சில மனிதர்கள் ஆழமாக சிந்திக்க முடியாதவர்கள். அவர்களால்
தங்களை விட அறிவில் மேம்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்க முடியாது. அவர்கள்
நலனில் அக்கறை கொண்டு வலிய வந்து யாராவது அறிவுரையோ, ஆலோசனையோ
தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்கள் அறிவுரை
அவர்களுக்கு வேம்பாகக் கசக்கும். அதனால் எதற்கும் யாரையும் ஆலோசனை கேட்காமல் தாங்களாக யோசித்து, சில அனுமானங்களை
எட்டி சில முடிவுகளை எடுப்பார்கள். அதன் விளைவுகளைப்
பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கும் சிரமங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ள
மாட்டார்கள். தாங்கள் நினைப்பது தான் சரி, அது தான்
அப்பழுக்கில்லாத திட்டம் என்று நினைப்பார்கள். ஆனால் நடைமுறையில்
பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் போது பெருங்கலக்கம் அடைவார்கள். ஆனால் அது
அவர்களே எடுத்திருக்கும் முடிவின் விளைவுகள் என்பதால் யாரையும் அவர்கள் குற்றம் சொல்லவும்
வழியில்லை. வாய் விட்டுப் புலம்பவும் வழியில்லை. வருத்தத்தை
வெளிப்படுத்தினால் தங்கள் முட்டாள்தனத்தை தாங்களே வெளிப்படையாக ஒத்துக்கொள்வது போல்
ஆகி விடும் என்பதால் அந்த முடிவில் உள்ள சில்லறை நற்பலன்களை எண்ணியும், வராமல்
தடுத்த பெரிய தீயபலன்களை எண்ணியும் ஆறுதல் அடைவார்கள். ஆம்பி குமாரன்
அப்படித் தான் ஆறுதலடைந்தான்.
ஆனால் கேகய நாட்டுக்கு எதிராகப் போருக்கு
தட்சசீலத்திலிருந்து அலெக்ஸாண்டருடன்
கிளம்புகையில் அவன் அடிவயிற்றில் ஒருவித பயம் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை. போரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பயமல்ல அது. அலெக்ஸாண்டருடன்
செல்வதால் வெற்றி நிச்சயம் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அவன் அடிவயிற்றுக் கலக்கத்திற்குக் காரணம் தட்சசீலத்தை பிலிப்பிடம்
விட்டுப் போவது போல் உணர்ந்தது தான். இன்று வரை ’இப்போதும்
நான் தான் காந்தார அரசன், அரியணையில் நான் தான் அமர்ந்திருக்கிறேன்” என்ற மனசமாதானமாவது
இருந்தது. இப்போது தலைநகரை விட்டுப் போகையில் அந்த மனசமாதானமும் விலகிப்
போனது.
கேகயத்துடன் போர் முடிந்து இங்கே திரும்பி
வந்து விடுவோமா இல்லை அலெக்ஸாண்டர் மற்ற போர்களுக்கு, தொடர்ந்து
அழைத்துப் போவானா என்று ஆம்பி குமாரனுக்குத் தெரியவில்லை. ஏனென்றால்
பாக்ட்ரியாவில் இருந்து வந்த சசிகுப்தன் கேகயத்துடன் நடக்கும் போருக்கும் அவர்களுடன்
வருகிறான். அப்படியே
அவனும் அலெக்ஸாண்டருடன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எப்போது தான் திரும்பி வருவது என்பது
நிச்சயமில்லை. எப்போது வந்தாலும் பழைய அதிகாரம் அவனுக்கு இங்கே திரும்ப
இருக்குமா என்பதும் தெரியவில்லை. அலெக்ஸாண்டர் கிளம்புவதற்கு முன் பிலிப்புடன் தனியாகச் சிறிது
நேரம் பேசி விட்டு வந்தான். பிலிப்பிடம் அலெக்ஸாண்டர் என்ன சொன்னான் என்பது தெரியாதது
அவனுக்குள் பீதியைக் கிளப்பியது.
“என்ன நண்பா
உன்னிடம் உற்சாகத்தையே காணோம். உன் எதிரியை வெல்வோம் என்பதில் உனக்கே நம்பிக்கை இல்லையா?” என்று அலெக்ஸாண்டர்
கேட்டான்.
இன்னமும் நண்பா என்று தான் அலெக்ஸாண்டர்
அழைக்கிறான் அதனால் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மறுபடியும் நம்பிக்கையை வரவழைத்துக்
கொண்ட ஆம்பி குமாரன் பயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகமாகச் சொன்னான். “அப்படியெல்லாம்
இல்லை நண்பா. நம் வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று நண்பா”
நல்ல வேளையாக அலெக்ஸாண்டர் மேற்கொண்டு
துருவிக் கேள்விகள் கேட்கவில்லை. இருவரும் தங்கள் குதிரைகளில் ஏறிக் கொள்ள இரு படைகளும் வீர
முழக்கத்துடன் கிளம்பின.
கிளம்பிய வேளையில் லேசாக மழைத் தூறல்
ஆரம்பிக்க அலெக்ஸாண்டர் பரவசமடைந்தவன் போல ஆகாயத்தைப் பார்த்தான். சில கணங்கள்
பார்த்திருந்துவிட்டு அவன் ஆம்பி குமாரனை அழைத்துச் சொன்னான். “ஆகாய தேவதை
நம்மை ஆசிர்வதிக்கிறது நண்பா. நல்ல ஆரம்பம். நீ சொன்னதை இயற்கையும்
ஆமோதிக்கிறது, பார்த்தாயா?”
ஆம்பி குமாரன் அந்த வார்த்தைகளில் மேலும்
உற்சாகமடைந்தான். ஆரவாரத்துடன் படைகள் முன்னேறின. வழிநெடுக
தட்சசீல மக்கள் நின்று வாழ்த்தினார்கள். அப்படி
வாழ்த்த முன்பே ஆம்பி குமாரன் ஏற்பாடு செய்திருந்தான். ஓரிடத்தில்
மக்களோடு சேர்ந்து சாணக்கியரும், அவரது மாணவர்களும் நின்றிருந்தார்கள். ஆம்பி குமாரன்
தன் ஆசிரியரைப் பார்த்தும் பார்க்காதது போலக் காட்டிக் கொண்டான். பார்த்ததாய்
காட்டிக் கொண்டால் சம்பிரதாயத்துக்காகவாவது வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும். இழந்த உற்சாகத்தைத்
திரும்ப மீட்டிருக்கிற இந்த வேளையில் அவர் அலட்சியப் பார்வை அவன் மீது விழ வேண்டியதில்லை....
அவருடன் இருக்கின்ற அவரது மாணவர்கள் மக்களின் வாழ்த்து ஆரவாரத்தில் கலந்து கொள்ளாமல்
இருப்பதையும் அவன் கவனிக்காமலில்லை. அகங்காரிகள்....
ஆம்பி குமாரன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அலெக்ஸாண்டரும்
அந்த மாணவர்களைக் கவனித்தான். அவனுக்கு தட்சசீலத்திற்குள் நுழையும் போதே துடிப்பான
சந்திரகுப்தனைப் பார்த்த நினைவு இருந்தது. சந்திரகுப்தனுக்கு அருகே நின்று கொண்டிருந்த
அந்தணர் குடுமியை விரித்து விட்டபடி நின்று கொண்டிருந்தார். மற்றவர்களைப் போல் வேடிக்கை
பார்க்கும் பார்வையாக இல்லாமல் அவருடைய கூர்மையான பார்வை அவனைத் துளைத்துப் பார்ப்பது
போல் இருந்தது. அவரை நெருங்கிய போது தான் அவன் அவரைக் கவனித்தான் என்பதால் அவனால் அதிகம்
கவனிக்க முடியவில்லை. அதற்குள் அவன் குதிரை அவரைக் கடந்து விட்டது. அவர் அவன் தொலைவில்
வந்து கொண்டிருக்கையிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அவனுக்கு அவனுடைய ஆசிரியர் அரிஸ்டாட்டில் நினைவுக்கு
வந்தார். அவர் பார்வையும் இப்படித் தான் கூர்மையாக இருக்கும். ஆனால் இந்த அந்தணரின்
பார்வையில் கூர்மையுடன் வேறெதோ ஒன்று கூடுதலாக இருந்தது போல் தோன்றியது. அது என்ன என்பதை
அவனால் வகைப்படுத்த முடியவில்லை....
படைகள் கடந்து போன பிறகு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
மக்கள் கலைய ஆரம்பித்தார்கள். சாணக்கியரும் அவரது மாணவர்களும் கல்விக்கூடம் நோக்கித்
திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.
சாணக்கியர் அலெக்ஸாண்டர்
பற்றிக் கேள்விப்பட்டதையும், இப்போது பார்வையால் அவர் உணர்ந்ததையும் மனதுக்குள் ஒப்பிட்டுப்
பார்த்தார். சில விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. முக்கியமாய் அவனிடம் தெரிந்த அந்தத்
துடிப்புத் தன்மை. எதையும்
எப்படியும் சாதித்து முடிப்பேன் என்று அவன் உடலில் ஒவ்வொரு அணுவும் அறிவிப்பது போல்
தோன்றியது.
அவர்
தன் மாணவர்களிடம் சொன்னார். “அலெக்ஸாண்டரை இது வரை தோல்வியே காணாதவன் என்று சொல்கிறார்கள்.
எந்தச் சூழலையும் சந்தித்து வெற்றி காணக்கூடியவன் என்று சொல்கிறார்கள். அதற்கெல்லாம்
காரணம் அவனிடம் இருக்கும் துடிப்புத் தன்மையும் உற்சாகமும் தான். எத்தனையோ யவன அரசர்கள்
அரசாண்டு மாண்டிருக்கிறார்கள். ஆனால் அலெக்ஸாண்டர் அவன் ஆளும் பகுதி தாண்டி வெகுதூரம்
வந்திருக்கிறான். கடந்து வந்த ஒவ்வொரு பகுதியையும் வென்றிருக்கிறான். அதற்குக் காரணம்
அவனுக்குள் இருக்கும் அந்த அக்னி தான். நீங்கள் சாதிக்க நினைப்பது எதுவானாலும் சரி
அது போன்றதொரு அக்னியை உங்களுக்குள் எப்போதும் உருவாக்கி வைத்திருக்க முடிந்தால் நீங்கள்
சாதிக்க முடியாதது எதுவுமிருக்காது”
அவர்
பொதுவாகவே சொன்னாலும் இந்த அறிவுரை குறிப்பாக அவனுக்குச் சொல்லப்பட்டது என்பதை சந்திரகுப்தன்
உணர்ந்து புன்னகைத்தான். சற்று முன் கண்ட காட்சியில் அலெக்ஸாண்டருக்குப் பதிலாக அவனை
இருத்திப் பார்த்தான். முன்னும் பின்னும் படைகள் பரிவாரங்கள் இருக்க ஒரு வீரியம் மிக்க
அழகான குதிரையில் அவன் போவது போல் எண்ணிப் பார்த்தான். அவன் உடல் முறுக்கேறியது. அவன்
முன் காட்சிகள் நீண்டு விரிந்தன…
சாணக்கியர்
அவன் மௌனத்தில் அவனுடைய கனவுகளை உணர்ந்தார். அந்தக் கனவுகளுக்குத் தகுதியானவனே அவன்
என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. வீரத்திலும் உறுதியிலும் சந்திரகுப்தன்
அலெக்ஸாண்டருக்குச் சிறிதும் குறைந்தவன் அல்ல. நேற்று சின்ஹரன் கூட சந்திரகுப்தனுடைய
முன்னேற்றத்தை மிகவும் மெச்சி அவரிடம் சொல்லியிருந்தான். எதையும் மிகவும் கச்சிதமாகவும்,
விரைவாகவும் அவனால் கற்றுக் கொள்ள முடிகிறது என்றும், அதை அதே வேகத்துடன் அவனால் மெருகேற்றிக்
கொள்ள முடிகிறது என்றும், அவன் ஆளப்பிறந்தவன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும்
சின்ஹரன் பிரமிப்புடன் தெரிவித்திருந்தான்.
எல்லாம்
அவர் திட்டப்படியே நடந்தால் அவர் கனவும், சந்திரகுப்தன் கனவும் சேர்ந்து நனவாகும்.
அவருடைய திட்டம் மிகவும் சிக்கலானது, கடினமானது என்றாலும் அறிவோடு உறுதியாக முயன்றால்
முடியாதது என்பது கிடையவே கிடையாது. அதில் அவருக்குச் சந்தேகமேயில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
ஐயா நான் இந்த கதையை சில நாளாக தான் படித்து வருகிறேன். இதை படிக்கும் போதெல்லாம் சாணக்கியரைப் போன்று எனக்கு ஒரு ஆசிரியர் இருந்திருக்கலாம் என்றும், நான் சந்திரகுப்தனை போன்ற மாணவனாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன் நன்றி ஐயா
ReplyDeleteபோர்தொடுத்து வரும் அலெக்சாண்டரை .... புருஷோத்தமன் விரட்டியடிப்பாரா??
ReplyDeleteVery lively narration.
ReplyDelete