ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் கண்ணன் வந்து அவனை பாண்டியன் வரச் சொன்னதாகத் தெரிவித்தார். அவர் அதைச் சொன்ன போது அவருடைய முகம் இறுகியிருந்தது. வழக்கமான நட்பு முகத்தில் தெரியவில்லை. பிடிபட்டு விட்டோம் என்பதை அந்தக் கணமே ஷ்ரவன் உணர்ந்தான். ஆபத்தில் மாட்டிக் கொள்வது அவனுக்குப் புதிதல்ல. அவனுடைய இதயத்துடிப்பு வேகம் எடுத்தது. ஆழமாக மூச்சு விட்டு அமைதிப்படுத்திக் கொண்டு அவன் புன்னகையுடன் அவருடன் கிளம்பினான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் யோசித்துச் செயல்பட முடிந்த அமைதி தான்...
செல்லும் போது கல்பனானந்தா எங்கே இருக்கிறாள்
என்பதை ஷ்ரவன் பார்த்தான். அவள் தொலைவில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவளால்
அவன் பிடிபட்டதை யூகிக்க முடியாது என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். கண்ணனும், பாண்டியனின்
ஆட்களும் அவனை அழைத்துக் கொண்டு போவது புதியதல்ல என்பதால் வழக்கம் போல் எதையோ கேட்கத்
தான் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவள் நினைக்கத் தான் சாத்தியம் அதிகம்.
ஷ்ரவன் கண்ணனிடம் சொன்னான். “சுவாமிஜி. சுவாமினியிடம்
சொல்லி விட்டு வரட்டுமா?”
கண்ணன் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். “தேவையில்லை. நான் சொல்லிக்
கொள்கிறேன்.”
ஷ்ரவன் தலையசைத்து விட்டு நடந்தான். எதாவது
சைகை காட்டி அவளிடம் அறிவிக்கலாம் என்றாலும் அது கண்ணனின் கூரிய பார்வைக்குத் தப்பாமல்
போவது சாத்தியமில்லை. அது அவளையும் சேர்ந்து ஆபத்தில் மாட்டி விடுவது போலாகி விடும்
என்பதால் அவன் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக கண்ணனுடன் சென்றான்.
பாண்டியன் ஷ்ரவன் அமைதியாக வருவதை ஜன்னல்
வழியாகப் பார்த்தார். அவனைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் எரிமலை வெடித்தது. எவ்வளவு
சுலபமாக எங்களை ஏமாற்றியிருக்கிறான் அவன்...
ஷ்ரவன் உள்ளே வந்து பழைய நட்புடன் கைகூப்பி “வணக்கம்
ஜி” என்று சொல்ல பாண்டியன் பதில் வணக்கம் சொல்லாமல், புன்னகை
கூடச் செய்யாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார்.
ஷ்ரவன் ஆச்சரியத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு
ஜீ?”
பாண்டியன் ஏளனமாகச் சொன்னார். “நல்ல வேளை
ஒன்றும் ஆகவில்லை. ஆவதற்குள்ளே எல்லாம் தெரிந்து விட்டது.”
ஷ்ரவன் திகைப்புடன் சொன்னான். “என்ன சொல்கிறீர்கள்
ஜீ?”
பாண்டியன் சொன்னார். “உன் சாயம்
வெளுத்து விட்டது.”
அவர் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதை
ஷ்ரவன் கவனித்தான். அவன் அதிர்ச்சியைக் காட்டியபடி கேட்டான். “என்னைத்
தேடி போலீஸ் வந்ததா?”
இப்போது அதிர்ந்தது பாண்டியனும், கண்ணனும்
தான். பாண்டியன் கேட்டார். “போலீஸ்
எதற்கு உன்னைத் தேடி வர வேண்டும்?”
“அது என்
எதிரிகள் திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்த சதிஜி. போலீஸ்
சொல்வது எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து என்னை நம்புங்கள்.”
இது என்ன புதுக்கதை என்று பாண்டியனும்
கண்ணனும் ஷ்ரவனைப் பார்த்தார்கள்.
”இதில் போலீஸ்
எங்கே வந்தது?”
“நீங்கள்
தானே சொன்னீர்கள் உன் சாயம் வெளுத்து விட்டது என்று. போலீஸ்
சொல்லாமல் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“என்ன உளறுகிறாய்?’
“நீங்கள்
அந்த ஹைத்ராபாத் கேஸ் பற்றித் தானே பேசுகிறீர்கள் ஜீ?”
”அந்தக்
கேஸ் என்ன?”
“அது போலீஸ்
ஜோடித்த பொய் வழக்கு ஜீ. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போன போது என்னைப்
போல் ஒரு பாவப்பட்டவனை சிக்க வைப்பது அவர்களுக்குச் சுலபமாகப் போய் விட்டது.”
பாண்டியனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நாம் எதையோ
கேட்டால், இவன் எதையோ சொல்கிறான். என்ன தான்
சொல்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் நினைத்தாலும் அவனை அதுபற்றிப் பேச விட
வேண்டாம் என்று பாண்டியனின் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. அவன் குழப்பமான
புதுக்கதை எதாவது சொல்லி அவரைத் திசை திருப்பி விடப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றியது.
“பார். நான் சொன்னது
அந்தக் கேஸ் பற்றி அல்ல. நீ எங்களை
ஏமாற்றிய கதையைச் சொன்னேன்.”
ஷ்ரவன் அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்ட
கோபத்தோடு கேட்டான். “அபாண்டமாய் பழி சுமத்தாதீர்கள் ஜீ. நான் உங்களை
ஏமாற்றினேனா? எப்போது? எப்படி?”
அவன் இதுவரை அப்படிக் கோபமாய் பேசியதில்லை. எப்போதும்
பணிவும், மரியாதையும் மட்டுமே காட்டிவந்த அவன் நியாயவான் போல் கோபத்துடன்
கேட்டது அவரை ஆச்சரியப்படுத்தியது.
“நீ இங்கே
துறவியாய் வந்தது, உன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகக் கதைகள் சொன்னது இதையெல்லாம்
தான் சொன்னேன்.”
ஷ்ரவன் கோபத்துடனேயே கேட்டான். “அதில் எனக்கென்ன
லாபம்?”
“அதை நீ
தான் சொல்ல வேண்டும்”
ஷ்ரவன் கோபம் குறையாமல் சொன்னான். “லாபம் இருந்தால்
தானே நான் சொல்ல முடியும். புகார் சொல்லும் நீங்களே சொல்லுங்கள் எனக்கு என்ன லாபம்?”
குற்றம் செய்து மாட்டிக் கொண்டவர்களிடம்
பயம், அதிர்ச்சி, உளறல், அழுகை, தப்பிக்க
முயற்சி செய்தல் ஆகியவற்றைத் தான் பாண்டியன் இதுவரை பார்த்திருக்கிறார். கோபமும், எதிர்க்கேள்விகளும்
அவர் இதுவரை பார்த்திராதது.
ஷ்ரவன் சொன்னான். “நான் துறவியாக
வந்தேன். எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து யோகிஜி இருக்குமிடத்தில்
மீதி வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கலாம் என்று வந்தேன். ஆனால்
என்னிடம் இருக்கும் விசேஷ சக்திகளைப் பற்றி நானாக உங்களிடம் சொன்னது கிடையாது ஜீ. நன்றாக யோசித்துப் பாருங்கள்.
சுவாமி கண்ணனிடமும், சுவாமினி கல்பனானந்தாவிடமும்
நான் என்னிடம் இருந்த விசேஷ சக்திகளைப் பற்றிச் சொன்னது கூட அவர்களாக என்னிடம் அதுபற்றிக்
கேட்ட பிறகு தான். சுவாமிஜி கண்ணன் இங்கேயே இருக்கிறார்.
அவரிடம் கேளுங்கள். வேண்டுமானால் சுவாமினி கல்பனானந்தாவையும்
அழைத்துக் கேட்டுப் பாருங்கள். என் அப்பா என்னை எச்சரித்து இருந்ததால்
எனக்கு ஆரம்பத்திலிருந்தே அந்தச் சக்திகள் பிரச்சினையானவை என்ற சந்தேகம் எப்போதும்
இருந்தது. அதனாலேயே பல காலம் நான் அதிலிருந்து விலகி இருந்தேன்.
ஆனால் ஒரு நண்பன் என்னை அதில் மறுபடியும் இழுத்து விட்டான். அதுவும் போலீஸ் கேஸ் ஆனதில் தான் முடிந்தது. வாழ்க்கையே
வெறுத்துப் போய் யோகா, தியானம், துறவு என்று
வாழ முடிவு செய்து தான் நான் இங்கே வந்தேன். இங்கேயும் யோகா வகுப்பு
முதல் நிலை வகுப்புகளில் எனக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இரண்டாவது
நிலை வகுப்புகளுக்கு வந்த போது தான் பிரச்சினை ஆரம்பமானது. யோகாலயத்தில் உலாவிக் கொண்டிருக்கும்
துஷ்ட சக்தி ஓநாய் ரூபத்தில் வந்து ஒரு காலை நேரத்தில் என்னைத் தாக்கியது. உடனே என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் மின்சாரம்
தாக்கியது போல் இருந்தது. அப்போதே எச்சரிக்கை ஆகி நான் இங்கிருந்து
போயிருக்க வேண்டும். சில நாட்கள் முன்பு பார்த்த ஓமன் படம் காரணமாக
அந்த அனுபவம் வந்திருக்கிறது என்று நானே என்னைச் சமாதானம் செய்து கொண்டு விட்டது தான்
என் தவறு.…”
பாண்டியனும் கண்ணனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த துஷ்டசக்திகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் ஓநாய் என் காட்சிக்கு வந்தது கிடையாது. பாம்பு, வவ்வால், ஆந்தை, கருப்புப் பூனை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் ஓநாய் இங்கு வரும் வரை தெரிந்தது கிடையாது. அதுவும் கண்களில் தீ கக்கும் ஓநாயை நான் கனவிலும் பார்த்தது கிடையாது. துஷ்டசக்திகளில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ வந்த போது என்னை அழைத்து அதில் கவனம் வைக்கவும், அதைப் பார்க்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளவும் சொன்னது நீங்கள் தான் ஜீ. அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, இல்லை அதுவும் உங்களுக்கு மறந்து விட்டதா? அப்போதும் கூட எனக்கு அதை வளர்த்துக் கொள்ள மனம் இருக்கவில்லை. கடைசியில் யோகிஜி அவர்களே சொன்ன பிறகு தான் நான் அதற்குச் சம்மதித்தேன். அப்படி நீங்களே என்னை அந்த துஷ்டசக்திகளின் பக்கம் தள்ளி விட்டு இப்போது அபாண்டமாய் பழி சுமத்துகிறீர்களே, என்ன நியாயம் ஜி? தயவு செய்து சொல்லுங்கள்.”
(தொடரும்)
என்.கணேசன்


Wow, wow,, shravan great
ReplyDeleteSmart Shrawan
ReplyDeleteWow. Smart move
ReplyDelete