விதஸ்தா நதிக்கரையை யவனப்படையும், காந்தாரப்படையும் அடைந்த போது மறுகரையில் முன்பே கேகயப் படைகள் தயார்நிலையில் நின்றிருந்தன.
அலெக்ஸாண்டர் கண்களைச்
சுருக்கி மறுகரையில் நின்றிருந்த கேகயப்படையைக் கூர்ந்து பார்வையிட்டான். கேகயப்படை பிரம்மாண்ட அளவில் தெரிந்தது. முக்கியமாக
முன்னணியில் நின்றிருந்த யானைப்படை பயமுறுத்தும்
வகையில் நின்றிருந்தது.
”பிரம்மாண்டம்”
என்று அலெக்ஸாண்டர் முணுமுணுத்தான். அதை சசிகுப்தன் மொழிபெயர்த்துச் சொன்ன போது ஆம்பி
குமாரனுக்குச் சுருக்கென்றது. எதிரிப் படையை அலெக்ஸாண்டர் பாராட்டுவது அவனுக்குச் சகிக்கவில்லை.
அவன் முகம் கருத்தது.
ஆனால் அலெக்ஸாண்டர்
அவன் பக்கமே திரும்பவில்லை. அலெக்ஸாண்டரின் முழுக்கவனமும் விதஸ்தா நதியிலும் மறுகரையில்
இருக்கும் கேகயப்படை மீதுமே தங்கியிருந்தது.
நீண்ட நேரம் அந்த நதியையும், கேகயப்படையையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆம்பி
குமாரன் ஒரு மனிதன் இப்படி சிதறாத முழுக்கவனத்துடன் நிலைமையை ஆராய்வதை இப்போது தான்
பார்க்கிறான். வெற்றியடைய விரும்புபவன் முதலில் வெற வேண்டிய தகுதி சிதறாத முழுக்கவனம்
என்று அடிக்கடி விஷ்ணுகுப்தர் சொல்லிக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
அதற்கு ஒரு உதாரணத்தை நேரடியாகப் பார்க்கையில் தான் அவர் சொன்னது மிகச்சரி என்று அவனுக்குப்
புரிகிறது...
அலெக்ஸாண்டரின் தளபதிகளும், சசிகுப்தனும் அவன் கவனத்தைக் கலைக்காமல் அமைதியாக இருப்பதைக் கவனித்த ஆம்பி குமாரன் தானும் மௌனமாக இருந்தான். ஆனால் இத்தனை நேரம் பார்க்க அந்த நதியிலும், எதிர்க்கரையில் நிற்கும் கேகயப்படையிலும் என்ன இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.
இத்தனைக்கும்
கிளம்புவதற்கு முந்தைய நாள் தான் அலெக்ஸாண்டர் இக்கரையோரத்தில் உள்ள கிராமத்தில் வாழும்
கிழவன் ஒருவனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறான். இம்மழைக்காலத்தில்
எந்த அளவு மழை பொழியும், நதியின் ஓட்டம் எப்படி இருக்கும், வெள்ளம் வந்தால் அதன் அளவு
எப்படி இருக்கும், கரையோரங்களில் பாதிப்பு எப்படி இருக்கும் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து
கொண்டிருக்கிறான். அதே போலத்தான் ஆம்பி குமாரனிடம் கேகயப் படைவலிமை பற்றியும் ஏற்கெனவே
ஏராளமான கேள்விகள் கேட்டு அனைத்துத் தகவல்களையும் பெற்றிருந்தான். கேள்விப்பட்டதையும், கண்ணால் பார்ப்பதையும்
ஒப்பிட்டுப் பார்த்து அவன் மனதளவில் ஒரு முடிவை எட்டுவான் போல் இருக்கிறது….
ஆம்பி
குமாரனுக்கு இதெல்லாம் புதிய அனுபவம். படை பலமும், வீரமும் மட்டுமே வெற்றிக்குப் போதுமானது
என்கிற அளவில் தான் அவன் இது வரை நினைத்து வந்திருக்கிறான். ஆனால் அலெக்ஸாண்டரைக் கவனித்துப்
பார்க்கையில் தான் அவை மட்டும் போதுமானது இல்லை என்பது மெள்ளப் புரிவது போலிருந்தது.
பாடமாகப் படிக்கையிலும்,
அறிவுரையாகக் கேட்கையிலும் கசந்த விஷயங்கள் ஒரு மாபெரும் வெற்றியாளனின் நடவடிக்கையில்
காணும் போது மண்டையிலடித்தாற்போல விளங்குகின்றன.
அலெக்ஸாண்டர் திடீரென்று
கேட்டான். “எதிரிப்படையில் புருஷோத்தமன் எங்கே இருக்கிறான்?”
தூரத்தில் மிகச்சிறியதாய்
தெரிந்த உருவங்களைக் கண்களைச் சுருக்கித் தானும் பார்த்து விட்டு ஆம்பி குமாரன் சொன்னான்.
“யானைப்படையின் மத்தியில் இருக்கிறான். அவன் பின்னால் அமர்ந்து அவன் தலைக்கு மேல் ஒரு
காவலன் குடை பிடித்துக் கொண்டிருக்கிறான்.”
அலெக்ஸாண்டர் மெல்லக்
கேட்டான். “காவலன் பின்னால் குடைபிடித்தபடி அமர்ந்திருக்கா விட்டால், வித்தியாசப்படுத்துகிற
வகையில் உடை நகைகள் கிரீடம் எதுவும் அணிந்திராமலும் இருந்தால் உன்னால் அந்தப் படையில்
புருஷோத்தமனைச் சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியுமா நண்பா?”
ஆம்பி குமாரன் தயக்கத்துடன்
சொன்னான். “சிரமம் தான் நண்பா”
முகாமிட்டிருக்கும்
தன்னுடைய கூடாரத்திற்கு ஆம்பி குமாரனையும், சசிகுப்தனையும், மற்ற படைத்தளபதிகளையும்
அழைத்துச் சென்ற அலெக்ஸாண்டர் அவர்களிடம் கேட்டான். “நம் படை நிலவரம் நமக்குத் தெரியும்.
அவர்கள் படை நிலவரத்தையும் பார்த்து விட்டோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அலெக்ஸாண்டரின்
தளபதிகளில் ஒருவன் சொன்னான். ”நிறைந்து ஓடும் நதியை நாம் படகுகள் மூலமாகவும், தற்காலிகப்
பாலங்கள் அமைப்பதன் மூலமாகவும் தான் கடந்து போரிட வேண்டும். அப்படி நாம் கடக்க முயற்சி
செய்யும் போதே அவர்கள் கற்களையும், ஆயுதங்களையும் வீசித் தாக்கி நம்மை தடுக்க முயல்வது
நிச்சயம். எதிரியின் மிகப்பெரிய படை வேறு வேலைகள் இல்லாமல் சும்மா இருக்கும் போது அந்த
ஒரு வேலையை திறம்படச் செய்ய முடியும். நமக்கு அது பிரதிகூலம் தான். அப்படியே நம் காலாட்படையும்,
குதிரைப்படையும் கஷ்டப்பட்டு நதியைக் கடந்து போனாலும் முன்னணியில் நிற்கிற அவர்களது
பெரிய யானைப்படை நம்மைத் தாக்கினால் சமாளிப்பது கஷ்டம். குறிப்பாக யானைகளின் தாக்குதலை
நம் குதிரைகளும், வீரர்களும் சமாளிப்பது கஷ்டம். குதிரைகள் மிரண்டு ஓடும் சாத்தியக்கூறு
அதிகம். எதிரிகள் முன்னணியில் யானைப்படையை நிறுத்தியிருப்பது அதை எதிர்பார்த்துத் தான்...”
சசிகுப்தன் சொன்னான்.
“மேலும் நம் இத்தனை படையும் ஒரே நேரத்தில் மறு கரையை அடைய முடியாது. பகுதி பகுதியாகத்
தான் போய்ச் சேர முடியும். ஒவ்வொரு பகுதியையும் அவர்களுடைய அனைத்துப் படைகளும் தாக்குவது
அவர்களுக்கு எளிது. அதனால் நம் அடுத்த பகுதிகள் போய்ச் சேர்வதற்கு முன் முந்தைய பகுதிகள்
பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கும் ஆபத்து இருக்கிறது”
அவர்கள் அதை எந்த
விதத் தயக்கமுமில்லாமல் சொன்னதும், அதை அலெக்ஸாண்டர் எந்த வித எதிர்ப்பும், கோபமும்,
கலக்கமும் காட்டாமல் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டதும் ஆம்பி குமாரனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. அவனால் இப்படி எதிர்மறையான தகவல்களை அமைதியாகக் கேட்டுக் கொள்ள முடிந்திருக்காது.
“இந்தப் பாதிப்புகளைத்
தவிர்க்க என்ன மாற்று வழி நமக்கு இருக்கிறது?” அலெக்ஸாண்டர் அமைதியாகக் கேட்டான்.
அவர்கள் அனைவரும்
அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கு வழி எதுவும் தெரியவில்லை. வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.
அலெக்ஸாண்டர் யோசித்தபடியே சொன்னான். “எதிரிகளுக்கு முழுமையாக நிறைந்து ஓடும் இந்த
விதஸ்தா நதியும், என்னேரமும் பெருக்கெடுத்து ஓட முடிந்த வெள்ளமும், மழைக்காலமும், நதியைக் கடந்து போரிட வேண்டியிருக்கும் நம்
அவசியமும் அனுகூலங்களாக இருக்கின்றன.”
அவர்கள்
தலையசைத்தார்கள். அலெக்ஸாண்டர் அமைதியாகச் சொன்னான். “யோசிப்போம்…. நதியைக் கடக்க பெரிய
படகுகள் அமைக்கும் பணி எந்த அளவில் இருக்கிறது”
ஆம்பிகுமாரன்
சொன்னான். “பெருமளவில் நம் ஆட்கள் செய்து முடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஆக
வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன”
“நல்லது.
அவர்கள் அந்த வேலையை முழுமூச்சாகச் செய்யட்டும்.” என்ற அலெக்ஸாண்டர் அனைவரும் போகலாம்
என்பது போல கையால் சைகை செய்தான்.
அனைவரும்
எழுந்து கிளம்பத் தயாராக ஆம்பி குமாரன் சற்று யோசித்தான். சசிகுப்தன் பார்வையால் அவனை
எழுப்பினான். வெளியே வந்த பிறகு சசிகுப்தன் ஆம்பி குமாரனிடம் சொன்னான். “அலெக்ஸாண்டர்
இது போன்ற நேரங்களில் தனிமையில் யோசிப்பதையே விரும்புவார். ஒரு முடிவுக்கு வரும் வரை
யாரிடமும் அனாவசியமாகப் பேச மாட்டார்…..”
ஆம்பி
குமாரன் சற்று கவலையுடன் கேட்டான். “நாம் இந்த மழைக்காலம் முடியும் வரை காத்திருந்திருக்கலாமோ?”
“அதுவே
உசிதம் என்றால் இப்போது அலெக்ஸாண்டர் கிளம்பியே இருக்க மாட்டார். ஏதாவது ஒரு திட்டம்
அவர் முன்பே போட்டிருப்பார். இப்போது இங்கே வந்து தற்போதைய நிலவரத்தைப் பார்த்த பின்
அந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதை உணர்கிறார். அதை ஒருசில நாட்களில்
செய்து விடுவார். அதனால் கவலை தேவையில்லை”
சசிகுப்தன்
உறுதியாகச் சொன்னான். அவன் அலெக்ஸாண்டருடன்
சேர்ந்து பாரசீகப் படையுடன் போரிட்டவன். ஆம்பி குமாரனை விட அதிக காலமாக அலெக்ஸாண்டருடன்
பழக்கியிருப்பவன் அவன். அந்த அனுபவத்தை வைத்து தான் அவன் சொல்கிறான் என்பதால் ஓரளவு
ஆம்பி குமாரனும் தைரியமடைந்தான்.
அன்றிரவு
நன்றாக மழை பெய்தது. காலச்சூழ்நிலை முன்கூட்டியே தெரிந்திருந்ததால் படைகள் மழையில்
நனையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அனைவரும்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அலெக்ஸாண்டர் தன் கூடாரத்திலிருந்து வெளியே
வந்தான். நள்ளிரவு நேரத்தில் கொட்டுகிற மழையில் தன் குதிரை மீதேறியவன் விதஸ்தா நதிக்கரையோரம்
பயணிக்க ஆரம்பித்தான்.
உறக்கம்
வராமல் தவித்துக் கொண்டிருந்த ஆம்பி குமாரன் தன் கூடாரத்தில் இருந்தபடியே அதைத் திகைப்புடன்
பார்த்தான். எங்கே போகிறானிவன்?
(தொடரும்)
என்.கணேசன்
Alexander is amazing sir. You brought him to us alive.
ReplyDeleteAlexander is really great. Thank you for giving us lessons through him.
ReplyDeleteபெரிய படகுகள் அமைத்துக்கொண்டு சென்றாலும் புருஷோத்தமன் படை எளிதாக தாக்கி விடும்....
ReplyDelete