என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 22, 2026

சதுரங்கம் 41

 


அர்ஜுன் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது பானுமதியும், நித்யாவும் சமையலறையில் சமையலைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இப்போதெல்லாம் நித்யா அம்மாவிடம் நிறைய பேச்சுக் கொடுக்கிறாள். முன்பெல்லாம் அம்மாவிடம் அதிகமாக வம்பிழுக்கும் அவள், இப்போதெல்லாம் அம்மாவிடம் சற்று அதிக அனுசரணையோடு நடந்து கொள்கிறாள். எல்லாம் அர்ஜுன் சொல்லித் தான்.

 

அவன் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் நிறைய உளவியல் நிபுணர்களின் கட்டுரைகளையும், பேட்டிகளையும் படித்தும், கேட்டும் வருகிறான். இளம் வயதில் நடந்த கொடூர நிகழ்வுகளால் உளவியல் ரீதியாகப் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு குடும்பத்தினர் எந்த வகையில் எல்லாம் ஆதரவு தர வேண்டும், அவர்களைக் குணப்படுத்த தங்கள் பங்குக்குக் குடும்பத்தினர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு அவன் அதிகக் கவனம் தந்தான். எல்லோரும் ஒருமித்துச் சொல்லும் கருத்துகள் சில இருந்தன. அதன் குறிப்புகளை அர்ஜுன் ஒரு தாளில் வரிசையாக எழுதி வைத்தான்.

 

‘அவர்கள் தனிமையில் மனம் புழுங்கி இருக்க விடாதீர்கள். அவர்களிடம் அதிகம் பேசுங்கள். நிபந்தனைகள் அற்ற பேரன்பு காட்டுங்கள். அவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காதீர்கள். என்ன நடந்திருந்தாலும் சரி, இனி என்ன நடந்தாலும் சரி நாங்கள் உன்னை ஏற்றுக் கொள்கிறோம், நாங்கள் உன்னுடன் இருக்கிறோம் என்பதை வார்த்தைகளாலும், செயல்களாலும் அவர்களுக்குப் புரிய வையுங்கள். எந்த விதத்திலும் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் எந்த பாரமும், அன்பானவர்களுடன் சேர்ந்து சுமக்கையில் இலகுவாகின்றது. எந்த சந்தோஷமும் அன்பானவர்களுடன் சேர்ந்து அனுபவிக்கையில் இரட்டிப்பாகிறது.’

 

முன்பெல்லாம் நித்யா மட்டுமே அம்மாவிடம் ஓரளவு பேசிக் கொண்டிருந்தவள். அதிலும் அம்மாவிடம் வம்பிழுத்து சண்டை போட்டது தான் அதிகம்.    அப்பா எப்போதும் அதிகம் பேசுபவர் அல்ல. அர்ஜுனும் அம்மாவிடமிருந்து விலகியே இருந்திருக்கிறான். அதற்கு அம்மா தான் காரணம் என்றாலும் அம்மா அப்படி விலக அவன் அனுமதித்திருக்கிறான். அதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில் இத்தனை நாட்களாக இந்த வீட்டில் நடந்த தவறு, அம்மாவை தனியாக அவள் உலகில் மனம் புழுங்கி வாழ விட்டது தான் என்பதைக் கண்டுபிடித்து அர்ஜுன் நித்யாவிடம் சொல்லியிருந்தான்.

 

அதைக் கேட்டுக் கொண்ட நித்யா அம்மாவின் சில சமய தந்தி வார்த்தைகளையும் மீறி இப்போதெல்லாம் அம்மாவைப் பேச வைக்கிறாள். அறிவார்ந்த விஷயங்கள் அம்மாவிடம் பேச முடியாது என்பதால் அவள் அம்மாவிற்கு நன்றாகத் தெரிந்த சமையல் பற்றி அதிகம் பேசுகிறாள். அதே போல் தான் அர்ஜுனும் வலியச் சென்று ஏதாவது கேட்கிறான், பேசுகிறான். நித்யாவிடம் சகஜமாகப் பேசமுடிந்தது போல் அம்மாவுக்கு அர்ஜுனிடம் சகஜமாகப் பேச முடியவில்லை. அவன் முன்னால் நின்றிருக்கையில் அவள் படபடப்பாக இருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த ஒருவாரமாக அவன் அவளிடம் பேசுகிறான். முன்பை விட அம்மாவிடம் இறுக்கமும், படபடப்பும் குறைந்திருப்பதை அவனால் பார்க்க முடிகிறது.

 

இது போல் தொடர்ந்தால், அந்த உளவியல் நிபுணர்கள் கூறுவது போல் அம்மா என்றாவது ஒரு நாள் தானாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூண்டிலிருந்து வெளியே வரலாம், அவளுடைய மனபாரத்தை தன் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம், …. அதைத் தான் அவனும் நித்யாவும் எதிர்பார்க்கிறார்கள்….

 

நித்யா இரவு உணவு வேளையின் போது தந்தையைக் கேட்டாள். “அப்பா நீங்க இமயமலைக்கு வருஷா வருஷம் போறீங்களே. அங்கே பாபாஜியைப் பார்த்திருக்கீங்களா?”

 

“இல்லைம்மா” என்றார் ஞானமூர்த்தி.

 

அவராகத் தொடர்ந்து தன் இமயமலைப் பயண அனுபவங்களைச் சொல்வார் என்று எதிர்பார்த்த நித்யா ஏமாந்து போய் அண்ணனைப் பார்த்தாள். அர்ஜுன் மெலிதாகப் புன்னகைத்தான்.

 

நித்யா தந்தையிடம் அடுத்த கேள்வியைக் கேட்டாள். “பாபாஜி மாதிரி எதாவது மகான், யோகி யாரையாவது பார்த்திருக்கீங்களா அப்பா?”

 

ஞானமூர்த்தி மகளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “என்ன திடீர்னு அப்பாவோட இமயமலைப் பயணம் பற்றியும், மகான்கள், யோகிகள் மேலயும் உனக்கு ஆர்வம் வந்திருக்கு?”

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. அப்பாவைப் பேச வைப்பது சுலபமான காரியம் அல்ல. கேட்கும் கேள்விகளுக்குப் பல சமயங்களில் ஒற்றைச் சொல் அல்லது ஒரு வாக்கியப் பதில் தான் அவரிடமிருந்து வரும். சில சமயங்களில் எதிர்க் கேள்வியும் வரும்.  திறமையான வக்கீலான அவரை யாரும் அனாவசியக் கேள்விகள் கேட்டு சுலபமாகப் பதில்களை வாங்கிவிட முடியாது.

 

நித்யா அவருடைய மகள் என்பதால் அவளுக்கும் சில விசேஷத் திறமைகள் உண்டு.  அவள் அறிய நினைக்கும் விஷயங்களைச் சொல்லாமல் ஒருவர் விலகிப் போய்விட முடியாது. அவள் சொன்னாள். “நான் யோகியின் சுயசரிதை புஸ்தகம் படிச்சுட்டு இருக்கேன். அதனால திடீர்னு அதில் ஆர்வம் வந்துடுச்சு அப்பா.”

 

ஞானமூர்த்தி மகளை புன்னகையுடன் பார்த்தார்.  ஆனால் இம்முறை அவர் பதில் சொல்லாமல் தவிர்க்கவில்லை. “பார்த்திருக்கேன்.”

 

நித்யா தந்தையை முறைத்தாள். “இனி அதைத்தனியாய் நான் கேட்கணுமாக்கும். இதெல்லாம் உங்க பொண்டாட்டியோட ட்ரெய்னிங்கா? இல்லை நீங்க சொல்லிக் குடுத்து அவங்க கற்றுகிட்டாங்களா? கேள்வி கேட்டா விளக்கமா பதில் சொல்ல மாட்டீங்களாக்கும்?”

 

பானுமதி நித்யாவைத் திட்டினாள். “இதுல என்னை ஏன் இழுக்கறேடி?”

 

நித்யா தாய்க்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. தந்தையையே பார்த்தாள். அவர் மகளின் பேச்சை ரசித்த மாதிரி தெரிந்தது. பின் சொல்ல ஆரம்பித்தார். “இமயமலைல மகான்கள், சித்தர்கள், யோகிகள் மட்டுமில்லாமல் நீ எல்லா விதமான ஆள்களையும் பார்க்கலாம் நித்யா. உண்மையான துறவிகள், போலித் துறவிகள், கஞ்சா சாமியார்கள், இமயமலையோட அழகைப் பார்க்க வர்றவங்க, அமைதி தேடி வர்றவங்க இப்படி சொல்லிகிட்டே போகலாம். சில பேர் பெரிய மகானாய் இருப்பாங்க. ஆனால் எந்த அற்புத சக்தியையும் வெளிப்படுத்த மாட்டாங்க. சில பேர் சில அபூர்வ சக்திகளை வெச்சிருப்பாங்க. அதை வெளிப்படுத்துவாங்க. ஆனால் அவங்களை மகான்களாவோ, சித்தர்களாகவோ சொல்ல முடியாது. நான் எல்லா விதமானவங்களையும் பார்த்திருக்கேன்.”

 

“தந்தையே தங்கள் நீண்ட பதிலை மெச்சினோம். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்தால் மகிழ்ச்சியடைவேன்.”

 

பானுமதி மகளைத் திட்டினாள். “என்னடி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அப்பா கிட்ட பேசறே?’

 

“இதை விட எப்படி மரியாதையாய்ப் பேசறது?” என்று நித்யா கேட்டாள். அதற்கு என்ன சொல்வதென்று பானுமதிக்குத் தெரியவில்லை.

 

ஞானமூர்த்தி சிரித்தபடி மகளிடம் சொன்னார்.  ”நீ அறிய விரும்புவதற்குக் கூடுதலாக அல்லவா நான் பதிலளித்திருக்கிறேன் மகளே”

 

“கூடுதல் பதில் என்பதே குழப்பத்தை ஏற்படுத்தும் தந்தையே. அதனால் கேட்டதற்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது.”

 

அர்ஜுனும், ஞானமூர்த்தியும் வாய்விட்டுச் சிரிக்க பானுமதி புன்னகைத்தாள். அந்த ஒரு கணத்தில் தன்னுடைய குடும்பம் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்திற்கு உதாரணமாக அர்ஜுனுக்குத் தோன்றியது. ஆனால் இது போன்ற கணங்களை உருவாக்க ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபராவது இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை வெளிக்கொணர வேண்டும். இந்தக் குடும்பத்தில் அதற்கு நித்யா இருக்கிறாள். 

 

ஞானமூர்த்தி சொன்னார். “உனக்கு என்னம்மா தெரிஞ்சுக்கணும்?”

 

“அபூர்வசக்தி வாய்ந்த யாரையாவது பார்த்திருக்கீங்களாப்பா? அவங்களப் பற்றி மட்டும் சொன்னால் போதும். கஞ்சா அடிக்கறவனையும், போலிகளையும் இங்கேயே பார்க்கறோமே.”

 

ஞானமூர்த்தி ஒரு கணம் மகளைத் தாண்டி வெற்றிடத்தைப் பார்த்தார். பின் சொல்ல ஆரம்பித்தார். ”முதல் தடவை இமயமலைக்குப் போகறப்பவே நீ சொல்கிற மாதிரி ஒருத்தரைப் பார்த்தேன்ம்மா. அப்போ உன் தாத்தாவும் உயிரோட இருந்தார். நீ பிறக்கலை. அண்ணன் மட்டும் தான் பிறந்திருந்தான். நானும் என் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து இமயமலைல ட்ரெக்கிங் போயிருந்தோம். நல்ல குளிர் அங்கே. நாங்க எல்லாம் ஸ்வெட்டர், ஜெர்க்கின்ஸ், தலைல குல்லாய், கைல க்ளவுஸ்  எல்லாம் போட்டுகிட்டு இருந்தோம். ரொம்ப தூரம் போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துகிட்டோம். அப்படி உட்கார்ந்திருக்கறப்ப எனக்கு திடீர்னு எழுந்து போகணும்னு ஒரு உந்துதல் வந்துச்சு. அது ஏன் வந்துச்சுன்னு எனக்கே புரியலை. அதுவும் ஒரு பக்கமாய் போய்ப் பார்க்கத் தோணுச்சு.”

 

அவர் சொல்வதை மூவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment