என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 8, 2026

சதுரங்கம் 39

 


சாவித்திரி சொன்னாள். ”ஆமாம்மா. அந்த விலைல எல்லாம் வாட்ச் இருக்காம். இதை நம்ப முடியலையில்ல? எனக்கும் தான் நம்ப முடியல. தங்கத்துல செஞ்சாலே நாலஞ்சு பவுனுக்கு மேல இருக்காதுங்களேம்மா. அந்தக் கணக்கு எடுத்துகிட்டா கூட மூனு லச்சம் வருமா? அதனால நர்மதாம்மா கோடி ரூபாய்க்கு மேலன்னு சொன்னப்ப நான் நம்பல. இந்த வேலைக்காரி படிப்பறிவில்லாதவ, நாம என்ன சொன்னாலும் நம்பிடுவான்னு அவங்க கதை விடறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். அவங்களும் நான் நம்பலைன்னு புரிஞ்சுகிட்டாங்க. ஆனா ஒன்னும் சொல்லாம சிரிச்சுகிட்டு அந்த வாட்ச்சை வாங்கி வெச்சுகிட்டாங்க.”

 

“இல்லைங்க. அந்த மாதிரி கோடிக்கணக்குல விலை இருக்கற வாட்ச்களும் இருக்கு.” என்று கீதா சொன்னதும் சாவித்திரி அவளைத் திகைப்புடன் பார்த்தாள். “அப்படின்னா, உள்ளே வைரங்களும் இருக்குமோ?”

 

கீதா சாவித்திரியின் திகைப்பைப் பார்த்து புன்னகைத்தபடி சொன்னாள். “அந்த மாதிரி வாட்ச்களும் இருக்கு தான். ஆனா அப்படி தங்கம் வைரம் அல்லாமலேயே கூட கோடிக்கணக்குல விலை இருக்கற வாட்ச்கள் இருக்கு. அதையெல்லாம் தயாரிக்கிறதுக்கு சில வெளிநாட்டுக் கம்பெனிகள் இருக்கு.... நீங்க அந்தக் கடிகாரத்தை எப்போ எப்படி பார்த்தீங்க?”

 

“ஒரு நாள் நான் நர்மதாம்மா ரூமை பெருக்கிகிட்டு இருக்கறப்ப பெட்டுக்கு கீழே ஒரு வாட்ச் விழுந்து கிடந்துச்சு. அது அவங்க கட்டற வாட்ச் அல்ல. அதை எடுத்து நர்மதாம்மா கிட்ட காமிச்சேன். அதை வாங்கிட்டு அவங்க “பாரு கோடிக்கு மேல மதிப்பு இருக்கற வாட்ச்சை விட்டுட்டு போனது கூடத் தெரியாம இருக்கார் மனுஷன். போன் செஞ்சு கூட கேட்கலை. பணம் எக்கச்சக்கமாய் இருந்தால், அலட்சியம் தானாய் வந்துடுது”ன்னு சொன்னாங்க.”

 

”இது எப்ப நடந்துச்சு?”

 

“நாலு மாசம் இருக்கும்.”

 

“அப்போ அது யாரோடதுன்னு உங்க கிட்ட சொன்னாங்களா?”

 

“இல்லைம்மா.”

 

“நீங்க அந்த ஆளை எப்போதாவது பார்த்திருக்கீங்களா? அந்த ஆளைப் பற்றி நர்மதாம்மா உங்க கிட்ட எப்போதாவது சொல்லியிருக்காங்களா?”

 

இரண்டு கேள்விகளுக்கும் சாவித்திரி ’இல்லை’ என்று தலையசைத்தாள்.

 

“இந்த வீட்டுல வந்த ஆள்கள் யாரையெல்லாம் நீங்க பார்த்திருக்கீங்க?”

 

“விமல் சாரைப் பாத்திருக்கேன். அவர் எப்போதாவது வருவார்.”

 

“அவர் ஆள் எப்படி?”

 

“நல்ல ஆளில்லைம்மா?”

 

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

 

“பொம்பளை கிட்ட கைநீட்டி காசு வாங்கிச் செலவழிக்கற ஆம்பளைகளை நல்ல ஆள்ன்னு எப்படிம்மா சொல்றது.? ஆம்பளை சம்பாதிச்சு பொம்பளைக்கு குடுக்கறது தானம்மா ஆம்பளைக்கு கௌரவம். இந்த ஆளு நர்மதாம்மா கிட்ட காசை வாங்கிட்டு போகறதுக்காகவே வருவார். நர்மதாம்மா அவருக்குப் பணம் தர்றதை நானே கண்ணாரப் பார்த்திருக்கேன்.”

 

“பெரிய தொகையாய் வாங்கிட்டு போவாரோ?”

 

“கரெக்டா எவ்வளவு தர்றாங்கன்னு தெரியாது. ஆனா ஐநூறு ரூவாய் நோட்டுக் கட்டாய் தர்றதை நான் பார்த்திருக்கேன்.”  

 

“அப்படி அவர் வர்றப்ப அவரும் நர்மதாம்மாவும் சண்டை போட்டு நீங்க பார்த்திருக்கீங்களா?”

 

“இல்லைம்மா அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு நான் பார்த்தது கிடையாது. அப்படி காசை வாங்கிட்டு போறவங்க சண்டை போட மாட்டாங்கம்மா. சண்டை போட்டா காசு கிடைக்காதுன்னு அவங்களுக்குத் தெரியும்.”

 

“வேற யாரு இந்த வீட்டுக்கு வந்து பார்த்திருக்கீங்க?”

 

“நர்மதாம்மா தங்கச்சி ஒரு தடவை வந்திருக்காங்க. அவங்க நல்ல சுபாவம். நல்லா யதார்த்தமாய் பழகுவாங்க. நர்மதாம்மா இறந்த பிறகு கூட என் கிட்ட போன்ல பேசினாங்க. ரொம்ப வருத்தப்பட்டாங்க.”

 

“அவங்க அளவுக்கு யதார்த்தமாய் நர்மதாம்மா பழக மாட்டாங்களோ?”

 

“செத்தவங்கள பத்தி தப்பா பேசக்கூடாது. சில சமயம் நர்மதாம்மா அன்பா பழகுவாங்க. சில சமயம் எரிஞ்சு விழுவாங்க. எந்த சமயத்துல எப்படி இருப்பாங்கன்னு நம்மளால சொல்லவே முடியாது. ஆனாலும் செத்துப் போனது வருத்தமாய் தான் இருக்கு. என்ன கஷ்டம் வந்தாலும் தற்கொலை செய்துக்கலாமா? முதலாவது இவங்களுக்கெல்லாம் கஷ்டம் என்னன்னு தெரியுமா? எனக்கெல்லாம் வந்த கஷ்டத்துக்கு இன்னேரம் நான் பல தடவை தற்கொலை செஞ்சிருக்கணும் தெரியுமா? அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை இவங்க பார்த்திருப்பாங்களா?”

 

சாவித்திரி ’பல தடவை தற்கொலை செஞ்சிருக்கணும்’ என்று சொன்னது கீதாவைப் புன்னகைக்க வைத்தது. ”என்ன கஷ்டமெல்லாம் பட்டிருக்கிறாய் நீ?” என்ற சிறிய கேள்வி கேட்டு விட்டால் பேச்சு முழுமையாகத் திசைமாறி விடும் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கீதா கிளம்பினாள்.

 

“நீங்க என்னை ஃபோட்டோவே எடுத்துக்கலையே?” சாவித்திரி கேட்க கீதா அப்போது தான் நினைவு வந்தவள் போல, “நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க. இல்லைன்னா நான் அதுக்குன்னு இன்னொரு தடவை வந்திருக்கணும்.” என்று சொல்லி தன் அலைபேசியில் அவளை இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீதா கிளம்பினாள்.   

 

அடுத்ததாய் அவள் விமலின் அண்ணாவையும், தங்கையையும் சந்தித்தாள். அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டதால் இப்போது விமலுக்கு இருக்கும் இரத்த பந்தங்கள் அவர்கள் இருவரும் தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் விமல் இருக்குமிடம் தெரிந்திருக்கவில்லை. மேலும் அவன் அவர்களுடன் நல்ல உறவில் இருக்கவில்லை என்று தெரிந்தது.

 

விமலின் அண்ணன் வெளிப்படையாகவே சொன்னான். “ஒரு படம் ஹிட் ஆனவுடனேயே அவன் ரஜினிகாந்த், விஜய், அஜித் லெவலுக்கு போயிட்ட மாதிரி பந்தா பண்ண ஆரம்பிச்சுட்டான். நாங்க எல்லாம் எதுக்கும் லாயக்கு இல்லைன்னு சொல்வான். அதனால நான் அவன் கிட்ட பேசறதையே நிறுத்திட்டேன். அவனைப் பார்த்தே நாலு வருஷம் இருக்கும்... இல்லை.. அவன் என் கிட்ட போன்ல கூடப் பேசறது இல்லை.... கொலை எல்லாம் பண்ற அளவுக்குத் தைரியம் பத்தாது.... பயந்த சுபாவம் தான் அவன்...”

 

விமலின் தங்கை சொன்னாள். “எங்களை எல்லாம் மனுசங்களாவே மதிக்க மாட்டான் அவன். அதனால எங்களுக்குள்ளே பேச்சு வார்த்தையே கிடையாது.  அவனுக்கு நண்பர்களா? சினிமாவுலயும், சீரியல்லயும் நடிக்கற சின்ன நடிகர்கள் ரெண்டு மூனு பேர் இருக்காங்க....”

 

கீதா விமலின் சினிமா, சீரியல் நண்பர்களையும் சென்று பார்த்தாள். அவன் அவர்களுடனும் தொடர்பில் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். நர்மதா மரணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நண்பன் தந்த விருந்தில் தான் அவனை அவர்கள் கடைசியாகச் சந்தித்திருக்கிறார்கள். நர்மதாவின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பனுடன் விமல் போனில் பேசியிருக்கிறான். நர்மதாவின் மரணத்திற்குப் பின் அவன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் பலமுறை அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் “ஸ்விட்ச்டு ஆஃப்” அறிவிப்பு தான் வருவதாகச் சொன்னார்கள். அவள் மரணத்திற்கு அவனை போலீஸ் பொறுப்பாக்கி விடலாம் என்று பயந்து அவன் எங்காவது சென்றிருக்கலாம் என்று அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். அவர்களும் அவன் கொலை செய்யும் அளவுக்கு மோசமானவன் அல்ல என்று தெரிவித்தார்கள்.

 

கீதா அர்ஜுனைச் சந்தித்து சாவித்திரியிடமும், மற்றவர்களிடமும் பெற்ற தகவல்களைச் சொன்னாள். அர்ஜுன் மிக முக்கியத் தகவலாய் அந்த ‘கோடி ரூபாய்’ கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மற்ற எல்லாத் தகவல்களும் அவனும் ஏற்கெனவே திரட்டியவையும், அனுமானித்தவையும் தான்.

 

அர்ஜுன் சொன்னான். “நம்ம சந்தேகம் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மேல இருக்கு. அவர்கள்ல கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள வாட்ச் கட்டும் அளவு வசதி இருக்கற ஆள்கள் நிறையவே இருக்காங்க. ஒரு காலத்துலன்னா பணம் இருந்தாக்கூட அரசியல்வாதிங்க அந்த மாதிரி விலையுயர்ந்த வாட்ச்களோ, கார்களோ, பங்களாக்களோ வெச்சிருக்க மாட்டாங்க. பார்க்கறவங்க தப்பாய் நினைச்சுக்குவாங்கங்கற பயம் எல்லாருக்கும் இருந்துச்சு. இந்தக் காலத்துல அந்தப் பயமெல்லாம் அரசியல்வாதிகளுக்குப் போயிடுச்சு.  கோடிக்கணக்குல விலை இருக்கற கார்கள், பங்களாக்கள், கட்டிடங்கள், வாட்ச்கள்னு பல பேர் கிட்ட இருக்கு.”

 

கீதா சொன்னாள். “முதலமைச்சர் கைல கூட ஒன்றரை கோடி ரூபாய் வாட்ச் ஒன்னு இருந்ததை நான் பார்த்திருக்கேன். ஆனால் அவர் தினமும் அதைக் கட்டிக்கறதில்லை. அவர் மகன் கைல எப்பவுமே இருக்கு. நிதியமைச்சர் கைலயும், சாராய அமைச்சர் கைலயும் கூட எப்பவுமே இருக்கு. அந்த வாட்ச்களும் ஐம்பது லட்சத்திலிருந்து ரெண்டு கோடி வரைக்கும் இருக்கற வாட்ச்கள் தான். பல அமைச்சர்களோட மகன்கள் கைலயும் அந்த மாதிரி வாட்ச்கள் இருக்கு. தினமும் அந்த மாதிரி வாட்ச்கள் கட்டறவங்க ஆறேழு பேர் இருப்பாங்கன்னா, தினமும் கட்டிக்கறவங்க பத்து பேராவது இருப்பாங்க. எதிர்க்கட்சியிலயும் நாலஞ்சு பேர் கிட்டயாவது அந்த மாதிரி வாட்ச்கள் இருக்கு.”

 

அர்ஜுன் சொன்னான். “அவங்கள்ல யாரோ ஒருத்தர் தான் கொலையாளியாய் இருக்கணும், கீதா”


(தொடரும்)

என்.கணேசன் 




No comments:

Post a Comment