யுவராஜை அவர்கள் மரப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து கட்டவிழ்த்து
விட்டார்கள். ஒருவன் கட்டவிழ்க்க, இரண்டு
பேர் துப்பாக்கி பிடித்தபடி சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். அவன் என்னேரமும்
அவர்கள் மீது பாயலாம் என்று அவர்கள் பயப்பட்டது போல் இருந்தது. ஆனால் உண்மையில்
அவனுக்கு எழுந்து நிற்கவும் உடலில் பலம் இருக்கவில்லை. அவனுடைய
கைகால்கள் மரத்துப் போயிருந்தன. பேச வாயைத் திறந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. தொண்டை
வறண்டு போயிருந்ததோடு வலிக்கவும் செய்தது. அவன் தண்ணீர்
வேண்டும் என்று பலவீனமாக சைகை செய்தான். கட்டவிழ்த்தவன்
கண்ணால் கட்டளையிட, துப்பாக்கி பிடித்திருந்த இருவரில் ஒருவன் போய் ஒரு பாட்டிலில்
தண்ணீரும், ஒரு பிஸ்கட் பேக்கட்டும் கொண்டு வந்தான்.
கட்டவிழ்த்தவன் உருது கலந்த ஹிந்தியில்
யுவராஜிடம் சொன்னான். “முதலில் சிறிது சிறிதாக தண்ணீர் குடி. பிறகு இந்த
பிஸ்கட்களைச் சாப்பிடு. அரை மணி நேரம் கழித்து வருகிறேன். பிறகு பேசுவோம்.”
அவன் வெளியேற மற்ற இருவரும் அவன் பின்னாலேயே
போய் விட்டார்கள். அவனிருக்கும் அறையை வெளியே இருந்து அவர்கள் பூட்டிக் கொண்டனர். தாகம் மிக
அதிகமாக இருந்தாலும் அந்த ஆள் சொன்னது போல் யுவராஜ் சிறிது சிறிதாகத் தான் தண்ணீரைக்
குடித்தான். தொண்டை அதிகமாக வலித்தாலும், தண்ணீர்
உள்ளே போன பின் உடலின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தது. அவன் மெல்ல
தன் கை கால்களை அசைத்துப் பார்த்தான். ஆரம்பத்தில் அதுவும்
மிகக் கஷ்டமாக இருந்தாலும், அவன் தொடர்ந்து செய்தான். பின் ரத்த
ஓட்டம் ஓரளவு சீரடைந்ததால் சிறிது புத்துணர்ச்சி பெற்றான். பிஸ்கெட்களையும்
அவன் சாப்பிட்டான்.
பின் மெல்ல எழுந்து நடந்தபடி தானிருக்கும்
இடத்தை யுவராஜ் ஆராய்ந்தான். அது மிகச்சிறிய அறை. அதனுள்
சிறிய கழிவறையும் இருந்தது. ஜன்னல்கள் இல்லை. எங்கே இருக்கிறோம்
என்று அவனுக்குத் தெரியவில்லை. யார் அவனைக் கடத்தியிருக்கிறார்கள், ஏன் கடத்தியிருக்கிறார்கள்
என்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்த போது இது அவனால் பிடிபட்ட போதைப் பொருள்
கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று தோன்றியது.
அவனுடைய தொழிலின் ஒரு பகுதியாக இதை
ஏற்றுக் கொண்டாலும், மனைவியையும், மகனையும் நினைத்த
போது தான் அவன் மனம் கனத்தது. எந்த மாதிரியான
வாழ்க்கையை அவர்களுக்கு அவன் தந்திருக்கிறான்...
சிறிது நேரத்தில் அதே மூவர் அறைக்கதவைத்
திறந்து கொண்டு வந்தார்கள். இருவர் இப்போதும் துப்பாக்கியை அவன் மீது குறி வைத்தபடி நின்றார்கள். யுவராஜிடம்
முன்பு பேசியவன் அவனைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “உனக்கு
என்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கலாம். ஆனால் நான்
எந்தப் பதிலும் சொல்வதற்கில்லை. அதனால் கேள்விகளை உன்னிடமே வைத்துக் கொள். இப்போது
நாம் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறோம். உன்னை கராச்சி துறைமுகத்தில்
இறக்கி விடுவதற்காக மட்டுமே நான் பணம் வாங்கியிருக்கிறேன். மற்றபடி
எதிலும் எனக்கு சம்பந்தமில்லை. இன்னும் இரண்டு நாட்களில் கராச்சியில் உன்னை இறக்கி விட்டு
விடுவேன். அது வரையில் நீ பிரச்சினை எதுவும் செய்யாமல் இருந்தால் உன்னைக்
கட்டிப் போடும் அவசியம் எனக்கு இருக்காது. நேரா நேரத்திற்கு
சாப்பிடவும் ஏதாவது தருவேன். நீ முட்டாள்த்தனமாக எதாவது பிரச்சினை செய்தால் நான் உன்னை
மறுபடியும் கட்டி இந்த மரப்பெட்டிக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவேன். ஏனென்றால்
எனக்கு சமாளிக்க ஏற்கெனவே ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. உன்னுடையதையும்
சேர்த்து சமாளிக்க எனக்கு தெம்பும் இல்லை, மனமும்
இல்லை. கப்பலிலிருந்து நடந்தபடி கராச்சியில் இறங்க வேண்டுமா, இல்லை பெட்டியில்
உன்னை அங்கே இறக்க வேண்டுமா என்று யோசித்து ஒழுங்காக இரு. புரிகிறதா?”
புரிகிறது என்று யுவராஜ் தலையசைக்க, அவன் தன்
ஆட்களுடன் போய் விட்டான். அறையும் பூட்டப்பட்டது.
அரண்மனையையும் மிஞ்சிய பிரம்மாண்டமான தன்னுடைய தாய்வீட்டுக்கு
நிர்ப்பயா மகனுடன் வந்து சேர்ந்தாள். ராஜேஷ்வர் மகளை வரவேற்க கார் வரை வந்தார். காரிலிருந்து
இறங்கிய மகளைப் பாசத்துடன் தழுவி தலை உச்சியில் முத்தமிட்ட அவர் பேரனைப் பார்த்து உணர்ச்சி
வசப்பட்டார்.
நிர்ப்பயா மகனுக்கு தாத்தாவை அறிமுகப்படுத்தினாள். “நீலேஷ்
இது தான் என் அப்பா. உன்னோட தாத்தா.”
நீலேஷ் தாத்தாவை அண்ணாந்து பார்த்த
போது ராஜேஷ்வர் கண்கலங்கினார். அவருடைய பேரன் மிக அழகாக இருந்தான். பேரன்புடன்
பேரனை வாரி எடுத்துக் கொண்டார். இப்படி இவனைக் கையில் எடுத்து கொண்டாட நான் இரண்டு வருடங்கள்
எடுத்துக் கொண்டு விட்டேனே என்ற பச்சாதாபம் அவருக்குள் பலமாக எழுந்தது.
நிர்மலா வாசலிலேயே நின்றிருந்தாள். வாசல் வரை
வந்து மகளைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை என்றாலும், கார் வரை
வந்து மகளை வரவேற்க அவளுடைய கௌரவம் தடுத்தது. தாயைப்
பார்த்து நிர்ப்பயா புன்னகைத்தாள். நிர்மலாவின் கண்கள்
ஈரமாகி, அவளுக்குள் இருந்து ஒரு விம்மல் வெடித்தது.
ராஜேஷ்வரின் தோளில் இருந்த நீலேஷிடம்
நிர்மலாவைக் காட்டி நிர்ப்பயா சொன்னாள். “அது தான் என் அம்மா. உன்னோட
பாட்டி.”
நீலேஷ் பாட்டியை வேடிக்கை பார்த்தான். நிர்மலாவால்
அதற்குப் பிறகு வாசலிலேயே நிற்க முடியவில்லை. ஓடி வந்து
மகளை ஒரு கையால் அணைத்துக் கொண்டு, இன்னொரு கையால்
பேரனின் கன்னத்தை பாசத்துடன் தடவினாள்.
கணவரிடமிருந்து அவள் பேரனை வாங்கிக் கொண்டாள்.
வீட்டுக்குள் போன பின் ராஜேஷ்வர் மகளிடம்
கேட்டார். “யாராவது உனக்கு போன் செஞ்சாங்களாம்மா?”
அவர் கடத்தல்காரர்களிடமிருந்து அலைபேசி
அழைப்பு எதாவது வந்ததா என்று கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நிர்ப்பயா வாடிய முகத்துடன்
இல்லையெனத் தலையசைத்தாள்.
ராஜேஷ்வர் பிரச்சினை பெரிதாவது உணர்ந்தார். கடத்தல்காரர்கள்
தொடர்பு கொள்ளத் தாமதமாக தாமதமாக அவர்களுடைய கோரிக்கை பெரிதாக இருக்கப் போகிறது என்று
அர்த்தம்.
அப்சல்கான் யுவராஜ் காணவில்லை என்ற செய்தி வந்த நாளிலிருந்தே
மிக மகிழ்ச்சியாக இருந்தான். அவன் சொன்ன தகவலை அவனுடைய ஆட்களுக்கு வக்கீல் காளிதாஸ் சொல்வாரா
என்ற சந்தேகம் அவன் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே தான் இருந்தது. ஏனென்றால்
வழக்கை ஏற்று நடத்த பெரிய தொகையைக் கட்சிக்காரர்களிடம் வாங்கினாலும் கூட அவர்களுக்காக
வழக்கை விட்டு ஒரு சின்ன பிரச்சினையை சந்திக்கவும் விரும்பாத நபர் காளிதாஸ்.
அவன் சொன்ன தகவலைத் தெரிவித்தால் சின்ன பிரச்சினை வரலாம் என்று பயந்து அதைத் தெரிவிக்காமல் இருக்காததற்கு காரணம், அப்சல்கான் அதற்குக் கோபித்துக் கொண்டு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடலாம் என்பதாகத் தான் இருக்கும். ஒருவிதத்தில் பயத்தைப் போல் சிறந்த ஆயுதம் வேறு எதுவுமில்லை. அன்பினால் ஆகாத எத்தனையோ காரியங்கள் பயத்தினால் ஆகியிருப்பதை அப்சல்கான் தன் வாழ்க்கையில் பலமுறை பார்த்து இருக்கிறான்.
நல்ல வேளையாக அவன் சொன்ன ஆலோசனையை அகமது அன்சாரியும், பலனளிக்காது
என்ற சந்தேகம் கொண்டு அலட்சியப்படுத்தவில்லை. தினமும்
யுவராஜ் கடத்தல் செய்திகள் ஒன்று விடாமல் வாசித்து வரும் அவனுக்கு இந்தக் கடத்தல் அவனுடைய
சகா முகமதலியால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது என்பதும் புரிந்து மகிழ்ச்சியானது. கடத்தலில் அவன் முத்திரை
தெளிவாகத் தெரிகிறது. முடிவாக இன்று அவன் படித்த “நிர்ப்பயா தந்தை வீட்டுக்குப் போய் விட்டாள்” என்ற செய்தி
அவன் அறிவுகூர்மை மிகுந்த அனுமானத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இனி எல்லாம் சரியாக நடந்து விடும். அவன் விடுதலையாகப்
போகிறான். விடுதலையான பின் அவன் முழுமூச்சுடன் செயல்படப் போகிறான்.
அதன் விளைவாக பழைய கௌரவத்தைக் கண்டிப்பாக அவனுடைய இயக்கம் திரும்பப்
பெறப் போகிறது. இன்னும் சிறிதே நாட்கள் அவன் காத்திருந்தால் போதும்.
அப்சல்கான் திருப்தியுடன் புன்னகைத்தான்.
சில நாட்களாகவே மலர்ந்த முகத்துடன் இருக்கும் அப்சல்கான் அந்த
திகார் சிறைக் காவலாளியை ஆச்சரியத்துடன் பார்த்தான். ’இப்போதெல்லாம்
இவன் மகிழ்ச்சியாக இருக்கிறானே. ஏன்?’
(தொடரும்)
என்.கணேசன்

Many thanks
ReplyDelete