என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, October 19, 2026

ரட்சகன் 14

 


 

நிரஞ்சன் வீடு திரும்பிய போது நிர்ப்பயா ஹாலில் அமர்ந்திருந்தாள். நிபந்தனைகளைத் திணித்து வீட்டுக்கு வந்திருக்கும் அவளிடம் இறுக்கமாகத் தான் இருக்க வேண்டும், அளவோடு தான் பேச வேண்டும் என்று அவன் முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருந்தான். ஆனாலும் மூன்று வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கையில் அவனையறியாமல் அவன் வாயிலிருந்து “ஹாய் சிஸ்” என்ற வார்த்தைகள் வந்தன. அவளும் புன்னகையுடன் “ஹாய் ப்ரோ” என்றாள்.

 

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அவள் முன்பு போலவே இருக்கிறாள். ஆனால் அவனையும் அறியாமல் “ஹாய் சிஸ்” என்று அழைத்தாலும் அவனால் முன்பு போல அவளிடம் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவன் தனதறைக்குச் செல்ல நகர்ந்த போது நிர்மலா நீலேஷ் விரலைப் பிடித்துக் கொண்டு வந்து அவனுக்கு மாமனை அறிமுகப்படுத்தினாள். “நீலேஷ். இது தான் உன் மாமா”

 

குழந்தை நீலேஷ் தன் தந்தையின் பிரிவைக் கடுமையாக உணர்ந்திருந்தான். தந்தை தினமும் அவனைத் தூக்கிக் கொண்டு விளையாடுவார். அவனை அழைத்துக் கொண்டு வெளியில் செல்வார். அம்மா அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க மாட்டார். அவனுக்கு செல்லம் தருவார். அவனுக்கு நிரஞ்சனைப் பார்க்கையில் அப்பா நினைவுக்கு வந்தார். கிட்டத்தட்ட அப்பாவின் வயதுடைய தோற்றம், அதே உயரம் கொண்ட தாய்மாமனைப் பார்க்கையில் அப்பா நினைவு பலமாக வர, நீலேஷ் ஆவலுடன் இரு கைகளையும் உயர்த்தி தூக்கிக் கொள்ள சைகை செய்தான்.

 

அழகான அந்தக் குழந்தை கைகளை உயர்த்தி அவனைப் பார்த்த போது நிரஞ்சனால் அலட்சியப்படுத்தி நகர முடியவில்லை. அவனை அவன் வாரி எடுத்துக் கொண்ட நிரஞ்சனை நீலேஷ் “மாமா” என்று மெல்லிய குரலில் அழைத்தான். அந்தச் சிறிய வார்த்தை, அந்த அன்பான அழைப்பு நிரஞ்சனை என்னவோ செய்தது. அவன் இதுவரையில் உணர்ந்திருக்காத ஏதோ ஒன்று அவனை அசைத்தது. அவன் அந்தக் குழந்தையுடன் தனதறைக்கு விரைந்தான். அக்காவையோ, பெற்றோரையோ அவன் திரும்பிப் பார்க்கவில்லை.    

 

கராச்சி துறைமுகத்திலிருந்து யுவராஜின் கண்களை ஒரு கருப்புத் துணியால் இறுக்கமாகக் கட்டிக் கொண்டும், கைகளை அவனுக்குப் பின்னால் ஒரு நைலான் கயிறால் இறுக்கமாகக் கட்டிக் கொண்டும் தான் கடத்தல்காரர்கள் அழைத்துச் சென்றார்கள். சுமார் இரண்டு மணி நேர ஜீப் பயணத்திற்குப் பின் அவனை ஒரு இடத்திற்குக் கால்நடையாக அழைத்துச் சென்றார்கள். சீரான தரையாக இல்லாமல் கற்கள் நிறைந்த ஒரு தரையில் அவன் சுமார் கால் மணி நேரம் நடக்க வேண்டியிருந்தது. முடிவாக அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற பிறகு தான் கைகள் மற்றும் கண்களைக் கட்டியிருந்த கட்டுக்களை அவிழ்த்தார்கள்.

 

அவன் எதிரே நின்றிருந்த மனிதனுக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். ஆனால் அவன் திடகாத்திரமாக இருந்தான். அவன் ஹிந்தியில் தான் பேசினான் என்றாலும் கப்பலில் பேசியவனைப் போலவே அவன் பேச்சிலும் உருதுச் சொற்கள் கலந்திருந்தன.

 

“உன்னைக் கடத்திக் கொண்டு வர வேண்டியிருந்தது எங்களுக்கு வருத்தமாகத் தான் இருக்கின்றது. ஆனால் அதைத் தவிர்க்க முடியவில்லை.”

 

அவன் வருத்தப்படுவதாகச் சொன்னாலும், அவன் சொன்ன தொனியில் யுவராஜுக்கு எந்த வருத்தத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

யுவராஜ் கேட்டான். ”நீங்கள் என்னை எதற்காகக் கடத்தினீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

 

“அதை நான் உனக்குத் தெரிவிக்க முடியாது.”

 

யுவராஜ் கேட்டான். “என்னால் உங்களுக்கு எதாவது பிரச்சினை ஆகியிருக்கிறதா?”

 

“இல்லை.”

 

“பின் ஏன்?”

 

அவன் இதற்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “உனக்கு வேண்டப்பட்டவர்களால் எங்களுக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும்.”

 

“அது என் மாமனாராக இருந்தால் நீங்கள் வீண் முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அவர் என்னை மருமகனாக ஏற்காதவர். அதனால் அவர் எனக்காக எதையும் செய்ய மாட்டார்.”

 

யுவராஜ் சொன்னதற்கு அவன் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லவில்லை.  அவன் சொன்னான். “எங்கள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டால் உன்னை பத்திரமாக இந்தியாவுக்கு நாங்களே அனுப்பி வைப்போம். அது வரை நீ அமைதியாக இருந்து எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தப்பிக்க முயற்சி செய்தால் நீ சுட்டுக் கொல்லப்படுவாய். நீ சாக அவசரப்பட மாட்டாய் என்று நம்புகிறேன்.”

 

“இப்போது எங்கிருக்கிறோம்?”

 

“உனக்கு சொன்னால் புரியாது. எங்களுடைய பலத்த காவலில் இருக்கிறாய் என்பதை மட்டும் புரிந்து கொள் போதும்.”

 

யுவராஜுக்குத் தன் மனைவியையும், குழந்தையையும் பற்றிச் சொல்லி ஒரு முறை கெஞ்சிப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அது எந்தப் பலனும் இருக்காது என்பது அந்த ஆளைப் பார்க்கையிலேயே அவனுக்குப் புரிந்தது. அவன் பரிதாபமாக மௌனமாய் இருந்தான்.

 

அந்த ஆள் தன்னுடைய அலைபேசியில் யுவராஜை இரண்டு படங்கள் எடுத்து விட்டு போய் விட்டான். அறைக்கதவு பூட்டப்படும் சத்தம் யுவராஜுக்குக் கேட்டது. அவன் அவர்களிடம் தான் இருக்கிறான், உயிரோடு இருக்கிறான் என்பதை நிரூபிக்கத் தான் அவன் படம் எடுத்திருக்கிறான். அந்தப் படங்களை அனுப்பி தான் அவன் பேரம் பேசப் போகிறான் என்பது புரிந்தது. யார் இவன்? யாருக்காக இவன் செயல்படுகிறான்? இவனுடைய பின்புலம் என்ன? இவன் என்ன கேட்கப் போகிறான்? கேள்விகள் நீண்டன. ஆனால் பதில்களைத் தெரிந்து கொள்ளத்தான் வழியில்லை.

 

பெருமூச்சு விட்ட யுவராஜ் தானிருக்கும் அறையை ஆராய்ந்தான். பாழடைந்த வீட்டின் ஒரு பகுதியாக அது இருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. எட்டடிக்கு எட்டடி உள்ள சிறிய அறை அது. தரை பழங்காலத்து சிமெண்ட் தரையாக இருந்தது. அதிலும் சில இடங்கள் பெயர்ந்து குழிகள் இருந்தன. அறையில் ஒரு அலமாரி இருந்தது. அதில் இரண்டு செட் பழைய ஆடைகள் இருந்தன. ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீரும் அருகே ஒரு தம்ளரும் ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்தன. தரையின் இன்னொரு மூலையில் ஒரு பாயும், ஒரு தலையணையும், ஒரு போர்வையும் இருந்தன. அறையை ஒட்டி நாலடிக்கு நாலடி கொண்ட ஒரு கழிப்பறை இருந்தது. அறையில் ஒரே ஒரு ஜன்னல் இருந்தது. அது திறக்க முடியாதபடி வெளியே ஆணியடிக்கப்பட்டு இருந்தது. அறையில் ஒரே ஒரு சிறிய பல்பு தவிர வேறு எந்த மின் சாதனமும் இல்லை.   

 

இதில் இனி எத்தனை நாட்கள் கழிக்க வேண்டியிருக்கும் என்பது யுவராஜுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவன் வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று ஒரு கணம் நினைத்தான். பின் அது தவறான அபிப்பிராயமாக அவனுக்குத் தோன்றியது. அவனை வைத்து அவர்களுக்குக் காரியம் கைகூடா விட்டால் அவர்கள் அவனைக் கொன்று விடவும் கூடும். சாவதில் அவனுக்கு வருத்தம் இல்லை. ஆனால் அவன் திரும்பச் செல்லா விட்டால் அவன் மனைவியும், மகனும் அடையப்போகும் துக்கத்தை நினைக்கையில்  அவன் வேதனை அதிகமாகியது.

 

எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த உதவியும் கேட்டு அவனுடைய மாமனாரிடம் அவனோ, அவன் மனைவியோ, மகனோ போய் நிற்கக்கூடாது என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தவன். ஆனால் இன்று அவனைப் பணயக்கைதியாக்கி அவன் மாமனாரிடம் இந்தக் கடத்தல்காரர்கள் பணம் பறிக்கத் திட்டமிட்டு இருப்பது போல் தெரிகிறது. அவன் உயிரோடு வீடு திரும்ப வேண்டுமென்றால் கடத்தல்காரர்கள் கேட்பதை அவன் மாமனார் தர வேண்டிய நிலைமை இன்று இருக்கிறது. அதாவது அவனுடைய மாமனாரின் தயவு தேவைப்படுகிறது. விதி அவனுக்குக் கருணை காட்டவில்லை.  

 

அவனை மீட்க அவர் எதையும் செய்யா விட்டாலும் அவருடைய மகளை அவர் கைவிட்டு விடமாட்டார் என்ற நம்பிக்கை யுவராஜுக்கு இருக்கிறது. கைவிடுபவராக இருந்தால் அவனுடன் வாழும் போது கூட அவளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க மாட்டார். நிர்ப்பயாவும், நீலேஷும் நலமாகவும் பாதுகாப்புடனும் இருந்தால் அது போதும் அவனுக்கு. ஆனால் அவனைப் பிரிந்திருக்கும் அவர்கள் மனம் வாடுவார்கள் என்ற வேதனை தான் மனதை அரித்தது.   


(தொடரும்)

என்.கணேசன்




1 comment: