சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 29, 2011

ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5

ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!

ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு.

இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று கூறுவதுண்டு. அதே போல உடல் வலிமையிலும், போரிடும் திறமையிலும் கூட இராமனையே வியக்க வைத்தவன். வேதங்களாகட்டும், கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் கரைத்துக் குடித்தவன். கடைசியில் காமம் என்ற பலவீனத்தால் அவன் அழிந்து போனான். அவனுக்கு இருந்த அத்தனை பெருமைகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க சிறிய துளை போதும். அது போல சில சமயங்களில் ஒரு மனிதனை அழிக்க அவனது ஒரு பலவீனம் போதும். எத்தனையோ திறமையாளர்கள், நாம் வியந்து போகிற அளவு விஷய ஞானம் உள்ளவர்கள் ஒரு பலவீனத்தால் ஒன்றுமில்லாமல் அழிந்து போவதை நாம் நம்மைச் சுற்றிலும் பார்க்கலாம்.

ரு இசைக் கலைஞர் நல்ல குரல் வளமும், கர்னாடக இசை ஞானமும் உள்ளவர். வயலின், கீ போர்டு ஆகிய இசைக்கருவிகளிலும் மிக அருமையாக வாசிக்கக் கூடியவர். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு இணையான மாணவனை தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று அவருடைய குருவால் பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட அவர் தன் குடிப்பழக்கம் அத்துமீறிப் போனதால் இன்று வறுமையால் வாடுகிறார். பலர் கச்சேரிகளுக்கு ஆரம்பத்தில் அழைத்துப் பார்த்தனர். முன்பணம் வாங்கிக் கொண்டு அதில் குடித்து கச்சேரி நாளில் எங்காவது விழுந்து கிடப்பாராம். பின் எல்லோரும் அவரைக் கூப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார்கள். இன்று தெரிந்தவர்களிடம் ஐம்பது நூறு என்று வாங்கிக் குடித்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பெண் முடிகிற வரை தாக்குப் பிடித்து விட்டு ஒரே குழந்தையை எடுத்துக் கொண்டு அவரை விட்டுப் போய் விட்டாள். ஒரு மாபெரும் இசைக்கலைஞராக உலகிற்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய ஒரு நபர், புகழோடு பணத்தையும் சேர்த்துக் குவித்து வெற்றியாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இன்று அடையாளமில்லாமல், ஆதரவில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறார். காரணம் ஒரே ஒரு மிகப்பெரிய பலவீனம் கட்டுப்பாடில்லாத குடிப்பழக்கம்.

அதே நபருடன் சேர்ந்து வயலின் மட்டும் கற்றுத் தேர்ந்த ஒரு கலைஞர் இன்று கச்சேரிகளுக்கும் போகிறார், வீட்டில் குழந்தைகளுக்கும் வயலின் டியூஷன் சொல்லித் தருகிறார். நல்ல வருமானத்துடன் கௌரவமாக தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு நபர் மிக நல்லவர். நன்றாகப் படித்தவர். நல்ல புத்திசாலி. அரசாங்க வங்கியில் வேலையில் இருந்தார். சொந்தமாய் வீடு, வாகனம் எல்லாம் இருந்தது. ஒரு சமயம் இரண்டு கம்பெனிகளின் ஷேர்கள் வாங்கி விற்று பெரிய லாபம் சம்பாதித்தார். அந்த லாபம் அவரை ஒரேயடியாக மாற்றி விட்டது. இப்படி ஒரே நாளில் சம்பாதிக்க முடியும் போது மாதாமாதம் உழைத்து சம்பாதிக்கும் இந்த வருமானம் அவருக்குத் துச்சமாகத் தோன்ற ஆரம்பித்தது. வங்கியில் எல்லாக் கடன்களும் வாங்கி ஷேர்களில் போட்டு நஷ்டமடைந்தார். எல்லா வங்கிகளிலும் க்ரெடிட் கார்டுகள் வாங்கி அதில் பணம் எடுத்து ஷேர்களில் போட்டார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிவுரையைக் கேளாமல் அடுத்ததாக தன் பைக்கை விற்று அதில் போட்டார். பிறகு வீட்டையும் விற்று வந்த பணத்தை அதில் போட்டார். எல்லாப் பணத்தையும் இழந்தார். கடைசியில் உடல்நலம் காரணம் சொல்லி வங்கிப்பணியையும் ராஜினாமா செய்தார். வந்த ப்ராவிடண்ட் ஃபண்டு, கிராடியுட்டி எல்லாவற்றையும் கூட அதில் போட்டார். எல்லாம் போய் விட்டது. கடன்காரர்கள் தொல்லை தாளாமல் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடிப்போனார். இன்று தூர ஏதோ ஒரு ஊரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒரு சிறிய வேலையில் இருக்கிறார். மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்பான அரசாங்க உத்தியோகம், நல்ல சம்பளம், வீடு வாசல், வாகனம் என்றிருந்த ஒருவரை ஒரு பலவீனம் எப்படி அழித்து விட்டது பாருங்கள்.

அதே நேரத்தில் இன்னொரு நபரைப் பற்றியும் பார்ப்போம். அவர் எனக்கு உறவினரும் கூட. படிப்பு கிடையாது. பரம சாது. சூட்சுமமான விஷயங்கள் அவர் தலையில் ஏறாது. சமையல்காரர்களுக்கு எடுபிடியாகப் போவார். மாவாட்டுவார், காய்கறி நறுக்குவார், சப்ளை செய்வார். பல வருடங்கள் இதையே செய்து வந்த அவர் தனியாக சமைக்கவெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மனிதர் தன் சம்பாத்தியம் அப்படியே வீட்டுக்குக் கொண்டு போய் மனைவியிடம் கொடுத்து விடுவார். அந்த சம்பாத்தியத்தில் ஒரே மகளை டீச்சருக்குப் படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்து, தங்களுக்காக ஒரு சிறிய வீட்டையும் கட்டிக் கொண்டு ஓரளவு சேமிப்பையும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறுபது வயதைத் தாண்டியும் இன்னும் அந்த வேலைக்குப் போய் கொண்டிருக்கிறார். எந்தத் திறமையும் இல்லா விட்டாலும் உழைத்து சம்பாதித்து கௌரவமாக அவர் வாழ்கிறார்.

எத்தனையோ திறமையாளர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும் ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து அழிந்து போகிற போது பிரத்தியேக திறமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை அழிக்கக் கூடிய பலவீனங்கள் இல்லாதவர்கள் உழைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மனிதனுக்கு பலம், பலவீனம் இரண்டும் இருப்பது இயல்பே. பலவீனமே இல்லாதவனாய் இருந்து விடுதல் சுலபமும் அல்ல. ஆனால் அந்த பலவீனம் அவன் வாழ்க்கையையே அழித்து விடும் அளவு வளர்ந்து விடக்கூடாது. அவனுடைய எல்லா நன்மையையும் அழித்து விடக் கூடடிய தீமையாக மாறி விட அவன் அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்தில் அந்த பலவீனம் பெரிய விஷயமல்ல என்றும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அதில் ஏமாந்து விடக்கூடாது. மூன்றடி மண் கேட்ட வாமனன் கடைசியில் மூவுலகும் போதவில்லை என்றது போல ஒரு சாதாரணமாகத் தோன்றும் தீய பழக்கமோ, பலவீனமோ விஸ்வரூபம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

நன்றி: வல்லமை

Wednesday, August 24, 2011

எங்கிருந்தோ ஒரு ஏலியன்


எங்கிருந்தோ ஒரு ஏலியன்


ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.

டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் கேஸ் போல தான் தெரியுது..... ஆரம்பத்துல நுரையீரலைத் தாக்குகிற இந்த வியாதி பெரும்பாலும் பெண்களுக்குத் தான் வருதுங்கறாங்க. கிட்டத்தட்ட கேன்சர் செல்கள் மாதிரி இந்த வியாதி செல்களும் செயல்படுது.....பெரிய அளவுல உற்பத்தி ஆயிட்டே போய் மத்த செல்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனைக் கிடைக்க விடாமத் தடுத்துடுது.... முதல்ல நுரையீரலைத் தாக்கற இந்த நோய் போகப் போக மற்ற உடல் பாகங்களையும் தாக்க ஆரம்பிக்குது..... இது ரொம்பவே முத்துனதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சதால எதுவும் செய்யறதுக்கில்லை.....சாரி...."

ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்து விட்டு டாக்டர் சூசகமாக நாளை காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு போவது நல்லது என்று சொன்னார். அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் மனதில் சூனியமே மிஞ்சியது. தலையை ஆட்டி விட்டு மௌனமாக வெளியே வந்தான். ஐ சி யூவிற்கு வெளியே இருந்த நாற்காலியில் ஒரு ஜடமாய் சிறிது நேரம் உட்கார்ந்தான்.

சென்ற மாதம் வரை அவன் வாழ்க்கை மிக ஆனந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. இளம் விஞ்ஞானியான அவனுக்கு அழகான மனைவி, படு புத்திசாலியான ஆறு வயது மகள், கை நிறைய பணம் என்று எல்லா வகைகளிலும் நிறைவாகவே வாழ்க்கை இருந்தது. ஆனால் திடீரென்று வைஷ்ணவி மூச்சுத் திணறலால் அவதிப்பட ஆரம்பித்த போது ஆஸ்துமாவாக இருக்கலாம் என்று தான் அவன் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டான். ஆனால் எந்த மருந்திலும் முன்னேற்றம் இல்லாமல் போகவே இந்த புகழ்பெற்ற ஆஸ்பத்திரியில் முழுமையாக பரிசோதனை செய்ய அழைத்து வந்தான். எல்லாப் பரிசோதனையும் முடிந்து தான் வாயில் நுழையாத பெயருடைய அந்த அபூர்வ வியாதி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்....

போன் செய்து தன் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும் தெரிவிப்பதற்கு முன்னால் அவனுக்கு யாருமில்லாத இடத்திற்குப் போய் தனியாக வாய் விட்டு அழத் தோன்றியது. கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி பத்தரை. எழுந்து வெளியே வந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். மனம் மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு கனக்க ஆரம்பித்தது. அரை மணி நேரம் நடந்து ஒரு விளையாட்டு மைதானத்தை எட்டிய பின் அங்கு ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. வாய் விட்டு அழ ஆரம்பித்தான்....

சில துக்கங்கள் அழுதும் குறைவதில்லை. பாட்டி வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கும் மகளை எண்ணுகையில் துக்கம் மேலும் கூடியது. 'நான் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லையே. கடவுளே, ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?'

துக்கம் குறையா விட்டாலும் அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் வைரங்களாய் வானத்தில் சிதறிக் கிடந்தன. மையிருட்டு வேளைகளில் மொட்டை மாடியில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே அவனும் வைஷ்ணவியும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இரவு நேர ஆகாயம் மிக ரம்யமானது. கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆகாயம் எத்தனையோ அழகு ஜாலம் காட்டுவதுண்டு. எப்போதாவது அபூர்வமாய் ஒளிக்கற்றைகளும் தோன்றி மறைவதுண்டு. அதில் சிலதை UFO ஆக இருக்கலாம், அதில் ஏலியன்ஸ் பயணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கற்பனை வளமுடைய வைஷ்ணவி சொல்வதுண்டு. எந்த நேரத்தில் அப்படி பார்த்தோம் என்று அவள் அப்போதே கடிகாரத்தைப் பார்த்து பிறகு தவறாமல் டைரியில் குறித்துக் கொள்வாள். அவன் வாய் விட்டுச் சிரிப்பான். விஞ்ஞானியான அவன் ஆதாரபூர்வமாக இல்லாத எதையும் நம்புவதில்லை. பேசிப் பேசி அப்படியே அங்கேயே அவர்கள் உறங்கிப் போவதும் உண்டு.... இனி என்றும் அவன் தனியனே.

அடுத்த தவணையாக கண்ணீர் கண்களில் நிரம்புவதற்குள் ஆகாயத்தில் அபூர்வமான ஒரு ஒளிக் கற்றையை ஸ்ரீவத்ஸன் பார்த்தான். அது எப்போதையும் விடப் பிரகாசமாகவும் பெரியதாகவும் இருந்தது. வைஷ்ணவிஅவனுடன் இருந்திருந்தால் இதில் கண்டிப்பாக ஏலியன்ஸ் இருப்பதாக அடித்துச் சொல்லியிருப்பாள். அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. வைஷ்ணவியின் பழக்கம் அவனிடமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்தான். அந்த ஒளிக்கற்றை அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வர அவனையும் அறியாமல் ஸ்ரீவத்ஸன் தாவிக்குதித்தான்.

ஒளிக்கற்றை மறைந்து ஒரு மனிதன் அங்கே நின்றான். "சாரி நான் பயமுறுத்த நினைக்கவில்லை" என்று சொல்லி அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

தோற்றத்தில் அவன் இளமையாகவும், உயரமாகவும் இருந்தான். மற்றபடி உருவத்தில் சாமானியனாகத் தெரிந்தான். ஸ்ரீவத்ஸன் முதலில் பார்த்தது அவன் கால்களைத் தான். கால்கள் நிலத்தில் பட்டன. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போது வந்தவன் வாய் விட்டுச் சிரித்தான்.

"ஒரு விஞ்ஞானி பேய் இருக்கிறதாய் நம்பலாமா?"

ஒரு கணம் மறுக்க நினைத்த ஸ்ரீவத்ஸன் பின் மறுக்க முடியாமல் தானும் சிரித்தான். "லாஜிக், பகுத்தறிவு எல்லாம் வேலை செய்யறதுக்கு முன்னால் பயம் வேலை செய்துடுது".

தான் ஒரு விஞ்ஞானி என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வி பிறகு தான் ஸ்ரீவத்ஸனைத் தாக்கியது. 'உண்மையில் இவன் யார்? அந்த ஒளியிலிருந்து தான் வந்தானா, இல்லை இதெல்லாம் என் பிரமையா? பேய் அல்ல என்றால் ஏலியனா? மனிதனுடைய தோற்றம் இருப்பதால் ஏலியனாக இருக்க முடியாதே. அதுவும் நம்முடைய மொழியை இவ்வளவு நன்றாகப் பேசுகிறானே'.

"நீங்க யாரு?"

"நான் பக்கத்துல இருந்து தான் வர்றேன்" என்று அவன் ஆகாயத்தைக் கை காட்டினான்.

வந்தவன் ஏதோ மேஜிக் கலைஞன் என்று ஸ்ரீவத்ஸன் முடிவு செய்தான். 'கொஞ்சம் சூட்சுமமாக கவனித்திருந்தால் அவன் எப்படி அந்த எ·பக்டைக் கொண்டு வந்தான் என்று கண்டுபிடித்திருக்கலாம்.'

"என்ன ஆகாயத்தைக் காண்பிக்கிறீங்க. விட்டா ஏலியன்னு சொல்லிக்குவீங்க போல இருக்கே"

அவன் புன்னகையோடு சொன்னான். "உம்... உங்க பாஷையில அப்படியும் சொல்லிக்கலாம்"

"ஆனால் மனுஷ ரூபத்தில் அல்லவா எழுந்தருளியிருக்கீங்க?"

"ஏலியன்ஸ்ன்னு நீங்க சினிமாக்களில் காண்பிக்கற மாதிரி வரணுமாக்கும். அதென்ன கற்பனையில் கூட கண், வாய் இதெல்லாம் இல்லாத ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடியாதா? மனிதன், விலங்கு ரெண்டையும் கூட்டி சில மாற்றங்கள் செய்து ஒரு உருவத்தைக் காண்பிக்கற அளவு தான் உங்க கற்பனை விரியுமா?" அவன் கிண்டலடித்தான்.

"நாங்க ஏலியன்ஸை மனுஷ ரூபத்திலிருந்து கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காண்பிக்க முயற்சி செய்திருக்கோம். அவ்வளவு தான். ஆனால் ஏலியன்னு சொல்லிக்கிற நீங்க அச்சா எங்க மாதிரியே இருக்கீங்களே அது எப்படின்னு கேட்டேன்"

"வேற ரூபத்தில் வந்திருந்தா நீங்க என்னைப் பார்த்தவுடன் ஓடியிருப்பீங்க"

"நல்லா பேசறீங்க. உங்க சுய உருவம் என்னவோ?"

"நிலையான உருவம் இல்லை. உண்மையில் நாங்கள் சக்தி. தேவைப்படும் போது வடிவுகள் எடுப்போம். மீதி நேரங்களில் சக்தியாகவே வடிவமில்லாமல் இருப்போம். அணுவைப் பிளந்து பார்த்த உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச பல சங்கதிகள் எங்களுக்கும் பொருந்தும்"

அணுவைப் பிளந்து பார்த்த போது பெரும்பாலும் வெட்டவெளியாக இருந்ததையும், அதனுள் இருந்த துகள்கள் சில சமயங்களில் அலைகளாக மாறிக் காணாமல் போவதையும், ஆனால் அணுவில் இருந்து பலவிதமான சக்தி வெளிப்பாடுகள் எப்போதும் இருந்ததையும் இன்றைய விஞ்ஞானம் சொல்வதைப் படித்து விட்டு வந்து இவன் தன்னைக் குழப்புகிறான் என்று ஸ்ரீவத்ஸன் நினைத்தான்.

"பூமிக்கு எதுக்கு வந்தீங்க?"

"பூமியில் சில ஆராய்ச்சிகள் செய்ய வந்திருக்கேன். ஜோடியா நீங்க ரெண்டு பேரும் ஆகாயத்தைப் பார்த்துட்டு பேசறதைப் பல தடவை கவனிச்சிருக்கேன். இப்ப தனியா அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்தப்ப பேசிகிட்டு போகலாம்னு தோணிச்சு."

ஸ்ரீவத்ஸனுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'ஜோடியாக ஆகாயத்தைப் பார்த்து பேசறது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது. சிலரால் மனசுல நினைக்கிறதைப் படிக்க முடியும். இவனும் அப்படி ஏதோ வித்தை தெரிந்தவன் போல தெரியுது. அதனால தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததைப் படிச்சுட்டு சொல்றான்'

"அதுசரி எப்படி எங்க மொழியில் பேசறீங்க?"

"நான் எங்கே உங்க மொழியில் பேசறேன். நாம உண்மையில் நம்ம எண்ணங்களை வார்த்தைகள் இல்லாமல் பரிமாறிகிட்டிருக்கிறோம். Direct Thought Transference. அவ்வளவு தான்"

ஸ்ரீவத்ஸனுக்குக் கோபம் வந்தது. "தமாஷ் செய்யறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. சில மேஜிக் கத்துகிட்டு வந்துட்டு, சில குழப்பல் வார்த்தைகளைச் சொல்லிகிட்டு என் கிட்ட விளையாடாதீங்க. ப்ளீஸ். நான் ரசிக்கிற மூட்ல இல்லை. என் மனைவி மரணத்தை நெருங்கிகிட்டுருக்கா. தனியா வாய் விட்டு அழ இங்கே வந்திருக்கேன்....... அது சரி இத்தனை பேச்சு பேசறீங்களே உங்களுக்கு Lymphangioleiomyomatosis ன்னா என்னன்னு தெரியுமா?"

"பேர் வைக்கிறதுல தான் மனுஷங்க கெட்டிக்காரங்களாச்சே. என்ன அது வியாதி தானே"

அவன் யூகித்து தான் சொல்கிறான் என்பதில் ஸ்ரீவத்ஸனுக்கு சந்தேகமேயில்லை. "ஆமாம். என் மனைவிக்கு வந்திருக்கிற அபூர்வமான வியாதியின் பெயர். குணப்படுத்த முடியலை. காலம் கடந்து போயிடுச்சுன்னு டாக்டர் சொல்றார்"

"காலம்னு ஒண்ணு இருக்கிறதை உங்க ஐன்ஸ்டீனே சந்தேகப்பட்டு எழுதினார் தெரியுமா?"

மறுபடி அவன் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறான் என்று தோன்ற சலிப்புடன் ஸ்ரீவத்ஸன் அவனைப் பார்த்தான்.

"அப்படிப் பார்க்க வேண்டாம். சிம்பிளா சொல்றேன். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் கனவு காண்கிற நேரம் ஒருசில நிமிஷங்கள் தான்னு உங்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா?. ஆனா அந்த ஒருசில நிமிஷங்கள்ல எத்தனையோ நாள் நடக்கிற மாதிரி நிகழ்ச்சிகளைக் கனவு காண முடியுது. கனவு கலைஞ்சா தானே அது கனவுன்னு தெரியுது. ஒரு வேளை கனவே கலையலைன்னா அத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சதாத் தானே நினைக்கத் தோணும். ஆனா உங்க ஆராய்ச்சிப்படி அது ஒருசில நிமிஷங்கள் தான். கனவு கண்டுகிட்டு இருக்கிறவனோட நாள் கணக்கு சரியா, ஆராய்கிறவன் நிமிஷக் கணக்கு சரியா?"

ஸ்ரீவத்ஸனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன லாஜிக்கில் தவறில்லை என்று தோன்றியது. "சரி அதை விடுங்க. அந்த வியாதிக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலையாம். சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இன்னும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்கலாம். உங்களுக்கு ஏதாவது மருந்து தெரியுமா?"

"ரொம்ப சிம்பிள். அந்த பிரச்சினைக்குரிய செல்களை அழிச்சிடணும். அவ்வளவு தான்"

"அது தான் எப்படி? உங்களால முடியுமா?"

"ஏன் முடியாம, என்னோட ஒரிஜினல் சக்தி அலைகளாய் மாறி உங்க மனைவி உடலுக்குள்ளே நுழைஞ்சு அதை சுலபமா செஞ்சுடலாம்"

இதுவரை விளையாட்டாகவே பேசிக் கொண்டு வந்த ஸ்ரீவத்ஸனுக்கு உண்மையில் இதை நம்ப முடியவில்லை என்றாலும் மனைவியைக் குணப்படுத்த முடியும் என்கிற கற்பனையே இனித்தது.

"சார், ஏதோ தமாஷாய் பேசிகிட்டு தேவையில்லாம என் மனசுல நம்பிக்கையை வரவழைச்சுடாதீங்க. நான் இப்ப தான் அழுது முடிஞ்சு யதார்த்த உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்துகிட்டிருக்கேன். நம்பி ஏமாந்து இன்னொரு தடவை உடைஞ்சு போக எனக்குத் திராணியில்லை"

"நான் தமாஷ் செய்யலை. இந்த சிகிச்சையில் நாங்க எப்பவோ முன்னேறி விட்டிருக்கிறோம். உங்க முன்னோர்களில் யோகிகள் கூட இந்த வித்தையைத் தெரிஞ்சு வச்சுகிட்டிருந்தாங்க. உங்க முனிவர்கள் அப்படி குணப்படுத்தினாங்க, ஜீசஸ் குணப்படுத்தினாருன்னு எல்லாம் படிக்கிறீங்களே அது எல்லாமே கற்பனைன்னு சொல்லிட முடியாது"

"சார் அப்படி மட்டும் நடந்துட்டா உலகத்துல என்னை விட அதிகமா யாராலும் சந்தோஷப்பட முடியாது. ஏன்னா... நான் அவளை அந்த அளவுக்கு நேசிக்கிறேன்". அவன் கண்கள் சொல்லச் சொல்ல நிறைந்தன. "ஆனா அதை வாய் விட்டு அவள் கிட்ட இது வரை நான் சொன்னது கூட இல்லை. இனிமே சொல்ல முடியுமான்னும் தெரியலை...." அதற்கு மேல் அவனுக்குப் பேச முடியவில்லை. அவன் உடைந்து போனான்.

"தாராளமா சொல்லலாம். சேர்ந்து ஆகாயத்தைப் பார்த்துட்டே பேசலாம். அப்படிப் பார்க்கிறப்ப கிடைக்கிற ஏதாவது நகர்கிற ஒளியில் நான் கூட இருக்கலாம்...குட்பை"

அடுத்த கணம் அவன் அங்கு இருக்கவில்லை. ஸ்ரீவத்ஸனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. அந்த ஒளிக்கற்றையைப் பார்க்கும் போதும் இதே நேரம் தானே இருந்தது. கடிகாரம் நின்று விட்டதா என்று பார்த்தான். இல்லை, ஓடிக் கொண்டு தான் இருந்தது. இத்தனை நேரம் பேசியதற்கு நேரமே ஆகவில்லையா? எல்லாம் பிரமையா? நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து விட்டோமா? அவன் Thought Transference பற்றி சொன்னதும் கனவைப் பற்றிச் சொல்லி காலத்தை சந்தேகித்ததும் நினைவுக்கு வர ஸ்ரீவத்ஸனுக்கு தலை சுற்றியது.

மீண்டும் யதார்த்த உலகிற்கு வந்தவன் எழுந்து ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் மனம் அந்தக் கற்பனை மனிதனுடன் நடந்த கற்பனைப் பேச்சுக்களையே சுற்றி வந்தன. ஐந்து நிமிடத்தில் அவன் செல் போன் அடித்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தான் அழைத்தார்கள். "சார் எங்கே இருக்கீங்க. சீக்கிரம் வாங்க".

எல்லாம் முடிந்து விட்டது போலிருக்கிறது. கடைசியில் அவளிடம் சொல்லாமல் விட்டது எத்தனையோ இருக்கிறது. அழுது கொண்டே ஓடி ஆஸ்பத்திரியை அடைந்தான்.

ஆஸ்பத்திரியில் ஐசியூவில் இருந்து டாக்டர் அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் பரபரப்புடன் சொன்னார். "என்னாலே நம்பவே முடியவில்லை. மெடிக்கல் ஹிஸ்ட்ரியில் இதை மிரகில்னு தான் சொல்லணும். உங்க மனைவி உடம்பில் அந்த நோயோட அறிகுறிகள் மாயமா மறைஞ்சு போயிடுச்சு....எழுந்து உட்கார்ந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. நான் தான் கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்ல வச்சுருக்கச் சொல்லி இருக்கேன்.... எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

நர்ஸ் ஒருத்தி டாக்டரிடம் ஓடி வந்தாள். "டாக்டர் சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இருந்து உங்களுக்கு போன்"

"பேஷண்டுக்கு நாம கடைசியா குடுத்த மருந்து லிஸ்ட்டை அவங்க கேட்டுருக்காங்க. அதுல ஏதோ ஒரு காம்பினேஷன் மிரகுலஸா வேலை செய்திருக்குன்னு அவங்க நம்பறாங்க......" டாக்டர் சொல்லிக் கொண்டே வேகமாக தனதறைக்குப் போனார்.

ஸ்ரீவத்ஸனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவல்ல நிஜம் தான். கண்களில் அருவியாய் நீர் வடிய வெளியே ஓடினான். ஆகாயத்தைப் பார்த்து அழுது கொண்டே"தேங்க்ஸ்" சொன்னவனை ஆஸ்பத்திரி வாட்ச்மேன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

-என்.கணேசன்

நன்றி: வல்லமை

Friday, August 19, 2011

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 9

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

அந்தப் பக்கிரி டெஹ்ரா பே.

ருமேனியா, இத்தாலி போன்ற நாடுகளின் அரசர்களும், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் பல முறை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துப் பேசிய பெருமையுடைவர் அந்தப் பக்கிரி. பலருடைய விமரிசனக்களுக்கு ஆளான போதும் தன் அபூர்வ சக்திகளின் வெளிப்பாடுகளை ஆராய விரும்பியவர்களைத் தட்டிக் கழிக்காதவர் அவர். இந்தியாவில் பல யோகிகளின் சக்திகளையும் ஆப்பிரிக்காவில் சில மனிதர்களின் சக்தியையும் நேரடியாகக் கண்டிருந்த பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே செய்து காட்டியதாகக் கேள்விப்பட்ட தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. முறையாக யோக சக்திகளைப் பயின்றவர்களுக்கு முடியாதது தான் என்ன?

பால் ப்ரண்டன் நேரில் சென்று பார்த்த அந்த பக்கிரி வித்தியாசமானாராகத் தெரிந்தார். தாடியுடன் இருந்த அவர் சராசரிக்கும் குறைவான உயரமானவராகவே இருந்தார். சில சமயம் அரபுகளின் பாரம்பரியமான உடை மற்றும் தலைக் கவசம் அணியும் அந்தப் பக்கிரி சில சமயம் ஐரோப்பியர்களின் உடை மற்றும் தொப்பியுடன் காணப்பட்டார். விடாமல் சிகரெட் பிடிப்பவராகவும் இருந்தார். ஒரு மனிதரை முழுமையாக அறிய அவர் வாழ்க்கையை ஆராய்ந்தால் போதும் என்று நினைத்த பால் ப்ரண்டன் கூர்மையான பார்வை, அமைதியான தன்மை கொண்டிருந்த அந்தப் பக்கிரியிடம் அவரைப் பற்றிச் சொல்லும்படி கேட்க அவர் சொன்னார்.

“நான் 1897ல் நைல் நதிக்கரையோரம் இருந்த டேண்டா என்ற சிறிய நகரத்தில் பிறந்தேன். என்னைப் பிரசவித்த உடனேயே என் தாய் இறந்து விட்டாள். என் தந்தையும் சக்தி வாய்ந்த பக்கிரிகளிடம் தொடர்பு கொண்டிருந்ததால் இளமையிலேயே நான் இந்த அற்புத சக்திகளுக்கு இணக்கமான சூழ்நிலையிலேயே வளர்ந்தேன். என் தந்தையும் சில பக்கிரிகளும் தான் என் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான் தேவையான பயிற்சிகளையும், ஞானத்தையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். அப்போது உள்நாட்டு அமைதியில்லாத சூழ்நிலை காரணமாக நான், என் தந்தை, ஒரு ஆசிரியர் மூவருமாக துருக்கிக்கு சென்று கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தில் வசித்தோம்.

“அங்கு நான் நவீன கல்வி கற்றேன். மருத்துவம் படித்து டாக்டரானேன். அந்தக் கல்வி எனக்கு மிக உபயோகமாக இருந்தது. என்னுடைய அபூர்வ சக்திகளை நானே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ள எனக்கு மருத்துவக் கல்வி பெரும் உதவியாக இருந்தது. நான் கிரீசில் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து என் சுய ஆராய்ச்சிகளை அங்கே தொடர்ந்தேன்

“மிகக் குறுகிய காலத்தில் அங்கு நான் செய்து காட்ட முடிந்த அற்புதம் நான் பெற்ற சக்திக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது. 28 நாட்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்க தீர்மானித்த போது அங்குள்ள பாதிரியார்கள் கடுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திடம் சொல்லி தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுவது போல் நான் செய்து காட்ட நினைப்பது என்று எண்ணினார்கள் போல இருந்தது. ஆனால் அரசாங்கம் டாக்டரான எனக்கு செய்யப் போவதன் அபாயத் தன்மையை விளக்க வேண்டியதில்லை என்று சொல்லி என்னைத் தடுத்து நிறுத்த முற்படவில்லை. நான் டாக்டராக இருந்தது அங்கு மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் நான் இது போன்ற நிகழ்வுகளைச் செய்து காட்ட உதவியது. நான் 28 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்து பின் வெற்றிகரமாக வெளியே வந்தேன்.

நான் பல்கேரியா, செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று சில நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினேன். இத்தாலியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் அவர்கள் பரிசோதனை செய்யவும் சம்மதித்து ஒரு நிகழ்ச்சியை செய்து காட்டினேன். காரீயத்தால் ஆன சவப்பட்டியில் படுத்துக் கொண்டு என் உடல் எல்லாம் மண்ணால் மூடி, அந்த சவப்பெட்டியை ஆணிகளால் அடித்து மூடி ஒரு நீச்சல் குளத்தின் அடியில் அந்த சவப்பெட்டியை இறக்கினார்கள். ஆனால் அரை மணி நேரத்தில் போலீசார் வந்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்து என்ன வெளியே எடுத்து விட்டார்கள். ஆனால் அரை மணி நேரம் நான் அந்த சவப்பெட்டியில் பாதிக்கப்படாமல் இருந்தேன்

“பின் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அதே நிகழ்ச்சியைத் தொடரத் தீர்மானித்தேன். அங்குள்ள போலீசாரிடம் முன்பே நான் டாக்டர் என்ற ஆதாரத்தைக் காண்பித்து அனுமதி பெற்றேன். அவர்கள் அனுமதி தந்ததோடு நான் பொது மக்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் இருந்த என் சவப்பெட்டியை 24 மணி நேரமும் வெளியே இருந்து காவல் காத்தார்கள். 24 மணி நேரம் கழித்து அவர்கள் சவப்பெட்டியைத் திறந்த போது நான் உயிருடன் வெளியே வந்தேன் என்ற டெஹ்ரா பே அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பால் ப்ரண்டனிடம் காட்டினார்.

டெஹ்ரா பே தொடர்ந்தார். “நீங்கள் இந்தியாவிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாக உங்கள் நூலில் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஏமாற்று வேலை நடைபெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். சில போலி யோகிகளும் பக்கிரிகளும் மண்ணில் புதைக்கப்படும் போது மூச்சு விட உதவுகிற ரகசிய சுரங்கப் பாதைகளை உருவாக்கி ஏமாற்றுகிறார்கள் என்ற விமரிசனம் பல இடங்களில் வருவதை நான் கேள்விப்பட்டுள்ளேன். பிரான்சில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் அப்படி எந்த ரகசியப் பாதையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்பதாலும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்திருந்தனர் என்பதாலும் பல விமரிசகர்களும், சந்தேகத்தோடு ஆரம்பத்தில் என்னைப் பார்த்தவர்களும் என்னை முழுமையாக நம்பியதோடு பாராட்டவும் செய்தார்கள்

"இந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வெளி வந்த ஸ்பெயின் நாட்டின் அரசி எனக்கு அவர்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தார். நான் இதையெல்லாம் பெருமைக்குச் சொல்லவில்லை உண்மையான சித்தர்களும், யோகிகளும், பக்கிரிகளும் இது போன்ற வெளிப்பகட்டுகளில் ஆர்வம் கொள்வதில்லை. விருப்பு வெறுப்பில்லாமல் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது தான் அவர்கள் குறிக்கோள். ஐரோப்பிய சொகுசு வாழ்க்கையில் நான் வாழ்ந்தாலும் உள்ளூர இந்த உண்மையை நான் உணர்ந்தே இருந்தேன். மேலும் பல பக்கிரிகள் மற்றவர்களின் பரிசோதனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள். தங்கள் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். அவர்கள் மேலை நாடுகளின் கல்வியையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் இந்த நிலையில் இருந்து மாறுபட நினைத்தே இந்த மேற்படிப்புகளைப் படித்து, இந்த அதீத சக்திகளையும் வெளிப்படுத்தி பலர் என்னைப் பரிசோதனை செய்ய சம்மதித்தேன். நான் செய்து காட்டியதெல்லாம் இயற்கையின் விதிக்கு உட்பட்டவையே. அதில் எனக்கு ஆழ்ந்த ஞானம் இருந்ததால் எனக்குப் பயமும் சந்தேகமும் இருக்கவில்லை. முக்கியமாக பல டாக்டர்கள் நான் செய்து காட்டிய நிகழ்ச்சிகளில் பின் அதிக ஆர்வம் காட்டினார்கள்

அந்தப் பக்கிரி சொன்னதை எல்லாம் பால் ப்ரண்டன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதீத சக்திகளை இந்தியாவில் பார்த்தும் கேள்விப்பட்டும் இருந்த பால் ப்ரண்டனுக்கு இது போன்ற அதீத சக்திகள் எல்லாம் நடக்க முடியாத அதிசயங்கள் அல்ல என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மேலை நாடுகளின் படிப்புடன் சித்தர்களின் சக்தியையும் பெற்றிருந்த ஒரு மனிதரை பால் ப்ரண்டன் சந்திப்பது அது தான் முதல் முறை. அது தான் அவருக்கு பெரும் சுவாரசியத்தை அந்த மனிதர் மேல் ஏற்படுத்தி இருந்தது.

பால் ப்ரண்டன் டெஹ்ரா பேயிடம் கேட்டார். “நானும் இந்த சக்திகளில் ஆர்வம் காட்டும் அறிஞர்களையும் டாக்டர்களையும் அழைத்து வருகிறேன். எங்கள் முன் நீங்கள் உங்கள் சக்திகளை வெளிப்படுத்திக் காட்டுவீர்களா?

ஆர்வத்துடன் கேட்ட பால் ப்ரண்டனிடம் டெஹ்ரா பே சம்மதித்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்

Monday, August 15, 2011

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – 4


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 4

சரியாகப் படியுங்கள்!

கற்க கசடறஎன்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும்.

குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு இதற்கு மேல் முடியாது, எனக்குப் படிப்பே வராது என்று குழந்தை இருந்து விடுவதில்லை. எழுதும் கலையில் தேர்ச்சி பெறும் வரை குழந்தை அப்படித்தான் எழுதும். ஆனால் தொடர்ந்து முயன்று பயிற்சி செய்தால் விரைவில் எழுதக் கற்றுக் கொண்டு விடும். அதன் பிறகு பென்சிலை சரியாகப் பிடிப்பதும் ஒழுங்காக எழுதுவதும் அதற்கு இயல்பான ஒன்றாகி விடும். இனி பென்சிலையும் பேனாவையும் தவறாகப் பிடிப்பதும் எழுத்துக்களைத் தவறாக எழுதுவதும் தான் அந்தக் குழந்தைக்குக் கஷ்டமான காரியம். இதைப் போலத்தான் வாழ்க்கைப் பாடங்களையும் சரியாகப் படிப்பதற்கு ஆரம்ப காலங்களில் புதிய முயற்சிகளும், அதிகப் பயிற்சிகளும் தேவை.

அப்படிச் செய்யாமல் தவறாகவே ஒன்றைப் படித்துக் கொண்டு அதையே சரியென்று நம்பி இருந்து விட்டால் அந்தத் தவறான பாடங்களால் தவறாக எதையும் படிப்பது தான் இயல்பாகி விடும். ஒரு காகிதத்தை நாலாக மடியுங்கள். பின் அந்த காகிதத்தை நாம் அப்படி மடிப்பது தான் சுலபமாக இருக்கும். பல முறை மடித்த பின் அந்தக் காகிதமே அப்படி மடிப்பதற்கு ஏதுவாகத் தான் தானாக மடங்கி நிற்கும். அது போலத் தான் நாம் நம் அனுபவங்களை எடுத்துக் கொள்ளும் விதமும். தவறாகவே எடுத்துக் கொண்டு பழகி விட்டால் பின் தவறாக நம்புவதே இயல்பாகி விடும். அந்த தவறான அஸ்திவாரத்தின் மேல் நாம் எழுப்பும் எல்லாமே தவறுகளாகவே மாறி விடும். நம் வாழ்க்கையையும் அடுத்தவர் வாழ்க்கையையும் நாம் நரகமாக்கி விட முடியும். இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு இந்தத் தவறான பாடம் கற்றலே காரணமாக இருக்கிறது என்பது உண்மை.

எதையும் சரியாகப் படிப்பது கஷ்டமான காரியம் இல்லை. உள்ளதை உள்ளபடி பார்த்து, உணர்ந்து முடிவுகளை எட்டுவது முக்கியம். அப்படிப் படிப்பது தான் சரியாகப் படிக்கும் முறை. முதலிலேயே ஒரு அபிப்பிராயத்தை மனதினுள்ளே வைத்துக் கொண்டு பார்த்தால் அதற்குத் தகுந்தது போலத் தான் நாம் படிக்கும் பாடங்கள் இருக்கும். அது தவறாகப் படிக்கும் முறையாகும்.

பெரும்பாலும் இந்தத் தவறான முறையில் தான் மனிதனைப் படிக்கிறோம், சூழ்நிலைகளைப் படிக்கிறோம், மதங்களைப் படிக்கிறோம், ஏன் நம்மையே அப்படித்தான் படிக்கிறோம். அதன் விளைவுகளை நம்மைச் சுற்றியும் பார்த்து குமுறுகிறோம். ஏன் இப்படியெல்லாம் ஆகின்றன? ஏன் இப்படியெல்லாம் இருக்கின்றனர்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் மனிதர்களால் சரியாகப் படித்து புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.

பரிட்சையில் சரியாக மார்க் வாங்க முடியவில்லை என்றால் சரியாகப் படிக்கவில்லை, அந்தப் பரிட்சைக்குத் தேவையான தயார்நிலையில் இருந்திருக்கவில்லை என்று உணர்பவன் அடுத்த பரிட்சைக்கு சரியாகப் படித்துக் கொள்ள முடியும், தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கேள்வித்தாள் கடினமானது, ஆசிரியர் சரியில்லை, படிக்கும் சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் எடுத்துக் கொண்டால் அந்த மாணவன் தன் பாடத்தைத் தவறாகப் படித்தவனாகிறான். ஒவ்வொரு முறை பரிட்சைக்கும் படித்துத் தயாராவதை விட காரணங்களுடன் தயாராக இருக்கக் கற்றுக் கொள்வான்.

இன்றைய மதக்கலவரங்களுக்குக் காரணம் மனிதர்கள் தங்கள் மதத்தைச் சரியாகப் படிக்காதது தான். எதைக் கடவுள் வாக்காக எடுத்துக் கொள்ளலாம், எதை சைத்தான் வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சிந்தனா சக்தி கூட இல்லாதது தான்.

ஒரு பையனுக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லை. அவன் புத்தகத்தை எடுத்து படிக்கப் போகிறான், அல்லது விளையாடப் போகிறான். அவன் தந்தை சொல்கிறார் பேசாமல் போய் தூங்கு. அந்தப் பையன் குணமான பின்னும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைஎன்று சதா தூங்கிக் கொண்டே இருந்தால் அவனை நல்ல பிள்ளை என்று பாராட்டுவோமா? எதை எதனால் சொல்கிறார் என்றறியாமல் கண்மூடித்தனமாக ஒரு அறிவுரையைப் பின்பற்றுவது முட்டாள்தனம் அல்லவா? அதே போல ஒரு காலகட்டத்தில் ஒரு சூழ்நிலையை மனதில் கொண்டு சொல்லப்படும் அறிவுரை எல்லா கால கட்டங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. இது போலவே ஒரு மதநூலில் ஒரு வாசகத்தை வைத்து கடவுள் சொல்படி நடக்கிறோம் என்று சொல்வதும் கேலிக் கூத்தே. தங்கள் மதத்தினை சரியாகப் படிக்கவில்லை என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் அதற்கு எத்தனை விலை தர வேண்டி இருக்கிறது, எத்தனை அழிவைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய 90 சதவீதப் பிரச்னைகளுக்கு மனிதர்கள் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்க தவறுவதே காரணம். மேலோட்டமாகப் படித்து அதில் முழுமையாக அறிந்து கொண்ட நினைப்புடன் இருந்து விடுவதே காரணம். அந்த ஆரம்பத் தவறு அடுத்த தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது. பின் ஏற்படுவதெல்லாம் அனர்த்தம் தான். எனவே எதையும் சரியாகப் படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். முன் படித்தவை தவறாக இருந்திருக்கின்றன என்பதை உணரும் பட்சத்தில் உடனடியாகத் திருத்தி சரி செய்து கொள்ளுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதில் கௌரவம் பறி போய் விடும் என்று தவறாக எண்ணாதீர்கள்.

சரியாகப் படிப்பதே சரியாக வழிகாட்டும். சிறப்பாக வழிநடத்தும்.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

- நன்றி: வல்லமை

Wednesday, August 10, 2011

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 8

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...

ஹிப்னாடிசம் செய்யப்பட்ட மார்கரைட்டின் சக்திகள் அத்துடன் முடிந்து விடவில்லை. பால் ப்ரண்டனுடன் வந்திருந்த பெண்மணியிடம் மார்கரைட்டின் கையைப் பிடித்துக் கொள்ள எட்வர்டு அடெஸ் சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

எட்வர்டு அடெஸ் சொன்னார். “யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்

அந்தப் பெண்மணி தன் கணவரின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மார்கரைட் அந்தப் பெண்மணியின் கணவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய உருவம், குணங்கள், திறமைகள் பற்றியெல்லாம் விவரித்தார். அந்த மனிதர் ஒரு அரசாங்க அதிகாரி என்பதையும் சொன்னார். (அந்தப் பெண்மணியைக் கூட்டி வந்த போது அவர் என் நண்பர் என்று சொன்னாரே ஒழிய வேறு விவரங்கள் சொல்லி இருக்கவில்லை).

(ஆனால் மார்கரைட் இன்னொரு சந்தர்ப்பத்தில் பால் ப்ரண்டனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்ட போது அவை முற்றிலும் தவறாக இருந்ததாக பால் ப்ரண்டன் கூறுகிறார். ஆனால் பால் ப்ரண்டனுடைய எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள் பற்றி எல்லாம் கூற முற்பட்ட போது அவை மிகச் சரியாகவே இருந்தன. இது போன்ற ஹிப்னாடிச நிலைக்குக் கூட எதிர்காலம் புரியாத புதிராகவே இருக்கிறது என்று பால் ப்ரண்டன் நினைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஹிப்னாடிசம் மூலம் மனதில் உள்ளதையும், ஆழ்மனதிற்குத் தெளிவாகத் தெரிந்ததையும் சொல்லலாமே ஒழிய ஆழ்மனமே அறியாத இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் இந்த நிலைக்கு சாத்தியமல்ல. உதாரணத்திற்கு தன் கணவர் குணாதிசயங்கள் அந்தப் பெண்மணிக்கு நன்றாகத் தெரிந்து இருந்ததால் அந்தப் பெண்மணியின் கணவரின் முழு விவரங்களை மார்கரைட்டால் சொல்ல முடிந்தது. அதே போல் பால் ப்ரண்டனின் இலட்சியம் மற்றும் எண்ணங்கள் அவர் அறிந்திருந்ததால் அதையும் அவர் மனம் மூலம் மார்கரைட் அறிய முடிந்தது. பால் ப்ரண்டனின் எதிர்காலம் பால் ப்ரண்டனே அறியாத ஒரு இரகசியமாக இருந்ததால் மார்கரைட்டிற்கு அவர் மனம் மூலம் அதை அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் ஏதோ முயற்சி செய்து அது பொய்யாய் போயிருக்கிறது. எதிர்காலத்தை அறிய ஹிப்னாடிசத்தை விட உயரிய யோக நிலைக்குப் போனால் ஒழிய அது சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்)

அடுத்ததாக ஹிப்னாடிசத்தின் மூன்றாம் நிலைக்குத் தன் மனைவியை எட்வர்டு அரெஸ் அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து மார்கரைட்டின் கையில் குத்தினார். ஊசி அரையங்குலம் உள்ளே சென்றாலும் மார்கரைட் வலியை உணரவில்லை. மாறாக எட்வர்டு கேஸ் ஒரு கோமாளி எதிரே நின்று கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மார்க்கரைட் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்த ஊசியை வெளியே எடுத்த போது குத்திய இடத்தில் இருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளி வரவில்லை என்பது தான் ஆச்சரியம். குத்திய இடத்தில் அடையாளமாக ஒரு கரும்புள்ளி மட்டுமே தெரிந்தது.

பின்னர் எட்வர்டு அடெஸிடம் பேசும் போது இந்த அற்புதமான சக்திகளைப் பற்றி பால் ப்ரண்டன் கேட்டார். ஒரு காலத்தில் ஒரு கல்லூரியில் மனோதத்துவ விரிவுரையாளராக இருந்த எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “உண்மையை சொல்லப் போனால் இந்த சக்திகளைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏன் ஆகிறது, எதனால் ஆகிறது, எப்படி ஆகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த சக்தி புதைந்து கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில பயிற்சிகள் மூலம், சில முறைகள் மூலம் அந்த சக்திகளை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்பது மட்டும் உண்மை

இதை உணர்ந்த போது நான் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல ஆரம்பத்தில் என் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்த நிறைய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த முடிந்தது முறையான, தொடர்ந்த பயிற்சியால் தான். ஹிப்னாடிசத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்களை மட்டுமே அதில் ஆழ்த்த முடியும். மேலும் ஹிப்னாடிசம் செய்பவர்களுக்கும் தங்கள் சக்தி மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஒழிய மற்றவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது..

பால் ப்ரண்டன் கேட்டார். “கண்களைக் கட்டிய பின்பும் அவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்ததும், உங்கள் செயல்களைக் காண முடிந்ததும் எப்படி?

எட்வர்டு அடெஸ் சொன்னார். “நம் ஐம்புலன்களும் வேலை செய்வது அந்தந்த உறுப்புகளால் தான் என்று நாம் எண்ணினாலும் நம்முடைய ஆழ்மனம் அந்த உறுப்புகளின் உதவியில்லாமலேயே அதை செய்ய முடிகிறது என்பதும் உண்மை தான். அதைத் தான் நீங்களே நேரில் பார்த்தீர்களே. ஆனால் நம் மேலோட்டமான மனதிற்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் நம் மேல்மனம் எத்தனையோ தவறான நம்மை மட்டுப்படுத்துகிற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. ஆழ்மனதின் ஆதிக்கத்திற்குச் செல்லும் போது அந்த நம்பிக்கைகள் அறுபட்டுப் போகின்றன.

பால் ப்ரண்டன் கேட்டார். “சிலர் ஹிப்னாடிசம் செய்யும் போது ஏதாவது சொல்லிக் கொண்டே கைகளை அசைத்து ஹிப்னாடிசம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யவில்லையே. அப்படி எல்லாம் செய்யத் தேவையில்லையா?

