என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 18, 2026

சதுரங்கம் 23


 ர்ஜுன் தன்னுடைய விளையாட்டான கேள்வி ராஜாராமை இந்த அளவு பாதிக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ’சித்தப்பா ஏன் இப்படி சிலை போல் சமைந்து என்னைப் பார்க்கிறார்என்று நினைத்தவனாக அவன் பாட்டியைப் பார்த்தான். யசோதா மகனை வேதனையுடன் பார்ப்பது தெரிந்தது.

 

ராஜாராம் சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு புன்னகையைத் தொடர்ந்தார். ஆனால் அந்தப் புன்னகையில் உயிர் இல்லை. “நானும் சண்டை போடுவேன்னாலும் அம்மா அளவுக்கெல்லாம் இல்லை. குடும்பம்னா அது எல்லாம் சகஜம் தானடா?” என்று ராஜாராம் கேட்டாலும் இன்னமும் அவன் கேள்வியின் பாதிப்பிலிருந்து அவர் மீளவில்லை என்பதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “அப்பாவும் தாத்தா கூட சண்டை போடுவாரா?”

 

அண்ணா அவரோட சண்டை போட்டதேயில்லை. அவனும் எத்தனையோ எதிர்க்கருத்துகளை வெளிப்படையா சொல்வான்னாலும் அது நியாயமான, மறுக்க முடியாத வாதமாய் இருக்கும். அதனால அவன் என்ன சொன்னாலும் அப்பா ஏற்றுக்கற மாதிரி தான் இருக்கும்.”

 

ஆனா அப்பா, அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னப்ப தாத்தா உடனே சம்மதிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.”

 

திடீரென்று அங்கே மயான அமைதி நிலவியது. ராஜாராம் முந்தைய கேள்வியிலிருந்தாவது சீக்கிரம் மீண்டு செயற்கையாகவாவது புன்னகைத்தார். இப்போதோ அவர் ஒரு கணம் தன் தாயைப் பார்த்து விட்டு அவனையே வெறித்துப் பார்த்தார். அர்ஜுன் திகைத்தான். என்ன ஆயிற்று இவருக்கு?

 

அவன் திரும்பி யசோதாவைப் பார்த்தான். யசோதாவும் அவரைப் போலவே அவனை வெறித்துப் பார்த்தாள். ஏன் பாட்டியும் அப்படியே பார்க்கிறாள்?

 

ராஜாராம் புன்னகைக்கவும் மறந்து போய், அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். ”உனக்கு யார் அதைச் சொன்னது?”

 

அப்பா தான்

 

ராஜாராம் அவனை நம்பாதது போல் பார்த்தார். அர்ஜுன் சொன்னான். “நான் அப்பா கிட்டவக்கீலுக்குப் படிச்ச நீங்க எட்டாம் கிளாஸ் மட்டுமே படிச்ச அம்மாவைக் கல்யாணம் செஞ்சுக்க தாத்தா எப்படி சம்மதிச்சார்?’னு கேட்டேன்.  அதுக்கு அவர்அப்பா ஆரம்பத்துல தயங்கினார். பிறகு தான் சம்மதிச்சார்னு சொன்னார்.”

 

ராஜாராம் தலையசைத்தார். பின் மெள்ள அவர் பழைய நிலைக்கு வருவது தெரிந்தது. ஆனால் யசோதா பழைய நிலைக்குத் திரும்பவில்லை.  

 

அர்ஜுனுக்குத் திகைப்பாக இருந்தது. பத்திரிக்கை, ஊடக உலகில் ராஜாராமுக்குஎதற்கும் அசராதவர்என்ற பட்டம் உண்டு. பதில் சொல்லவே முடியாது என்று நிருபர்கள் நம்பி அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளைக் கேட்டாலும் கூட, சிறிதும் அமைதியிழக்காமல், புன்னகை குறையாமல் பதில் தந்து நிருபர்களைத் திகைக்க வைப்பவர் அவர். அதை அவனும் எத்தனையோ பேட்டிகளில் பார்த்திருக்கிறான். எப்படி இதற்குப் பதில் அளிக்கப் போகிறார் என்று அவன் நினைக்கும் கேள்விகளுக்கும் கூட அதிகம் யோசிக்காமல் அசர வைக்கும் பதில்களைச் சொல்லி நகர்பவர் அவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு சாதாரணமான பேச்சுக்குக் கூட ஏன் இப்படி அமைதியிழக்கிறார், அதிர்ச்சியடைகிறார்?

 

அர்ஜுன் வெளிப்படையாகவே கேட்டான். “ஏன் சித்தப்பா நான் சொன்னதற்கு கொஞ்சம் முன்னாடி அப்படி பார்த்தீங்க?”

 

ராஜாராம் பழைய ராஜாராம் ஆக மாறினார். புன்னகையுடன் அவர் சொன்னார். “இல்லைடா. அண்ணாவும் அப்பாவும் எவ்வளவு பாசமாய் இருந்தாங்கன்னு எங்களுக்குத் தான் தெரியும். அப்படி இருக்கிறப்ப அண்ணாவுக்கு எதிராய் அப்பா இருந்தார்ங்கற மாதிரி ஒரு கருத்தை யார் கிளப்பினாங்கன்னு தான் எனக்கு அதிர்ச்சியாய் இருந்துச்சு. நீ எந்த சூழ்நிலைல இந்த கருத்து வந்துச்சுன்னும், அண்ணனே சொன்னார்ன்னும் சொன்னவுடன தான் எனக்கு மனசு சமாதானமாச்சு.”

 

அவர் சொன்னது ஏற்கக்கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் யசோதா தான் இயல்பாய் இல்லை. களைப்புடன் கண்களை மூடிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

 

அர்ஜுன் கேட்டான்.  அப்பா, நீங்க, பாட்டி மூனு பேருமே சொன்னாலும் கூடக் கேட்காமல் தாத்தா தன் சொத்தையெல்லாம் விற்று கட்சிக்கும், மக்களுக்கும் செலவு செய்ததாய் அப்பா சொன்னார். சுதந்திர இந்தியாவில் இதுவரைக்கும் எந்த அரசியல் தலைவரும் அப்படி செய்ததாய் வரலாறு இல்லை. அதை நீங்களும், பாட்டியும் எப்படிப் பார்க்கறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். ‘டேய் இப்ப சொல்றது எல்லாமே குடும்பத்துக்குள்ளே பேசிக்கறது. இந்தக் கேள்விக்கெல்லாம் பிரசுரத்துக்கு என்ன பதில்னு அப்பறமா சொல்றேன் சரியா? நான் அப்பவும் அதை முட்டாள்தனம்னு தான் நினைச்சேன். இப்பவும் அதை முட்டாள்தனமாய் தான் பார்க்கறேன்.”

 

அர்ஜுன் யசோதாவைப் பார்த்தான். யசோதா சொன்னாள். “மனுஷன் ஒவ்வொன்னையும் விற்ற பிறகு தான் எங்களுக்கு விஷயமே தெரிய வரும். நான் கொஞ்சம் காரமாய் தான் பேசுவேன். ஆனால் அதெல்லாம் உன் தாத்தாவுக்கு கொஞ்சமும் உறைக்காது. தோல் ரொம்ப கெட்டி.”

 

ராஜாராம் சொன்னார். “அதான் சொன்னேனே. அண்ணா அபிப்பிராயத்தில் அவருக்கு அதிக மதிப்பு இருந்துச்சு. ஆனாலும் அண்ணா சொல்லியும் அவர் கேட்கலை. அப்பவெல்லாம் அவர்நாலு பேருக்கு உதவறதை விட நாம அதை சொத்தா வச்சிருக்கறதுல என்ன பிரயோஜனம்னு கேட்பார்.”

 

யசோதா சொன்னாள். “இந்த வீடு ஒன்னு மிஞ்சுச்சுன்னா அதுக்கு ஒரே காரணம் இதையும் வித்துட்டா நாங்க போய் குடியிருக்க வேறொரு வீடு இல்லைங்கறது தான். அதனால தான் இந்த வீடு கைவிட்டுப் போகாம தப்பிச்சுது. நான் அடிச்சுக்குவேன். இருக்கற சொத்தையெல்லாம் இப்படி வித்துத் தொலைக்கிறீங்களேன்னு. அப்பவெல்லாம் சொல்வார். “எனக்கு என்னோட ரெண்டு பசங்களும் தான் பெரிய சொத்துடி. அது போதும் வேற சொத்து எனக்கு என்ன வேணும்…” சொல்லச் சொல்ல யசோதாவின் குரல் தழுதழுத்தது.

 

அந்த கடைசி வார்த்தைகளைக் கேட்டு ராஜாராமும் கண்கலங்கினார். அதை அவர்களுக்குக் காட்டாமலிருக்க அந்தப் பக்கம் திரும்பி ஜன்னல் வழியே தெரியும் செடிகொடிகளைப் பார்த்தார்.

 

வாசுதேவனுடைய செயல்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கா விட்டாலும், அந்தச் செயல்களின் பின்னால் இருக்கும் அவருடைய பெரிய மனதை அவர்கள் மனநெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பதை  அர்ஜுன் கவனித்தான்.  அவனுக்கும் தாத்தாவை நினைக்கப் பெருமையாக இருந்தது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இறந்தபின் தகுதியில்லா விட்டாலும் அவர்களுடைய கட்சிக்காரர்களால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். பல அயோக்கியத்தனங்களைச் செய்திருந்தாலும் புனிதர்களாக்கப் படுகிறார்கள். இன்றைக்கு இந்தத் தேசம் கொண்டாடும் தலைவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வெகு சாதாரண மனிதர்களே. அப்படி இருக்கையில் தாத்தா uண்மையிலேயே வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறார் என்று தோன்றியது.

 

அவன் திடீரென்று கேட்டான். “தாத்தா பெரிய சொத்தாய் நினைக்கும் அவரோட பிள்ளைகள் அரசியலில் எதிரும் புதிருமாய் இன்றைக்கு இருப்பதை, அவர் உயிரோடு இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார்? யார் பக்கம் அவர் இருந்திருப்பார்?

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “சந்தேகத்துக்கு இடமில்லாமல் எங்கப்பா அண்ணாவை ஆதரிச்சிருப்பார்.”

 

அதைச் சிறிதும் தயக்கமில்லாமல் சொல்ல முடிந்த சித்தப்பாவின் நேர்மையை அர்ஜுன் மனதிற்குள் பாராட்டினான். அவன் அவரிடம் கேட்டான். “பின் ஏன் சித்தப்பா நீங்க உங்க அண்ணாவை எதிர்த்து அரசியல் செய்யறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். “எனக்கு எங்கப்பா செஞ்ச அரசியலிலும் உடன்பாடு இல்லை. இப்போ அண்ணா செய்யற அரசியலிலும் உடன்பாடு இல்லை. அது ஏன்னு ஒரு நாள் நாம ரெண்டு பேரும் தனியா பேசுவோம் அர்ஜுன். நான் அதை விளக்கிச் சொன்னால் தான் நீ அதைப் புரிஞ்சுக்க முடியும். என் மேல உனக்கு இருக்கற கோபம் குறையும். இப்ப உன் தாத்தா பற்றி மட்டும் பேச்சை வெச்சுப்போம். உன் பாட்டிக்கும் அரசியல் பற்றி பேசறது இப்ப எல்லாம் ரொம்பக் கசப்பாய் இருக்கு.”

 

‘’ஆமாடா. நிருபராய் நீ கேட்டதெல்லாம் போதும். வீட்டு பேரப்பிள்ளையாய் பேசு. பாட்டிக்கு வயசாயிட்டே போகுது. கொள்ளுப் பேரனோ, பேத்தியோ பார்த்துட்டு கண்ணை மூடணும்னு ஆசையா இருக்கு. அதற்கு சீக்கிரத்துல எதாவது வாய்ப்பு இருக்காடா?”

 

அர்ஜுன் முகத்தில் மெலிதாய் வெட்கம் தோன்றி மறைய ராஜாராம் அதைக் கவனித்து உடனடியாகக் கேட்டார். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

(தொடரும்)

என்.கணேசன்






No comments:

Post a Comment