கால ஓட்டத்தில் பின்பு நடந்தவை எல்லாம் கல்பனானந்தாவின் வேதனையை
அதிகப்படுத்தின. யோகாலயத்திற்கு வெளியே தினமும் நின்ற நிருபர்கள், வழக்கு
எல்லாம் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் எந்த வகையிலும் அசைக்கவில்லை என்பதை அவள்
நேரடியாகவே பார்த்தாள். அவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதது போலவே நடந்து கொண்டார்கள். சைத்ரா
எங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவில்லை. அவளை நினைக்கையில்
எல்லாம் மனம் ரணமானது. உயிரோடு புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரியவில்லை.
சைத்ராவின் அறையில் உடனிருந்த கவிதானந்தாவும், அபிநயானந்தாவும்
கூடுதலாகக் கண்காணிக்கப்படுவதைப் பார்த்த போது தான் மொட்டைக்கடிதம் எழுதியது அவர்களாக
இருக்கலாம் என்ற சந்தேகம் பாண்டியனுக்கு எழுந்திருப்பதைப் புரிய வைத்தது. அவர்கள்
இருவரும் சைத்ராவுடன் ஒரே அறையில் வசித்ததால் அவர்கள் அவளிடம் கொலை பற்றிச் சொல்லியிருக்கலாம்
என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை வைத்து, யோகாலயத்
தபால்களுடன் இந்த மொட்டைக்கடிதத் தபாலையும் சேர்த்து வைத்திருக்கும் வாய்ப்பும் அவர்களிருவருக்கும்
இருப்பதாக பாண்டியன் எண்ணியதாகத் தெரிந்தது. அவர்கள்
இருவர் அளவு அல்லா விட்டாலும், கல்பனானந்தாவையும் சந்தேகக்கண்ணோடு தான் பாண்டியன் பார்ப்பதாக
அவள் உணர்ந்தாள். சைத்ரா அவளிடம் சொல்லியிருக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர்
எண்ணியிருக்கலாம். ஆனால் சைத்ரா, தான் பார்த்த கொலையை
வேறு யாரிடமும் சொல்லி விடவில்லை என்று உறுதியாகச் சொல்லியிருப்பாள் என்றே கல்பனானந்தாவுக்குத்
தோன்றியது. ஏனென்றால் கவிதானந்தா, அபிநயானந்தா, அவள் மூவருக்கும்
எந்தப் பிரச்சினையும் அங்கு எழவில்லை. ஆனால் யோகாலயாவில் காமிராக்களும், கண்காணிப்புகளும்
அதிகரிக்க ஆரம்பித்தன. இப்படி ஒரு இடத்தில் இருக்க வேண்டி வந்ததில் கல்பனானந்தா
சித்திரவதையை உணர்ந்தாள்.
சைத்ரா கோவிட்டில் இறந்தாள் என்ற செய்தி
வெளியானதும், தொடர்ந்து அவளுடைய தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும்
கல்பனானந்தாவை தனியாக அறையில் அழ வைத்தன. இறைசக்தியும் கர்மா சித்தாந்தமும்
கூட சில சமயங்களில் கேள்விக்குறியாயின.
எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களை யாரும்,
எதுவும் அசைக்க முடியாது என்ற கர்வத்தில் அவர்கள் இருந்தது அவளைக் குமுற
வைத்தது. காலம் போகப் போக, இனி யாரும் இவர்களை
எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியும் அவளுக்குள் எழுந்தது.
ஆனால் திடீரென்று ஒரு நாள் யோகாலயத்தில் அர்த்த ஜாம பூஜை ஒன்று
நடந்தது. அங்கே
எப்போதாவது பூஜையும், ஹோமங்களும் நடைபெறும் என்றாலும் அது இப்படி
அர்த்த ஜாம பூஜையாக இருந்ததில்லை. அன்றைய பூஜையைச் செய்ய வந்திருந்தவரை
பாண்டியனும், அப்போது அடிக்கடி வர ஆரம்பித்திருந்த டாக்டர் சுகுமாரனும்
சேர்ந்து வரவேற்றது அவளை ஆச்சரியப் படுத்தியது. மறுநாளிலிருந்து
பாண்டியன் கையில் தெரிந்த தாயத்து அவளைப் பேராச்சரியப்படுத்தியது. பெயரளவில் கூட, பிரம்மானந்தாவுக்காகவும்
ஆன்மீக அடையாளங்கள் எதையும் அணிந்து கொள்ளாத பாண்டியன் கையில் தாயத்தா? இது நிஜமா, கனவா என்று கூட அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அதன் பிறகு தான் அவர்களிடம் பயமும், பதற்றமும்
தெரிய ஆரம்பித்தன. கால தாமதமானாலும், கடவுளும்,
கர்மாவும் வேலை செய்வதை அவளால் பார்க்க முடிந்தது.
ஷ்ரவன் அங்கு வகுப்புகளுக்கு வந்து புதிராக நடந்து கொண்டதும், அவன் மீது அவர்கள் அக்கறை
காட்டி அவனைப் பேச வைக்க ஆர்வம் காட்டியதும் அவள் சற்றும் எதிர்பாராதது. அவன் சொன்னது எதிலும் அவளுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவர்கள்
அதை நம்பினார்கள் என்பது தெரிந்தது. அதுவும் அவளை ஆச்சரியப்படுத்தியது.
இங்கே என்னென்னவோ புதிதாய் நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் புரிந்தது.
இவர்களைப் பாதிக்கும் விஷயங்களில் தீர்வோ, கூடுதல்
ஞானமோ தன்னிடம் இருப்பது போல் அவன் காட்டிக் கொள்கிறான் என்பதையும் அவள் யூகித்தாள்.
அவன் உத்தேசம் என்னவென்று ஆரம்பத்தில் அவளுக்குப் பிடிபடவில்லை.
முதலில் இவர்களிடம் காசு பறிக்க தந்திரமாக அவன் செயல்படுகிறான் என்று
கூட அவளுக்குத் தோன்றியது.
சைத்ராவுக்கும்,
அவளுக்கும் மட்டுமே தெரிந்த யோகி சமாச்சாரத்தை அவன் பேசியது அவளுக்குப்
பேரதிர்ச்சியாக இருந்தது. அதை அவன் கண்டுபிடித்தது எதாவது விசேஷ
சக்தி மூலமாகவே இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. முந்தைய அவளது சந்தேகங்களுக்கு இது பொருந்தவில்லை. அவன்
அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறான் என்று மட்டும் அவளுக்கு உறுதியாகியது.
ஆனால் இன்னொரு பலி இங்கே தரப்பட வேண்டாம் என்று நினைத்து அவள் அவனை எச்சரிக்கவும்
செய்தாள்.
பின் அவள் அவனை அதிகம் கவனிக்க ஆரம்பித்தாள். தோட்டக்காரன் மருதகாசிக்கும்
அவனுக்கும் இடையே எதோ சம்பந்தம் இருப்பது மெல்லப்
புரிந்தது. அப்படியானால் இதில் இவன் ஒருவன் மட்டுமல்ல,
தோட்டக்காரன் என்ற பெயரில் இவனுக்கு ஒரு கூட்டாளியும் இருக்கிறான் என்பதும்
புரிந்தது. பின் தான் இவர்கள் போலீசாக இருக்கலாமோ என்ற சந்தேகம்
எழுந்தது. முதல்வர் தமிழகம் திரும்பி வந்ததும் சைத்ராவின் தாத்தா
அவரிடம் போய்ப் பேசியிருக்கலாம், அதன் பின் நடக்கும் ரகசிய ஏற்பாடாக
இது இருக்கலாம் என்ற உண்மையும் அவளுக்குப் பிடிபட்டது.
