என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 15, 2019

சத்ரபதி 81


பாஜி தேஷ்பாண்டேயின் மரணம் சிவாஜியை மிகவும் பாதித்தது. அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் சிவாஜியைக் காப்பாற்றி விட்டு உயிரை விட்டிருக்கிறான். அவனது வார்த்தைகள் இப்போதும் சிவாஜியின் காதுகளில் ஒலித்தன. “நம் அனைவரின் கனவான சுயராஜ்ஜியத்துக்காகச் சொல்கிறேன். உங்கள் பாதுகாவலில் நம் சுயராஜ்ஜியத்தின் எதிர்காலமே இருக்கிறது. உங்களுக்கு எதாவது நேர்ந்தால் என்னால் என்னையே மன்னிக்க முடியாது.” கண்களில் நீர் படர சிவாஜி நினைத்துக் கொண்டான். ‘மனிதர்கள் இறக்கலாம். ஆனால் அவர்கள் கனவுகள் இறக்காமல் யாராவது நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றன. இந்த சுயராஜ்ஜியக் கனவு என் காலத்திலாவது நிறைவேறுமா, இல்லை எனக்குப் பின்னும் அது காத்திருக்க வேண்டி வருமா?...”

சிதி ஜோஹர் சிவாஜி தப்பித்துப் போனதில் மன அமைதியை இழந்து தவித்துக் கொண்டிருந்தான். அடுத்தது என்ன என்று அவனால் சிந்திக்க முடியவில்லை. சிவாஜி பேச்சு வார்த்தைக்கு வரும் வரை மிகவும் கச்சிதமாகத் தான் எல்லாம் போய்க் கொண்டிருந்தன. இப்போதோ அவனுக்கு எதிலும் தெளிவாய்ச் சிந்திக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையின் போது சிவாஜி ஏதாவது சூழ்ச்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவன் எதிர்பார்த்திருந்ததால் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தான். சிவாஜி திரும்பிக் கோட்டைக்குள் போகும் வரை கூட அவன் பார்வையை வேறு பக்கம் திருப்பவில்லை. மறுநாள் சிவாஜி பேச்சு வார்த்தைக்கு வரும் போது கூட எச்சரிக்கையைத் தளர்த்தி விடக்கூடாது என்று கூட முடிவு செய்திருந்தான். இப்படி அவன் கவனம் பேச்சு வார்த்தை சமயத்திலேயே தங்கி இருந்ததே ஒழிய சிவாஜி இடையில் தப்பித்துச் செல்லக்கூடும் என்ற சந்தேகம் துளியும் அவன் மனதில் எழவில்லை.

ஃபசல்கான் கேட்டான். “இனி என்ன செய்வது தலைவரே?”

சிதி ஜோஹர் சொன்னான். “அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம் முன் இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றுவது. எதுவுமில்லாமல் திரும்பிப் போவதை விட பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றி விட்டுப் போகலாம். இன்னொன்று சிவாஜியைப் பிடிக்க கேல்னா கோட்டைக்கு நம் படையைத் திருப்பிக் கொண்டு போவது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தான் யோசனை…”

ஃபசல்கான் சொன்னான். “கேல்னா கோட்டைக்கு சிவாஜி தப்பித்துப் போன மலைப்பாதை வழி தான் மிகவும் குறைந்த தூரப் பாதை. ஆனால் அது மிகவும் குறுகியது தலைவரே. நாம் படையோடு அந்தப் பாதையில் செல்ல முடியாது. படையோடு செல்ல நாம் சுற்றித் தான் போக வேண்டும். அது தொலைவு அதிகம்….”

ஒரு படைத்தலைவன் சொன்னான். “கேல்னா கோட்டையின் பின்னால் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. அது கொங்கண் பிரதேசத்தில் முடிகிறது. அதனால் நாம் முன்புறமாக மட்டுமே கோட்டையைத் தாக்க முடியும். சிவாஜி எந்த நேரத்திலும் கோட்டையின் பின் வழியாக மலைச்சரிவில் தப்ப முடியும். அதனால் அங்கு போய்க் கோட்டையைப் பிடிக்கலாமே ஒழிய சிவாஜியைப் பிடிக்க முடியாது….”

சிதி ஜோஹர் மனம் நொந்து சொன்னான். “நம் சிறு அலட்சியம் அவனுக்கு எப்படிச் சாதகமாகி விட்டது பார்த்தீர்களா?”

ஃபசல்கான் ஆற்றாமையுடன் சொன்னான். “அதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே சிவாஜியுடன் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொள்வதே ஆபத்து என்று சொன்னேன். சிவாஜி என்றால் சூழ்ச்சி. சிவாஜி என்றால் தந்திரம்.”

சிதி ஜோஹர் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “பேச்சு வார்த்தையில் தந்திரமாக அவன் நடந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்த்து அதற்கு நான் தயாராக இருந்தேன். பேச்சு வார்த்தை என்பதே தந்திரம் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை.”

கடைசியில் பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றிய பிறகே அங்கிருந்து போவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சிவாஜியின் தலைமை இல்லாத பன்ஹாலா கோட்டை சீக்கிரமே தங்கள் கைக்கு வரும் என்று அவர்கள் கணக்கிட்டார்கள். ஆனால் ரகுநாத் பல்லாள் தலைமையில் பன்ஹாலா கோட்டை வெற்றிகரமாகவே தாக்குப் பிடித்தது. சிதி ஜோஹர் ஃபசல்கானின் ஆலோசனையின்படி ரகுநாத் பல்லாளுக்கு ரகசியமாக ஆளனுப்பி கோட்டையைச் சரணடையச் செய்தால் ஏராளமான செல்வமும், பீஜாப்பூர் ராஜ்ஜியத்தில் மிக உயர்ந்த பதவியும் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தான். ரகுநாத் பல்லாள் “நான் இருக்கும் இடத்திலேயே உயர்வாக இருக்கிறேன். இங்கிருந்து தரம் இறங்க விரும்பவில்லை” என்று நாசுக்காகப் பதிலனுப்பினான்.

சிவாஜி தப்பி விட்டதும், பன்ஹாலா கோட்டை வீழ்வது நீண்டு கொண்டே போவதும் பீஜாப்பூர் படையினரின் உற்சாகத்தை முழுவதுமாகக் கரைத்து விட்டது. அந்த உற்சாகத்தை மீட்டெடுக்க சிதி ஜோஹரால் முடியவில்லை. ஃபசல்கானும் சிவாஜியைப் பிடிக்க வழியில்லாத நிலையில் உற்சாகத்தை இழந்திருந்தான். அடுத்ததாக பெருமழைக்காலமும் நெருங்கப் போகிறது என்ற சூழலில் சிதி ஜோஹர் இனியும் அங்கிருப்பதில் பெரிய பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தான். மிக நேர்த்தியாக ஆரம்பித்து வெற்றிகரமாகவே தொடர்ந்த சிதி ஜோஹரின் முயற்சிகள் சிவாஜியின் தந்திரத்தால் தடம் மாறி, குழப்பமாகி, தோல்வியில் முடிந்தன. படையோடு அவன் பீஜாப்பூர் திரும்பினான்.

இந்தப் பெரிய படையும் தோற்று வந்ததில் அலி ஆதில்ஷா ஆத்திரமடைந்தான். சிதி ஜோஹர் சிவாஜியிடம் விலை போய், வேண்டுமென்றே அவனைத் தப்ப வைத்திருக்க வேண்டும் என்று அவன் சந்தேகப்பட்டான். யார் சுல்தானிடம் செல்வாக்காக இருந்தாலும் அதைச் சகிக்க முடியாமல் அவர்களைப் பற்றித் தவறாகச் சொல்லிக் காலை வாரும் ஆட்கள் பீஜாப்பூர் அரசவையில் நிறையவே இருந்தார்கள். சிதி ஜோஹரைப் பற்றியும் அவர்கள் பல சந்தேகங்களை எழுப்பி தூபம் போட்டார்கள். அலி ஆதில்ஷா தன் சந்தேகத்தை உண்மை என்றே நம்ப ஆரம்பித்து  அதை  வெளிப்படையாகவே சிதி ஜோஹரிடம் தெரிவிக்கவும் செய்த போது சிதி ஜோஹரின் இரத்தம் கொதித்தது. அபாண்டமாக இப்படி இந்த சுல்தான் பழி சுமத்துகிறானே என்று அதைத் தீவிரமாக மறுத்தான். ஆனாலும் நம்ப மறுத்த அலி ஆதில்ஷா அவனை அலட்சியப்படுத்தி உடனடியாக கர்நூலுக்கே அனுப்பி வைத்தான். அநியாயமாகப் பழிசுமத்தப்பட்ட சிதி ஜோஹர் மனம் கொதித்த நிலையிலேயே அங்கிருந்து சென்றான்.

அலி ஆதில்ஷா ஆழ்ந்து ஆலோசித்து விட்டு அரசவையைக் கூட்டினான். இனி யாரை அனுப்புவது என்று அவன் இந்த முறை கேட்கவில்லை. அவன் அனைவரிடத்திலுமே நம்பிக்கையை இழந்திருந்தான். இழந்த பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பெருமையை மீட்கத் தானே படையெடுத்துச் செல்வதாக அறிவித்தான். சுல்தானே செல்வது உசிதமல்ல என்று வந்த கருத்துகளுக்கு அவன் செவி சாய்க்கவில்லை. ”சென்றவர் வென்று வந்தால் நான் செல்ல வேண்டியதில்லை. ஆனால் சென்றவரெல்லாம் தோற்று வந்த பின்னும் நான் அரியணையில் அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சிவாஜியை இப்படியே விட்டு வைப்பது ஆபத்தானது. அவன் நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்று உறுதியாகச் சொன்னான்.

சிதி ஜோஹருடன் போன படையை விடவும் இருமடங்கு பெரிய படை அலி ஆதில்ஷாவின் தலைமையில் பன்ஹாலா கோட்டையை நோக்கிப் புறப்பட்டது. ரஸ்டம் ஜமான், சிதி ஜோஹர் இருவரும் சென்று தோற்று வந்த பன்ஹாலா கோட்டையை முதலில் வென்று விட்டு தான் அடுத்த இலக்கிற்குச் செல்வது என்ற உறுதியுடன் அலி ஆதில்ஷா கிளம்பினான்.

சுல்தானே தலைமை தாங்கி பீஜாப்பூர்ப் படை போருக்குச் செல்வது மிக அபூர்வமானது. பல ஆண்டுகளுக்கு முன் அலி ஆதில்ஷாவின் தந்தை முகமது ஆதில்ஷா தலைமையில் போருக்குப் போனதை வயோதிக வீரர்கள் நினைவு கூர்ந்தார்கள். இப்போது தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அபூர்வ வாய்ப்பில் பீஜாப்பூர் படை உற்சாகத்தைப் பெற்றிருந்தது. இந்த முறை படை வலிமையும் இரு மடங்காகி இருந்ததால் வென்றே தீர்வது என்ற முடிவில் ஒவ்வொரு பீஜாப்பூர் வீரனும் இருந்தான்.

ஏற்கெனவே சிதி ஜோஹரின் ஆக்கிரமிப்பில் பலவீனமடைந்திருந்த பன்ஹாலா கோட்டையை பீஜாப்பூர் படை தீவிரமாகத் தாக்கிப் போராடிய போது சிவாஜியின் சிறு படையால் தொடர்ந்து  தாக்குப்பிடிக்க முடியவில்லை.  கடைசியில் கோட்டையை விட்டுக் கொடுத்துச் சரணடைந்தார்கள். முதல் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் இரட்டிப்பு உற்சாகம் அடைந்த பீஜாப்பூர் படை அடுத்தடுத்து சிவாஜி பிடித்திருந்த சிறு கோட்டைகளைக் கைப்பற்றியது. சிவாஜி சமீபத்தில் பிடித்திருந்த ஆறு கோட்டைகளில் விஷால்கட், ரங்க்னா என்ற இரண்டு கோட்டைகள் தவிர மற்ற கோட்டைகள் அலி ஆதில்ஷாவின் வசமாயின.

இந்தத் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக விஷால்கட்டில் இருந்த சிவாஜியிடம் சென்றடைந்தன. வெற்றி மீது வெற்றி மட்டுமே பெற்று வந்தவர்கள் இப்படி நான்கு கோட்டைகளைத் தொடர்ந்து இழக்க நேர்ந்ததில் சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும் கவலையடைந்தார்கள். ஆனால் அவர்களைப் போல சிவாஜி கவலைப்பட்டதாகத் தெரியாதது அவர்களைத் திகைக்க வைத்தது. ஒன்றுமே சொல்லாமல் அந்தத் தோல்விகளைச் சாதாரணமாக சிவாஜி எடுத்துக் கொண்டதில் வருத்தமடைந்த சில இளம் படைத்தலைவர்கள் ”ஏதாவது சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.


சிவாஜி ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். “பொறுங்கள்”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, July 11, 2019

இல்லுமினாட்டி 4


ஜான் ஸ்மித் நாற்பது நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் ஆர்வத்துடன் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களைப் பார்த்தார். அந்த ரிப்போர்ட்கள் அவரையும் திகைக்க வைத்தது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது. அவர் ஆழ்ந்த யோசனையுடன் தன் சட்டைப் பட்டன்களைத் திருகியபடியே ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் கவனமாகப் பார்த்தார். கடைசியில் நிமிர்ந்து உட்கார்ந்து தனக்குள் பேசிக் கொள்வது போல வியப்புடன் சொன்னார். “மனிதனின் உடலைப் போல் அற்புதமான கருவி வேறில்லை. ஆனால் அதில் நடக்கும் எத்தனையோ அற்புதங்கள் அவன் கவனத்திற்கே கொண்டு வரப்படுவதில்லை. அதனாலேயே அவன் தன் உடல்நலத்தை அலட்சியப்படுத்தி விடுகிறான்….”

தலைமை மருத்துவர் சொன்னார். “உண்மை. உண்மை…. வாழ்நாள் எல்லாம் உடம்பை அலட்சியப்படுத்தி போதையால் சீரழித்துக் கொண்டவன் உடலும் கூட மரணம் வரை போய் அற்புதம் புரிந்து இருக்கிறது பாருங்களேன்.”

ஜான் ஸ்மித் கேட்டார். “அவன் யார், விலாசம் என்ன என்பது தெரிய வந்ததா?”

தலைமை மருத்துவர் சொன்னார். “இல்லை. அவன் முன்னாள் மனைவி போன் செய்து பணம் எதாவது வைத்திருக்கிறானா என்று கேட்டு, இல்லை என்று தெரிந்தவுடன் வேறு எந்த விவரமும் சொல்லாமல் விட்டு விட்டாள். ஆனால் அவள் நம்பரை வைத்து அவள் விலாசத்தைக் கண்டுபிடித்து அவனைப் பற்றிய விவரங்களையும் கண்டுபிடித்து விடலாம் என்று போலீஸார் நினைக்கிறார்கள். இப்போதைக்கு அவன் பெயர் எக்ஸ் என்று வைத்திருக்கிறோம்….”

ஜான் ஸ்மித்துக்கு அந்தப் பெயர் பொருத்தமாகத் தோன்றியது. கணக்கில் கண்டுபிடிக்க வேண்டியதற்கு எக்ஸ் என்று சொல்வது போல் இவனும் கண்டுபிடிக்க வேண்டியவனே என்பதால் எக்ஸ் என்று அழைப்பது சரி தான். பின் மெல்லக் கேட்டார். “அவன் போகிற காமிராப் பதிவை நானும் பார்க்கலாமா?”

“தாராளமாக. அதன் நகலைத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்” என்று சொன்ன தலைமை மருத்துவர் அந்தக் காமிராப் பதிவைக் காட்டினார். ஆர்வத்துடன் ஜான் ஸ்மித் தன் சட்டைப் பட்டனைத் திருகியபடியே  அதைப் பார்த்தார்.  தலைமை மருத்துவருக்கு ஜான் ஸ்மித்தின் இந்தப் புதுப்பழக்கம் வேடிக்கையாக இருந்தது. சென்ற முறைகளில் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவரிடம் இப்படி பட்டனைத் திருகும் பழக்கம் இருக்கவில்லை….

காமிராப்பதிவில் எக்ஸ் எந்தப் பதட்டமோ, தள்ளாட்டமோ இல்லாமல் நடந்து சென்றதை ஜான் ஸ்மித் ஆச்சரியத்துடன் கவனித்தார் அவன் சாகக் கிடந்த போதை ஆசாமி என்று இதைப் பார்த்து விட்டு யாருமே சொல்ல மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார். கடைசி காமிராப் பதிவில் அவன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய போது கூட அவனிடம் எந்தப் பக்கம் போவது என்ற குழப்பம் இல்லாமல் இருந்ததை ஜான் ஸ்மித் கவனித்தார்.

”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று தலைமை மருத்துவர் ஜான் ஸ்மித்திடம் கேட்டார்.

ஜான் ஸ்மித் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “இது மருத்துவ ஆச்சரியம் தான். ஆனால் எனக்கென்னவோ அவன் சீக்கிரமே எங்காவது மறுபடியும் விழுந்து கிடப்பான் என்று தோன்றுகிறது. போதைப் பழக்கம் அவ்வளவு சீக்கிரம் விடுவிக்க முடிந்ததல்ல. ஒரு முறை பிழைத்துக் கொண்டவனுக்கு அந்த நம்பிக்கையே இன்னும் பல முறை பழைய வழியிலேயே போகத் தூண்டும்….”

தலைமை மருத்துவர் சொன்னார். “நீங்கள் சொல்வது சரி தான். நான் கேட்டது இந்த மருத்துவ ஆச்சரியமே எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்பதைத் தான்….”

ஜான் ஸ்மித் அவரையே வெறித்துப் பார்த்து விட்டுச் சொன்னார். “எனக்கு எந்தத் தீர்மானத்திற்கும் வர முடியவில்லை”

தலைமை மருத்துவர் கேட்டார். “அவன் யார், அவன் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதெல்லாம் விரிவாகத் தெரிந்தால் அதை வைத்து இந்த அதிசயத்திற்கான காரணத்தை நம்மால் யூகிக்க முடியுமா?”

ஜான் ஸ்மித் சொன்னார். “அதை வைத்து யூகிக்க முடியலாம். இல்லா விட்டால் ஆள் பெயர், வாழ்க்கை வரலாறு தெரிந்தாலும் கூட இந்தக் காரணம் எக்ஸாகவே தங்கி விடும் வாய்ப்பிருக்கிறது….”

தலைமை மருத்துவருக்கு ஜான் ஸ்மித் தன் உண்மையான அபிப்பிராயத்தை முழுவதுமாகச் சொல்லி விடவில்லை என்று ஏனோ தோன்றியது.

ஜான் ஸ்மித் மெல்ல எழுந்தார். “சரி நான் கிளம்பட்டுமா….. எனக்கு ஒரு உதவி வேண்டும். இசை மூளையில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் குறித்து நான் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத நினைத்திருக்கிறேன். வூடு திகில் இசை நடனம் பற்றி உங்களிடம் சொன்ன உங்கள் நோயாளியைப் பார்த்து என் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறேன். அவரிடம் அது குறித்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா? அவர் பேசும் நிலைமையில் இருக்கிறாரா?”

“அவர் தற்போது குணமாகி ஓய்வாகத் தான் தங்கி இருக்கிறார். அதனால் பிரச்னை இல்லை. அவர் நல்ல மனிதர். இசை பற்றி மணிக்கணக்கில் பேசக்கூடியவர் தான். அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று சொன்ன தலைமை மருத்துவர் போனில் அந்த இசைப் பிரியரிடம் பேசினார். பிரபல மூளை விஞ்ஞானி ஜான் ஸ்மித் அவரிடம் இசைக்கும், மூளையின் அதிர்வலைகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து எழுதப்போகும் ஆராய்ச்சிக் கட்டுரை தொடர்பாக சில சந்தேகங்கள் கேட்க விரும்புகிறார் என்று தலைமை மருத்துவர் சொன்னதும் அந்த இசைப்பிரியர் உடனே அவரிடம் பேச ஒத்துக் கொண்டார்.

தலைமை மருத்துவர் சொன்னார். “அறை எண் 315ல் அவர் இருக்கிறார். நான் சில நோயாளிகளை இப்போது பார்க்க வேண்டியிருப்பதால் நீங்கள் போய்க் கொள்கிறீர்களா?”

ஜான் ஸ்மித் அந்த இசைப்பிரியருடன் பேசும் போது அவர் உடன் இருப்பதை விரும்பாததால் நிம்மதியடைந்து “நான் போய்க் கொள்கிறேன். நீங்கள் நோயாளிகளைப் பாருங்கள். அழைத்து இந்த அதிசய நிகழ்வைச் சொன்னதற்கு நன்றி….”

“நான் சொன்னவுடன் நீங்கள் இங்கே வந்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று எழுந்து நின்று அவர் கையைக் குலுக்கி தலைமை மருத்துவர் அனுப்பி வைத்தார்.

ஜான் ஸ்மித் மூன்று நிமிடங்களில் அறை எண் 315ல் இருந்தார். ஐந்தே நிமிடங்களில் அறிமுக உபசார வார்த்தைகளை முடித்து விட்டு ஜான் ஸ்மித் கேட்க வந்த விஷயத்திற்கு வந்தார். “நீங்கள் ஹைத்தி சென்று வூடூவின் திகில் நடனங்களைப் பார்த்திருக்கிறீர்கள், அந்த இசையைக் கேட்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் எப்போது போயிருந்தீர்கள்?”

அந்த இசைப்பிரியர் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார். “நான் பத்து வருடங்களுக்கு முன் போயிருந்தேன். என் அதிர்ஷ்டம் 85 வயதான அனுபவம் நிறைந்த ஒரு வூடூ ராணி நடத்தும் திகில் நடனச் சடங்கை என்னால் நேரில் பார்க்க முடிந்தது…..”

ஜான் ஸ்மித் இடைமறித்தார். “வூடூ ராணியா?”

“ஆமாம் வூடு திகில் நடனச் சடங்கை அனுபவம் வாய்ந்த பெண் குருமார்கள் தான் அதிகம் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். அந்தப் பெண் குருவை வூடூ ராணி என்று அழைக்கிறார்கள்….”

“உண்மையில் அந்தத் திகில் நடனச் சடங்கின் உத்தேசம் என்ன?”

“இறந்தவர்களின் ஆவியை வரவழைத்து சில கேள்விகளுக்குப் பதில் பெறுவது அல்லது சில உதவிகள் பெறுவது தான் திகில் நடனச் சடங்கின் உத்தேசம். வூடூ ராணி அதற்கான பாடலைப் பாடுவார். மத்தளம், இசைக்கருவிகள் எல்லாம் பயன்படுத்துவார்கள். இந்த இசையின் தாள லயத்திற்கேற்ப ஒருவர் நடனமாடுவார். வூடூவில் அவரைக் குதிரை என்றழைப்பார்கள். அந்தக் குதிரையின் உடம்பில் தான் அழைக்கப்படும் ஆவி ஏறும். அந்த ஆவி உடலில் புகுந்தவுடன் அந்த மனிதன் தன் சொந்த இயல்பை இழந்து விடுவான். ஆவியின் இயல்பு தான் அவனிடம் காணப்படும். சொல்லப்போனால் அந்த ஆவி மனிதனாகவே அவன் மாறி விடுவான். அந்த ஆவியிடம் தான் கேள்விகள் கேட்பார்கள். வேண்டுகோள் விடுப்பார்கள்….”

அவர் சொல்லிக் கொண்டே போனார். ஜான் ஸ்மித்துக்கு அந்த முழுச்சடங்கைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஆர்வம் இருக்கும் விஷயத்தை மட்டும் கேட்டு அந்த இசைப்பிரியருக்கு அனாவசிய சந்தேகங்களை ஏற்படுத்தி விட அவர் விரும்பாததால் சுவாரசியமாகத் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டார். கடைசியில் அவர் நிறுத்தியவுடன் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“அந்த ஆவியை வரவழைக்கப் பாடும் பாட்டும், இசைக்கப்படும் இசைக்கருவிகளும் அதற்கென்று வகுக்கப்பட்டிருக்கும் இசையில் தான் இருக்க வேண்டுமா, இல்லை எப்படி வேண்டுமானாலும் இசைக்கப்படுமா?”

“பழங்காலத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இசையைத் தான் பயன்படுத்தினார்கள். இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றி மாற்றியும் பாடுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அவை அந்த அளவு வெற்றிகரமாக இருப்பதில்லை என்பது அனுபவஸ்தர்களின் அபிப்பிராயம்.”

“அந்த உடலில் ஏறிய ஆவி எப்போது எப்படி வெளியேறுகிறது?”

“கேள்விகளும், வேண்டுகோள்களும் முடிந்த பிறகு நன்றி செலுத்தி, வணங்குவார்கள். பின் அந்த ஆவி உடலை விட்டுப் போக வேறுவிதமான இசை இசைக்கப்படும். பாடலும் மாறும். அந்த ஆவி வெளியேறிய பிறகு அந்தக் குதிரை என்பவன் மயங்கி விழுந்து விடுவான்…..”

அவர் சொல்லிக் கொண்டே போனார். அந்த விவரிப்பிலும் ஜான் ஸ்மித்துக்கு ஈடுபாடு இருக்கவில்லை.  அவர் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு மெல்லத் தன் சந்தேகத்தைக் கேட்டார். “நேற்று நீங்கள் கேட்ட இசை அந்த ஆவியை வரவழைக்கும் இசை போல இருந்ததென்று நீங்கள் சொன்னதாக டாக்டர் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. அது உண்மை தானா?”

“ஆமாம். அதே இசை தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை.”

“கடைசியில் கிதார் இசை ஆவியை அனுப்பி வைக்கும் இசையில் முடிந்ததா?”

“அது தான் இல்லை. வரவழைக்கும் இசையோடு அந்த கிதார் வாசிப்பாளர் முடித்துக் கொண்டார்....”

(தொடரும்)
என்.கணேசன்

Monday, July 8, 2019

சத்ரபதி 80


சிவாஜி நள்ளிரவு வரை அடிக்கடி பன்ஹாலா கோட்டையின் உள்ளிருந்து வெளியே நிலவும் சூழலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பீஜாப்பூர் படையினர் இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் இரவு வரை அளவளாவிக் கொண்டிருந்தார்கள். நாளை பேச்சு வார்த்தை ஏதாவது ஒருவிதத்தில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் போர் மனநிலை போய் தங்கள் வீடு போய் சேரும் மனநிலை அவர்களுக்குள் உருவாகி இருந்தது. நள்ளிரவு நெருங்க ஆரம்பித்த போது யாருமே விழிப்பான காவலில் இருக்கவில்லை. அனைவரும் உறங்கி விட்டிருந்தார்கள்.

சிவாஜி பாஜி தேஷ்பாண்டேக்குச் சைகை காண்பித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் சிவாஜி, பாஜி தேஷ்பாண்டே, அவர்களுடன் சில வீரர்கள் பன்ஹாலா கோட்டையின் வட கோடிச் சுவரில் இருந்து கயிற்றைக் கட்டி சத்தமில்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தார்கள். கோட்டைக் கதவு திறக்கப்பட்டால் கண்டிப்பாகச் சத்தம் எழாமல் இருக்க வழியில்லை. அந்தச் சத்தமே பீஜாப்பூர் வீரர்களை எழுப்பி உஷார்ப்படுத்தி விடும். அதை அவர்கள் விரும்பாமல் தான் இப்படி கோட்டையில் இருந்து வெளிப்பட்டார்கள். சத்தமில்லாமல் மெல்ல பீஜாப்பூர் வீரர்களைக் கடந்தார்கள். பன்ஹாலா கோட்டையிலிருந்து விஷால்கட் கோட்டைக்கு குறுகிய மலைத்தடம் ஒன்று இருந்தது. அந்தப் பாதையில் வேகமாகப் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

ஃபசல்கான் நள்ளிரவில் எழுந்து தன் கூடாரத்திலிருந்து வெளியே வந்த போது சிவாஜியின் கடைசி வீரன் ஒரு கணம் அவன் கண்பார்வையில் பட்டு மறைந்தான். தூக்கக் கலக்கத்தில் யாரோ அந்த மலைப்பாதையில் சென்று மறைந்தது போலத் தோன்றியது வெறும் தோணலா இல்லை நிஜமா என்று ஃபசல்கானால் உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை. முன்னே நடந்தவன் கோட்டை வாசல் வரை வந்து பார்த்தான். யாருமே காவலில் இல்லை. வீரர்கள் எல்லாரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். திகைத்தவனாக கோட்டையைச் சுற்றி வந்த போது தான் கோட்டைக்குள் இருந்த வீரர்கள் அந்தக் கயிறை அவசர அவசரமாக மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள்.   கயிற்றின் நுனி மேல் நோக்கி நகர்வதை நிலவொளியில் பார்த்த ஃபசல்கான் கூக்குரலிட்டான். சிதி ஜோஹரும், பீஜாப்பூர் படையினரும் விழிப்படைந்து விரைந்து வெளியே கூடினார்கள்.

ஃபசல்கான் தான் கண்டதைச் சொன்ன போது சிதி ஜோஹர் அதிர்ந்தான். அவன் உள்ளுணர்வு சிவாஜி அங்கிருந்து தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்று சொன்னது. அவன் உடனே ஃபசல்கானை அந்த மலைப்பாதை வழியாக, தப்பித்துச் சென்றவர்களைப் பின் தொடரச் சொன்னான். ஃபசல்கான் ஆவேசத்துடன் தன் படைவீரர்கள் பலருடன் அந்த மலைப்பாதையில் வேகமாகச் சென்றான்.

அந்தக்கரடு முரடான மலைப்பாதையில் பயணம் சுலபமாக இல்லை. எனினும் சிவாஜியைத் தப்ப விடக்கூடாது என்கிற வெறியால் ஃபசல்கான் வேகமாகப் பயணித்தான். அவன் வீரர்களும் சோர்வில்லாமல் வேகமாகச் சென்றார்கள். அவர்கள் கண்களில் சிவாஜியும் அவன் ஆட்களும் தென்பட்ட போது அதிகாலை ஆகி விட்டிருந்தது. விஷால்கட்டிற்கு இன்னும் ஆறு மைல்கள் தொலைவில் இருக்கும் போதே அவர்களைக் கண்டு விட்ட ஃபசல்கான் வரும் போது எறிகுண்டுகளைக் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தாமதமாக உணர்ந்தான். ஆனாலும் சிவாஜியைத் தப்பவிடப்போவதில்லை என்று உறுதியுடன் படை வீரர்களுடன் அதி வேகமாக ஓடி அவர்களை நெருங்க ஆரம்பித்து விட்டான்.

முதலில் அவர்களைக் கவனித்தது பாஜி தேஷ்பாண்டே தான். ஃபசல்கானுடன் வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கண்ட அவன் அவர்களைச் சமாளித்து சிவாஜி முன்னேறுவது சுலபமல்ல என்பதை உணர்ந்தான்.

“மன்னா. ஃபசல்கான் வீரர்களுடன் பின் தொடர்ந்து வருகிறான். நீங்கள் சில வீரர்களுடன் தப்பித்துச் செல்லுங்கள். நாங்கள் அவர்களைச் சமாளிக்கிறோம்” என்று அவன் சிவாஜியை அழைத்துச் சொன்னான்.

தொலைவில் ஃபசல்கானையும் வீரர்களையும் பார்த்த சிவாஜி அவர்களது எண்ணிக்கைக்கு மொத்தமாக இவர்கள் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கிறது என்பதைக் கவனித்தான். அதனால் பாஜி தேஷ்பாண்டே சொன்னது போல் தப்பித்துச் செல்ல முனையாமல் “சேர்ந்தே சமாளிக்கலாம் தேஷ்பாண்டே” என்றான்.

பாஜி தேஷ்பாண்டே மறுத்தான். “மன்னா நீங்கள் இங்கிருந்து போராடுவது ஆபத்து. தயவு செய்து நீங்கள் வேகமாக விஷால்கட் போய்ச் சேருங்கள். நாங்கள் சமாளிக்கிறோம்….”

சிவாஜி அப்போதும் அங்கிருந்து செல்லவில்லை. ”ஆபத்தை அனைவரும் சேர்ந்தே சந்திப்போம் தேஷ்பாண்டே. உன்னை மட்டும் ஆபத்தில் விட்டு விட்டுப் போகும் அளவு உன் மன்னன் அற்பனல்ல” என்று சொன்னான்.

பாஜி தேஷ்பாண்டே சிவாஜியிடம் கெஞ்சிய குரலில் சொன்னான். “மன்னா. நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. நம் அனைவரின் கனவான சுயராஜ்ஜியத்துக்காகச் சொல்கிறேன். உங்கள் பாதுகாவலில் நம் சுயராஜ்ஜியத்தின் எதிர்காலமே இருக்கிறது. உங்களுக்கு எதாவது நேர்ந்தால் என்னால் என்னையே மன்னிக்க முடியாது. போய் விடுங்கள்…”

சிவாஜி அப்போதும் நகர மறுத்தான். பாஜி தேஷ் பாண்டே தன் வீரர்களிடம் சொன்னான். “பாதி பேர் என்னுடன் வாருங்கள். மீதி பேர் மன்னருடன் செல்லுங்கள். அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள். அங்கே சென்று சேர்ந்தவுடன் பீரங்கியால் வெடிச்சத்தம் ஏற்படுத்துங்கள். அதன் பின் நாங்களும் தப்பித்து வரப் பார்க்கிறோம். இப்போது செல்லுங்கள் மன்னா. நம் சுயராஜ்ஜியக் கனவின் மீது ஆணை! சென்று விடுங்கள்” என்று சொல்லியபடியே திரும்பி ஃபசல்கானை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனுடன் பாதி வீரர்கள் ஓட சிவாஜி வேறு வழியில்லாமல் மற்ற வீரர்களுடன் விஷால்கட்டை நோக்கி விரைந்தான். ஆனால் அவன் மனம் மட்டும் பின்னாலேயே தங்கி இருந்தது.

சிவாஜியைத் தவற விட்டு விடுவோமோ என்ற பயத்தில் ஃபசல்கான் ஆக்ரோஷமாக பாஜி தேஷ்பாண்டே மற்றும் அவன் வீரர்களுடன் போராடி சீக்கிரமாகவே அவர்களை நிராயுதபாணியாக்கினான். ஆனாலும் பாஜி தேஷ்பாண்டேயும் அவன் வீரர்களும் ஃபசல்கானை முன்னேற விடவில்லை. அங்கு கையில் கிடைத்த கட்டைகளையும், கற்களையும் வீசிப் போராடினார்கள்.

ஃபசல்கான் பொறுமையிழந்தான். ”விரைவாக இவர்களைக் கொன்று குவியுங்கள். நம் இலக்கு இவர்களல்ல. சிவாஜி தான். அவன் கேல்னா கோட்டையைச் சென்றடைவதற்கு முன் அவனைப் பிடிக்க வேண்டும்” என்று கத்தினான்.

ஃபசல்கானின் வீரர்கள் வாளோடு முன்னேறி மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். முடிந்த வரை தாக்குப் பிடித்த சிவாஜியின் வீரர்கள் ஒவ்வொருவராக மடிந்து விழுந்தார்கள். கடைசியில் படுகாயங்களுடன் பாஜி தேஷ்பாண்டேயும் அவனுடைய இரு வீரர்களுமே மிஞ்சியிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து வழி மறித்து நின்று பெரிய கட்டை ஒன்றைச் சுழற்றி பாஜி தேஷ்பாண்டே போராடினான். ஆனால் ஃபசல்கானின் வீரர்கள் அனைவரும் அவனையே குறி வைத்துத் தாக்கியதில் அவனால் நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெட்டப்பட்டு கீழே விழுந்த பாஜி தேஷ்பாண்டே இறப்பதற்கு முன் கடைசியாகக் கேட்ட சத்தம் விஷால்கட்டில் இருந்து வெடித்த பீரங்கிச் சத்தமாக இருந்தது. சிவாஜி விஷால்கட் சென்று சேர்ந்து விட்டான். பாஜி தேஷ்பாண்டே முகத்தில் விரிந்த புன்னகை நிரந்தரமாகத் தங்கி விட்டது.

ஃபசல்கான் தன் வாழ்க்கையில் படுகாயப்பட்டு இறக்கையிலும் புன்னகையுடன் இறக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. தூரத்தில் கேட்ட பீரங்கிச் சத்தம் சிவாஜி கேல்னா கோட்டைக்குச் சென்று சேர்ந்து விட்டதன் அறிகுறியே என்பதை பாஜி தேஷ்பாண்டேயின் கடைசிப் புன்னகையை வைத்தே அனுமானித்தான். ஃபசல்கானின் முகம் சுருங்கிப் போனது. 

தன் இன்னொரு கோட்டையைச் சென்று சேர்ந்து விட்ட சிவாஜி பலமடங்கு ஆபத்தானவன் என்பதை உணர்ந்த ஃபசல்கான் முன்னேறி செல்ல முயன்ற தன் வீரர்களைத் தடுத்து நிறுத்தினான். “இனி சிவாஜியை ஒன்றும் செய்ய முடியாது. வாருங்கள் திரும்புவோம்”

ஆறாத மனத்துடனும், கடுத்த முகத்துடனும் ஃபசல்கான் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பிக்க அவன் வீரர்களும் பின் தொடர்ந்தார்கள். இன்னும் உயிரோடிருந்த சிவாஜியின் வீரர்கள் பாஜி தேஷ்பாண்டேயின் வீர உடலை எடுத்துத் தோளில் சுமந்து கொண்டு விஷால்கட் கோட்டையை நோக்கி சோகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.



(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, July 4, 2019

இல்லுமினாட்டி 3

ந்தப் போலீஸ்காரர்களுக்கு கிதார் இசை கேட்ட விஷயம் எக்ஸ் சம்பந்தப்பட்டது போலத் தோன்றவில்லை. ஆனாலும் விடை தெரியாத கேள்விகளை விடை தெரியாததாகவே விட்டு விட விரும்பாமல் அங்கிருந்த சில மருத்துவர்கள், நர்ஸ்கள், நோயாளிகளை எல்லாம் அது குறித்துக் கேட்டார்கள். அவர்கள் விசாரித்த எல்லோரும் அந்த இசையைக் கேட்டிருந்தார்கள். அந்த இசை மருத்துவமனைக்குள் இருந்து கேட்பது போலவே உணர்ந்தும் இருந்தார்கள். ஆனால் யாரும் கிதாரை வாசித்ததாக ஒத்துக் கொள்ளவும் இல்லை, எங்கிருந்து கேட்டது என்பதைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் எல்லோரும் எங்கிருந்து அந்த இசை கேட்கிறது என்று யோசித்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

மூன்றாம் மாடியில் இருந்த ஒரு நோயாளி மாரடைப்பு பிரச்னைக்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். அவர் இசைப்பிரியர். பத்திரிக்கைகளில் இசைக்கட்டுரைகள் நிறைய எழுதியிருப்பவர். மற்றவர்களிடம் கேட்ட கேள்வியைப் போலீஸ்காரர்கள் அவரிடம் கேட்ட போது  அவர் சொன்னார். “நானும் அந்த இசையைக் கேட்டேன். அதை யார் வாசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அந்த இசை என்ன இசை என்று எனக்குத் தெரியும்”

அது என்ன இசை என்று தெரிந்து கொள்வதில் போலீஸ்காரர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனாலும் “என்ன இசை அது?” என்று கேட்டு வைத்தார்கள்.

“அது வூடுவின் திகில் நடனத்தில் இசைக்கும் இசை. வூடூ சடங்குகளில் இறந்தவர்களின் ஆவியை வரவழைக்கும் போது அந்த இசையைத் தான் எழுப்புவார்கள்….”

அந்த இசை அமானுஷ்யமாய்த் தனக்குத் தோன்றியதில் வியப்பில்லை என்று தலைமை மருத்துவர் நினைத்தார். அந்த இசைப்பிரியர் தொடர்ந்து சொன்னார். “ …. ஆனால் அந்தச் சடங்குகளில் அதிகமாய் மத்தளங்களைத் தான் பயன்படுத்துவார்கள். மற்ற இசைக்கருவிகள் அந்த மத்தளங்களோடு சேர்ந்து தான் இசைக்கப்படும். ஆனால் நேற்று அதே இசை கிதாரில் இசைக்கப்பட்டதைக் கேட்டேன்”

ஒரு போலீஸ்காரர் கேட்டார். ”உங்களுக்கு எப்படி இந்த இசை நுணுக்கங்கள் எல்லாம் தெரியும்?”

அப்போது தான் தன் இசை ஈடுபாட்டையும், அது குறித்த கட்டுரைகளைப் பிரபல பத்திரிக்கைகளில் எழுதியிருப்பதையும் அவர் தெரிவித்தார். ”அது மட்டுமல்ல. ஹைத்தியில் நான் வூடூ சடங்கு ஒன்றை நேரிலேயே பார்த்து இந்த இசையைக் கேட்டுமிருக்கிறேன்…..”

போலீஸ்காரர்கள் அதற்குப்பின் மருத்துவமனையில் அதிக நேரம் இருக்கவில்லை. கிளம்புவதற்கு முன் ஒரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். “இன்றைய பத்திரிக்கைகளிலும் எக்ஸின் படத்தோடு செய்தி வரும். அதைப் பார்த்து விட்டு யாராவது போன் செய்கிறார்களா என்று பார்ப்போம். நாங்கள் டிவியிலும் இன்னொரு முறை அந்த ஆளைப் பற்றி அறிவிப்பு வெளியிட ஏற்பாடு செய்கிறோம்…..”

காலை ஒன்பதரை மணிக்கு அவர்கள் எதிர்பார்த்த போன்கால் வந்தது. கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசினாள். “இன்று பத்திரிக்கையில் என் முன்னாள் கணவரின் ஃபோட்டோ பார்த்தேன். அவர் உடல்நிலை மோசமாகி உங்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தியைப் பார்த்தேன்….. அவர் செத்து விட்டாரா என்ன?”

டெலிபோன் ஆபரேட்டர் சொன்னாள். “இல்லை மேடம். அவர் இறந்து விடவில்லை…..”

“அவரிடம் நிறைய பணம் இருந்ததே அதை அவருடன் வைத்திருக்கிறாரா இல்லை தொலைத்து விட்டாரா?”

“பணம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை மேடம்…. நீங்கள் உங்கள் பெயர் விலாசம் சொன்னால் குறித்துக் கொள்கிறோம்….”

பணம் இல்லை என்றவுடன் எல்லா அக்கறையையும் அந்தப் பெண் இழந்து விட்டாள் போலத் தெரிந்தது. அவள் கறாராகச் சொன்னாள். “அந்த ஆளுடன் வாழ்ந்த போது நரகத்தைத் தான் அனுபவித்தேன். விவாகரத்து வாங்கிய பின் தான் கொஞ்சமாவது நிம்மதியாக நானும் என் மகளும் இருக்கிறோம். அதனால் எதையும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இப்போது எனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை….”

அவள் போனை வைத்து விட்டாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒரு போலீஸ்காரருக்குப் போன் செய்து இதைச் சொன்னார்.

போலீஸ்காரர் சொன்னார். “அந்த ஆளின் பெயர் என்ன, விலாசம் என்ன என்று கண்டுபிடிப்பதற்கு இனி கஷ்டமில்லை. வந்த போன்கால் நம்பரைக் குறித்துக் கொண்டால் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு அதெல்லாம் தெரிந்து கொண்டு நம் ரெக்கார்டுகளில் குறித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் செய்ய இதில் ஒன்றுமில்லை. ஏனென்றால் குற்றம் எதுவும் நடக்கவில்லை. ஆளும் சாகவில்லை…..”

எத்தனையோ வழக்குகளைப் பார்க்க வேண்டியிருந்த அந்தப் போலீஸ்காரர் அப்படிச் சொன்னது தலைமை மருத்துவருக்குத் தப்பாகத் தோன்றவில்லை. ஆனால் அவரையும் அப்படிப் பெயர் விலாசத்தோடு திருப்தியடைய விடாமல் தடுத்தது எக்ஸின் ஸ்கேன் ரிப்போர்ட்கள். அவனைச் சேர்த்த போது எடுத்ததும், பின்பு எடுத்ததும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்ததை அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

முக்கியமாய் எக்ஸின் மூளை ஸ்கேன் ரிப்போர்ட்கள் முன்னுக்குப் பின் முரணாக அவரை அலைக்கழித்தது. அவருக்கு அந்த நகரிலேயே வசித்து வந்த மூளை விஞ்ஞானியான ஜான் ஸ்மித்திடம் அந்த அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களின் அதிசயத்தைக் காட்டி அவர் கருத்தைக் கேட்கத் தோன்றியது. அவர் ஜான் ஸ்மித்தைச் சில முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால் ஜான் ஸ்மித் அடிக்கடி உலகநாடுகளுக்குப் பயணம் செய்தபடி இருப்பவர். அவர் இப்போது இங்கு இருக்கிறாரோ இல்லையோ, அவருடன் விரிவாகப் பேச முடியுமோ முடியாதோ…

அவர் ஜான் ஸ்மித்துக்குப் போன் செய்த போது நல்ல வேளையாக அவர் உள்ளூரிலேயே இருந்தார். தலைமை மருத்துவர் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னவுடன் ஸ்கேன் ரிப்போர்ட்களின் வித்தியாசத்தை அவரும் அதிசயம் என்று ஒப்புக் கொண்டார்.  அவர் சொன்னார். “சில போதை மருந்துகள் மனித மூளையில் விதவிதமான வித்தியாசமான செயல்பாடுகளை ஏற்படுத்த முடிந்தவை. அதை எத்தனையோ ஆராய்ச்சிகள் பதிவு செய்தும் இருக்கின்றன. ஆனால் போதை அதிகமாகி மரணம் வரை போன பிறகு எந்தச் சிகிச்சையும் இல்லாமல் இப்படிக் குணமாகி மூளையில் இத்தனை வேகமாகச் செயல்பாடுகள் அதிகரிப்பது இது வரை நடக்காத ஒன்று. இது எப்போது நடந்தது என்று சொன்னீர்கள்?”

“நேற்று தான். அவன் காலையில் சேர்க்கப்பட்டான். மாலையில் சாக ஆரம்பித்தான். ஆனால் திடீரென்று பிழைத்துக் கொண்டான்….”

“நேற்று மாலையிலா… அப்போது சுமார் எத்தனை மணி இருக்கும்?”

ஜான் ஸ்மித் ஸ்கேன் ரிப்போர்ட்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுத்து அவன் பிழைக்க ஆரம்பித்த நேரத்தைக் கேட்டது அவருக்கு விசித்திரமாய் இருந்தது. அதை வெளிக்காட்டாமல் சொன்னார். “மிகச் சரியாகத் தெரியவில்லை. சுமார் ஆறு மணி இருக்கும்”

ஜான் ஸ்மித் மௌனமாக யோசிப்பது போல் தெரிந்தது. அவரிடமிருந்து உடனடியாகப் பதில் எதுவும் வரவில்லை. பின் மெல்லச் சொன்னார். “ஆச்சரியம் தான்…..”

அந்த நேரத்தை ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்க வழியில்லை. அந்த நேரத்தில் என்ன இருக்கிறது? அவர் ஸ்கேன் ரிப்போர்ட்களைத் தான் ஆச்சரியம் என்று குறிப்பிடுகிறார் என்று தலைமை மருத்துவர் நினைத்தார். “ஆமாம். அது மட்டுமல்ல. அவனுக்குக் காய்ச்சல் அபாயக்கட்டமான 106, 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டி விட்டும் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டு விடவில்லை. அதுவும் ஆச்சரியமே அல்லவா?”

ஜான் ஸ்மித் திகைப்போடு கேட்டார். “107 டிகிரி வரை போனதா?”

”ஆமாம். நானும் அதைப் பார்த்து அதிர்ந்து தான் போனேன். நேற்று என்னவோ எல்லாமே விசித்திரமாகவும் அமானுஷ்யமாகவும் நடந்தது. அவன் விஷயத்தோடு சேர்ந்து இன்னொன்றும் நடந்தது. கிதார் இசையை யாரோ வாசித்தார்கள். ஆஸ்பத்திரிக்குள் இருந்தே வாசிப்பது போல இருந்தது. ஆனால் யாரும் வாசித்ததைப் பார்க்க முடியவில்லை. எங்கள் மருத்துவமனையில் இருந்த இசைஞானம் உள்ள ஒரு நோயாளி சொல்கிறார் அந்தக் கிதார் இசை வூடூ திகில் நடனத்தில் ஆவிகளை வரவழைக்கையில் வாசிக்கும் இசை மாதிரியாம். அவர் ஹைத்தியில் நேரடியாகவே அந்த இசையைக் கேட்டிருக்கிறாராம்….”

ஜான் ஸ்மித்திடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. போன் இணைப்பில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வர தலைமை மருத்துவர் சந்தேகத்துடன் ”ஹலோ….” என்றார்.

ஜான் ஸ்மித் சொன்னார். “நான் எதற்கும் வந்து அந்த ரிப்போர்ட்களைப் பார்க்கிறேனே. நீங்கள் என்ன தான் விளக்கினாலும் நேரில் பார்த்தால் ஒரு முடிவுக்கு வருவது சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்ற அதிசயங்கள் அடிக்கடிப் பார்க்கக் கிடைப்பதில்லை…”

“நல்லது. எப்போது வருகிறீர்கள்?”

“இப்போதே ஓய்வாகத் தான் இருக்கிறேன். இப்போதே வரட்டுமா?”

அவர் உடனடியாக வருவதற்கு அவர் சொன்னதைத் தவிர வேறு பிரத்தியேகக் காரணங்கள் இருப்பதாகத் தலைமை மருத்துவருக்குத் தோன்றவில்லை… அவர் ஜான் ஸ்மித் வர ஆவலுடன் காத்திருந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, July 3, 2019

உங்கள் வாழ்வைத் தீர்மானிப்பது நீங்களா? விதியா?

மனிதனுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதியே தீர்மானிக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும் மனிதனே தீர்மானித்துக் கொள்கிறான் என்று சிலர் நினைக்கிறார்கள். இரண்டில் எது சரி? உதாரணங்களுடன் ஆழமாய் ஒரு அலசல்...




என்.கணேசன்

Monday, July 1, 2019

சத்ரபதி 79


சிதி ஜோஹர் யோசித்து விட்டு பேச்சு வார்த்தைக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தான். அப்சல்கானைக் கொன்றது போல் சிவாஜி அவனைக் கொல்வான் என்று அவன் நினைக்கவில்லை. அப்சல்கான் மேல் அவனுக்கு முன்பே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. பல வருடங்களுக்கு முன் பேச்சு வார்த்தைக்கு ஒருவனை அழைத்து அப்சல்கான் கொன்றிருந்ததைக் கேள்விப்பட்டிருந்தவன் அவன். மேலும் வீரனான அவன் இது போன்ற தனிப்பட்ட தாக்குதலுக்குப் பயப்படவில்லை. பேச்சு வார்த்தைக்கு சிவாஜி இருவரை அழைத்து வரலாம் என்றும், தன்னுடனும் இருவர் இருப்பார்கள் என்றும் பேச்சு வார்த்தைக்கு வரும் போது சிவாஜிக்குத் தங்களால் எந்த ஆபத்தும் இருக்காது என்றும் சொல்லி அனுப்பினான். மனிதர்களை எடை போடுவதில் வல்லவனான சிவாஜி சிதி ஜோஹரைப் போன்ற ஒருவன் தந்திரமாகத் தனக்கு ஆபத்து விளைவிப்பான் என்று நினைக்கவில்லை. அவனுடைய திட்டமே வேறாக இருந்தது.

ஃபசல்கானுக்கு சிதி ஜோஹர் ஆபத்தை வரவழைக்கிறான் என்று தோன்றியது. அவன் பேச்சு வார்த்தையின் போது சிதி ஜோஹருடன் இருக்கப் பிரியப்படவில்லை. அதைத் தெரிவித்து விட்டு அவன் மனத்தாங்கலுடன் சொன்னான். “சிவாஜி பலவீனமான நிலையில் இருப்பதால் தான் பேச்சு வார்த்தை பற்றிப் பேசுகிறான். இன்னும் சில காலம் தொடர்ந்து தாக்கினால் அவன் வெளியே வந்து தான் ஆக வேண்டும். அப்போது அவனையும் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையையும் நாம் பிடித்து விடலாம். நிலைமை இப்படி இருக்கையில் பேச்சு வார்த்தைக்கு நீங்கள் உடன்பட்டிருக்கக்கூடாது”

சிதி ஜோஹர் சொன்னான். “படைவீரர்களை இதே உற்சாகத்துடன் எத்தனை நாளைக்கு நாம் வைத்திருக்க முடியும். படைத்தலைவர்களே பேசிப் பார்க்கலாம் என்கிற நிலை எடுத்ததை நீயே பார்த்தாய். இப்போது சிவாஜியின் ஒரு சிறுபடை பின்னால் இருந்து நம்மைத் தாக்கி வருகிறது. சமாளிக்கிறோம். சிவாஜிக்கு ஆபத்து என்றால் அவனுடைய மற்ற இடங்களில் இருக்கும் படைகளும் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கூட்டம் கூடி இங்கே போரிடும் போது கோட்டையைப் பிடித்தாலும் சிவாஜி அந்த அமளியில் தப்பி விடுவதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அவனை எல்லோரும் மலை எலி என்கிறார்கள். எதிலிருந்தும் தப்பிப்பதில் வல்லவன் என்கிறார்கள். அதனால் பேசிப் பார்க்கலாம். அவன் மடலைப் பார்த்தால் அவன் இந்தக் கோட்டையை மட்டும் ஒப்படைத்து விட்டு இங்கிருந்து போக அனுமதி கேட்பான் போலத் தான் தெரிகிறது. அப்படி பன்ஹாலா கோட்டை நமக்குத் திரும்பக் கிடைத்தாலே சுல்தான் நோக்கில் நமக்கு வெற்றி தான். ஆனால் பேச்சு வார்த்தையின் போது அவனைச் சரணடையச் சொல்லிக் கேட்போம். அவன் புத்திசாலி. ஒத்துக் கொள்ள மாட்டான். அப்படி ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் கூடுதலாக கேல்னா கோட்டையையாவது ஒப்படைக்கும் படி நிர்ப்பந்தம் செய்து பார்க்கலாம். கிடைத்தால் லாபம்….”

ஃபசல்கானுக்கு கோட்டைகள் பெறுவதில் திருப்தி இருக்கவில்லை. சிவாஜியைச் சிறைப்படுத்த வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்பதே அவனுடைய ஆசையாக இருந்தது. ஆனால் சிதி ஜோஹர் சொன்னதிலும் தவறு காண முடியாததால் ஒத்துக் கொண்டான். ”ஆனால் பேச்சு வார்த்தை முடியும் வரை நான் கூப்பிடு தூரத்தில் தயாராக இருப்பேன். அவன் ஏதாவது தகிடுதத்தம் செய்தால் என்னை அழையுங்கள். நான் வந்து விடுகிறேன்” என்று சொன்னான்.

சிதி ஜோஹர் தலையசைத்தான். சிவாஜியுடன் இரண்டு பேர் தான் வரப்போகிறார்கள். அந்த மூவரை, பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தங்கள் மூவரால் சமாளிக்க முடியாதா என்ன என்கிற எண்ணமே அவனிடம் மேலோங்கி நின்றது.

சிவாஜி மதியமே பேச்சு வார்த்தைக்கு வந்தான். அவனுடன் பாஜி  தேஷ்பாண்டே என்ற மராட்டியப் படைத்தலைவனும், இன்னொருவரும் வந்தார்கள். சிதி ஜோஹர் தன் இரண்டு படைத்தலைவர்களுடன் பேச வந்தான். பன்ஹாலா கோட்டைக்கு வெளியே ஒரு கூடாரத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்சல்கானைக் கட்டித் தழுவி வயிற்றைக் கிழித்துக் கொன்றிருந்த சிவாஜியை அவர்கள் மூவருமே அணைக்க விரும்பவில்லை. சாதாரண வணக்கமே இரு பக்கத்தினருக்கும் இசைவாக இருந்தது.

அனைவரும் அமர்ந்ததும் சிதி ஜோஹர் அலங்கார உபசார வார்த்தைகளிலோ, தேவையில்லாத மிரட்டல்களிலோ நேரத்தைச் செலவழிக்காமல் சிவாஜி எந்த விதமான சமரசத்திற்குத் தயாராக இருக்க விரும்புகிறான் என்பதைக் கேட்டான்.

“இந்தக் கோட்டையை தங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். நானும் என் படையும் இங்கிருந்து பாதுகாப்பாகச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்”

சிதி ஜோஹர் சொன்னான். “இந்த மூன்று மாதத்தில் பீஜாப்பூரின் ஆறு கோட்டைகளை நீ கைப்பற்றி இருக்கிறாய். அப்படி இருக்கையில் ஒரு கோட்டையை நீ ஒப்படைத்தவுடன் வாங்கிக் கொண்டு நீ பாதுகாப்பாகச் சென்று விட நான் அனுமதிப்பதை பீஜாப்பூர் சுல்தான் ஏற்றுக் கொள்வார் என்று நான் நினைக்கவில்லை”

சிவாஜி சொன்னான். “மனிதர்கள் மனம் எளிதில் திருப்தி அடையாதது. அவர்கள் அரசர்களாகவும் இருந்து விட்டால் திருப்தி என்பது அவர்கள் அற்ப நேரத்திற்கும் அறிய முடியாததாகவே இருக்கிறது. அதற்கு உங்கள் சுல்தானோ, நானோ, நீங்களோ விதிவிலக்கல்ல. இருந்த போதிலும் இரு பக்கமும் அதிருப்தியடையக் காரணமில்லாத நிலைப்பாட்டை நாம் எட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன். பன்ஹாலா கோட்டையை உங்களிடம் இருந்து எடுத்த நிலையிலேயே நான் வைத்திருக்கவில்லை. நிறைய செலவுகள் செய்து அதை மேலும் வலிமையாக்கி வைத்திருக்கிறேன். அந்த வலிமையுடன் திருப்பித் தருவதில் எனக்கு நஷ்டம் தான் என்றாலும் இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதற்கே ஒத்துக் கொள்கிறேன். நான் தங்களிடம் முன்பே தெரிவித்தது போல இந்தக் கோட்டைக்குள் என்னால் இன்னும் சில மாதங்கள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இந்த சீதோஷ்ண நிலையில் உங்கள் படை சில மாதங்கள் தாக்குப் பிடிக்க முடியாது. யோசியுங்கள்…”

சிதி ஜோஹர் சொன்னான். “முடிவெடுக்க வேண்டியது சுல்தான். நான் அவர் சார்பில் வந்தவன். அவ்வளவு தான். நீ சரணடைந்தாலோ அல்லது பிடித்த ஆறு கோட்டைகளையும் திருப்பிக் கொடுப்பதாக இருந்தாலோ அவர் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லா விட்டாலும் குறைந்த பட்சமாக இந்தக் கோட்டையுடன் கேல்னா கோட்டையையுமாவது தந்தால் நான் ஒத்துக் கொண்டு அவரையும் சம்மதிக்க வைக்க முடியும். நீங்கள் அடைந்து கிடக்கும் கோட்டையை மட்டுமே இத்தனை மாத முற்றுகைக்குப் பின் திருப்பித் தருவது சரியான சமரசமாக எனக்குத் தோன்றவில்லை”

சிவாஜி சொன்னான். “கேல்னா கோட்டையை கிட்டத்தட்ட நான் முழுமையாகவே சீரமைத்திருக்கிறேன். அதற்கு விஷால்கட் என்ற பெயரும் வைத்திருக்கிறேன். அதைத் தர நான் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் இந்தப் பன்ஹாலா கோட்டையைப் பற்றிப் பேசுங்கள்….”

இரு தரப்பும் சொன்னதையே பல வார்த்தைகளில் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இருட்ட ஆரம்பித்து விட்டது. சிவாஜி சொன்னான். “நேரமாகி விட்டது. இனி இதைப் பற்றி நாளை நாம் பேசுவோம்….”

சிதி ஜோஹர் ஒத்துக் கொண்டான். பிரியும் போது சொன்னான். “கோட்டையில் இருந்து இறங்கி வருவது பெரிய விஷயமல்ல சிவாஜி. நின்ற நிலையில் இருந்தும் இறங்கி வந்தால் தான் பேச்சு வார்த்தை உடன்படிக்கையில் முடியும். நாளை வரும் போது சற்றாவது உன் பிடிவாதத்தைத் தளர்த்தினால் மனம் மகிழ்வேன்….”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். ”அதையே நானும் தங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தாங்களும் நன்றாக யோசித்து எல்லாம் சுமுகமாக முடிய உதவுங்கள்”

சிவாஜி உடன் வந்த இருவரையும் அழைத்துக் கொண்டு கோட்டைக்குத் திரும்பினான். அவன் கோட்டை வாசலை அடைந்து உள்ளே நுழையும் வரை சிவாஜி மேல் வைத்திருந்த தன் பார்வையை சிதி ஜோஹர் விலக்கிக் கொள்ளவில்லை. அவன் சென்று கோட்டைக் கதவு மூடிக் கொண்ட பிறகே திரும்பினான். அவன் திரும்பிய போது ஃபசல்கான் அவனருகே நின்றிருந்தான்.

ஃபசல்கான் இப்படி இரு பக்கமும் பேச்சு வார்த்தையை முடித்து கொண்டு பிரச்சினை இல்லாமல் பிரிவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆர்வத்துடன் சிதி ஜோஹரைக் கேட்டான். “என்ன சொல்கிறான்”

“கோட்டையைக் கொடுத்து விடுகிறேன். என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்கிறான்”

“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“சமீபத்தில் பிடித்த ஆறு கோட்டைகளையும் கொடுத்து விடு. போக விடுகிறோம் என்றேன். அவன் ஒத்துக் கொள்ளவில்லை. கேல்னா கோட்டையையாவது இதோடு சேர்த்துக் கொடு என்று சொல்லி இருக்கிறேன். அவன் மாட்டேன் என்கிறான். பேச்சு வார்த்தை முடியவில்லை. நாளை காலை திரும்பவும் தொடர்வதாக இருக்கிறது. பார்க்கலாம் எவ்வளவு தூரம் இறங்கி வருகிறான் என்று….”


சிவாஜி பன்ஹாலா கோட்டையைத் திருப்பித் தந்து இங்கிருந்து செல்லத் தயாராக உள்ளான் என்ற செய்தி படையினர் மத்தியில் பரவியது. திரும்பவும் பேச்சு வார்த்தை நாளை தொடர இருக்கிறது என்றும் அது முடிவடைந்தால் நாளையே ஊர் திரும்பலாம் என்றும் படையினர் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். வந்த நாள் முதல் முந்தைய நாள் வரை கடும் மழையிலும், பெரும் வெயிலிலும், கொடுங்காற்றிலும் கூடத் தளராத கண்காணிப்பு அன்றிரவு தளர்ந்தது. அதற்கான அவசியத்தை யாருமே உணரவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்