அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. ஒரு கணம் தங்கையை யோசனையுடன் பார்த்து விட்டு அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து விட்டான். அம்மா அப்போதும் அங்கேயே தான் நின்று துணியை மடித்துக் கொண்டு இருந்தாள். தங்கை சொன்னது அவள் காதிலும் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மகன் பக்கம் திரும்பவில்லை.
அர்ஜுன் தனதறைக்கு வந்தான். தங்கை சொன்ன
விஷயங்கள் அவனை மிகவும் யோசிக்க வைத்தன. அம்மாவைப் போல்
அவனும் ஒரு தனி கூட்டுக்குள் இருக்கிறான் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. எந்த ஒரு
விஷயத்தை அம்மாவின் தவறாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதே தவறு அவனிடமும் இருப்பதாக, நியாயமானவளாக
அவன் நினைக்கும் அவன் தங்கையே சொல்கிறாள். அம்மாவும்
தனிக்கூட்டுக்குள் இருப்பதை நித்யா தெரிந்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. இத்தனைக்கும் அம்மா அவனிடம் ஒரு இடைவெளியில் இருப்பது போல்
அவளிடம் என்றுமே இருந்ததில்லை. மகள் என்றுமே அவளுக்கு செல்லம் தான். அப்படியிருந்தும் நித்யா அம்மாவைச் சரியாக எடை போட்டு இருக்கிறாள். அது தான்
கீதா அவனைக் காதலிக்கிறாள்
என்ற நித்யாவின் கணிப்புக்கு அதிக கனம் தந்தது.
”வார்த்தைகள்ல
சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு
தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி சொல்வாங்க?” என்ற வார்த்தைகள்
அவன் காதில் ரீங்காரம் செய்தன. அவன் மனம்
கீதாவைப் பற்றிய நினைவுகளை அலசியது.
ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் ஆரம்பித்த நட்பு அவர்களுடையது. கீதா மிக நல்ல பெண். நேர்மையானவள். யோசித்துப் பார்த்தால், அழகானவளும் கூட. அடிக்கடிப் பார்த்தாலும், எத்தனையோ நிருபர்களை, புன்னகையுடனும், கைகாட்டலுடனும், ஹலோவுடனும் அவன் நிறுத்திக் கொண்டிருந்தாலும் கீதா மட்டும் அதை
எல்லாம் தாண்டி அவன் வாழ்க்கையில் வந்திருந்தாள். இருவரும் தினமும் சந்திக்கா விட்டாலும், கடந்த இரண்டு வருடங்களாக தினமும் அலைபேசியில் பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்வதெல்லாம் அவர்களுடைய துறை சார்ந்த விஷயங்களைத் தான். அவளாவது தன்
குடும்ப விஷயங்களை வெளிப்படையாக அவனிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அவன் தன்
குடும்ப விஷயங்களை அவளிடம் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஒருவேளை
அவர்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்கிறார்கள் என்பதை வைத்து அது காதலால் என்று நித்யா
சந்தேகப்படுகிறாளோ? எதிர்பாலின நட்புக்குப் பல சமயங்களில் காதல் என்ற தவறான பெயர் சமூகத்தால் வைக்கப்பட்டு
விடுவது உண்டு. நித்யா அந்த வகை முட்டாள் அல்ல.
நித்யா தான் அவன் பிறந்த நாளுக்கு கீதாவை இங்கே அழைக்கச் சொன்னவள். அப்படி கீதா வந்த போது தான்
நித்யா கீதாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள். அதற்கு முன்போ,
பின்போ அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை. அந்த ஒரு
சந்திப்பிலேயே நித்யா இந்த அனுமானத்திற்கு வந்திருக்கிறாள். அவன் மனம்
கீதாவுடனான பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது. அவளுடன்
பழகிய தருணங்கள் திரைப்படமாய் மனத்திரையில் வந்து போனது. புதிதாகப்
பார்ப்பது போல் அவன் பார்க்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கையில் அவள் கண்களில் தெரிந்த
உற்சாகம், மற்றவர்களைத்
தவிர்த்து அவனுடன் மட்டும் அவள் அதிகம் பழகியது எல்லாம் ஒரு நெருக்கமான நட்பின் அறிகுறிகளாகக்
கூட இருக்கலாம். ஆனால்
அவர்கள் பலருடன் ஒரே இடத்தில் இருக்கையில்,
அவன் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டோ, வேறு எதையாவது
கவனித்துக் கொண்டோ இருந்து விட்டுத் திடீரென்று திரும்பிப் பார்க்கையில் சில சமயங்களில்
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை இப்போது அவன் நினைவுகூர்கிறான்.
அந்த சமயங்களில் ’என்ன?’ என்று அவன் புருவங்களை உயர்த்தி, பார்வையால் கேட்டிருக்கிறான். சில சமயங்களில் ’ஒன்றுமில்லை’ என்று சைகையால் சொல்லித் திரும்பியிருக்கிறாள்.
சில சமயங்களில் “உன்னிடம் அவர் என்ன சொல்கிறார்
என்று யோசித்தபடி பார்த்தேன்” என்றும், சில சமயங்களில் “நீ என்ன கவனிக்கிறாய் என்று பார்த்தேன்”
என்றும் பிறகு விளக்கியிருக்கிறாள்.
ஒரு பெண்ணின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவு அவன் அறிவுக்குறைபாடு
உள்ளவன் அல்ல. ஒரு சிறு பார்வையிலேயே பலதையும் புரிந்து கொள்ளக்கூடிய அளவு சூட்சும அறிவு
படைத்தவன் தான் அவன். அப்படி இருந்தும், அவளைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, ”என்ன?”
என்று கேட்கும் அளவு அவன் மரமண்டையாக இருந்திருக்கிறான். இப்போது தங்கை தெரிவித்த போது கூட அவன் முதலில் அதை நம்ப மறுத்திருக்கிறான்.
ஒரு நோயாளியின் நோயை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ச்சி செய்யும்
மருத்துவர் போல, விலகி நின்று யோசிக்கையில் ஒன்று அவனுக்குப் புரிந்தது. அந்தக் காதலை அங்கீகரிப்பதில் அவன் ஆழ்மனம் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.
அது
ஏனென்று அவன் மேலும் யோசித்தான்.
மிக நெருக்கமாக யாரிடம் பழகுவதையும் அது தான் அவனைத் தடுத்திருக்கிறது.
ஒரு எல்லையோடு அவனை நிறுத்தியிருக்கிறது. அதற்கு
மேல் போவதில் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.
ஆழமாக யோசித்த அந்தக் கணத்தில், காரிருளில் மின்னலாக ஒரு
உண்மை அவனுக்குப் புலப்பட்டது. சிறு வயதிலிருந்தே அவன் தாயிடம்
எதிர்பார்த்து கிடைக்காத அன்பு அவனை ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறை அவன் நெருங்கிப் போன போதும் அவள் அவனிடமிருந்து விலகியே போய்
இருக்கிறாள். யாரையும் மிக அதிகமாக நேசிப்பதும், நெருங்குவதும் காயப்படத்தான் என்ற அனுபவ பாடத்தை அவன் குழந்தைப்பருவத்திலேயே
அவன் ஆழ்மனம் கற்றிருக்கிறது. அது தான் அவன் வளர்ந்த பின்னும்,
நட்பல்லாத காதல் என்பதை ஏற்க விடாமல் அவனைத் தடுத்திருக்கிறது.
அவள் காட்டுவது நட்பு தான் என்று எண்ண வைத்து அவனை நட்பிலேயே நிற்க வைத்திருக்கிறது. வேறொருத்தியாக இருந்திருந்தால் என்றோ விலகிப் போயிருப்பாள். ஆனால் பாவம் கீதா, விலக முடியாமல் அவனுக்கு சௌகரியமான
நட்பிலேயே அவனுடன் இன்னும் பழகிக் கொண்டு இருக்கிறாள்.
அவன் மேலும் யோசித்தான். இப்போது அவன் மிகவும் நேசிக்கும் அவனுடைய தங்கை
கூட அவளாக உரிமை எடுத்துக் கொண்டு அவனிடம் அன்பு காட்டி, அவனைப்
பற்றி பெருமிதமாக எண்ணி, அவனுடன் சிறு சண்டைகள் போட்டு,
அன்பைக் கொடுத்தும், அன்பை எதிர்பார்த்தும் அவனுடைய
அரண்களை உடைத்து தான் உள்ளே நுழைந்திருக்கிறாள். நீ எனக்கு முக்கியம்,
நான் என்றைக்கும் உன்னைக் காயப்படுத்த மாட்டேன் என்று அவன் ஆழ்மனதிற்கு
சிறிது சிறிதாக நம்பிக்கை ஊட்டி தான் அவள் அவனை நெருங்கியிருக்கிறாள்.
திடீரென்று அவனுக்கு ஏனோ அழத் தோன்றியது. அவன் சத்தமில்லாமல் அழுதான்.
அவனுடைய பலவீனத்திற்காகவும், அவனுடைய ஆழ்மன காயத்திற்காகவும்
அவன் அழுதான். அதையெல்லாம் மீறி அவனை நேசிக்கும் அவன் தங்கையையும்,
அவனைக் காதலிக்கும் கீதாவையும் நன்றியுடன் நினைத்து அழுதான்.
அழுது சிறிது மனப்பாரம் குறைந்த போது நித்யா சொன்னது மறுபடி
அவன் காதுகளில் ஒலித்தது.
”நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட
தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.” இன்னொரு சாத்தியக்கூறும் அவனுக்கு அந்தக்
கணத்தில் புலப்பட்டது. அப்படியானால் அவன் நிலைமையில் தான் அம்மாவும் இருக்கிறாளோ? அவளும் ஆழ்மனதில் அவனைப் போலவே காயப்பட்டிருப்பாளோ? ஆழமாக
அவன் யோசித்தான். அவளும் மகளையும், கணவரையும்
தவிர வேறு யாருடனும் நெருக்கமாகப் பழகி அவன் பார்த்தது இல்லை. அவளுக்குத் தோழிகள் இல்லை. அவள் சிறு வயதிலேயே தாய் தந்தையை
இழந்தவள். அவளுக்கு உடன்பிறப்புகளோ, உறவினர்களோ
யாருமில்லை. அனாதையான அவளும் அவனைப் போலவே சிறுவயதிலேயே எத்தனையோ
காயப்பட்டிருக்கலாம். மேலும் காயப்படாமல் இருக்க அவளும் ஒரு கூட்டுக்குள்
தஞ்சம் புகுந்திருக்கலாம்….
இந்தப் புதிய கோணத்தில் யோசிக்கும் போது அவனுக்கு அம்மா மீதிருக்கும்
கோபம் குறைந்து பச்சாதாபம் பிறந்தது.
“அர்ஜுன்” ஞான மூர்த்தி அழைக்கும் சத்தம் கேட்டது.
அவன் கட்டுரையை அவர் படித்து முடித்து விட்டார். அர்ஜுன் கண்களைத் துடைத்து கொண்டான்.
எழுந்து கண்ணாடியைப் பார்த்தான். அழுத சுவடு தெரியவில்லை.
அவன் கட்டுரைக்கான தீர்ப்பு என்ன என்று அறிய ஆர்வத்துடன் சென்றான்.


Sir., ithu varai Harini and sahana love moments light ah touch pannitu, Ranjani kita konjam adhigam ah irunthathu ,
ReplyDeleteBut geetha kita superb sir ,
Ungaluku love subjects vida amanushyam, aanmeegam, apdi thaan best ah nu nenachin irukken ,
Ippo thaan penmaiyin nun unarvugalai azhagaa vaarthai paduthiteenga ,
Thank u sir
Many thanks
ReplyDelete