சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 28, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 96


ருண் காலை கண்விழித்த போது மைத்ரேயன் தியானத்தில் அமர்ந்திருந்தான். ‘இவனுக்குத் தூக்கமே கிடையாதா?என்று வருண் ஆச்சரியப்பட்டான். ஆனால் முந்தைய நாளின் துக்கமும், வெறுப்பும் போய் அவன் மனம் அமைதியடைந்திருந்தது. அதனால் தான் நீண்ட நாட்களுக்குப் பின் இப்படி நிம்மதியாகத் தூங்க முடிந்ததோ என்று வருண் நினைத்தான். நேற்று இரவு மைத்ரேயன் சொன்னது இப்போதும் வருண் காதில் ரீங்காரம் செய்தது. “உன்னை உன் அக்‌ஷய் அப்பா நிறையவே நேசிக்கிறார். இடையில் யார் வந்தாலும் சரி அந்த பாசம் சிறிதும் குறையாது.....

அந்த வார்த்தைகளுக்காகவே மைத்ரேயன் மீது அவனுக்கு ஒருவித பாசம் பிறந்திருந்தது. இப்போது மைத்ரேயனுடைய தியானத்தில் அந்த அறையே சாந்தமாய் இருப்பது போல் வருண் உணர்ந்தான். மைத்ரேயன் தியானத்தில் இருந்து மீண்டு அவனைப் பார்த்த போது வருண் நட்புடன் புன்னகைத்தான். மைத்ரேயனும் புன்னகைத்தான்.

அன்று முழுவதும் வருணின் நடவடிக்கைகள் வீட்டாரை ஆச்சரியப்படுத்தின.  வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியே எங்கேயும் போகாமல் கௌதமும், மைத்ரேயனும் வீட்டுக்குள்ளேயே கேரம் ஆடிக் கொண்டிருந்தார்கள். நானும் வருகிறேன்என்று சொல்லி வருண் அவர்களுடன் ஆடச் சேர்ந்து கொண்டான். மைத்ரேயனுக்கு அந்த ஆட்டத்தில் சில புதிய ஆடுமுறைகளைச் சொல்லித் தந்தான். சிரித்துப் பேசினான்.

கௌதம் தண்ணீர் குடிக்கும் சாக்கில் சமையலறை வந்து அம்மாவிடம் கேட்டான். “அண்ணன் திடீர்னு திருந்திட்டானா? என்ன ஆச்சரியம்!

சஹானா அவனிடம் சொன்னான். “அவன் இப்படியே இருக்கட்டும். நீ எதாவது சொல்லப் போகாதே. பழையபடி கோபப்பட்டாலும் படுவான்.


கௌதம் புரிந்தவனாய் தலையாட்டி விட்டுப் போய் விளையாட்டைத் தொடர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் கார்ட்டூன் சேனல் பார்க்கையில் தூர உட்கார்ந்திருந்த மைத்ரேயனைத் தூக்கி அக்‌ஷய் பக்கத்தில் உட்கார வைத்து விட்டு வருண் அக்‌ஷயின் காலருகே உட்கார்ந்து கொண்டான். அப்பாவின் காலருகே உட்கார்வதும் சுகமாய் தான் இருக்கிறது  கௌதம் ஓடி வந்து அண்ணனுக்கு முத்தம் கொடுத்தான். அண்ணன் அவன் நண்பனை ஏற்றுக் கொண்டது. அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

கார்ட்டூன் சேனலில் ஒரு ஐஸ்க்ரீம் விளம்பரம் போட்டார்கள். கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான். “உனக்கு என்ன ஐஸ்க்ரீம் பிடிக்கும்?

மைத்ரேயன் சொன்னான். “நான் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதேயில்லை

கௌதம் ஆச்சரியத்தோடு நண்பனைப் பார்க்க, வருண் வெளியே பார்த்தான். மழை நின்றிருந்தது. வருண் எழுந்து மைத்ரேயனிடம் சொன்னான். “வா இப்போதே போய் சாப்பிடலாம்.

மைத்ரேயன் எழுவதற்கு முன் கௌதம் எழுந்து நின்றான். “வாஎன்று அவனும் மைத்ரேயனை அழைத்தான். மைத்ரேயன் மெல்ல எழுந்தான்.

அக்‌ஷய் எச்சரிக்கையுடன் வருணிடம் கேட்டான். “இவர்களை எங்கே கூட்டிக் கொண்டு போகிறாய்?

“பயப்படாதீர்கள். தெருக்கோடியில் இருக்கிற ஐஸ்க்ரீம் பார்லருக்குத் தான். இந்தத் தெருவைத் தாண்ட மாட்டோம்.என்ற வருண் கௌதமையும், மைத்ரேயனையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

வாசலில் நின்று கொண்டு அக்‌ஷயுடன், சஹானாவும், மரகதமும் கூட அவர்களைப் பார்த்தார்கள். இருவர் கைகளையும் பிடித்துக் கொண்டு அந்த ஈரத் தெருவில் வருண் நடந்து போவதைக் கண்டு மரகதம் ஆச்சரியப்பட்டாள். “அந்தப் பையனிடம் நிஜமாகவே எதோ சக்தி இருக்கிறது. நம் வருணை இப்படி மாற்றி விட்டானே

சஹானா சொன்னாள். “சொல்லப் போனால் பல நாள் கழித்து இன்று காலையில் இருந்து தான் வருண் சந்தோஷமாகவே இருக்கிறான்.

அக்‌ஷய் எதுவும் சொல்லவில்லை. அன்று முழுவதும் வீடு சந்தோஷமாக இருந்தது. வருண் மைத்ரேயனுக்கும் கௌதமுக்கும் பட்டங்கள் தயாரித்துக் கொடுத்தான். மொட்டை மாடியில் மூவரும் பட்டம் விட்டார்கள். அவர்கள் போட்ட சத்தம் வீட்டையே அமர்க்களப்படுத்தியது.

இரவு மைத்ரேயன் தனியாகக் கிடைக்கையில் அக்‌ஷய் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “என் பிள்ளைகள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களைப் பிரியும் போது நீ எந்த சலனமும் இல்லாமல் விட்டுப் பிரிந்து விடுவாய். அவர்களால் அப்படி இருக்க முடியாது.....

மைத்ரேயன் அமைதியாகக் கேட்டான். “என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம் என்பதற்காக இன்று வாழ்ந்து விடாமல் இருந்து விடுகிறோமா என்ன?     

அக்‌ஷய் பேச்சிழந்து போய் அவனையே பார்த்தான். இப்போதும் கூட அவன் எந்த சலனமும் இல்லாமல் அவர்களை விட்டுப் பிரிந்து போய் விடுவான் என்பதை மறுக்கவில்லை.....


மாரா இரவு பத்தரை மணி நேரத்தில் சம்யே மடாலயத்திற்குள் நுழைந்தான். அவனுக்காக காத்திருந்து கதவைத் திறந்து விட்ட அவன் ஆட்கள் இருவரும் சத்தமில்லாமல் கதவை மறுபடியும் மூடினார்கள். அவர்கள் கைகளில் இருந்த இரு விளக்குகளின் ஒளி மட்டுமே அந்த நுழைவாயிலின் உட்புறத்தின் இருளை ஓரளவு போக்கியது.  அந்த அரைகுறை ஒளியில் மாரா அழகாக மட்டுமல்லாமல் ஆபத்தானவனாகவும் ஜொலித்தான். அவனிடம் இருந்து சக்தி வாய்ந்த அலைகளை உணர்ந்த அந்த ஆட்கள் அவனை வணங்கி நின்றார்கள். உள்ளே நுழைந்த அவன் தாழ்ந்த குரலில் தன் ஆட்களிடம் கேட்டான். “எல்லாம் தயார் தானே

அவர்கள் பயபக்தியுடன் தலையசைத்தார்கள். மாரா கோங்காங் மண்டபத்தை நோக்கி கம்பீரமாக நடக்க அவனைப் பின் தொடர்ந்த அவர்களில் ஒருவன் மெல்லக் கேட்டான். இன்று உங்கள் வருகையை இந்த மடாலயத்து புத்தபிக்குகள் உணராமல் இருக்க முடியாது போல் இருக்கிறதே. பரவாயில்லையா? 

மாரா புன்னகையுடன் சொன்னான். “இன்று அவர்களின் கடவுளே என்னை அறிந்து கொள்ளப் போகிறான். அதனால் இந்த பிக்குகளுக்குத் தெரிவது தப்பில்லை. யாராவது என்னை சந்திக்க வருவதானாலும் வரட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.....

கோங்காங் மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் கேட்டான். “எங்கே மைத்ரேயனின் காவி உடை?

ம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவிடம் அவரது பிரதான சீடன் ஓடி வந்தான். “புதிதாக ஒருவன் வந்திருக்கிறான்.... கோங்காங் மண்டபம் நுழைந்திருக்கிறான்...... ஆபத்தானவனாய் தெரிகிறான்.....

நேற்று தாரா தேவதை சொன்னது நினைவுக்கு வர தலைமை பிக்கு மெல்ல எழுந்தார். இது வரை மடாலயத்தில் மாறுவேடத்தில் இருந்தவர்கள் ஏதோ ரகசியப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது புதிதாயும் வேறு ஒருவன் வந்திருப்பதும், அவன் ஆபத்தானவனாய் தெரிவதும் அலட்சியப்படுத்தும் விஷயமல்ல.  கோங்காங் மண்டபத்தில் இன்று புதிதாய் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்று நினைத்தவராய் கிளம்பினார். பின்னாலேயே விளக்கோடு வர பிரதான சீடன் முற்பட அவனைப் பார்த்து விளக்கு வேண்டாம் என்று சைகை செய்தார். இந்த மடாலயத்தில் அவரால் இருட்டிலும் நடக்க முடியும். எல்லாம் அவர் பல்லாயிரம் முறை நடந்த தடங்களே! அவர் சத்தமில்லாமல் நடக்க பிரதான சீடனும் அப்படியே அவரைப் பின் தொடர்ந்தான்.

கோங்காங் மண்டபத்தைப் பார்க்க முடிந்த தொலைவில் இருட்டில் நின்று கொண்டு தலைமை பிக்கு பார்த்தார். கருப்பு உடை அணிந்த ஒரு அழகான இளைஞன் மண்டபத்தின் மையத்தில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இருந்தான். அவன் பின்னால் இருவர் கருப்பாடைகள் அணிந்து கொண்டு சற்று தள்ளி இருபுறமும் தலைகவிழ்த்து கண்மூடி நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் புத்தபிக்குகள் வேடத்தில் சம்யே மடாலயத்தில் இருப்பவர்கள் தான்....

