பாண்டியனின் யதார்த்தமான கேள்வியைக் கேட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார். அது வரை அவருக்கு இருந்த இறுக்கமான மனநிலை தளர்ந்தது. “நீ இதை அவர் கிட்டயே கேட்டு இருக்கணும் பாண்டியன்”
“கேட்கணும்னு நினைச்சேன். ஆனால் நீங்க அவரை அனுப்பற மனநிலையில
இருந்தது தெரிஞ்சுது. அது மட்டுமில்லாமல் அந்த ஆளோட உலகமே வேற,
நம்ம உலகமே வேற தானே யோகிஜி. அவருக்கு நம்ம உலகத்தைப்
புரிஞ்சுக்க முடியாது, நமக்கு அவரோட உலகத்தைப் புரிஞ்சுக்க முடியாதுன்னு விட்டுட்டேன்.”
பாண்டியன் தன் உலகத்தில் அவரையும் சேர்த்துக்
கொண்டது பிரம்மானந்தாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உண்மையே
ஆனாலும் சிலவற்றைக் கேட்பது இனிமையாய் இல்லை. இன்று யார்
முகத்தில் விழித்தோம், இப்படி வரிசையாகக் கேட்டுக் கொள்ள வேண்டி வருகிறதே என்று அவர் யோசித்தார்.
பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “ஆனால் ஒரு
விஷயத்தைப் பாராட்டணும் யோகிஜி. நாம அவரைத்
தோட்டக்காரனாய் பார்த்தாலும் சரி, யோகியாய் பார்த்தாலும்
சரி, ரெண்டுமே அவரைப் பாதிக்கற மாதிரியில்லை. அந்த ஆளைப்
பொருத்த வரைக்கும் எதுவும் இல்லாமயே அவர் திருப்தியாய், சந்தோஷமாய்த்
தான் இருக்கார். நமக்கு நிறைய இருந்தும் அப்படி இருக்க முடியலை. சரி, முடியாததைப்
பற்றி யோசிக்கறதுல அர்த்தமில்லை. நாம அடுத்து
ஆக வேண்டியதைப் பார்ப்போம் யோகிஜி. உடனடியாய் தேவானந்தகிரியைக்
கூப்பிடுவோம். அந்தக் காலடி மண்ணை வெச்சு அவரால எதாவது செய்ய முடியுதான்னு
பார்ப்போம். உடனடியாய் வர முடியாதுன்னா, அவருக்குப்
பணத்தை ரெண்டு மடங்காகவோ, நாலு மடங்காகவோ கூடத் தரலாம்...”
சித்தானந்தா உடன் இருந்ததால் நிஜ யோகியைச் சந்தித்த விஷயத்தை
ஷ்ரவன் முக்தானந்தாவிடம் அன்றிரவு சொல்லவில்லை. மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச்
சென்ற போது, ஷ்ரவன் அவசர அவசரமாக நிஜ யோகியின் நேற்றைய வருகையை முக்தானந்தாவிடம் சொன்னான்.
அவன் சொன்னதை அவர் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டார். முக்கியமாக, அந்த யோகி பேசியது அவரையும் மிகவும் கவர்ந்தது.
நேரில் சந்திக்க முடியாத அந்த யோகியை எண்ணி அவர் கைகூப்பி நமஸ்கரித்தார்.
ஷ்ரவன் கடைசியில் மனத்தாங்கலுடன் சொன்னான்.
“… நாங்கள் கூடுதலாக எதாவது கேள்வி கேட்டிருந்தால் அந்த யோகி விளக்கமாகப்
பதில் சொல்லியிருப்பார். ஆனால் பிரம்மானந்தாவுக்கு அவர் பேசியது
பிடிக்கவில்லை. அதனால் அனுப்பி விட்டார்.”
முக்தானந்தா சொன்னார்.
“நிஜத்திலிருந்து விலகி நிறைய தூரம் போய் விட்டவருக்கு, திரும்பவும் நிஜத்தைச் சந்திக்க நேர்வது கசப்பாய் தான் இருக்கும் ஷ்ரவன்.
ஆத்மாவை என்றோ அடகு வைத்து விட்ட
அவருக்கு திரும்பவும் ஆத்மஞானத்தை ரசிக்க முடியுமா?”
சித்தானந்தா குளித்து விட்டு வெளியே
வர அவர்கள் அமைதியானார்கள்.
ராகவன், பாண்டியனுக்கும்,
தேவானந்தகிரிக்கும் இடையேயான உரையாடலின்
பதிவைக் கேட்டார். அவருடன் குமரேசனும் இருந்தான். உரையாடலில்
தற்போது சென்னைக்கு வரும் நிலைமை இல்லை என்று தேவானந்தகிரி பலமுறை சொல்லியும் பாண்டியன்
விடுவதாய் இல்லை. லட்சங்களை ஏற்றிக் கொண்டே போய் பத்து லட்சத்தில் வந்து பேரம் முடிந்தது.
தேவானந்தகிரி கடைசியில் சம்மதித்தார். நாளை மறுநாள்
மாலை விமானத்தில் வருவதாக அவர் வாக்களித்தார். பூஜைக்கு வேண்டிய
பொருள்களின் பட்டியலை வாட்சப்பில் அனுப்புவதாகச் சொன்னார். அவர்
வருவதற்கு முன் பொருள்களை வாங்கித் தயாராக வைக்கச் சொன்னார்.
அந்தப் பேச்சைக் கேட்ட ராகவனுக்கு பாண்டியன் பிறவி வியாபாரியாகத்
தெரிந்தார். ’இல்லை’ ‘முடியாது’ என்ற வார்த்தைகளை
பாண்டியன் பொருட்படுத்தவே இல்லை. எதிர்தரப்பில் இருந்து அந்த
வார்த்தைகள் வரும் போது, தரும் விலையை அதிகப்படுத்தினால் போதும்
என்பது அவருடைய கணக்காகத் தெரிந்தது. பணம் யோகாலயத்து ஆட்களுக்கு
ஒரு பொருட்டே இல்லை என்பதும் இந்தப் பேச்சில் தெரிந்தது.
குமரேசன் சொன்னான்.
“என்ன ஆனாலும் சரி, ஷ்ரவன் அங்கிருக்கும் போது,
தேவானந்தகிரி யோகாலயத்துக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று சொல்லியிருக்கிறார்.
ராகவன் யோசித்தார்.
குமரேசனும் யோகாலயத்துக்குச் செல்ல முடியாமல் இருப்பது இப்போது பெரிய
பிரதிகூலமாகத் தெரிந்தது. ஷ்ரவன் அங்கே தனியாக இருக்கிறான்...
ஒரு ஆபத்து என்றால் அதைத் தெரிவிக்கவும் அவனுக்கு வழியில்லை. நிலைமை
இப்படி இருக்கையில் தேவானந்தகிரி யோகாலயம் போனால் நிச்சயமாக அவர் ஷ்ரவன் யார் என்பதைக்
கண்டுபிடித்து விடலாம். ஷ்ரவன் போன வேலை முடியாமல் கண்டுபிடிக்கப் பட்டால் அவனுடைய
உயிருக்கு ஆபத்து மட்டுமில்லை. இதுவரை அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும்...
தேவானந்தகிரி அதிர்ஷ்டலட்சுமி அவர் மேல் தனிக்கருணை காட்டி
விட்டதாய் உணர்ந்தார். யோகாலயம் போய் வருவதால் அவருடைய இரண்டு நாள் வேலைகள் தடைப்படும். ஏற்கெனவே
அவர் ஒத்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டு நாள் வேலைகளுக்கு அவருக்கு அதிகபட்சமாக ஒன்றரை
லட்சம் தான் கிடைத்திருக்கும். அந்த வேலைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு யோகாலயம்
போவதற்கு இப்போது பத்து லட்சம் கிடைத்து விட்டது. பாண்டியன்
மொத்தப் பணத்தையும், முன்கூட்டியே அனுப்பியும் விட்டார். அதிகாலையில்
எழுந்தவுடன் வந்த அந்த நினைவே இனிமையாக இருந்தது.
அவர் இன்று மாலை கிளம்ப வேண்டும். போவதற்குள்
இங்கே அவர் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறைய இருக்கின்றன. மடமடவென்று
செய்தால் தான் மாலை நான்கு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும். தேவானந்தகிரி
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்த போதும் இருட்டாகவே இருந்தது. வெளியே
காம்பவுண்ட் சுவரைச் சுற்றிலும் அவர் நிறைய பூச்செடிகள் நட்டிருந்தார். விடிவதற்கு
முன்பே காலை பூஜைக்குப் பூக்களை அவர் முழுவதுமாக பறித்து விடுவது வழக்கம். விடியும் வரை காத்திருந்தால்
அவர் பறிக்க வரும் போது எந்தச் செடியிலும் பூக்களே இருக்காது. வெளியாட்கள் பறித்துக் கொண்டு போய்
விடுவார்கள். யாருக்கும் செடிகள் நடவோ, தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கவோ
நாட்டம் கிடையாது. அடுத்தவன் நட்டிருந்தால் பூக்களைப் பறித்துக்
கொண்டு போவதில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கெட்டிக்காரர்கள்.
மனதில் அந்த பூத்திருடர்களைத் திட்டிக்
கொண்டே தேவானந்தகிரி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தார். இரண்டே
நிமிடங்களில் யாரோ
ஒருவன் வந்து பைக்கை அவர் அருகே நிறுத்திக் கேட்டான். “ஐயா அபூபக்கர் ஹாஜியார்
வீடு எது என்று சொல்ல முடியுமா?”
தேவானந்தகிரி அவன் பக்கம் திரும்பினார். ஹெல்மெட்டுடன் இருந்த அவன்
முக அடையாளம் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அவன் தெரு மாறி
வந்து விட்டான். அடுத்த தெருவில் தான் அபூபக்கர் ஹாஜியார் வீடு
இருக்கிறது. அதை அவர் அவனிடம் சொல்ல, அவன்
நன்றி தெரிவித்து விட்டு பைக்கைக் கிளப்பினான். அப்போது பைக்
சற்று ஆட, அவன் சமாளித்து ஒரு காலை தரையில் ஊன்றினான்.
அப்போது அவன் தேவானந்தகிரியின் கட்டைப் பெருவிரலையும் சேர்த்து நன்றாக
மிதித்து விட்டான். அவர் ஆவென்று அலற, அவன்
“கவனிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்
ஐயா” என்று சொல்லி விட்டுப் போனான்.
தேவானந்தகிரிக்கு வலி தாங்க முடியவில்லை. சற்று வெளிச்சத்துக்கு வந்து
அவர் பார்த்த போது கட்டை விரலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
“முட்டாள்… பூட்ஸ் காலால் இப்படியா மிதிப்பது?
பூட்ஸில் லாடம் போல் எதோ இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது….”
என்று முணுமுணுத்தபடி வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.
கட்டை விரலில் ஆரம்பித்த வலி கால் பூராவும் பரவுவது போலிருந்தது.
பின் அவருக்கு கால் ஊன்றி நடக்க முடியாமல் போனது.
சற்று நேரம் கழித்து தேவானந்தகிரி ஆஸ்பத்திரிக்குப் போன போது
டாக்டர் அது வெறும் பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டதால்
ஏற்பட்ட காயம் என்பதை நம்ப முடியாமல் பார்த்தார். காலுக்குக் கட்டுப் போட்ட அவர் காயம் குணமாக
ஒரு வாரமாவது ஆகும் என்றும், அது வரை நடக்காமல் ஓய்வு எடுப்பது
அவசியம் என்றும் சொன்னார். அதனால் தேவானந்தகிரி யோகாலயத்துக்குப்
போக முடியாதென்று ஆகி விட்டது. பாண்டியன் பத்து லட்சம் பணம் அனுப்பியும்,
வாக்குக் கொடுத்தபடி இன்று போக முடியாதது அவருக்கு வருத்தமாக இருந்தது.
சென்ற முறை அவர் கிளம்பத் தயாரான போது சகுனத் தடை இருந்தது. அப்போது அவர் அங்கு செல்வதற்கு முன்பு அவரைத் தற்காத்துக் கொண்டு தான் கிளம்ப
வேண்டியிருந்தது. இந்த முறை இப்படி ஆகி விட்டது….
திடீரென்று தேவானந்தகிரிக்கு எல்லாம் திட்டமிட்டு நடந்திருப்பது
போல் தோன்றியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் அபூபக்கர் ஹாஜியார் வீட்டுக்கு ஆளனுப்பி,
இன்று அதிகாலை அவரைத் தேடி யாராவது பைக்கில் வீட்டுக்கு வந்தார்களா என்று
கேட்டு வரச் சொன்னார். ஹாஜியார் ”அப்படி
யாரும் வரவில்லையே” என்று தெரிவித்தார். தேவானந்தகிரியின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியது.


No comments:
Post a Comment