என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 26, 2026

சதுரங்கம் 11

 

ர்ஜுனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டி யசோதா ஒரு நாள் கூட அவர்கள் வீட்டில் தங்கியதில்லை. அது அவனை நீண்ட காலமாகக் குழப்பியிருந்தது. இரண்டு பிள்ளைகளின் தாய் இளைய மகனுடனேயே தான் எப்போதும் இருப்பதும், தவறிக் கூட மூத்த மகன் வீட்டில் வந்து தங்காததும் அவனுக்கு இயல்பாகத் தெரியவில்லை. பாட்டி அபூர்வமாக அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் சில மணி நேரங்களில் கிளம்பி விடுவாள். ஒரு முறை சித்தப்பா, சித்தி இருவரும் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார்கள்.  அப்போது கூட பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கவில்லை. ”எனக்கு இடம் மாறினால் தூக்கம் வருவதில்லைஎன்ற காரணம் சொல்லி இளைய மகன் வீட்டிலேயே தனியாக இருந்து விட்டாள். தினமும், அர்ஜுனோ, நித்யாவோ, ஞானமூர்த்தியோ தான் மாறி மாறி உணவு வகைகளை அங்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்.

 

அதற்குக் காரணம் அம்மா தான் என்று அர்ஜுன் சந்தேகப்பட்டிருந்தான். மாமியாருக்கும், மூத்த மருமகளுக்கும் இடையே எப்போதும் இணக்கமான உறவு இருந்ததில்லை. அவர்கள் இருவரும் ஒரு முறை கூட, நாலைந்து வார்த்தைகளுக்கு மேல் தங்களுக்குள் பேசிக் கொண்டு அவன் பார்த்ததில்லை. அதனால் தான் யசோதா மூத்த மகன் வீட்டுக்கு வந்து தங்குவதில்லையோ என்று அர்ஜுனுக்கு சந்தேகம் வந்திருந்தது. இப்போது தான் உண்மைக் காரணம் புரிகிறது.

 

ஆனால் ஞானமூர்த்தியும், ராஜாராமும் வெளிப்பார்வைக்காவது நெருங்கியே இருந்தார்கள். ஞானமூர்த்தி தன் பிறந்த நாள் அன்றும், வாசுதேவனின் நினைவு தினம் அன்றும் அவர்களது பூர்வீக வீட்டுக்குச் சென்று தாயின் ஆசி பெற்று வருவது வழக்கம். அப்படிச் செல்லும் போது அண்ணனும், தம்பியும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ராஜாராமும் தன் பிறந்த நாள் அன்று தவறாமல் வந்து அண்ணனிடம் ஆசி பெற்றுச் செல்வார். மற்றபடி அவரும் அண்ணன் வீட்டுக்கு வருவது மிகவும் குறைவு என்றாலும் சந்திக்கும் இடங்களில் இருவரும் நெருக்கமாகத் தான் தோன்றினார்கள்.   ஆனாலும் பின்னணியில் இருவரும் அந்த அளவு நெருக்கமில்லையோ என்று கூட இப்போது அர்ஜுனுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவு உண்மையிலேயே அண்ணனுடன் நெருக்கமாக இருந்திருந்தால் அரசியலில் அண்ணனுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ராஜாராம் எடுத்திருக்க மாட்டார். ஆனாலும் அவரும் கூடவாசுதேவனுக்குப் பிறந்த ஒரே மகன் நான் தான். அண்ணன் ஞானமூர்த்தி வளர்ப்புப் பிள்ளை தான்என்று ஒருபோதும் வெளியாட்கள் யாரிடமும் சொன்னதில்லை. அதை யசோதாவும் கூட இதுவரை சொன்னதில்லை.

 

யோசிக்க யோசிக்க இவர்கள் உறவுகளில் வெளியே தெரியாத, சரியாகப் புரியாத நிறைய உள்விஷயங்கள் இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது. ஞானமூர்த்தி வெகுசீக்கிரம் தன் நெகிழ்வான மனநிலையிலிருந்து சீக்கிறம் மீண்டு பழைய அமைதிக்கு மாறினார். அவர் தன் அமைதியை இழப்பது மிக அபூர்வம். அந்த அபூர்வ தருணங்களில் கூட சீக்கிரமாக அமைதிக்குத் திரும்பி விடுவார். அது எப்போதுமே அர்ஜுனையும், நித்யாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது….

