சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 14, 2022

சாணக்கியன் 13


விஷ்ணுகுப்தரின் கேள்விக்கு மிக விரிவான பதில் சந்திரகுப்தனிடம் இருந்த போதிலும் அவன் மற்றவர்களை முந்திக் கொண்டு பதில் சொல்ல முனையவில்லை. அதுவும் ஆச்சாரியர் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம் தான். பெரும்பாலான நேரங்களில் அவன் சொல்லும் விரிவான பதிலுக்குப் பின் அவன் நண்பர்களுக்குச் சொல்ல எதுவும் மீதமிருப்பதில்லை.  அவன் சொல்லும் பதிலில் சில பகுதிகள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் அவர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்படுவதை ஆரம்பத்தில் கண்டிருந்த விஷ்ணுகுப்தர்முதலில் அவர்கள் சொல்லட்டும், விட்டுப் போனதை மட்டும் நீ சொன்னால் போதும். அப்போது தான் அவர்களுக்கும் உற்சாகமிருக்கும். அடுத்த முறை அவர்கள் முயற்சி குறையாமல் இருக்கும்என்று அவனைத் தனியாக அழைத்துச் சொல்லியிருந்தார். என்ன தான் அவன் மீது அவருக்குக் கூடுதல் அன்பும், ஆதரவும் இருந்த போதும் ஆசிரியரான அவர் மற்றவர்கள் முன்னேற்றத்திலும் அலட்சியம் காட்டாத அக்கறை கொண்டிருந்ததை சந்திரகுப்தனும் மதித்தான்.

 

இந்த முறை சந்திரகுப்தனின் நெருங்கிய நண்பனான சாரங்கராவ் பதில் சொல்ல ஆரம்பித்தான். “ஆச்சாரியரே, காந்தார அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. அரசரின் முதுமையைப் பயன்படுத்திக் கொண்டு இளவரசர் ஆம்பி குமாரர் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் தலையிட ஆரம்பித்திருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அரசருக்கு அதில் அதிருப்தி இருந்த போதிலும் மகனை முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என்று தெரிகிறது.”

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “ஆம்பி குமாரன்  அரசரின் அதிகாரத்தில் தலையிடுகிறான் என்றால் எந்த மாதிரியான விஷயங்களில் தலையிடுகிறான் என்பதைச் சொல்ல முடியுமா சாரங்கா?”

சமீபத்தில் சில நூறு வீரர்களை சிறிய படைத்தலைவன் ஒருவன் தலைமையில்  கேகய நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி  அங்குள்ள மாடுகள், பசுக்களை எல்லாம் ஓட்டி வந்து விட்டான் என்ற தகவல் கிடைத்திருக்கிறது ஆச்சாரியரே.  இரண்டு மாதங்களுக்கு முன்னும் இப்படி ஒரு பிரச்சினை கேகய நாட்டின் இன்னொரு எல்லைப் பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. அதற்கும் ஆம்பி குமாரன் தான் காரணம் என்று என்று தெரிகிறது....”

 

சந்திரகுப்தனின் இன்னொரு நண்பனான விஜயன் சொன்னான். “காந்தார இளவரசனும், நம் கல்விக்கூடத்தின் பழைய மாணவனுமான ஆம்பி குமாரன் இப்படி மாடு திருடனாக மாறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது....”

 

விஷ்ணுகுப்தரால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.  முதலாவது, விஜயன் எப்போதுமே தானாக முயன்று எதையும் தெரிந்து கொண்டு வந்ததில்லை. விளையாட்டு புத்தியும், ஈடுபாட்டுக் குறைவுமே அதற்குக் காரணமாயிருந்தன. ஆனால் மற்றவர்கள் சொல்லும் பதிலுக்கு அவன் அபிப்பிராயங்கள் சொல்லாமல் இருந்ததில்லை.  இப்படி அபிப்பிராயங்கள் சொல்வதையே பதில் சொல்வதற்குச் சமமாகக் காட்டிக் கொண்டு இருந்து விடுவான். இரண்டாவது, மாளவ நாட்டின் பெருவணிகன் ஒருவனின் மகனான விஜயன் குறும்பும், நகைச்சுவை உணர்வும் மிக்கவன். அதனால் காந்தார இளவரசன் என்பதோடு நிறுத்தாமல் ஆம்பி குமாரன்  இந்தக் கல்விக்கூடத்தின் பழைய மாணவன் என்ற தகவலையும் சேர்த்து அவரிடம் சொல்கிறான்...

 

புன்னகைத்தாலும் அவன் சொன்னதில் இருந்த உண்மையை அவரால் மறுக்க முடியவில்லை. காந்தார இளவரசனான ஆம்பி குமாரன் அரச குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இந்தப் புகழ்பெற்ற கல்விக்கூடத்திற்கும் அவமானச் சின்னம் தான். இளவரசன் என்ற ஒரு தகுதியே போதும் வேறு எதையும் கற்கத் தேவை இல்லை என்ற அபிப்பிராயம் கொண்டிருந்த ஆம்பி குமாரன் தந்தையின் வற்புறுத்தலுக்காகத் தான் சில வருடங்களுக்கு முன் அங்கு கல்வி கற்க வந்தான். ஒழுங்கீனமும், கர்வமும், திமிரும் கலந்த அவனைச் சமாளிக்க அங்கிருக்கும் ஆசிரியர்கள் திணறிப் போனார்கள். அவன் சிறிதாவது பயந்தது விஷ்ணுகுப்தருக்குத் தான். அவர் தான் தயவு தாட்சணியம் இல்லாத சுருக்கமான வார்த்தைகளாலும், அவன் செயல்களுக்கேற்ற பார்வையாலும் அவனை எல்லோர் முன்னாலும் அவமானப்படுத்தினார். அதனாலேயே அவர் முன்னிலையில் அவன் அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது.  அவன் இளவரசன், எதிர்கால அரசன் என்ற எண்ணங்கள் மற்ற ஆசிரியர்களைத் தயங்க வைத்தது போல அவரைத் தயங்க வைக்கவில்லை.  

 

ஒரு முறை அவர் அவனைக் கண்டித்த போது ஆம்பி குமாரன் அவன் தான் யாரென்பதை அவரிடமும் நினைவுபடுத்திப் பார்த்தான். விஷ்ணுகுப்தர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “ஆம்பி குமாரா. அரண்மனையில் நீ இளவரசன். நாளை அரியணை ஏறும் போது நீ அரசன். ஆனால் இன்று இங்கு நீ மற்றவர்களைப் போல் ஒரு மாணவன் தான்.” என்று நிர்த்தாட்சணியமாகச் சொன்ன அவரை  அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்ற ஆசிரியர்களைப் போல அவனுடைய செயல்களை அவர் கண்டு கொள்ளாமல் இருக்காதது அவனுக்குள் பெருங்கோபத்தை ஏற்படுத்தியது.  விஷ்ணுகுப்தரிடம் காட்ட முடியாத கோபத்தை அவன் சகமாணவர்களிடமும், வேறு ஆசிரியர்களிடமும் காட்ட ஆரம்பித்தான்.

 

அவன் சேட்டைகளைப் பொறுக்க முடியாமல் தலைமை ஆசிரியர் காந்தார அரசரிடம் பக்குவமாகப் பேசி கல்வி கற்க மனமில்லாத ஆம்பி குமாரனை அந்தக் கல்விக்கூடத்தில் தொடர்ந்து இருத்துவதில் அர்த்தமில்லை என்று புரிய வைத்து பாதியிலேயே அவனை அனுப்பி வைத்தார். மகனைப் போல் அல்லாமல் பக்குவமும், அறிவும் நிறையவே பெற்றிருந்த காந்தார அரசர் தலைமை ஆசிரியர் சொன்னதில் வருத்தம் அடைந்தாலும் கூட உண்மையைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டார்.  

 

அங்கிருந்து விடுதலையானதில் ஆம்பி குமாரன் மகிழ்ச்சியடைந்தாலும், இளவரசனான அவனை மரியாதை இல்லாமல் அவர்களாக அனுப்பி வைத்ததில் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்ததை அங்கிருந்து கிளம்பும் போது மறைக்கவில்லை….

 

விஷ்ணுகுப்தர் விஜயனிடம் கேட்டார். “இந்தக் கல்விக்கூட மாணவனும், இந்தத் தேச இளவரசனுமான ஆம்பிகுமாரன் மாடு திருடனாக ஏன் மாறினான்? இந்தக் காந்தார தேசத்தில் சுபிட்சக்குறைவொன்றுமில்லையே?”

 

விஜயன் அவர் குரலில் இருந்த லேசான கண்டிப்பை உணர்ந்து எழுந்த குறுநகையைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு சொன்னான். “ஆச்சாரியரே. ஆம்பி குமாரர் ஏதாவது விதத்தில் கேகய மன்னருக்குக் கோபம் வரவழைத்து அவர்களுடன் போரிட விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “வெறும் அபிப்பிராயங்கள் மட்டுமல்லாமல் சரியான அனுமானங்களும் உனக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது விஜயா. அபிப்பிராயங்கள், அனுமானங்கள் தவிர நீ முயற்சி செய்து கண்டுபிடித்த தகவல் ஏதாவது இருக்கிறதா?”

 

சந்திரகுப்தனும், மற்ற நண்பர்களும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க விஜயன் நண்பர்களை ஓரக்கண்ணால் பார்த்துத் தானும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு மெல்லச் சொன்னான். “ஆச்சாரியரே, ஒரு தகவல் மட்டும் அறிந்தேன். ஆனால் அந்த ஒன்றை மட்டும் சொன்னால் தாங்கள் என்னைத் தவறாக எண்ண வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் அதைச் சொல்லவில்லை

 

தகவல்கள் எதுவாக இருந்தாலும் அதைத் தவறாக நினைக்க மாட்டேன். ஆனால் எதையுமே அறியாமல் சோம்பி இருப்பதை என்றுமே தவறாகவே நினைப்பேன். எனவே நீ தயங்காமல் சொல்லலாம்....”

 

தட்சசீல நகரில் சில மாதங்களுக்கு முன் மைனிகா என்ற தாசி குடியேறி இருக்கிறாள் ஆச்சாரியரே. அவள் இருப்பிடத்திற்கு இளவரசர் ஆம்பி குமாரரும், சேனாதிபதி சின்ஹரனும் இரகசியமாக இரவு நேரங்களில் மாறு வேடத்தில் செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்…. “

 

சந்திரகுப்தனும், மற்ற மாணவர்களும் வாய்விட்டே சிரித்துவிட விஜயன் ஆச்சாரியரைப் பார்த்துக் கொண்டே இரண்டு கைகளுக்கும் எட்டிய இரண்டு நண்பர்களை இரகசியமாகக் கிள்ளினான்.    அவர்கள் இருவரும் நெளிய விஷ்ணுகுப்தர் அதைக் கவனித்தும் கவனிக்காதவர் போல விஜயனிடம் சொன்னார். “நீ அறிந்திருக்கும் செய்தி மிக முக்கியமான செய்தி. தேசங்களின் விதியைத் தீர்மானிக்கும் விஷயத்தில் தாசிகளின் பங்கு அலட்சியப்படத் தக்கது அல்ல.”  

 

விஜயன் முகம் மலர அவரை நோக்கித் தலை தாழ்த்தி விட்டு முன்பு சிரித்த நண்பர்களை முறைத்தான்.

 

விஷ்ணுகுப்தர் வேறு யாருக்கும் எதாவது கூடுதல் தகவல்கள் தெரியுமா என்று கேட்கும் விதமாக மற்றவர்களைப் பார்த்தார். அவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கவே சந்திரகுப்தனைப் பார்த்தார். “இவை தவிர நீ அறிந்த தகவல்கள் என்ன சந்திரகுப்தா?”

 

சந்திரகுப்தன் சொன்னான். “காந்தாரத் தலைநகரில் வேறு நாட்டு ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது ஆச்சாரியரே. வணிகர்களாக அதிகம் நடமாடுகிறார்கள்.”

 

சந்திரகுப்தன் இப்போதெல்லாம் ஒற்றர்களைக் கண்டறிவதில் மிகத் தேர்ச்சி அடைந்து விட்டிருந்தான். இந்த விஷயத்தில் அவன் ஆச்சாரியரின் கூரிய பார்வையைத் தானும் பெற்றிருந்தான். மாணவனை மனதில் மெச்சியபடி விஷ்ணுகுப்தர் கேட்டார். “வேறெதாவது செய்தி?”

 

சந்திரகுப்தன் சொன்னான். “போர்க்கடவுள் போல் ஒருவன் தொலைதூரத்தில் இருந்து கிளம்பியிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன் ஆச்சாரியரே. அவன் தோல்வியே அறியாதவன் என்றும் சொல்கிறார்கள். சென்ற இடமெல்லாம் வெற்றி கண்டிருக்கும் அவன் இப்போது பாரசீகத்தையும் வெற்றி பெற்று விட்டான் என்றும் கேள்விப்பட்டேன்

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

3 comments:

  1. It feels good to journey to the period of 2400 years ago through you. Very nice sir.

    ReplyDelete
  2. Alexander the great entering now.

    ReplyDelete
  3. போர்க்கடவுள் என்பது அலெக்சாண்டராக இருக்குமோ..?

    ReplyDelete