சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 15, 2019

சத்ரபதி 81


பாஜி தேஷ்பாண்டேயின் மரணம் சிவாஜியை மிகவும் பாதித்தது. அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் சிவாஜியைக் காப்பாற்றி விட்டு உயிரை விட்டிருக்கிறான். அவனது வார்த்தைகள் இப்போதும் சிவாஜியின் காதுகளில் ஒலித்தன. “நம் அனைவரின் கனவான சுயராஜ்ஜியத்துக்காகச் சொல்கிறேன். உங்கள் பாதுகாவலில் நம் சுயராஜ்ஜியத்தின் எதிர்காலமே இருக்கிறது. உங்களுக்கு எதாவது நேர்ந்தால் என்னால் என்னையே மன்னிக்க முடியாது.” கண்களில் நீர் படர சிவாஜி நினைத்துக் கொண்டான். ‘மனிதர்கள் இறக்கலாம். ஆனால் அவர்கள் கனவுகள் இறக்காமல் யாராவது நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றன. இந்த சுயராஜ்ஜியக் கனவு என் காலத்திலாவது நிறைவேறுமா, இல்லை எனக்குப் பின்னும் அது காத்திருக்க வேண்டி வருமா?...”

சிதி ஜோஹர் சிவாஜி தப்பித்துப் போனதில் மன அமைதியை இழந்து தவித்துக் கொண்டிருந்தான். அடுத்தது என்ன என்று அவனால் சிந்திக்க முடியவில்லை. சிவாஜி பேச்சு வார்த்தைக்கு வரும் வரை மிகவும் கச்சிதமாகத் தான் எல்லாம் போய்க் கொண்டிருந்தன. இப்போதோ அவனுக்கு எதிலும் தெளிவாய்ச் சிந்திக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையின் போது சிவாஜி ஏதாவது சூழ்ச்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவன் எதிர்பார்த்திருந்ததால் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தான். சிவாஜி திரும்பிக் கோட்டைக்குள் போகும் வரை கூட அவன் பார்வையை வேறு பக்கம் திருப்பவில்லை. மறுநாள் சிவாஜி பேச்சு வார்த்தைக்கு வரும் போது கூட எச்சரிக்கையைத் தளர்த்தி விடக்கூடாது என்று கூட முடிவு செய்திருந்தான். இப்படி அவன் கவனம் பேச்சு வார்த்தை சமயத்திலேயே தங்கி இருந்ததே ஒழிய சிவாஜி இடையில் தப்பித்துச் செல்லக்கூடும் என்ற சந்தேகம் துளியும் அவன் மனதில் எழவில்லை.

ஃபசல்கான் கேட்டான். “இனி என்ன செய்வது தலைவரே?”

சிதி ஜோஹர் சொன்னான். “அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம் முன் இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றுவது. எதுவுமில்லாமல் திரும்பிப் போவதை விட பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றி விட்டுப் போகலாம். இன்னொன்று சிவாஜியைப் பிடிக்க கேல்னா கோட்டைக்கு நம் படையைத் திருப்பிக் கொண்டு போவது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தான் யோசனை…”

ஃபசல்கான் சொன்னான். “கேல்னா கோட்டைக்கு சிவாஜி தப்பித்துப் போன மலைப்பாதை வழி தான் மிகவும் குறைந்த தூரப் பாதை. ஆனால் அது மிகவும் குறுகியது தலைவரே. நாம் படையோடு அந்தப் பாதையில் செல்ல முடியாது. படையோடு செல்ல நாம் சுற்றித் தான் போக வேண்டும். அது தொலைவு அதிகம்….”

ஒரு படைத்தலைவன் சொன்னான். “கேல்னா கோட்டையின் பின்னால் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. அது கொங்கண் பிரதேசத்தில் முடிகிறது. அதனால் நாம் முன்புறமாக மட்டுமே கோட்டையைத் தாக்க முடியும். சிவாஜி எந்த நேரத்திலும் கோட்டையின் பின் வழியாக மலைச்சரிவில் தப்ப முடியும். அதனால் அங்கு போய்க் கோட்டையைப் பிடிக்கலாமே ஒழிய சிவாஜியைப் பிடிக்க முடியாது….”

சிதி ஜோஹர் மனம் நொந்து சொன்னான். “நம் சிறு அலட்சியம் அவனுக்கு எப்படிச் சாதகமாகி விட்டது பார்த்தீர்களா?”

ஃபசல்கான் ஆற்றாமையுடன் சொன்னான். “அதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே சிவாஜியுடன் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொள்வதே ஆபத்து என்று சொன்னேன். சிவாஜி என்றால் சூழ்ச்சி. சிவாஜி என்றால் தந்திரம்.”

சிதி ஜோஹர் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “பேச்சு வார்த்தையில் தந்திரமாக அவன் நடந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்த்து அதற்கு நான் தயாராக இருந்தேன். பேச்சு வார்த்தை என்பதே தந்திரம் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை.”

கடைசியில் பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றிய பிறகே அங்கிருந்து போவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சிவாஜியின் தலைமை இல்லாத பன்ஹாலா கோட்டை சீக்கிரமே தங்கள் கைக்கு வரும் என்று அவர்கள் கணக்கிட்டார்கள். ஆனால் ரகுநாத் பல்லாள் தலைமையில் பன்ஹாலா கோட்டை வெற்றிகரமாகவே தாக்குப் பிடித்தது. சிதி ஜோஹர் ஃபசல்கானின் ஆலோசனையின்படி ரகுநாத் பல்லாளுக்கு ரகசியமாக ஆளனுப்பி கோட்டையைச் சரணடையச் செய்தால் ஏராளமான செல்வமும், பீஜாப்பூர் ராஜ்ஜியத்தில் மிக உயர்ந்த பதவியும் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தான். ரகுநாத் பல்லாள் “நான் இருக்கும் இடத்திலேயே உயர்வாக இருக்கிறேன். இங்கிருந்து தரம் இறங்க விரும்பவில்லை” என்று நாசுக்காகப் பதிலனுப்பினான்.

சிவாஜி தப்பி விட்டதும், பன்ஹாலா கோட்டை வீழ்வது நீண்டு கொண்டே போவதும் பீஜாப்பூர் படையினரின் உற்சாகத்தை முழுவதுமாகக் கரைத்து விட்டது. அந்த உற்சாகத்தை மீட்டெடுக்க சிதி ஜோஹரால் முடியவில்லை. ஃபசல்கானும் சிவாஜியைப் பிடிக்க வழியில்லாத நிலையில் உற்சாகத்தை இழந்திருந்தான். அடுத்ததாக பெருமழைக்காலமும் நெருங்கப் போகிறது என்ற சூழலில் சிதி ஜோஹர் இனியும் அங்கிருப்பதில் பெரிய பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தான். மிக நேர்த்தியாக ஆரம்பித்து வெற்றிகரமாகவே தொடர்ந்த சிதி ஜோஹரின் முயற்சிகள் சிவாஜியின் தந்திரத்தால் தடம் மாறி, குழப்பமாகி, தோல்வியில் முடிந்தன. படையோடு அவன் பீஜாப்பூர் திரும்பினான்.

இந்தப் பெரிய படையும் தோற்று வந்ததில் அலி ஆதில்ஷா ஆத்திரமடைந்தான். சிதி ஜோஹர் சிவாஜியிடம் விலை போய், வேண்டுமென்றே அவனைத் தப்ப வைத்திருக்க வேண்டும் என்று அவன் சந்தேகப்பட்டான். யார் சுல்தானிடம் செல்வாக்காக இருந்தாலும் அதைச் சகிக்க முடியாமல் அவர்களைப் பற்றித் தவறாகச் சொல்லிக் காலை வாரும் ஆட்கள் பீஜாப்பூர் அரசவையில் நிறையவே இருந்தார்கள். சிதி ஜோஹரைப் பற்றியும் அவர்கள் பல சந்தேகங்களை எழுப்பி தூபம் போட்டார்கள். அலி ஆதில்ஷா தன் சந்தேகத்தை உண்மை என்றே நம்ப ஆரம்பித்து  அதை  வெளிப்படையாகவே சிதி ஜோஹரிடம் தெரிவிக்கவும் செய்த போது சிதி ஜோஹரின் இரத்தம் கொதித்தது. அபாண்டமாக இப்படி இந்த சுல்தான் பழி சுமத்துகிறானே என்று அதைத் தீவிரமாக மறுத்தான். ஆனாலும் நம்ப மறுத்த அலி ஆதில்ஷா அவனை அலட்சியப்படுத்தி உடனடியாக கர்நூலுக்கே அனுப்பி வைத்தான். அநியாயமாகப் பழிசுமத்தப்பட்ட சிதி ஜோஹர் மனம் கொதித்த நிலையிலேயே அங்கிருந்து சென்றான்.

அலி ஆதில்ஷா ஆழ்ந்து ஆலோசித்து விட்டு அரசவையைக் கூட்டினான். இனி யாரை அனுப்புவது என்று அவன் இந்த முறை கேட்கவில்லை. அவன் அனைவரிடத்திலுமே நம்பிக்கையை இழந்திருந்தான். இழந்த பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பெருமையை மீட்கத் தானே படையெடுத்துச் செல்வதாக அறிவித்தான். சுல்தானே செல்வது உசிதமல்ல என்று வந்த கருத்துகளுக்கு அவன் செவி சாய்க்கவில்லை. ”சென்றவர் வென்று வந்தால் நான் செல்ல வேண்டியதில்லை. ஆனால் சென்றவரெல்லாம் தோற்று வந்த பின்னும் நான் அரியணையில் அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சிவாஜியை இப்படியே விட்டு வைப்பது ஆபத்தானது. அவன் நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்று உறுதியாகச் சொன்னான்.

சிதி ஜோஹருடன் போன படையை விடவும் இருமடங்கு பெரிய படை அலி ஆதில்ஷாவின் தலைமையில் பன்ஹாலா கோட்டையை நோக்கிப் புறப்பட்டது. ரஸ்டம் ஜமான், சிதி ஜோஹர் இருவரும் சென்று தோற்று வந்த பன்ஹாலா கோட்டையை முதலில் வென்று விட்டு தான் அடுத்த இலக்கிற்குச் செல்வது என்ற உறுதியுடன் அலி ஆதில்ஷா கிளம்பினான்.

சுல்தானே தலைமை தாங்கி பீஜாப்பூர்ப் படை போருக்குச் செல்வது மிக அபூர்வமானது. பல ஆண்டுகளுக்கு முன் அலி ஆதில்ஷாவின் தந்தை முகமது ஆதில்ஷா தலைமையில் போருக்குப் போனதை வயோதிக வீரர்கள் நினைவு கூர்ந்தார்கள். இப்போது தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அபூர்வ வாய்ப்பில் பீஜாப்பூர் படை உற்சாகத்தைப் பெற்றிருந்தது. இந்த முறை படை வலிமையும் இரு மடங்காகி இருந்ததால் வென்றே தீர்வது என்ற முடிவில் ஒவ்வொரு பீஜாப்பூர் வீரனும் இருந்தான்.

ஏற்கெனவே சிதி ஜோஹரின் ஆக்கிரமிப்பில் பலவீனமடைந்திருந்த பன்ஹாலா கோட்டையை பீஜாப்பூர் படை தீவிரமாகத் தாக்கிப் போராடிய போது சிவாஜியின் சிறு படையால் தொடர்ந்து  தாக்குப்பிடிக்க முடியவில்லை.  கடைசியில் கோட்டையை விட்டுக் கொடுத்துச் சரணடைந்தார்கள். முதல் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் இரட்டிப்பு உற்சாகம் அடைந்த பீஜாப்பூர் படை அடுத்தடுத்து சிவாஜி பிடித்திருந்த சிறு கோட்டைகளைக் கைப்பற்றியது. சிவாஜி சமீபத்தில் பிடித்திருந்த ஆறு கோட்டைகளில் விஷால்கட், ரங்க்னா என்ற இரண்டு கோட்டைகள் தவிர மற்ற கோட்டைகள் அலி ஆதில்ஷாவின் வசமாயின.

இந்தத் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக விஷால்கட்டில் இருந்த சிவாஜியிடம் சென்றடைந்தன. வெற்றி மீது வெற்றி மட்டுமே பெற்று வந்தவர்கள் இப்படி நான்கு கோட்டைகளைத் தொடர்ந்து இழக்க நேர்ந்ததில் சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும் கவலையடைந்தார்கள். ஆனால் அவர்களைப் போல சிவாஜி கவலைப்பட்டதாகத் தெரியாதது அவர்களைத் திகைக்க வைத்தது. ஒன்றுமே சொல்லாமல் அந்தத் தோல்விகளைச் சாதாரணமாக சிவாஜி எடுத்துக் கொண்டதில் வருத்தமடைந்த சில இளம் படைத்தலைவர்கள் ”ஏதாவது சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.


சிவாஜி ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். “பொறுங்கள்”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Now what new strategy Sivaji is going to use? I admire his coolness.

    ReplyDelete
  2. அலி ஆதில்ஷா ஒன்றன்பின் ஒன்றாக கோட்டைகளை கைபற்றி வருகிறான்... சிவாஜியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  3. மராட்டிய புலி பதுங்குகிறது

    ReplyDelete