திடீரென்று அந்த இளைஞன் கண்களைத் திறந்து இருட்டில் நின்று கொண்டிருந்த அவரை நேராக அமானுஷ்யமாகப் பார்த்தான். அவருக்கு ரத்தம் உறைவது போல் இருந்தது. இருட்டில் இருந்த போதும் அவரைப் பார்க்க முடிந்த அவனது தீட்சண்யமான பார்வை அவரை அவன் பக்கம் இழுப்பது போல் உணர்ந்தார். தன் சகல பலத்தையும் திரட்டிக் கொண்டு தலைமை பிக்கு பின் வாங்கினார். இனி அங்கு நிற்பது ஆபத்து என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த நேரத்தில் தான் அந்த இளைஞனின் மடியில் மைத்ரேயன் உடுத்தி இருந்த காவி உடை இருந்ததை அவர் கவனித்தார். அவர் மனம் பதறியது.

அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவர் தன்னறைக்கு விரைந்தார். “இனி என்ன செய்வது?என்று பிரதான சீடன் அவரைப் பின் தொடர்ந்தபடியே கவலையுடன் கேட்டான். அவருக்கே தெரியாத ஒன்றை அவர் எப்படி சொல்வார்?

சிறிது யோசித்து விட்டு அவர் சேடாங் நகர புத்தமடாலயத்தில் இருக்கும் மூத்தவருக்குப் போன் செய்தார். மூத்தவர் அனுபவஸ்தர். மகா ஞானி. அவர் ஏதாவது வழி சொல்வார்....

“ஹலோ”  மூத்தவர் குரல் கம்பீரமாகக் கேட்டது.

பதற்றத்துடன் தற்போது சம்யே மடாலயத்தில் நடப்பதை தலைமை பிக்கு விவரித்தார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மூத்தவர் சில வினாடிகள் மௌனம் சாதித்து விட்டு “வந்திருப்பவன் மாரா.... என்று தாழ்ந்த குரலில் சொன்னார். குரலில் முன்பு இருந்த கம்பீரம் இப்போது விடை பெற்றிருந்தது.  

தலைமை பிக்கு தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். லேசாக குரல் நடுங்க நேற்றிரவு தாரா தேவதை சொன்னதையும் தெரிவித்து விட்டுக் கேட்டார். “இப்போது நான் என்ன செய்யட்டும்?

பிரார்த்தனையைத் தவிர நாம் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. அதைச் செய்வோம்என்று சொன்னதோடு மூத்தவர் பேச்சை முடித்துக் கொண்டார்.

கவலையுடன் தலைமை பிக்கு திரும்பிய போது சம்யே மடாலயத்து பிக்குகள் பலரும் கவலையுடன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தனர். மாரா தன் வருகையை அவர்களுக்கும் உணர்த்தி இருக்க வேண்டும்....  அவர்களிடம் தலைமை பிக்கு சொன்னார். பிரார்த்திப்போம்

அவர்கள் தலையசைத்தார்கள். பிரார்த்தனையில் அமர்ந்த போது தலைமை பிக்கு உட்பட யாருக்கும் மனம் ஒருமைப்படவில்லை. எல்லோர் மனதிலும் இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதி தான் பிரதானமாக இருந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, April 25, 2016

சிவனை விட்டு விலகாத சிந்தை!


மகாசக்தி மனிதர்கள்-56

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளை நாடி வந்து வணங்கிய அன்பர்கள் அதிசயிக்கத்தக்க பலன்களை அடைந்தார்கள் என்பதைப் பார்த்தோம். அப்படிப் பலனடைந்தவர்களில் சிலர் அவருடைய பரம பக்தர்களாக மாறி அவரை வழிபடவும் ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பார்ப்போம்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுப்பப்பிள்ளைக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் பிறக்கவில்லை. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்ட அவர் தன் மனைவியுடன் சேர்ந்து சுவாமிகளை ஒவ்வொரு வியாழனும் வணங்கி வந்தார். சில மாதங்களில் மனைவி கருத்தரிக்கவே அவருக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சக்திகள் மீது பூரண நம்பிக்கை ஏற்பட்டது. வியாபாரியான அவர் அதன் பின் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சுவாமிகளை மனதார நினைத்து வணங்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

ஒரு சமயம் வியாபார நிமித்தம் நிறைய பணம், பொருளுடன் முத்துப்பேட்டை என்கிற ஊருக்குச் சென்றிருந்தார். ஊரை அடைவதற்கு முன் நன்றாக இருட்டி விட்டது. வழியில் காட்டுப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளையர் அவரை இடைமறித்து அடித்து உதைத்து அவருடைய பணத்தையும் பொருளையும் களவாடப் பார்த்தார்கள். அவர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளை மனதில் நினைத்து தன்னைக் காப்பாற்ற வேண்டிக் கொண்டார்.

அந்த நேரத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவாரூர் மடாலயத்தில் நித்திரையில் இருந்தார். திடீரென்று எழுந்து வெளியே வந்தவர் “அடே வீரா, சுப்பன் திருடன் கையில் அகப்பட்டுக் கொண்டான். சீக்கிரம் போடாஎன்றார். சொல்லி விட்டுத் திரும்பப் போய் படுத்துக் கொண்டார். அங்கே இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.   

அதே நேரம் அந்தக் காட்டுப்பகுதியில் பக்கத்தில் இருந்த பனை மரங்களில் இருந்து கள் இறக்குபவர்கள் போல் தோற்றம் அளித்த பன்னிரண்டு பேர் சுப்பப்பிள்ளையைச் சூழ்ந்து கொண்டிருந்த கொள்ளையர் மீது குதித்து அவர்களை நன்றாக அடித்து விரட்டினார்கள். கொள்ளையர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போனார்கள். சுப்பப்பிள்ளை தன்னைக் காப்பாற்றிய ஆட்களுக்கு மனமார நன்றி தெரிவித்தார். தங்களை தட்சிணாமூர்த்தியின் ஏவலாளர்கள் என்று சொல்லிக் கொண்ட அவர்கள் முத்துப்பேட்டை வரை வந்து அவரைப் பத்திரமாய் சேர்த்து விட்டுப் போனார்கள்.  முத்துப்பேட்டையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்த பிறகு சுப்பப்பிள்ளை தன் அனுபவத்தைச் சொல்ல, அந்த சம்பவ நேரத்தில் நித்திரையில் இருந்து எழுந்து வெளியே வந்து சொன்னதை அங்குள்ளவர்களும் சொல்ல சுப்பப்பிள்ளை பிரமித்துப் போனார். என் உடல், பொருள், ஆவி மூன்றும் இனி சுவாமிகளுக்கே அர்ப்பணம் என்று மனமுருகி தீர்மானித்த அவர் வடக்கு ரத வீதியில் சுவாமிகள் பெயரில் ஒரு மடத்தைக் கட்டி அந்த மடத்தில் சுவாமிகளின் திருவுருவச் சிலையையும் அமைத்து அவரை வழிபட ஆரம்பித்தார். 

திருவாரூரில் வசித்து வந்த அருணாச்சலம் பிள்ளை என்பவரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பரமபக்தர். அவர் பெரிய பெரிய பந்தல்களை அமைத்து சிறப்பாக அலங்காரம் செய்வதில் கைதேர்ந்தவர். அவர் வைகுண்ட ஏகாதசியின் போது ஸ்ரீரங்கம் கோயிலில் பெரிய பந்தலை அமைத்து அலங்கரிக்கச் சென்றிருந்தார். அங்கே மிக உயரமான இடத்தில் சாரத்தில் நின்று கொண்டு அலங்கரித்துக் கொண்டிருந்த போது தவறிக் கீழே விழுந்து விட்டார். விழும் போது அவர் வாய் தானாக “தட்சிணாமூர்த்தியே அபயம்என்று பிரார்த்தித்தது.  

அந்த சமயத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவாரூர் கமலாலயத்தின் மேல்கரையில் அமர்ந்திருந்தார். “தட்சிணாமூர்த்தியை நம்பினால் தட்சிணாமூர்த்தி என்ன செய்வான்?என்று சொன்ன சுவாமிகள் வலது கையால் கனமான ஒரு பொருளைத் தாங்கிக் கீழே வைப்பது போல் சைகை செய்தார். எங்கேயோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறதுஎன்பது மட்டும் அருகில் இருந்தவர்களுக்குப் புரிந்தது.

பனையளவு உயரத்தில் இருந்து தவறி விழுந்த அருணாச்சலம் பிள்ளை தன்னை யாரோ தாங்கிப் பிடித்துக் கொண்டு கீழே வைப்பது போல் உணர்ந்தார். ஆபத்து சமயத்தில் யாரை அழைத்தாரோ அவரின் அருட்செயலே இது என்று உணர்ந்து பிரமித்த அருணாச்சலம் பிள்ளை பின் தன்னை சுவாமிகளின் சேவைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.

ஏனங்குடி புத்தகரம் என்ற சிற்றூரில் சுவாமிநாத செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். தூய்மையான ஆன்மிகவாதியான அவருக்கு விசாலாட்சி என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் திருமண வயதை எட்டும் முன்பே அவளுக்கு மேக ரோகம் என்னும் தோல் வியாதி ஏற்பட்டு கடுமையாக வாட்டியது. தோல் முழுவதும் கருத்து பாறை போல் தடித்துப் போனது.  நாளுக்கு நாள் சொரியும் உணர்வு அதிகரித்து அவள் கைகளாலும் செங்கல்லாலும் தோலை அங்கங்கே சொரிந்து கொண்டே இருந்தாள். சில சமயங்களில் மரம், சுவர் ஆகியவற்றிலும் உடம்பைத் தேய்த்து உடம்பெல்லாம் காயங்கள் ஆகி இரத்தம் அங்கங்கே வடிய ஆரம்பித்து, புண்களில் சீழ் பிடித்து துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. எல்லாவிதமான வைத்தியங்களையும் செய்து பார்த்தும் அந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை. இருக்கும் செல்வம் கரைந்தது தான் மிச்சம்.

மகள் படும் துன்பத்தைக் காண சகிக்காமல் மனம் உடைந்து போன சுவாமிநாத செட்டியார் ஒரு சிவனடியாரை அழைத்து தன் துக்கத்தை வெளிப்படுத்தி இதற்கு ஏதாவது நிவர்த்தி இருக்கிறதா என்று கேட்டார்.

அந்தச் சிவனடியார் இது முன்பிறவியின் பாவத்தின் விளைவு என்றும் பாவத்தின் விளைவை மருந்து கொடுத்து குணமாக்க முடியாது என்றும் சொன்னார். பின் வேறென்ன வழி என்று சுவாமிநாத செட்டியார் கேட்ட போது ஒரு லட்சம் சிவனடியாருக்கு அன்னதானம் தந்தால் அந்த கர்மவினை குறைந்து நோய் குணமடைய வாய்ப்பு உள்ளது என்றார்.

ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யும் வசதி என்னிடம் இல்லையே ஐயாஎன்று வருத்தத்துடன் சுவாமிநாத செட்டியார் சொன்னார்.

அவருடைய நிதி நிலைமையை உணர்ந்த சிவனடியார் யோசித்து விட்டு திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டி வேறொரு வழி சொன்னார். அந்த செய்யுள்கள் இவை தான் -

தண்டறு சிந்தை தபோதனர் தாமகிழ்ந்
துண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

(பொருள்: சிவனிடத்தில் இருந்து நீங்காத சிந்தை உடைய உண்மையான தவயோகிகள் மனமகிழ்ந்து உண்ட உணவு மூன்று உலகத்தில் உள்ளோரும் உண்டது போலத்தான். அது போல அவர்கள் பெற்றுக் கொண்ட பொருள் மூவுலகத்தினரும் பெற்றுக் கொண்டதற்கு இணையானது தான் என்று நந்தியே சொல்லியிருக்கிறார்)
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
(பொருள் : திருத்தமாகிய வேடத்தையுடைய தவயோகி அருந்திய உணவு, உருத்திரன் பிரமன் திருமால் ஆகிய மூவரும் அருந்திய பெருமையுடையது. சித்தம் தெளிந்த பிரம்மஞானி உண்டதன் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று திருமூலன் மொழிந்த உண்மையாகும்.)

நந்தி சொன்னதும், திருமூலன் சொன்னதும் வைத்துப் பார்க்கையில் ஒரு உண்மையான பிரம்ம ஞானிக்கு உணவு படைத்தால் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமல்லாமல் மூவுலகத்தில் உள்ளோருக்கு உணவு படைத்த புண்ணியம், மும்மூர்த்திகளுக்கு உணவளித்த பெருமை உருவாகிறது என்பதால் ஒரு உண்மையான பிரம்ம ஞானியைக் கண்டு உணவளிக்க அந்த சிவனடியார் அறிவுறுத்தினார்.

அப்படிப்பட்ட ஒரு உண்மையான பிரம்மஞானியை நான் எங்கே காண்பேன்?என்று திகைப்புடன் சுவாமிநாத செட்டியார் கேட்டார். உதடுகளுக்கு எட்டிய சிவன் உள்ளத்திற்கும் உண்மையாகவே எட்டுவது இன்றைக்கு மட்டுமல்லாமல் அன்றைக்கும் அரிதாகவே இருந்திருப்பதால் அக்காலத்திலேயே உண்மையான தவயோகிகளைக் காண்பது கஷ்டமாகத் தான் இருந்திருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.   

சிவனடியார் அப்போது திருவாரூரில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருமந்திரத்தில் சொல்லப்பட்ட பிரம்ம ஞானிக்கான எல்லாத் தகுதியும் இருப்பவர் என்று சொன்னார். அன்று முதல் விரதம் இருந்து அடுத்த வியாழக்கிழமை அன்று திருவாரூரில் குளத்தில் குளித்து விட்டு இறைவனைத் தரிசித்து கனிவகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் முன் சுவாமிநாத செட்டியார் நின்றார். 

சித்திரத்தில் வரைந்த தீபம் போல் அசைவில்லாமல் தியான சமாதியில் அமர்ந்திருந்த சுவாமிகளைப் பார்த்தவுடன் சுவாமிநாத செட்டியாருக்கே அவர் பிரம்ம ஞானி என்பது ஆத்மார்த்தமாகப் புரிந்தது. கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்க வாயினால் வாழ்த்தி நெஞ்சால்...என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட பதிகத்தைப் பாடினார்.

கண்விழித்துப் பார்த்த சுவாமிகளிடம் தன் மகள் பற்றிச் சொல்லி அழுத சுவாமிநாத செட்டியார் அவருக்கு உணவு படைத்து மிஞ்சியதைத் தாங்களும், உண்டு அங்கிருந்த சிவனடியார்களுக்கும் தந்து நேர்த்திக்கடன் செய்தார். அன்று முழுவதும் அவரும், மனைவியும், மகளும் சுவாமிகள் அருகிலேயே தங்கினார்கள். இரவு முடிந்து காலை எழுந்த போது அவர் மகளின் உடம்பில் இருந்த கரும் படைகள் எல்லாம் பொடிப் பொடியாய் உதிர்ந்திருந்தன. அவள் குளித்து முடித்து வந்த போது அந்த நோய் இருந்த அறிகுறியே அவள் உடலில் இருக்கவில்லை!

(தொடரும்)
என்.கணேசன்  
நன்றி: தினத்தந்தி 11.9.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

Thursday, April 21, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 95


மைத்ரேயனின் பாதுகாவலுக்காக நின்றிருந்த உளவுத்துறை ஆட்களில் ஒருவனுக்கு மைத்ரேயனின் எதிர்வீட்டு மாடியில் குடியிருக்கும் நபர் மீது சிறிய சந்தேகம் எழுந்தது. இருட்டில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து போகிறான். வீட்டுக்குப் போன பிறகும் கூட வீட்டின் விளக்குகளைப் போட்டுக் கொள்வதில்லை. இருட்டிலேயே இருக்கிறான்.....

அந்த உளவுத்துறை ஆள் அக்கம் பக்கம் விசாரித்தான். அந்த மாடியில் குடியிருக்கும் நபர் சினிமாக் கதாசிரியர் என்று சொன்னார்கள். அவன் மைத்ரேயன் வருவதற்கு சில நாட்கள் முன்பே குடி வந்து விட்டதாகவும் சொன்னார்கள். ’மைத்ரேயன் அங்கு வந்து சேர்வான் என்பது உளவுத்துறை உட்பட யாருமே முன்பே அறிந்திராத செய்தி. அப்படி இருக்கையில் அந்த ஆள் தெரிந்து கொண்டு வந்து இங்கு குடிவந்திருக்க முடியாது. சினிமாவுக்குக் கதை எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழல் தேவைப்படும். இருட்டில் உட்கார்ந்து கொண்டு தன் ‘லேப்டாப்’பில் கதை எழுதுபவராக இருக்கலாம். விளக்கு போட்டால் அக்கம்பக்கத்துக்காரர்கள் போய் சினிமா பற்றி வம்பளந்தோ, வாய்ப்பு கேட்டோ தொந்தரவு செய்வார்கள் என்று கூட அந்தக் கதாசிரியர் நினைத்திருக்கலாம்.....’ என்றெல்லாம் சிந்தித்த அந்த உளவுத்துறை ஆள் சந்தேகம் நீங்கினான்.


சேகரை அவன் நண்பன் அலைபேசியில் அழைத்துப் பேசினான். ”அதிர்ஷ்டம் மறுபடி உன் கதவைத் தட்டியிருக்கிறது சேகர்....”

“என்ன விஷயம். முதலில் அதைச் சொல்லு”

”அந்த திபெத் பையனைக் கடத்தவோ அல்லது கொல்லவோ அவர்கள் திட்டம் போட்டிருக்கிற மாதிரி தெரிகிறது. அந்த வேலையை யாரோ ஒரு மர்மநபரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவனுக்கு என்ன உதவி தேவையோ அதைச் செய்து தர நம்மிடம் சொல்லி இருந்தார்கள். அவனுக்கு உன் ஒருவனைத் தவிர வேறு யார் உதவியும் வேண்டாமாம். உன்னை மட்டும் ரகசியமாய் சந்தித்துப் பேச அந்த ஆள் விருப்பம் தெரிவித்திருக்கிறான். உன் சேவைக்கு சரியான சன்மானம் தருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.....”

சேகருக்குப் பெருமையாக இருந்தது. நண்பன் சொன்னது போல் அதிர்ஷ்டம் அடுத்த தவணையைத் தரக் கதவைத் தட்டி இருக்கிறது. நண்பனைக் கேட்டான். “அந்த மர்ம நபரை எங்கு போய் சந்திக்க வேண்டுமாம்....”

நண்பன் ரேஸ்கோர்ஸில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலின் பெயரைச் சொல்லி அங்கு சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாலை ஏழரை மணிக்குச் சென்று வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னான்.



மாராவுக்கு அந்த மர்ம நபர் குறித்த விவரங்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து ஒருவன் அலைபேசியில் தெரிவித்தான்.

“மைத்ரேயன் விஷயத்தில் லீ க்யாங் ஏற்பாடு செய்திருக்கும் ஆள் தேவராஜன். தேவ் என்ற பெயரில் தான் அவனைப் பலருக்குத் தெரியும். வயது 37. கடலூர்க்காரன். ஆனால் நிரந்தரவாசம் மும்பையில். தடயமே இல்லாமல் ஆள் கடத்துவது, கொல்வது, மாயமாக்குவது மூன்றிலும் நிபுணன். அவன் மேல் எத்தனையோ வழக்குகள் போடப்பட்டாலும் எல்லாமே நீதிமன்றங்களில் போதிய ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. பத்து லட்சத்துக்கும் குறைவான கூலி தரும் வேலையை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. அதிகபட்சமாய் ஒரு கோடி கூட வாங்கி இருக்கிறான்....”

“மைத்ரேயன் வேலையில் எத்தனை கூலி கேட்டிருக்கிறான்....”

“ஆரம்பத்தில் எழுபது லட்சம் கேட்டிருக்கிறான். மைத்ரேயன் அமானுஷ்யனின் பாதுகாப்பில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் கூலி ஒன்றரை கோடி வேண்டும் என்று சொல்லி விட்டானாம்....”

“அப்படியானால் தேவுக்கும் அமானுஷ்யனைத் தெரியுமா?...”

“மும்பையில் தான் நிரந்தரவாசம், செய்யும் தொழிலும் இது போன்றது, என்பதால் அமானுஷ்யனை அவனுக்குத் தெரியாவிட்டால் தான் ஆச்சரியம்.... லீ க்யாங் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டானாம்....”

“இப்போது லீ க்யாங் அவனுக்குக் கொடுத்திருக்கும் வேலை தான் என்ன? கடத்தலா, கொலையா?... என்ன எதிர்பார்க்கிறான்....”

“அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.... ”



சேகர் அந்த நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறையில் ஏழே கால் மணியில் இருந்தே காத்திருந்தான். ஆனால் யாரும் அவனை நெருங்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்களில் யாருமே சிவப்பு சட்டை அணிந்தவர்கள் இல்லை. அப்படி வேறொருவர் கூட அங்கு இருந்திருந்தாலும் யார் தான் வரவழைத்த ஆள் என்ற குழப்பம் அந்த மர்மநபருக்கு ஏற்பட்டிருக்கலாம்.... சேகர் ஓட்டலுக்குள் நுழைந்த ஆட்களையும், ஓட்டலிலிருந்து வெளியேறிய ஆட்களையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். இந்த ஆளாக இருக்குமோ, அந்த ஆளாக இருக்குமோ என்று ஊகித்து சலித்துப் போய் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. போய் விடலாமா என்று அவன் யோசித்த வேளையில் கோட்டும் சூட்டுமாய் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஓட்டலுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் “ஹலோ சரவணன்..... வந்து நிறைய நேரமாயிற்றா...” என்று கேட்டபடி கை நீட்டிக் கொண்டே நெருங்கினான்.