அது அந்தந்த நபர்களைப் பொறுத்தது. நான் என் உள்ளே உள்ள சக்தியை நம்புகிறேன். பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அவை அவசியமானதல்ல என்று நான் நினைக்கிறேன்

எட்வர்டு அடெஸும், மார்கரைட்டும் சித்தர்கள் அல்ல என்றாலும் மனோவசியம் என்ற ஹிப்னாடிச அறிவியல் முறையில் பால் ப்ரண்டனுக்குச் செய்து காட்டிய பல சித்திகள் வியப்பளிக்க வைக்கின்றன அல்லவா?

அடுத்ததாக பால் ப்ரண்டன் சந்தித்த நபர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பக்கிரி. உடலெல்லாம் ஆணியாலும், கத்தியாலும் பல முறை குத்திக் கொண்டும் பாதிக்கப்படாமல் இருந்தவர். தண்ணீரினுள்ளும், மணலின் உள்ளும் மணிக்கணக்காய் ஒரு நாளுக்கும் மேல் புதைந்து கிடந்து பின் பாதிக்கப்படாமல் மேல் எழுந்தவர். பல சர்ச்சைகளில் பேசப்பட்டவர். ஆனால் அலட்சியமாக ஒதுக்க முடியாத மனிதராக அந்தக் காலத்தில் பலர் கவனத்தையும் கவர்ந்தவர். பால் ப்ரண்டன் அந்த பக்கிரியைக் காண ஆவலுடன் சென்றார்.

அந்த பக்கிரி யார் தெரியுமா?

(தொடரும்)

-என்.கணேசன்

Friday, August 5, 2011

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3

சரியானதைப் படியுங்கள்

மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் பிணத்தையே மனைவி புதைக்க எடுத்து வந்த போதும் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததை விவரிக்கும் நாடகம் அது. கடைசியில் விசுவாமித்திர முனிவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அனைத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுத்ததில் முடியும் அந்த நாடகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவன் மனதில் விதைத்த விதை அந்த சிறுவனை மகாத்மா காந்தியாக பிற்காலத்தில் வளர்த்து விட்டது. அதே நாடகத்தைப் பார்த்து விட்டு இத்தனை கஷ்டங்கள் பட வேண்டிய அவசியம் என்ன, ஒரு பொய் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, எதையும் இழக்க வேண்டியிருந்திக்கவில்லையே என்ற ஒரு சராசரி மனிதனின் மன ஓட்டம் காந்தி மனதில் ஓடியிருக்குமானால் மகாத்மா காந்தியாக அவர் உருவெடுத்து இருக்க முடியாது.

எனவே ஒரு பாடத்தில் இருந்து சரியான படிப்பினை பெறுவது மிக முக்கியம். ஹரிச்சந்திரன் கதையைப் படித்து விட்டு உண்மை சொன்னால் இத்தனை பிரச்னைகள் வரும் என்று படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியத்தை கைவிடலாகாது என்ற படிப்பினையைப் பெறவும் முடியும். சரியான படிப்பினையைப் பெறுகிறோமா தவறான படிப்பினையைப் பெறுகிறோமா என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், உயர்வு தாழ்வுகளும் அமைகின்றன.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பலதரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். ஒரு குடிகாரத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்தக் குடிகாரத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான். ஒரு காலகட்டத்தில் ஒரு மதுக்கடை கேஷியரைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிகாரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான். இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.

குடிகார மகன் சொன்னான். “அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது”. நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். “சிறு வயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்”. ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.

ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை-

Two men looked out from prison bars,

One saw mud, the other saw stars.

(சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்)

இருக்கின்ற இடம் ஒன்றே ஆனாலும் பார்க்கின்ற பார்வைகள் வேறாகின்றன. பார்வைகள் மாறும் போது வாழ்க்கையே மாறுகின்றன. இது மிகப்பெரிய உண்மை.

நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளும், மனிதர்களும் நமக்கு பாடங்களே. நாம் சரியான பாடம் கற்கத் தயாராக இருப்போமானால் நமக்கு நிறைய நல்லதைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள். நாம் மாற்றிப் படித்துக் கொண்டு விடக்கூடாது. அதே போல ஒரே மனிதன் சில விஷயங்களில் இப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தையும், சில விஷயங்களில் இப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் கற்பிக்கக் கூடும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் பலம் பலவீனம் கொண்டவர்கள் தானே. சரியானதை மட்டும் கற்க நாம் கற்றுக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள அனைத்துமே நமக்கு ஆசானாக இருக்க முடியும்.

ஒருவர் சிறந்த கலைஞராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். அதே நபர் தனிப்பட்ட முறையில் நம்பத்தகாத நபராகவும், மோசக்காரராகவும் கூட இருக்கலாம். அந்த நபரை ஒட்டு மொத்தமாகப் பின் பற்ற முடியுமா? அந்தக் கலையையும், விளையாட்டையும் பொறுத்த வரை அவரை முழுமையாக பின்பற்றலாம். மற்ற விஷயங்களில் எப்படி இருக்கக்கூடாது என்ற பாடத்தையே அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இந்த அறிவு இல்லாமையே இன்றைய காலத்தில் பெரிய சாபக்கேடு. ஒரு துறையில் திறமை படைத்தவன் எல்லா விஷயத்திலும் திறமை படைத்தவன் என்று நம்பும் முட்டாள் தனமான “ஹீரோ வர்ஷிப்நம்மிடையே நிறைய இருக்கிறது.

இருக்கும் கட்சித் தலைமையானாலும் சரி, கவர்ந்த கதாநாயகனானாலும் சரி, பிடித்த விளையாட்டு வீரனானாலும் சரி அவர்கள் செய்வதெல்லாம் சரி, அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே நம் வழி என்று இருக்காமல் எது நல்லதோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லதல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாமல் விலக்குவதே சரியான பாடங்களைப் படிக்கும் முறை. அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும் திறமை கொண்டது என்று சொல்வார்கள். அது போல நாமும் எல்லாவற்றில் இருந்து சரியானதை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமானால் நாம் அடைய முடியாத சிகரங்கள் இல்லை.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

- நன்றி: வல்லமை

Monday, August 1, 2011

செயலில் பாவனை மிக முக்கியம்!


கீதை காட்டும் பாதை 10

செயலில் பாவனை மிக முக்கியம்!

ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனிற்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்என்று பொறுமையிழந்து சொல்கிறான்.

வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனிற்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.

“பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.

ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.

எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது

ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.

இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. ‘கள் குடித்த குரங்கிற்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலையை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.

உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.

எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவிற்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.

மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்”.

போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.

இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.

“ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா

பேதையின் பேதையார் இல்.

உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.

பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்

மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.

முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது. டால்ஸ்டாய் கூறுகிறார். “மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!.

எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். “கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை

ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான். “கல்லுடைத்துக் கொண்டிருக்கிறேன்”. இரண்டாமவன் சொன்னான். “வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்”. மூன்றாமவன் சொன்னான். “கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்”. மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?

பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும்.

ஒவ்வொரு கடமையையும் இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்.

பாதை நீளும்.....

- என்.கணேசன்

- நன்றி: விகடன்