ஷ்ரவனுக்கும்,
மருதகாசிக்கும் இடையே நடந்த துண்டுச் சீட்டுப் பரிமாற்றத்தின் பின் துண்டுச்
சீட்டு கண்காணிப்பாளன் கையில் கிடைத்தும் கூட அவனோ, பாண்டியனோ
எதுவும் கண்டுபிடித்து விட முடியாதது அவள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அவள் என்றோ நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நல்ல காரியம் தற்போது
நடக்கிறது என்ற திருப்தி அவளுக்கு ஏற்பட்டது. ஆபத்தானாலும் ஆபத்தைச்
சந்திக்க முடிந்த சாமர்த்தியசாலியாகவே ஷ்ரவனை அவள் எண்ணினாள். நீண்ட ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அவனை முழுவதுமாக நம்பலாம், முடிந்த விதங்களில் உதவலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.
ஸ்ரேயாவிடம் ஷ்ரவன் ஒப்படைத்த வேலை
இரவு, பகலாக
நடந்தாலும் முன்னேற்றம் ஆமை வேகத்திலேயே இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
சொல்லப் போனால் அது முன்னேற்றம் தானா, ஏதாவது உபயோகமான
தகவல் கிடைக்குமா என்ற சந்தேகம் கூட அவள் மனதில் எழ ஆரம்பித்தது.
சைத்ராவின் தந்தைக்கு வந்த மொட்டைக்கடிதம் நாளிலிருந்து ஒரு
மாத காலம் முன்பிலிருந்து நடந்த கொடுக்கல்,
வாங்கல், பணபரிவர்த்தனை, கிரையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் பார்த்துக் கொண்டிருந்த
போது தான் CMS
என்ற கோப்பு அவள் கவனத்தைக்
கவர்ந்தது. உள்ளே
சந்திர மோகன் என்பவரின் ஆதாரும், பான் கார்டும் பார்த்த போது
அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது. அந்தப் பெயரை ஷ்ரவன் சொல்லி இருந்ததாக நினைவு. உள்ளே
விலாசத்தில் சேலம் என்பதைப் பார்த்தவுடனேயே அது உறுதியாகியது. CMS
என்பது சந்திரமோகன், சேலம் என்பதன் பெயர்ச்சுருக்கமாக இருக்க வேண்டும். சைத்ராவின்
தந்தைக்கு மொட்டைக்கடிதம் வருவதற்கு சுமார் ஒரு வார காலம் முன்பு காணாமல் போன மனிதர்… யோகாலயம் செல்வதாகச் சொல்லி
விட்டுக் கிளம்பியவர் பின் வீடு திரும்பவில்லை என்பது நினைவு வந்தது. பரபரப்புடன் அவர் காணாமல் போனதாகப் புகார் தரப்பட்ட விவரத்தை இணையத்தில் தேடினாள்.
ஒரே ஒரு பத்திரிக்கையில் தான் அது சின்ன செய்தியாக வந்திருந்தது. அந்த தேதியைக் குறித்துக் கொண்ட அவள் அந்தக் கோப்பில் இருக்கும் வரவு செலவுக்கணக்கைப்
பார்த்தாள். சந்திரமோகன் காணாமல் போய் நான்கு தினங்கள் கழிந்த
பிறகு, தன்னிடமிருந்த சில நிலங்களை யார் பெயருக்கோ விற்றியிருக்கிறார்.
அது யார் பெயருக்கு என்று ஸ்ரேயா பார்த்தாள். கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயருக்கு
நிலங்கள் விற்கப்பட்டு இருந்தது.
பெயர் வித்தியாசமாய்த் தோன்றவே இணையத்தில் அவள் அந்தப் பெயரைத் தேடினாள். முகநூலில் கலிப்பாக்கம் சுந்தரகுரு
என்ற பெயரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் யோகாலயத்தில் வேலை செய்வதாய்
முகநூல் தெரிவித்தது.
ஸ்ரேயா பரபரப்புடன் ராகவனுக்குப் போன் செய்தாள்.
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment