அந்த மனிதன் அவள் வீட்டு அறை ஒன்றில் பதுங்கியிருந்து கொண்டு
அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் இந்த
வீட்டுக்குள் மதியம் மூன்று மணியளவிலேயே வந்து விட்டான். அவனிடம்
அவள் வீட்டு வெளி கேட் பூட்டின் கள்ளச் சாவியும், வீட்டின்
பிரதான கதவின் கள்ளச் சாவியும் இருக்கின்றன. மதியம்
வந்தது முதல் அவனுக்கு ஓய்வேயில்லாமல் வேலை இருந்தது.
உள்ளே வந்தவுடன் சிசிடிவி கேமிராவில்
பதிவாகியிருந்த அவனுடைய நுழைவின் பதிவை அவன் அழித்து விட்டான். இனி எதுவும்
அதில் பதிவாகாதது போல் செய்து விட்டு தான் அவனுடைய மற்ற வேலைகளை அவன் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய
லேப்டாப்பில் மட்டும் அவன் மூன்று மணி நேரம் செலவழித்திருக்கிறான். அவளுடைய
கடந்த மூன்று வருடங்களின் டைரிகளைப் படித்திருக்கிறான். எங்கெல்லாம்
ஒருத்தி முக்கியமான ஆவணங்களை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம்
அவன் மிகவும் பொறுமையாகச் சோதித்துப் பார்த்திருக்கிறான்.
இன்னும் சோதித்துப் பார்க்க இரண்டு
இடங்கள் இருக்கின்றன. அதைப் பார்க்கலாம் என்று நினைத்த போது தான் அவனுடைய ஆள் அலைபேசியில்
தகவல் அனுப்பினான். ”அவள் வந்து கொண்டிருக்கிறாள். இன்னும்
இரண்டு நிமிடங்களில் வந்து விடுவாள்.”
அதனால் தான் அந்த இரண்டு இடங்களை அவன்
சோதித்துப் பார்க்கவில்லை. அவள் வருவதற்குள் அவன் அந்த அறையில் வந்து ஒளிந்து கொண்டான். அந்த அறை
விருந்தினர் அறை. அங்கு வந்து தங்கும் படியான ஆட்கள் அந்த வீட்டுக்கு வருவதில்லை. அதனால்
அவளும் அந்த அறைக்கு வருவதில்லை. அவளுடைய வேலைக்காரி மட்டும் தினமும் வந்து சுத்தம் செய்து
விட்டுப் போவாள்...
அந்த இரண்டு இடங்களைச் சோதித்துப் பார்க்க
அவனுக்கு இருபது நிமிடங்கள் தான் தேவைப்படும். அந்த இரண்டு
இடங்களில் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவனுக்கு 99% தெரியும். ஆனால் ஒரு
சதவீத வாய்ப்பையும் அவன் அலட்சியப்படுத்தியதில்லை. அலட்சியம், அவசரம் இந்த இரண்டு தவறுகளையும்
அவன் தன் தொழிலில் செய்ததேயில்லை. அதனால் தான் அவன் இதுவரை பிடிபட்டதேயில்லை. இன்னும் அவன் ஆராய வேண்டிய மிக முக்கியமான
ஒன்று உள்ளது. அது அவளுடைய அலைபேசி. அவளைக்
கொல்லாமல் அவன் அதை ஆராய முடியாது. இப்போதெல்லாம் பலருக்கும்
அலைபேசிகள் உடலில் ஒட்டிய உறுப்புகள் போல் ஆகிவிட்டன. அவர்கள்
அதை விட்டுப் பிரியும் நேரமே உறங்கியிருக்கும் நேரம் தான். அப்போதும்
அவை அவர்கள் பக்கத்திலேயே இருக்கும். காலை எழுந்தவுடன் மறுபடி
அவர்களுடைய கைகளில் சேர்ந்து கொள்ளும்…
அந்த அலைபேசியை ஆராய முக்கால் மணி நேரத்திலிருந்து ஒன்றேகால்
மணி நேரம் தேவைப்படலாம். அது முடிந்தால், பின் இந்த வீட்டுக்குள் பார்க்க வேண்டியது
எதுவும் இல்லை.
அவளுடைய வங்கி லாக்கரில் அவள் ஏதாவது
முக்கிய ஆவணத்தை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த ஒரு
பிரச்சினை இருக்கிறது என்பதை அவன் அந்த நபருக்குத் தெரிவித்திருக்கிறான். அந்த நபர்
சொன்னார். “அதை அப்புறமா பார்ப்போம். ஒரே நேரத்துல
எல்லாப் பிரச்சினைகளையும் யாரும் தீர்க்க முடியாது. அப்படி
அவசரப்பட்டு தீர்க்கப் போனா நம்ம அரைகுறை முயற்சிகள்ல சில புதுப்பிரச்சினைகளை உருவாக்கிடுவோம். அதனால, இருக்கற
பிரச்சினைகள ஒவ்வொன்னா தான் பொறுமையாய் தீர்க்கணும்.”
ஆபத்தான மனிதர் என்று அவன் அவரை புன்னகையுடன்
நினைத்துக் கொண்டான். இந்த முன்னாள் நடிகை ஒரு வடிகட்டிய
முட்டாள். அவருக்கு எதிரியாகும் முட்டாள்த்தனத்தை இவள் செய்திருக்கக்கூடாது. ஒருவன்
தனக்குச் சமமானவர்களுடனும், தனக்குக் கீழே உள்ளவர்களுடனும் பகை வைத்துக் கொள்ளலாம். தன் சக்திக்கு
மீறிய வலிமையானவர்களுடன் பகை வைத்துக் கொள்வது வடிகட்டிய முட்டாள்த்தனம்...
நர்மதா எழுந்து போய் கதவைச் சரியாகத்
தாளிட்டிருக்கிறோமா என்று பார்த்து விட்டு வருவது தெரிந்தது. இனி அவள்
அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டால் அவன் வந்த வேலை முடியாது. அமைதியாக
அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
*****
விமல் காலை கண்விழித்த போது மணி 6.10. சென்று காலைக்கடனை முடித்து விட்டு வந்து அலைபேசியை எடுத்தான். நர்மதா எதாவது தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்தான். அவளிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை. இனியும் அவளை எச்சரிக்காமல் இருப்பது ஆபத்து. அலைபேசியில் அவன் அவளை அழைத்தான். மணியடித்தும் அவள் அலைபேசியை எடுத்துப் பேசவில்லை. அவன் அலைபேசியில் நேரம் பார்த்தான். மணி 6.52. அவள் எழுந்து பாத்ரூம் போயிருக்கலாம்... பத்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் அழைத்தான். இப்போதும் அழைப்பு மணி முழுசுற்று போய் நின்றது.... அவனுக்குள் மெல்ல பதற்றம் உருவாக ஆரம்பித்தது. அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோ? இல்லை ’சைலண்ட் மோடில்’ வைத்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளா? சில சமயங்களில் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு அப்படித் தூங்குவது உண்டு. ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்கலாம் என்று நம்ப அவன் மனம் மறுத்தது. மேலும் ஏழு நிமிடங்கள் பொறுத்து விட்டு அவன் அவளை மறுபடியும் அழைத்தான். பதில் இல்லை.
ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்…? அவனுடைய பயம் அதிகமாகியது. அவளுக்கும், அவனுக்கும் இடையே
இருக்கும் நெருக்கம் பலரும் அறிந்தது தான். எதிரிகள்
அவளுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களுடைய அடுத்த இலக்கு அவனாகத் தான்
இருக்கும்.... பயம் பீதியாக மாறியது.
அவளை அவர்கள் கொன்றிருக்கவும் வாய்ப்பு
உண்டு. அப்படி அவள் இறந்திருந்தால் அதற்குக் காரணமாக போலீஸார் சந்தேகப்படும்
நபர்களில் கண்டிப்பாக அவனுக்கு முதலிடம் இருக்கும். நேற்று
இரவில் அவன் தான் அவளிடம் கடைசியாகப் பேசியவன். அவன் அவளுடைய
வீட்டுக்குச் செல்லவில்லை, இங்கேயே தான் இருந்தான் என்று அவன் கஷ்டப்பட்டு நிரூபித்தால்
கூட, ”கடைசியாக உன்னிடம் தானே பேசினாள்? அவள் என்ன
பேசினாள்?” என்ற கேள்வியிலிருந்து போலீஸார் ஆரம்பிப்பார்கள். கொலையாளி
சிக்காத பட்சத்தில் அவனையே கொலையாளியாக்கப் பார்ப்பார்கள். அவர்களுக்கு
வழக்கை முடிக்கும் அவசரம் இருக்கும். அதற்கு அவர்களுக்கு
அவனை விடப் பொருத்தமான ஆள் கிடைக்காது....
தேவையில்லாமல் கற்பனை வளத்தை ஓட விடுகிறோமோ
என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அவன் மறுபடி அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான். அவளிடமிருந்து “ஹலோ” என்ற ஒரு
வார்த்தை கேட்டு விட்டால் போதும்; அவன் நிம்மதியாகி விடலாம். ஆனால் இப்போதும்
மணி அடிப்பது ஒரு முழு சுற்று போய் நின்றது.
இனி இங்கிருப்பது ஆபத்து என்று அவனுக்குத்
தோன்ற ஆரம்பித்தது. போலீஸார் வராமல் எதிரிகள் அனுப்பி வைக்கும் குண்டர்கள் வந்தாலும்
அவனுக்குப் பிரச்சினையே. அவள் அவனிடம் எதையும் சொல்லாமல் இருக்க மாட்டாள் என்பதை அவர்கள்
கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். அவளைத் தூண்டி விட்டவனே அவன் தான் என்பதை அவள் வாய் தவறிச்
சொல்லியும் இருக்கலாம்....
அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அவசர அவசரமாக
அவனுடைய சில உடைகளையும், வீட்டில் இருக்கும் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு
அவன் கிளம்பினான். எப்போதும் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அவன். ஆனால் இன்று
அவனுக்குக் கண்ணாடி பார்க்கவும் தோன்றவில்லை. எங்கே போவது
என்று கூட அவன் யோசிக்கவில்லை. உயிருடன் இருப்பதே மிக முக்கியம்....
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment