அடுத்த காட்சியாக மாதவன் வீட்டில் அவன் தாய் பரிமாற நான்கு
பேரும் தரையில் சம்மணமிட்டுச் சாப்பிடும் காட்சியாக விரிந்தது. மாதவனின் தந்தை பரந்தாமன்
அவர்கள் நகைச்சுவையாக எதோ பேசிக் கொண்டு சாப்பிடுவதை, சாய்வு நாற்காலியில் அமர்ந்து
ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று முன் தான்
ரஞ்சனி அவர்களைப் பற்றிச் சொல்லி இருந்தாள் என்பதால் பார்த்துக் கொண்டிருந்த மேகலாவுக்கு
அவர்கள் தான் மாதவனின் பெற்றோராக இருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவள்
அந்தக் காட்சிகளில் ஐக்கியமாக ஆரம்பித்தாள்.
பரந்தாமனையும் அலமேலுவையும்
பார்த்தவுடன் தீபக் அடைந்த திகைப்புக்கு அளவேயில்லை. காட்சியிலிருந்து
கண்களை எடுக்காமல் அவன் தர்ஷினி காதில் சொன்னான். “இவங்க வீட்டு முன்னாடி தான்
எங்க கார் நின்னது. இந்தப் பாட்டி தாத்தாவைப் பத்தி தான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்”
தர்ஷினியும் திகைத்தாள். அவர்கள் இருவரும் கூட தங்களை மறந்து அந்தக் காட்சியில் கலந்து
போனார்கள்.
தன் மனைவியும்,
மகளும் காட்டிய ஈடுபாட்டைக் கவனித்த கல்யாண் இதை உடனடியாகத் தடுத்து
நிறுத்த நினைத்தான். “ஏதோ மாய சக்திகளை வைத்துக் கொண்டு திரைப்படம் எடுக்கிற
மாதிரி கொஞ்சம் உண்மையையும், நிறையப் பொய்களையும் கலந்து காட்டி என் குடும்பத்தில்
குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறாயா? வெளியே போ.” என்று கத்தி நாகராஜை வீட்டை விட்டு
வெளியேற்ற நினைத்தான். அவன் மகளும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்தாலும் அவர்களையும்
வாயை மூடுங்கள் என்று திட்டி அடக்க நினைத்தான். பிறகு எப்படியாவது அவர்களைச் சமாதானப்படுத்திக்
கொள்ளலாம். இப்போது இவனைத் துரத்துவது மிக முக்கியம்...
ஆனால் அவன் எத்தனை
முயன்றாலும் அவனால் வாயை அசைக்க முடியவில்லை. சகல பலத்தையும்
திரட்டி எழப் பார்த்த வேலாயுதமும் தன் முயற்சியில் தோல்வியடைந்தார். சரத் எல்லாம்
தங்கள் கைமீறிப் போய் விட்டதென்ற விரக்தியுடன் வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று பேரும் சிலை போல் அமர்ந்திருக்க
அடுத்த காட்சியில் ரஞ்சனியும் மாதவனும் தெரிந்தார்கள்.
ரஞ்சனி மாதவனிடம்
சொல்லிக் கொண்டிருந்தாள். “பாரு. நான் எது காதல்னு ஒரு கவிதை எழுதியிருக்கேன். படிக்கட்டுமா?”
மாதவன் ஆர்வத்துடம்
சொன்னான். “படி”
”கணக்குப் பார்ப்பது காதல் அல்ல;
காதல் கணக்கறியாதது.
மாறச் சொல்வது காதல் அல்ல;
காதல் மாற்ற விரும்பாதது.
காணாத போது
காணாமல் போவது காதல் அல்ல;
காதல் என்பது காத்திருப்பது.
இளமையிலும் இனிமையிலும் மட்டுமே
இருப்பது காதல் அல்ல;
முள் பாதை கடந்து
முதுமை வரை வந்து - உயிர்
மூச்சோடு முடிவது தான் காதல்.”
கவிதையைக்
கேட்டு முடித்து மாதவன் கைதட்டி விட்டு அவளைக் காதலுடன் பார்த்தபடி “நம்ம காதல் மாதிரியா?” என்று கேட்கிறான்.
ரஞ்சனியின்
கண்களில் அருவியாய் நீர் வழிய, அவளிடமிருந்து அடக்க முடியாத ஒரு விம்மலும் வெளிப்பட,
தீபக்கும் தர்ஷினியும் ரஞ்சனியை திகைப்புடன் பார்த்தார்கள். ரஞ்சனியோ வேறு உலகில்,
வேறு காலத்தில் இருந்தாள். அவர்கள் பார்ப்பதைக் கூட அவள் உணரவில்லை…
தீபக்குக்கும்,
தர்ஷினிக்கும் ரஞ்சனியின் இன்றைய நிலைமையை இப்போது நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
நண்பன் என்ற நிலையைத் தாண்டி காதலனாக இருந்தவன் மற்ற நண்பர்களால் கொல்லப்பட்டான் என்று
கேள்விப்பட்டால் அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? கவிதைகளில் ஆர்வம் அம்மாவிடம்
இருந்து தான் அவனுக்கு வந்திருக்கிறது என்பது தீபக்குக்கு மெல்லப் புரிந்தது. அம்மா
இந்த அளவு அழகான, அர்த்தமுள்ள கவிதைகள் எழுதுவாள் என்பதைத் தெரிவித்ததே இல்லை. அவள்
காதலனின் மரணத்தோடு அவள் கவிதைகளும் நின்று போயிருக்க வேண்டும். அதை எண்ணுகையில் அவன்
கண்கள் கலங்கின. அம்மா நீ எத்தனை கனத்தை உன் மனதில் சுமந்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறாய்!
அவர்களுடைய
பெற்றோர்களுடைய வாழ்க்கையே சுவாரசியமான சினிமாப்படம் போல நிகழ்வுகள் காட்டப்படுகிறது
என்பதால் அடுத்து என்ன என்று ஆர்வத்தோடு அவர்கள் காத்திருக்க நாகராஜ்
அடுத்த காட்சியை வரவழைத்தான்.
நாதமுனி பேசப் பேச
கல்யாணும், மாதவனும் மிகச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்னணியாக
நாகராஜ் சொல்ல ஆரம்பிச்சான். ”இதோ இந்தக் காட்சியில் தெரியறவர் நாதமுனி. மாதவன் அப்பாவோட
நெருங்கிய நண்பர். பேராசிரியர். பாம்புகளைப் பத்தி ஆராய்ச்சி செய்தவர். பல அபூர்வமான
தகவல்கள் சொல்வார். மாதவனுக்கு பாம்புகள் ரொம்ப பிடிக்கும்...”
தீபக்குக்கு மாதவனின்
செய்கைகள் எல்லாம் அவனையே இன்னொரு உருவத்தில் இருப்பதாக அடையாளம் காட்டின. மாதவன் அவனைப்
போலவே பேசுகிறான். அவனைப் போலவே பாம்புகள் மீது ஆர்வமாக இருக்கிறான். மாதவன் மீது இனம்புரியாத
ஒரு ஈர்ப்பு அவனுக்கு உருவாக ஆரம்பித்தது. ஒரு முறை நாகராஜ் “நீ வேறொருவனை ஞாபகப்படுத்துகிறாய்”
என்று சொன்னது இந்த மாதவனைத் தான் என்பது இப்போது புரிகிறது.
“நாதமுனி சொன்னதில்
நாகங்கள் உருவாக்கும் நாகரத்தினக்கல் மேல் கல்யாணுக்கும் ஆர்வம் அதிகம். ஏன்னா அந்த நாகரத்தினக்கல் வெச்சிருக்கிறவனுக்கு அதிர்ஷ்டம்
தானாய் வரும்னு உலகத்துல பல இடங்கள்ல நம்பிக்கை இருக்கிறதா அவர் சொன்னார். ஏழ்மை நிலைமைல
இருந்த மாதவனுக்கும் கல்யாணுக்கும் அந்த மாதிரி ஒரு நாகரத்தினக்கல் கிடைச்சா எவ்வளவு
நல்லாயிருக்கும்னு எப்பவுமே கனவுகள் உண்டு. அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிற சமயத்துல
அதிகமாய் பேசிகிட்டது அந்த விஷயமாய் தான் இருந்துச்சு. ஏதோ கற்பனைக்கதையானாலும் அப்படி
மட்டும் நடந்துட்டா வாழ்க்கையே மாறிடுமில்லையான்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அந்தச் சமயத்தில்
நிஜமாவே ஒரு நாகரத்தினக்கல் அவங்க வாழ்க்கையை எப்படியெப்படியோ மாத்திடப் போகுதுன்னு
அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலை.”
“ஒரு ரயில் பயணத்தில்
அவர்கள் வாழ்க்கைப்பயணமும் வழி மாறிடுச்சு. குளு, மணாலிக்கு சுற்றுலா போய் அங்கே ட்ரெக்கிங்கும்
போகணும்னு ஒரு நாள் முடிவு பண்ணினாங்க. அவங்க ரயில்ல போறப்ப அவங்க கூட ஒரு பாம்பாட்டியும்
பிரயாணம் பண்ணினான்.....”
காட்சி அன்றைய ரயில்
பயணத்திற்கு மாறியது. அந்தப் பாம்பாட்டி படபடப்பான மனநிலையில் இருப்பது தெரிந்தது.
அவனும், மாதவனும் அருகருகில் அமர்ந்திருக்க எதிர் வரிசையில் கல்யாணும் சரத்தும் அமர்ந்திருந்தார்கள்.
நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க பாம்பாட்டி அடிக்கடி குனிந்து கீழே இருக்கும்
தன் உடைமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாதவன் அந்தப் பாம்பாட்டியிடம்
சிரித்துக் கொண்டே சொன்னான். “எல்லாம் பத்திரமா தான் இருக்கு. கவலைப்படாதீங்க. உள்ளே
விலையுயர்ந்த பொருள் எதாவது இருக்கோ?”
பாம்பாட்டி அந்த
இளைஞனின் பேச்சால் சிறிது இறுக்கம் தளர்ந்தான். “அப்படி எல்லாம் இல்லை.... அப்படி இருந்தா
இந்த வெயில் காலத்துல சாதாரண ஸ்லீப்பர் கோச்ல ஏன் வர்றேன்..” என்று சிரித்தான்.
சிறிது நேரம் கழித்து
பாம்பாட்டி பாத்ரூம் போக எழுந்து போனான். அவன் போனவுடன் கல்யாண் மாதவனிடம் சொன்னான்.
“டேய் என்னவோ ஒரு மாதிரியான சத்தம் அங்கே அடியிலிருந்து கேட்குதுடா”
மாதவன் சொன்னான்.
“எனக்கும் கூட கேட்டுது. எதோ பாம்பு சீறுற மாதிரி. ஆனா பாம்பெல்லாமா பிரயாணத்துல எடுத்துகிட்டு
வருவாங்க...”
கல்யாண் சொன்னான்.
“டேய் அவன் இப்ப தான போனான். ரெண்டு நிமிஷத்துக்கு கண்டிப்பா வரமாட்டான். என்னன்னு
பாருடா?”
மாதவன் மெல்லக்
குனிந்து சத்தம் வரும் அந்த சூட்கேஸை மெல்லத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு பெரிய
பாம்பு சுருண்டு கிடந்தது.
திகைத்து நிமிர்ந்த
மாதவன் கல்யாணிடம் சொன்னான். “டேய் பாம்புடா”
சரத் உடனடியாக கால்களை
மேலே மடித்து வைத்துக் கொண்டான். கல்யாண் சொன்னான்.
“டிடிஆர் கிட்ட சொல்லலாமாடா”
“பாவம்டா விடுடா”
மாதவன் சொன்னான்.
சரத் சொன்னான்.
“டேய் நீ லூஸாடா? அது கடிச்சுதுன்னா என்ன ஆகும்னு தெரியுமாடா?”
“டேய் நாம இன்னும்
ஒரு மணி நேரத்துல டெல்லில இறங்கப் போறோம். இவன் ஜம்மு
போறவன். டிடிஆர் கிட்ட சொன்னா அந்த ஆளு இவனை இங்கேயே இறக்கி விட்டுடுவான். நம்மனால
இவனுக்கு எதுக்குடா பிரச்சனை. அப்படி அது வெளியில வராதுடா”
பாம்பாட்டி வரும்
சத்தம் கேட்க மாதவன் சூட்கேஸை மூடி விட்டு அவசரமாய் நிமிர்ந்தான்.
கல்யாணும் கால்களை
மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்தான். அவன் மாதவனைப் பார்த்து கால்களை மேலே வைத்துக்
கொள்ள சைகை செய்தான். மாதவன் ‘அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுடா’ என்று பார்வையிலேயே தெரிவித்து
விட்டு கால்களைத் தொங்கப்போட்டபடியே உட்கார்ந்திருந்தான்.
கல்யாணும் சரத்தும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மாதவனை முறைக்க மாதவன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்....
ரஞ்சனி இந்தக் காட்சியை
கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ரயில் ஏறிய பிறகு என்ன நடந்தது என்பதை
அவள் அறிந்திருக்கவில்லை. மாதவனின் மரணம் வரை இனி என்ன நடக்கிறது என்பதை அவள் அறிந்தாக
வேண்டும்....
நாகராஜ் காட்டிக் கொண்டிருந்த இந்தக் காட்சி ஆரம்பித்த
போது கல்யாண், சரத் இருவர்
முகத்திலும் பீதி தெரிய ஆரம்பித்தது. ஆதாரம் காட்சியாகவே வெளிப்பட வாய்ப்பிருக்கிறது
என்பதை அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Still you're able to maintain the suspense.Going excellent.
ReplyDeleteஅடுத்து என்ன? என்ற ஆர்வம் அதிகரிக்கிறது...அற்புதம்
ReplyDeleteAlways truth is in a bitter way. உண்மை என்றுமே கசப்பானது
ReplyDeleteAnnan maar engey
ReplyDeleteWaiting for next episode sir
ReplyDelete