என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 19, 2026

சதுரங்கம் 10


 ஞானமூர்த்தி தன் முன் வந்தமர்ந்த மகனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி சொன்னார். “ரொம்ப நல்லா எழுதியிருக்கே அர்ஜுன். சமீப காலமாய் சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளையும், குற்றங்களையும் விரிவாய் எழுதி, அதற்கான காரணங்கள் என்னென்னன்னு தெளிவாய் விவரிச்சிருக்கே. மக்களிடம் இருக்கும் பேராசை, வேகமாய் ஆதாயங்களைப் பெறத் துடிக்கும் அவசரம், நாட்டு நடப்புகளைக் கவனிக்கத் தவறுவது, மோசடிக்கான வாய்ப்புகள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததுன்னு வரிசையாய் பட்டியல் போட்டு ரொம்ப அருமையாய்ச் சொல்லியிருக்கே. அதிலிருந்து எப்படி தற்காத்துக்கறதுன்னும் அதே ஆழத்துல சொல்லியிருக்கிறது விசேஷம். நிறைய பேர் பிரச்சினை என்னன்னு அழகாய் சுட்டிக்காட்டிடுவாங்க. ஆனால் தீர்வு என்னன்னு தெளிவாய்ச் சொல்ல மாட்டாங்க. அது பொத்தாம் பொதுவாய் இருக்கும்.  நீ அந்தத் தவறைச் செய்யல.”

 

அவர் மகனுக்காகக் கூட பொய்யான இதமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லக்கூடியவர் அல்ல என்பதால் அவர் சொன்னது அர்ஜுனுக்கு பரமதிருப்தியாக இருந்தது. அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நித்யாவும் அங்கு வந்தமர்ந்து கொண்டாள். அவள் முகத்திலும் பெருமிதம் தெரிந்தது.

 

பானுமதி சற்று தள்ளியிருந்தாலும் அவளும் கணவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். நித்யா அங்கு சென்று அமர்ந்ததையும், அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்ததையும் கூட அவள் கவனித்தாள்.   சற்று முன் அண்ணனிடம்நீ அம்மா மாதிரியே தனியொரு கூட்டுக்குள்ளே இருக்கிறாய். அது தப்புண்ணாஎன்று தனிமையில் சுட்டிக் காட்டியிருந்தாலும் நித்யா வேறு யார் முன்பும் என்றைக்கும் அண்ணனை விட்டுக் கொடுத்ததில்லை. கணவர், மகன், மகள் மூவரும் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் அந்தக் காட்சியைப் பார்க்கையில் ஒரு ஆதர்ச குடும்பமாகவே பானுமதிக்குத் தெரிந்தது. அவள் தான் ஒரு அபசுரமாய், அன்னியமாய் அதில் ஒட்ட முடியாதவளாக, தள்ளியே இருக்கிறாள்...

 

அர்ஜுன் தந்தையிடம் கேட்டான். “இதுல எதையாவது சேர்த்திருக்கலாம்னு தோணுதாப்பா?”

 

ஞானமூர்த்தி ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “பெரிய அளவுல மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் மற்ற ஏமாளிகளும் தான். இத்தனை பேர் இதைச் செய்யறாங்களே, ஆதரிக்கிறாங்களே, காரணமில்லாமலா அப்படிச் செய்வாங்கன்னு நினைக்கிற மனோபாவம் மக்களுக்கு அதிகம் உண்டு.  உதாரணத்துக்கு, அதிக வட்டி தர்றோம், பெரிய அளவுல ஆதாயம் தர்றோம்னு ஏமாத்தறதையே எடுத்துக்கோ. ஆரம்பத்துல அதுல முதலீடு செய்யாதவன் கூட கொஞ்ச காலம் கழிச்சு, தன்னைச் சுற்றிலும் நிறைய பேர் அதுல முதலீடு செய்யறதையும், அவங்க அதிக வட்டி வாங்கி அனுபவிக்கறதையும் பார்த்துட்டு மனம் மாறிடறான். தானும் அதில் முதலீடு செய்ய ஆரம்பிச்சடறான்.  ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ அதிக வட்டி கொடுத்துட்டு, நிறைய பேர் கிட்ட பணம் வாங்கிட்டு, திடீர்னு ஒரு நாள் தலைமறைவாகிடறது காலம் காலமாய் நடந்துட்டு தான் வருது. ஆனாலும் திரும்பத் திரும்ப மக்கள் ஏமாறுவதற்கு அவங்களோட ஆட்டுமந்தை புத்தியும் கூட ஒரு காரணம் தான்.  சீட்டுக் கம்பெனி உதாரணத்தை நீ சொல்லியிருக்கிற இடத்தில் இந்தக் காரணத்தையும் கூட சேர்த்திருக்கலாம்…”

 

நித்யாவும் அர்ஜுனும் தந்தையை வியப்புடன் பார்த்தார்கள். எதையும் வேகமாகவும் ஆழமாகவும் அலச முடிந்த அவருடைய பேரறிவு அவர்களை இப்படி அடிக்கடி வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் அவரை அப்படிப் பார்ப்பதையும் பானுமதி கவனித்தாள். தந்தையையாவது அவர்கள் அப்படிப் பார்க்க முடிகிறதே என்று அவள் நினைத்தாள். அவளைப் போல் அவளுடைய குழந்தைகள் முட்டாள்களாக இல்லை. அது அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அவளைப் போல் அவர்கள் ஆக வேண்டாம்.   

 

அர்ஜுன் சொன்னான். “அப்பா, தாத்தாவோட நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எங்க பத்திரிக்கைல எழுத தேவசகாயம் சார் சொல்லியிருக்கார். குடும்பத்து ஆளுங்க எல்லார் கிட்டயும் பேட்டி எடுத்தும் அதுல சேர்க்கச் சொல்லியிருக்கார். அதனால பேட்டி எடுக்கறத உங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்புறம் பாட்டி, சித்தப்பா, அம்மா கிட்ட பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன்…”

 

சொல்லி விட்டு அவன் தள்ளியிருந்த தாயைப் பார்த்தான். பானுமதி மெள்ள சமையலறைப் பக்கம் நகர்ந்தாள். நித்யா அண்ணன் அம்மாவைப் பார்த்ததையும், அம்மா சமையலறைக்குச் சென்று விட்டதையும் கவனித்தாள்.

 

தாத்தா இருக்கறப்ப சித்தப்பாக்குக் கல்யாணம் ஆகியிருந்துச்சாப்பா. ஆகியிருந்தா சித்தியையும் பேட்டி எடுக்கலாம்…” அர்ஜுன் சொன்னான்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இல்லை. அவர் இறந்தப்பறம் ராஜாராம் தான் கல்யாணம் செய்துகிட்டான்.”

 

சரி. அப்படின்னா நீங்க நாலு பேர். உங்க கிட்டே எப்போ பேட்டியை ஆரம்பிக்கலாம்?”

 

எப்ப வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். அவரைப் பற்றிச் சொல்ல நான் தயார் செய்துக்கணும்னே இல்லை. மனசெல்லாம் அவர் இப்பவும் நிறைஞ்சு இருக்கார். அவர் சம்பந்தமான எதையும் என் வாழ்க்கைல நான் நினைவுபடுத்திக்கணும்னே இல்லை. மறந்தாத் தானே நினைவுபடுத்திக்கணும். என்னால எப்பவும் அவர் சம்பந்தமான எதையும் மறக்க முடியாது. ரொம்ப பெரிய மனுஷன்டா அவர். அவர் மாதிரி இன்னொரு ஆளை யாருமே பார்க்க முடியாதுடா.” சொல்லும் போதே ஞானமூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

 

அர்ஜுனுக்கு தந்தையைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது. அவன் அவரிடம் புன்னகையுடன் கிண்டலாகச் சொன்னான். “ஆமா எல்லாருக்கும் அவங்கவங்க அப்பா உசத்தி தான். அவங்களால அவரை மாதிரி இன்னொரு ஆளைப் பார்க்க முடியாது தான்.” 

 

நித்யாவும் புன்னகைத்தாள். ஞானமூர்த்தியும் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தாலும் அவர் கண்கள் லேசாக ஈரமாகின. ஒரு கணம் மகனையே யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னார்.

 

உனக்கு ஒரு உண்மை தெரியுமா அர்ஜுன். உண்மையில் நான் அவர் பெற்ற மகன் இல்லை.”

 

அர்ஜுன், நித்யா இருவரும் அதிர்ச்சியுடன் தந்தையைப் பார்த்தார்கள்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இப்ப நான் சொல்றது நமக்குள்ளேயே இருக்கட்டும். என்னைப் பெற்றவங்க அவரோட ஊரைச் சேர்ந்தவங்க. ஏதோ தூரத்து உறவும் கூட. என் ஐந்தாவது வயசுல நான் என்னைப் பெற்றவங்களை ஒரு விபத்துல இழந்துட்டேன். அனாதையா நிர்க்கதியா நின்ன என்னை அவர் கூட்டிகிட்டு வந்துட்டார். அனாதைப் பையனாவே அவர் என்னை வளர்த்து இருக்கலாம். வீட்டுல சில எடுபிடி வேலைகள் செய்ய வெச்சிருக்கலாம். அவருக்கு ராஜாராம் அப்ப தான் பிறந்திருந்தான். அதனால குழந்தைகள் இல்லைங்கற நிலைமையும் இல்லை. ஆனா அந்தப் பெரிய மனுஷன் என்னைத் தத்து எடுத்துகிட்டார்…..” சொல்லச் சொல்ல அவர் குரல் உடைந்தது.

 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானமூர்த்தி தொடர்ந்து சொன்னார். அந்த நாள்ல இருந்து அவர் நான் அவரோட தத்துப் பிள்ளைன்னு யார் கிட்டயும் சொன்னது கூட இல்லை. விஷயம் தெரிஞ்ச ஒருசிலரைக் கூட அதுபற்றி வெளியில் சொல்ல அவர் அனுமதிச்சதில்லை. அவரைப் பொருத்த வரைக்கும் அவருக்கு நான் தான் அவரோட மூத்த பிள்ளை. ராஜாராம் அவரோட ரெண்டாவது பிள்ளை. அப்படித் தான் அவர் நினைச்சார். அப்படித்தான் அவர் மத்தவங்க கிட்டயும் சொன்னார். அதனால உலகமும் எங்களை அப்படி தான் நினைச்சுகிட்டு இருக்கு. அவர் இறந்த பிறகும் அவருக்கு கொள்ளி கூட நான் தான் வெச்சேன்…. அப்படி அன்பு காட்டி வளர்க்க நான் அவருக்கு என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியலை. எனக்கு என்னைப் பெத்தவங்க முகம் கூட ஞாபகம் இல்லை. என் அப்பா அவர் தான்….”

 

அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அர்ஜுனும், நித்யாவும் கூடக் கண்கலங்கினார்கள். அர்ஜுனுக்கு இது வரை புரியாத சில விஷயங்கள் இப்போது தான் மெள்ளப் புரிய ஆரம்பித்தன.


 (தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment