என்னுடைய ‘ஆழ்மனசக்தி அடையும் வழிகள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, January 21, 2026
Monday, January 19, 2026
யோகி 139
சில நாட்கள் கழித்து சைத்ரா அவளுடைய அறைக்குத் திரும்பிப் போய்
விட்டாள். அறையில் உடன் இருக்கையில் பேசிக் கொண்டிருந்தது போல் பிறகு
நிறைய பேச முடியா விட்டாலும் அவர்களுடைய நட்பு அமைதியாகத் தொடர்ந்தது.
திடீரென்று ஒரு நாள் சைத்ரா மிகுந்த
பதற்றத்துடன் காணப்பட்டாள். அன்று நூலகத்தில் அவளுக்கு வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவளுடைய
பதற்றத்தைப் பார்த்த கல்பனானந்தா என்ன ஆயிற்று என்று கேட்டாள். பதில் சொல்லவும்
வார்த்தைகள் வராமல் சைத்ரா திணறுவதைப் பார்த்த பின் தான் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது
என்பது கல்பனானந்தாவுக்குப் புரிந்தது.
நூலகத்தின் உள்ளே ஒரு அறை இருந்தது. அந்த அறையில்
தான் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களின் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த அறைக்குத்
துறவிகளின் வருகை இருக்காது என்பதால் அந்த அறைக்குள்ளே கண்காணிப்பு காமிரா இல்லை. மொத்தமாக
நூல்கள் எங்காவது அனுப்ப வேண்டியிருந்தால், அல்லது, வந்திருக்கும்
புதிய நூல்களில் சில பிரதிகளை நூலகத்து அலமாரிகளில் வைக்க வேண்டியிருந்தால் மட்டுமே
புத்தகங்களை எடுக்க நூலகத்தில் வேலை செய்யும் துறவிகள் போவார்கள். அப்படிப்
போயும் உள்ளே நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அந்த அறைக்குள்
போவதும், வெளியே வருவதும் நூலகத்தில் அந்த அறைக்கு வெளியே உள்ள காமிரா
மூலம் பதிவாகும்.
பிரம்மானந்தாவைப் பற்றி ஒரு பக்தர்
எழுதியிருந்த புதிய நூல் ஒன்று முந்தைய நாள் தான் பல பெட்டிகளில் வந்து சேர்ந்திருந்தது. அவற்றைச்
சில நூலகங்களுக்கு அனுப்பவும், சில பிரதிகளை இந்த நூலகத்தில் படிக்க அலமாரியில் வைக்கவும்
வேண்டியிருந்ததால் அந்த நூல்களை எடுக்கும் சாக்கில் சைத்ராவை அந்த அறைக்கு கல்பனானந்தா
அழைத்துக் கொண்டு போனாள்.
உள்ளே போனதும் அவள் கேட்டாள். “என்ன ஆயிற்று
சைத்ரானந்தா?”
“நேற்று....
நேற்று இரவு.... ஒரு கொலை....” நடுங்கிய குரலில்
சைத்ரா சொன்னாள்.
கல்பனானந்தா அதிர்ச்சியடைந்தாள். “எங்கே?”
குரல் நடுங்க சைத்ரா சொன்னாள். “யோகாலயத்துக்குள்ளே
தான்”
“விவரமாய்ச்
சொல் சைத்ரானந்தா? யாரைக் கொன்றார்கள்? கொன்றது
யார்?”
நடந்ததை நடுங்கியபடியே தாழ்ந்த குரலில்
சைத்ரா சொன்னாள். முந்தைய நாள் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் சைத்ராவுக்கு உறக்கம்
வரவில்லை என்பதால் படுத்து இருப்பதும் எழுவதுமாக அவள் இருந்திருக்கிறாள். சுமார்
ஒன்றரை மணிக்கு வெளியே எதோ சத்தம் கேட்டதால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறாள். பாண்டியனின்
இருப்பிடத்திலிருந்து ஒருவனைக் கயிறால் கட்டி சில குண்டர்கள் வெளியே தூக்கிக் கொண்டு
வந்திருக்கிறார்கள். பாண்டியன் அவர்கள் பின்னாலேயே வந்திருக்கிறார். அவர்கள்
எல்லோரும் பின்பகுதிக்குப் போயிருக்கிறார்கள்.
அறை ஜன்னலில் இருந்து அதற்கு மேல் பார்க்க
சைத்ராவுக்கு முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவளுக்கு அறையில்
இருப்பும் கொள்ளவில்லை. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பின் பகுதியில் நடப்பது முழுவதுமாகத் தெரியும்
என்பதால் அவள் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறாள்.
பின்பகுதியில் முன்பே ஒரு பெரிய குழியை அவர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதனுள்ளே அந்த ஆளைக் குண்டுக்கட்டாக
உள்ளே போடுகிறார்கள். வாயையும், கை கால்களையும்
கட்டிப் போட்டிருந்தாலும் அந்த ஆள் கஷ்டப்பட்டு திமிறுவதை அவளால் பார்க்க முடிந்தது.
உயிரோடு ஆளைக் குழியில் போட்டு அவர்கள் மண்ணைப் போட்டு மூட ஆரம்பித்தார்கள்.
குழியை மூடி, மற்ற இடங்களில் உள்ள மணலையும் அள்ளி
அதன் மீது போட்டு, மேற்பரப்பில் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்து
விட்டு ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஒருவன் மட்டும் அங்கேயே இருந்து காவல் காத்தான். யாரும்
பார்க்கிறார்களா என்பதை அவன் சுற்றும் முற்றும் பார்ப்பதும் தெரிந்தது. சைத்ரா குனிந்து சத்தமில்லாமல் கீழிறங்கி வந்து விட்டாள். சொல்லி முடித்த போது சைத்ராவின் கண்களில்
நீர் நிறைந்திருந்தது.
எல்லாம் கேட்டு விட்டு கல்பனானந்தாவும் அதிர்ச்சியில் ஒரு கணம்
உறைந்தாள். பின்
நேற்று வந்த பெட்டியிலிருந்து மௌனமாக புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தபடியே கேட்டாள்.
“இறந்த ஆளை உனக்குத் தெரியுமா?”
“இல்லை.”
புத்தகங்களை சைத்ரா கையில் தந்தபடி கல்பனானந்தா சொன்னாள். “நல்ல வேளை அவர்கள் உன்னைப்
பார்க்கவில்லை…”
சொல்லச் சொல்ல, சைத்ரா தனதறையிலிருந்து வெளியேறி மொட்டை மாடிக்குப் போவது கண்காணிப்பு காமிராவில் போவது பதிவாகி இருக்கும், என்ற உண்மை கல்பனானந்தாவுக்கு உறைத்தாலும், அவள் அதை வெளியே சொல்லவில்லை. முதலிலேயே மிகவும் பயந்து போயிருக்கும் அந்தப் பெண்ணை அவள் மேலும் பயமுறுத்த விரும்பவில்லை.
“சுவாமினி,
இங்கே இப்படி நடக்கலாமா?” என்று தாங்க முடியாத
வேதனையுடன் கேட்ட சைத்ராவை, கல்பனானந்தா வருத்த்த்துடன் பார்த்தாள்.
சைத்ரா தொடர்ந்து சொன்னாள். “இறந்தவனுக்கு ஒரு
குடும்பம் இருக்கும். அவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்…
அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்…” சொல்கையில்
அவள் குரல் உடைந்தது.
கல்பனானந்தா வருத்ததுடன் கேட்டாள். “நாம் என்ன செய்ய முடியும்
சைத்ரானந்தா?”
“யோகிஜியிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் சுவாமினி”
கல்பனானந்தா அதில் உள்ள ஆபத்தை உணர்ந்தாள்.
அந்தப் பெண் பிரம்மானந்தாவுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது
என்று நம்புகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து
தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.
“சொல்லிப் பிரயோஜனமில்லை சைத்ரானந்தா.” என்று மட்டும்
அவள் சொன்னாள்.
சைத்ரா மனத்தாங்கலுடன் சொன்னாள். “ஒரு குற்றத்தை நாம் கண்டுகொள்ளாமல்
இருந்து விட்டால், அடுத்தடுத்த குற்றங்கள் நடக்க நாமே உதவுவது
போல் ஆகிவிடுமல்லவா சுவாமினி”
கல்பனானந்தாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தர்மசங்கடத்துடன் சொன்னாள்.
”உண்மை தான். ஆனால் என்ன செய்வது சைத்ரானந்தா?
இங்கே பாண்டியன் வைத்தது தான் சட்டம். அவரை எதிர்த்து
நாம் எதுவும் செய்ய முடியாது.”
“யோகிஜியும் எதுவும் செய்ய முடியாதா சுவாமினி?”
இது போன்ற நிஜங்களை ஒருவர் கோடி காட்டத் தான் முடியுமே ஒழிய, வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
பெருமூச்சு விட்ட கல்பனானந்தா சொன்னாள். “இதை இனி
யாரிடமும் நீ சொல்லாமல் இருப்பது தான் உனக்குப் பாதுகாப்பு சைத்ரானந்தா”
சொல்லி விட்டு தானும் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு கல்பனானந்தா
அறையிலிருந்து வெளியே வந்தாள்.
சைத்ராவும் நூல்களைச் சுமந்து கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவர்கள் அதுபற்றி அதற்கு மேல் பேசவில்லை. அன்றெல்லாம்
சைத்ரா ஆழ்ந்த யோசனையில் இருப்பதை கல்பனானந்தா பார்த்தாள்.
மறுநாள் அவள் ஒரு நிகழ்ச்சி குறித்து பிரம்மானந்தாவின் உதவியாளரைச்
சந்திக்கச் சென்ற போது அவர் பேச்சோடு பேச்சாக சைத்ரா பிரம்மானந்தாவைச் சந்திக்க அனுமதி
கேட்டிருப்பதையும், மறுநாள் அனுமதி தரப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அவளுக்குப் பகீரென்றது. என்ன பைத்தியக்காரத்தனத்தை இந்தப்
பெண் செய்கிறாள் என்று அவள் மனம் பதறியது. அந்தக் கொலையை பிரம்மானந்தா
கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து சைத்ரா தன் மரண சாசனத்தைத் தானே
எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவரைப்
பற்றி மிக உயர்வாக நினைத்திருந்த அவள், இத்தனை பெரிய அராஜகம்
எல்லாம் அவருக்குத் தெரியாமலேயே இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று அவள் நம்பியிருக்க
வேண்டும்! மறுபடியும் சைத்ராவைப் பார்க்கையில் யோகிஜியைச் சந்தித்துப்
பேசுவது ஆபத்தில் தான் முடியும் என்று கல்பனானந்தா சொன்னாள். ஆனால் அவளை
சைத்ரா நம்பியதாகத் தெரியவில்லை.
அந்தப் பெண்ணைக் காப்பாற்ற கல்பனானந்தாவுக்கு வழி தெரியவில்லை.
அப்போது தான் அவளுக்கு சைத்ரா, அவளுடைய
தாத்தாவுக்கும், முதல்வருக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றிச் சொன்னது
நினைவுக்கு வந்தது. முதல்வர் தலையிட்டால் அந்தப் பெண்ணை நிச்சயமாய்
காப்பாற்ற முடியும் என்று நம்பிய அவள் உடனடியாக சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம்
எழுதி, யோகாலயத்தில் இருந்து செல்லும் தபால்களோடு சேர்த்து வைத்து
விட்டாள். கடிதம்
நாளைக்கு அவர்களுக்குக் கிடைத்து விடும்.
அவர்கள் உடனடியாகச் செயல்பட்டால் கண்டிப்பாக சைத்ராவைக் காப்பாற்றி விடலாம்
என்று கல்பனானந்தா நினைத்தாள். ஆனால் விதியின் தீர்மானம் வேறாக
இருந்தது.
முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மறுநாளே வெளிநாட்டுக்குச்
செல்ல, கல்பனானந்தா
எடுத்த முயற்சி வீணாகியது. எல்லாம் பிரம்மானந்தாவுக்குத் தெரிந்து
தான் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சைத்ராவிடம் சொல்லியிருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாமோ
என்ற எண்ணம் வந்து தங்கியது. அவளுடைய மனசாட்சி உறுத்தியது.
ஆனால் இனி எதுவும் அவள் செய்வதற்கில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Thursday, January 15, 2026
சதுரங்கம் 1
மூன்று நாட்களாகவே யாரோ சிலர் நர்மதாவைத் தொடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவள் எங்கே போகிறாள், யாரைச் சந்திக்கிறாள், யாருடன் பேசுகிறாள், எப்போது வீடு திரும்புகிறாள், அவள் வீட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள், வந்தவர்கள் எவ்வளவு நேரம் அவள் வீட்டில் தங்குகிறார்கள் என்பதையெல்லாம் இரகசியமாகக் கவனிக்கிறார்கள். அவள் அதிபுத்திசாலி அல்ல என்றாலும், தன்னைச் சிலர் பின்தொடர்வதை அவள் நேற்று தான் தன் உள்ளுணர்வால் உணர்ந்தாள். பின் அவள் எச்சரிக்கையுடன் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். திரும்பத் திரும்ப அவள் பார்வையில் பட்ட மனிதர்கள் சிலரை யதேச்சையாக மறுபடி மறுபடி பார்க்க நேர்வதாக அவளால் நம்ப முடியவில்லை. அவளைக் கண்காணிக்கவும், பின் தொடரவும் யார் ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்பதை அவள் அறிவாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் கண்காணிப்பதால் இப்போது அவளுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அடுத்ததாக என்ன நடக்கும், ஆபத்து எதாவது வரக்கூடுமா என்ற கேள்விகள் மெல்ல அவள் மனதில் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு நிச்சயமான பதில்களை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவேளை இது ஆபத்திற்கான முன்னோடியாக இருந்தால் என்ற கேள்வியில் நர்மதா சிறிது நேரம் தங்கினாள். முடிவில், தவறு செய்து விட்டோமோ என்று ஒரு கணம் அவளுக்குத் தோன்றியது. அதை அவள் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்திருக்கவில்லை.
ஒரு காலத்தில் அவள் ஒரு பேரதிர்ஷ்டசாலியாக இருந்தவள். திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக அவள் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் உச்சத்தில் இருந்திருக்கிறாள். அந்தக் காலக்கட்டத்தில் அவள் தான் தென்னிந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி. அவளுடைய கால்ஷீட்டுக்காக பல முன்னணிக் கதாநாயகர்களும் தாங்கள் கொடுத்திருந்த நேரங்களை மாற்றிக் கொண்டதுண்டு. முடிசூடாத மகாராணியாக இருந்த அவள் பிறகு மார்க்கெட் இழந்து பின்னுக்குத் தள்ளப்படும் நிலை வரும் என்று கற்பனையாகக் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் மனிதன் நினைத்துப் பார்க்காத நிலைகளை எல்லாம் அலட்டாமல் உருவாக்கி மகிழும் விதி அவள் வாழ்க்கையிலும் விளையாடியது. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நின்று அவளை சகோதரியாகவும், அம்மாவாகவும் நடிக்க படக்கம்பெனிகள் அணுகிய போது அவள் அடைந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு முன்னணிக் கதாநாயகன் பெயரைச் சொல்லி “அவனை அப்பா வேஷத்துக்குக் கூப்பிட்டு பாரு. ஏன்னா அவனுக்கு அப்பா வயசு கூட இல்லை, பெரியப்பா வயசு. அவன் அந்த வேஷத்துல நடிக்க ஒத்துகிட்டான்னா நானும் அக்கா வேஷத்துல நடிக்க ஒத்துக்கறேன்” என்று சொல்லி அனுப்பினாள்.
அவள் சொன்னது பின்பு பலராலும் பேசப்பட்டது, பலராலும் விவாதிக்கப்பட்டது. சிலர் ’திமிர் பிடித்தவள்’ என்று அவளை அழைத்தார்கள். அவள் அதற்குக் கவலைப்படவில்லை. அவள் திமிர் பிடித்தவள் தான். அதற்குப் பின் அம்மா, அக்கா வேடத்திற்காக யாரும் அவளைத் தேடி வரவில்லை. அவளுக்கு மொத்தமாக படவாய்ப்புகளே இல்லாமல் போகும் துரதிர்ஷ்டம் தான் வந்தது. புகழின் உச்சத்தில் இருப்பது ஒரு போதை. அந்தப் போதையில் திளைத்து மிதந்தவர்களுக்கு உச்சத்திலிருந்து சிறிது இறங்க நேர்வதும் வேதனை தான். அப்படி இருக்கையில் அவள் ஆட்சி செய்த இடத்திலேயே காணாமல் போக நேர்ந்தது நர்மதாவுக்கு நரக வேதனையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பணம் நின்று போனது கூடுதல் கொடுமையாக இருந்தது.
அடிப்படைத் தேவைகளுக்கு வாழ்நாள் இறுதி வரை அவளுக்கு வேண்டிய செல்வம் இருந்தாலும் கூட அவளால் அடிப்படைத் தேவைகளோடு திருப்தி அடைய முடியவில்லை. ஆடம்பரங்களில் திளைத்துப் பழகி விட்ட அவளுக்கு, பின் ஆடம்பரங்களைச் சிறிதும் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தத் தவிப்பில் அவள் இருந்த போது தான் அந்த நட்பு அவளுக்கு ஏற்பட்டது. அந்த நட்பிற்குப் பின் பிரபலமாக அவள் மின்னா விட்டாலும், பழையபடி தேவைக்கேற்ற தாராள பணப்புழக்கத்தில் அவளால் வாழ முடிந்தது.
அந்த வாழ்க்கையில் அவள் திருப்தியுடன் அடங்கி இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்று இப்போது அவளுக்குத் தோன்றுகிறது. அவள் திருப்தியுடன் தான் இருந்தாள். அவளுடைய காதலன் விமல் தான் அவளுடைய ஆசையைத் தூண்டி விட்டான். ஆற்றில் வேண்டிய அளவு தண்ணீர் இருக்கையில் இரண்டு குடம் கூடுதலாக எடுத்தாலும் ஆற்றுக்கு தண்ணீர் குறையப் போவதில்லை என்று சொன்னான். அதிகப் பணம் வந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று சொன்னான். பணவரவுக்கான வழியையும் அவன் தான் சொல்லிக் கொடுத்தான். அவன் சொன்னபடி முயன்றது தப்பாகி விட்டதோ?
நர்மதா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்பதே கால். ஹாலில் இருந்து அவள் அறைக்குச் சென்றாள். அறையில் விளக்கைப் போடாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவள் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டு வாசலின் முன் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அவன் மூன்று நாளாக இரவு நேரங்களில் அதே இடத்தில் தான் இருக்கிறான். எதிர் வீட்டுக்காரர் கனடாவில் இருக்கும் அவருடைய மகன் வீட்டுக்குப் போயிருக்கிறார் என்பதால் அங்கிருந்து அந்த பிச்சைக்காரனைத் துரத்த அந்த வீட்டில் யாரும் இல்லை. மூன்று நாட்களுக்கு முன்பு வரை அவனை அந்தப் பகுதியில் அவள் பார்த்ததே கிடையாது. அவன் பிச்சைக்காரன் அல்லவோ என்ற சந்தேகம் இப்போது அவள் மனதில் தீவிரமாக எழுகிறது. இரவு நேரங்களில் அவள் வீட்டைக் கண்காணிக்கும் வேலையைத் தான் அவன் பிச்சைக்காரன் வேடத்தில் செய்கிறானோ?
நர்மதாவை இனம்புரியாத ஒருவித பயம் பற்றிக் கொண்டது. அவள் உடனடியாக அலைபேசியை எடுத்து விமலைத் தொடர்பு கொண்டாள்.
”சொல்லு டார்லிங். என்ன விஷயம்?” என்று அவன் உற்சாகமாகச் சொன்னான்.
நர்மதா மூன்று நாட்களாக அவள் பின்தொடரப்படுவதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும் சொன்னாள். இப்போதும் எதிரில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒருவன் அவள் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதைச் சொன்னாள். அவன் உற்சாகம் வடிந்து போனதை அவளால் உணர முடிந்தது. ஒரு நிமிடம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. பின் மெல்லக் கேட்டான். ”வீட்டுல சிசிடிவி கேமரா எல்லாம் சரியா தானே வேலை செய்யுது? செக் பண்ணியா”
“அது சரியா தான் இருக்கு. இன்னைக்குக் காலைல கூடப் பார்த்தேன். அப்படி பார்க்கறப்ப தான் பகல்லயும் இந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத சில பேர் அடிக்கடி இந்தப் பக்கம் நடமாடறதையும், இந்த வீட்டைப் பார்த்துகிட்டே கடந்து போறதையும் கவனிச்சேன். இதையெல்லாம் ஏன் செய்யறாங்க, இனி என்ன செய்வாங்கன்னு எனக்குப் புரியல விமல்”
அவளுக்குப் புரியா விட்டாலும், அவர்கள் இனி என்ன செய்யக்கூடும் என்பது விமலுக்குப் புரிந்தது. அவள் இனி இரவு நேரங்களில் தனியாக இருப்பது ஆபத்து தான். ஆனால் அதைச் சொல்லி ஏற்கெனவே பயப்பட ஆரம்பித்திருக்கும் அவளைக் கூடுதலாக இப்போது பயமுறுத்த அவன் விரும்பவில்லை. ஆனால் காலையில் அவளிடம் சொல்லி எச்சரித்து விட வேண்டும்....
”விமல், நாம பேராசைப்பட்டுட்டோமோ?” நர்மதா மெல்லக் கேட்டாள்.
விமல் சொன்னான். “நம்ம ஆசையைப் பேராசைன்னு சொன்னா, அவங்க ஆசைக்கு என்ன பேர் வைக்க முடியும் டார்லிங். அகராதியிலயே அதற்கு சரியான வார்த்தை கிடைக்காதே. உனக்கு கொடுக்கறது அந்த ஆளுக்கு வெறும் பிச்சைக்காசு.”
“அப்படி இருக்கறப்ப எதுக்கு இப்படியெல்லாம்...?”
“நீ தனியாளாய் இதைக் கேக்கறியா, இல்லை உனக்கு பின்னால வேற யாரும் இருக்கறாங்களான்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பற மாதிரி தெரியுது. அப்படி இருந்தா அது யாருன்னு கண்டுபிடிக்க விரும்பறாங்கன்னு நினைக்கிறேன்.”
“அவ்வளவு தானா? நான் என்னென்னவோ நினைச்சு பயந்துட்டேன்” நர்மதாவின் குரலில் நிம்மதி தெரிந்தது.
விமல் சொன்னான். “ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்கிறது நல்லது. முன் பின் தெரியாதவங்க என்ன காரணம் சொல்லிகிட்டு வந்தாலும் கதவைத் திறக்காதே.”
“அந்த முட்டாள்த்தனமெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் வெளி கேட் கூட பூட்டி தான் வெச்சிருக்கேன்.”
“நல்லது. அப்படின்னா நிம்மதியா தூங்கு. நாளைக்கு காலைல பேசுவோம்.”
(தொடரும்)
என்.கணேசன்
Monday, January 12, 2026
யோகி 138
சைத்ரா யோகி என்ற சொல்லுக்கு இலக்கணமாக பிரம்மானந்தாவை மட்டுமே அது வரை எண்ணி இருந்தவள். அதனால் கல்பனானந்தாவின் இந்த அறிவிப்பு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. பார்க்க சாந்தஸ்வரூபியாக இருந்த அந்தப் பெரியவர் பல சக்திகளைக் கொண்டவர் போல் தெரியவில்லை..
நர்சரி உரிமையாளர் அங்கே வேலை செய்யும் ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார். “அவன் வீட்டு பக்கத்துல ஒரு குடிசையில் தான் அவர் குடியிருக்கார்…”
அந்த இளைஞன் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் அங்கே சில வருடங்களாக
வேலை செய்வதால் கல்பனானந்தாவை நன்றாக அறிவான். அவர்கள் அந்தக்
கிழவரைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று உணர்ந்த அவன் அவரைப் பார்த்தான்.
அவன் முகமும் மலர்ந்தது.
அவன் அவர்களை நெருங்கி வந்து சொன்னான். “இந்தக் காலத்துல இந்த மாதிரி
ஒரு நல்ல மனுஷனை பார்க்க முடியாது சுவாமினி. போன வாரம் ஒரு பணக்கார பெரியவர் இங்கே வந்து
இவரை ரொம்ப பிடிச்சு போய் இவருக்கு பத்தாயிர ரூபாய் குடுத்துட்டு போனார். இவர் வாங்கல. அவருக்கு என்ன தோணிச்சோ இவர் காலடில பத்தாயிர ரூபாயை வெச்சுட்டு போயிட்டார்.
நானும் “பெருசு. வர்ற லட்சுமியை
ஏன் வேண்டாங்கற. எடுத்து வெச்சுக்கோ”ன்னு
சொன்னேன். சரின்னு எடுத்து வெச்சுகிட்டார். குடிசைலயும் அந்தப் பணத்தை மேலாகத்
தான் வெச்சிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரன் திருடன்.
அவன் அதைப் பார்த்துட்டு அந்தப் பணத்தைத் திருடிகிட்டான். நான் அதைக் கண்டுபிடிச்சு இந்தப் பெருசு கிட்ட சொன்னால், இவர் என்ன சொன்னாரு தெரியுமா? “இவனுக்குக் கிடைக்கறதுக்காகவே
கடவுள் அந்தப் பணத்தை என் கிட்ட கொடுத்து வெச்சார் போலருக்கு. நல்லது”ன்னு சொல்லிட்டார். அப்பறமா
அவன் கிட்ட அத பத்தி இவர் கேக்கக்கூட இல்லை. ஐநூறு ரூபாய்க்கு
அடிச்சுகிட்டு சாகிற இந்தக்
காலத்துல இப்படியொரு மனுஷன்…”
அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கல்பனானந்தா அவர்கள்
இருவரிடமும் மெல்லக் கேட்டாள்.
“இந்த ஒரு மாதத்தில் அவர் எப்போதாவது கவலையோ, கோபமோ,
வருத்தமோ பட்டு பார்த்திருக்கிறீர்களா?”
நர்சரி உரிமையாளரும்,
அந்த இளைஞனும் அவளைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவள் கேட்ட பின் தான் அதைப் பற்றி யோசித்தார்கள் என்பதும் அவர்களைப் பார்க்கையிலேயே
தெரிந்தது. பின் உண்மையான ஆச்சரியத்தோடு சொன்னார்கள்.
“இல்லை.”
அந்தப் பதிலை கல்பனானந்தா அறிந்திருந்தாள். அவளை ஆச்சரியப்படுத்தியது
அவர்கள் அந்தக் கேள்வியை எதிர்கொண்ட விதம் தான். எல்லோரும் ஒரு
மனிதனின் சம்பாத்தியத்தைப் பார்க்கிறார்கள், சாதனையைப் பார்க்கிறார்கள்,
சொத்தைப் பார்க்கிறார்கள், அந்தஸ்தைப் பார்க்கிறார்கள்.
ஆனால் யாருமே ஒரு மனிதன் எவ்வளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருக்கிறான்
என்று யோசித்துப் பார்ப்பதில்லை. அது கணக்கெடுக்க முடியாது என்ற
காரணத்தாலா, இல்லை, அது ஒரு பொருட்டே அல்ல என்ற அலட்சியத்தாலா? உண்மையில் ஒரு கணமும் இழக்காத
அமைதி, ஒரு யோகியால் மட்டுமே முடிந்த ஆன்மீக உச்ச நிலை.
அதைப் பற்றி எத்தனையோ படித்திருந்தாலும், கேட்டிருந்தாலும்
ஒரு உதாரண மனிதரைப் பார்க்க முடிந்த பிரமிப்பு கல்பனானந்தாவிடம் தெரிந்தது.
கல்பனானந்தா மெல்ல ரகுராமனை நோக்கி நடந்தாள். சைத்ராவும் அவளைப் பின்
தொடர்ந்தாள். அவர் முன்னே நின்று கல்பனானந்தா கைகூப்பினாள்.
சைத்ராவும் கைகூப்பினாள்.
தன் முன் கைகூப்பி நிற்கிற இரண்டு பெண் துறவிகளையும் அவர் நிமிர்ந்து
பார்த்தார். மிகுந்த பணிவுடன் அவரும் கைகூப்பினார். “இந்தச் செடிகளில்
எதாவது உங்களுக்கு வேண்டுமா?” என்று அவர் கேட்டார்.
“உங்களிடம் இருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் கொஞ்சம்
தர முடியுமா?” கல்பனானந்தா பாதி விளையாட்டாகவும், பாதி நிஜமாகவும் கேட்டாள். கேட்கையில் அவள் கண்கள் ஏனோ
கலங்கின. அவள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படுபவள் அல்ல.
ஆனால் அந்தக் கணத்தில் அந்த யோகியிடம் அப்படிக் கேட்கையில் உள்ளிருந்து
ஏதோ ஒரு கதறல் எழுந்து கண்ணீராக வெளிப்படுவதை, அவளால் தவிர்க்க
முடியவில்லை.
அவர் மிகவும் கனிவாகச் சொன்னார். ”அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
அதை நீங்களே கண்டெடுத்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதை அடுத்தவர்கள் தர முடியாது. அதை வெளியே எத்தனை பிறவிகளில்
தேடினாலும், எங்கேயும், யாரிடமிருந்தும்
உங்களுக்குக் கிடைக்காது.”
கல்பனானந்தா பேச வார்த்தைகள் வராமல் அவர் கால்களைத் தொட்டு வணங்கி
நிமிர்ந்தாள். அவர்களை அழைத்து வந்த டிரைவர் பாண்டியனின் ஆள். எங்கேயும்
அதிகம் பேசிக் கொண்டு இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. மீறினால்
இப்படி அபூர்வமாக வெளியே வரவும் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காது. அதனால் கூடுதலாகச் சிறிது நேரம் அங்கிருக்க மனம் ஆசைப்பட்டாலும், அவள் மேலும் தாமதிக்காமல், வாங்கிய செடிகளுடன்,
அங்கிருந்து கிளம்பினாள்.
சைத்ராவும் அவர் முன்னிலையில் பேரமைதியை உணர்ந்தாள். அவளும் கல்பனானந்தாவைப் போலவே அவர் கால்களைத்
தொட்டுக் கும்பிட்டாள். அவர் அவளையும் கனிவுடன் பார்த்து கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
நர்சரி உரிமையாளரும்,
அந்த இளைஞனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிழவரிடம் சிலர் மட்டும் அதிகமாக எதையோ உணர்ந்து வணங்குவது அவர்களுக்கு
ஆச்சரியமாக இருந்தது. அதுவும், இப்படி துறவிகளே
கூட வணங்குவது பேராச்சரியமாகத் தானிருந்தது.
அறைக்குத் திரும்பி வந்த பின் சைத்ரா தன் சந்தேகத்தைக் கேட்டாள். “சுவாமினி. அவரை நீங்கள் யோகி என்று எப்படிச் சொன்னீர்கள்? அவரிடம்
பெரிய சக்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே?”
கல்பனானந்தா சொன்னாள்.
“எல்லாவற்றையும் விடப் பெரிய மகாசக்தி எப்போதும் சச்சிதானந்த நிலையில்
இருப்பது தான் சைத்ரானந்தா. உலகம்
ஒவ்வொரு கணமும் பல விதங்களில் நம்மைச் சோதித்துக் கொண்டிருக்கையில், எல்லா சமயங்களிலும் மன அமைதியையும்,
ஆனந்தத்தையும் தக்க வைத்துக் கொள்வது யோகிக்கு மட்டுமே சாத்தியம்.
ஞானிகள் பல நேரங்களில் தக்க வைத்துக் கொண்டு சில நேரங்களில் தொலைப்பார்கள்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதன் உண்மையான அறிமுகமே இருப்பதில்லை.
அவரைப் போன்ற யோகிகளிடம் பார்த்து தான் அதன் அடையாளமே தெரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது…”
“என்னைச் சாதாரணம் என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால்
நீங்கள் சாதாரணம் அல்ல சுவாமினி” என்று சைத்ரா சொன்னாள்.
கல்பனானந்தா அவள் சொன்னதில் அன்பை மட்டும் பார்த்து மௌனமாக இருந்தாள்.
சைத்ரா திடீரென்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள். “என் தாத்தா அந்த யோகியைப்
பார்த்தால் கண்டிப்பாக மிக மிக சந்தோஷப்படுவார் சுவாமினி.”
கல்பனானந்தா புன்னகைத்தாள். நியாயமாக, துறவிகளுக்கு
உறவுகள் கிடையாது என்பதை அவள் நினைவுறுத்த வேண்டும். ஆனால் அந்த
வெகுளிப் பெண்ணிடம் அவள் சொல்ல முற்படவில்லை.
சைத்ரா சொன்னாள்.
“என் தாத்தாவும் வித்தியாசமானவர். உங்களுக்கு ஒன்று
தெரியுமா சுவாமினி. முதல்வர் அருணாச்சலம் என் தாத்தாவின் மிக
நெருங்கிய நண்பராம். இரண்டு பேரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப்படிப்பு
வரைக்கும் ஒன்றாகப் படித்தவர்களாம். ஆனாலும் தாத்தா அவர் முதல்வரான
பிறகு அவரைப் பார்க்கக் கூடப் போனதில்லை. இது கூட என் அப்பா சொல்லித்
தான் எனக்குத் தெரியும். தாத்தாவிடம் கேட்டால் “சும்மா போய் அப்படியெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது” என்கிறார். எப்படி இருக்கிறது? என் தாத்தா சன்னியாசம் வாங்கவில்லையே ஒழிய அவர் கிட்டத்தட்ட
அப்படித் தான்.”
சைத்ரா காதல் விஷயத்தில் தோல்வி அடைந்தாலும், குடும்பத்தினர்
விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறாள் என்று கல்பனானந்தாவுக்குத் தோன்றியது.
சைத்ராவுக்கு நிஜ யோகியை கல்பனானந்தா
அடையாளம் காட்டியும், பிரம்மானந்தாவையும் அவள் யோகியென்றே நம்பினாள். நவீன காலத்தில்
பிரம்மானந்தா போன்றோரால் தான் நிறைய ஆட்களிடம் ஆத்மஞானத்தைக் கொண்டு போக முடியும் என்று
நம்பினாள். காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் பிரம்மானந்தா செய்து கொண்டிருக்கிறார்
என்று நினைப்பதையும் அவள் கல்பனானந்தாவுக்குத் தெரிவித்தாள். பிரம்மானந்தா
மேல் சைத்ரா வைத்திருந்த அபார நம்பிக்கை அவளுடைய உயிரையே ஒரு நாள் பறித்து விடும் என்பதை
கல்பனானந்தா நினைத்துக்கூட பார்க்கவில்லை...
Thursday, January 8, 2026
சாணக்கியன் 195
முடிவில் தொடர்ந்த வரலாறு!
சந்திரகுப்தனையும், சாணக்கியரையும்
மற்றவர்களையும் இந்த மகிழ்ச்சியும், நிறைவும் கொண்ட
மனநிலையில் விட்டுப் பிரிவோம் வாசகர்களே. அதன் பின் தொடர்ந்த
வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சந்திரகுப்தன் – சாணக்கியர்
இருவரின் வெற்றிக் கூட்டணியில் மௌரிய சாம்ராஜ்ஜியம் விரிந்து பரவ ஆரம்பித்தது.
செல்யூகஸ் தன் நிலையை கிரேக்கத்தில்
ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் பாரதம் நோக்கி பெரும்படையுடன் வந்தான். ஆனால் அலெக்ஸாண்டர்
வந்த போது இருந்த பாரதம் செல்யூகஸ் திரும்ப வந்த போது இருக்கவில்லை. சந்திரகுப்தன்
வலிமைப்படுத்தியிருந்த பாரதத்தை வெல்வது செல்யூகஸுக்குச் சுலபமாக இருக்கவில்லை. முடிவில்
செல்யூகஸ் சந்திரகுப்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவனுடன் ஒரு சமாதான
ஒப்பந்தம் செய்து கொண்டான். சந்திரகுப்தனும் அவனுக்கு 500 யானைகளைப்
பரிசாகத் தந்தான். செல்யூகஸ் நல்லெண்ணத் தூதராக மெகஸ்தனீஸை சந்திரகுப்தனின்
அரசவைக்கு அனுப்பி வைத்தான். யவனர்கள் இழந்த பெருமையை
மீட்கும் கனவுடன் செல்யூகஸுடன் மிக ஆர்வத்துடன் பாரதம் வந்த க்ளைக்டஸ் இதில் ஏமாற்றமடைந்தான். காந்தார
ஆம்பி குமாரனுக்கும், கேகய மலயகேதுவுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று
அவன் ஆசைப்பட்டது வீணானதில் விரக்தி அடைந்தான். அலெக்ஸாண்டரோடு
யவனர் பெருமை முடிந்து விட்டதாக தன் வாழ்நாள் முடிவு வரை அவன் புலம்பி வாழ்ந்தான்.
யவனர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து
நிறுத்திய பின் சந்திரகுப்தனும் சாணக்கியரும் பாரதத்தின் மற்ற பகுதிகளை இணைக்கும் முயற்சியை
மேற்கொண்டார்கள். தமிழகம், கேரளம், கலிங்கத்தின்
ஒரு பகுதி தவிர மற்ற பகுதிகள் சந்திரகுப்தனின் கட்டுப்பாட்டில் வந்தன. சாம்ராஜ்ஜியத்தை
விரிவுபடுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மிக நல்ல ஆட்சியை சந்திரகுப்தன் மக்களுக்குத்
தந்தான். அவன் ஆட்சியில் வரிகள் குறைவாகவும், சுபிட்சம்
அதிகமாகவும் இருந்தது.
மாமன்னனான பின் சந்திரகுப்தனின் உயிருக்கு
ஆபத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்ததால் சாணக்கியர் தன் மாணவனை அந்த ஆபத்திலிருந்து
காப்பாற்றும் முயற்சிகளைச் சலிப்பில்லாமல் மேற்கொண்டார். சந்திரகுப்தன்
உறங்கும் அறையைக் கூட அவர் அடிக்கடி மாற்றினார். அந்தக்
காலத்தில் எதிரிகளுக்கு எதிராக விஷம் பயன்படுத்துவது பிரபலமாக இருந்தது. விஷம், விஷமுறிவு
இரண்டு குறித்தும் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சாணக்கியர் விஷத்தால் சந்திரகுப்தன் பாதிக்கப்படக்கூடாது
என்று சிறிது சிறிதாக குறைந்த அளவு விஷத்தை சந்திரகுப்தனின் உணவில் கலந்து வந்தார். சந்திரகுப்தனின்
உடல் விஷத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பெற்று பின் எந்த விஷத்தாலும் பாதிக்கப்படாதபடி
வலிமை கூடிக் கொண்டே போகும்படியாக விஷத்தின் அளவையும் நுணுக்கமாகக் கூட்டிக் கொண்டே
வந்தார். அதை அவர் சந்திரகுப்தனிடம் கூடத் தெரிவிக்கவில்லை. ராஜ்ஜிய
பாரத்தைச் சுமக்கும் சந்திரகுப்தனுக்கு இது போன்ற எச்சரிக்கைக்கான சுமைகளும் சேர வேண்டாம்
என்று அவர் எண்ணினார்.
அது தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த துர்தரா கணவனுடன் உணவைச் சில நாட்கள் பகிர்ந்து கொண்டாள். பிரசவ சமயத்தில்
அவள் படும் சில சிரமங்களைக் கண்ட போது தான் சாணக்கியருக்கு நடந்திருக்கும் அசம்பாவிதம்
தெரிய வந்தது. அதற்குள் அவள் உடலில் இருக்கும் விஷம் வயிற்றிலிருந்த
குழந்தையின் தலைக்கும் ஒரு துளி சென்று விட்டது. குழந்தை
தாய் இருவரையும் சேர்ந்து காப்பாற்றும் வாய்ப்பு இல்லவே இல்லை என்று புரிய வந்த போது
குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முடிவெடுத்த அவர், தொப்புள்
கொடியை உடனடியாகத் துண்டிக்கும்படி பிரசவம் பார்த்த தாதிப்பெண்ணைக் கேட்டுக் கொண்டார். அவள் அப்படியே
செய்ய, துர்தரா உயிர் இழந்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டது. ஆனால் குழந்தையின்
நெற்றியில் விஷம் ஒரு பொட்டு போன்ற ஒரு கறையை ஏற்படுத்தி விட்டிருந்ததால் குழந்தைக்கு
பிந்துசாரா என்று பெயர் வைத்தார்கள்.
சாணக்கியர் துர்தராவின் மரணத்தில் மிகவும்
மனம் வருந்தினார். சந்திரகுப்தன் அவளை எந்த அளவு நேசித்தான் என்பதை அவர் அறிவார். சந்திரகுப்தனும்
மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆச்சாரியரின் மனதையும், உத்தேசத்தையும்
புரிந்து கொள்ள முடிந்ததால் அவன் அவரிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. அவன் அவரிடம்
சொன்னான். “ஆயுள் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது ஆச்சாரியரே. மரணம் ஆயிரம்
விதங்களில் ஏற்படக்கூடும். ஓரிரு விதங்களை நாம் அறிந்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும்
இருக்க முடிந்தாலும் மற்ற விதங்களில் மரணம் ஒருவரை நெருங்கி தன் வேலையை முடித்துக்
கொள்கிறது. எல்லாம் அறிந்த நீங்கள் இதில் குற்றவுணர்வு கொள்வது சரியல்ல. எப்போதுமே
என் உணவைப் பகிர்ந்து கொள்ளாதவள் கடைசி சில நாட்கள் மட்டும் அப்படிச் செய்தது விதியால்
உந்தப்பட்டு தான் என்பது எனக்குப் புரிகிறது...”
சாணக்கியர் அந்த வார்த்தைகள் கேட்டு
கண்கலங்கினார். ஆனாலும் நடந்து முடிந்ததைத் திருத்தவோ, மாற்றவோ
முடியாது என்ற தத்துவார்த்த சிந்தனையால் அடுத்து நடக்க வேண்டிய
வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சாம்ராஜ்ஜிய அபிவிருத்தி
வேலைகளில் ஈடுபட்டபடியே அர்த்தசாஸ்திரம், நீதிசாஸ்திரம் என்ற
இரண்டு அருமையான நூல்களை எழுதி முடித்தார்.
சந்திரகுப்தன் துர்தராவின் மரணத்திற்குப்
பின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பை மெள்ள இழக்க ஆரம்பித்தான். சக்கரவர்த்தியாக
அவன் தன் கடமைகளை கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த போதும் மனம் தத்துவ, வைராக்கிய
சிந்தனைகளில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தது. பிந்துசாரன் வளர்ந்து
பெரியவனானவுடன் சந்திரகுப்தன் துறவறம் போக
சாணக்கியரிடம் அனுமதி கேட்டான்.
தன் பிரிய மாணவனின் மனதை எப்போதுமே
தீர்க்கமாய் அறிய முடிந்த சாணக்கியர் அவனுடைய பூரண அமைதி தேடிப் போகும் கடைசி ஆசைக்கு
மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதித்தார். சந்திரகுப்தன்
மகனுக்கு முடிசூடி ஆச்சாரியரின் வழிநடத்தலின்படியே எப்போதும் நடக்க
வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு தவ வாழ்க்கை வாழச் சென்றான். தெற்கு
நோக்கிச் சென்ற அவன் முடிவில் சிராவண பெலகோலாவில் சமாதியடைந்தான்.
மன்னனான பிந்துசாரனும் சாணக்கியரின்
வழிகாட்டுதலின்படியே சிறப்பாக ஆட்சி புரிந்தான். ராக்ஷசரின்
மறைவுக்குப் பின் சுபந்து என்பவன் பிரதம அமைச்சன் ஆனான். அவன் பிரதம
அமைச்சராக இருந்த போதும் எல்லாம் சாணக்கியரின் வழிநடத்துதல்படி நடப்பதில் கடும் அதிருப்தி
அடைந்தான். அதனால் அவன் சாணக்கியரை அப்புறப்படுத்த சூழ்ச்சி செய்தான்.
ஒரு நாள் அவன் பிந்துசாரனிடம் துர்தராவை
விஷம் வைத்துக் கொன்றது சாணக்கியர் தான் என்று சமீபத்தில் தான் தெரிய வந்ததாய் வருத்தம்
காட்டிச் சொன்னான், தனநந்தன் மீதிருந்த வஞ்சத்தை மறக்க முடியாத சாணக்கியர் அவன்
மகளான துர்தராவை விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும், அதை அறிந்த
போதும் ஆச்சாரியர் மீதுள்ள பக்தியால் சந்திரகுப்தன் அவரை எதிர்க்க முடியாமல், அதைத் தாங்கிக்
கொள்ளவும் முடியாமல் தான் பின் துறவற சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதாகவும் சொன்னான்.
அவன் பாதி உண்மைகளைக் கலந்து அதை நம்பும்
படியாக ஜோடித்துச் சொன்னதால் பிந்துசாரன் அதை நம்பிவிட்டான். சந்திரகுப்தன்
தானடைந்த உயர்வும், ராஜ்ஜியமும் ஆச்சாரியர் போட்ட பிச்சை என்று பல முறை சொல்லி
அவன் கேட்டிருந்ததால் அவரை வெளிப்படையாக எதிர்க்க அவனால் முடியவில்லை. அவன் தந்தைக்கு
அவர் நன்மைகள் செய்திருக்கிறார் என்பதற்காக அவன் தாயை அவர் கொன்றதை அவனால் மன்னிக்க
முடியவில்லை. அதனால் அவன் சாணக்கியரிடம் வெறுப்புடனும், பாராமுகமாகவும்
நடந்து கொள்ள ஆரம்பித்தான். அதில் வருத்தமடைந்த
சாணக்கியர் இனி அங்கிருப்பது தனக்கு கௌரவம் அல்ல என்று நினைத்தார். அவர்
இருக்க வேண்டிய அவசியமும் குறைந்து விட்டது. அதோடு தன் அந்திம காலமும்
நெருங்குவதை உணர்ந்த அவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் விடத் தீர்மானித்து கானகம் சென்றார்.
சுபந்து தன் திட்டம் வெற்றி பெற்றதில்
பெருமகிழ்ச்சி அடைந்தான். பிந்துசாரனும் விட்டது சனியன் என்று அலட்சியமாக இருந்தான். ஆனால் அவனைப்
பிரசவித்த தாதிப்பெண்ணுக்கு சாணக்கியர் நடத்தப்பட்ட விதம் வேதனையை ஏற்படுத்தியது. சில நாட்கள்
மௌனமாக இருந்த அவள் பின் பொறுக்க முடியாமல் மன்னனைச் சந்தித்து சாணக்கியர் சந்திரகுப்தனையும், துர்தராவையும்
எந்த அளவு நேசித்தார் என்பதையும், அவன் பிறந்த போது நடந்தது என்ன என்பதையும் விவரித்தாள்.
பிந்துசாரன் அதைக் கேட்டு அதிர்ச்சியும்
வேதனையும் அடைந்தான். எந்த மனிதரால் அவன் தந்தைக்கும், அவனுக்கும்
இந்த ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறதோ, எந்த மனிதரின் சமயோசிதத்தாலும், கூர்மையான
அறிவாலும் அவன் உயிர் பிழைத்திருக்கிறானோ அவரை அவன் நடத்திய விதம் அவனைப் பெரும் குற்றவுணர்ச்சிக்கு
ஆளாக்கியது.
பின் பிந்துசாரன் ஒரு கணமும் தாமதிக்காமல்
உடனே கானகம் விரைந்து சென்று சாணக்கியரைக் கண்டு மன்னிப்பு கேட்டு
அவரை திரும்பவும் ராஜ்ஜியத்திற்கு அழைத்து வரப் புறப்பட்டான். கிளம்புவதற்கு முன் சுபந்துவுக்கு
மரண தண்டனை விதித்து விட்டுப் போனான்.
கானகத்தில் சாணக்கியரின்
காலில் விழுந்து வணங்கி பிந்துசாரன் மன்னிப்பு கேட்டான். “இந்தப்
பாவியைத் தயவு செய்து மன்னித்து விடுங்கள் ஆச்சாரியரே.”
சாணக்கியர் அப்போது மரணத்
தறுவாயில் இருந்தார். அவனைப் பார்த்துப் புன்னகைத்து பலவீனமான குரலில் சொன்னார். “உன்னை எப்போதோ
மன்னித்து விட்டேன். என் சந்திரகுப்தனின் பிள்ளையை என்னால் மன்னிக்காமல் இருக்க
முடியுமா பிந்துசாரா?”
அந்த வார்த்தைகள் கேட்ட பின் கண்ணீரை
அடக்க முடியாமல் அழுதபடி பிந்துசாரன் சொன்னான். “அப்படியானால்
நம் ராஜ்ஜியத்துக்குத் திரும்பி வாருங்கள் ஆச்சாரியரே. நீங்கள்
என்னுடன் வராமல் நான் திரும்பிப் போக மாட்டேன்.”
சாணக்கியர் பிந்துசாரனின் கையைப் பிடித்து
கொண்டு அன்புடன் சொன்னார். “நான் திரும்பி வர முடியாத என் கடைசி யாத்திரையை ஆரம்பித்து
விட்டேன் பிந்துசாரா..... ஆனால் என் ஆத்மா என்றும் புனித பாரத மண்ணில் தான் உலாவிக்
கொண்டிருக்கும்....”
பிந்துசாரனின் துக்கம் பலமடங்காக அதிகரித்தது. அவர்
முகத்தைப் பார்த்த போது அவர் மரணமடையப் போகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவர்
கைப்பிடி தளர, அவன் அவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் தவறுக்குப்
பரிகாரமாக இனி ஒன்றும் செய்ய முடியாத ஆற்றாமையுடன் கதறினான். “ஐயோ
நான் இனி என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லையே ஆச்சாரியரே?”
அவர் ஈனசுரத்தில் சொன்னார். “இந்தக்
கடைசி நேரத்தில் என்னுடன் இருக்கிறாயே.... இது போதும்.... என் சந்திரகுப்தன்
மகனே”
சில கணங்களில் சாணக்கியர்
உயிர் பிரிந்தது. பிந்துசாரன் கனத்த மனதுடன் அவர் கையை மெல்ல தரையில் வைத்தான். அவர் மனதின்
ஒரு ஓரத்தில் தங்கியிருந்த கடைசி கசப்பும் பிந்துசாரன் வரவால் விலகியதால் அவர் முகத்தில்
பேரமைதி தெரிந்தது. அவர் சொன்ன ’என் சந்திரகுப்தன் மகனே’ என்ற அந்தக்
கடைசி வார்த்தைகள் பிந்துசாரன் கண்களை மீண்டும் குளமாக்கின. கண்ணீர்
தாரை தாரையாக வழிய அவன் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை வணங்கினான்.
தன்னலமில்லாத ஒரு
உன்னத வாழ்க்கை முடிந்து விட்டது. ராக்ஷசர் ஒரு முறை ஆத்மார்த்தமாய் சொன்னது போல்
சில யுகங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு மாமனிதனைப் படைத்த திருப்தியுடன் இறைவன் அவரைத்
திரும்ப அழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!
முற்றும்.
என்.கணேசன்
(அடுத்த வியாழக்கிழமை 15.01.2026 லிருந்து என்னுடைய சதுரங்கம் நாவல், வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வரும்)


















