என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 29, 2026

சதுரங்கம் 3

 

ர்ஜுனின் சிறப்புக் கட்டுரை ஒன்று அவன் நிருபராக வேலை செய்யும் விடிவெள்ளி பத்திரிக்கையில் அன்று வந்திருந்தது. ’சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளும், குற்றங்களும்என்ற தலைப்பில் அவன் ஒரு ஆழமான கட்டுரை எழுதியிருந்தான். முக்கியமாக பொதுமக்கள் அந்த மோசடிகள், குற்றங்களில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்பதை சிறப்பான வகையில் அலசி எழுதி இருந்தான். எத்தனை தான் எழுதியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் அவன் பெயரையும், புகைப்படத்தையும் பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்.

 

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அம்மா பானுமதி தான் ஹாலில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதும், சுவரிடம் சொல்வதும் ஒன்று தான். எந்தப் பாதிப்பும் இருக்காது. அப்பா ஞானமூர்த்தியை அவன் தேடினான். அவர் பூஜையறையில் தியானத்தில் இருப்பது தெரிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களில் தினமும் தியானம் செய்பவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும். தியானம் என்றால் பெயருக்குப் போய் உட்கார்ந்து நேரத்தை நகர்த்தும் நபர் அல்ல அவர். பல நேரங்களில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு அதில் மூழ்கி விடுவார்.  அர்ஜுனும் அவரைப் பார்த்து தியானம் செய்யும் முயற்சியில் ஒரு காலக்கட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாதாரணமாக நினைவுக்கு வராத தேவையில்லாத நினைவுகள் எல்லாம் அந்த சமயங்களில் தான் ஒன்று திரண்டு படையெடுத்து வரும். சில நாட்களில் அவன் தியானத்திற்கு விடை கொடுத்து விட்டான். அவன் அதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்.

 

அப்பாவிடம் அந்த கட்டுரையைக் காண்பித்து அவருடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. அவரிடமிருந்து எப்போதுமே விருப்பு வெறுப்பில்லாத, அலங்காரச் சொற்கள் சேர்க்காத உண்மையான கருத்துக்கள் வரும்.  வார்த்தைகளில் கடுமையோ, இகழ்ச்சியோ இருக்காதே ஒழிய, எதிர்மறைக்கருத்துக்களையும் நேரடியாகச் சொல்லத் தயங்காதவர் அவர். அதுவும் வீட்டில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் அவர் அப்படித் தான். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத செயல் அது. அரசியலில் தோல்வி அடையவும், காணாமல் போகவும் அந்த ஒரு குணாதிசயம் போதும். அவர் வெற்றிகரமான அரசியல்வாதி அல்ல என்றாலும் இன்னமும் காணாமல் போகாமல் அரசியலில் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவன் அடிக்கடி ஆச்சரியப்படும் விஷயம்.      

 

அடுத்ததாக அந்த வீட்டில் இருப்பவள் தங்கை நித்யா தான். இன்று அவள் கல்லூரிக்கு விடுமுறை நாள். அதனால் ஒன்பது மணியாகாமல் எழுந்திருக்க மாட்டாள். நேற்று நள்ளிரவு வரை அவள் படித்துக் கொண்டிருந்தாள் என்பதும் அவனுக்கு நினைவு வந்தது. அவளிடம் அந்தக் கட்டுரையைக் காட்டினால், பத்திரிக்கையில் அவளுடைய அண்ணனின் புகைப்படத்தையும், பெயரையும் பார்த்தே முகம் மலர்வாள். அடிக்கடி அண்ணனைக் கிண்டல் செய்பவளும், அவனிடம் சண்டை போடுபவளும் அவள் தான் என்றாலும் அவளைப் பொருத்த வரை அவள் அண்ணனைப் போல உலகத்தில் யாருமில்லை. தங்கையை நினைக்கையிலேயே அர்ஜுனின் முகம் மென்மையாகியது.

 

அவனுடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது அவனுடைய தோழி கீதா.  இன்னொரு பத்திரிக்கையில் நிருபராக இருப்பவள். ஏதாவது முக்கியமான பரபரப்பான செய்தி இருந்தால் ஒழிய அவள் இந்த நேரத்தில் அலைபேசியில் அழைத்துப் பேசுபவள் அல்ல. அர்ஜுன் பரபரப்புடன் அலைபேசியை எடுத்துப் பேசினான். முன்னாள் பிரபல நடிகை நர்மதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருப்பதை கீதா தெரிவித்தாள்.

 

அர்ஜுன் அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு கிளம்பினான்.  அவன் எப்போதும் அம்மாவிடம் சொல்லி விட்டுப் போவதில்லை. பானுமதி மகனிடம் கேட்டாள். “காலை டிபனுக்கு வருவாயா, வர மாட்டாயா?”

 

வெளியே சாப்பிட்டுக்கறேன்.” என்றான் அர்ஜுன்.

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. தலையையாவது அசைத்தாளா, இல்லையா என்று அவன் பார்க்கவில்லை.  இந்தக் கேள்வியை அவள் கேட்டது கூட, அவனுக்கும் சேர்த்து சமைக்கலாமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளத் தான். உண்மையான அக்கறையால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல அது. அவனுடைய நண்பர்களின் வீட்டில் எல்லாம் அவர்களுக்கு அவர்களுடைய அப்பாவுடன் தான் பிரச்சினை இருந்தது. அப்பாவுடன் தான் அவர்களுடைய பேச்சு வார்த்தை குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட எல்லோரும் அம்மாவின் செல்லங்கள் தான். இந்த வீட்டில் தான் எல்லாம் எதிர்மாறாக இருக்கிறது. அவனுக்குப் பலசமயங்களில் அவள் அவனைப் பெற்றவள் அல்லவோ என்ற சந்தேகம் வந்திருக்கின்றது. அவன் அப்பாவின் மூத்த தாரத்தின் குழந்தையாக இருக்கலாமோ என்று கூட நினைத்து இருக்கிறான். அப்படியெல்லாம் இல்லை, அவள் தான் அவனைப் பெற்றவள் என்று தெரிந்த பிறகும், அதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்குமோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் அவள் மகன் தான். ஏனென்றால் அவளுடைய முகச்சாயல் தான் அவனுக்கு இருந்தது. அவளுடைய கண்கள் போலவே அவனுடைய கண்களும் மிக அழகானவை.

 

இயல்பாகவே அவள் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாதவள். அவள் முகத்தில் வெறுமை தான் அதிகம் தெரியும். ஆனால். அவள் தன் கணவரிடமும், மகளிடமும் ஓரளவு உயிரோட்டத்துடன் பழகக்கூடியவள். நித்யாவை அவள் பார்க்கும் பார்வையில் பெருமிதம் தெரியும். ஞானமூர்த்தியைப் பார்க்கும் பார்வையில் பேரன்பு தெரியும். ஆனால் அர்ஜுனிடம் மட்டும் எப்போதும் வெறுமை தான்அதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. ஞானமூர்த்தி, நித்யா முன்னிலையில் அவள் கூடுமான வரை இயல்பாக அவனிடம் நடந்து கொள்வாள். அவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில் அவள் சம்பந்தமே இல்லாதவள் போல நடந்து கொள்வாள்.

 

என்றாவது ஒரு நாள் அவளிடம் வெளிப்படையாகஎன்னை ஏன் அம்மா நீ வெறுக்கிறாய்?” என்ற கேள்வியைக் கேட்டு விட வேண்டும் என்று அவன் துடித்திருக்கிறான். ஆனால் அப்படியே அவன் கேட்டாலும் அவள் வெளிப்படையாக உண்மையான காரணத்தைச் சொல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை. கண்ணிமைக்காமல்அப்படியெல்லாம் இல்லையேஎன்று சொல்லிவிட முடிந்தவள் அவள்….

 

நடிகை நர்மதாவின் வீட்டை அவன் பைக்கில் சென்றடைந்த போது அங்கே நிறைய பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் பலரும் அவனுக்கு நன்றாக அறிமுகமானவர்கள். சிலர் அவனைப் பார்த்துக் கையசைத்தார்கள். அவனும் கையசைத்தான். கீதா அவனைப் பார்த்தவுடன் புன்னகையோடு அருகே வந்தாள். “ஹாய் அர்ஜுன்.”

 

அவனும் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான். “ஹாய் கீதா.”

 

இன்னைக்கு உன்னோட கட்டுரை ஒன்னு உங்க பத்திரிக்கையோட நடுப்பக்கத்துல பிரசுரமாகியிருக்கு இல்லையா. நான் படிக்க ஆரம்பிச்சப்ப தான் இந்த தற்கொலைச் செய்தி கிடைச்சுது. உடனே கிளம்பிட்டதால படிக்க முடியல.”

 

அவனுடைய கட்டுரை இன்று பிரசுரமாகியிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள் என்பதே அவனை சந்தோஷப்படுத்தியது.

 

தலையசைத்தபடி கேட்டான். “உண்மையாகவே தற்கொலை தானா? இல்லை கொலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கா?”

 

சந்தேகம் ஒரு நிருபருக்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய குணம். ஒரு திறமையான நிருபர் தோற்றங்களில் ஏமாந்து விடக்கூடாது. உண்மையே என்றாலும் ஆராயாமல் தெளிவடைந்து விடக்கூடாது. கீதா புன்னகைத்தாள். “தெரியல. ஆனா கதவோ, பூட்டோ உடைக்கப்படலை. வேலைக்காரி எப்பவும் வர்ற மாதிரி எட்டு மணிக்கு வந்திருக்கா. அவ கிட்ட ஒரு செட் வெளி கேட் சாவியும், வீட்டு சாவியும் இருக்கு அவ உள்ளே போய்ப் பார்த்தப்ப நர்மதா ஃபேன்ல கயிறு கட்டி தூக்குல தொங்கிகிட்டு இருந்திருக்கா.”

 

தற்கொலைக் கடிதம் ஏதாவது…?”

 

இருக்கு. ஆனா அது அவள் எழுதினது தானான்னு இன்னும் உறுதிப்படுத்தப்படலை. வீட்டுல இருக்கற அவளோட பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்குங்கற மாதிரி தான் தெரியுது. எதுவும் திருட்டுப் போனமாதிரி இதுவரைக்கும் தெரியல. எல்லாத் தகவல்களும் கிடைச்ச பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும்…”

 

அர்ஜுன் கல்லூரிக் காலத்தில் நர்மதாவின் விசிறியாக இருந்திருக்கிறான். அக்காலத்தில் அவள் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்தே தீர்வான். ஆனால் கல்லூரிப்படிப்பு படித்து முடித்து அவன் அந்த வயதுப் பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் விட்டொழித்த போது நர்மதா மேல் இருந்த ஈர்ப்பும் சேர்ந்து விடைபெற்றது. பின் அவளை அவன் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. ஆனாலும் இப்போது நர்மதா இறந்து விட்டாள் என்கிற போது அவள் குறித்து ஒருவித பச்சாதாபம் அவன் மனதில் தங்கியது.  காலம் தான் எத்தனை விசித்திரமானது. தன் போக்கில் எத்தனை மாற்றங்களை அனாயாசமாகச் செய்து விடுகிறது. ஒரு சமயத்தின் உச்சங்கள் இன்னொரு சமயத்தில் எப்படி துச்சங்களாகப் போய்விடுகிறார்கள்….’

(தொடரும்)

என்.கணேசன் 



No comments:

Post a Comment