சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 2, 2023

சாணக்கியன் 46

 

கேகய ஒற்றன் உடனே தங்கள் படைக்கு இந்தத் திட்டத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவர்கள் இருக்கும் போது நதியைக் கடக்க வழியில்லை என்பதால் பொறுமையாகத் தன் மறைவிடத்திலேயே அமைதியாகக் காத்திருந்தான்.  தீவித்திடலின் இரு பக்கங்களிலும் இரு கரைகளுக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து கொண்ட பின் அந்தப் பணியாளர்கள் மீண்டும் நதியில் இறங்கி நீந்தி இக்கரைக்கு வந்தார்கள். வந்தவர்கள் மிகவும் தாழ்ந்த குரலில் அலெக்ஸாண்டரிடம் ஏதோ பேசினார்கள். பின் அவர்கள் தங்கள் குதிரைகளில் ஏறிக் கிளம்பி விட அலெக்ஸாண்டர் மட்டும் அந்தக் கரையில் சிறிது நேரம் தனியாக நின்று நதியோட்டத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.  கேகய ஒற்றன் பொறுமை இழந்து அவன் செல்வதற்காகக் காத்திருந்தான்.

 

மெல்ல மழை தூற ஆரம்பித்தது. ஆகாயத்தை நிமிர்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அலெக்ஸாண்டர் மெல்ல குதிரையேறினான். அவன் பார்வையில் இருந்து மறையும் வரை காத்திருந்த கேகய ஒற்றன் பின் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான். யாராவது கவனிக்கிறார்களா என்று ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு கேகய ஒற்றன் நதியில் குதித்து மறு கரை நோக்கி நீந்த ஆரம்பித்தான். மழை வேகமாக விழ ஆரம்பித்தது.

 

திடீரென்று மழையின் ஓசையோடு சேர்ந்து ஒரு குதிரை வேகமாக  வரும் குளம்படி ஓசையும் கேட்க ஆரம்பிக்கவே திகைத்த கேகய ஒற்றன் ‘இப்போது வருவது யார்?’ என்று திரும்பிப் பார்த்தான். அலெக்ஸாண்டர் தான் குதிரையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான்.

 

கேகய ஒற்றன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு நதிநீரில் அமுங்கி உட்புறமாக நீந்துவது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்துவதற்கு முன்பே அலெக்ஸாண்டரின் கூரிய குறுவாள் அவன் பின்னங்கழுத்தைப் பதம் பார்த்தது. ஒரு வினோதமான ஒலியெழுப்பிய கேகய ஒற்றன் வேகமாக நீந்தி மறுகரையை எட்டி விட எண்ணினான். ஆனால் அதுவே அவன் கடைசி எண்ணமாக இருந்தது. பின் அவன் நினைவை இழக்க ஆரம்பித்தான். நதி ஓட்டத்தில் ஒற்றனின் உடல் அடித்துச் செல்லப்படுவதை, குதிரையின் மீதமர்ந்தபடியே பார்த்துக் கொண்டு இருந்த அலெக்ஸாண்டர் பின் திருப்தியுடன்  குதிரையைத் திருப்பினான்.

 

கட்டுமரப் பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே தாங்கள் கண்காணிக்கப்படுவதை உள்ளுணர்வால் உணர்ந்திருந்த அலெக்ஸாண்டர் நதிக்கரைக்கு வரும் போதும் அந்த உணர்வை இழக்கவில்லை. தான் உணர்ந்ததை வெளிப்படுத்திக் கொள்ளாத அலெக்ஸாண்டர் முதலில் வந்த வேலையை முடித்துக் கொண்டு, பணியாளர்களை அனுப்பி விட்டு அவர்களும் அறியாதபடி ஒற்றன் கதையை முடிக்க அப்போதே முடிவு செய்திருந்தான். ஒற்றன் கேகய நாட்டுக்காரனாக இருந்தால் அவர்கள் நடவடிக்கைகளை வைத்து உண்மையை யூகித்துக் கொள்வான் என்றும் அவர்கள் நகர்ந்தவுடன் அவன் செய்யும் முதல் வேலை மறு கரையை அடைந்து அவன் நாட்டவரை எச்சரிப்பதாகத் தானிருக்கும் என்றும் அலெக்ஸாண்டர் அனுமானித்திருந்தான்.  அவன் அனுமானத்தை மெய்ப்பிப்பது போலவே கேகய ஒற்றனும் நடந்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டான்…

 

ந்திரதத்துக்கு தாங்கள் அறியாமல் ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது என்ற உணர்வு தொடர்ந்து மனதில் நெருடிக் கொண்டேயிருந்தது. ஆனால் நடப்பது என்னவாக இருக்கும் என்பதை அவரால் எத்தனை முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர்க்கரையில் இருக்கும் படைகளை அவர் மிகவும் கூர்ந்து பார்த்தார். முதல் நாள் அணிவகுத்து நின்ற அளவிலேயே எதுவும் மாறாமல் அப்படியே தான் படைகள் நிற்கின்றன. ஆம்பி குமாரன், அலெக்ஸாண்டர், சசிகுப்தன், யவனப்படைத் தளபதிகள், காந்தாரப் படைத்தளபதிகள் அனைவரும் அவரவர் நிற்கும் இடங்களிலேயே தான் நிற்கிறார்கள். ஆரம்ப நாளில் இருந்து அடிக்கடி முகாம் போய் சில நாழிகைகள் கழித்து வரும் பழக்கமும் தினமும் தொடர்கிறது.

 

முகாம்களுக்குத் திரும்பிப் போய் இளைப்பாறுவார்களோ, இல்லை கலந்தாலோசனை செய்வார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் திரும்பி வரும் போதும் எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று  இந்திரதத் கூர்ந்து கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போன அத்தனை பேரும் திரும்பித் தான் வருகிறார்கள். தங்கள் படைகளின் முன்னிலையில் முன்பு நின்ற இடத்திலே தான் நிற்கிறார்கள். எதுவும் செய்யத் தீர்மானித்ததாய்த் தெரியவில்லை.

 

அவர்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள்? இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே நிற்பார்கள்? கேகயப்படை பொறுமை இழந்து நதிக்கரையைக் கடந்து அவர்களுடன் போருக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா, இல்லை நதியில் வெள்ள ஓட்டம் குறைந்த பின் கடந்து போரிடலாம் என்று காத்திருக்கிறார்களா என்பது புரியவில்லை.

 

இது அவர்களிடம் இருக்கும் குழப்பமா, இல்லை தங்கள் அறிவுக்கெட்டாத சூழ்ச்சி எதாவது இதிலிருக்கிறதா என்பது இந்திரதத்துக்குப் புரியவில்லை. நண்பர் விஷ்ணுகுப்தர் சொல்லி இருந்ததைப் பார்த்தால் அலெக்ஸாண்டரிடம் குழப்பம் எதுவும் இருக்க வழியில்லை. அப்படியானால் நமக்குத் தான் எதுவோ புரியவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவர் தன் மனதில் எழுந்த யோசனைகளை புருஷோத்தமனிடமும், சேனாதிபதியிடமும் வெளிப்படையாகவே சொன்னார்.

 

புருஷோத்தமன் வாய் விட்டுச் சிரித்தார். “இந்திரதத், உன் நண்பன் விஷ்ணுகுப்தன் உன்னிடம் அளவுக்கு அதிகமாக அலெக்ஸாண்டரை உயர்த்திச் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அதனால் தான் நீ தேவையில்லாமல் குழப்பத்தில் இருக்கிறாய். நம் எதிரிகள் நம் முன்னால் தான் நிற்கிறார்கள். அவர்கள் அணிவகுத்து வந்த முதல் நாளிலிருந்து அவர்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சிறிது நகர்ந்தாலும் நம் பார்வைக்கு அது தப்பி விடாது. அப்படி இருக்கையில் நீ ஏன் பயப்படுகிறாய் என்று தெரியவில்லை”  

 

’எதையும் தேவையில்லாமல் உயர்த்திச் சொல்வதோ, தாழ்த்திச் சொல்வதோ என் நண்பனிடம் என்றுமே கிடையாது.’ என்று இந்திரதத் மனதில் நினைத்துக் கொண்டாலும் அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. விஷ்ணுகுப்தர் இங்கே இருந்திருந்தால் அவரிடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யூகித்துச் சொல்லச் சொல்லியிருக்கலாம். அவர் அறிவிற்கு எதாவது புலப்பட்டிருக்கும்.

 

கேகய பட்டத்து இளவரசன் தன் குதிரையை முன்னோக்கிச் செலுத்தி அவர்கள் அருகில் வந்தான். வலது பின்புறத்தில் உள்ள படைப்பிரிவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் அவனுக்கு நின்று நின்று சலித்து விட்டது. “நம் எதிரிகள் வேடிக்கை பார்ப்பதை எப்போது நிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லையே அமைச்சரே”

 

கேகய சேனாதிபதி வெடிச்சிரிப்பு சிரித்தான். “அதைப் பற்றித் தான் நாங்களும் பேசிக் கொண்டிருக்கிறோம்… ஆம்பி குமாரனிடம் சேர்ந்த நேரம் அலெக்ஸாண்டருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலிருக்கிறது…”

 

கேகய பட்டத்து இளவரசன் சொன்னான். “ஆனால் தினமும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது தனித்துப் போய் ஆலோசனை நடத்துகிறார்களே. இன்னுமா அவர்கள் ஒரு தீர்மானத்தை எட்டவில்லை”

 

புருஷோத்தமன் சொன்னார். “வேடிக்கை பார்ப்பது என்பது தான் அவர்களுடைய தீர்மானமோ என்னவோ. வழக்கமாக அவர்கள் இந்த நேரத்தில் தான் ஆலோசிக்கப் போவார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் போய் விடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறேன்…”

 

சொல்லி விட்டு புருஷோத்தமன் தன்னுடைய கூடாரத்தை நோக்கிப் போக இந்திரதத் எதிர்க்கரையைக் கூர்ந்து பார்த்தார். புருஷோத்தமன் சொன்னது போல ஆம்பி குமாரனும், அலெக்ஸாண்டரும் ஆலோசனைக்கோ இளைப்பாறவோ இன்னும் போகவில்லை. ஏதோ ஒன்றுக்காக அவர்கள் தயார்நிலையில் காத்துக் கொண்டிருப்பதாக இந்திரதத்துக்குத் தோன்றியது. அந்த ஏதோ ஒன்று என்னவென்று விளங்காததே அவருக்குச் சித்திரவதையாக இருந்தது.

 

அவர் இளவரசனிடமும், சேனாதிபதியிடமும் சொன்னார். ”அவர்கள் எப்போதும் போல் அல்லாமல் எதற்கோ தயாராய் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அதற்குத் தகுந்தாற் போல அவர்கள் இன்றைக்கு முகாம்களுக்குப் போகவில்லை. படைவீரர்களிடமும் தயாராக இருக்கும் துடிப்பு தெரிகிறது…”

 

சேனாதிபதியும் கூர்ந்து பார்த்து விட்டு மெல்லச் சொன்னான். “உண்மை தான்..…”


திடீரென்று வலது பக்க விளிம்புப் படை வீரர்கள் சிலர் கத்தினார்கள். “எதிரிகள் …. எதிரிகள்…..”

 

அதிர்ச்சியுடன் இந்திரதத்தும் சேனாதிபதியும், இளவரசனும் வலதுபக்கம் திரும்பிப் பார்த்த போது தூரத்தில் அலெக்ஸாண்டரும் அவனது படையும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தது போல எதிர்க்கரையில் வேக வேகமாக கரையைக் கடக்க ஆயத்தங்களைச் செய்வது தெரிந்தது.

 

எதிர்க்கரையில் அலெக்ஸாண்டர் ஒருவன் மட்டும் பின்னுக்குச் செல்ல மற்ற படைத்தலைவர்கள் முன்னேறுவது தெரிந்தது. எதிர்க்கரையில் இருப்பவன் அலெக்ஸாண்டர் அல்ல. வலது பக்கமாக தாக்க வந்து கொண்டிருப்பவன் தான் அலெக்ஸாண்டர் என்ற உண்மை மெல்லப் புலனாக, இந்திரதத் கத்தினார். “இளவரசே. நீங்கள் வலதுபக்கமிருந்து வரும் எதிரிகளைத் தாக்க உங்கள் படையுடன் செல்லுங்கள்….”

 

கேகய பட்டத்து  இளவரசன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து விரைந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




3 comments:

  1. Alexander's war tactics is amazing.

    ReplyDelete
  2. புருஷோத்தமன் ...அலெக்சாண்டர் வரும் வரை அலட்சியமாகவே இருந்து விட்டார்.... இனி வந்தவர்களை விரட்டியடிப்பாரா? பார்ப்போம்....

    ReplyDelete