என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 2, 2026

யோகி 145


 பிரம்மானந்தா மிகவும் கஷ்டப்பட்டுக் கைதட்டினார். “நல்ல சிந்தனை ரகுராமன். சரியான சிந்தனையும் கூட.”

 

அந்தப் பாராட்டிலும் ரகுராமன் புளங்காகிதம் அடைந்தது போல் தெரியவில்லை. பிரம்மானந்தாவுக்குத் தான் நினைத்தபடி அவரை சந்தோஷப்படுத்தவோ, வருத்தப்பட வைக்கவோ முடியாதது என்னவோ போலிருந்தது.   ஏற்கெனவே தன்னிறைவு பெற்ற ஆனந்த மனிதராய் அவர் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது. நிஜமாகவே அந்த ரகசியத்தை பிரம்மானந்தா அறிந்து கொள்ள விரும்பினார். ஏற்கெனவே கேட்க நினைத்து, கேட்டும் விட்டது தான் அது. ஆனால் தேவை இல்லாமல் கயிற்றுக் கட்டில், சொகுசு சோபா பற்றிப் பேசி விட்டோம் என்று தோன்ற அவர் கேட்டார். “நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன காரணம் ரகுராமன்?”

 

ஆசைகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.”

 

எதற்காவது ஆசைப்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லவா ஆனந்தம் இருக்கிறது. ஆசைகள் இல்லாமல் இருப்பது எப்படி ஆனந்தமாகும்?”

 

ஒன்றுக்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அது நிறைவேறுகிறது அல்லது அதை அடைகிறீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த ஆனந்தம் இருப்பது அடுத்த ஆசை வரும் வரையில் மட்டுமே அல்லவா?”

 

தோட்டக்காரன் ஞானி போல் பேச ஆரம்பித்தது பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. ஆசைகளுக்கு முடிவில்லை, ஆசைகள் தான் துன்பத்திற்குக் காரணம் என்ற வெற்று வேதாந்தப் பேச்சை மனிதனின் கையாலாகாத்தனம் என்று அவர் நினைத்தார். “ஆசைப்பட்டதைச் சாதித்தும், அடைந்தும் ஆனந்தம் அடைவது சரி தானே? அடுத்த ஆசை வரும் வரையில் தான் அது நீடிக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்த ஆசையையும் நிறைவேற்றி மறுபடி அவன் ஆனந்தம் உணர்வதில் என்ன தவறு?”

 

ரகுராமன் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு அடுத்த ஆசை வரும் வரை சந்தோஷமாக இருக்கிறீர்கள் அல்லவா? கவனமாய் ஆராய்ந்தால் அது ஆசைகள் இல்லாத நிலையால் வரும் ஆனந்தம். இரண்டு ஆசைகளுக்கு இடையே இருக்கும் நிறைவு அது. சொல்லப் போனால் ஆசைகள் தான் அந்த ஆனந்தத்தையும், நிறைவையும் இல்லாமல் ஆக்குகின்றன. ஆசைகள் இல்லாமல் இருந்தால் ஆனந்தமும், நிறைவும், தானாக நீடிக்கும்.”

 

வார்த்தை ஜாலங்களில் இது வரை, தான் தான் கெட்டிக்காரர் என்று பிரம்மானந்தா நினைத்திருந்தார். இந்த ஆள் அவரை விடக் கெட்டிக்காரர் போல தர்க்க ரீதியாகப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. நினைத்தது போல் தோட்டக்காரன் மந்தபுத்திக்காரன் அல்ல.

 

ஆசையில்லாமல் வெறுமையாக இருந்தால் அதில் எப்படி நிறைவு இருக்கும்? உலகத்தில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? நல்லது எப்படி நடக்கும்?” பிரம்மானந்தா கேட்டார்.

 

ரகுராமன் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் பொறுமையாகவும், கனிவாகவும் சொன்னார். “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். ஆசையில்லாத நிலை வெறுமை அல்ல. திறமையைத் தரும் இறைவன் ஒருவனை வெறுமையாக இருக்க விடமாட்டான். இறைவனின் படைப்பில் வெறுமைகள் இல்லை. ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். அதை இறைவனுடைய வேலை என்ற ஞானத்துடன் செய்பவனுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் இல்லை. விளைவு எதுவானாலும் அது இறைவனைச் சேர்ந்தது. அதனால் அவன் அமைதி இழக்காமல் எதுவும் செய்ய முடியும். அந்த வேலையில் மனிதனுடையநான், என்னுடையஎன்ற சேர்க்கை சேரும் போது தான் பிரச்சினை உருவாகிறது. விளைவுகள் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் என்றாகி விடுகிறது. அதன் மூலம் சந்தோஷம், துக்கம் என்ற இரண்டு அலைகளும் அவன் வாழ்க்கையில் மாறி மாறி அடித்து அவனை அலைக்கழிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு மனிதன் அமைதியாய் இருக்க முடியும். ஆனால் அதுவே மனிதனின் தனிப்பட்ட ஆசையால் ஏற்படுத்திக் கொண்ட வேலையானால், முடியும் வரை கவலை, கோபம், பயம், விரக்தி, சந்தோஷம், துக்கம், விரக்தி, வெற்றி, தோல்வி என்று மாறி மாறி உணர்வது தவிர்க்க முடியாததாகிறது.  முடிந்த பின்பும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒருவன் பாடுபட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடையது என்ற அற்பதிருப்திக்காக படும் கஷ்டங்கள் ஏராளம். உண்மையில் எதுவும் அவனுடையது அல்ல. உலகம் ஒவ்வொரு கணமும் பல விதங்களில் அதைத் தெரிவித்துக் கொண்டு தானிருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நடக்க முடியாமல் போவது தான் மாயையின் விளையாட்டு.”

 

ஒரு நிமிடம் அங்கே மயான அமைதி நிலவியது. தோட்டக்காரனிடம்தாழ்ந்த நிலையில் இருக்கிறாய், வெற்று ஆளாய் இருக்கிறாய்என்பதை நாசுக்காய் புரிய வைக்கப் போனது, அவர்உன்னுடையது என்ற அற்பத்திருப்திக்காக நிறைய கஷ்டப்படுகிறாய், இது மாயையின் விளையாட்டுஎன்று புரிய வைத்ததில் முடிந்து விட்டது. இப்படி வலியப் போய் தடி கொடுத்து அடி வாங்கியதை பிரம்மானந்தாவால் சகிக்க முடியவில்லை. மேலும், இந்த யோகாலயத்தில் இது வரை அவர் தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார். அவரே இந்த இடத்தில் ஒரு உபதேசம் கேட்கும் நிலைமை அவருக்கு இதுவரை வந்ததில்லை. இந்த முதல் அனுபவம் அவருக்குக் கசந்தது.   இந்தக் கசப்பை தொடர்ந்து நீட்டிக்கப் பிடிக்காமல் அவர் வறண்ட குரலில் சொன்னார். “உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.”

 

கூடுதலாக ரகுராமனிடம் பேசும் (கேட்கும்?) மனநிலையில் பிரம்மானந்தா இல்லை என்பது பாண்டியனுக்கு விளங்கி விட்டது. பாண்டியன் ரகுராமனைப் பார்த்து கைகூப்பினார். “நன்றி. கண்ணன் திரும்ப காரில் உங்களைக் கொண்டு போய் விடுவார்.”

 

ரகுராமன் மூவருக்கும் கைகூப்பி விட்டு எழுந்தார். ஷ்ரவனுக்கு அவருடைய மாறாத மலர்ந்த முகம் இராமாயணத்து ரகுராமனையே நினைவுபடுத்தியது. நீயே அரசன் என்று தசரதன் சொன்ன போதும், உன் தம்பியே அரசன் என்று கைகேயி சொன்ன போதும் ஸ்ரீராமனின் முக மலர்ச்சியில் மாற்றம் இருக்கவில்லையாம். சித்திரத்தில் வரைந்த செந்தாமரை போல அவன் முகம் இருந்தது என்று கவி சொன்னதாகப் படித்த நினைவு வந்தது. இவருக்கும், அழைத்து வந்த போதும் மகிழ்ச்சி, அனுப்பி வைக்கும் போதும் மகிழ்ச்சி!

 

ஷ்ரவன் பரவசத்துடன் எழுந்து நின்று அவரது காலைத் தொட்டு வணங்கினான்.   ரகுராமன் கனிவன்புடன் அவனைப் பார்த்து அவன் தலையை இரண்டு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்தார். அந்தத் தொடுதலில் உடலெங்கும் மின் அதிர்வுகளை ஷ்ரவன் உணர்ந்தான்.

 

கண்ணனைப் பின் தொடர்ந்து ரகுராமன் செல்ல, பாண்டியன் பிரம்மானந்தாவின் உதவியாளனை அழைத்து தாழ்ந்த குரலில் சொன்னார். “அந்த ஆளோட காலடி மண்ணை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வை

 

பிரம்மானந்தாவுக்கு ஷ்ரவனும், பாண்டியனும் சேர்ந்து ரகுராமன் யோகியே என்று முடிவு செய்து விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

பிரம்மானந்தாவின் கடுகடுத்த முகத்தைப் பார்த்த ஷ்ரவன் இவர் முன்னிலையில் அவர் காலைத் தொட்டு வணங்கியது இவருக்குப் பிடிக்கவில்லைஎன்று புரிந்து கொண்டான். உடனடியாக எழுந்து பிரம்மானந்தாவை  சாஷ்டாங்கமாய் வணங்கினான்.

 

அவரிடமிருந்து சிறப்பான பதில்களைப் பெறும்படியாக நீங்கள் கேட்ட கேள்விகள் அருமையிலும் அருமை யோகிஜி. ஒரு யோகியால் தான் இன்னொரு யோகியிடம் இப்படிக் கேட்டுப் பெற முடியும். நீங்கள் அறியாதது எதுவுமில்லை. ஆனால் அறியாதது போல் கேட்டு அவரைப் பேச வைத்தது ஜனகர் அஷ்டவக்கிரரைப் பேச வைத்தது போல் ஆகி விட்டது.”

 

இல்லாத ஒரு அர்த்தத்தை ஷ்ரவன் ஏற்படுத்திப் பாராட்டியதில்  பிரம்மானந்தா மனம் சிறு ஆறுதலைப் பெற்றது. அது உண்மையே என்றும், அதை அவன் சூட்சுமமாய் புரிந்து கொண்டு விட்டான் என்றும் காட்டிக் கொண்டபடி அவர் மெலிதாகப் புன்னகைத்தார். ஷ்ரவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

 

அவன் போன பின் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பாண்டியன் எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பிரம்மானந்தா கேட்டார். “என்ன யோசிக்கிறாய் பாண்டியன்?”

 

பாண்டியன் சொன்னார். “அந்த ஆள் சொன்னதைத் தான் யோசிச்சேன் யோகிஜி. ஒரு மனுஷன் தன் சொந்தக் காரியத்தை ஆர்வமாய் செய்யற மாதிரி கடவுளோட காரியத்தை எப்படி ஆர்வமாய் செய்ய முடியும் யோகிஜி?”


(தொடரும்)

என்.கணேசன்



1 comment:

  1. ரமண மகரிஷி கூறுவார்..
    "ஆசை தோன்றும் போது, மனம் ஆத்மாவை விட்டு வெளியே கிளம்பும், அது நிறைவேறிய பின் மீண்டும் ஆத்மாவில் ஒடுங்கும்.இதுவே சுகம்"
    "புகை வண்டி சகல பாரங்களையும்,தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும்,நம் சிறிய மூட்டையையும் அதில் போட்டு விட்டு சுகமாயிராமல்,நம் தலையில் தாக்கிக் கொண்டு ஏன் கஷ்ட பட வேண்டும்?"

    யோகி ரகுராமனும் இதையே கூறுகிறார்.கேட்பதற்கு எளிதாக இருந்தாலும்.புரிந்தாலும்.வாழ்க்கையில் பின்பற்றுவது சவாலான விசயம்.

    ReplyDelete