் இல்லாமலிருந்த அவர் ஷிரடி மண்ணில் காலடி வைத்த போது அவரைப் பைத்தியம் என்றே அந்த ஊர் மக்கள் எண்ணினார்கள்.


அதற்குக் காரணம் இருந்தது. பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்தடியிலேயே வாழ்ந்த அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார். அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடும் அவருக்கு அந்த நேரங்களில் சுற்றுப்புற பிரக்ஞை சுத்தமாய் இருக்கவில்லை. வெப்பமும், குளிரும், மழையும், காற்றும் அவரைப் பாதித்தது போல் தெரியவில்லை. அடிக்கடி நீண்ட நேரம் பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதிகளில் சஞ்சரிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. அந்தக் காட்டு விலங்குகளும் அவரைப் பயப்படுத்தியது போல் தோன்றவில்லை. தோற்றத்திலும் அவர் எந்தக் கவனமும் செலுத்தாதவராக இருந்தார்.


பைத்தியம் போல் தெரிந்த இளைஞன் சாய்பாபாவை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்த ஷிரடி மக்கள் நாட்போக்கில் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள். வேப்ப மரத்தின் அடியில் மழை, வெயில், குளிர் முதலான இயற்கை சக்திகளின் தாக்கத்தில் அவர் வாழ்வதைக் கண்டு இரங்கிய அவர்கள் அவர் முஸ்லீமாகவும் தோன்றியதால் ஷிரடியில் இருந்த ஒரு பாழடைந்த மசூதியில் தங்க அவரை அனுமதித்தார்கள். (அந்த பாழடைந்த மசூதியே ஷிரடி சாய்பாபா கடைசிவரை தங்கிய வசிப்பிடம் ஆகியது).


தியானத்தில் ஆழ்ந்திருக்காத போது சாய்பாபா கபீரின் பாடல்களை வசீகரிக்கும் குரலில் பாடவும் செய்தார். பாடிக்கொண்டே ஆடவும் செய்தார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் பாரசீக மொழியிலோ, அராபிய மொழியிலோ இருந்ததால் உள்ளூர் மக்களுக்கு அப்பாடல்களின் பொருளும் புரியவில்லை. அதனால் அவர்கள் பைத்தியமாக நினைத்ததில் தவறில்லை என்றே எண்ணினார்கள்.


ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தியானமும், ஆடல் பாடலும் இல்லாத நேரங்களில் சாய்பாபா ஊர் மக்களில் நோயாளிகளைக் கண்டு அவர்கள் நோய் தீர்க்க உதவவும் ஆரம்பித்தார். அவருக்கு மூலிகைகள், மாற்று மருத்துவ முறைகள் குறித்த ஞானம் சிறப்பாகவே இருந்தது. கடுமையான நோய்களுக்கும் எளிமையான மருந்துகள் தந்து குணப்படுத்திய அவர் தன் சேவைக்கு யாரிடமும் காசு வாங்கவில்லை. அது மட்டுமல்லாமல் உபயோகப்படுத்தாமல் வெறுமனே விட்டிருந்த ஊர்ப் பொது இடங்களில் பூச்செடிகள் நட்டு தோட்டமாக்கினார். தினமும் குடங்களில் தானே தண்ணீர் சுமந்து கொண்டு போய் அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, வளர்த்து பூக்களைப் பறித்து கோயில்களுக்கும், மசூதிகளுக்கும் தர ஆரம்பித்தார்.


ஊர்மக்கள் தொடர்பில் ஆரம்பத்தில் அதிகம் இல்லாதிருந்த சாய்பாபாவின் பிற்கால இத்தகைய செயல்களால் ஊர்மக்களும் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். இரவு நேரங்களில் அவரைச் சந்திக்க வரும் மக்களுக்கு இருட்டு பெரிய அசவுகரியமாக இருந்தது. எனவே சாய்பாபா ஊரில் இருந்த இரண்டு எண்ணெய் வணிகர்களிடம் எண்ணெயைத் தானமாக வேண்டினார்.  சில நாட்கள் எண்ணெயை சாய்பாபாவிற்குத் தந்த அந்த இரண்டு வணிகர்களும் ஒரு நாள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு தங்களிடம் எண்ணெய் இல்லை என்று பொய் சொல்லி விட்டார்கள்.

சாய்பாபா சரி என்று சொல்லி காலி எண்ணெய் டின்னுடன் திரும்பி விட்டார். அந்த இரண்டு வணிகர்களுக்கும் அவர் என்ன செய்கிறார், எப்படி சமாளிக்கிறார் என்று அறியும் ஆர்வமும் இருந்தது. அதனால் அவர்கள் இருவரும் அவரைப் பின் தொடர்ந்து அவரைக் கண்காணித்தார்கள்.


தான் வசிக்கும் பாழடைந்த மசூதிக்கு சாய்பாபா சென்ற போது இருட்ட ஆரம்பித்திருந்தது. அங்கு சென்றதும் அவர் தண்ணீர் கூஜாவில் இருந்த நீரை காலி எண்ணெய் டின்னில் ஊற்றி நன்றாகக் குலுக்கினார். பின் அந்த நீரைத் தன்னிடம் இருந்த நான்கு மண்விளக்குகளிலும் ஊற்றினார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த வணிகர்களுக்கு ஒரே சிரிப்பு. இந்தப் பைத்தியம் தண்ணீரிலும் விளக்கு எரியும் என்று நம்புகிறதே என்று உள்ளுக்குள் பரிகாசம். சாய்பாபா அந்த மண்விளக்குத் திரிகளில் நெருப்பைப் பற்ற வைத்தார். அதிசயமாய் விளக்குகள் எரிந்தன. வணிகர்களுக்குத் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. ஆனாலும் விளக்குகள் உடனடியாக அணைந்து விடும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் விளக்குகள் அணையாமல் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்தன. அப்போது தான் சாய்பாபா தாங்கள் நினைத்தது போல் பைத்தியக்காரரோ சாதாரண மனிதரோ அல்ல என்பதையும், மகான் என்பதையும் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். இத்தனை சக்தி வாய்ந்த மனிதர் தங்கள் பொய்யை அறியாதிருக்க மாட்டார், அவர் தங்களைச் சபித்தாலும் சபிக்கலாம் என்ற பயம் அவர்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது. உடனடியாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அவர்கள் தங்கள் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொண்டார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி- 01.05.2015

Thursday, September 17, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 63


டிசல் இளைஞன் சொன்னான். “சாதாரண மனிதர்களைச் சமாளிக்க நீ சொல்லும் வழி சரியானது தான். அந்த லாரிக்குள் பதுங்கி இருப்பவர்களில் ஒருவன் அசாதாரணவன். வாயு வேகம் மின்னல் வேகம் என்றெல்லாம் சொல்வார்களே அது போல இயங்குகிறவன். அவன் ஓடும் லாரியிலிருந்தே நம் ஜீப்பில் குதித்து ஏதாவது செய்து விடுவானோ என்று நானே பயந்து கொண்டிருக்கிறேன். நீ சொல்கிறபடி லாரியை நிறுத்தி விட்டால் அவனுக்கும் வேறு வழி இல்லை. கண்டிப்பாய் நம் மீது பாய்வான்.... வேறு வினையே வேண்டாம்....

ஜீப் டிரைவர் கேட்டான். “பாய்ந்து என்ன செய்வான்?

அவன் வர்மக்கலை நிபுணன். வர்மத்திலும் உடலின் நரம்புகளைத் தாக்குவதில் வல்லவன். ஏதாவது நரம்பைச் சுண்டி விட்டான் என்றால் அதோடு நம் கதை முடிந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குப் போனாலும் அதைச் சரி செய்ய முடியாது. அந்த நரம்பு சம்பந்தமான வேலைகள் அதற்குப் பின் நம் உடலில் நடக்காது

ஜீப் டிரைவர் பயந்து போனான். அவனை அறியாமல் ஜீப்பின் வேகம் குறைந்தது. அதைக் கவனித்த ஒடிசல் இளைஞன் எரிச்சலுடன் சொன்னான்.  “பயப்படாமல் ஒழுங்காக ஓட்டு. அவன் அப்படி ஏதாவது செய்து விடக்கூடாது என்று தான் இந்த அளவு இடைவெளி விட்டே ஒட்ட உன்னைச் சொன்னேன். அவன் இருக்கும் இடம் நம் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும். அது தான் இப்போது நாம் செய்ய வேண்டியது

ஜீப் டிரைவருக்கு சிறிது நிம்மதி வந்தது. பழைய வேகத்துக்கு உடனடியாக வந்தான். அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுக் கேட்டான். “இன்னொருவன் எப்படி?

“எந்த இன்னொருவன்?

“லாரிக்குள் இன்னொரு சிறுவன் இருக்கிறதாய் சொன்னாயே. அவனைக் கேட்கிறேன்

அவன் எப்படி என்று இனி மேல் தான் தெரிய வேண்டும்.....

அதற்கு மேல் ஜீப் டிரைவர் எதுவும் கேட்கவில்லை. மௌனமாக அந்த லாரியை அவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஒடிசல் இளைஞனுக்குப் புதியதொரு பயம் வந்தது. இந்த ஜீப் டிரைவர் சொன்ன திட்டத்தை அந்த லாரியில் போகிறவர்கள் பின்பற்றினால் என்ன செய்வது? திடீரென்று மைத்ரேயனின் பாதுகாவலன் லாரியின் பின் கதவைத் திறந்து துப்பாக்கியால் பின்னால் வரும் ஜீப் டயரைச் சுட்டால்....? ஜீப் நின்று போகும். அவர்கள் நிம்மதியாக எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.... அந்த எண்ணமே அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த யோசனை லாரியில் இருப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்று அவன் மாராவை வேண்டிக் கொண்டான்.

அதிர்ஷ்டவசமாக அவன் பயந்தது போல நடந்து விடவில்லை.  ஆனால் லாரிக்காரன் அடிக்கடி லாரியை எசகு பிசகாக ஓட்டினான். முன்பு ஓட்டியது போலவே படுவேகமாகவும், நிதானமாகவும் ஓட்டி அவர்களை அடிக்கடி சோதித்தான். ஜீப் டிரைவர் அதற்கெல்லாம் அசரவில்லை. அதற்கேற்றபடியே தானும் ஜீப்பை ஓட்டினான். இடையே சில வாகனங்கள் வந்த போதும் லாரியை ஓட்டினாற் போலவே இருந்து ஜீப்பும் முந்தியது.

ஆனால் ஒரு இடத்தில் மட்டும் லாரிக்காரன் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேனை முந்தினாலும் வேன்காரன் ஜீப்பை முந்த விடவில்லை. இப்போது அந்த வேன் லாரிக்கும் ஜீப்பிற்கும் நடுவில் இருந்தது. முந்தைய லாரி காற்றாய் பறக்க வேன் தன் பழைய வேகத்திலேயே போனது. ஜீப் முந்தவும் இடம் தராமல் வேன் போய் கொண்டிருக்கவே ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம் பரபரப்புடன் சொன்னான். ஏதாவது செய்து வேனை முந்து..... லாரியை நம் கண் பார்வையில் இருந்து தவற விட்டு விடக்கூடாது.

ஜீப் டிரைவர் ஒலி எழுப்பியும் வேன்காரன் வழி விடவில்லை. சாலையின் நடுவிலேயே வேனை ஓட்டினான். இடது புறம் பள்ளத்தாக்கு, வலது புறம் மலை. ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம் பதற்றத்துடன் சொன்னான். “இவனை மட்டும் இப்போது நீ கடந்து லாரிக்குப் பின்னால் தொடர்ந்தால் சொன்ன பணத்தில் ஒன்றரை மடங்கு தருகிறேன்....

கூடுதல் பணம் என்றதும் ஜீப் டிரைவருக்கு அசாதாரண உற்சாகம் வந்து விட்டது. கவலையை விடுங்கள் என்றவன் வலது புறம் இருந்த குறுகிய இடைவெளியிலும் வேனை முந்த முற்பட்டான். “நீங்கள் மட்டும் கெட்டியாக கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டால் சரிஎன்றவன் ஜீப்பை ஓட்டிய விதத்தில் இடது புற சக்கரங்கள் மட்டும் சாலையில் செல்ல வலதுபுற சக்கரங்கள் மலை அடித்தள மேட்டில் செல்ல ஆரம்பித்தன.

வேன்காரன் வாயைப் பிளந்தான். எந்த வேளையிலும் ஜீப் கவிழ்ந்து தங்கள் வேனின் மேல் விழலாம் என்கிற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. உடனே அவன் தானாக ஒதுங்க ஆரம்பித்தான். ஜீப் சில வினாடிகளில் வேனைக் கடந்து லாரியின் பின்னால் இருந்தது. ஒடிசல் இளைஞன் நிம்மதிப் பெருமூச்சு இட ஜீப் டிரைவர் சந்தோஷமாய் சிரித்தான்.

கண்ணாடியில் ஜீப் ஓட்டியின் சாகசத்தைப் பார்த்துக் கொண்டே வந்த லாரி டிரைவர் அங்கலாய்த்தான். “சைத்தானுக்கு வாய்க்கிற ஆள்களும் சைத்தானாகவே இருக்கிறார்கள்.


தே நேரத்தில் லீ க்யாங் உறங்காமல் சைத்தானை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.  இணையத்தில் ஆராய்ச்சி செய்ததில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அவற்றில் எத்தனை நிஜம், எத்தனை கற்பனை என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. ஒரு பாதி தகவல்களுக்கு எதிர்மாறாய் மறு பாதி தகவல்கள் இருந்தால் எத்தனை தகவல்கள் கிடைத்தாலும் அவை வீணாகவே அல்லவா இருக்கும்.

அந்த வீண் தகவல்களில் கூட மாராவின் அவதாரம் பற்றிய தகவல் ஒன்று கூட இருக்கவில்லை. புத்தரின் அவதாரம் மைத்ரேயன் பற்றி நிறைய இருந்தன. சில பேரை மைத்ரேயன் என்று சில காலக்கட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்கள் யாரும் புத்தர் இடத்தை வரலாற்றில் பிடிக்கவில்லை. அதனாலேயே அவர்கள் மைத்ரேயனாக இருந்திருக்க முடியாது என்று பிற்காலம் முடிவு செய்திருக்கிறது. இன்றைய மைத்ரேயன் உண்மையா என்று எதிர்காலம் முடிவு செய்யும்... இல்லை... இல்லை.... லீ க்யாங் முடிவு செய்வான். அவன் அறிமுகப்படுத்துபவனே எதிர்காலத்திற்கு மைத்ரேயனாக அறிமுகமாவான். அதில் லீ க்யாங்குக்கு கடுகளவும் சந்தேகம் இல்லை.... இப்போதைக்கு அவன் யோசனை எல்லாம் மாராவின் அவதாரம் பற்றியதாக இருந்தது. அவன் பின்னால் இருக்கும் ரகசியக்குழு பற்றியதாக இருந்தது. மைத்ரேயனையாவது புகைப்படத்தில் பார்த்திருக்கிறான். முழுமையாக இல்லா விட்டாலும் ஓரளவாவது அவனைப் பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் மாராவின் அவதாரம் மறைவிலேயே இருக்கிறான். மறைவாகவே இயங்கியும் வருகிறான். அதனால் அவனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.

சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் சொன்னதை எல்லாம் யோசித்துப் பார்க்கையில் அவை ஈசாப் கதைகள் போல அவனுக்குப் பட்டது. கண்கட்டு வித்தை, காணாமல் போகும் குகை, அங்கு மாராவின் கோயில், அங்கு இரவில் கூடும் ரகசியக்கூட்டம் இதெல்லாம் அறிவுக்கு எட்டும் விஷயமாக இல்லை. ஆனால் ஒருவன் அந்தக் குகையைப் பார்த்திருக்கிறான். அதைக் காணாமல் இரவிலும் பகலிலும் தேடி இருக்கிறான். மறுபடி காண முடியாமல் அதிசயித்திருக்கிறான். இதெல்லாம் கூட போதையில் இருந்த போது அந்த இளைஞன் ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனையாக இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவன் சில வருடங்கள் கழித்து முன்பு பார்த்தவனை மறுபடி பார்த்ததும், பார்த்ததின் விளைவாக மர்மமான முறையில் இறந்து போனதும் கற்பனை அல்ல. நிஜம். இது நிஜமாக இருந்தால் முன்பு அவன் சொன்ன அனுபவம் பொய்யாய் இருக்க முடியாது.....    

இப்போதும் கழுத்து திருகிய அந்தக் கண்சிமிட்டி மனிதன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் விழும் போது இருந்த சாட்சியாக இருந்த மனிதன் பாம்பு கடித்து இறந்து போனதும் இயல்பாக இல்லை.... முந்தைய சம்பவமும், இன்றைய சம்பவமும் கச்சிதமாகவே கையாளப்பட்டிருக்கின்றன. முன்பு நடந்தது பீஜிங்கில், இப்போது நடந்தது திபெத்தில். இரண்டுமே அவன் தேச எல்லைக்குள் தான்.... இதை எண்ணும் போது அவனுக்கு ஆத்திரமாக வந்தது. உளவுத் துறையின் கவனத்திற்கு வராமலே அவன் தேசத்திலேயே என்னென்னவோ நடக்கிறது....

சம்யே மடாலயத்தில் அந்தக் கண்சிமிட்டி மனிதன் கோங்காங் மண்டப வாயிலில் பல இரவுகளில் இருந்தது காவல் காக்கத் தான் என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. அந்த இரவுகளில் மண்டபத்திற்குள்ளே போனதையும் யாரும் பார்க்கவில்லை, வெளியே வருவதையும் யாரும் பார்க்கவில்லை என்பதை வைத்து அதை அனுமானித்தவன், அப்படியானால் உள்ளே யாரோ அந்த வேளைகளில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அனுமானித்தான். வெறும் சிலைகளைக் காவல் காக்க என்ன இருக்கிறது. அந்த வேளைகளில் உள்ளே இருப்பவர்கள் ஏதாவது வழிபாட்டில் இருந்திருக்கலாம். தீயசக்திகளின் பூஜைகள் நள்ளிரவிலேயே அதிகம் நடக்கின்றன.... அந்தப் பூஜை செய்யும் ஆட்கள் மடாலயத்திலேயே இருப்பவர்கள் ஒரு முறை கூட யார் கண்ணிலும் படவில்லை.... அந்த அளவு மிக கவனமாக இருந்திருக்கிறார்கள்.

சம்யே மடாலயத்தில் இரவு நேரங்களில் கோங்காங் மண்டபத்தை வேவு பார்க்க ஏற்பாடு செய்ய அவன் வாங் சாவொவிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் இது வரை அந்தக்குழு காட்டிய சாமர்த்தியத்தைப் பார்க்கும் போது சில காலமாவது அந்த ஆட்கள் கோங்காங் மண்டபத்திற்கு வந்து செய்யும் நள்ளிரவுச் சடங்குகளை நிறுத்தி வைப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது....

லீ க்யாங் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தி கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி ஐந்தரை.  வாங் சாவொவுக்குப் போன் செய்தான். திபெத்தில் அடிக்கடி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்களை எல்லாம் தேடிப் பிடித்து உள்ளே ஏதாவது சிலையும், விஸ்தாரமான இடமும் உள்ள (ரகசியக்) குகையை யாராவது எப்போதாவது பார்த்திருக்கிறார்களா, அங்கு ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா, அங்கேயே வாழும் மக்களுக்கு அது போன்ற ஒரு குகையைத் தெரியுமா, அவர்கள் அங்கு வந்து போகும் ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா என்றெல்லாம் விசாரிக்கச் சொன்னான். அமானுஷ்யமான அனுபவங்கள் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் உடனடியாகத் தெரிவிக்கச் சொன்னான். இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு முதல் வேலையாக இதைக் கவனிக்கச் சொல்லி விட்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

வெளியே விடிய ஆரம்பித்திருந்தது.   


ந்த விடியல் நேரத்தில் லாரி டிரைவரும், ஜீப் டிரைவரும் களைப்பை உணர ஆரம்பித்தார்கள். ஒடிசல் இளைஞன் மூன்று முறை முகத்தில் தண்ணீரை இறைத்து உறக்கத்தை விரட்டி இருந்தான். லாரிக்காரன் சாகசம் செய்வதை நிறுத்தி ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். அந்த ஜீப் டிரைவர் சில வினாடிகளானாலும் இரண்டு சக்கரங்களில் பயணம் செய்து லாரியைத் தொடர்ந்தது இவனிடம் எந்த வித்தையும் பலிக்காது என்பதை அவனுக்கு உணர்த்தி இருந்தது.

அவர்களது நீண்ட நேரப் பயணத்தில் ஒரு போலீஸ் வாகனம் அவர்களைக் கடந்தது. லாரிக்காரன் முதலிலேயே அவர்கள் கண்ணில் பட்டு சோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதனால் போலீஸ் அந்த லாரியைச் சோதனை இடவில்லை. ஜீப்பை நிறுத்தி ஒரு நிமிடத்தில் சோதித்து விட்டு விட்டார்கள். மறுபடியும் முன்பு போலவே அவர்கள் பயணம் தொடர்ந்தது.

சில நிமிடங்களில் தூரத்தில் ஒரு உணவகம் தெரிந்தது. அங்கே சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லாரிக்காரன் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்து அங்கே நிறுத்தத் தீர்மானித்தது போல் இருந்தது.

“என்ன செய்வது?என்று ஜீப் ஓட்டி கேட்டான்.

“அவன் நிறுத்தினால் நீயும் நிறுத்து. ஆனால் லாரி நம் பார்வையில் இருந்து விலகி விடக்கூடாதுஎன்று ஒடிசல் இளைஞன் சொன்னான். அங்கு ஏதாவது நடக்கலாம் என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. கவனத்தைச் சிறிதும் சிதற விடக்கூடாது என்று ஜாக்கிரதையானான்.

(தொடரும்)

என்.கணேசன்     

Monday, September 14, 2015

சீடருக்காக உயிர்த்தெழுந்த யோகி!


மகாசக்தி மனிதர்கள் - 36


ரு மேன்மையான குருவுக்கு ஒரு உண்மையான சீடன் கிடைத்தால் இருவருமே பெரும் பாக்கியசாலிகளாகிறார்கள். அது அடிக்கடி நடக்கும் சம்பவம் அல்ல. லட்சங்களில் ஒரு ஜோடி அப்படி அமைந்தால் அதுவே பெரிய விஷயம். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்கு பரமஹம்ச யோகானந்தர் சீடராக வாய்த்தது அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவமே.

ஆன்மிக உணர்வின் சிகரமாக மெய்ஞான நிலையை அடைய எத்தனையோ ஜென்மங்கள் ஒருவர் எடுத்து அதற்கான வழிகளில் பயணித்து அதன் பலனாகப் பெறும் பேரானந்த அனுபவம் அது. வார்த்தைகளுக்கு எட்டாத அந்த பேரானந்த அனுபவத்தை ஒரு மேன்மையான குரு தகுதியுள்ள உண்மையான சீடனுக்கு ஒரு கணமாவது உணர்த்தி விட்டுப் போவதுண்டு. அப்படி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் தன் பிரிய சீடரான யோகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஒரு முறை ஏற்படுத்தினார்.

யோகானந்தருக்கு தியானம் சரிவர சித்திக்காத ஒரு நாளில் அவரைத் தன்னருகே அழைத்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரது இதயப்பகுதிக்கு மேலே நெஞ்சில் லேசாக  தட்ட யோகானந்தர் தன் உடலிலிருந்து திடீரென வெளிப்பட்டதாக உணர்ந்தார். பிரபஞ்சம் பிரகாசமயமாகி எல்லாரும் எல்லாமும் ஒளிமயமாக இருந்ததை அவர் கண்டார். சாதாரண புறக்கண்ணின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளையும் அகக்கண்ணால் மிகத் துல்லியமாகக் கண்டார். உடலோடு இருந்த போது முக்கியமாகவும், இன்றியமையாதவையாகவும் தோன்றிய எத்தனையோ விஷயங்கள் உடலில் இருந்து விடுபட்டிருந்த அந்த உணர்வு நிலையில் அர்த்தமில்லாதவையாகவும், முக்கியமில்லாதவையாகவும் தோன்றின. ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்க வைத்த அந்த நிலை சிறிது நேரம் நீடித்து மறைந்தது.

இந்த மேல் நிலை அனுபவத்தைத் தன் குருநாதரிடம் இருந்து பெற்ற யோகானந்தர் தன் குருவின் நிழலாக இருந்து மேலும் பலவற்றைக் கற்றுக் கொண்டார். குறிப்பாக தன்னடக்கமும், பணிவும் உயர்ந்தோருக்கல்லாமல் மற்றவர்களுக்கு வராது என்பதைக் குருவிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டார். அதற்கு ஒரு சிறிய நிகழ்வை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருமுறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் தாயார் மகனைப் பார்த்து விட்டுச் செல்ல ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் ஏதோ சொல்ல அதற்கு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏதோ விளக்கம் சொல்ல அந்தத் தாய் “இந்த பிரசங்கத்தை எல்லாம் உன் சீடர்களிடம் வைத்துக் கொள். என்னிடம் வேண்டாம்என்று ஆரம்பித்து நன்றாகப் பொரிந்து தள்ள சின்னப் பையன் போல தாய் திட்டுவதைச் சிறிதும் எதிர்த்துப் பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றதை யோகானந்தர் கண்ணாரக் கண்டார். எத்தனை பெரிய யோகியாக இருந்தாலும் தாயிற்குப் பிள்ளையாக அவர் அமைதியாக இருந்த காட்சியை யோகானந்தர் மிகவும் பெருமையுடன் எழுதியிருக்கிறார்.

பிற்காலத்தில் துறவியாகி கிரியா யோகாவையும், இந்திய ஆன்மிகத்தையும் அமெரிக்காவில் பரப்ப பயணமான யோகானந்தர் தன்னுடைய குருவுடன் என்றும் தொடர்பிலேயே இருந்தார். 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாதில் கும்பமேளா நடக்க இருந்த சமயத்தில் யோகானந்தர் இந்தியா வந்து தன் குருவை செராம்பூர் ஆசிரமத்தில் கண்டார். அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எண்பது வயதைக் கடந்திருந்தார். மிகவும் மெலிந்து பலவீனமாய் இருந்த போதும் ஞானத்திற்கே உரிய அமைதியோடு இருந்த குருவைக் காணும் போது யோகானந்தருக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பிரிய சீடரிடம் தன் அந்திமக் காலம் வந்து விட்டதென்றும், தான் விட்டுச் சென்றிருந்த பணியை யோகானந்தர் சிரத்தையுடன் தொடர வேண்டும் என்பதைத் தெரிவித்தார். இனி செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதை மிகவும் விளக்கமாகவே யோகானந்தரிடம் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். அதைச் செவிமடுத்த யோகானந்தர் அப்படியே செய்வதாக உறுதியளித்தார். யோகானந்தர் கும்பமேளாவிற்குக் கிளம்பினார். அப்போது அவர் தன் குருவை உயிரோடு பார்ப்பது அதுவே கடைசி முறை என்பதை அறிந்திருக்கவில்லை.

யோகானந்தர் கும்ப மேளாவிற்குப் போய் விட்டு செராம்பூர் ஆசிரமத்திற்குத் திரும்பிய போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பூரி ஆசிரமத்திற்குப் போய்விட்டிருந்தார். அவர் உடல்நிலை பூரி ஆசிரமத்தில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தந்தி வந்தது. உடனே பூரிக்கு யோகானந்தர் கிளம்பினார். ரயிலில் அவர் சென்று கொண்டிருக்கையில்  திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் உருவம் யோகானந்தரின் கண்ணெதிரே தோன்றியது. அவரது இருபக்கங்களிலும் ஒளிவெள்ளம் பாய்ந்திருந்தது.

யோகானந்தர் அந்தக் காட்சி தெரிவித்த செய்தியை உணர்ந்து மிகுந்த துக்கத்தோடு கேட்டார். “எல்லாம் முடிந்து விட்டதா?

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் உருவம் தலையசைத்தது. பின் மறைந்தது. உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாய், உயர்வாய் நினைத்த, நேசித்த குருவை இழந்த துக்கம் யோகானந்தரை ஆட்கொண்டது. ஆன்மிகத் தேடலில் சிறுவனாக சுற்றிக் கொண்டிருந்த போது அவரைக் காந்தமாக இழுத்த குரு பிறகு அவருக்குக் கற்றுக் கொடுத்தது தான் எத்தனை, காட்டிய அன்பு தான் எவ்வளவு? அதை எல்லாம் எண்ணிப் பார்த்த போது  துறவியானாலும் அவருக்கு அந்த இழப்பினைத் தாங்குவது சுலபமாக இருக்கவில்லை. பெருந்துக்கத்துடன் பூரி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த யோகானந்தர் தன் குருவுக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளைச் செய்தார். பின்பும் குருவின் நினைவாகவே இருந்தார்.

இப்படி மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த யோகானந்தர் அமெரிக்கா திரும்பும் முன் மும்பை ஓட்டலில் ஆழ்தியான நிலையில் அமர்ந்திருந்த போது அவருக்கு மீண்டும் காட்சி அளித்தார் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி. இதை குரு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியாகவே கருதி அதைப் பற்றி மிக விரிவாக யோகானந்தர் யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இது நடந்தது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இறந்த நாளிலிருந்து சரியாகப் பத்தாவது நாளில்.

அந்த அறையே ஒளிமயமாகி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பழைய உருவத்திலேயே அங்கு பிரத்தியட்சமாக வந்தது யோகானந்தருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறி விட்டது. இது வெறும் காட்சியாக மட்டுமல்லாமல் உண்மையாக தொட முடிந்த உருவமாகவே குருநாதர் இருந்தது தான் யோகானந்தருக்குப் பேராச்சரியமாக இருந்தது. எல்லா சந்தேகங்களையும் குருவிடமே கேட்டு தெளிவு பெற்று வந்த யோகானந்தர், பூரி ஆசிரமத்தில் புதைத்த குருநாதர் மறுபடி அதே உருவம் பெற்று வந்ததெப்படி என்ற சந்தேகத்தை குருவிடமே கேட்டார்.

பிரபஞ்ச அணுக்களில் இருந்து எதையும் பழைய வடிவிலேயே புதிதாக உருவாக்கலாம் என்று தெளிவுபடுத்திய ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பின் நீண்ட நேரம் தன் ஆத்மார்த்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறந்த பின் மனிதன் அடையும் நிலை, அவன் செல்லும் உலகங்கள் பற்றி எல்லாம் யோகானந்தர் ஆர்வமாகக் கேட்க, வாழ்ந்த போது விளக்கம் அளித்த விதமாகவே மாண்ட பிறகும் தன் சீடருக்கு விளக்கம் ஸ்ரீயுதேஷ்வர் கிரி அளித்தார்.

கடைசியில் யோகானந்தர் “உங்கள் மரணத்தை என்னால் தாங்க முடியவில்லைஎன்று துக்கத்துடன் சொன்ன போது “நான் எப்போது இறந்தேன்?என்று சீடரிடம் விளையாட்டாகக் கேட்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உண்மையில் வாழ்க்கையில் காண்பதெல்லாம் நீர்க்குமிழி கனவு நிலைகளே என்றும் அதனால் அவை கலைவது சகஜமே என்றும் ஆத்மாவுக்கு உண்மையில் மரணமில்லை என்றும் சீடருக்கு தெளிவித்து விட்டு மறைந்தார். குரு மரணம் குறித்த யோகானந்தரின் துக்கமும் அந்தக் கணத்திலேயே மறைந்தது.

ஞானாவதாரம் என்று எப்போதுமே தன் குருநாதரை யோகானந்தர் குறிப்பிடுவார். அது போன்ற யோகிகள் குருநாதராகக் கிடைப்பது என்பது மிக அரிது. வாழும் போதும், மாண்ட பின்னும் யோகசக்தியின் பல அமானுஷ்ய நிலைகளை வாய்மொழியால் மட்டுமில்லாமல் சீடருக்கு நிதர்சனமாகவே ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி காட்டிச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தை!.

இனி அடுத்த யோகியைப் பார்ப்போமா?

(தொடரும்)

நன்றி – தினத்தந்தி – 24.4.2015

Thursday, September 10, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 62


சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் தொடர்ந்து சொன்னார். “அவன் எனக்குப் போன் செய்த போது மணி இரவு ஒன்பது. எங்கே அவனைப் பார்த்தாய் என்று நான் கேட்டதற்கு அவன் வீட்டருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் பார்த்ததாகப் பரபரப்புடன் பதில் சொன்னான். அது பற்றிய முழு விவரங்கள் சொல்லும்படி நான் சொன்னதற்கு மறுநாள் காலை நேரில் வந்து சொல்வதாகச் சொன்னான். அது மட்டுமல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு போய் ஆளையும் காண்பித்துத் தருவதாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவன் வரவில்லை. அவன் இறந்து விட்டதாகச் செய்தி மட்டும் தான் எனக்கு வந்தது

லீ க்யாங் நெற்றி சுருங்கக் கேட்டான். “எப்படி இறந்தான்?

“விபத்து. அதிகாலை நடைப்பயிற்சிக்குப் போனவனை ஏதோ வாகனம் இடித்து விட்டுப் போயிருக்கிறது. விபத்தைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பிணத்தைப் பார்த்து விட்டு யாரோ போன் செய்திருக்கிறார்கள். அன்று இடிந்து போன என் நண்பர் இன்று வரை மீளவில்லை. ஒரு நடைப்பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்....சொல்லும் போது அவர் குரலில் வருத்தம் இருந்தது.

லீ க்யாங் கேட்டான். “விசாரணையில் துப்பு எதுவும் கிடைக்கவில்லையா?

“என்னிடம் இரவு ஒன்பது மணிக்கு அவன் பரபரப்போடு போன் செய்ததால் அவன் மாலைக்கு மேல் தான் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணி முந்தைய நாள் மாலையில் இருந்து அவனுடன் இருந்தவர்கள் எல்லாம் யார் என்று ஆரம்பித்து மறுநாள் காலையில் அவனை பார்த்த ஆட்கள் யார் என்பது வரைக்கும் ஆழமாகவே விசாரித்துப் பார்த்து விட்டேன். பயன் இருக்கவில்லை.... சாயங்காலம் ஆறு மணி வரை அவனுடன் அவன் நண்பன் ஒருவன் இருந்திருக்கிறான். அதற்குப் பின் அவன் வீடு திரும்பி இருக்கிறான். அப்படி வீட்டுக்கு வரும் போது அவன் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும்.... ஆனால் அவன் அதற்குப் பின் போனில் பேசிய ஒரே ஆள் நான் தான். அவன் வீட்டில் அன்று யாரும் இருக்கவில்லை. அவர்கள் எல்லாம் ஒரு சுற்றுலாவுக்குப் போயிருந்ததால் வீட்டில் இவன் தனியாகவே இருந்திருக்கிறான். வீட்டில் ஆட்கள் இருந்திருந்தால் அவர்களிடம் இவன் கூடுதலாக ஏதாவது சொல்லி இருக்கலாம். எந்த அடுக்கு மாடி என்று சொல்லி இருந்திருக்கலாம். அவன் வீட்டைச் சுற்றி சுமார் இருபது அடுக்குமாடிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் யாராவது புதிதாகக் குடி வந்திருக்கிறார்களா என்று கூட விசாரித்துப் பார்த்து விட்டேன்.... சந்தேகப்படுகிற மாதிரி ஒருவர் கூடக் கிடைக்கவில்லை. அவன் வீட்டில் அவன் அறையிலும் போய் ஏதாவது தடயம் சிக்குகிறதா என்று தேடிப்பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை...  தீர்க்க முடியாத வழக்குகளில் அதுவும் ஒன்றாகி விட்டது.  அன்று உளவுத்துறையின் தலைவனாக நான் இருந்தும் கூட என் நண்பனின் மகன் கொலையாளியை என்னால் கண்டு பிடிக்க முடியாதது இன்று வரை எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது.....கடைசி வாக்கியத்தைச் சொல்கையில் அவர் குரல் கரகரத்தது. 

லீ க்யாங் சொன்னான். “அவனிடம் அந்தக் கிழவர் சொன்னது போல அவர்கள் உயிரை எடுப்பதில் மிக வேகமாக இருந்திருக்கிறார்கள்....

அவர் ஆமென்று தலையசைத்தார். லீ க்யாங் சொன்னான். “ஆனால் எனக்கு அந்தக் கிழவர் அவர்கள் கண்கட்டு வித்தை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போல் சொன்னதில் உடன்பாடில்லை....

அவர் அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார். அவன் சொன்னான். “அந்தக் குகை வாசலில் ஒரு பாறையை உருட்டி வைத்து மறைத்திருந்தாலோ, அடர்த்தியான செடி கொடிகளை வைத்து மறைத்திருந்தாலோ யாரும் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்....

அவன் அனுமானம் புத்திசாலித்தனமாகவே அவருக்குப் பட்டாலும் அவர் சொன்னார். “நான் முன்பே சொன்னது போல அவன் மலைகளுக்கும் காடுகளுக்கும் நன்றாகப் பழக்கமானவன். புத்திசாலியும் கூட. அதனால் அது போன்ற சின்னத் தந்திரங்களால் அவன் ஏமாந்து போயிருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி இரவில் ஏமாந்து போயிருந்தாலும் அவன் மறுநாள் பகலில் போகையில் கண்டுபிடித்திருப்பான்.....

அவர் சொல்வதை மறுக்க முடியா விட்டாலும் கூட லீ க்யாங்குக்கு இது போன்ற கண்கட்டு வித்தைகளை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இது போன்ற சம்பவங்களை எப்படித் தான் நம்புவது?

அவர் அவன் ஆரம்பித்த விஷயத்திற்கு வந்தார். “நீ ஆரம்பத்தில் சொன்ன  சம்பவமும், நான் சொன்னதைப் போல தடயம் எதுவும் கிடைக்காத ஒன்றாக இருந்தால் அதற்குப் பின்னால் அந்தக் குழு இருக்கிறது என்று தாராளமாக நீ முடிவெடுத்துக் கொள்ளலாம்.

அவன் என்ன முடிவெடுத்தான் என்பதை அவன் முகபாவனை மூலம் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மகா அழுத்தக்காரன் என்று மனதில் எண்ணிக் கொண்டார். அவன் அமைதியாக யோசிக்கையில் அவர் மனதிலும் பல யூகங்கள் வந்து போயின. திடீரென்று அவர் மனதில் ஒரு சந்தேகம் உதித்து அது விஸ்வரூபம் எடுத்தது.

அந்தக் குகைக் கோயிலில் அவர்கள் பேசிக் கொண்டதை யோசித்துப் பார்க்கையில் அவர்கள் சொன்ன மாராவின் அவதாரம் முன்பே பிறந்து பல வித்தைகள் கற்று புத்தரின் அவதாரமான மைத்ரேயனை வீழ்த்துவதற்காக காத்திருக்கிறது என்றால் பிற்காலத்தில் மைத்ரேயன் பிறப்பும் நிச்சயமாகவே இருக்க வேண்டும்..... அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயன் பிறப்பு பற்றி எழுந்த பேச்சுகள் நிஜமாகவே இருக்க வேண்டும். அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்த சில குழந்தைகள் மைத்ரேயனாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது உண்மையல்ல. இப்போது மைத்ரேயன் உயிரோடு இருப்பதால் அந்த ரகசியக்குழுவின் இயக்கம் லீ க்யாங் கவனம் வரை வந்திருக்கிறதோ?

அவர் மெல்ல அவனிடம் கேட்டார். “அப்படியானால் மைத்ரேயன் பிறப்பு பற்றி பத்மசாம்பவா சொன்னதாக அன்று எழுந்த பேச்சு கற்பனை அல்ல. சரி தானே

லீ க்யாங் ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யாமல் வெற்றுப் பார்வை பார்த்தான். அவன் மறுக்காததே ஆமோதிப்பது போலத்தான் என்று நிச்சயித்த  அவர் தொடர்ந்தார். “மைத்ரேயன் இருப்பது உண்மை தான். இல்லையா?

லீ க்யாங் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டான். “இப்போது மைத்ரேயன் என்று ஒருவனை ஆசான், தலாய் லாமா போன்றவர்கள் சொல்கிறார்கள் என்று பேச்சு ரகசியமாய் அடிபடுகிறது. அவன் நிஜமானவனா, நம்மைத் திசை திருப்ப அப்படி வதந்திகளைக் கிளப்புகிறார்களா என்பது தெரியாது...

அவர் ஆசான் பெயரைக் கேட்டவுடனே ஒரு புன்னகை பூத்தார். “அந்தக் கிழவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?

அவனும் புன்னகை செய்து விட்டு ஆமாம் என்று தலையசைத்தான். ஆசான் பற்றிப் பேசும் போது யாருக்குமே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முடிவதில்லை என்று எண்ணிய போது அவன் புன்னகை விரிந்தது. கிட்டத்தட்ட குறும்புக்காரச் செல்லப் பிள்ளையைப் பற்றி பெரியவர்கள் பேசும் போது ஏற்படும் உணர்வுக்கு இணையான உணர்வை ஆசான் ஏற்படுத்தி விடுகிறார்....

“ஆசான் இப்போது எங்கே இருக்கிறார் லீ க்யாங்?

“யாருக்குத் தெரியும். அடிக்கடி காணாமல் போய் விடுவார்.....

“நீ... நீ பார்த்திருக்கிறாயா அந்த மைத்ரேயனை?

“இது வரை இல்லை...

அவன் இப்போது எங்கிருக்கிறான்?

“தெரியவில்லை.... எங்கேயோ மறைந்திருக்கிறான். ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனைக் கண்டுபிடிப்பேன்.... லீ க்யாங்கின் குரலில் அசாதாரண உறுதி இருந்தது.

அவர் பார்வை ஜன்னல் வெளியே தெரிந்த இருட்டில் சிறிது நேரம் தங்கியது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர் பின் லீ க்யாங் பக்கம் திரும்பினார். “லீ க்யாங், எனக்கு ஒரு உதவி செய்வாயா?

சொல்லுங்கள் சார். என்னால் முடிந்ததாய் இருந்தால் செய்கிறேன்

“என்றாவது ஒரு நாள் நீ மைத்ரேயனைக் கண்டுபிடித்தால் எனக்கு அவனைக் காண்பிப்பாயா? எனக்கு அவனை ஒரு முறை பார்க்க வேண்டும்.

அந்த மைத்ரேயன் பற்றி நிறைய எதிர்பார்க்காதீர்கள். நேரில் பார்க்கையில் நிச்சயம் ஏமாந்து போவீர்கள் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட லீ க்யாங் அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். “காண்பிக்கிறேன். ஆனால் அந்த மைத்ரேயன் நீங்கள் நினைப்பது போல புத்தரின் அவதாரம் தானா என்றெல்லாம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

அது பரவாயில்லை. ஆசானும், தலாய் லாமாவும் மைத்ரேயன் என்று சொல்கிறவனைக் காண்பித்தால் போதும்....

லீ க்யாங் அவரிடம் மறைக்காமல் தன் வெறுப்பைத் தெரிவித்தான். “ஆசானும், தலாய் லாமாவும் என் எதிரிகள். அவர்கள் பூஜிக்கிற மைத்ரேயனையும் நான் அந்தப் பட்டியலிலேயே தான் சேர்ப்பேன். அதனால் நீங்கள் அவனைப் பார்க்கும் போது அவன் என் கைதியாகத் தான் இருப்பான் சார். அதுவும் பரவாயில்லையா?

அவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்த அவருக்கு அவன் சொன்னது திகைப்பையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. அவர் அமைதி மாறாமல் “பரவாயில்லைஎன்று சொல்லி விட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.

அவன் விளையாட்டாகக் கேட்டான். “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன். அவனையும் பார்க்க உங்களுக்கு ஆர்வமாய் இருக்கிறதா?...

“சுத்தமாக இல்லை

“ஏன்?

சாகும் வரை நான் நிம்மதியாக இருந்து விட விரும்புகிறேன் லீ க்யாங். அதனால் சைத்தானின் பார்வையில் படுவதில் எனக்கு விருப்பமில்லை. சரி நீ கிளம்புகிறாயாகேட்டு விட்டு  அவர் எழுந்து நின்றார்.

அவன் சிரித்துக் கொண்டே கேட்டான். “சைத்தான் என்றால் பயமா? ஏன் சார்?

அவர் சொன்னார். “கடவுளிடமும், அவதார புருஷர்களிடமும் நாம் எப்படியும் இருக்கலாம். ஆனால் சைத்தானிடமும், அவன் வாரிசுகளிடமும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன்


டிசல் இளைஞன் உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டான். எதிரில் செல்லும் லாரி போய்க் கொண்டே இருந்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் லாரியின் பின் கதவு இடுக்கு வழியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரமை அடிக்கடி அவனுக்கு  ஏற்பட்டது. மைத்ரேயனின் பாதுகாவலன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பே லேசாய் கிலியை ஏற்படுத்தியது. அவன் என்னேரமும் லாரியின் பின் கதவைத் திறந்து ஜீப்புக்குள் குதித்து அவர்கள் கழுத்தையும் திருகி விடுவானோ என்று தோன்ற ஆரம்பித்தது. அவன் விஷ ஊசியைக் குத்திக் கொன்ற அவர்கள் இயக்க ஆளின் பரிதாப முகமும் நினைவுக்கு வர அவன் தன்னை அறியாமல் நெளிந்தான்.

அதை ஜீப் டிரைவர் கவனித்தான். அவனுக்கும் தொடர்ந்து வண்டி ஓட்டி சலிப்பேற்பட்டு விட்டது. அவன் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “அவர்களைப் பிடிக்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?

“என்ன?

பேசாமல் எதிரில் போகும் லாரியின் டயரைத் துப்பாக்கியால் சுட்டு ஓட்டையாக்கி லாரியை நிறுத்தி விட்டால் என்ன?  

(தொடரும்)

என்.கணேசன்