அர்ஜுன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது வாசல் அருகிலேயே எதிர்ப்பட்ட தங்கை நித்யா, உதடுகள் மீது விரலை வைத்து “சத்தமில்லாமல் வா” என்று சைகை செய்து தெரிவித்தாள். அவன் பார்வையாலேயே என்ன என்று கேட்டபடி உள்ளே சென்ற போது ஞானமூர்த்தி ஹாலில் நாற்காலியில் அமர்ந்து மிகவும் ஆழ்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர் படித்துக் கொண்டிருந்தது அன்றைய விடிவெள்ளி பத்திரிக்கை தான் என்பதைக் கவனித்த போது அர்ஜுனுக்குப் புரிந்தது. அவர் அவனுடைய கட்டுரையைத் தான் அப்படி ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.
அவன் தனதறைக்குப் போன போது, பின்னாலேயே
வந்த நித்யா தாழ்ந்த குரலில் அவனிடம் சொன்னாள். “நான் காலைலயே
படிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.”
அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் பெரியதாகப் பெருமிதம் இல்லை. அவளுக்கு அவளுடைய அண்ணன் செய்யும் எல்லாமே சிறப்பு தான். ஆனால் அவர்களுடைய தந்தை அவளைப் போல் அல்ல. அவர் சொன்னால் அது ஒரு நீதிபதியின் தீர்ப்பாகவே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் நீதி தேவதையின் தீர்ப்பைப் போல் இருக்கும்..
“உங்கப்பா அரசியலுக்குப் போனது நீதித்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம். நீதிபதியாய் போயிருந்தால் அவர் கண்டிப்பாக சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கலாம்.” என்று அவனிடம் பெரிய சட்ட வல்லுனர்கள் இருவர் சொல்லி இருக்கிறார்கள். ஞானமூர்த்தி நீதிபதியாகப் போயிருக்கா விட்டாலும் பல கருத்துக்களை ஒரு நீதிபதி போலவே சொல்லும் வழக்கம், இயல்பாகவே அவருக்கு இருக்கிறது.
“எப்போடி படிக்க ஆரம்பிச்சார்?”
“கால் மணி நேரம் ஆயிருக்கும். தீர்ப்பு வர குறைஞ்சது இனியும்
முக்கால் மணி நேரமாவது ஆகும். ஏன்னா நீ எழுதியிருக்கிறது பெரிய
கட்டுரை.”
அர்ஜுன் தங்கையும் தீர்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்குப்
புன்னகை செய்தான்.
நித்யா கேட்டாள்.
“உன்னோட அபிமான நடிகை இறந்து போனது நிஜமாவே தற்கொலை தானா இல்லை கொலையா?”
“வாலு. எப்பவோ அவ என் அபிமான நடிகையா இருந்தாள்.
அதையெல்லாம் நீ ஞாபகம் வெச்சிட்டு இப்ப சொல்றியா?”
“நீ எனக்கிருக்கற ஒரே அண்ணன். நான் உன் சம்பந்தமான எதையும்
எப்படி மறப்பேன்?”
அவள் சொன்னது அவன் கண்களை உடனடியாக ஈரமாக்கியது. தங்கைக்குத் தெரியாமல் இருக்க
அவன் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி காலண்டரைப் பார்ப்பது போல் பாவனை செய்தான்.
’இப்படிச் சொல்லவும், அன்பு செலுத்தவும் இவள் ஒருத்தியாவது
என் வாழ்க்கையில் இருக்கிறாளே!”
ஆனால் அவன் திரும்பிய போது முகத்திலும் பேச்சிலும் அவன் உணர்ந்த
உருக்கம் தெரியவில்லை. “ஆமா என்னைக்கோ அண்ணனோட அபிமான நடிகையாய் ஒருத்தி இருந்ததை ஞாபகம் வெச்சுச்
சொல்றது உருப்படியான விஷயமா? அண்ணனைப் பத்தி வேறென்னடி தெரியும்
உனக்கு?”
“அண்ணனைப் பற்றி அண்ணனுக்கே தெரியாததும் கூடத் தெரியும்.” நித்யா அலட்டாமல் சொன்னாள்.
“அண்ணனுக்கே தெரியாததா?” அர்ஜுன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஆமா”
“என்னடி அது?”
“உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அது தெரியுமா உனக்கு?”
அர்ஜுன் திகைத்தான்.
“என்னடி சொல்றே? உன் சிநேகிதிகள்ல யாராவது என்னைக்
காதலிக்கிறாங்களா? யாருடி அது? எத்தனை நாளா
இது? இவ்வளவு நாளா ஏண்டி சொல்லலை?” என்று
பரபரப்புடன் தங்கையிடம் அவன் கேட்டான்.
“ஐயே மூஞ்சியப் பாரு. என் சிநேகிதி எவளும் உன்னைக் காதலிக்கலை.”
அர்ஜுன் திகைத்தான்.
“அப்பறம் வேற யாருடி உன் கிட்ட இதைச் சொன்னா?”
“ஆமா என் கிட்ட தான் வந்து சொல்றாங்க. பெரிய ரிப்போர்ட்டராம்.
அறிவாளியாம். கட்டுரை எல்லாம் எழுதுவாராம்.
ஆனா அவரை ஒரு பொண்ணு காதலிக்கிறது மட்டும் அவருக்குத் தெரியாதாம்.
சரியான தத்தி அண்ணா நீ”
“ஏய் என்னடி, இப்ப தான் ஒரு நிமிஷத்துக்கு முன்னால பாசமலர்
தங்கச்சியாட்டம் என் கிட்ட பேசினே. இப்ப தத்திங்கற.”
“அப்பறம் வேற என்ன உன்னைச் சொல்றது? உலகத்துல நடக்கறது
எல்லாம் உனக்குத் தெரியிது. உன் வாழ்க்கைல நடக்கறதுல முக்கியமானதே
உனக்குத் தெரிய மாட்டேங்குது.”
“ஏய் சும்மா வளவளன்னு பேசாம சொல்லுடி. யாருடி அது?
சீக்கிரம் சொல்லுடி. என் மண்டை வெடிச்சுடும்டி”
நித்யா அண்ணனைக் குறும்பாகப் பார்த்தாள். அதிபுத்திசாலித்தனமும்,
வெகுளித்தனமும் கலந்த ஒரு கலவை அவளுடைய அண்ணன். “சொன்னா எனக்கு என்ன தருவே?”
“என்னடி இப்படி லஞ்சம் கேட்கறே. ஞானமூர்த்தி பொண்ணுடி
நீ.”
நித்யா சிரித்து விட்டாள். “அப்பா பேரைச் சொல்லியே கவுத்துட்டியே”
தங்கையை மிக நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். “யாருடி அது?”
“ம்… கீதாக்கா…. சாரி கீதா அண்ணி”
அர்ஜுனுக்கு சப்பென்று ஆகி விட்டது. “லூஸாடி நீ. என்னோட நல்ல சிநேகிதியைப் போய் இப்படியெல்லாம் சொல்றியே. அவளுக்குத் தெரிஞ்சா அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பாள்?”
“ம்… அண்ணனுக்கு இல்லாத அறிவு தங்கச்சிக்காவது இருக்கேன்னு
நினைப்பாள்.”
அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘இந்த வாலு என்ன சொல்லுது.
தெரிஞ்சு தான் பேசுதா. இல்லை, வயசுக் கோளாறுல கண்டதையும் கற்பனை பண்ணிப் பேசுதா’
நித்யா போய் விட்டாள்.
அர்ஜுனுக்கு நித்யா ஏன் அப்படிச் சொன்னாள், எதை
வைத்துச் சொன்னாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் போல இருந்தது.
தங்கை பின்னாலேயே வெளியே வந்தவன் அவர்கள் பேச்சு கேட்டிருக்கக்கூடிய
தொலைவிலேயே நின்று கொண்டு அம்மா துணிமணிகளை மடித்து வைப்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.
அம்மா எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ? அவனுக்கு வெட்கமாக இருந்தது.
ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன்
தங்கை நித்யாவின் அறையை அடைந்தான். நித்யா ஒரு பெரிய
புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். அர்ஜுன்
அவள் காதைத் திருகியபடி சொன்னான். “ஏய் வாலு. உனக்கென்ன நாளைக்கு
பரிட்சையாடி? முழுசும் சொல்லாமல் அரைகுறையாய் பேசிட்டு வந்து புத்தகம்
படிக்கற மாதிரி நடிக்கறாய்”
புத்தகத்தை மூடி வைத்த நித்யா பெருமூச்சு
விட்டாள். “ஒரு கோடி காட்டினா புரிஞ்சுக்க முடியாத ஆளெல்லாம் வாசுதேவன்
குடும்பத்தோட ஒரே ஆண் வாரிசுன்னு நினைக்கறப்ப
ரொம்ப வேதனையாய் இருக்கு.”
“என்னடி
கோடி காண்பிக்கறது. ஒரு நல்ல சிநேகிதியை காதலின்னு சொல்றே. எதனால சொல்றே, எப்படிச்
சொல்றேன்னு கேட்டா ஓடி வந்து இங்கே உட்கார்ந்து புத்தகம் படிக்கறே”
“திருவாளர்
அர்ஜுன் அவர்களே. ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவளுடன்
வருடக்கணக்கில் பழகுவது தவறு. அதைத் தெரிந்து கொண்டு தங்கை சொல்லும் போது, உங்கள்
மனதைக் கேள்வி கேட்டு அங்கே பதில் பெற்றுக் கொள்ளும் அடிப்படை அறிவு கூட இல்லாமல், தங்கையிடமே
திரும்பத் திரும்ப அசட்டுத் தனமாகக் கேள்வி கேட்பது பெருந்தவறு. இப்படி
தவறுக்கு மேல் தவறு செய்யும் உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”
அர்ஜுன் அவளை முறைத்தான். “ஏய் லூசு. நீ சொல்ற
மாதிரி இருந்தா அவ கண்டிப்பா என் கிட்ட சொல்லியிருப்பா. முட்டாள்தனமான
கற்பனைல யாரையும் தப்பா சொல்லக்கூடாதுடி”
நித்யா சொன்னாள். “அண்ணா. பொண்ணுங்க
பல விஷயங்களை லொட லொடன்னு மணிக்கணக்குல பேசுவாங்க. ஆனா ஒருசில
குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் அவங்க சொல்லாமலேயே அவங்கள நேசிக்கறவங்க புரிஞ்சுக்கணும்னு
எதிர்பார்ப்பாங்க. காதல் அதுல ஒன்னு. வார்த்தைகள்ல
சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு
தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி உன் கிட்ட சொல்வாங்க? நீயும்
சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட
தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.”
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment