சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 27, 2023

யாரோ ஒருவன்? 127


நாகராஜ் சொன்னான். “அந்தப் பாம்பாட்டி சூட்கேஸில் கொண்டு வந்தது நாகரத்தினத்தைச் சுமந்து கொண்டிருக்கிற நாகப்பாம்பைத் தான். அது சாதாரண நாகரத்தினமா இல்லாம ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய விசேஷ நாகரத்தினமாக இருக்கலாமோன்னு அவனுக்குப் பேராசையுடன் கூடிய சந்தேகம் இருந்துச்சு. சாதாரண நாகரத்தினம் ஒருத்தனிடம் இருந்தால், செல்வந்தனாகும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒன்றுக்கும் அதிகமான நாகரத்தினங்கள் கிடைத்தால் செல்வத்தோடு அபூர்வ சக்திகளும் கைகூடும். அதுவே விசேஷ நாகரத்தினமாக இருந்தால் எல்லையில்லாத தெய்வீக சக்திகள் கிடைக்கும். இது தான் பொதுவான நம்பிக்கை. அவன் தனக்குக் கிடைச்சிருக்கிறது அந்த மாதிரி விசேஷ நாகரத்தினம் சுமக்கும் பாம்பாயிருக்குமோன்னு வந்த சந்தேகத்தை அவங்களோட மூத்த சாமியாரைக் கேட்ட போது அது கடைசி மூன்று நாள்கள்ல உருவாகிற விசேஷ மணத்தை வெச்சு தான் தெரியும்னு  சொல்லியிருந்தார். அப்படி அந்தப் பாம்பு சுமப்பது  விசேஷ நாகரத்தினமாக இருந்தால் அதற்கான விசேஷ பூஜைகள் சடங்குகள் எல்லாம் செய்யணும்  அல்லது ஜம்முவில் இருக்கிற பெரிய நாகதேவதை கோயிலுக்கு அதைக் கொண்டு போய் பூஜிக்கணும். அப்படியானால் மட்டும் தான் முழுப் பலன்கள் கிடைக்கும். இல்லாட்டி பலன்கள் குறையும்னு அந்த சாமியார் சொல்லியிருந்தார். அது விசேஷ நாகரத்தினமாக இருக்கலாம் என்று நம்பின பாம்பாட்டி அதை ஜம்முவுக்கு எடுத்துக் கொண்டு போகும் போது தான் இந்த மூன்று நண்பர்களுடன் அவனோட பயணத்தில் இணைஞ்சாங்க.. அந்தப் பாம்பாட்டி அடிக்கடி குனிஞ்சு பார்த்தது அந்தப் பாம்பு கிட்ட இருந்து அந்த விசேஷ நாகரத்தினத்திற்கான மணம் வருதான்னு  பார்க்கத் தான்கிறது இவங்களுக்குத் தெரியல..”

அடுத்த காட்சி புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து நண்பர்கள் இறங்குவதைக் காட்டியது. மாதவன் அந்தப் பாம்பாட்டியிடம் அன்பாய் கைகொடுத்து விடைபெற்றான். கல்யாணும், சரத்தும் அங்கிருந்து சீக்கிரமாக நகர்ந்தால் போதுமென்று வேகமாக நகர்வது தெரிந்தது.

அதற்கடுத்த காட்சி மணாலியில் குறைந்த வாடகைக்கு அவர்களுக்குக் கிடைத்திருந்த பழைய லாட்ஜ் அறையில் விரிந்தது. மாதவன் தன் தோளில் மாட்டியிருந்த பெரிய பையை விரித்த போது அந்த நாகம் உள்ளே இருப்பதைப் பார்த்து விட்டு ”டேய் இங்கே பாருங்கடா. அந்த ஆளோட சூட்கேஸ அவசரமா மூடினப்ப நான் சரியா மூடல போலருக்கு. அந்தப் பாம்பு அங்கேயிருந்து என் பைல வந்து உட்கார்ந்திருக்கு” என்று கத்தினான்.

கல்யாணும் சரத்தும் அவனை முறைத்தார்கள். கல்யாண் சொன்னான். “அப்பவே சொன்னேனில்ல டிடிஆர் கிட்ட சொல்லிடலாம்னு. பெருசா பாவ புண்ணியம் பாத்துட்டு இங்க வரைக்கும் தூக்கிட்டு வந்துட்டியேடா முட்டாள்...”

மாதவன் அவன் திட்டினதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. அந்த நாகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் பின் திரும்பி கல்யாணிடம் மெல்லச் சொன்னான். “கல்யாண்.... இது நாகரத்தினத்தை வெச்சிருக்கு போல இருக்குடா?”

கல்யாண் முகம் திகைப்பைக் காட்டியது. ”என்னடா சொல்லறே” என்று ஆச்சரியத்துடன் மெல்லக் குனிந்து பார்த்தான். “அப்படித்தான் தோணுதுடா” என்று பலவீனமான குரலில் சொன்னான். சரத் அவசரமாக பக்கத்தில் இருந்த  தன்னுடைய சூட்கேஸை எடுத்து தள்ளி வைத்தான்.

அடுத்த காட்சி வந்தது. இப்போது அந்த ஓட்டல் அறையில் அந்தப் பாம்புக்கு வசதியான ஒரு அட்டைப்பெட்டியை மாதவன் அமைத்து வைத்திருந்தான். அதை அன்புடன் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னான். “பாத்தா இன்னைக்கு ராத்திரிக்குள்ளே அந்த நாகரத்தினத்த அது போட்டுடும்னு தோணுதுடா.... கடவுள் இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை எனக்குத் தருவாருன்னு நான் நினைச்சே பாக்கலடா”

பின் மாதவன் அவர்களுடன் கட்டிலில் படுத்துக் கொண்டு, விட்டத்தைப் பார்த்தபடி பணம் வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்று சொல்ல ஆரம்பித்தான். அவனுடைய உற்சாகம் கல்யாண், சரத் முகத்தில் தெரியவில்லை. சரத் முகம் கருத்து சிறுத்துப் போயிருந்ததை ஓரக்கண்ணால் கல்யாண் கவனிப்பது தெரிந்தது.   

அடுத்த காட்சியில் பச்சையும் நீலமுமாய் ஜொலிக்கும் சிறிய நாகரத்தினக் கல்லை உள்ளங்கையில் வைத்துப் பரவசமாக மாதவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கல்யாண் பொறாமையுடனும், சரத் சுரத்தில்லாமலும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதற்கடுத்த காட்சியில் கல்யாண் ஓட்டலிருக்கும் தெருவில் நடந்தபடி போனில் பேசிக் கொண்டிருக்கிறான். திரையில் மறுபாதியில் அவனுடன்  பக்கத்து வீட்டு லேண்ட்லைன் போனில் பேசிக் கொண்டிருக்கும் வேலாயுதம் தெரிந்தார்.  

வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். “என்னடா சொல்றே? நிஜமாவே நாகரத்தினம் தானா?”

“ஆமாப்பா. அதனால தான் அந்த ஆள் அந்தப் பாம்பை பத்திரமா ஜம்முவுக்கு எதுக்கோ எடுத்துகிட்டு போயிருக்கான். மாதவனுக்கு அதிர்ஷ்டம் அந்த சூட்கேஸிலிருந்து தாவிக் கிடைச்சிருக்கு... பணம் கிடைச்சா அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன்னு அவன் சொல்ற அலப்பறை தாங்க முடியல...”

வேலாயுதம் முகத்தில் அழமான யோசனை தெரிய ஆரம்பித்தது.

“என்னப்பா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்க?”

“பாம்பாட்டி கிட்ட இருந்து மாதவனுக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம் அவனை விட்டுட்டு ஏன் உனக்கு வரக்கூடாதுன்னு யோசிக்கிறேன்....”

கல்யாண் மெல்லக் கேட்டான். “என்னப்பா சொல்றீங்க?”

“யோசிடா....  இப்படி ஒரு வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?”

கல்யாண் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “கூட சரத்தும் இருக்கான்ப்பா”

“அவனைச் சமாளிக்கிறதெல்லாம் உனக்குப் பெரிய விஷயமாடா”

அடுத்த காட்சி விரிந்தது. கட்டிலில் கல்யாணும், சரத்தும் மட்டும் யோசனையுடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சரத் கேட்டான். “மாதவன் எங்கே போனான்?”

கல்யாண் சொன்னான். “பாம்புக்கு முட்டை அது இதுன்னு வாங்கப் போயிருக்கான்...”

சிறிது நேரம் மௌனம். பின் கல்யாண் கேட்டான். “ரஞ்சனியை நீ காதலிக்கிறதை ஏன் அவள் கிட்ட இது வரைக்கும் சொல்லலை...”

சரத் பெருமூச்சு விட்டான். “அவளும் மாதவனும் காதலிக்கிறாங்க.... அது தெரிஞ்சதுக்கப்பறம் நான் காதலிக்கிறதைச் சொல்லி என்ன பிரயோஜனம்?”

 “மாதவனுக்கு அதிர்ஷ்டம் எல்லா வகையிலயும் கிடைச்சுருக்கு. ரஞ்சனி ஏற்கெனவே கிடைச்சிருக்கா. நாகரத்தினம் கிடைச்சுட்டதால இனி கண்டிப்பா அவனுக்கு பணமும் எக்கச்சக்கமா எப்படியாவது வரும்... அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க. நம்ம ரெண்டு பேரை எதிர்காலத்துல நண்பர்களா நினைப்பாங்களாங்கறதும் சந்தேகம் தான்... பணம் எல்லாரையுமே மாத்திடும்.”

சரத் முகம் சிறுத்தது. “நம்ம தலையில அவ்வளவு தான் எழுதியிருந்தா நாம என்ன செய்ய முடியும்?” என்று சுரத்தில்லாமல் சொன்னான்.

“நம்ம தலையில எழுதியிருக்கறது பிடிக்கலைன்னா நாம நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்தி எழுதிக்க முடியும். கொஞ்சம் புத்திசாலித்தனம், கொஞ்சம் தைரியம் கூட இருந்தால் போதும்...”

சரத் கல்யாணைப் பார்த்தான். கல்யாண் மெல்லச் சொன்னான். “ரஞ்சனிக்கு உன்னையும் ரொம்ப பிடிக்கும். அவ சிலதை எல்லாம் உன் கிட்ட மனசு விட்டு பேசறவ தான்....”

“ஆனா அவ காதலிக்கிறது மாதவனைத் தான்.”

“ஒருவேளை மாதவன் இல்லாட்டி அவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா தயங்க மாட்டா”

சரத் முகம் எதிர்பார்ப்பில் லேசாக மலர்ந்தது. கல்யாண் தொடர்ந்து சொன்னான். “எத்தனை கோடி கிடைச்சாலும் காதலிக்கிறவளைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமாய் வாழ்றதுக்கு இணையாகுமாடா?”

சரத் விரக்தியுடன் சொன்னான். “சும்மா வெறுப்பேத்தாதடா. மாதவன் இருக்கிறவரைக்கும் அதுக்கு சான்சே இல்லை”

“ஒருவேளை மாதவன் இல்லாட்டி?”

சரத் கல்யாணைத் திகைப்புடன் பார்த்தான். “என்னடா சொல்றே?”

கல்யாண் கேட்டான். “உன் கிட்ட கடவுள் வந்து வேணும்கிற அளவுக்குப் பணம் வேணுமா இல்லை ரஞ்சனி வேணுமான்னு கேட்டா நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?”

“ரஞ்சனியைத் தான்....”

“என் கிட்ட கடவுள் வந்து மாதவன் வேணுமா, நாகரத்தினக்கல் வேணுமான்னு கேட்டா நான் நாகரத்தினக் கல்லைத் தான் தேர்ந்தெடுப்பேன்”

சரத் திகைப்புடன் கேட்டான். “என்னடா சொல்ல வர்றே?”

“மாதவன் இல்லைன்னா இப்ப எனக்கு நாகரத்தினக்கல் கிடைக்கும். உனக்கு ரஞ்சனி கிடைப்பாள்னு சொல்ல வர்றேன்....”

“டேய் நடக்க முடியாததை எல்லாம் பேசாதேடா”

“நடக்கும். எல்லாம் நான் பாத்துக்கறேன். எல்லாத்தையும் நான் செஞ்சுக்கறேன். நீ அமைதியா ஒத்துழைச்சா போதும்....”

காட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி, மேகலா, தீபக், தர்ஷினி நால்வரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சரத் பார்வையாலேயே நண்பனிடம் கெஞ்சினான். ’டேய் எப்படியாவது இந்த ஒளிபரப்பை நிறுத்துடா”

சற்று நகர முடிந்திருந்தாலும், சற்று சத்தமிட முடிந்திருந்தாலும் கல்யாண் அதைச் செய்திருப்பான். ஆனால் அவனுக்குக் கண்களைத் தவிர வேறெதையும் அசைக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

8 comments:

  1. Super sir. I felt as if I am also sitting with them and hearing breathless.

    ReplyDelete
  2. உழைப்பில்லாமல் கிடைத்த நாகரத்தினம் மாதவன் உயிரை பறித்து விட்டது போலும்.

    ReplyDelete
    Replies
    1. Then what will happen to the friends who killed Madhavan and own the nagarathinam.

      Delete
    2. அதை இனிமேல் தான் என்.கணேசன் ஐயா கூறுவார்....

      Delete
  3. ரசிக்கும்படியான தனித்துவமான நடை.

    ReplyDelete
  4. What's the connection btw Nagaraj and madhavan.. I think.. He could be madhavan himself?! Thr one who died in the crash could have been Narendran's father?! Anyways need to wait and watch

    ReplyDelete