 

அர்ஜுன் அவரைப் பேட்டி எடுப்பதற்கான கேள்விகளைத் தயார்ப்படுத்திக் கொண்டு வரவில்லை என்பதால் தந்தையிடம் சொன்னான். “சரி அப்பா. நான் நாளைக்கு உங்களைப் பேட்டி எடுக்கட்டுமா? எத்தனை மணிக்கு?”

 

சாயங்காலத்துக்கு மேலே….. ஏழு மணிக்கு?” என்று அவரும் அந்த நேரம் அவனுக்கு சௌகரியப்படுமா என்பது போல் அவனைக் கேட்டார். அவன் சரியெனத் தலையசைத்தான்.

 

பானுமதி சமையலில் உதவி செய்ய நித்யாவை அழைக்க, நித்யா எழுந்து சென்றாள். அர்ஜுனும் தனதறைக்கு வந்தான். அறைக்கு வந்த பின் குடும்ப அரசியல் எல்லாம் பின்னணிக்குத் தள்ளப்பட்டு கீதா அவன் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தாள்.  அவளைப் பற்றி யோசிக்க யோசிக்க, காதல் என்ற பெயர் சூட்டாமலேயே இப்போது வரை அவளைக் காதலித்துக் கொண்டு இருப்பது அவனுக்கு உறுதிப்பட்டது. அவளிடம் நாளை இது குறித்து மனம் விட்டுப் பேசி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 

மறுநாள் அவன் எப்போதையும் விட அதிக நேரமாக கண்ணாடி முன் நின்று தன்னை அழகுபடுத்திக் கொண்டான். இதற்கு முன்பு வரை ஒரு நிமிடத்திற்கு அதிகமாக அவன் கண்ணாடி முன் நின்றதில்லை.

 

நித்யா வந்து அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். “என்ன அலங்காரம் எல்லாம் பலமாயிருக்கு. நேற்று வரைக்கும் இப்படி நீ கண்ணாடி முன்னால நின்னதை நான் பார்க்கலயே

 

அர்ஜுன் சிறிது வெட்கப்பட்டான். நித்யா சொன்னாள். “ஐயோ என் அண்ணன் வெட்கமெல்லாம் படறான்.”

 

அர்ஜுன் அவள் காதைப் பிடித்து இழுத்தான். “அண்ணன் என்ன செய்யறான்னு பார்க்கறத தவிர உனக்கு வேற வேலையில்லையாடி. சரியான இம்சைடி நீ.”

 

அவன் கையை நன்றாக கிள்ளி விட்டு தன் காதை விடுவித்துக் கொண்ட நித்யா சொன்னாள். “நன்றி கெட்டவன் நீ. இந்த இம்சை இல்லாட்டி நீ ரொம்ப காலம் ஒத்தை ஆளாவே இருந்து கஷ்டப்பட்டிருப்பாய், ஞாபகம் வெச்சுக்கோ.”

 

அர்ஜுன் தங்கையை புன்னகை கலந்து முறைத்து விட்டுக் கிளம்பினான். அவனிடம் அவள் சொன்னாள். ”சாயங்காலம் வர்றப்ப பெரிய டெய்ரி மில்க் சாக்கலேட் வாங்கிட்டு வா. அண்ணி ஓக்கே சொன்னா அவள் சார்பாகவும் எனக்கு இன்னொரு சாக்கலேட் சேர்த்து வாங்கிட்டு வா. சரியா?”

 

அவள் கீதாவை அண்ணி என்று சொன்னது அவனை வெட்கமடைய வைத்தது. அவள் பக்கம் திரும்பாமல் அறையை விட்டு வெளியே வந்தான். அவள் அவன் முகத்தைப் பார்த்தால் அதற்கும் கிண்டல் செய்வாள்….

 

அண்ணன் திரும்பிப் பார்க்காமல் போன காரணம் நித்யாவைப் புன்னகைக்க வைத்தது. அண்ணனைப் பின் தொடர்ந்து வெளியே வந்தவள், ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த பானுமதியிடம் சொன்னாள். “உன் மகன் இவ்வளவு அழகாய் ட்ரஸ் பண்ணிகிட்டு போறதை இது வரைக்கும் எப்பவாவது பார்த்திருக்கியா?”

 

பானுமதி சொன்னாள். “பொண்ணுன்னா கொஞ்சமாவது அடக்கம் வேணும்டி.”

 

அப்படின்னா ஆணுன்னா எப்படி வேணும்னாலும் இருந்துக்கலாமா? நம்ம வீட்டு நீதிபதி கிட்ட நியாயம் கேட்கலாமா?”

 

பானுமதியின் கட்டுப்பாட்டையும் மீறி புன்னகை பிறந்தது. ”உன் அண்ணன் சொன்ன மாதிரி நீ ஒரு சரியான இம்சை தான்டி.”

 

உண்மை எப்பவுமே கொஞ்சம் இம்சையா தான் இருக்கும்மா. என்ன பண்றது?”

 

பானுமதி மகளைச் செல்லமாய் முறைத்தாள். இத்தனை வயதானாலும் மகளைப் போல் யோசிக்கவோ, பேசவோ அவளுக்குத் தெரிவதில்லை. ஏதாவது சொன்னால், சொன்ன வேகத்திலேயே மறுக்க முடியாதபடி பதில் சொல்லும் வித்தை காலப்போக்கிலும் அவளுக்கு வந்து விடவில்லை. ஆனால் ஒரு விதத்தில் மகள் அவளைப் போல் இல்லாமல் இருப்பதில் அவளுக்கு சந்தோஷம் தான். கலகலப்பாய், புத்திசாலியாய், மகள் இருப்பதில் அவளுக்குப் பெருமை தான். அவளைப் போல் அவள் மகள் கஷ்டப்பட மாட்டாள். அது போதும் அவளுக்கு….

 

அந்த வீட்டில் கலகலப்பும் உயிர்ப்பும் இருப்பது அவள் மகளால் தான். அப்பா, அம்மா, அண்ணன் மூவரில் யாரையாவது வம்புக்கு இழுத்துப் பேசிக் கொண்டே இருப்பாள். மூவரில் ஞானமூர்த்தியை அவள் வம்புக்கு இழுப்பது குறைவு. நித்யாவிடம் அதிகமாய் சிக்கிக் கொள்வது அவளும், அர்ஜுனும் தான்.  நித்யா என்றைக்காவது வீட்டில் இல்லை என்றால் வீட்டில் பேரமைதி நிலவும். மூன்று பேரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். மூவருமே நித்யா வீட்டில் இல்லாததை ஒரு பெரிய குறையாய் உணர்வார்கள். நித்யா கல்லூரித் தோழிகளுடன் ஒரு முறை மூன்று நாட்கள் சுற்றுலா சென்றிருந்தாள்.  மூவருக்கும் அவள் எப்போது வருவாள் என்று ஆகிவிட்டது.  

 

பானுமதியிடம் அதிகமாய் சண்டை பிடிப்பவளும் அவள் தான். அதிகமாக அவள் சண்டை போடுவது அவளுடைய அண்ணனுக்காகத் தான்.  அண்ணனுக்கு அம்மா போதுமான அளவு அன்போ, முக்கியத்துவமோ தருவதில்லை என்பது தான் நித்யாவுடைய மறைமுகமான புகாராக இருந்திருக்கிறது. அதனாலேயே அம்மாவுக்குமாகச் சேர்த்து அண்ணன் மேல் தங்கை பாசத்தைப் பொழிகிறாளோ என்று கூட பானுமதிக்குத் தோன்றியிருக்கிறது. மகளிடம் எப்படி அவள் உண்மையைச் சொல்வாள்?




1 comment: