சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 16, 2023

சாணக்கியன் 44

லெக்ஸாண்டர் மழை பலமாகத் தன் மேல் விழுவதையும் குளிர்வதையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருந்தான். விதஸ்தா நதி அவன் போகும் திசைக்கு எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. நதியில் வெள்ள நீர் அதிகரித்திருப்பதை அவனால் காண முடிந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த நதியின் ஓட்டத்தை ரசித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் ஓரிடம் வந்தவுடன் குதிரையை நிறுத்தினான். அது மேட்டுப் பகுதி. நதிக்கு நடுவே ஒரு குட்டித் தீவு போல் மரங்கள் நிறைந்த பகுதி ஒன்று தெரிந்தது. அங்கு மட்டும் நதி இருபிரிவாகப் பிரிந்து அந்தப் பகுதியின் இருமருங்கிலும் ஓடி மீண்டும் பிறகு ஒன்று சேர்ந்து கொண்டது. அந்தப் பகுதியை சிறிது நேரம் நின்று அலெக்ஸாண்டர் ஆராய்ந்தான். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் வந்த வழியில் நதி வளைந்து சென்றிருந்ததால் அவர்கள் படைகளும், அவன் கிளம்பி வந்த இடமும் சிறிதும் தெரியாமல் பார்வைக்கு மறைந்திருந்தது. அலெக்ஸாண்டர் புன்னகை செய்தான்.

 

ழை காலையில் நின்று விட்டது. இருபக்கப் படைகளும் நதிக்கரையில் தயார் நிலைக்கு வந்து நின்று விட்டன. கேகய அரசர் புருஷோத்தமன் மறு கரையில் தெரிந்த எதிரிப்படைகளைப் பார்வையிட்டார். பெரிய படைகள் தான் என்றாலும் கேகயப்படைகளுக்கு இணையான அளவில் பெரிதல்ல என்பதைக் கவனித்த போது அவருக்கு திருப்தியாக இருந்தது. கேகய நாட்டுக்கு மற்ற எல்லைப் பகுதிகளில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவரால் முழுப் படையையும் இங்கே கொண்டு வந்து குவிக்க முடிந்தது. ஆனால் காந்தாரத்திற்கு அந்த நிலைமை இல்லை. அதனால்  அவர்கள் ஒரு கணிசமான பகுதியை மற்ற இடங்களில் நிறுத்தியிருந்தார்கள். தட்சசீலத்திலும் ஒரு படையை தலைநகரப் பாதுகாப்புக்காக விட்டு வந்திருக்கிறார்கள் என்பது ஒற்றர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

 

புருஷோத்தமன் தன் சேனாதிபதியிடம் கேட்டார். ”இருபக்க படை நிலவரத்தைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது சேனாதிபதி?”

 

சேனாதிபதி புன்னகையுடன் சொன்னார். “நம் படைபலத்திற்கு அவர்கள் படைபலம் போதாது அரசே. அவர்களுடைய நிலைமையும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அவர்கள் இந்த வெள்ள காலத்தில் நதியைக் கடந்து வருவதே சற்று பிரயாசையான செயல் தான். அப்படிக் கடந்து வரும் போதே நாம் இங்கிருந்து தாக்க ஆரம்பித்து விடலாம். அதை மீறியும் வருவதென்றாலும் ஒரேயடியாக அவர்களுடைய முழுப்படையும் இங்கே வந்து சேர முடியாது.  பகுதி பகுதியாக வந்தாலோ அவர்களுக்கு வெற்றிக்கு வாய்ப்பு சிறிதும் கிடையாது.”

 

புருஷோத்தமனும் திருப்தியுடன் புன்னகைத்தார். “பாவம் அலெக்ஸாண்டர். அவன் இது வரை தோல்வியே காணாதவனாம். நம்மிடம் வந்து முதல் தோல்வியை அவன் காண வேண்டும் என்று அவன் தலையில் எழுதி இருக்கிறது. ஆம்பி குமாரனுடன் கூட்டு சேர்ந்த நேரம் அலெக்ஸாண்டருக்குச் சரியில்லை போல இருக்கிறது.”

 

இருவரும் பேசிக் கொண்டதை அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்த இந்திரதத்துக்கு அவர்களைப் போலத் திருப்தியடைந்து விட முடியவில்லை.  அவர் சொன்னார். “கரை வரை வந்து விட்ட படைகள் அங்கேயே ஏன் நின்று கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லையே

 

சேனாதிபதி சொன்னார். “வெள்ளம் குறையக் காத்துக் கொண்டிருக்கலாம். அல்லது பொறூமையிழந்து போய் நாமே நதியைக் கடந்து சென்று போரிடுவோம் என்று பேராசைப்பட்டு நின்றிருக்கலாம்……”

 

இந்திரதத் சொன்னார். “அல்லது நம் படையைப் பார்த்த பிறகு மேலும் படையைத் தருவிக்க ஆணையிட்டு அது வரக்காத்திருக்கவும் செய்யலாம்….”

 

புருஷோத்தமன் சொன்னார். “அதற்கும் வாய்ப்பு இருக்கிறது…. அலெக்ஸாண்டர் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் நிற்கும் பொறுமை இல்லாதவனாகவும் தெரிகிறான். அவன் அடிக்கடி ஆம்பி குமாரனையும், மற்ற தளபதிகளையும் அழைத்துக் கொண்டு போய் கலந்தாலோசிப்பது போலத் தெரிகிறது…. ”

 

சேனாதிபதி சொன்னார். “ஆமாம் நேற்றும் நீண்ட நேரம் போய்ப் பேசியிருந்து விட்டு வந்தார்கள். பாருங்கள் இப்போதும் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறான். போய் அப்படி என்ன பேசுவார்களோ தெரியவில்லை. மழைக்காலம் முடிந்த பின் போருக்கு வந்திருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்களோ என்னவோ? அரசே ஒன்றைக் கவனித்தீர்களா? அலெக்ஸாண்டர் மிக உயரமானவன் கிடையாது. அவனுடைய தலைக்கவசம் இல்லா விட்டால் அவன் வீரர்களில் பலரை விட அவன் உயரம் குறைவானவன் தான். அதனால் தான் மற்றவர்களை விட நீண்ட தலைக்கவசம் அணிந்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்

 

புருஷோத்தமன் சிரித்தார். இந்திரதத் பேச்சு போகும் விதத்தை ரசிக்கவில்லை. அலெக்ஸாண்டரைப் பற்றிய நண்பர் விஷ்ணுகுப்தரின் கணிப்பு இப்போதும் அவருக்கு மனதில் நெருடலாக இருப்பதால் சொன்னார். “அவன் தலைக்கு மேல் என்ன அணிந்திருக்கிறான் என்பது முக்கியமல்ல சேனாதிபதி. அவன் தலைக்குள் என்ன இருக்கிறது என்பதல்லவா முக்கியம்? அவன் போர் வியூகங்களை வகுப்பதிலும், நிலைமைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் வல்லவன் என்று சொல்கிறார்கள். அதனால் அவனை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.”  

 

சேனாதிபதி சொன்னார். “நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே.”

 

புருஷோத்தமன் சொன்னார். “நாம் வெறுமனே இங்கு வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருப்பது அனாவசியம் என்று தோன்றுகிறது. வாருங்கள் நாமும் முகாமில் ஓய்வெடுப்போம். அவர்கள் ஆலோசனை முடிந்து திரும்பவும் வந்த பிறகு வருவோம்

 

அலெக்ஸாண்டரும், ஆம்பி குமாரனும் பேசி முடித்து திரும்பவும் வந்தவுடன் தெரிவிக்கும்படி படைவீரர்களிடம் தெரிவித்து விட்டு புருஷோத்தமனும், இந்திரதத்தும், சேனாதிபதியும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.

 

லெக்ஸாண்டர் நேற்றிரவு தான் பார்த்த இடத்தைப் பற்றி ஆம்பி குமாரனிடமும், சசிகுப்தனிடமும், தங்கள் இரு படைத்தளபதிகளிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். “….. அந்த இடத்தின் மிகப்பெரிய அனுகூலம், நாமும் சரி, நம் எதிரிகளும் சரி இங்கிருந்து கொண்டு அந்த இடத்தைப் பார்க்க முடியாதது தான். அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கிருப்பவர்கள் அறிந்து கொள்ள வழியில்லை. இப்போது நான் அறிய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ஒரு வேளை நம்முடைய சிறு படை ஒன்று அந்தப் பகுதி வழியாக மறு கரையை அடைந்தால் அக்கரையில் நாம் போய்ச் சேரும் பகுதியில் உள்ள நிலவரம் என்ன? அங்கே உள்ள பகுதியில் மக்கள் வசிக்கிறார்களா, படைக்காவல் ஏதாவது இருக்குமா?”

 

கேகய நாட்டுக்குப் பல முறை போன அனுபவமுள்ள காந்தாரத் தளபதி ஒருவன் சொன்னான். “இந்தப் பகுதி போலவே அந்தப் பகுதியிலும் மக்கள் குடியிருப்போ, காவலோ இல்லை. அதனால் நம்மில் சிலர் அந்தப் பகுதியை அடைந்தால் அக்கரைப்பகுதியில் இருந்து யாரும் உடனடியாகக் கவனித்து அறிவிக்கும் அபாயம் இல்லை.”

 

அலெக்ஸாண்டர் உற்சாகமடைந்தான். “நதிக்கு நடுவே தீவுத்திடல் ஒன்று இருப்பதால் நாம் அப்பகுதியில் கரையிலிருந்து அந்தத் தீவுத்திடலுக்கும், அந்தத் தீவுத்திடலிலிருந்து அக்கரைக்கும் தற்காலிகப் பாலங்கள் அமைப்பது எளிது. படகுவழியாகப் போவதிலும் பிரச்சினை இருக்காது.  அப்படிப் போவதை ரகசியமாக வைத்திருப்பது ஒன்று தான் மிக முக்கியம்….”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “இங்கிருந்து ஒரு படை அந்தப் பகுதிக்கு நகர்வதைப் பார்த்தாலே கேகயப்படை எச்சரிக்கை ஆகி விடுமே நண்பா. அவர்கள் என்ன நடக்கிறது என்பதை யூகித்து விட மாட்டார்களா?”


அலெக்ஸாண்டர் சொன்னான். “அதற்கு நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் நண்பா. எதிரிகள் பார்வைக்கு இங்கே ஒரு மாற்றமும் தெரியாது”.      

அதெப்படி முடியும் என்று ஆம்பி குமாரன் யோசித்துப் பார்த்தான். அவன் சிற்றறிவுக்கு எதுவும் எட்டவில்லை. 


அலெக்ஸாண்டரின் படைத்தளபதி ஒருவன் மெல்லக் கேட்டான். “இங்கே நீங்கள் நீண்ட நேரம் காணப்படவில்லையானாலும் அவர்கள் சந்தேகப்படும் அபாயம் இருக்கிறதே சக்கரவர்த்தி”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “அங்கிருப்பவர்கள் என்னுடைய முகத்தைப் பார்த்து அடையாளம் காண வழியில்லை. என்னுடைய உடை, உடல்கவசம், தலைக்கவசம் ஆகியவை வைத்து தான் என்னை அடையாளம் காண்பார்கள். கிட்டத்தட்ட என் உயரம், என் உடல்வாகு உள்ள நம் வீரன் ஒருவன் என்னுடைய உடை, உடல்கவசம், தலைக்கவசம் அணிந்து கொண்டு நான் நிற்கும் இடத்தில் இங்கே நின்று கொண்டிருந்தால் மறு கரையில் இருப்பவர்களுக்கு வித்தியாசம் தெரிய வழியே இல்லை…”

 

(தொடரும்)

என்.கணேசன்          

 

 


  

2 comments:

  1. புருஷோத்தமன் சுதாரிப்பாரா?

    ReplyDelete