என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 15, 2026

யோகி 160

டாக்டரும் டாமியும் சேர்ந்து வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்த கூர்க்கா அவசர அவசரமாக வெளிக் கதவைத் திறந்து வைத்தான். எப்போதும் கார் ஏறி ஓடித் தப்பிக்கும் டாக்டர் இன்று காரில் ஏறவும் மறந்தார். தெருவில் ஒரு கூலித் தொழிலாளி நன்றாகக் குடித்து விட்டு அப்போது தான் தள்ளாடி நடந்து வந்து அவர் வீட்டருகே நெருங்கியிருந்தான். வெளியே வந்த டாமி அந்தக் குடிகாரன் மீது பாய அவன் தடுமாறிக் கீழே விழுந்தான். சமாளித்து எழுந்து ஓடிய அவன் சில அடி தூரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தான். ஆயுதம் கண்டவுடன் அவனுக்கு வீரமும் வந்தது. கற்களை எடுத்து சரமாரியாக நாய் மீது அவன் வீச ஆரம்பித்தான். அடிபட்ட நாயை விட அதிக ஆக்ரோஷத்தில் சுகுமாரன் அவனை நோக்கிப் பாய்ந்து வர அவன் கற்களை அவர் மீதும் எறிய ஆரம்பித்தான். கூர்க்காவும், மற்றவர்களும் சேர்ந்து குடிகாரனைக் கட்டுப்படுத்துவதற்குள் சுகுமாரனும், நாயும் படுகாயப்பட்டிருந்தனர்.  

 

ழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே அறை வாசலில் வந்து கண்ணன் நின்றது முக்கியத் தகவலைச் சொல்ல என்பது பாண்டியனுக்குப் புரிந்தது. பாண்டியன் பார்வையாலேயே கேட்டார். ’என்ன?’

 

கண்ணன் சொன்னார். “டாக்டர் சுகுமாரன் படுகாயப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த நாய்க்கும் படுகாயமாம்.”

 

என்ன ஆச்சாம்?”

 

நடுராத்திரில யாரோ குடிகாரன் அவங்க ரெண்டு பேர் மேலயும் கல்லெடுத்து சரமாரியாய் எறிஞ்சிருக்கான். அந்த நேரத்துல இவர் ஏன் வெளியே போனார்னு தெரியலைஆஸ்பத்திரில அவருக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வெச்சு தான் சமாளிச்சுகிட்டு வர்றாங்க. முழிப்பாய்டுச்சுன்னாமண்டை ஓடு…. மண்டை ஓடுன்னு அவர் கத்தறாராம்.”

 

பாண்டியன் திகைப்புடன் கண்ணனைப் பார்க்க, கண்ணன் சொன்னார். “டாக்டரோட மனைவி அவரோட தாயத்தையும், நாயோட தாயத்தையும் வெட்டி விட்டுருக்காங்க போலருக்குடாக்டருக்குக் காயம் பலமாய் பட்டுருக்குன்னு சொன்னாலும் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது மனப்பிராந்தி தானாம். பைத்தியமே பிடிச்சுடுச்சுன்னு டாக்டர்கள் அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்களாம்.”

 

பாண்டியன் அதிர்ந்தார். இன்னும் சில நாட்களில் ஒரு மண்டல காலம் முடியப் போகிறது. அவர் அணிந்திருக்கும் தாயத்தின் சக்தியும் காலாவதியாகப் போகிறது. திரும்பவும் பூஜை செய்து தாயத்து கட்டிக் கொண்டால் ஒழிய அவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. தேவானந்தகிரியோ அன்று அலைபேசியில் அழைத்த போது எடுக்கவில்லை. பத்து லட்சம் ரூபாய் அவர் முன்பணமாகவே கொடுத்திருக்கிறார். முன்பணம் வாங்கிக் கொண்ட அந்த மனிதர் யோகாலயத்தைப் பற்றி மோசமான செய்திகள் வர ஆரம்பித்தவுடன் தொடர்பினை வெட்டிக் கொள்ள நினைத்தது அயோக்கியத்தனம். ஆனால் அவரை வாய்விட்டுத் திட்டி மிரட்டுவது உசிதம் அல்ல. பாண்டியனுக்குக் காரியம் ஆக வேண்டும். அதனால் ஆரம்பத்தில் அமைதியாகப் பேசிப் பார்க்க வேண்டும். அதன் பின் தான் மிரட்டல், அடிதடி, அச்சுறுத்தல், கடத்தல் எல்லாமே

 

பாண்டியன் தேவானந்தகிரியை அலைபேசியில் அழைத்தார். இந்த முறை தேவானந்தகிரி அலைபேசியை எடுத்துப் பேசினார். யோகாலயத்திற்கு எதிரான செய்திகள் நின்று, இப்போது பிரச்சினை இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, எடுத்துப் பேசுகிறார் என்பதை பாண்டியன் அனுமானித்தார். மனதிற்குள் எழுந்த ஆத்திரத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசினார். “என்ன சுவாமிஜி நான் நாலைந்து நாள் முன்னால பல தடவை கூப்பிட்டேன். உங்க கிட்டே பேச முடியலையே

 

என்னோட மொபைல் ரிப்பேர் ஆகியிருந்துச்சு. நேத்து தான் சரியாச்சுஎன்று தேவானந்தகிரி சொன்னது எத்தனை உண்மை என்று பாண்டியனுக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மை என்று நம்புவது போல் நடித்து ஒன்றுமே ஆகிவிடவில்லை என்பது போல் தான் இதைத் தொடர வேண்டியிருந்ததால் பாண்டியன் இயல்பாய் பழைய நட்புடனேயே பேசினார். “அன்னைக்கு நீங்க உங்க ஆளை அனுப்பினது நல்லதாய்ப் போச்சு சுவாமிஜி. உங்கள் ஆள் வர்ற வரைக்கும் நாங்க அந்தப் பையனை ரொம்பவே நம்பியிருந்தோம். அப்புறம் உஷாராயிட்டோம். ஆனால் ஏற்கெனவே அவன் ஹைத்ராபாத்ல ஒரு கேஸ்ல சிக்கியிருந்தான். அதனால அங்கேயிருந்து வந்த போலீஸ் அவனைக் கூட்டிகிட்டு போய்ட்டாங்க

 

தேவானந்தகிரி அதிர்ச்சியடைந்தார். பாண்டியன் ஒரு மண்டல காலம் முடிவடையப் போவதைச் சொன்னார். முடியும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே அடுத்த பூஜை செய்து புதிய தாயத்து அணிந்து கொள்வது உசிதமென்று நினைப்பதாகச் சொன்னார்.

 

தேவானந்தகிரி தயக்கத்துடன் சொன்னார். “நல்லது தான். ஆனால் போன தடவை மாதிரி யாராவது ஏதாவது செய்துட வாய்ப்பிருக்கு.”

 

நீங்கள் வர்ற நாளைச் சொல்லுங்க சுவாமிஜி. நான் ஒரு நாள் முன்னதாகவே உங்க பாதுகாப்புக்கு என் ஆள்களை அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்துடுவாங்க.”

 

தேவானந்தகிரி திருப்தியுடன் சம்மதித்தார். பாண்டியன் டாக்டர் சுகுமாரனின் நிலைமையைச் சொல்வதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார்.  முன்பே சற்று தயக்கம் காட்டும் தேவானந்தகிரி, சுகுமாரன் நிலைமையைக் கேட்டு பயந்து போய் பின்வாங்கினால் அது பிரச்சினையாகி விடும் என்று பாண்டியன் நினைத்தார். தேவானந்தகிரி இங்கே வரும் நாளில், சுகுமாரனை இங்கே கூட்டிக் கொண்டு வரும் நிலைமை இருந்தால் கூட்டிக் கொண்டு வருவது, இல்லா விட்டால் அவர் விதி அவ்வளவு தான் என்று விட்டு விடுவது என்று அவர் முடிவு செய்திருந்தார்.  அதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை.

 

ஷ்ரவன் தேவானந்தகிரி-பாண்டியன் பேசிக் கொண்டதைக் கேட்டான். சைத்ரா வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டார்கள். செல்வம் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். டாக்டர் சுகுமாரனுடைய நிலைமையும் தீவிரமாகிக் கொண்டு தான் இருந்தது. காயங்களின் கடுமையை விட அவர் காணும் காட்சிகள் கூடுதல் கொடுமையாக இருந்தன. மண்டை ஓட்டையும், காவித் துணி எரிவதையும் பார்த்து பார்த்து அவர் திகிலடைகிறார். தொடர்ந்து தாயத்து கேட்பதால் இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு தாயத்துகள் கட்டியிருக்கிறார்கள். அவருடைய மனைவி ஆஸ்பத்திரி டாக்டர்களிடம்உங்கள் எம். டியின் பைத்தியத்தை முழுவதுமாய் குணப்படுத்திய பிறகு வீட்டுக்கு அனுப்பினால் போதும். அதுவரை நீங்களாச்சு, அவராச்சுஎன்று நிர்த்தாட்சணியமாய்க் கூறிவிட்டாளாம். ஆஸ்பத்திரியில் நர்ஸ்களும், அட்டெண்டர்களும் அவரை நெருங்கவே பயப்படுகிறார்களாம். எனவே சுகுமாரனுடைய நிலைமையும் தீவிரத்தை எட்டும்படியாகவே இருக்கின்றது.

 

தேவானந்தகிரி பூஜை செய்து தாயத்து கட்டினால் 48 நாட்கள், 48 நாட்கள் என்று தொடர்ந்து பாண்டியன் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் நிலைமை தொடரும். தாயத்து கழன்ற பின் சுகுமாரனின் நிலைமையைப் பார்த்த ஷ்ரவனுக்கு, இந்தப் பூஜை தொடர முடியாமல் போவது பாண்டியனுக்குக் கிடைக்க முடிந்த சரியான தண்டனை என்று தோன்ற ஆரம்பித்தது. தேவானந்தகிரியோ லட்சங்களுக்கு விலை போய்க் கொண்டிருக்கிறார். ஷ்ரவன் யோசித்து, முடிவில் தேவானந்தகிரியை நேரில் சந்திப்பது என்று முடிவு செய்தான்.

 

தேவானந்தகிரி தன் எதிரே வந்து வணங்கி நின்ற வாட்ட சாட்டமான இளைஞனை, புதிய வாடிக்கையாளர் என்று நினைத்து வரவேற்றார். ஒரு நாளில் மூன்று ப்ரஷ்னம், ஒரு பெரிய பூஜைக்கு மேல் அதிகம் செய்வதில்லை என்றும், அதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு அனைத்து நாட்களிலும் முன்பதிவு ஆகியிருக்கிறது என்றும் சொன்னார்.

 

ஷ்ரவன் சொன்னான். “நான் ப்ரஷ்னம், பூஜைக்காக வரவில்லை சுவாமிஜி. உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்தேன்.”

 

தேவானந்தகிரி அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று புரியாமல் திகைப்புடன் அவனைப் பார்த்தார். ஷ்ரவன் சொன்னான். “சில நாள்களுக்கு முன்னால் உங்கள் வலது கால் கட்டைவிரலில் ஆன காயம் நான் அனுப்பிய ஆளால் ஆனது. அதற்காகத் தான் மன்னிப்பு கேட்க வந்தேன்.”

 

தேவானந்தகிரியின் முகத்தில் பயம் தெரிந்தது. சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு வரவழைக்கலாமா என்று அவர் யோசிப்பது தெரிய ஷ்ரவன் சொன்னான். “காலை மிதிச்ச சின்ன தப்புக்கே மன்னிப்பு கேட்க வந்தவன், பெரிய தப்பை எல்லாம் செய்ய மாட்டான் சுவாமிஜி. நீங்க பெரிய மனசு பண்ணி நான் சொன்னதை எல்லாம் கேட்கணும். அப்புறம் நீங்க என்ன முடிவு வேணும்னாலும் செய்துக்கலாம். எங்க பக்கத்துல இருந்து இனி எந்த சின்ன பிரச்சினையும் உங்களுக்கு வராது…”


(தொடரும்)

என்.கணேசன்







No comments:

Post a Comment