ஞானமூர்த்தி தொடர்ந்தார். ”எனக்கு
இதுவரைக்கும் அந்த மாதிரி காரணமில்லாத உந்துதல் வந்ததே இல்லை. கொஞ்சம்
நேரம் பொறுத்துகிட்டேன். அப்ப என் ஃப்ரண்ட்ஸ் எதோ என்கிட்ட சொன்னாங்க. ஆனா அவங்க
என்ன சொல்றாங்கன்னு என் மூளைக்குத் தகவல் எட்டலை. எழுந்து
போகணும்கிற யோசனையே தான் என் மூளையை ஆக்கிரமிச்சுது. அதனால நான்
எழுந்து அந்தப் பாதைல போக ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் போயிருப்பேன். ஒரு பெரிய
பாறையில போய் அந்தப் பாதை முடிஞ்சுது. அந்தப் பாறைல ஒருத்தர்
பைஜாமா குர்தா போட்டுட்டு உட்கார்ந்திருந்தார். அவரோட பின்பக்கம்
தான் எனக்குத் தெரிஞ்சுது….”
மூவரும் அவர் சொல்வதையே ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராஜாராம் சொன்னதை நித்யாவிடம் அர்ஜுன் சொல்லியிருந்ததால்
அவளுக்கும் அந்த நிகழ்வு பற்றி அவன் சொன்ன அளவில் மட்டும் தெரிந்திருந்தது. பானுமதியும்
ஆவலில் கூடுதல் திகைப்போடு பார்ப்பதைப் பார்த்தால் அவளுக்கு அவர்கள் அளவு கூடத் தெரிந்திருக்கவில்லை
என்றும் முதல் முறையாக அதைக் கேள்விப்படுகிறாள் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.
ஞானமூர்த்தி முகம் மிக மென்மையாக மாறியது. அவர் அந்த
நிகழ்வை மறுபடி மனதில் ஒளிபரப்பு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், பார்த்து
அப்படியே வர்ணிக்கிறார் என்றும் அவர்களுக்குத் தோன்றியது.
“எனக்கு
முதல்ல வித்தியாசமாய் தோணினது அவரோட பைஜாமா, ஜிப்பா. அந்த குளிர்ல
அவர் எப்படி வெறும் பைஜாமா ஜிப்பால மட்டும் இருக்கார்னு ஆச்சரியமாய் இருந்துச்சு. பாதை அந்தப்
பாறையோட முடிஞ்சு போச்சுங்கறதால இனி என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை.. திரும்பிப்
போகலாம்னு நினைச்சா, என்னால அதுவும் முடியலை. நான் என்ன
செய்யறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப அந்த ஆள் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னார். “வா ஞானமூர்த்தி” நான் அதிர்ந்துட்டேன். திரும்பிப்
பார்க்காமலேயே அவருக்கு நான் வந்திருக்கிறது எப்படித் தெரியும்னு தெரியலை. என் பெயர்
அவருக்கு எப்படித் தெரியும்னு புரியலை”
ஞானமூர்த்தி நிறுத்தினார். அவர்கள்
மூவருமே கூட அதிர்ந்தார்கள். பானுமதி ஹாட்பேக்கில் இருந்து எடுத்த சப்பாத்தியை யார் தட்டிலும்
போடாமல் கையில் வைத்துக் கொண்டு அவரையே சுவாரசியத்துடன் பார்த்தாள்.
ஞானமூர்த்தி தொடர்ந்தார். “நான் ஆச்சரியத்தோட
போனேன். பாறை பக்கம் போனவுடனே இன்னொரு அதிர்ச்சி எனக்குக் காத்துகிட்டு
இருந்துச்சு. அது என்னன்னா அந்தப் பாறைக்கு கீழே பெரிய பள்ளத்தாக்கு. தவறி கீழே
விழுந்தா உயிர் மிஞ்சாது. அந்த மாதிரி இடத்தில் காலைத் தொங்கப் போட்டுகிட்டு உட்கார்ந்திருக்காரே
இந்த ஆள்ன்னு மலைப்போட அவரைப் பார்த்தேன். பார்க்க
ரொம்ப சாதாரணமான ஆள் மாதிரி தெரிஞ்சாலும் அவரோட கண்கள் ரெண்டும் ரொம்ப சக்தி வாய்ந்தது
மாதிரி எனக்குத் தோணுச்சு. அவர் “உட்காரு”ன்னார். எனக்கோ
அவர் மாதிரியே அந்தப் பக்கம் காலைப் போட்டு உட்காரணுமான்னு நினைச்சப்ப காலெல்லாம் நடுங்க
ஆரம்பிச்சுடுச்சு. நான் எங்கப்பாவை நினைச்சேன். உங்கம்மாவை
நினைச்சேன். அர்ஜுனை நினைச்சேன். எனக்காக
இவங்க எல்லாம் காத்திருப்பாங்களே. இந்தப் பாறையில உட்காரப் போய் ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துடுவோமோன்னு
பயமாய் இருந்துச்சு.”
அவர் நித்யாவைப் பார்த்து தான் சொல்லிக்
கொண்டிருந்தார். ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பானுமதி கண்கலங்கினாள்.
அர்ஜுனுக்கு அம்மா ஏன் கண்கலங்குகிறாள்
என்று விளங்கவில்லை. அப்பாவுக்காக அவளும், அவனும், தாத்தாவும்
காத்துக் கொண்டிருப்பார்கள் என்ற சிந்தனை உயிருக்கு ஆபத்தான அது போன்ற சமயங்களில் தோன்றுவது
யாருக்கும் இயற்கை அல்லவா? அதில் கண்கலங்க என்ன இருக்கிறது? அவள் கண்கலங்குவதற்கு, அவனுக்குத்
தெரியாத காரணமும் இருக்கக் கூடுமோ?
ஞானமூர்த்தி தொடர்ந்தார். ”என் பயத்தைக்
கவனிச்சு அந்த ஆள் தமிழ்லயே சொன்னார். “பயப்படாதே. வந்த வேலைகள்
முடியாமல் அப்படியெல்லாம் யாரும் போயிட முடியாது.” அவர் என்கிட்ட
தமிழ்ல பேசினது எனக்கு ஆச்சரியமாயிருந்துச்சு. அதை விட
ஆச்சரியம் “நான் தமிழன்னு அவர் எப்படித் தெரிஞ்சுகிட்டார்ங்கறது தான். ஒருவேளை
அவர் எங்களைத் தாண்டி வர்றப்ப நாங்க தமிழ்ல பேசறதைக் கேட்டிருப்பாரோன்னு நினைச்சுகிட்டேன். நான் சொன்னேன். “போய்ச்
சேர்ந்துடலைன்னாலும் படுத்த படுக்கையாயிட்டாலும் நம்மளால குடும்பத்துக்குப் பிரச்சினை
தான்.” அந்த ஆள் அதுக்கும் பதில் சொன்னார். “செய்ய வேண்டிய
வேலைகளைச் செய்துடாம யாரும் படுத்துடவும் முடியாது.” அவர் சொன்னதுல
கொஞ்சம் தைரியம் வந்து நான் ரொம்பக் கவனமாய் அந்தப் பாறை ஏறி அவரை மாதிரியே அந்தப்
பக்கம் காலைப் போட்டு உட்கார்ந்தேன். சரியாய் உட்கார்ந்து
முடியற வரைக்கும் மனசு திக் திக்னு தான் இருந்துச்சு. அப்படி
உட்கார்ந்த பிறகு மறந்தும் முன்னாடி இருக்கற பாதாளத்தைப் பார்க்காமல் அவரைக் கூர்ந்து
பார்த்தேன். அவரோட வயசை என்னால கணிக்க முடியல. அவர் ரொம்ப
இளமையாய் தெரிஞ்சார். அவருக்கு என்னைப் பற்றி எல்லாத் தகவல்களும் தெரிஞ்சிருந்தது எனக்கு அடுத்த ஆச்சரியம். என் கிட்ட
மடமடன்னு அவர் பேச ஆரம்பிச்சார். அவர் பேச ஆரம்பிச்சதும், அவர் அபூர்வ
சக்திகள் இருக்கும் மகான்னு எனக்கு புரிஞ்சுது.”
ஞானமூர்த்தி நிறுத்தினார். அவர்களுக்கு
அந்த ஆள் என்ன பேசினார் என்று அறிய ஆவலாய் இருந்தது. ஆனால் மனதில்
பழைய நிகழ்வுகளில் பயணித்துக் கொண்டிருந்த அவர் அதைப் பற்றி எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை.
அர்ஜுன் கேட்டான். “அவர் என்னப்பா
சொன்னார்.?”
ஞானமூர்த்தி சொன்னார். ”சக்தி வாய்ந்த
மகான்கள் நம்ம கிட்ட சரியான முகூர்த்த காலங்கள்ல தான் தொடர்பு கொள்றாங்க. அப்படித்
தொடர்பு கொண்டு அவங்க சொல்ற விஷயங்கள் அந்தந்த மனுஷங்களுக்கானது. அதை நான்
கேட்க வேண்டிய நேரத்துல கேட்டேன். அதைச் சொல்ல வேண்டிய நேரம் ஒன்னும் கண்டிப்பாய் வரும். அப்படி
நேரம் வர்றப்ப உங்களுக்குச் சொல்றேன்.
அர்ஜுன் தன் தொழில் புத்தியைக் காட்டினான். “சரி அவர்
எது சம்பந்தமான விஷயங்களை உங்களுக்குச் சொன்னார்ப்பா?”
நித்யா அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஞானமூர்த்தியும்
கூடப் புன்னகைத்து விட்டுச் சொன்னார். “அதையும் நான் சொல்றப்பவே
நீ தெரிஞ்சுக்கோ.”
நித்யா சொன்னாள். “அப்பா விவரமான
அரசியல்வாதியாயிட்டார்.”
ஞானமூர்த்தி காதில் அவள் சொன்னது விழுந்ததாகத்
தெரியவில்லை. அவர் தொடர்ந்து சொன்னார். “அவர் கிட்ட
நான் பேசிகிட்டு இருந்தப்ப அவர் திடீர்னு சொன்னார். “உன் ஃப்ரண்ட்ஸ்
ரெண்டு பேர் உன்னைத் தேடிகிட்டு வர்றாங்க. நான் கிளம்பறேன்.” நான் திரும்பிப்
பார்த்தேன். யாரும் இருக்கலை. நான் சொன்னேன். “யாரும்
இல்லையே.” அவர் சொன்னார். ”வந்துகிட்டிருக்காங்க.” அதைச் சொன்னவர்
என் கிட்ட சில முக்கிய விஷயங்களைச் சொல்லிட்டு “சரி கிளம்பறேன்”னு மறுபடியும்
சொன்னார். அப்ப தான் என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் வந்தாங்க. நானும்
ஜாக்கிரதையாய் இறங்கினேன். திரும்பிப் பார்த்தால் அவர் அங்கே இருக்கலை. அவர் எப்படி
போனார்னு தெரியலை.”
அர்ஜுன் தந்தையிடம் கேட்டான். “நீங்க அதுக்கப்பறம்
வருஷா வருஷம் இமயமலைக்குப் போக ஆரம்பிச்சீங்க. இல்லையாப்பா. அப்படிப்
போக ஆரம்பிச்சது அவரைப் பார்க்கவா? வருஷா வருஷம் அவர்
பார்க்கக் கிடைச்சாரா?”
”மறுபடியும்
அவரைப் பார்க்கணும்னு எனக்கு ஆவல் இருந்துச்சு. ஆனால் அவரை
வருஷா வருஷம் பார்க்க முடியலை. அதுக்கப்பறம் அவரை ரெண்டே தடவை தான் பார்த்திருக்கேன்.”
“நீங்க அவரை
மறுபடியும் பார்த்தது அதே இடத்துலயாப்பா?”
“ஆமா”
“அந்த மகானோட
விசேஷ சக்திளை அடையணும்னு உங்களுக்கு எப்பவாவது தோன்றிருக்காப்பா?”
“எந்த விசேஷ
சக்திகள்?”
“உங்களைப்
பற்றி நீங்கள் சொல்லாமலேயே அவர் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டது, அந்த மலைப்பள்ளத்தாக்குல
அவர் மாயமாய் மறைஞ்சது எல்லாம்.”
“அதையெல்லாம்
அடையணும்னு எனக்கு ஆசை வரலை”
அர்ஜுன் திகைத்தான். “ஏன்ப்பா?”
“அந்த மாதிரி
சக்திகளால சமூகத்துக்கு என்னடா பிரயோஜனம்?” என்று சொன்ன
ஞானமூர்த்தி கைகழுவ எழுந்தார். கேள்வி நேரம் முடிந்து விட்டது என்று அர்த்தம்.
(தொடரும்)
என்.கணேசன்
No comments:
Post a Comment