என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 5, 2026

யோகி 137

 

ல்பனானந்தா ஒரு வெளிநாட்டு ஆன்மீக மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப அலுவலகத்திற்குச் சென்ற போது பாண்டியன் அங்கே அமர்ந்திருந்தார். சிறு புன்னகையுடன் அவள் அவரைக் கடக்க முற்பட்ட போது அவர் அவளை அழைத்துச் சொன்னார்.யோகிஜி நாடு முழுவதும் கோசாலைகள் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கிறாராம் சுவாமினி. அந்த வேலைக்கு ஐந்து துறவிகளை ஒதுக்கினால் தேவலை.”

 

கல்பனானந்தா தலையசைத்தாள். இது போன்ற தர்ம காரியங்களுக்கும், ஆன்மீக நிகழ்வுகளுக்கும் தகுந்த ஆட்களை ஒதுக்குவது எப்போதும் அவளுடைய வேலை தான். தலையசைப்புக்குக் கூடுதலாக எதுவும் சொல்லாமல் சென்று அவள் வழக்கமான கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தன் வேலையை ஆரம்பித்தது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. அனாவசியமான கேள்விகளோ, விளக்கம் கேட்பதோ அவளிடம் எப்போதும் இருக்காது. நாளை மாலை அவர் கேட்ட ஐந்து துறவிகளின் பெயர் அவர் மேசையில் கண்டிப்பாக இருக்கும். எதையும் அவளிடம் அவர் இரண்டாம் முறை சொல்ல வேண்டி இருந்ததில்லை. திறமைசாலி தான். ஆனால் திறமைகளை பணமாக்கிக் கொள்ளத் தெரியாதவள்...

 

கோசாலைகள் ஆரம்பிக்கும் திட்டம் கல்பனானந்தாவிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. நல்ல திட்டம் தான் அது என்றாலும் அதை விளம்பரப்படுத்த செய்யும் செலவின் அளவை விட அதிகமாய் கோசாலைக்கு யோகாலயம் செலவு செய்யப் போவதில்லை. அதை கல்பனானந்தா நன்றாக அறிவாள். அமைச்சர்களையும், பிரபலங்களையும் அழைத்து ஆரம்ப விழாக்கள் நடத்திப் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு பிரம்மானந்தாவின் உற்சாகம் முடிந்து விடும். பத்திரிக்கைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றிப் பேசி முடித்த பின் பாண்டியனும், திவாகரனும் தான் மீதியை முடிவெடுப்பார்கள். நாடு முழுவதும் என்றால் நான்கிலிருந்து நாற்பது வரைக்கும் கூட கோசாலைகள் அமைக்கப்படலாம். எத்தனை பெரிய கோசாலைகள், ஒவ்வொன்றிலும் எத்தனை பசுக்கள் என்பதை எல்லாம் அவர்கள் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத்திற்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். பெரும்பாலும், கேட்பவர்களுக்குப் பதில் சொல்லும்படியாக அது பெயரளவில் தான் இருக்கும். இப்படித்தான் இதற்கு முந்தைய திட்டங்களும் இருக்கின்றன. ஆனால் அறிவிப்பின் போதும், விழாவின் போதும் பார்ப்பவர்களுக்கு உடனடியாக மளமளவென்று எல்லாம் நடந்து விடப்போகிறது என்று தோன்றும். துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் யாரும் அறிவிப்பை நினைவு வைத்திருந்து, ஆகின்ற வேலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை!

 

கல்பனானந்தாவுக்கு விளம்பரங்களில் ஈடுபாடு இருந்ததில்லை. செய்திருக்கும் வேலைகள் தான் விளம்பரமாக இருக்க வேண்டும், அவை தான் பேச வேண்டும் என்று நினைப்பவள் அவள். அது குறித்த பிரம்மாண்ட அறிவிப்புகள், விழாக்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் யுக்திகள். அவற்றை ஆன்மீகவாதிகளும் செய்வது கேவலம் என்பது அவள் கருத்து. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்!

 

மின்னஞ்சலை அனுப்பி விட்டு தனதறைக்குத் திரும்பி வந்த போது அவள் மனம் ஏனோ கனமாக இருந்தது. அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்த போது சைத்ரா நினைவுக்கு வந்தாள். ஒரு காலத்தில் சைத்ரா அவளுடன் அந்த அறையில் இருந்திருக்கிறாள்...

 

ஆண் துறவிகளில் கண்ணனின் அறையிலும், பெண் துறவிகளில் கல்பனானந்தாவின் அறையிலும் வேறு துறவிகள் இருப்பது இல்லை. ஆனால் யோகாலயத்தின் சில அறைகளில் ரிப்பேர் வேலைகள் நடந்த போது தற்காலிகமாக அங்குள்ள துறவிகள் மற்ற அறைகளில் புகுத்தப்பட்டார்கள். அப்போது கல்பனானந்தாவின் அறையில் சைத்ரா வந்து சேர்ந்தாள். ஒரு மாத காலம் அவள் அறையில் இருந்தாள்.

 

பொதுவாக எல்லோரிடமும் அன்பும், அக்கறையும் காட்டினாலும் கூட கல்பனானந்தா யாரிடமும் மிகவும் நெருங்கிப் பழகுபவள் அல்ல. யோகாலயத்தில் அப்படி நெருங்கிப் பழகுவதும், பேசுவதும் ஊக்குவிக்கப் படுவதுமில்லை. சைத்ரா கள்ளங்கபடமில்லாதவள் என்பதோடு, அவள் மேற்பார்வையில் நிறைய வேலைகளை மிகவும் துடிப்போடு சிறப்பாகச் செய்பவள் என்பதால், கல்பனானந்தாவுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அந்த ஒரு மாத காலத்தில் அறையில் இருக்கும் போது கல்பனானந்தாவிடம் மனம் விட்டுப் பேசுமளவு சைத்ரா அவளுக்கு மிகவும் நெருக்கமானாள். தன் குடும்பத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும், துறவில் வந்த ஈடுபாட்டைப் பற்றியும் சைத்ரா அவளிடம் மனம் விட்டுச் சொன்னாள்.

 

சைத்ரா தன் தந்தையைப் பற்றிச் சொன்னது கல்பனானந்தாவுக்கு ஒரு வித்தியாசமான தந்தையை அறிமுகப்படுத்தியது. மகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்தத் தந்தை, மகள் சொன்ன எதையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டதை எல்லாம் கேட்ட போது இப்படியும் ஒரு தந்தையா என்று கல்பனானந்தா பிரமித்தாள். அவளுக்குத் தன் தந்தையோடு அந்த உன்னத மனிதரை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.   

 

தன் துறவுக்கும் கூட தந்தை கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு சொல்லாமல் அனுமதித்ததைச் சொன்ன போது சைத்ரா கண்ணீர் விட்டு அழுதாள். மகளாக அந்தத் தந்தையின் சந்தோஷத்திற்கு எதையும் திருப்பிச் செய்ய முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி தனக்கு இன்னும் இருப்பதாகச் சொன்னாள்.  சைத்ரா தன் தாத்தாவைப் பற்றியும் மிக உயர்வாகச் சொன்னாள். தந்தையும் தாத்தாவும் செய்து வரும் தர்ம காரியங்களைப் பற்றியும் சைத்ரா பெருமையாகச் சொன்னாள். இப்போதும் சில விஷயங்களில் தாத்தா தன் மகனைக் கடிந்து கொள்வதை அவள் புன்னகையோடு நினைவு கூர்ந்தாள். சேதுமாதவனும் உயர்ந்த தந்தையாக கல்பனானந்தா மனதில் பதிந்தார். 

 

தாத்தாவும் ஆன்மீகத்தில் அதிக ஆழம் உள்ளவர் என்றும், நிறைய படிப்பவர் என்றும் சைத்ரா சொன்னாள். அவர் படிப்பதாக அவள் நினைவுபடுத்திச் சொன்ன புத்தகங்களும், எழுத்தாளர்களும் அவள் சொல்வதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. அந்த அளவு ஞானமுள்ள தாத்தா, ஞானக்கடலான யோகிஜியின் உயர்வை அதிகமாக உணராதது ஆதங்கமாக இருப்பதாக சைத்ரா சொன்னாள்.

 

கல்பனானந்தா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வேதங்கள், உபநிஷத்துக்கள், கீதை போன்றவற்றின் சாராம்சத்தை விவரித்து, பேச்சுத் திறமையுள்ள யார் பேசினாலும் அது உயர்வாகவே இருக்கும். ஆனால் அத்தனை ஞானமும் பேசுபவனின் ஞானம் என்று கேட்பவன் நம்பினால், அவன் ஏமாறவே வேண்டி வரும். இது தான் ஆன்மீகத்தில் பல புத்திசாலிகள் சறுக்கக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை சைத்ராவிடம் கல்பனானந்தாவால் சொல்ல முடியவில்லை.

 

அப்படி கல்பனானந்தாவின் அறையில் சைத்ரா தங்கி இருக்கையில் தான் ஒரு முறை யோகாலயாவின் ஒரு பகுதியில் புதிய தோட்டம் உருவாகியது. அதற்கு வேண்டிய புதிய செடிகளை வாங்க கல்பனானந்தா ஒரு நர்சரி தோட்டத்திற்குப் போனாள். போகும் போது சைத்ராவையும் அவள் அழைத்துக் கொண்டு போனாள். அப்படிப் போன போது தான் ஒரு அற்புத யோகியை அந்தத் தோட்டத்தில் அவர்கள் பார்த்தார்கள்.

 

பார்த்தவுடனேயே அந்தக் கிழவரின் அமைதியும், சாந்தமும் அவர்களைத் தொற்றிக் கொண்டது போல் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். அந்த நர்சரி தோட்டத்திற்கு இதற்கு முன்பும் பல முறை கல்பனானந்தா சென்றிருக்கிறாள். ஆனாலும் முன்பு அவள் அவரை அங்கு பார்த்ததில்லை. அதனால் நர்சரி உரிமையாளரிடம் அவள் கேட்டாள். “அவர் புதியவரா?”

 

ஆமாம் சுவாமினி. அவர் ஒரு நாடோடிபெயர் ரகுராமன். போன மாசம் தான் இங்கே வந்து சேர்ந்தார். தங்கமான மனுஷன்.” என்று அவர் சொன்னார்.

 

சற்று தொலைவில் அமர்ந்திருந்த ரகுராமன் ஒரு குழந்தையின் கவனக்குவிப்புடன் புதிய செடிகளை பிளாஸ்டிக் பையில் மண்ணோடு நிரப்பி வைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு செடியையும் அவர் குழந்தையைப் பார்ப்பது போல் புன்னகையுடன் பார்த்தார். எந்திரத்தனமாக இல்லாமல் ஒரு தாய் குழந்தைகளைப் பராமரிப்பதைப் போல் அவர் கையாண்டார். மண்ணில் அமர்ந்திருந்த அவர் ஆடைகளிலும், கைகளிலும் இருந்த மண்ணை அவர் மண்ணாக நினைத்தது போல் தெரியவில்லை.

 

ஒரு சிறுவன் டீயும் பிஸ்கட் பாக்கெட்டையும் கொண்டு வந்து அவரிடம் தருவதை அவர்கள் பார்த்தார்கள். தூரத்தில் இருந்த நாய்கள் எல்லாம் அவரை நோக்கி ஓடி வந்தன. அவர் டீயைக் குடித்துக் கொண்டே பிஸ்கெட்டுகளை அந்த நாய்களுக்குப் போட்டார். அவை சாப்பிடும் அழகை அவர் பார்த்த விதம், ஒரு தாய் தன் குழந்தைகள் சாப்பிடும் அழகைப் பார்த்து ரசிப்பது போல் இருந்தது.

 

அவர்கள் அந்தக் கிழவரைப் பார்ப்பதைக் கவனித்த உரிமையாளர் சொன்னார். ”இப்படித்தான் அவர். கடைசில அவருக்கு ஒரு பிஸ்கட் கூட மிஞ்சாது. காலை நேரங்கள்ல பறவைகள் எல்லாம் அவர் பக்கத்துல வரும். தானியங்கள் போடுவார். அவர் வாங்கற சம்பளம் பூராவும் இப்படித்தான் செலவாகுது.”

 

அவர்கள் அங்கே இருந்த ஒரு மணி நேர காலத்தில் அவரிடம் ஒரு வினாடி கூட அமைதியோ, சாந்தமோ குறைந்து அவர்கள் பார்க்கவில்லை. சைத்ராவிடம் கல்பனானந்தா முணுமுணுத்தாள். “அவர் ஒரு யோகி சைத்ரா.”

 

சைத்ரா திகைப்புடன் அவளைப் பார்த்தாள்.

(தொடரும்)

என்.கணேசன்



2 comments:

  1. பிரம்மானந்தா ஒரு பித்தலாட்டக்காரன் என்பதை கல்பனாநந்தா ஒரே வார்த்தையில் புரிய வைத்து விட்டார்.

    ReplyDelete
  2. நிஜ யோகியை பற்றி சொல்ல இரண்டு பக்கங்களுக்கு மேல் ஒன்றுமில்லை,
    போலி யோகியை பற்றி கூற இரண்டு புத்தகங்கள் கூட போதவில்லை...

    ReplyDelete