என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 16, 2026

யோகி 147

 

தேவானந்தகிரி நீண்ட யோசனைக்குப் பின் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவு செய்தார். அவர் இது போன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்கப் போலீஸுக்குப் போவதில்லை. அவருடையபிரஷ்னம்அவருக்குக் குற்றவாளியைக் காட்டிக் கொடுத்து விடும். அவர் காலில் காயமான நேரத்தை உத்தேசமாக மனதில் குறித்துக் கொண்ட அவர், அதை வைத்து சில கணக்குகளைப் போட்டார். பின் யோகாலயத்திலிருந்து பாண்டியன் அவரை அலைபேசியில் அழைத்து அங்கு வரச்சொல்லி வேண்டுகோள் விடுத்த நேரத்தை, அலைபேசியில் பார்த்து, குறித்துக் கொண்டார். பின் தன் ஐந்து வயதுப் பேத்தியை அவர் அழைத்தார். சோளிகள் நிறைந்திருந்த டப்பாவை அவளிடம் நீட்டி அதிலிருந்து ஒரு கைப்பிடி சோளிகள் எடுத்துத் தரச் சொன்னார். அவள் எடுத்த சோளிகளை மேசையில் வைக்கச் சொன்னார்.

 

அவளை அனுப்பி விட்டு, மேசையில் இருந்த சோளிகளை எண்ணியவர் சற்று முன் எடுத்த இரண்டு நேரக்குறிப்புக் கணக்குகளையும் எடுத்துக் கொண்டு மேலும் சில கணக்குகள் போட்டார். முடிவில் இதன் பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பதாய் பிரஷ்னம் தெரிவித்தது. இதுவரை நடந்ததை எல்லாம் யோசித்துப் பார்த்தார். யோகாலயத்திலிருந்து பாண்டியன் சொன்னதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்த போது அவர் சொல்லியிருந்த விசேஷ சக்திகள் கொண்ட புதிய துறவி தேவானந்தகிரியின் சந்தேகத்தைக் கிளப்பினான். அவனைப் பற்றி மேலும் தீவிரமாக அவர் யோசித்துக் கொண்டு இருந்த போது பல்லி சத்தமிட்டது.

 

சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த அவரது ஐந்து வயதுப் பேத்தி, அதே நேரத்தில், ஒரு பெரிய வட்டத்தை சாக்பீசில் வரைந்து வெளிப்பக்கத்திலிருந்து வட்டத்திற்குள்ளே குதித்தாள். திகைத்த தேவானந்தகிரி கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் குறித்துக் கொண்டு பஞ்சாங்கத்தைப் பிரித்தார். சிறிது நேரத்தில் அவரது சந்தேகம் உறுதியாகிறது. அவரைச் செல்ல விடாமல் தடுத்த பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பது மட்டுமல்ல, அவன் தற்போது யோகாலயத்தின் உள்ளேயே இருக்கிறான்...

 

பரபரப்புடன் அவர் பாண்டியனிடம் இதைத் தெரிவிக்க அலைபேசியை எடுத்தார். அலைபேசி அவர் கையிலிருந்து நழுவியது. இதுவும் ஒரு சகுனம். அலைபேசியில் இதைத் தெரிவிப்பது உசிதம் அல்ல என்று சகுனம் சொல்கிறது.

 

சிறிது ஆலோசனைக்குப் பிறகு தேவானந்தகிரி பாண்டியனை அழைத்து, அன்று மாலை அங்கு கிளம்பி வர முடியாதபடி அவரது காலில் அடிபட்டிருப்பதைச் சொன்னார். பாண்டியனின் ஏமாற்றம் அவர் பேச்சில் வெளிப்படையாகத் தெரிந்தது.

 

தேவானந்தகிரி சொன்னார். “கவலைப்படாதீங்க. நான் நேர்ல வர முடியாட்டியும், உங்களுக்குத் தேவையான ஒன்றை என் ஆள் மூலம் நாளைக்கு அனுப்பறேன்.”

 

ந்த உரையாடல் பதிவைக் கேட்ட ராகவனுக்கும், குமரேசனுக்கும்,  தேவானந்தகிரி ஆள் மூலம் எதை நாளை அனுப்புகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஏதாவது பூஜை செய்து அந்தப் பிரசாதத்தை ஆள் மூலம் அனுப்புவார் போலிருக்கிறது என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்து அவர்களுக்குத் தெரியவில்லை.

 

தேவானந்தகிரி வர முடியாதது பாண்டியனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அவர் நாளை எதோ முக்கியமானதை அவருடைய ஆள் மூலம் அனுப்புவதாகச் சொன்னது சிறிது ஆறுதலாக இருந்தது. அந்த முக்கியமானது என்ன என்று அவர் கேட்ட போது தேவானந்தகிரிஒரே நாள் தானே பொறுங்கள்என்று சொல்லி விட்டார்.

 

ஒரு நாளில் எத்தனை மணிகள், நிமிடங்கள், வினாடிகள் இருக்கின்றன, அவற்றைக் கடப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, தேவையோடு காத்திருப்பவனுக்குத் தான் தெரியும். பாண்டியன் பெருமூச்சு விட்டார்.

 

அவருடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது சுகுமாரன்.

 

பாண்டியன் அலைபேசியை எடுத்துப் பேசினார். “சொல்லுங்க டாக்டர்

 

தேவானந்தகிரி எத்தனை மணிக்கு வர்றார்?”

 

அவர் காலில் அடிபட்டுடுச்சாம். அதனால அவர் இன்னைக்கு வரலை. நாளைக்கு ஆள் மூலமாய் எதோ முக்கியமானதை அனுப்பறாராம்.”

 

சுகுமாரன் சலித்துக் கொண்டார். “ஏன் நமக்குன்னே இப்படி நடக்குதுன்னு தெரியலை பாண்டியன். எல்லாத்துலயுமே ஒரு தடங்கல், பிரச்சினை. என்னால வீட்டுல நிம்மதியாய் இருக்க முடியலை...”

 

சுகுமாரனுக்குத் தற்போதைய பெரிய பிரச்சினைக்குக் காரணம் அவர் மனைவியின் தோழி. அவர் மனைவி அந்தத் தோழியைக் கண்மூடித்தனமாய் நம்புவது தான். ஒரு நாய்க்குத் தாயத்து கட்டுவதை அவர் மனைவியால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் இதெல்லாம் யோகி பிரம்மானந்தாஜியின் ஆலோசனையின் படி தான் நடக்கிறது என்று சொன்னதை இரண்டு நாட்கள் முன்பு வரை எதிர்க்குரல் இல்லாமல் கேட்டு வந்த அவர் மனைவி இரண்டு நாள் முன்பு, “போகச் சொல்லுங்க உங்க யோகிஜிய. அவருக்கு ஒரு எழவும் தெரியாது. வெறும் பேச்சு மட்டும் தான்.” என்று சொல்லி விட்டாளாம்.

 

பாண்டியன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார். நல்லவேளை சுகுமாரன் யோகிஜி இருக்கும் போது இதைச் சொல்லவில்லை. யோகிஜி கேட்டிருந்தால் நொந்து போயிருப்பார்.

 

இது இவளாய் பேசறதில்லை பாண்டியன். இவள் தலையில வேண்டாததை எல்லாம் ஏத்தறது இவ சிநேகிதி தான். நான் தேவானந்தகிரி வந்தா, அந்த சிநேகிதி கிட்ட இருந்து இவளைக் காப்பாத்த எதாவது பண்ண முடியுமான்னு கேட்கலாம்னு இருந்தேன்இப்ப அதுக்கும் வழியில்லாமல் போயிடுச்சு. நீங்க அந்த நிஜ யோகி வந்தப்ப என்னையும் கூப்பிட்டிருந்தால் அவர் கிட்டயாவது எதாவது ஆலோசனை கேட்டிருக்கலாம். நீங்கள் என்னைக் கூப்பிடாமயே அவர் கிட்ட பேசி அவரை அனுப்பிச்சிட்டீங்க.”

