அலெக்ஸாண்டர் சொன்னான். “இங்கு இருந்து நாம் எதையும் எதிரிகள் கவனிக்க முடிவது போல் அப்புறப்படுத்தப் போவதில்லை. இந்தத் திட்டத்தின் அஸ்திவாரமே இரகசியம் தான். அதனால் அவர்கள் பார்வைக்கு இங்கேயிருந்து ஒரு துரும்பு கூட நகர்த்தப்படப் போவதில்லை. கரையைக் கடக்க நாம் இங்கு கொண்டு வந்திருக்கும் படகுகள், பாலப்பலகைகள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும். அங்கே நாம் கடக்கப் புதிய படகுகள், பாலங்கள் உடனடியாகத் தயாராக வேண்டும்”
ஆம்பி குமாரன் தலையசைத்தான்.
ஆனால் அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனின் தலையசைப்பில் திருப்தி அடைந்து விடவில்லை. “உன்
ஆட்களுக்கு நீ இப்போதே கட்டளையிடு. என் ஆட்களும் துணைக்கு வருவார்கள். செல்யூகஸ் நம்
ஆட்களுக்கு உடனே ஆணையிடு. அவர்கள் இப்போதே வேலையை ஆரம்பிக்கட்டும். இந்த வேலை தான்
நமக்கு இப்போதைய முதல் தலையாய வேலை.”
ஆம்பி குமாரனும்
செல்யூகஸும் உடனடியாக எழுந்தார்கள். அவர்கள் அவன் சொன்ன வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டு
வந்த பின் அலெக்ஸாண்டர் அடுத்து ஆக வேண்டியதைச் சொன்னான். “நான் அறிந்த வரை இப்போது
நமக்கு தட்சசீலத்தில் படைகள் தேவையில்லை. நம்மை அறிந்த யாரும் தட்ச சீலம் வந்து நம்மிடம்
வம்பு செய்யத் துணியப் போவதில்லை. அதனால் தட்சசீலத்தில் விட்டு வந்திருக்கும் படைக்கு
இணையான எண்ணிக்கையில் ஆட்களை இந்த நதியின் அந்தப் பகுதியைக் கடக்க நாம் பயன்படுத்திக்
கொள்ளலாம். இரகசியமாய் முதலில் நதியைக் கடந்து எதிரிகளைப் பக்கவாட்டில் இருந்து தாக்கப்
போவது சிறிய படை தான் என்பதால் நமக்கு அதில் உள்ள ஒவ்வொருவரும் வீரத்திலும், திறமையிலும்
சிறப்பானவர்களாக இருப்பது முக்கியம். நம்மிரு படைகளிலும் அப்படிப்பட்ட சிறந்த வீரர்களை
உடனடியாகத் தேர்ந்தெடுப்போம். பின் அவர்கள் இன்றிரவு முகாம்களிலிருந்து இரகசியமாக வெளியேறி
விடட்டும். அவர்களுக்குப் பதிலாக இன்றிரவே தட்சசீலத்தில் விட்டு வந்திருக்கும் படைவீரர்கள்
இங்கே வந்து சேர்ந்து கொள்ளட்டும். நாளை காலையில்
நம் படைகள் இங்கே கரையில் கூடும் போது எதிரிகள் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது.
அந்தச் சிறந்த வீரர்களை என் தலைமையில் நான் இரகசியமாக அழைத்துச் சென்று பக்கவாட்டில்
இருந்து கேகயப் படை மீது திடீர்த் தாக்குதல் நடத்துகிறேன். அந்தத் தாக்குதல் எதிரிகள்
சிறிதும் எதிர்பார்த்திராத தாக்குதலாக இருக்கப் போவதால் அவர்கள் நிலைகுலைந்து போவார்கள். அதை நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆம்பி குமாரன் தன்
சந்தேகத்தைக் கேட்டான். “என்ன தான் நீங்கள் நம் தலைசிறந்த வீரர்களை சிறு படையாக அழைத்துப்
போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் நிலைகுலைந்து போனாலும் உடனடியாக அவர்கள் சமாளித்துக்
கொள்வார்கள் அல்லவா? அவர்கள் பெரும்படையை நீங்கள் எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும்?”
அலெக்ஸாண்டர் புன்னகைத்தான்.
“அந்த நேரத்தில் தான் இங்கேயிருந்து நீங்கள் கிளம்பி அக்கரைக்கு வர வேண்டும். அவர்களுடைய
படை நமது இரு பக்கத் தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும்”
அலெக்ஸாண்டரின்
படைத்தலைவன் ஒருவன் சொன்னான். “நாம் ஏற்கெனவே சொன்னது போல் இங்கிருந்து நாம் செல்லும்
போது பயமுறுத்துவது போல் முன்னே நிற்பது அவர்கள் யானைப்படை….”
அலெக்ஸாண்டர் சொன்னான்.
“நாங்கள் பக்கவாட்டிலிருந்து தாக்கும் போது அந்த யானைகளை நிலைகுலைய வைக்க என்னவெல்லாம்
செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம். நம் வீரர்கள் ஈட்டிகளை எறிந்து யானைகளைத் தாக்குவார்கள்.
சில யானைகள் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடினால் மீதி யானைகளும் அதையே செய்யும். அருகிலிருப்பது
அவர்கள் வீரர்களும், குதிரைகளும் என்பதால் யானைகள் மதம் பிடித்து அங்குமிங்கும் ஓடுவதால்
பாதிப்படைவது அவர்கள் தான். அவர்களுக்குப் பெரும்பலமாக இருக்கும் யானைப்படையே அவர்களுக்குப்
பெரும்பாதகமாக ஆக்கி விடுவோம். அப்படி நிறைய பாதிப்புகளைச் சந்தித்து அவர்கள் படைகள்
நிலைகுலைந்திருக்கும் நேரத்தில் நீங்களும் வந்து சேர்ந்து கொண்டால் இருபக்கமிருந்தும்
அவர்களை நாம் வெல்வது மிகவும் எளிது.”
ஆம்பி
குமாரன் பிரமித்தான். ‘எப்படியெல்லாம் யோசிக்கிறான் இவன்’ என்று அவனுக்குத் தோன்றியது.
சசிகுப்தனும் மற்றவர்களும் அலெக்ஸாண்டரைப் பாராட்டினார்கள். அலெக்ஸாண்டர் சொன்னான்.
“ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கே நான் இல்லை என்பது எந்தக் காரணம்
கொண்டும் எதிரிகளுக்குத் தெரிந்துவிடக்கூடாது. அது தெரிந்தால் எங்கே போனேன் என்று யோசிப்பார்கள்.
யோசிக்க ஆரம்பித்தால் அவர்கள் விரைவாக உண்மையைக் கண்டுபிடித்து உஷாராகி விட முடியும்.
அதனால் என் உடைகளையும், தலைக்கவசத்தையும், உடற்கவசத்தையும் அணிந்து அலெக்ஸாண்டராக இங்கே
நிற்கும் மனிதனை நீங்கள் அலெக்ஸாண்டராகவே பார்க்க வேண்டும். அப்படியே வெளிப்பார்வைக்கு
நீங்கள் மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். எதிர்க்கரையில் இருந்து நம்மையே கவனித்துக் கொண்டிருப்பவர்கள்
எந்த வித்தியாசத்தையும் உணர்ந்து விட நீங்கள் அனுமதித்து விடக்கூடாது”
அனைவரும்
சம்மதித்தார்கள்.
விதஸ்தா நதியின் காந்தாரக் கரைப்பகுதியில்
இருக்கும் கிராமத்தில் வசிக்கும் கேகய நாட்டின் ஒற்றன் இரண்டு நாட்களாக வித்தியாசமான
காட்சிகளைக் காண நேர்ந்தது. நள்ளிரவில் காந்தார யவனப்படை வீரர்கள் போர் முகாம்களிலிருந்து
தட்ச சீலம் நோக்கிப் போவதும், தட்சசீலத்திலிருந்து அதே அளவிலான வேறு வீரர்கள் போர்
முகாம் நோக்கி வருவதும் அவனைச் சந்தேகப்பட வைத்தன. என்ன நடக்கிறது?
குடியானவனாக
அந்தக் கிராமத்தில் வசித்து வரும் அவன் பகல் நேரங்களில் ஏதோ ஒரு வேலையாக நடப்பது போலவும்,
இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப்
பதுங்கியும் அந்தப் பகுதிகளில் வலம் வந்தான். ஒரு பக்கத்தில் நிறைய ஆட்கள் அதிகாலையிலிருந்து,
இருட்டும் வரையில் படகுகள், மரப்பாலங்கள் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் நள்ளிரவு நேரங்களில் விதஸ்தா நதியின் மேல் பகுதிக் கரைப் பக்கம் போய்
வந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சதித்திட்டத்தின் பகுதியாகவே அது அவனுக்குத் தோன்றியதால்
அவன் மேலும் உன்னிப்பாக அவர்களைக் கண்காணிக்க முடிவு செய்தான்.
ஒரு நாளிரவு அவன் அந்தப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பகுதிக்குப் போன போது தொலைவில் அந்தப் பணியாளர்களுடன் ஒரு யவன வீரன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. மிகவும் எச்சரிக்கையுடன் அந்த ஒற்றன் மறைவிடங்களின் வழியே மேலும் முன் சென்று பார்த்த போது அந்த யவன வீரன் அலெக்ஸாண்டர் என்பது அவனுக்குத் தெரிய வந்தது. மிகத் தாழ்ந்த குரலில் அலெக்ஸாண்டர் அந்தப் பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது கேகய ஒற்றனுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால்
அவர்களுடைய செயல்களை அவனால் தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. அவர்கள் தயாரித்திருந்த
மரப்பாலங்களின் நீளங்களை ஒரு நீண்ட கயிற்றினால் அளந்து கொண்டிருந்தார்கள். பின் அவர்கள்
அந்தக் கயிற்றில் அந்த அளவுகளைக் குறிக்கும் விதமாக முடிச்சுகள் போட்டுக் கொண்டிருப்பது
தெரிந்தது. சிறிது நேரத்தில் அலெக்ஸாண்டர் ஒரு குதிரையிலும் அந்தப் பணியாளர்களில் நால்வர்
இரண்டிரண்டு பேராக இரண்டு குதிரைகளிலும் அங்கிருந்து போனார்கள். ஒற்றன் குதிரைகளின்
வேகத்திற்கு ஈடுகொடுத்து மறைவுப் பகுதிகள் வழியாகவே ஓடிப் பின் தொடர்ந்தான்.
அவர்களுடைய
குதிரைகள் விதஸ்தா நதியின் நடுவில் தீவுத்திடல் ஒன்று இருக்கும் பகுதியருகே போய் நின்றன.
பணியாளர்களில் ஒருவன் அந்தக் கயிற்றை வயிற்றில் கட்டிக் கொண்டு நதியில் இறங்கினான்.
ஒற்றன் என்ன நடக்கிறது என்பதை ஒரு மறைவிடத்தில் ஒளிந்திருந்து
கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
நதியில்
இறங்கிய பணியாளன் அந்தத் தீவுத் திடலை எட்டியவுடன் அந்தக் கயிற்றை தீவுத்திடலில் கரையோரம்
இருந்த ஒரு மரத்தில் கட்டினான். அந்தக் கயிற்றின் ஒரு பகுதியை இந்தக் கரையில் இருந்த
ஒரு பணியாளன் தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்கள் அந்தக் கரையிலிருந்து அந்தத் தீவுத்திடல்
வரை உள்ள நீளத்தை அந்தக் கயிற்றில் அளக்கிறார்கள் என்பது மெள்ள அந்த ஒற்றனுக்கு விளங்கியது.
பின் இன்னொரு பணியாளனும் இப்பகுதியிலிருந்து தீவுத்திடல் போய்ச் சேர்ந்தான். அவன் இன்னொரு
கயிறை தீவித்திடலின் மறு கரையின் ஓரத்திலிருந்த மரத்தில் கட்டி நதியில் இறங்கி நீந்தி
கேகயக் கரையோரம் போய்ச் சேர்ந்தான். அங்கும் அவர்கள் அந்தக் கயிறை அளப்பது தெரிந்தது.
கேகய
ஒற்றனுக்கு மெள்ள அவர்களுடைய திட்டம் புரிய ஆரம்பித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Alexander's intelligence is amazing. He has not won the world by his sword power but by his intelligence
ReplyDeleteபுருஷோத்தமன் அப்போது உஷாராகி விடுவார்...
ReplyDelete