சேகர் ஒரு கணம் தடுமாறினாலும் பின் சுதாரித்துக் கொண்டு “இல்லை......சார்” என்றபடியே கைகுலுக்கினான். அவன் கண்கள் அந்த ஆளை எடைபோட்டன. மாநிறம், ஆறடி உயரம், கறுப்புக் கண்ணாடி, வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடி, செல்வச்செழிப்பான தோற்றம்.... குலுக்கிய கை இரும்பாய் இருந்தது. சேகர் அவனையும் அறியாமல் ஒரு பயத்தை உணர்ந்தான்.

”வாருங்கள் போவோம்” என்று அவனை அழைத்துக் கொண்டு லிப்ஃடை நெருங்கினான். மூன்றாம் மாடியில் 317 ஆம் எண் அறையை அடையும் வரை அவனிடம் எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்த பிறகு கதவைத் தாளிட்டவன் அங்கிருந்த சோபாவில் அமரும்படி சேகருக்குக் கை காட்டினான். அவன் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டினால் பரவாயில்லை, அவன் என்ன நினைக்கிறான் என்பதை கண்களை வைத்து ஊகிக்கவாவது முடியும் என்று சேகர் நினைத்தான். ஆனால் அந்த மனிதன் கண்ணாடியையும் கழற்றவில்லை. உடைகளையும் மாற்ற முனையவில்லை. சேகருக்கு எதிர் சோபாவில் அமர்ந்தவன் உடனே கேட்டான். “நீ எப்படி அந்தப் பையன் வீட்டுக்கு எதிரே குடிபோனாய்?”

சேகருக்கு அதற்குப் பதில் சொல்வதில் விருப்பமில்லை. அது அவன் தனிப்பட்ட விஷயம். அதை ஏன் இவன் கேட்க வேண்டும் என்று நினைத்தவனாய் தயங்கினான். அதுவும் மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்கிறான்.

ஒரு நிமிடம் கழித்து தேவ் சொன்னான். “பரவாயில்லை. நீ போகலாம்......”

சேகர் அதிர்ந்தான். தேவ் மிக அமைதியாகச் சொன்னான். “தேவையான முழுவதும் தெரிந்து கொள்ளாமல் நான் யாரையும் எந்த வேலையிலும் சேர்த்துக் கொள்வதில்லை....”

இவனுடன் இந்த வேலையில் சேர்ந்து கொண்டால் பணமும் கிடைக்கும், பழி வாங்குவதில் பங்கெடுத்தது போலவும் இருக்கும். இரண்டையும் சேகர் இழக்க விரும்பவில்லை. அவன் மெல்லச் சொன்னான். “அந்த திபெத் பையன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவன் இப்போது தங்கியிருக்கும் வீடு என் எதிரியின் வீடு..... அதனால் தான் அவர்களைக் கண்காணிக்க எதிர் வீட்டுக்குக் குடிபோனேன்......”

தேவ் திகைத்தது போல் சேகருக்குத் தோன்றியது. அது உண்மை தான். தேவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அமானுஷ்யனுக்கு ஒரு எதிரி இருந்து அந்த எதிரி நடமாடிக் கொண்டிருக்கவோ, இப்படிப் பேசிக் கொண்டிருக்கவோ முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

“எப்படி எதிரியானார்கள்?” தேவ் கேட்டான்.

சேகருக்கு அந்த மர்ம மனிதனைப் பிடிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்களை இவன் ஏன் கேட்கிறான்? பணமும், பழிவாங்கும் எண்ணமும் அவனுக்கு ஏதாவது பதில் ஒன்றைச் சொல்லத் தூண்டியது. ஆனால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் சொன்னான். “உண்மையைச் சொல்ல முடிந்தால் சொல். இல்லாவிட்டால் நடையைக் கட்டு..... எனக்கு வேலை நிறைய இருக்கிறது...”

சேகருக்கு அந்த நேரத்தில் பொருத்தமான பொய்யைக் கற்பனை செய்யவும் முடியாததால் உண்மையையே சுருக்கமாய் சொன்னான். “எதிர் வீட்டு ஆளின் மனைவியின் முதல் கணவன் நான். அவள் முதல் மகனுக்கும் நான் தான் தகப்பன்....”

உண்மையை மட்டுமே சொல்ல முடிந்த பழக்கம் இல்லாத அவனுக்கு கூடவே சொல்லத் தோன்றியது. “அவள் என்னை ஏமாற்றி விட்டு கைக்குழந்தையாக இருந்த என் மகனையும் எடுத்துக் கொண்டு அந்த ஆளோடு ஓடிப்போனாள்.....”

தேவ் கதை கேட்கும் மனநிலையில் இல்லை. இடைமறித்துச் சொன்னான். “எனக்கு அவர்கள் வீட்டையும் அவர்கள் வீட்டில் புழங்குவதையும் வீடியோ எடுத்துக் கொடு. அந்த திபெத் பையன் வீட்டை விட்டு வெளியில் எங்கெல்லாம் போகிறான், போன இடங்களில் எத்தனை நேரம் இருக்கிறான், அவனுடன் யாரெல்லாம் போகிறார்கள் என்பது மாதிரியான தகவல்கள் நாளை மாலைக்குள் வேண்டும். எனக்குத் திருப்தி தரும்படி நடந்து கொண்டால் உனக்கு மிக நல்ல தொகையை அவர்கள் தருவார்கள்....”

சேகர் உற்சாகமாய் தலையசைத்தான்.



ன்று இரவு மாரா சம்யே மடாலயம் போய்ச் சேர்ந்தான்.



(தொடரும்)

என்.கணேசன்

Monday, April 18, 2016

அன்போடு தருவதையே ஆண்டவன் ஏற்பார்!


கீதை காட்டும் பாதை 40

ரந்துபட்ட உலகம், பல கோடி மனிதர்கள், பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு தேவைகள் என்று இருக்கையில் வழிபாட்டு முறையும், வழிபடும் தெய்வமும் ஒன்றாக இருக்க முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
அதை உணர்ந்தே ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக் கூறுகிறார்.

அர்ஜுனா! எவர்கள் வேறு தேவதைகளிடம் பக்தி கொண்டு சிரத்தையுடன் பூஜை செய்கிறார்களோ அவர்களும் முறை தவறிய வழியில் என்னையே தான் பூஜை செய்கிறார்கள்.

சகல யக்ஞங்களையும் பெற்றுக் கொள்பவனும், பரிபாலிப்பவனும் நானே. ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி தெரிந்து கொள்வதில்லை. அதனால் யக்ஞபலனை நழுவ விடுகிறார்கள்.

தேவர்களுக்காக விரதம் இருப்பவர்கள் தேவர்களை அடைகிறார்கள். பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள். பேய் பூதம் போன்றவைகளைத் தொழுபவர்கள் அவைகளையே அடைகிறார்கள். என்னை உபாசனை செய்கிறவர்கள் என்னையே அடைகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் ஆதிமூலமாகிய இறைவன் ஒருவனாகவே இருக்க முடியும் என்றாலும் கூட மனிதர்கள் தங்கள் தேவைகளைத் தீர்த்து வைக்கும் தேவதைகளைத் தேர்ந்தெடுத்து வணங்குகிறார்கள். ஆனால் அப்படி வணங்கும் பூஜைகள் பக்தி சிரத்தையுடன் இருக்குமானால் சுற்றுவழியில் ஆதிமூலமாகிய இறைவனையே பூஜிப்பது போலத் தான். கடைசியில் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்பவன் அவனே தான் என்றாலும் அது நேரடி வழிபாடல்ல. எல்லா வேள்விகளிலும் படைக்கப்படும் அனைத்தையும் பெற்றுக் கொள்பவன் ஒருவனேயான பரம்பொருளே. அந்தப் பரம்பொருளை  உண்மையாக உள்ளபடியே அறிந்து கொள்ளத் தவறும் போது அந்த வேள்விகளை முறையாகச் செய்தாலும் கூட முழுமையான பலனைப் பெறவும் மனிதர்கள் தவறிவிடுகிறார்கள். புரிதலில் உள்ள தவறு செயலின் விளைவையும் சிதைத்து விடுகிறது.  

மனிதன் வணங்கும் போது என்னவாக நினைத்து வணங்குகிறானோ அப்படியே அதைச் சென்றடைகிறான். அவன் மனதில் வடித்திருப்பது தேவர்களானால் அவன் தேவர்களை அடைகிறான். மனதில் வடித்திருப்பது பித்ருக்களானால் அவன் பித்ருக்களை அடைகிறான். வணங்குவது பேய், பூதமானால் கூட அவற்றையே அவன் அடைகிறான். உள்ளது உள்ளபடியாக அறிந்து அந்தப் பரம்பொருளை வணங்கினால் மனிதன் அந்தப் பரம்பொருளையே அடைகிறான். வணங்கத் தேர்ந்தெடுப்பதையே மனிதன் சென்றடைவான் என்கிற உத்திரவாதம் இறைவனால் அளிக்கப்பட்டிருக்கிறது. எதையும் வணங்க சுதந்திரம் உள்ள மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதை வைத்து அவன் சென்றடையும் இலக்கும் நிர்ணயமாகிறது. அதனால், தான் வணங்குவதை அவன் புரிந்து கொள்வது மிக முக்கியமாகிறது.  

பைபிளில் “அற்பமாக விதைப்பவர்கள் அற்பமாகவே அறுவடை செய்கிறார்கள். ஏராளமாக விதைப்பவர்கள் ஏராளமாக அறுவடை செய்கிறார்கள்என்ற வசனம் உண்டு. பரம்பொருளான மகாசக்தியை விட குறைவான சக்திகளை வணங்குபவர்கள் அற்பமாக அறுவடை செய்பவர்கள். பரம்பொருளையே வணங்குபவர்கள் ஏராளமாக அறுவடை செய்பவர்கள்.

சரி, இறைவனுக்கு என்ன படைத்து வணங்க வேண்டும், எவ்வளவு படைக்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும் என்ற கேள்வி எழுமல்லவா? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து பத்ரம், புஷ்பம், பலம், தோயம்என்று ஆரம்பிக்கும் அருமையான சுலோகத்தைச் சொல்கிறார்.

எவனொருவன் ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, ஜலமோ இவைகளில் ஏதாவது ஒன்றை எனக்கு பக்தியுடன் தருகிறானோ அப்படி சுத்தமான மனமுள்ளவன் பக்தியோடு கொடுத்தவைகளை நான் திருப்தியாக ஏற்றுக் கொள்கிறேன்.

உண்மையில் இறைவனுக்கு என்று எந்தத் தேவைகளும் இல்லை. அனைத்தையும் படைக்க முடிந்தவனுக்கு என்ன தேவை தான் இருக்க முடியும். மனிதன் தன் திருப்திக்காகவே இறைவனுக்கு எதையாவது படைத்து வணங்குகிறான். அவன் எதைத் தருகிறானோ அதை சுத்தமான மனதோடும், பக்தியோடும் தருவதாக இருந்தால் மட்டுமே இறைவன் திருப்தியோடு ஏற்றுக் கொள்வான். அது விலையுயந்த பொருள்களாய் இருக்க வேண்டியதில்லை. ஒரு பச்சிலையாகவோ, பூவாகவோ, பழமாகவோ, வெறும் நீராகவோ இருந்தால் கூட போதும். இறைவன் அதன் மதிப்பை பணத்தை வைத்து அளப்பதில்லை. தருவதன் பின்னால் இருக்கும் மனத்தை வைதே அளக்கிறான்.

வினோபா சொல்வார். ““ஆண்டவன் எதிரே எவ்வளவு கொண்டு போய்க் குவித்தோம் என்பதற்கல்ல சிறப்பு. பேருக்கோ, உருவுக்கோ, பொருளின் விலைக்கோ அங்கே மதிப்பில்லை. பாவனை ஒன்றுக்கே மதிப்பு. எதை எவ்வளவு அர்ப்பணம் செய்தோம் என கேள்வி இல்லை. எப்படி அர்ப்பணம் செய்தோம் என்பதே கேள்வி.

எல்லாவற்றையும் பணத்தால் மட்டும் அளக்க முடிந்த மனிதனுக்கு மட்டுமே இந்த உண்மை விளங்காமல் இருப்பது தான் பிரச்னையே. சாமிக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வெள்ளி மண்டபம், கட்டுக்கட்டாய் பணம் என்று தந்தால் அவர் பிரத்யேகமாய் தன்னைக் கவனித்துக் கொள்வார் என்று பணம் சார்ந்த வழிபாட்டுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறான்.

ஒரு அம்மாள் என்னிடம் யதார்த்தமாகவே “எனக்கு நீ கொடு. உனக்கு நான் கண்டிப்பாக செய்கிறேன்என்று கடவுளிடம் சொல்லி விட்டதாக ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவித்தார். அவர் செய்வதாகச் சொன்னது வெள்ளிக்காப்போ, வேலோ சரியாக எனக்கு நினைவில்லை. கடவுளுக்குத் தேவையானால் இவருக்கு வேண்டியதைச் செய்து தர வேண்டும். இல்லா விட்டால் நஷ்டம் கடவுளுக்குத் தான் என்பது போல அவர் பேச்சு இருந்தது.   

மனிதனின் முட்டாள்தனத்திற்கு எல்லை தான் என்ன!
அங்கமெல்லாம் புழுதியுடன், உடம்பில் கந்தலாடையுடன், மிதியடிகள் காணாத கால்களுடன் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வந்தார் குசேலர். செல்வச் செழிப்பான அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அவருடைய பால்ய சிநேகிதன். இமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர். பாதாளத்தில் குசேலர். ஆனால் அந்த இடைவெளி பரந்தாமனைப் பொருத்த வரை இருக்கவில்லை. ஓடோடிச் சென்று ஆரத்தழுவி, குசேலர் கந்தலாடையில் கட்டி வைத்திருந்த அவலை அள்ளி எடுத்து சாப்பிட்டு ‘என்ன ருசிஎன்றல்லவா ஆனந்தமாக அவர் சாப்பிட்டார். ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனையில் இல்லாத பண்டங்களா? பின் அப்படியென்ன மகத்துவம் அந்த அவலில். குசேலரின் கள்ளமில்லாத மனமும், ஆழமான அன்பும் அதில் கலந்திருந்தது தான் மகத்துவம்.

இது போல் விதுரர் வீட்டில் சமைத்த சாமான்யக் கீரையிலும், சபரி தந்த எச்சில் பழத்திலும் எப்படியெல்லாம் பகவான் மனம் மகிழ்ந்தார் என்று எத்தனையோ நிகழ்வுகள் பற்றிப் படித்திருந்தாலும் மனிதர்கள் மனதில் அந்த உண்மை பதிந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை சுத்தமான மனது தேவை என்ற ஷரத்து கீதையில் இருந்ததால், அது இல்லாததை சரிக்கட்ட பணத்தை வைத்து ஈடுசெய்ய நினைக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

தருகிறேன் என்கிற எண்ணம் கூடத் தவறு என்று பெரியோர்கள் சொல்வார்கள். அன்பு மேலிடுகிற இடத்தில் கணக்கு இருப்பதில்லை. அதனாலேயே கர்வமும் வருவதில்லை. கணக்கு சொல்ல முடிந்தால் அந்த அன்பு சந்தேகத்திற்குரியதே. சக மனிதர்களிடமே இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் போது இறைவனிடம் சொல்ல வேண்டியதே இல்லை. தருவதாக பெருமையுடன் நினைத்தாலும் அது குற்றமே. 

எனவே சுத்தமான மனமும், பக்தியும் இருந்து ஒருவர் என்ன செய்தாலும் அது தெய்வத்திற்கு உகந்த காணிக்கையே. அவை இரண்டும் இல்லாமல் ஒருவர் எத்தனை செய்தாலும் அது விளம்பரமே!

பாதை நீளும்.....

என்.கணேசன்                        




Thursday, April 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 94

வாசக அன்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தின் அறிகுறி அக்‌ஷயை சிறிதும் எட்டாதது போல் மாராவும், லீ க்யாங்கும் தனித்தனியாகப் பார்த்துக் கொண்டார்கள். மைத்ரேயனின் வீட்டை எதிர் வீட்டு மாடியில் இருந்து கொண்டு சேகர் மட்டுமே ரகசியமாய் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த வீதியிலும் இரு பக்கத்து வீதிகளிலும் இந்திய உளவுத்துறை ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் கவனத்தைக் கவராத தொலைவில் மட்டுமே லீ க்யாங்கின் ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் கவனத்தையும் கவராத தூரத்தில் மாராவின் ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் தப்பித்தவறி கூட அந்த மூன்று வீதிகளில் பிரவேசித்து விடவில்லை.

இரண்டு நாட்களாக அக்‌ஷய் எதிர் வீட்டு மனிதர்கள் பேசக் கிடைக்கிறார்களா என்று ஆர்வமாகப் பார்த்தான். வந்தனா எதிர்வீட்டைப் பார்ப்பதில்லை என்ற உறுதிமொழி எடுத்தவளைப் போல் நடந்து கொண்டாள். வந்தனாவின் தாய் அடிக்கடி அவர்கள் வீட்டைப் பார்த்தாலும் அக்‌ஷய் பார்த்த போதெல்லாம் முகத்தைக் கடுமையாக மாற்றி திருப்பிக் கொண்டாள். சஹானா சொன்னது போல் சிறிதாவது பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதது வந்தனாவின் தந்தை தான். லேசாகப் புன்முறுவல் செய்தாலும் அடுத்த கணம் அந்த இடத்தை விட்டுப் போகிறவராக அவர் இருந்ததால் அவரிடமும் அக்‌ஷயால் பேச முடியவில்லை. காதலர்களின் பிரச்னையைத் தீர்த்து வைத்து வருணின் பழைய சந்தோஷத்தைக் காண அவன் ஆசைப்பட்டது நிறைவேறாமல் போனது.

மைத்ரேயனும், கௌதமும் இணை பிரியாத தோழர்களாய் மாறி விட்டிருந்தார்கள். கௌதமிற்கும் விடுமுறை நாட்கள் என்பதால் இருவரும் விளையாட்டிலேயே இருந்தார்கள். இவ்வளவு நெருக்கமாய் இருக்கும் மைத்ரேயனால் பிரியும் போது சிறிய பாதிப்பும் இல்லாமல் பிரிய முடியும் என்பதைச் சொல்லி இளைய மகனை எச்சரிக்க வேண்டும் என்று அக்‌ஷய்க்கு தோன்றியது. கௌதமால் அப்படி அந்தப் பிரிவைத் தாங்க முடியாது என்று அக்‌ஷய்க்குத் தெரியும். ஆனால் அதைச் சொல்லி கௌதமின் சந்தோஷத்தை இப்போதே கெடுத்து விட வேண்டாம் என்றும் கூடத் தோன்றியது.

அக்‌ஷய்க்கு மைத்ரேயன் தமிழ் பேசும் விதம் ஆச்சரியப்பட வைத்தது. அவன் சைத்தான் மலையில் கற்றுக் கொண்ட வார்த்தைகள் மட்டுமல்லாமல் மற்ற வார்த்தைகளையும் சரளமாய் கௌதமிடம் பேசினான். அக்‌ஷயும் பல மொழிகளை சரளமாகப் பேசுபவன் தான். ஆனால் அதற்கு காலமும், பயிற்சியும் நிறையவே தேவைப்பட்டிருக்கிறது. அந்த இரண்டும் இல்லாமலேயே மைத்ரேயன் தமிழ் மிக நன்றாகப் பேசுகிறான். எப்படி? ஏதாவது அசாதாரண சக்தி பெற்று விட்டிருக்கிறானா? புரியவில்லை.....

 
கௌதம் காலை எழுவதற்கு ஒரு மணி நேரம் முன் எழுந்து தியானத்தில் ஆழ்ந்து விடும் மைத்ரேயன் இரவு அவன் உறங்கிய பின் ஒரு மணி நேரம் தியானத்தில் இருப்பதை வழக்கமாய் கொண்டிருந்தான். அவன் தியானம் வருணை ஏனோ அதிக எரிச்சல் அடையச் செய்தது. அவனுடைய தியான நேரத்தில் அவன் அடுத்தவர் மனதிற்குள் எல்லாம் உலா வருவது போல் ஏற்படும் பிரமையை வருணால் தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு அவன் மைத்ரேயனிடம் கேட்டே விட்டான். “நீ ஏன் தினமும் தியானம் செய்கிறாய்?”

“தினமும் ஏன் சாப்பிடுகிறோம்?” என்று பதிலுக்கு மைத்ரேயன் கேட்டது வருணுக்குப் பிடிக்கவில்லை. என்ன அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி என்று அவனுக்குத் தோன்றியது.

கௌதமைப் போலவே அக்‌ஷயிடம் நெருங்கி உரிமை பாராட்டி அந்த வீட்டில் மைத்ரேயன் இருப்பதும் அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஒரு நாள் மைத்ரேயன் குளிக்கப் போயிருக்கையில் வருண் அக்‌ஷயிடம் கேட்டே விட்டான். “இவன் எப்போது போவான்?”

அக்‌ஷய் வாய் திறப்பதற்குள் கௌதம் கேட்டான். “அவன் இங்கே இருந்தால் உனக்கென்ன?”

வருணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கௌதமே சொன்னான். “அவன் இங்கே அப்பாவிடம் பாசமாய் நெருங்கி இருப்பது உனக்குப் பொறாமையாய் இருக்கிறது...”

வருண் மறுக்கவில்லை. “யாரானாலும் அவரவர் இடத்திலேயே இருப்பது தான் சரி”

கௌதம் எப்போதும் இல்லாத கோபத்துடன் சொன்னான். “அவனுக்கு அப்பா இல்லை. அதனால் தான் நம் அப்பாவிடம் அப்படிப் பாசமாய் இருக்கிறான். உனக்கு அப்பா இல்லாமல் இருந்தால் அவன் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்....”

வருண் தம்பியைக் கொலைவெறியுடன் பார்த்தான். சஹானாவும், மரகதமும் திகைப்புடன் கௌதமைப் பார்க்க, அக்‌ஷய் வருணை சமாதானப்படுத்த வாய் திறப்பதற்குள் மைத்ரேயன் குளியலறையில் இருந்து வந்தான். அது சம்பந்தமான பேச்சு நின்றது.

அன்று மைதானத்திற்கு விளையாடப் போகும் போது கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான். “உனக்கு என் அப்பாவைப் பிடிக்குமா?”

“பிடிக்கும்”

”என் அப்பாவை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்” என்று பெருமையாகச் சொல்லி விட்டு கௌதம் மெல்ல மைத்ரேயனிடம் சொன்னான். “நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்வாயா?”

”இல்லை. சொல்” என்று மைத்ரேயன் சொன்னான்.

கௌதம் தயக்கத்துடன் சொன்னான். “என் அண்ணா அப்பா செல்லம். அவனைத் தவிர யாரும் அப்பாவிடம் நெருக்கமாய் இருந்தால் சின்னக் குழந்தை போல் பொறாமைப்படுவான். அவன் இருக்கையில் நீயும் நானும் அப்பாவுடன் நெருக்கமாய் இருக்க வேண்டாம். சரியா?”

மைத்ரேயன் கௌதமைப் பார்த்துப் பெரியதாய் புன்னகைத்தான். ”சரி” என்று சொன்னவன் மெல்லக் கேட்டான். “உனக்கு அப்படி பொறாமை இல்லையா?”

“சேச்சே. எனக்கெல்லாம் பொறாமை கிடையாது....” என்ற கௌதம் களங்கமில்லாமல் சிரித்ததை மைத்ரேயன் புன்னகையுடன் பார்த்தான்.

அன்றிரவு வருணுக்கு உறக்கம் வரவில்லை. கௌதம் காலையில் பேசினது பெரிய காயத்தை அவன் மனதில் ஏற்படுத்தி இருந்தது. உண்மையை அறியாமல், நண்பனுக்காக யதார்த்தமாகத் தான் தம்பி அப்படிப் பேசினான் என்பதை அவன் அறிவான். ஆனாலும் வலித்தது. புரண்டு புரண்டு படுத்தவன் அப்படியும் தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான்.

கௌதம் உறங்கி விட்டிருந்தான். வருணையே பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயன் மெல்லச் சொன்னான். “உன்னை உன் அக்‌ஷய் அப்பா நிறையவே நேசிக்கிறார். இடையில் யார் வந்தாலும் சரி அந்த பாசம் சிறிதும் குறையாது.....”

வருண் திகைத்தான். இடையில் யார் வந்தாலும் என்று சொன்ன போது மைத்ரேயனின் ஒரு கை தன்னையே காண்பித்துக் கொண்டு இன்னொரு கை எதிர் வீட்டு மாடியையும் காண்பித்தது பொத்தாம் பொதுவாகக் காட்டியது போல் தோன்றவில்லை. மைத்ரேயனையே திகைப்பு மாறாமல் தொடர்ந்து பார்த்த வருணுக்கு அவன் வார்த்தைகள் மனக்காயத்துக்கு மருந்து தடவுவதாக இருந்தன. கண்கள் கலங்க எழுந்து போய் அந்த சிறுவனை அணைத்துக் கொண்டான். அணைத்துக் கொண்டு நிறைய நேரம் அழுதான்.....



ன்றைய இரவு சம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவும் உறக்கம் வராமல் தவித்தார். சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் சம்யே மடாலயத்தில் பரவும் அலைகள் தீய சக்திகளின் ஆதிக்கத்தை அவருக்கு உணர்த்தி வருகிறது. அது போதாதென்று இன்று மைத்ரேயரின் காவி உடையும் காணாமல் போனது அவர் மன அமைதியைக் குலைத்தது. அவரால் அறிய முடியாத ஒரு சதித்திட்டம் அந்த மடாலயத்தில் நடப்பதாக அவர் உணர்ந்தார். ஆனால் கோங்காங் மண்டபத்தில் நடக்கும் ரகசிய நடவடிக்கைகள் அந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியே என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதை நிறுத்த முடியாத கையாலாகாத்தனம் அவரை மிகவும் உறுத்தியது.

மெல்ல எழுந்து மடாலயத்தின் மூன்றாவது தளத்திற்குப் போனார். அங்கே பத்மசாம்பவாவின் தலைமுடி கைத்தடி ஆகியவற்றை வைத்திருந்த கண்ணாடிப் பேழையின் முன் தளர்ச்சியுடன் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். மனம் சிறிது அமைதியடைய ஆரம்பித்தது.

ஆனால் திடீரென்று அங்கிருந்த தாரா தேவதைச் சிலை பேசியது போல் உணர்ந்தார். “நாளை இங்கு தீமை மகுடம் சூடும்”. அதிர்ந்து போன தலைமை பிக்குவுக்குத் தான் உணர்ந்தது உண்மையா அல்லது கற்பனையா என்று உடனடியாகப் பிரித்தரிய முடியவில்லை. தாரா தேவதைச் சிலை பேசக்கூடியது என்று பலரும் சொல்லி அவர் சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறார். அவர் அதைப் பெரிதாய் நம்பி இருக்கவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்கையில் இன்று அவருக்குக் கிடைத்ததாய் உணர்ந்த செய்தி பயத்தில் எழுந்ததாகத் தெரியவில்லை. பயம் குறைந்து மனம் அமைதியடைய ஆரம்பித்த சமயத்தில் கேட்டதால் அது தாரா சிலை சொன்னதாகவே இருக்க வேண்டும். பதற்றத்துடன் எழுந்த அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.



று நாள் புதுடெல்லியில் இந்திய உளவுத்துறைக்கு வந்து சேர்ந்த எண்ணற்ற தகவல்களில் ஒரு தகவல் இருந்தது. “கோயமுத்தூரில் சில புகழ்பெற்ற தனியார் துப்பறியும் நிறுவனங்களின் ஒற்றர்கள் கணிசமான அளவில் கூடி இருக்கிறார்கள்....”

பொறுமையாக எல்லாத் தகவல்களையும் படித்துக் கொண்டு வந்த அதிகாரி கோயமுத்தூர் அலுவலகத்திற்கு அந்தச் செய்தியை மின் அஞ்சலில் உடனடியாக அனுப்பி வைத்தார்.

கோயமுத்தூர் அலுவலகத்தில் அந்தச் செய்தியை வாசித்த அதிகாரி முதல் வேலையாக அந்தச் செய்தியை நிரந்தரமாக அழித்து விட்டான். மைத்ரேயனின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த அதிகாரி ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து “ஏதாவது முக்கியமான செய்தி வந்திருக்கிறதா?” என்று கேட்ட போது, மாராவிடம் கூலி வாங்க ஆரம்பித்திருந்த அந்த அதிகாரி “ஒன்றுமில்லை” என்று கூசாமல் சொன்னான்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, April 11, 2016

யோகியின் அருளும், தத்துவமும்!


மகாசக்தி மனிதர்கள் - 55

ருணாச்சலம் சில ஊர்களைக் கடந்து ராஜமன்னார்குடியை அடைந்தார். அங்கு ராஜகோபால சுவாமி சன்னிதியில் அமர்ந்து அவர் தியானத்தில் ஆழ்ந்து விட கீழ்ஜாதிக்காரன் அந்தக் கோயிலில் அமர்வது தவறு என்று சொல்லிய அர்ச்சகர் அவரை அங்கிருந்து போய் விடச்சொன்னார்.

எழுந்த அருணாச்சலம் “நீயும் தீட்டு உடையவன். கோபாலன் திருமேனியைத் தீண்டும் தகுதி உனக்கில்லைஎன்று சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டார். அவர் போன சிறிது நேரத்தில் அர்ச்சகரிடம் ஓடி வந்து ஒருவன் “உங்கள் மனைவி குளிக்கப் போன குளத்தில் தவறி விழுந்து இறந்து விட்டார்என்ற தகவலைத் தெரிவித்தான். அர்ச்சகர் மனம் பதைத்து தன் வீடு நோக்கி விரைந்தார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு பேராச்சரியமாக இருந்தது. சற்று முன்பே தீட்டு பற்றித் தெரிவித்துப் போனவர் சாதாரணமானவராக இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அவர்கள் வெளியே வந்து தேடிய போது அருணாச்சலம் அந்த ஊரை விட்டே போயிருந்தார்.

அவர் ஒரு முறை நீடாமங்கலத்திற்குச் சென்று அங்கே ஆற்றங்கரையில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவன் ஆற்றில் குளிக்க வந்திருந்தான். பெரிய நாகம் ஒன்று படம் எடுத்து சீறிக்கொண்டு அவனை நோக்கி வர அவன் பயந்து போய் வேகமாக ஓடி அருணாச்சலம் அருகே வந்து விழுந்தான்.  கண் விழித்துப் பார்த்த அவர் சீறி வரும் நாகத்தைப் பார்த்துக் கையமர்த்தி “நல்ல பிள்ளையைத் தீண்டாதேஎன்று சொல்ல நாகம் அப்படியே ஒரு கணம் நின்று பின் அமைதியாகிப் பணிந்து திரும்பிப் போய் விட்டது.   

 இப்படி சென்ற சில இடங்களில் ஏதாவது ஒரு அற்புதச் செயல் புரிந்த அருணாச்சலம் மற்ற இடங்களில் எதுவுமே பேசாமல், எந்த யோக சக்தியையும் வெளிப்படுத்தாமலும் இருப்பதுண்டு. பெரும்பாலான நேரங்களில் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் அவர், விழித்திருக்கும் சில நேரங்களில் சாந்தமே வடிவமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுண்டு. பசி ஏற்பட்டால் யாரிடமும் பிட்சை கூடக் கேட்காமல் எங்காவது வெளியே கொட்டப்பட்டிருக்கும் உணவை எடுத்து உண்டு விட்டு மறுபடி அமைதியாக அமர்ந்திருப்பார். பல இடங்களில் அவரை மக்கள் பைத்தியமாகவே நினைத்தார்கள்.

அவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றழைக்கப்பட ஆரம்பித்தது ஒரு சம்பவத்திற்குப் பின்பு தான். அந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்.

சித்தூர் ஜில்லாவில் சோமநாத முதலியார் என்ற பிரபல செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி மட்டுமல்லாமல், வெறும் கஞ்சியைத் தவிர அவர் வயிறு வேறெதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. உப்பு, புளி, காரம் எல்லாமே அவர் வயிற்றுக்கு எதிரிகளாய் இருந்தன.  செல்வந்தர் என்பதால் அவருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல வைத்தியர்களின் பலவிதமான வைத்திய முறைகளையும், மருந்துக்களையும் பயன்படுத்திப் பார்க்க முடிந்தது. ஆனால் எந்த வைத்தியத்திலும், மருந்திலும் அவருடைய கடும் வயிற்று வலி குணமாகவில்லை. மாறாக நாளுக்கு நாள் வலி கூடிக் கொண்டே போனது.

இனி வைத்தியத்தை நம்பிப் பலனில்லை, இறைவனே கதி என்ற மனநிலைக்கு வந்த சோமநாத முதலியார் சிதம்பரத்திற்குச் சென்றார். தில்லை நாதனே ஒரு வழி காட்ட வேண்டும் என்று சிதம்பரம் திருக்கோயிலில் இரண்டு நாட்கள் தங்கி விரதம் இருந்தார். அங்கும் நோய் அதிகமானதே தவிர குறையவில்லை. இனி இந்த வயிற்று வலியோடு வாழ முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. நீயே கதி என்று இறைவனிடமே வந்து அடைக்கலம் புகுந்த பிறகும் இறைவனே சோதித்தால் இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைத்த அவர் அந்தக் கோயிலிலேயே உயிரை விட முடிவு செய்தார்.

கோயிலிற்கு வெளியே சென்று நன்றாகத் தீட்டிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு இரவு நேரப் பூஜையின் போது மறுபடி நுழைந்த அவர் பூஜை முடிந்த பின் ஒரு தூண் மறைவில் ஒளிந்து கொண்டார். பூஜை முடிந்து அனைவரும் போய், அர்ச்சகரும் கோயிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பியவுடன் நடராஜர் சன்னிதிக்கு வந்தார். ஐயனே, நான் படும் துன்பங்களைக் கண்டும் அதைப் போக்க அருள் புரியாமல் இருக்க எனக்குக் காரணம் விளங்கவில்லை. நீயே என்னைக் கைவிட்ட பிறகு நான் இனி எங்கு போக முடியும்? என்னால் இந்த வலியுடன் வாழ முடியவில்லை. என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்என்று வேண்டி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொள்ளத் துணிந்தார்.

அந்த நேரத்தில் இறைவனின் சன்னிதியிலிருந்து அசரீரி கேட்டது. “அன்பனே. உன் நோய்க்கு நிவர்த்தி இங்கு கிடைக்காது. நீ திருவாரூர் சென்று தட்சிணாமூர்த்தியைப் பிரார்த்தித்தால் உன் நோய் அங்கு குணமாகும். அதனால் நீ உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்

மெய்சிலிர்த்துப் போன சோமநாத முதலியார் அதிகாலை கோயில் திறக்கப்படும் வரை காத்திருந்து, கோயில் திறந்த பின்னர் யாரும் அறியாமல் வெளியேறி திருவாரூர் விரைந்தார். திருவாரூரில் தியாகராஜப் பெருமான் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் ஆராதனை செய்து அர்த்த ஜாமம் வரை பிரார்த்தனை செய்தபடி இருந்தார். ஆனால் அப்போதும் அவர் வயிற்று வலி குறையவில்லை. அவர் மனம் உடைந்து போன போது அங்கும் அசரீரி கேட்டது. “நாம் சொன்ன தட்சிணாமூர்த்தி இதுவல்ல. இந்த ஊரில் நிர்வாணமாய் ஒரு துறவி திரிகிறான். அவனிடம் செல்.

உடனே ஊரில் நிர்வாணமாகத் திரியும் துறவியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்து கடைசியில் ஒரு வீட்டு வாசலில் கிடந்த இலையில் எஞ்சி இருந்த உணவை சில நாய்கள் சூழ சாப்பிட்டுக் கொண்டிருந்த அருணாச்சலத்தை சோமநாத முதலியார் கண்டார். அவரே தான் தேடி வந்த மகான் என்பதை உள்ளுணர்வால் அறிந்த சோமநாத முதலியார் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

அருணாச்சலம் அவரைப் பார்த்தவுடன் தன் கையில் வைத்திருந்த அன்னத்தை எடுத்து அவர் வாயில் ஊட்டி “உன்னை நடேசன் அனுப்பினானாஎன்று கேட்டார். தில்லை அம்பல நடராஜர் அனுப்பி வந்ததை இந்த மகான் அறிந்து வைத்திருக்கிறாரே என்று எண்ணி வியந்தவராய், ஊட்டப்பட்ட அன்னத்தை விழுங்கிய அந்தக் கணமே அவருடைய நெடுநாள் நோய் இருந்த அறிகுறியே இல்லாமல் அவரை விட்டு விலகியது. அதன் பின் என்ன சாப்பிட்டாலும் அவர் குடல் ஏற்றுக் கொண்டது. ஜீரணசக்தி முழுமையாகத் திரும்பக் கிடைத்தது. முற்றிலும் நோய் குணமான பின்னும் அருணாச்சலத்தை விட்டு விலக மனமில்லாத பக்தராய் மாறி விட்ட சோமநாத முதலியார், அசரீரியாய் கேட்ட பெயரான “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்என்றே அருணாச்சலத்தை அழைத்து வணங்க ஆரம்பித்தார். சுவாமிகள் உண்டு மிச்சம் வைத்த உணவையே உட்கொண்டு வாழ ஆரம்பித்தார். போவோர், வருவோரிடம் எல்லாம் தன் அனுபவத்தைச் சொல்லி பிரபலப்படுத்தியதால் மற்றவர்களும் “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்என்றே அருணாச்சலத்தை அழைக்க ஆரம்பித்தார்கள்.

குறைவாகப் பேசினாலும் அவ்வப்போது தத்துவார்த்தமான பேருண்மைகளை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சொல்லி உணர்த்துவதுண்டு என்பதை பைத்தியம் குணமடைந்து உபதேசம் வேண்டி நின்ற பெண்ணிடம் உபதேசித்த சம்பவத்தில் பார்த்தோம். சுவாமிகள் காரைக்காலுக்குச் சென்றிருந்த போது மஸ்தான் சாகிப் என்ற ஒரு முகமதியப் பெரியவர் கேட்ட கேள்விக்கும் அப்படியே பொருள் பொதிந்த பதில் அளித்தார்.

மஸ்தான் சாகிப் சுவாமிகளிடம் கேட்டார். “நீயும் நானும் எப்படி இருந்தால் எங்கும் நிறைந்த ஒரு பொருளாக இருக்கலாம்?

நீ, நான், அது, இது என்னும் சுட்டு இறந்து நின்றால் எங்கும் நிறைந்த பொருளாக இருக்கலாம் என்று பதில் அளித்து விட்டு சுவாமிகள் அந்த ஊரை விட்டுச் சென்றார்.

எல்லாரும், எல்லாமும் பரம்பொருளின் அங்கமே. நீ, நான், அது, இது என்று நாம் தான் வேறுபடுத்திப் பார்க்கிறோம். அப்படி வேறுபடுத்தி சுட்டிக் காட்டுவது முடிந்து போகுமானால், பிரித்துப் பார்க்கும் மனோபாவம் இல்லாமல் போகுமானால், பின் எங்கும் நிறைந்திருப்பதாய் நாம் காண்பது அந்தப் பரம் பொருளையே அல்லவா?

என்னவோர் உயர்ந்த சிந்தனை!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 4.9.2015

  

Thursday, April 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 93


பெரிய மனது பண்ணி பேருதவி செய்த ஒருவரிடம் அதற்கு மேலும் உதவி செய்யக் கேட்டு நிற்பது போல் கூச வைக்கும் சூழ்நிலை கண்ணியமான மனிதர்களுக்கு வேறொன்று இருக்க முடியாது. மேலும் சிறிது நாட்கள் மைத்ரேயனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அக்‌ஷயிடம் மறுபடியும் கேட்க நேர்ந்த போது ஆசான் அப்படியே தர்மசங்கடத்தை உணர்ந்தார். இந்திய உளவுத்துறை ஆளின் அலைபேசியில் அக்‌ஷயிடம் வேண்டிக் கொண்ட போது மிகுந்த பணிவுடன் சொன்னார். “அன்பரே, எங்களுடைய கஷ்டகாலம் உங்களைத் திரும்பத் திரும்ப உதவி கேட்க வைக்கிறது. எங்களைத் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. மைத்ரேயரைப் பத்திரமாகத் திபெத்தில் இருந்து அழைத்து வந்த நன்றிக்கடனுக்கே ஒரு பிறவி முழுவதும் உங்களுக்குச் சேவை செய்தாலும் போதாது. அப்படி இருக்கையில் இதையும் கேட்பது சரியல்ல என்றாலும் தற்போதைய நிலைமையில் வேறு வழி இல்லை....”

அக்‌ஷய் சொன்னான். “புனிதரே, எல்லோரும் அவரவருக்கு முடிந்ததையே செய்கிறார்கள். அதைச் செய்வதற்காகத் தான் இந்தப் பிறவியே என்று கூடச் சொல்லலாம். அப்படி இருக்கையில் நன்றிக்கடன் போன்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீர்கள். மைத்ரேயன் இங்கிருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை...”

சிறிய உதவிகள் செய்து விட்டே, அதற்கு உதவி பெற்றவர்கள் வாழ் நாள் முழுவதும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் இருக்கும் உலகில் தன் உயிரைப் பணயம் வைத்து பேருதவி செய்த அந்த மனிதன் பெருந்தன்மையாக இப்படிச் சொன்னது ஆசானை உணர்ச்சி வசப்படுத்தி ஒரு கணம் நாக்கைக் கட்டிப் போட்டது.

பேச முடிந்த போது அவர் கரகரத்த குரலில் கேட்டார். ”மைத்ரேயர் என்ன செய்கிறார் அன்பரே?”

“என் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.....”

மைத்ரேயரை ஒருமையில் அக்‌ஷய் அழைத்தது ஆசானுக்கு என்னவோ போல் இருந்தது. அதை வெளியில் காட்டாமல் சொன்னார். “இங்கே ஒரு கிழவன் அவருடன் விளையாடத் துடித்துக் கொண்டிருக்கிறான் என்று மைத்ரேயரிடம் சொல்லுங்கள் அன்பரே. இங்கிருக்கும் உளவாளிகளை ஏமாற்றி விட்டு விரைவிலேயே அங்கு வந்து சேர்கிறேன். பின் அடுத்தது என்ன என்று யோசிப்போம்....”

அக்‌ஷயிடம் அவர் பேசி முடித்த பின்னர் இந்திய உளவுத்துறையின் ஆள் அவரிடம் சொன்னான். “தேவைப்பட்டால் இங்கிருக்கும் வெளி உளவாளிகளை சிறைப்படுத்தி அப்புறப்படுத்தவும் முடியும்.... நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்....”

“தேவையில்லை அன்பரே.....” என்றார் ஆசான். ”இது போன்ற ஆள்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.... சமாளித்தும் இருக்கிறேன்....”



லீ க்யாங் சிறிதும் எதிர்பாராத விதமாய் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தான். அதிர்ஷ்டம் அடிக்கடி வந்து கதவைத் தட்டுவதில்லை....

மைத்ரேயனின் புகைப்படமும், அவனது பாதுகாவலனின் புகைப்படமும், அவர்கள் தங்கி இருந்த வீட்டின் புகைப்படமும் அவன் முன்னால் இருந்தன. பாதுகாவலனின் புகைப்படத்தை அவன் ஆர்வத்துடன் ஆராய்ந்தான். மைத்ரேயனின் பாதுகாவலன் மிக இளமையாக, துடிப்பாகத் தான் தெரிந்தான். ”இவன் தான் லாஸா விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த புத்தபிக்கு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எந்த நேரத்திலும் என்னவாகவும் முடிந்த சரியான பச்சோந்தி.....” என்று மனதுக்குள் சிலாகித்துக் கொண்ட லீ க்யாங் நிறைய நேரம் யோசித்தான்.

இப்போது ஆசானை வேவு பார்த்துக் கொண்டிருக்கும் குழு மூலமாகத் தான் தற்போது மைத்ரேயன் இருக்கும் இடம் தெரிந்துள்ளது என்ற போதும் அவன் மனதில் உதித்த திட்டத்திற்கு அந்தக் குழுவின் திறமையும், பலமும் போதுமானதல்ல. அவர்களுக்கென்று ஒரு பொறுப்பு தந்து உதவிக்குச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர முக்கிய வேலையை நிறைவேற்ற, அமானுஷ்யனைச் சமாளிக்க, தகுந்த ஒரு மனிதன் வேண்டும்..... அதுவும் இந்தியனாக இருந்தால் கச்சிதமாக இருக்கும்..... ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. அவனை நேரடியாகத் தொடர்பு கொள்வது இருவருக்கும் நல்லதல்ல....

உடனே இந்தியாவில் இருக்கும் தங்கள் ஒற்றன் ஒருவனுக்குப் போன் செய்து அந்த ஆளைச் சந்தித்துப் பேசச் சொன்னான். சொல்லி விட்டு ஆசானைக் கண்காணிக்கும் ஒற்றர் குழுத் தலைவனைத் தொடர்பு கொண்டான்.....


சேகருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவன் அனுப்பிய புகைப்படங்களுக்கு வெகுமதியாக அவன் சேமிப்புக் கணக்கிற்கு ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தார்கள். தொடர்ந்து எதிர் வீட்டைக் கண்காணிக்கும்படி வேண்டிக் கொண்டவர்கள், அதற்கு நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்கள். எதிரியை அழிக்க பணமும் தருகிறார்கள் என்பதற்கு இணையான இரட்டை மகிழ்ச்சி உலகில் வேறு எதாவது இருக்க முடியுமா என்ன!

சஹானாவின் இரண்டாம் கணவன் அழைத்து வந்த அந்த திபெத்தியச் சிறுவன் தனிப்பட்ட முறையில் அவனுக்கு எதிரி அல்ல. ஆனால் எதிரிகளின் வீட்டில் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவன் நண்பனும் அல்லவே. அந்தச் சிறுவனுக்கு ஆபத்து விளைவித்தால் அவனை அழைத்து வந்த அக்‌ஷய் தோற்றுப் போவான். வருணுக்கு உண்மையான கதாநாயகனும் சக்தி வாய்ந்தவனும் தன் சொந்தத் தகப்பன் தான் என்பது புரியும்.... நினைக்கும் போதே சேகருக்கு உடல் பூரித்தது.

தான் வந்திருப்பது கீழ் வீட்டாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது என்று நினைத்த அவன் தன் வீட்டிலேயே பூனை போல் சத்தமில்லாமல் தான் இயங்கினான். தெரிந்து ஜானகி பேச மேலே வந்து விட்டால் எதிர் வீட்டைக் கண்காணிப்பது தடைப்படும். இல்லா விட்டாலும் அந்தப் பெண்மணி ஒரு தொந்தரவு தான்.

மேலிருந்து ரகசியமாய் வேவு பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு தன் மகனும், அக்‌ஷயும் வாசலில் நின்று கொண்டு நண்பர்கள் போல் அன்னியோன்னியமாய் பேசிக்கொண்டிருந்தது வயிறெரிய வைத்தது. ‘எல்லாம் சில நாட்கள் தான்...’ என்று மனதினுள் கறுவினான்.

கீழ்வீட்டு ஜன்னல் வழியாக ஜானகியும் அவன் பார்த்ததையே பார்த்து சத்தமாய் அங்கலாய்த்தாள். “வருண் அந்த ஆளிடம் எவ்வளவு பாசமாய் இருக்கிறான். இந்தப் பாசம் சொந்த அப்பாவிடம் இல்லாமல் போனது ஏன் என்று தான் தெரியவில்லை....”

மாதவன் சொன்னார். “அந்த ஆள் சொந்த மகன் மாதிரி பாசமாய் இருப்பதால் தான் வருணும் பாசமாய் இருக்கிறான். அன்பும் பாசமும் கொடுத்தால் தான் திருப்பிக் கிடைக்கும்....”

“சொந்த அப்பாவுக்கு அப்படிப் பாசம் காண்பிக்க ஒரு வாய்ப்பு கூட அவன் தரவில்லையே. சேகர் அவன் கிட்ட போய் அப்படிக் கெஞ்சினதாய் சொன்னாரே. என்ன வந்தனா நான் சொல்வது சரிதானே”

“தயவு செய்து எதிர் வீட்டைப் பற்றிப் பேசுவதை இரண்டு பேரும் நிறுத்துகிறீர்களா? நமக்கு சம்பந்தமில்லாததைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?” வந்தனா கத்த இருவரும் அமைதியானார்கள்.


மாரா காத்மண்டுவில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் ரகசிய இயக்கத்தின் ஆட்கள் ஏழு பேரை அவசரமாக வரவழைத்திருந்தான். அதில் மூவர் சீனர்கள். நால்வர் இந்தியர்கள்.

மாரா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “.... நாம் உலகம் எல்லாம் ஊடுருவி இருக்கிறோம். ஊடுருவிய இடங்களில் செல்வத்திலும் அதிகாரத்திலும் வேரூன்றியும் இருக்கிறோம். இன்று எந்த நாட்டிலும் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்பது தான் யதார்த்த நிலை. ஆனால் இது எதையுமே நான் ஒரு பெரிய சாதனையாக நினைக்கவில்லை.....” சொல்லி விட்டு மாரா ஒரு கணம் பேச்சை நிறுத்தினான். ஏழு பேரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்து விட்டு மாரா சொன்னான். “மைத்ரேயனை வெல்வது ஒன்று தான் என்னைப் பொருத்த வரை சாதனை....”

சீனர்களில் மூத்தவர் கேட்டார். “உண்மையாகவே மைத்ரேயனை உனக்கு இணையாக நினைக்கிறாயா மாரா?”

“ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால் தான் உயர்ந்தவனா, இணையானவனா, தாழ்ந்தவனா என்பது தெரியும். தெரியாத புதிரை என்னவென்று நினைப்பது. உலகமே ஊடுருவ முடிந்த நமக்கு மைத்ரேயனை இன்னும் ஊடுருவ முடியவில்லை. அதற்கு அவன் நமக்குக் கிடைக்கவில்லை.. இப்போது கிட்டத்தட்ட கிடைத்திருக்கிறான். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறான். சீக்கிரமே அவனைச் சிறைப்படுத்தி விடுவோம்... ”

ஏழு பேரும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். மாரா அதிகமாய் உணர்ச்சி வசப்படாதவன். ஆனால் அன்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். “மைத்ரேயன் திபெத்தில் நம் கோயில் இருக்கும் மலையில் இருக்கிறான் என்று தெரிந்தவுடனேயே அவனைப் பிடிக்க நினைத்தேன். நம் தெய்வத்திடம் ஆலோசனை கேட்ட போது முதலில் சம்யே மடாலயத்தில் நம் சக்தி நிலையை மறுபடி ஸ்தாபித்துக் கொள்ள ஆணை வந்தது. அந்த நேரத்தில் எனக்கு அது ஏமாற்றமாகத் தான் இருந்தது. ’இப்போது விட்டால் பிறகு மைத்ரேயன் திரும்பவும் கிடைப்பானா’ என்ற சந்தேகம் நிறையவே இருந்தது. ஆனால் சம்யே மடாலயத்தில் நம் வேலை பூரண நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. நம் தெய்வத்தின் அருளால் மைத்ரேயன் இருக்கும் இடமும் தெரிந்து விட்டது. மைத்ரேயனை எப்படி நம் வசம் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாய் அதற்காகவே உதவ வந்தது போல் லீ க்யாங் களத்தில் நுழைந்திருக்கிறான். அவன் நம் வேலையை நமக்குச் செய்து தருவான்.....”

மாரா புன்னகை செய்தான். ஏழு பேரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்களுக்கு அவன் விளக்கப் போகவில்லை. மாறாக அவர்களை அழைத்த காரணத்தை விளக்க ஆரம்பித்தான்.

“இப்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறோம். இந்தியாவிலும், சீனாவிலும் உளவுத்துறையிலும், அதிகாரவர்க்கத்திலும் நம் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாய் கவனத்திற்கு வராமல் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.....”

அவன் சொல்லி முடித்த போது அவர்களால் அவன் அறிவு கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை.


ம்யே மடாலயத்தில் அதிகாலையில் தலைமை பிக்கு பிரார்த்தனைக்கு வந்த போது அவர் பத்திரமாய் பூஜை பீடத்தில் வைத்திருந்த மைத்ரேயனின் காவியுடை காணாமல் போயிருந்தது.

  (தொடரும்)

என்.கணேசன்