என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 8, 2026

சாணக்கியன் 195

 

முடிவில் தொடர்ந்த வரலாறு!


ந்திரகுப்தனையும், சாணக்கியரையும் மற்றவர்களையும் இந்த மகிழ்ச்சியும், நிறைவும் கொண்ட மனநிலையில் விட்டுப் பிரிவோம் வாசகர்களே. அதன் பின் தொடர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

சந்திரகுப்தன்சாணக்கியர் இருவரின் வெற்றிக் கூட்டணியில் மௌரிய சாம்ராஜ்ஜியம் விரிந்து பரவ ஆரம்பித்தது.

 

செல்யூகஸ் தன் நிலையை கிரேக்கத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் பாரதம் நோக்கி பெரும்படையுடன் வந்தான். ஆனால் அலெக்ஸாண்டர் வந்த போது இருந்த பாரதம் செல்யூகஸ் திரும்ப வந்த போது இருக்கவில்லை. சந்திரகுப்தன் வலிமைப்படுத்தியிருந்த பாரதத்தை வெல்வது செல்யூகஸுக்குச் சுலபமாக இருக்கவில்லை. முடிவில் செல்யூகஸ் சந்திரகுப்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவனுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். சந்திரகுப்தனும் அவனுக்கு 500 யானைகளைப் பரிசாகத் தந்தான். செல்யூகஸ் நல்லெண்ணத் தூதராக மெகஸ்தனீஸை சந்திரகுப்தனின் அரசவைக்கு அனுப்பி வைத்தான். யவனர்கள்  இழந்த பெருமையை மீட்கும் கனவுடன் செல்யூகஸுடன் மிக ஆர்வத்துடன் பாரதம் வந்த  க்ளைக்டஸ் இதில் ஏமாற்றமடைந்தான். காந்தார ஆம்பி குமாரனுக்கும், கேகய மலயகேதுவுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டது வீணானதில் விரக்தி அடைந்தான். அலெக்ஸாண்டரோடு யவனர் பெருமை முடிந்து விட்டதாக தன் வாழ்நாள் முடிவு வரை அவன் புலம்பி வாழ்ந்தான்.

 

யவனர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்திய பின் சந்திரகுப்தனும் சாணக்கியரும் பாரதத்தின் மற்ற பகுதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள். தமிழகம், கேரளம், கலிங்கத்தின் ஒரு பகுதி தவிர மற்ற பகுதிகள் சந்திரகுப்தனின் கட்டுப்பாட்டில் வந்தன. சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மிக நல்ல ஆட்சியை சந்திரகுப்தன் மக்களுக்குத் தந்தான். அவன் ஆட்சியில் வரிகள் குறைவாகவும், சுபிட்சம் அதிகமாகவும் இருந்தது.

 

மாமன்னனான பின் சந்திரகுப்தனின் உயிருக்கு ஆபத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்ததால் சாணக்கியர் தன் மாணவனை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைச் சலிப்பில்லாமல் மேற்கொண்டார். சந்திரகுப்தன் உறங்கும் அறையைக் கூட அவர் அடிக்கடி மாற்றினார். அந்தக் காலத்தில் எதிரிகளுக்கு எதிராக விஷம் பயன்படுத்துவது பிரபலமாக இருந்தது. விஷம், விஷமுறிவு இரண்டு குறித்தும் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சாணக்கியர் விஷத்தால் சந்திரகுப்தன் பாதிக்கப்படக்கூடாது என்று சிறிது சிறிதாக குறைந்த அளவு விஷத்தை சந்திரகுப்தனின் உணவில் கலந்து வந்தார். சந்திரகுப்தனின் உடல் விஷத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பெற்று பின் எந்த விஷத்தாலும் பாதிக்கப்படாதபடி வலிமை கூடிக் கொண்டே போகும்படியாக விஷத்தின் அளவையும் நுணுக்கமாகக் கூட்டிக் கொண்டே வந்தார். அதை அவர் சந்திரகுப்தனிடம் கூடத் தெரிவிக்கவில்லை. ராஜ்ஜிய பாரத்தைச் சுமக்கும் சந்திரகுப்தனுக்கு இது போன்ற எச்சரிக்கைக்கான சுமைகளும் சேர வேண்டாம் என்று அவர் எண்ணினார்.

 

அது தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்தரா கணவனுடன் உணவைச் சில நாட்கள் பகிர்ந்து கொண்டாள். பிரசவ சமயத்தில் அவள் படும் சில சிரமங்களைக் கண்ட போது தான் சாணக்கியருக்கு நடந்திருக்கும் அசம்பாவிதம் தெரிய வந்தது. அதற்குள் அவள் உடலில் இருக்கும் விஷம் வயிற்றிலிருந்த குழந்தையின் தலைக்கும் ஒரு துளி சென்று விட்டது. குழந்தை தாய் இருவரையும் சேர்ந்து காப்பாற்றும் வாய்ப்பு இல்லவே இல்லை என்று புரிய வந்த போது குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முடிவெடுத்த அவர், தொப்புள் கொடியை உடனடியாகத் துண்டிக்கும்படி பிரசவம் பார்த்த தாதிப்பெண்ணைக் கேட்டுக் கொண்டார். அவள் அப்படியே செய்ய, துர்தரா உயிர் இழந்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டது. ஆனால் குழந்தையின் நெற்றியில் விஷம் ஒரு பொட்டு போன்ற ஒரு கறையை ஏற்படுத்தி விட்டிருந்ததால் குழந்தைக்கு பிந்துசாரா என்று பெயர் வைத்தார்கள்.

 

சாணக்கியர் துர்தராவின் மரணத்தில் மிகவும் மனம் வருந்தினார். சந்திரகுப்தன் அவளை எந்த அளவு நேசித்தான் என்பதை அவர் அறிவார். சந்திரகுப்தனும் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆச்சாரியரின் மனதையும், உத்தேசத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததால் அவன் அவரிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. அவன் அவரிடம் சொன்னான். “ஆயுள் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது ஆச்சாரியரே. மரணம் ஆயிரம் விதங்களில் ஏற்படக்கூடும். ஓரிரு விதங்களை நாம் அறிந்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க முடிந்தாலும் மற்ற விதங்களில் மரணம் ஒருவரை நெருங்கி தன் வேலையை முடித்துக் கொள்கிறது. எல்லாம் அறிந்த நீங்கள் இதில் குற்றவுணர்வு கொள்வது சரியல்ல. எப்போதுமே என் உணவைப் பகிர்ந்து கொள்ளாதவள் கடைசி சில நாட்கள் மட்டும் அப்படிச் செய்தது விதியால் உந்தப்பட்டு தான் என்பது எனக்குப் புரிகிறது...”

 

சாணக்கியர் அந்த வார்த்தைகள் கேட்டு கண்கலங்கினார். ஆனாலும் நடந்து முடிந்ததைத் திருத்தவோ, மாற்றவோ முடியாது என்ற தத்துவார்த்த சிந்தனையால் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சாம்ராஜ்ஜிய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டபடியே அர்த்தசாஸ்திரம், நீதிசாஸ்திரம் என்ற இரண்டு அருமையான நூல்களை எழுதி முடித்தார்.  

 

சந்திரகுப்தன் துர்தராவின் மரணத்திற்குப் பின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பை மெள்ள இழக்க ஆரம்பித்தான். சக்கரவர்த்தியாக அவன் தன் கடமைகளை கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த போதும் மனம் தத்துவ, வைராக்கிய சிந்தனைகளில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தது. பிந்துசாரன் வளர்ந்து பெரியவனானவுடன்  சந்திரகுப்தன் துறவறம் போக சாணக்கியரிடம் அனுமதி கேட்டான்.

 

தன் பிரிய மாணவனின் மனதை எப்போதுமே தீர்க்கமாய் அறிய முடிந்த சாணக்கியர் அவனுடைய பூரண அமைதி தேடிப் போகும் கடைசி ஆசைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதித்தார். சந்திரகுப்தன் மகனுக்கு முடிசூடி ஆச்சாரியரின் வழிநடத்தலின்படியே எப்போதும் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு தவ வாழ்க்கை வாழச் சென்றான். தெற்கு நோக்கிச் சென்ற அவன் முடிவில் சிராவண பெலகோலாவில் சமாதியடைந்தான்.

 

மன்னனான பிந்துசாரனும் சாணக்கியரின் வழிகாட்டுதலின்படியே சிறப்பாக ஆட்சி புரிந்தான். ராக்ஷசரின் மறைவுக்குப் பின் சுபந்து என்பவன் பிரதம அமைச்சன் ஆனான். அவன் பிரதம அமைச்சராக இருந்த போதும் எல்லாம் சாணக்கியரின் வழிநடத்துதல்படி நடப்பதில் கடும் அதிருப்தி அடைந்தான். அதனால் அவன் சாணக்கியரை அப்புறப்படுத்த சூழ்ச்சி செய்தான்.

 

ஒரு நாள் அவன் பிந்துசாரனிடம் துர்தராவை விஷம் வைத்துக் கொன்றது சாணக்கியர் தான் என்று சமீபத்தில் தான் தெரிய வந்ததாய் வருத்தம் காட்டிச் சொன்னான், தனநந்தன் மீதிருந்த வஞ்சத்தை மறக்க முடியாத சாணக்கியர் அவன் மகளான துர்தராவை விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும், அதை அறிந்த போதும் ஆச்சாரியர் மீதுள்ள பக்தியால் சந்திரகுப்தன் அவரை எதிர்க்க முடியாமல், அதைத் தாங்கிக் கொள்ளவும் முடியாமல் தான் பின் துறவற சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதாகவும் சொன்னான்.  

 

அவன் பாதி உண்மைகளைக் கலந்து அதை நம்பும் படியாக ஜோடித்துச் சொன்னதால் பிந்துசாரன் அதை நம்பிவிட்டான். சந்திரகுப்தன் தானடைந்த உயர்வும், ராஜ்ஜியமும் ஆச்சாரியர் போட்ட பிச்சை என்று பல முறை சொல்லி அவன் கேட்டிருந்ததால் அவரை வெளிப்படையாக எதிர்க்க அவனால் முடியவில்லை. அவன் தந்தைக்கு அவர் நன்மைகள் செய்திருக்கிறார் என்பதற்காக அவன் தாயை அவர் கொன்றதை அவனால் மன்னிக்க முடியவில்லை. அதனால் அவன் சாணக்கியரிடம் வெறுப்புடனும், பாராமுகமாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.  அதில் வருத்தமடைந்த சாணக்கியர் இனி அங்கிருப்பது தனக்கு கௌரவம் அல்ல என்று நினைத்தார். அவர் இருக்க வேண்டிய அவசியமும் குறைந்து விட்டது. அதோடு தன் அந்திம காலமும் நெருங்குவதை உணர்ந்த அவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் விடத் தீர்மானித்து கானகம் சென்றார்.

 

சுபந்து தன் திட்டம் வெற்றி பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தான். பிந்துசாரனும் விட்டது சனியன் என்று அலட்சியமாக இருந்தான். ஆனால் அவனைப் பிரசவித்த தாதிப்பெண்ணுக்கு சாணக்கியர் நடத்தப்பட்ட விதம் வேதனையை ஏற்படுத்தியது. சில நாட்கள் மௌனமாக இருந்த அவள் பின் பொறுக்க முடியாமல் மன்னனைச் சந்தித்து சாணக்கியர் சந்திரகுப்தனையும், துர்தராவையும் எந்த அளவு நேசித்தார் என்பதையும், அவன் பிறந்த போது நடந்தது என்ன என்பதையும் விவரித்தாள்.

 

பிந்துசாரன் அதைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். எந்த மனிதரால் அவன் தந்தைக்கும், அவனுக்கும் இந்த ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறதோ, எந்த மனிதரின் சமயோசிதத்தாலும், கூர்மையான அறிவாலும் அவன் உயிர் பிழைத்திருக்கிறானோ அவரை அவன் நடத்திய விதம் அவனைப் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது.

 

பின் பிந்துசாரன் ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே கானகம் விரைந்து சென்று சாணக்கியரைக் கண்டு மன்னிப்பு கேட்டு அவரை திரும்பவும் ராஜ்ஜியத்திற்கு அழைத்து வரப் புறப்பட்டான். கிளம்புவதற்கு முன் சுபந்துவுக்கு மரண தண்டனை விதித்து விட்டுப் போனான்.   

 

கானகத்தில் சாணக்கியரின் காலில் விழுந்து வணங்கி பிந்துசாரன் மன்னிப்பு கேட்டான். “இந்தப் பாவியைத் தயவு செய்து மன்னித்து விடுங்கள் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் அப்போது மரணத் தறுவாயில் இருந்தார். அவனைப் பார்த்துப் புன்னகைத்து பலவீனமான குரலில் சொன்னார். “உன்னை எப்போதோ மன்னித்து விட்டேன். என் சந்திரகுப்தனின் பிள்ளையை என்னால் மன்னிக்காமல் இருக்க முடியுமா பிந்துசாரா?”

 

அந்த வார்த்தைகள் கேட்ட பின் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதபடி பிந்துசாரன் சொன்னான். “அப்படியானால் நம் ராஜ்ஜியத்துக்குத் திரும்பி வாருங்கள் ஆச்சாரியரே. நீங்கள் என்னுடன் வராமல் நான் திரும்பிப் போக மாட்டேன்.”

 

சாணக்கியர் பிந்துசாரனின் கையைப் பிடித்து கொண்டு அன்புடன் சொன்னார். “நான் திரும்பி வர முடியாத என் கடைசி யாத்திரையை ஆரம்பித்து விட்டேன் பிந்துசாரா..... ஆனால் என் ஆத்மா என்றும் புனித பாரத மண்ணில் தான் உலாவிக் கொண்டிருக்கும்....”

 

பிந்துசாரனின் துக்கம் பலமடங்காக அதிகரித்தது. அவர் முகத்தைப் பார்த்த போது அவர் மரணமடையப் போகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் கைப்பிடி தளர, அவன் அவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் தவறுக்குப் பரிகாரமாக இனி ஒன்றும் செய்ய முடியாத ஆற்றாமையுடன் கதறினான். “ஐயோ நான் இனி என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லையே ஆச்சாரியரே?”

 

அவர் ஈனசுரத்தில் சொன்னார். “இந்தக் கடைசி நேரத்தில் என்னுடன் இருக்கிறாயே....  இது போதும்.... என் சந்திரகுப்தன் மகனே

 

சில கணங்களில் சாணக்கியர் உயிர் பிரிந்தது. பிந்துசாரன் கனத்த மனதுடன் அவர் கையை மெல்ல தரையில் வைத்தான். அவர் மனதின் ஒரு ஓரத்தில் தங்கியிருந்த கடைசி கசப்பும் பிந்துசாரன் வரவால் விலகியதால் அவர் முகத்தில் பேரமைதி தெரிந்தது. அவர் சொன்ன ’என் சந்திரகுப்தன் மகனேஎன்ற அந்தக் கடைசி வார்த்தைகள் பிந்துசாரன் கண்களை மீண்டும் குளமாக்கின. கண்ணீர் தாரை தாரையாக வழிய அவன் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை வணங்கினான்.

 

தன்னலமில்லாத ஒரு உன்னத வாழ்க்கை முடிந்து விட்டது. ராக்‌ஷசர் ஒரு முறை ஆத்மார்த்தமாய் சொன்னது போல் சில யுகங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு மாமனிதனைப் படைத்த திருப்தியுடன் இறைவன் அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

 

முற்றும்.


என்.கணேசன்


(அடுத்த வியாழக்கிழமை 15.01.2026 லிருந்து என்னுடைய சதுரங்கம் நாவல், வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வரும்)




14 comments:

  1. Tear in my eyes.thank u so much ganesan sir🙏 195 வாரங்களும் பொருமையாக காத்திருந்து வாசித்தேன். கிட்டத்தட்ட 3 1/2 வருடம் மேல் ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள் உங்களுக்கு

    ReplyDelete
  2. குரு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். சத்ரபதிக்கு பிறகு அருமையான சரித்திரத்தை நாவல் வடிவில் தந்துள்ளீர். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு,
    சாணக்கியன் என்னும் மாமனிதனுடன் தொடர்ந்து நடந்து வந்த பயணம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.
    சாணக்கியன் பற்றிப் பலர் எழுதி இருந்தாலும் உங்கள் கோணமும் நடையும் மிக நிறைவாக இருந்தன.
    உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. I appreciate your outstanding effort in recreating the historic character of the great acharya chanakya. Many thanks.

    ReplyDelete
  5. I travelled all episodes with chanakyan,

    What an amazing novel by your hands sir,,

    என் சந்திகுப்தன் மகனை!!!,, எப்படியாவது touching ஆக வெச்சிட்றீங்க sir.,

    ReplyDelete
  6. Arputhamana ending🙏🙏

    ReplyDelete
  7. இந்த தொடருக்கு நன்றி ஐயா...
    வெறும் சாகசத்தை மட்டும் கூறாமல், கதாப்பாத்திரங்களின் மனநிலை, வாழ்க்கை தத்துவங்கள் போன்றவற்றை இந்த நூலோடு சேர்ந்து தந்தது மிகச் சிறப்பு...

    ReplyDelete
  8. அருமையான படைப்பு .... அற்புதமான எழுத்து நடை .... வாசிப்பு போல அல்லாமல் ஒரு திரைக்காவியம் பார்த்தது போன்ற உணர்வு எழுகிறது ....ஆசிரிருக்கு நன்றி. .....

    ReplyDelete
  9. Ratchagan poduveenga nu nenachen sir,

    ReplyDelete
  10. சொல்ல வார்த்தைகளே இல்லை. மகா அற்புதமான காவியம். எழுத்துக்களை தேனில் குழைத்து எழுதுகிறீர்கள்

    ReplyDelete
  11. Amazing novel sir. Thank you very much for creating this.

    ReplyDelete
  12. சில யுகங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு மாமனிதனைப் படைத்த திருப்தியுடன் இறைவன் அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கக்கூடும்! Great novel, thanks sir

    ReplyDelete
  13. Thank you for a wonderful novel as always. Big fan of your writing.

    ReplyDelete
  14. Thanks a lot for your amazing work sir. Your blogspot is the only reading I do these days

    ReplyDelete