பாண்டியன் பிரம்மானந்தாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல்
சொன்னார். “அந்தத் திருட்டு அயோக்கியனைக் கொன்னது சரிதான் யோகிஜி. அது மத்தவங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கும். அதைச் செய்யலைன்னா
நம்ம பினாமிகள் எல்லாரும் அவங்கவங்க கைவரிசையைக் காண்பிக்கப் பார்க்கலாம். ஆசை யாரை விட்டுது யோகிஜி. இப்போ உயிருக்குப் பயந்த எவனும்
நம்மள ஏமாத்த பயப்படுவான். நாம
எப்பவுமே அந்தப் பயத்துல அவங்க எல்லாரையும் வெச்சிருக்கறது முக்கியம். அந்த அயோக்கியனைக் கொன்னு இங்கேயே புதைச்சது
தான் தப்பாய் போச்சு.
வேறெங்கேயாவது அதை நான் செஞ்சிருக்கணும். இல்லாட்டி நான் வேறெதாவது வழியில கொன்னிருக்கணும். அது தான் தவறு. இப்ப நாம தோண்டறதுக்கு கோர்ட்ல தடையுத்தரவு வாங்கறதுல இருந்து நிறைய செய்யலாம். தோண்டறத தள்ளிப் போடலாம். ஆனால் அதை நிரந்தரமாய் தடுத்துட முடியாது யோகிஜி. இதுல குறைந்த பட்ச சேதாரத்தோட நாம தப்பிக்கணும்னா
ஒரு பலியாடு கண்டிப்பாய் தேவை. அதுக்கு
ஆள் ரெடியாய் இருக்கான்.”
“யாரது?” பிரம்மானந்தா
ஆவலுடன் கேட்டார்.
“நம்ம சுந்தரகுரு. அவன் பேர்ல தான் சந்திரமோகனோட
சொத்தை நாம மாத்தியிருக்கோம். அதனால அவனைச் சொன்னால் அது நம்பற
மாதிரி இருக்கும். அவன் இருக்கற ஃப்ளாட்டை அவனுக்கு வாங்கித் தர்றதாவும், அவன் ஜெயில்ல
இருக்கறப்ப அவன் குடும்ப செலவை ஏற்றுக்கறதாவும் சொல்லியிருக்கேன். அவன் சரின்னுட்டான். அவனுக்கு
உதவினதாய் நம்ம ஆள்கள் ரெண்டு பேரையும் தயார்ப்படுத்திட்டேன். அவங்களுக்கு
பத்து லட்சம் ரொக்கமும், அவங்க ஜெயில்ல இருந்து திரும்பி வர்ற வரைக்கும் குடும்ப செலவைக்
கவனிச்சிக்கறதாவும் சொல்லி அவங்களும் ஒத்துகிட்டாங்க. அதனால இனி
நீங்கள் முதல்வர் உத்தரவுல கையெழுத்து போடற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். நீங்களே
தோண்ட முடிவு பண்ணினதா அறிக்கை விடுங்க. நீங்களே போலீஸைக்
கூப்பிட்டுத் தோண்டச் சொல்லுங்க. பிணம் கிடைச்சவுடனே நீங்க அதை நம்ப முடியாத மாதிரியும், உங்களுக்கு
ஒன்னும் தெரியாத மாதிரியும் நடிங்க. நானும் அப்படியே
நடிக்கறேன். அவங்களை ரொம்ப நம்பி மோசம் போனதாய் சொல்லுவோம். அவங்களும்
நமக்குத் தெரியாமல் எல்லாம் பண்ணினதாய் போலீஸ் கிட்ட வாக்குமூலம் தருவாங்க. சட்டத்துக்கு
வேண்டியது குற்றவாளிகள். நாமளே தயார் செஞ்சு குடுத்துடுவோம்.”
பிரம்மானந்தாவுக்கு பாண்டியனை எண்ணி
வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரச்சினைகள் எழுந்தவுடனேயே அதற்கான தீர்வுகளையும் கண்டுபிடித்து
செயல்படுவது எல்லாருக்கும் எளிதல்ல. சுந்தரகுருவையும், மற்ற இருவரையும்
குற்றத்தை ஏற்றுக் கொள்ள பேரம் பேசி சம்மதம் வாங்கி இருப்பதும் பாண்டியனின் தனித்திறமை தான்.
”பணமிருந்தா இந்த உலகத்துல எத்தனையோ செய்யலாம். ஏன்னா
பணம் தேவைப்படறவங்க எல்லாத் துறையிலயும் நிறைய இருக்காங்க. அவங்களுக்குத்
தேவைகளும் நிறைய இருக்கு. அதைப் பயன்படுத்திட்டு ஜெயில்ல கூட அவங்களை வசதியாய் இருக்க
வைக்கலாம். பணத்தால தண்டனைக்காலத்தை குறைச்சுக்கவும்
முடியும். ஏதாவது
தலைவர் பிறந்த நாள்ல நன்னடத்தை காரணம் சொல்லி அவங்களை விடுதலை செய்ய வைக்கவும் முடியும். எத்தனையோ வழிகள் இருக்கு
யோகிஜி. அதெல்லாத்தையும் கூட ஒரு கை பார்த்துட வேண்டியது தான்…”
பாண்டியனின் ஆட்கள் அவரிடம் ஏன் அத்தனை விசுவாசமாய் இருக்கிறார்கள்
என்பது பிரம்மானந்தாவுக்குப் புரிந்தது.
பணத்தைத் தூக்கி எறிந்து விடுவதோடு அவர் நின்று விடுவதில்லை.
அவர்கள் கூடுமான அளவு சௌகரியமாக இருக்கவும் பாண்டியன் யோசிக்கிறார்.
சற்று முன் வரை இருந்த மன பாரம் பிரம்மானந்தாவுக்குப் பாதியாகக் குறைந்தது.
இப்போதும் அதிகப்பிரசங்கிகள் சிலர் அவரைக் கிண்டல் அடிப்பார்கள்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு, யோகாலயத்திற்குள்
நடக்கும் கொலையே தெரியவில்லை என்று விமர்சனம் செய்வார்கள். அது
கொஞ்சம் அவமானம் தான். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்…
அடுத்த நாள் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் செய்தியாளர்களையும், ஊடகங்களையும்
மிகுந்த பரபரப்பில் இருக்க வைத்தன. யோகாலயமே முக்கிய
பேசுபொருளாக அமைந்தது. அதிகாலையில் பிரம்மானந்தா போலீஸாருக்கு விடுத்த வேண்டுகோள்
வெளியானது. எந்த உண்மையையும் மறைக்கும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்றும், அதை நிரூபிக்கும்
வண்ணம் போலீஸாரிடம் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்ட
இடத்தில் தோண்டிப் பார்த்து உண்மையை அறிய வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதைப் படித்தவுடனேயே ஷ்ரவன் ராகவனிடம்
சொன்னான். “இனி இதைத் தவிர்க்க முடியாதுன்னு தெரிஞ்சவுடனேயே ஒரு பலியாடை
தயார் செய்துட்டாங்க போலருக்கு.”
பிரம்மானந்தாவின் அறிக்கையைப் பலரும்
சிலாகித்துப் பேசும்படி யோகாலயம் பார்த்துக் கொண்டது. மதியம்
யோகாலயத்திற்குள் போலீஸ் படை மோப்ப நாயுடன் உள்ளே புகுந்தது. மோப்ப நாய்
சந்திரமோகன் புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்று குரைக்க ஆரம்பிக்க அங்கே போலீஸார்
தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சந்திரமோகனின் அழுகிப் போன பிணத்தை வெளியே
எடுத்தனர்.
அதன் பின் “சுந்தரகுரு
ஒப்புதல் வாக்குமூலம்” வெளியாகியது. அவனிடமிருந்து பணத்தை
வாங்கிக் கொண்டு நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்திருந்த சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்
சந்திரமோகன், பின் மறுத்து விட்டதாகவும், பின் மிரட்டி
தான் அந்தச் சொத்தைத் தன் பெயருக்கு மாற்ற முடிந்ததாகவும், மாற்றிய
பின்பும் அவர் ஏமாற்றிய கோபம் தணியாததால் சந்திரமோகனைக்
கொன்று விட்டதாகவும், சுந்தரகுரு ஒப்புக் கொண்டிருந்தான். இதை அவனும், அவனது இரண்டு
நண்பர்களும் யோகாலயத்தில் வேறு யாருக்கும் தெரியாமல் செய்ததாகவும் அவன் வாக்குமூலம்
தந்தான். இந்தக்
கொலை பற்றி வைரலாக வலம் வரும் ஒலிப்பதிவு சொல்லும் மற்ற தகவல்கள் பொய்யானவை என்றும்
அவன் கூறினான். அதை பாண்டியனும் போலீஸாரிடம் சொல்லி, வேண்டுமானால்
யோகாலயத்தில் உள்ள அத்தனை பெண் துறவிகளின் குரல்களையும் பதிவு செய்து அவர் சொல்வது
உண்மை என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் உறுதியாகச் சொன்னதும் வெளியானது.
வெறும் ஒரு கொலையை மட்டும் ஒத்துக்
கொண்டு, யோகாலயம் புத்திசாலித்தனமாய் மற்ற கொலைகளில் இருந்து கழன்று
கொண்டதை ஷ்ரவன் கவனித்தான். யோகாலயத்திற்கு அழுத்தம் தர அவன்
உருவாக்கிய வைரல் ஒலிப்பதிவில் உள்ள பலவீனத்தை பாண்டியன் சாமர்த்தியமாய் தங்களுக்குச்
சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதையும் ஷ்ரவன் கவனித்தான்.
தொடர்ந்து
‘யோகி பிரம்மானந்தா பேரதிர்ச்சி!” என்ற தலைப்பில்
செய்திகள் வெளியாயின. பல ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்து வந்த
இந்த ஊழியர்களை அவர் முழுவதுமாக நம்பி இருந்ததாகவும், அதனால்
தான் இந்தக் கொலை சம்பந்தமாக முதலில் வந்த செய்திகளை அவர் மறுத்துச் சொன்னதாகவும் யோகி
பிரம்மானந்தா ஆழ்ந்த வருத்தத்துடன் சொன்னதை ஷ்ரவன் தொலைக்காட்சியில் பார்த்தான்.
”குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்
எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வெறும்
வாயை மென்று கொண்டிருந்த எதிரிகளுக்கு அவலாய் இந்தச் செய்தி கிடைத்து விட்டது கசப்பாய்
தான் இருக்கிறது என்றாலும், சத்திய வழியில் நடந்து கொண்ட நிறைவு எனக்கிருக்கிறது.” சொல்லச்
சொல்ல அவர் குரல் உடைந்தது.
பெரிய ஜுவாலையாய் ஆரம்பித்த அக்னி சட்டென்று
ஒன்றுமில்லாததாய் அணைந்தது. யோகாலயத்தின் வெளி கேட்டுக்கு முன்னிருந்த கூட்டம் கலைந்தது. யோகாலயத்தின்
எதிரிகள் உண்மைக் கொலையாளிகள் தப்பித்து, பாவப்பட்ட ஊழியர்கள்
தலையில் கொலைப்பழி விழுந்திருக்கிறது என்று விமர்சித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. சுந்தரகுரு பெயரில் சந்திரமோகனின்
சொத்து மாறியிருந்த ஆவணங்கள் சுந்தரகுருவின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ஆதரவாய் இருந்தது. அதனால் எதிரிகள் சர்வசக்தி உள்ளவராய் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரம்மானந்தாவுக்கு, சொந்த இடத்தில் நடந்த கொலை கூடத் தெரியாமல் போனது
எப்படி என்ற கிண்டலோடு திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
குற்றவாளிகள் எந்தச் சேதாரமும் இல்லாமல்
தப்பித்துக் கொண்டது ஷ்ரவனுக்கு அதிருப்தி அளித்தது. அவன் எடுத்துக்
கொண்ட எந்த வழக்கிலும் இதுவரையில் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டதில்லை. முதல் முறையாக
இப்போது இந்தக் குற்றவாளிகளிடம் தோற்று புதிய வரலாறு படைக்க விரும்பவில்லை.


Sir, How many episodes are pending. Thanks
ReplyDelete