 

அந்த நிஜ யோகி முன்னால் இந்த யோகிஜி முள்ளில் அமர்ந்திருப்பது போல் அமைதியிழந்து இருந்ததை பாண்டியனால் அவரிடம் சொல்ல முடியவில்லை. அந்த யோகியிடம் மலர்ச்சி இருந்தது போலவே தெளிவும் இருந்ததாய் பாண்டியன் நினைத்தார். என்ன கேட்டிருந்தாலும் அந்த யோகி யோசிக்காமல் பதில் சொல்லியிருப்பார். ஆனால் அந்தப் பதில் புரியுமா, பிடிக்குமா என்பது தான் நிச்சயமில்லை. டாக்டர் சுகுமாரனும் இங்கு அந்தச் சமயத்தில் இருந்திருந்தால் சந்திப்பு மிக சுவாரசியமாக இருந்திருக்கும் என்று தோன்றியது

 

சரி பாண்டியன், நான் ராத்திரி சாப்பிட்டு விட்டு அங்கே வந்துடறேன்.”

 

தேவானந்தகிரி இன்னைக்கு வரலைன்னு சொன்னேனே. வரலைன்னா பூஜையும் இருக்காது. பின்ன எதுக்கு வர்றீங்க?”

 

ஷ்ரவனானந்தா மூலம் தெரிஞ்சுக்க தேவானந்தகிரி கொடுத்திருக்கிற முகூர்த்தங்கள்ல கடைசி முகூர்த்தம் இன்னைக்கு ராத்திரி இருக்கே. மறந்துட்டீங்களா?”

 

அப்போது தான் அது பாண்டியனுக்கு நினைவு வந்தது.  ஆமாம் மறந்துட்டேன்.”

 

நான் அவர் சொன்ன அன்னைக்கே வந்து என் டைரியில் குறிச்சு வெச்சுகிட்டேன்.”

 

பாண்டியனுக்குத் தங்கள் நிலையே வேடிக்கையாகத் தான் இருந்தது. ஒரு காலத்தில் தீவிர நாத்திகர்களாக இருந்த அவரும், சுகுமாரனும் மந்திரவாதம், செய்வினை போன்றவற்றை நம்ப ஆரம்பித்திருப்பது மட்டுமல்லாமல் டைரியில் முகூர்த்தங்களைக் குறித்து வைத்துக் கொண்டு தேவானந்தகிரி, ஷ்ரவனானந்தா போன்றவர்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டது காலத்தின் கோலம் அல்லவா?

 

பாண்டியன். இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? உங்க ஏரியால இன்ஸ்பெக்டராய் செல்வம்னு ஒருத்தன் இருந்தானே. அவனை அவன் மனைவி இன்னைக்கு எங்க ஆஸ்பத்திரி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட  காட்டக்   கூட்டிகிட்டு வந்திருந்தாள். அவனோட பிரச்சினையைக் கேட்டால் ரொம்பவே வேடிக்கையாய் இருக்கு. யாருமே அவனைக் கொஞ்ச நேரம் தொடர்ந்து உற்றுப் பார்த்துகிட்டே இருக்கக்கூடாதாம். அப்படிப் பார்த்தா பயங்கரமாய் அவனுக்குக் கோபம் வந்துடுமாம். கெட்ட கெட்ட வார்த்தையால திட்ட ஆரம்பிச்சுடுவானாம். அவனுக்கு தூத்துக்குடிக்கு வேலை மாற்றலான பிறகு இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லி அவள் அழுதாள்…”

 

தேவானந்தகிரி வராமல் இருந்திருந்தால் தங்கள் நிலைமையும் அப்படித் தான் ஆகியிருந்திருக்குமோ என்று பாண்டியன் எண்ணிக் கொண்டார். இப்படியே விட்டிருந்தால் பைத்தியம் பிடித்திருக்கும் என்று தேவானந்தகிரி சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் செல்வத்தின் பிரச்சினைக்கும் சைத்ராவின் ஆவி பின்னணி இருப்பதை சுகுமாரனிடம் சொல்லவில்லை. சொல்லி பீதியை மேலும் கிளப்பி, கூடுதல் புலம்பல்களைக் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை


(தொடரும்)

என்.கணேசன்



1 comment: