சில நாட்கள் கழித்து சைத்ரா அவளுடைய அறைக்குத் திரும்பிப் போய்
விட்டாள். அறையில் உடன் இருக்கையில் பேசிக் கொண்டிருந்தது போல் பிறகு
நிறைய பேச முடியா விட்டாலும் அவர்களுடைய நட்பு அமைதியாகத் தொடர்ந்தது.
திடீரென்று ஒரு நாள் சைத்ரா மிகுந்த
பதற்றத்துடன் காணப்பட்டாள். அன்று நூலகத்தில் அவளுக்கு வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவளுடைய
பதற்றத்தைப் பார்த்த கல்பனானந்தா என்ன ஆயிற்று என்று கேட்டாள். பதில் சொல்லவும்
வார்த்தைகள் வராமல் சைத்ரா திணறுவதைப் பார்த்த பின் தான் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது
என்பது கல்பனானந்தாவுக்குப் புரிந்தது.
நூலகத்தின் உள்ளே ஒரு அறை இருந்தது. அந்த அறையில்
தான் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களின் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த அறைக்குத்
துறவிகளின் வருகை இருக்காது என்பதால் அந்த அறைக்குள்ளே கண்காணிப்பு காமிரா இல்லை. மொத்தமாக
நூல்கள் எங்காவது அனுப்ப வேண்டியிருந்தால், அல்லது, வந்திருக்கும்
புதிய நூல்களில் சில பிரதிகளை நூலகத்து அலமாரிகளில் வைக்க வேண்டியிருந்தால் மட்டுமே
புத்தகங்களை எடுக்க நூலகத்தில் வேலை செய்யும் துறவிகள் போவார்கள். அப்படிப்
போயும் உள்ளே நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அந்த அறைக்குள்
போவதும், வெளியே வருவதும் நூலகத்தில் அந்த அறைக்கு வெளியே உள்ள காமிரா
மூலம் பதிவாகும்.
பிரம்மானந்தாவைப் பற்றி ஒரு பக்தர்
எழுதியிருந்த புதிய நூல் ஒன்று முந்தைய நாள் தான் பல பெட்டிகளில் வந்து சேர்ந்திருந்தது. அவற்றைச்
சில நூலகங்களுக்கு அனுப்பவும், சில பிரதிகளை இந்த நூலகத்தில் படிக்க அலமாரியில் வைக்கவும்
வேண்டியிருந்ததால் அந்த நூல்களை எடுக்கும் சாக்கில் சைத்ராவை அந்த அறைக்கு கல்பனானந்தா
அழைத்துக் கொண்டு போனாள்.
உள்ளே போனதும் அவள் கேட்டாள். “என்ன ஆயிற்று
சைத்ரானந்தா?”
“நேற்று....
நேற்று இரவு.... ஒரு கொலை....” நடுங்கிய குரலில்
சைத்ரா சொன்னாள்.
கல்பனானந்தா அதிர்ச்சியடைந்தாள். “எங்கே?”
குரல் நடுங்க சைத்ரா சொன்னாள். “யோகாலயத்துக்குள்ளே
தான்”
“விவரமாய்ச்
சொல் சைத்ரானந்தா? யாரைக் கொன்றார்கள்? கொன்றது
யார்?”
நடந்ததை நடுங்கியபடியே தாழ்ந்த குரலில்
சைத்ரா சொன்னாள். முந்தைய நாள் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் சைத்ராவுக்கு உறக்கம்
வரவில்லை என்பதால் படுத்து இருப்பதும் எழுவதுமாக அவள் இருந்திருக்கிறாள். சுமார்
ஒன்றரை மணிக்கு வெளியே எதோ சத்தம் கேட்டதால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறாள். பாண்டியனின்
இருப்பிடத்திலிருந்து ஒருவனைக் கயிறால் கட்டி சில குண்டர்கள் வெளியே தூக்கிக் கொண்டு
வந்திருக்கிறார்கள். பாண்டியன் அவர்கள் பின்னாலேயே வந்திருக்கிறார். அவர்கள்
எல்லோரும் பின்பகுதிக்குப் போயிருக்கிறார்கள்.
அறை ஜன்னலில் இருந்து அதற்கு மேல் பார்க்க
சைத்ராவுக்கு முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவளுக்கு அறையில்
இருப்பும் கொள்ளவில்லை. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பின் பகுதியில் நடப்பது முழுவதுமாகத் தெரியும்
என்பதால் அவள் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறாள்.
பின்பகுதியில் முன்பே ஒரு பெரிய குழியை அவர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதனுள்ளே அந்த ஆளைக் குண்டுக்கட்டாக
உள்ளே போடுகிறார்கள். வாயையும், கை கால்களையும்
கட்டிப் போட்டிருந்தாலும் அந்த ஆள் கஷ்டப்பட்டு திமிறுவதை அவளால் பார்க்க முடிந்தது.
உயிரோடு ஆளைக் குழியில் போட்டு அவர்கள் மண்ணைப் போட்டு மூட ஆரம்பித்தார்கள்.
குழியை மூடி, மற்ற இடங்களில் உள்ள மணலையும் அள்ளி
அதன் மீது போட்டு, மேற்பரப்பில் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்து
விட்டு ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஒருவன் மட்டும் அங்கேயே இருந்து காவல் காத்தான். யாரும்
பார்க்கிறார்களா என்பதை அவன் சுற்றும் முற்றும் பார்ப்பதும் தெரிந்தது. சைத்ரா குனிந்து சத்தமில்லாமல் கீழிறங்கி வந்து விட்டாள். சொல்லி முடித்த போது சைத்ராவின் கண்களில்
நீர் நிறைந்திருந்தது.
எல்லாம் கேட்டு விட்டு கல்பனானந்தாவும் அதிர்ச்சியில் ஒரு கணம்
உறைந்தாள். பின்
நேற்று வந்த பெட்டியிலிருந்து மௌனமாக புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தபடியே கேட்டாள்.
“இறந்த ஆளை உனக்குத் தெரியுமா?”
“இல்லை.”
புத்தகங்களை சைத்ரா கையில் தந்தபடி கல்பனானந்தா சொன்னாள். “நல்ல வேளை அவர்கள் உன்னைப்
பார்க்கவில்லை…”
சொல்லச் சொல்ல, சைத்ரா தனதறையிலிருந்து வெளியேறி மொட்டை மாடிக்குப் போவது கண்காணிப்பு காமிராவில் போவது பதிவாகி இருக்கும், என்ற உண்மை கல்பனானந்தாவுக்கு உறைத்தாலும், அவள் அதை வெளியே சொல்லவில்லை. முதலிலேயே மிகவும் பயந்து போயிருக்கும் அந்தப் பெண்ணை அவள் மேலும் பயமுறுத்த விரும்பவில்லை.
“சுவாமினி,
இங்கே இப்படி நடக்கலாமா?” என்று தாங்க முடியாத
வேதனையுடன் கேட்ட சைத்ராவை, கல்பனானந்தா வருத்த்த்துடன் பார்த்தாள்.
சைத்ரா தொடர்ந்து சொன்னாள். “இறந்தவனுக்கு ஒரு
குடும்பம் இருக்கும். அவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்…
அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்…” சொல்கையில்
அவள் குரல் உடைந்தது.
கல்பனானந்தா வருத்ததுடன் கேட்டாள். “நாம் என்ன செய்ய முடியும்
சைத்ரானந்தா?”
“யோகிஜியிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் சுவாமினி”
கல்பனானந்தா அதில் உள்ள ஆபத்தை உணர்ந்தாள்.
அந்தப் பெண் பிரம்மானந்தாவுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது
என்று நம்புகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து
தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.
“சொல்லிப் பிரயோஜனமில்லை சைத்ரானந்தா.” என்று மட்டும்
அவள் சொன்னாள்.
சைத்ரா மனத்தாங்கலுடன் சொன்னாள். “ஒரு குற்றத்தை நாம் கண்டுகொள்ளாமல்
இருந்து விட்டால், அடுத்தடுத்த குற்றங்கள் நடக்க நாமே உதவுவது
போல் ஆகிவிடுமல்லவா சுவாமினி”
கல்பனானந்தாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தர்மசங்கடத்துடன் சொன்னாள்.
”உண்மை தான். ஆனால் என்ன செய்வது சைத்ரானந்தா?
இங்கே பாண்டியன் வைத்தது தான் சட்டம். அவரை எதிர்த்து
நாம் எதுவும் செய்ய முடியாது.”
“யோகிஜியும் எதுவும் செய்ய முடியாதா சுவாமினி?”
இது போன்ற நிஜங்களை ஒருவர் கோடி காட்டத் தான் முடியுமே ஒழிய, வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
பெருமூச்சு விட்ட கல்பனானந்தா சொன்னாள். “இதை இனி
யாரிடமும் நீ சொல்லாமல் இருப்பது தான் உனக்குப் பாதுகாப்பு சைத்ரானந்தா”
சொல்லி விட்டு தானும் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு கல்பனானந்தா
அறையிலிருந்து வெளியே வந்தாள்.
சைத்ராவும் நூல்களைச் சுமந்து கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவர்கள் அதுபற்றி அதற்கு மேல் பேசவில்லை. அன்றெல்லாம்
சைத்ரா ஆழ்ந்த யோசனையில் இருப்பதை கல்பனானந்தா பார்த்தாள்.
மறுநாள் அவள் ஒரு நிகழ்ச்சி குறித்து பிரம்மானந்தாவின் உதவியாளரைச்
சந்திக்கச் சென்ற போது அவர் பேச்சோடு பேச்சாக சைத்ரா பிரம்மானந்தாவைச் சந்திக்க அனுமதி
கேட்டிருப்பதையும், மறுநாள் அனுமதி தரப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அவளுக்குப் பகீரென்றது. என்ன பைத்தியக்காரத்தனத்தை இந்தப்
பெண் செய்கிறாள் என்று அவள் மனம் பதறியது. அந்தக் கொலையை பிரம்மானந்தா
கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து சைத்ரா தன் மரண சாசனத்தைத் தானே
எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவரைப்
பற்றி மிக உயர்வாக நினைத்திருந்த அவள், இத்தனை பெரிய அராஜகம்
எல்லாம் அவருக்குத் தெரியாமலேயே இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று அவள் நம்பியிருக்க
வேண்டும்! மறுபடியும் சைத்ராவைப் பார்க்கையில் யோகிஜியைச் சந்தித்துப்
பேசுவது ஆபத்தில் தான் முடியும் என்று கல்பனானந்தா சொன்னாள். ஆனால் அவளை
சைத்ரா நம்பியதாகத் தெரியவில்லை.
அந்தப் பெண்ணைக் காப்பாற்ற கல்பனானந்தாவுக்கு வழி தெரியவில்லை.
அப்போது தான் அவளுக்கு சைத்ரா, அவளுடைய
தாத்தாவுக்கும், முதல்வருக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றிச் சொன்னது
நினைவுக்கு வந்தது. முதல்வர் தலையிட்டால் அந்தப் பெண்ணை நிச்சயமாய்
காப்பாற்ற முடியும் என்று நம்பிய அவள் உடனடியாக சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம்
எழுதி, யோகாலயத்தில் இருந்து செல்லும் தபால்களோடு சேர்த்து வைத்து
விட்டாள். கடிதம்
நாளைக்கு அவர்களுக்குக் கிடைத்து விடும்.
அவர்கள் உடனடியாகச் செயல்பட்டால் கண்டிப்பாக சைத்ராவைக் காப்பாற்றி விடலாம்
என்று கல்பனானந்தா நினைத்தாள். ஆனால் விதியின் தீர்மானம் வேறாக
இருந்தது.
முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மறுநாளே வெளிநாட்டுக்குச்
செல்ல, கல்பனானந்தா
எடுத்த முயற்சி வீணாகியது. எல்லாம் பிரம்மானந்தாவுக்குத் தெரிந்து
தான் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சைத்ராவிடம் சொல்லியிருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாமோ
என்ற எண்ணம் வந்து தங்கியது. அவளுடைய மனசாட்சி உறுத்தியது.
ஆனால் இனி எதுவும் அவள் செய்வதற்கில்லை.
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment