என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 15, 2026

சதுரங்கம் 1


மூன்று நாட்களாகவே யாரோ சிலர் நர்மதாவைத் தொடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவள் எங்கே போகிறாள், யாரைச் சந்திக்கிறாள், யாருடன் பேசுகிறாள், எப்போது வீடு திரும்புகிறாள், அவள் வீட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள், வந்தவர்கள் எவ்வளவு நேரம் அவள் வீட்டில் தங்குகிறார்கள் என்பதையெல்லாம் இரகசியமாகக் கவனிக்கிறார்கள். அவள் அதிபுத்திசாலி அல்ல என்றாலும், தன்னைச் சிலர் பின்தொடர்வதை அவள் நேற்று தான் தன் உள்ளுணர்வால் உணர்ந்தாள்.  பின் அவள் எச்சரிக்கையுடன் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். திரும்பத் திரும்ப அவள் பார்வையில் பட்ட மனிதர்கள் சிலரை  யதேச்சையாக மறுபடி மறுபடி பார்க்க நேர்வதாக  அவளால் நம்ப முடியவில்லை. அவளைக் கண்காணிக்கவும், பின் தொடரவும் யார் ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்பதை அவள் அறிவாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் கண்காணிப்பதால் இப்போது அவளுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அடுத்ததாக என்ன நடக்கும், ஆபத்து எதாவது வரக்கூடுமா என்ற கேள்விகள் மெல்ல அவள் மனதில் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு நிச்சயமான பதில்களை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருவேளை இது ஆபத்திற்கான முன்னோடியாக இருந்தால் என்ற கேள்வியில் நர்மதா சிறிது நேரம் தங்கினாள். முடிவில், தவறு செய்து விட்டோமோ என்று ஒரு கணம் அவளுக்குத் தோன்றியது. அதை அவள் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் அவள் ஒரு பேரதிர்ஷ்டசாலியாக இருந்தவள். திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக அவள் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் உச்சத்தில் இருந்திருக்கிறாள். அந்தக் காலக்கட்டத்தில் அவள் தான் தென்னிந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிஅவளுடைய கால்ஷீட்டுக்காக பல முன்னணிக் கதாநாயகர்களும் தாங்கள் கொடுத்திருந்த நேரங்களை மாற்றிக் கொண்டதுண்டு. முடிசூடாத மகாராணியாக இருந்த அவள் பிறகு மார்க்கெட் இழந்து பின்னுக்குத் தள்ளப்படும் நிலை வரும் என்று கற்பனையாகக் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் மனிதன் நினைத்துப் பார்க்காத நிலைகளை எல்லாம் அலட்டாமல் உருவாக்கி மகிழும் விதி அவள் வாழ்க்கையிலும் விளையாடியது. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நின்று அவளை சகோதரியாகவும், அம்மாவாகவும் நடிக்க படக்கம்பெனிகள் அணுகிய போது அவள் அடைந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு முன்னணிக் கதாநாயகன் பெயரைச் சொல்லிஅவனை அப்பா வேஷத்துக்குக் கூப்பிட்டு பாரு. ஏன்னா அவனுக்கு அப்பா வயசு கூட இல்லை, பெரியப்பா வயசு. அவன் அந்த வேஷத்துல நடிக்க ஒத்துகிட்டான்னா நானும் அக்கா வேஷத்துல நடிக்க ஒத்துக்கறேன்என்று சொல்லி அனுப்பினாள்.

அவள் சொன்னது பின்பு பலராலும் பேசப்பட்டது, பலராலும் விவாதிக்கப்பட்டது. சிலர்திமிர் பிடித்தவள்என்று அவளை அழைத்தார்கள். அவள் அதற்குக் கவலைப்படவில்லை. அவள் திமிர் பிடித்தவள் தான். அதற்குப் பின் அம்மா, அக்கா வேடத்திற்காக யாரும் அவளைத் தேடி வரவில்லை. அவளுக்கு மொத்தமாக படவாய்ப்புகளே இல்லாமல் போகும் துரதிர்ஷ்டம் தான் வந்தது. புகழின் உச்சத்தில் இருப்பது ஒரு போதை. அந்தப் போதையில் திளைத்து மிதந்தவர்களுக்கு உச்சத்திலிருந்து சிறிது இறங்க நேர்வதும் வேதனை தான். அப்படி இருக்கையில் அவள் ஆட்சி செய்த இடத்திலேயே காணாமல் போக நேர்ந்தது நர்மதாவுக்கு நரக வேதனையாக இருந்தது.  அது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பணம் நின்று போனது கூடுதல் கொடுமையாக இருந்தது.

அடிப்படைத் தேவைகளுக்கு வாழ்நாள் இறுதி வரை அவளுக்கு வேண்டிய செல்வம் இருந்தாலும் கூட அவளால் அடிப்படைத் தேவைகளோடு திருப்தி அடைய முடியவில்லை. ஆடம்பரங்களில் திளைத்துப் பழகி விட்ட அவளுக்கு, பின் ஆடம்பரங்களைச் சிறிதும் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தத் தவிப்பில் அவள் இருந்த போது தான் அந்த நட்பு அவளுக்கு ஏற்பட்டது. அந்த நட்பிற்குப் பின் பிரபலமாக அவள் மின்னா விட்டாலும், பழையபடி தேவைக்கேற்ற தாராள பணப்புழக்கத்தில் அவளால் வாழ முடிந்தது.

அந்த வாழ்க்கையில் அவள் திருப்தியுடன் அடங்கி இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்று இப்போது அவளுக்குத் தோன்றுகிறது. அவள் திருப்தியுடன் தான் இருந்தாள். அவளுடைய காதலன் விமல் தான் அவளுடைய ஆசையைத் தூண்டி விட்டான். ஆற்றில் வேண்டிய அளவு தண்ணீர் இருக்கையில் இரண்டு குடம் கூடுதலாக எடுத்தாலும் ஆற்றுக்கு தண்ணீர் குறையப் போவதில்லை என்று சொன்னான். அதிகப் பணம் வந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று சொன்னான். பணவரவுக்கான வழியையும் அவன் தான் சொல்லிக் கொடுத்தான். அவன் சொன்னபடி முயன்றது தப்பாகி விட்டதோ?

நர்மதா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்பதே கால். ஹாலில் இருந்து அவள் அறைக்குச் சென்றாள். அறையில் விளக்கைப் போடாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவள் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டு வாசலின் முன் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அவன் மூன்று நாளாக இரவு நேரங்களில் அதே இடத்தில் தான் இருக்கிறான். எதிர் வீட்டுக்காரர் கனடாவில் இருக்கும் அவருடைய மகன் வீட்டுக்குப் போயிருக்கிறார் என்பதால் அங்கிருந்து அந்த பிச்சைக்காரனைத் துரத்த அந்த வீட்டில் யாரும் இல்லைமூன்று நாட்களுக்கு முன்பு வரை அவனை அந்தப் பகுதியில் அவள் பார்த்ததே கிடையாது. அவன் பிச்சைக்காரன் அல்லவோ என்ற சந்தேகம் இப்போது அவள் மனதில் தீவிரமாக எழுகிறது. இரவு நேரங்களில் அவள் வீட்டைக் கண்காணிக்கும் வேலையைத் தான் அவன் பிச்சைக்காரன் வேடத்தில் செய்கிறானோ?

நர்மதாவை இனம்புரியாத ஒருவித பயம் பற்றிக் கொண்டது. அவள் உடனடியாக அலைபேசியை எடுத்து விமலைத் தொடர்பு கொண்டாள்.

சொல்லு டார்லிங். என்ன விஷயம்?” என்று அவன் உற்சாகமாகச் சொன்னான்.

நர்மதா மூன்று நாட்களாக அவள் பின்தொடரப்படுவதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும் சொன்னாள். இப்போதும் எதிரில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒருவன் அவள் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதைச் சொன்னாள். அவன் உற்சாகம் வடிந்து போனதை அவளால் உணர முடிந்தது. ஒரு நிமிடம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. பின் மெல்லக் கேட்டான்.  ”வீட்டுல சிசிடிவி கேமரா எல்லாம் சரியா தானே வேலை செய்யுது? செக் பண்ணியா

அது சரியா தான் இருக்கு. இன்னைக்குக் காலைல கூடப் பார்த்தேன். அப்படி பார்க்கறப்ப தான் பகல்லயும் இந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத சில பேர் அடிக்கடி இந்தப் பக்கம் நடமாடறதையும், இந்த வீட்டைப் பார்த்துகிட்டே கடந்து போறதையும் கவனிச்சேன். இதையெல்லாம் ஏன் செய்யறாங்க, இனி என்ன செய்வாங்கன்னு எனக்குப் புரியல விமல்

அவளுக்குப் புரியா விட்டாலும், அவர்கள் இனி என்ன செய்யக்கூடும் என்பது விமலுக்குப் புரிந்தது. அவள் இனி இரவு நேரங்களில் தனியாக இருப்பது ஆபத்து தான். ஆனால் அதைச் சொல்லி ஏற்கெனவே பயப்பட ஆரம்பித்திருக்கும் அவளைக் கூடுதலாக இப்போது பயமுறுத்த அவன் விரும்பவில்லை. ஆனால் காலையில் அவளிடம் சொல்லி எச்சரித்து விட வேண்டும்....

விமல், நாம பேராசைப்பட்டுட்டோமோ?” நர்மதா மெல்லக் கேட்டாள்.

விமல் சொன்னான். “நம்ம ஆசையைப் பேராசைன்னு சொன்னா, அவங்க ஆசைக்கு என்ன பேர் வைக்க முடியும் டார்லிங். அகராதியிலயே அதற்கு சரியான வார்த்தை கிடைக்காதே. உனக்கு கொடுக்கறது அந்த ஆளுக்கு வெறும் பிச்சைக்காசு.”

அப்படி இருக்கறப்ப எதுக்கு இப்படியெல்லாம்...?”

நீ தனியாளாய் இதைக் கேக்கறியா, இல்லை உனக்கு பின்னால வேற யாரும் இருக்கறாங்களான்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பற மாதிரி தெரியுது. அப்படி இருந்தா அது யாருன்னு கண்டுபிடிக்க விரும்பறாங்கன்னு நினைக்கிறேன்.”

அவ்வளவு தானா? நான் என்னென்னவோ நினைச்சு பயந்துட்டேன்நர்மதாவின் குரலில் நிம்மதி தெரிந்தது.

விமல் சொன்னான். “ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்கிறது நல்லது. முன் பின் தெரியாதவங்க என்ன காரணம் சொல்லிகிட்டு வந்தாலும் கதவைத் திறக்காதே.”

அந்த முட்டாள்த்தனமெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் வெளி கேட் கூட பூட்டி தான் வெச்சிருக்கேன்.” 

நல்லது. அப்படின்னா நிம்மதியா தூங்கு. நாளைக்கு காலைல பேசுவோம்.”

(தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment