என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, October 26, 2026

ரட்சகன் 15

 


தன்னுடைய இதயத்தை இப்படியொரு ஜீவன் சில நிமிடங்களில் முழுமையாக ஆக்கிரமிக்க முடியும் என்று நிரஞ்சன் அதுவரை நம்பியிருக்கவில்லை.  வினாடிக்கு வினாடி இரட்டிப்பாகும் வைரஸ் போல குழந்தை நீலேஷ் மீது ஏற்பட்ட பாசம் நொடிக்கு நொடி அவன் மனதில் இரட்டிப்பாகிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி விளையாடிக் கொண்டிருக்கையில் அதன் மழலைச் சிரிப்பை விட இனிமையான ஒரு சத்தத்தை அவன் இதுவரையில் கேட்டிருக்கவில்லை.  குழந்தையின் பிஞ்சுக் கைகள் அவன் உடலில் பட்ட இடங்கள் உணர்ந்த இனிமையைப் போன்றதொரு இனிமையான ஸ்பரிமும் அவனுக்கு இதுவரையில் பரிச்சயமாகவில்லை. யுவராஜின் மகனாக இப்போது குழந்தையை அவனால் பார்க்க முடியவில்லை. அக்காவின் மகனாகக் கூட அவன் நீலேஷை நினைக்கவில்லை. குழந்தை அவனுடைய செல்ல மருமகனாகி விட்டான்.

 

குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் குழந்தை விளையாடும்படியான விளையாட்டு சாமான்கள் வீட்டில் இல்லை என்பது நிரஞ்சனுக்கு உறைத்தது. அவன் குழந்தையிடம் கேட்டான்.   ”உனக்கு விளையாட என்னவெல்லாம் வேணும்?”

 

நீலேஷ் உடனடியாகச் சொன்னான். “அப்பா வேணும்…”

 

நிரஞ்சன் ஒரு கணம் சிலை போல் சமைந்தான். பின் மெல்லக் கேட்டான். “வேற என்னவெல்லாம் வேணும்.”

 

நீலேஷ் யோசித்து யோசித்து தன் மழலைக் குரலில் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தான். குழந்தை சொல்லச் சொல்ல ஒரு தாளில் எழுதிக் கொண்டே போன நிரஞ்சன் அவன் நிறுத்தியவுடன் கேட்டான். “உனக்கு எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.”

 

“யானை விளையாட்டு”

 

“அது என்ன விளையாட்டு”

 

நீலேஷ் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி நாலு கால்களில் தவழ்ந்து காட்டி அப்படியே அவனைச் செய்யச் சொன்னான். நிரஞ்சன் அப்படியே செய்தவுடன் அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு “யானை சீக்கிரம் போ யானை” என்றான். அவன் எப்போதும் தந்தையுடன் அந்த விளையாட்டை விளையாடுவது உண்டு.

 

அப்படி நிரஞ்சனை யானையாக மருமகன் ஓட்டிச் சென்று கொண்டு இருந்த போது நிர்ப்பயா அவன் அறைக்குள் நுழைந்தாள். நிரஞ்சனுக்கு ஒரு அழகான அனுபவம் தொடர்வது தடைப்பட்டு விட்டது போலிருந்தது.

 

நிர்ப்பயா தம்பியையும் மகனையும் புன்னகையுடன் பார்த்தாள். நீலேஷ் தாயிடம் பெருமையாகச் சொன்னான். “அம்மா இது தான் என்னோட புது யானை”

 

தம்பியின் முதுகிலிருந்து மகனைத் தூக்கிக் கொண்ட நிர்ப்பயா மகனிடம் சொன்னாள். “புது யானை நல்லாயிருக்கு. போதும் விளையாடினது. இனி சாப்பிட்டு தூங்கணும் நீலேஷ்.”

 

நீலேஷ் மாமனிடம் மழலைக் குரலில் சொன்னான். “சரி நான் விளையாட நாளைக்கு வரேன் மாமா.”

 

நிரஞ்சன் பாசத்துடன் தலையசைத்தான்.

 

ராஜேஷ்வரும் போலீஸ்காரர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு ராஜேஷ்வருக்கு வந்தது. அறியாத எண் என்பதால் அது கடத்தல்காரர்களின் அழைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் தான் அலைபேசியை எடுத்து ராஜேஷ்வர் பேசினார். “ஹலோ”

 

கரகரத்த குரலில் தூய ஹிந்தியில் ஒரு ஆள் சொன்னான். “உங்கள் மருமகன் எங்களிடம் தான் இருக்கிறான்.”

 

“நான் யாரையும் என் மருமகனாக அங்கீகரிக்கவில்லை.” ராஜேஷ்வரும் ஹிந்தியில் அமைதியாகச் சொன்னார். எந்த ஒரு பேரத்திலும் சம்பந்தப்பட்டவன் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டினால் பேரத்தின் தொகை அதிகமாகும் என்பது அவர் கற்று இருக்கும் ஆரம்ப அரிச்சுவடி. அந்தத் தவறை அவர் எப்போதும் செய்யப் போவதில்லை.

 

“அங்கீகரிக்காததால் உறவுகள் இல்லாமல் போய்விடுவதில்லை.”

 

”இருக்கலாம். ஆனால் உறவினனாக ஏற்றுக் கொள்ளப் படாத ஒருவன் காணாமல் போனால் யாரும் துடித்து விடப் போவதில்லை. அதே போல் திரும்ப அவன் கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்ய யாரும் சம்மதித்து விடவும் போவதில்லை. அதனால் யுவராஜை நீங்கள் பணயக் கைதியாக வைத்து என்னிடம் பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் நம் இரண்டு பேர் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்.”

 

ராஜேஷ்வர் வெளிப்படையாக அப்படிச் சொன்னதை எதிர்தரப்பு எதிர்பார்த்து இருக்கவில்லை போல் இருந்தது. ஒரு சிறு மௌனத்திற்குப் பின் கரகரத்த குரல் சொன்னது. “நீங்கள் மருமகனுக்காக எதையும் செய்யும் மனநிலையில் இல்லை என்பது தெரியும். ஆனால் உங்களுக்கு உங்கள் மகளும், அவளுடைய சந்தோஷமும் முக்கியமாக இருக்கும்  என்று நம்பி தான் உங்களை நாங்கள் அழைத்திருக்கிறோம்.  எங்களுடைய நம்பிக்கை தவறானது என்றால் சொல்லுங்கள். நாங்கள் நம் இருபக்க நேரத்தையும் வீணடிப்பதைத் தவிர்க்கிறோம்.”

 

இப்போது ராஜேஷ்வர் சிறிது யோசித்தார். இப்போது இந்தப் பேச்சு வார்த்தைக்கு அவர் வைக்கும் முற்றுப் புள்ளி அவர் மருமகனின் வாழ்க்கைக்கே வைக்கும் முற்றுப் புள்ளியாக மாறி விடலாம்.  அந்த விபரீத எல்லைக்கு நிலைமை போவதை அவர் விரும்பவில்லை. ராஜேஷ்வர் சொன்னார். “சரி. சொல்லுங்கள்”

 

“உங்கள் மகளுடைய கணவன் உயிரோடு திரும்பி வர வேண்டும் என்றால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றினால் அவனை எந்த விதமான சேதாரமும் இல்லாமல் மொத்தமாக அனுப்பி வைக்கிறோம். நீங்கள் நிறைவேற்றா விட்டாலோ, அல்லது நிறைவேற்றத் தாமதம் செய்தாலோ கூட அவனை நாங்கள் கண்டிப்பாக உங்கள் மகளிடம் அனுப்பி வைப்போம். ஆனால் மொத்தமாக அல்ல. முதலில் அவனுடைய கை விரல்களில் ஆரம்பித்து தனித்தனி உறுப்பாக அனுப்பி வைப்போம்....”

 

ராஜேஷ்வர் அதிர்ந்தார். ”உங்களுடைய கோரிக்கை என்ன?”

 

“திகார் சிறையிலிருக்கும் எங்களுடைய இயக்கத்தின் உபதலைவர் அப்சல்கானை எங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும். அவர் எங்களிடம் வந்து சேர்ந்த உடனேயே உங்களுடைய மருமகன் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.”

 

ராஜேஷ்வர் திகைத்தார்.  “இதற்கு நீங்கள் அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலைவர் யாருடையதாவது வீட்டு நபரைக் கடத்தியிருக்க வேண்டும். என் அதிகாரத்தில் இல்லாததை நான் எப்படி செய்ய முடியும்?”

 

“எல்லா அதிகாரத்திற்கும் அஸ்திவாரம் பணம் தான். இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் உங்களிடம் தாராளமாகப் பணம் வாங்குபவர்கள் தான். உங்கள் நிதி இல்லாமல் அவர்கள் தேர்தலை சந்திக்க முடியாது. உங்கள் தயவு அவர்களுக்கு எப்போதுமே தேவைப்படுவதால் நீங்கள் சொன்னால் அவர்கள் கண்டிப்பாகக் கேட்பார்கள்.”

 

“ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஆளும் கட்சியின் வேலைகளை கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கையில் ஆளும்கட்சி எப்படி ஒரு தீவிரவாதியை எனக்காக விடுவிக்க முடியும்.  நான் பணம் தருகிறேன் என்பதற்காக அவர்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்ள முடியுமா?”

 

“அரசியல்வாதிகள் எந்த மிக முக்கியமான வேலையையும் நேரடியாகவோ, வெளிப்படையாகவோ செய்வதில்லை. அரசியல்வாதிகள் குறுக்குவழிகளில் வித்தகர்கள். அதனால் நீங்கள் சொன்னால், கண்டிப்பாக உங்களுக்காக அவர்கள் ஏதாவது ஒரு குறுக்குவழி கண்டு பிடிப்பார்கள். நீங்கள் உள்துறை அமைச்சரிடம் பேசுங்கள். நான் மூன்று நாட்கள் கழித்து உங்களை அழைக்கிறேன். அதற்குள் பேசி எங்களுக்குச் சாதகமான பதிலைச் சொல்லுங்கள்.”

 

“நான் சொல்லியும் அமைச்சர் மறுத்து விட்டால்?”

 

“உங்கள் மருமகனின் வலது சுண்டு விரல் அடுத்த வாரம் உங்கள் மகளுக்குக் கிடைக்கும். பின் நாலைந்து நாட்களின் இடைவெளியில் வரிசையாக மற்ற விரல்களும் அனுப்பி வைக்கப்படும். பின் கால் விரல்கள், பின் காதுகள் என்று மற்ற உறுப்புகளும் அனுப்பி வைக்கப்படும்.”

 

ராஜேஷ்வர் அதிர்ந்தார். கரகரத்த குரல் தொடர்ந்து சொன்னது. “நான் பேசியதை நீங்கள் போலீஸுக்குத் தெரிவித்தால் அது உங்களுக்குத் தான் சிக்கலாக முடியும். நான் பேசும் அலைபேசி எண்ணை வைத்து அவர்கள் எதையும் கண்டுபிடித்து விட முடியாது என்பதோடு அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது என்பது தான் யதார்த்தம். போலீஸுக்குத் தகவல் போனால் கண்டிப்பாக  அவர்களிடமிருந்து தகவல் வெளியில் கசியத்தான் செய்யும். தகவல் பொதுவெளிக்கு வந்து விட்டால் பிறகு உள்துறை அமைச்சருக்கு குறுக்கு வழியிலும் கூட உங்களுக்கு உதவ முடியாமல் போய் விடும். அதனால் எங்கள் கோரிக்கையை போலீஸுக்குத் தெரியாமல் ரகசியமாய் வைத்திருப்பது உங்களுக்கு நல்லது. மூன்று நாட்கள் கழித்து நாங்கள் அழைக்கையில் உங்களிடமிருந்து எங்களுக்கு சாதகமில்லாத பதில் வருமானால் நாங்கள் வாக்களித்தபடி யுவராஜின் வலது சுண்டு விரல் முதலில் உங்களுக்கு வந்து சேரும்.”

 

அலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

ராஜேஷ்வர் நேரம் என்ன என்று பார்த்தார். இரவு 10.40 நிர்ப்பயா உறங்கச் சென்று விட்டபடியால் தகவலை மறுநாள் அவளுக்குத் தெரிவிக்க முடிவு செய்தார்.


(தொடரும்)

என்.கணேசன்




No comments:

Post a Comment