என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 26, 2026

சதுரங்கம் 7

 

ருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜுன் ஆபிசிலிருந்து வீட்டுக்குக் கிளம்பினான். வீட்டை நோக்கிச் செல்கையில் அவன் மனமெல்லாம் அவனுடைய தாத்தா வாசுதேவன் மீதிருந்தது. மாமனிதராக அவரை அனைவரும் சொல்கிறார்கள். அவர் இறந்து இருபத்திநான்கு வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் இப்போதும் அவர் அன்புடன் நினைக்கப்படுகிறார். கட்சிக்காரர்கள் அவரை நினைப்பதும், அவருக்கு விழா எடுப்பதும் பெரிய விஷயமல்ல. அவர்கள் அவர் பெயரை வைத்துத் தான் இன்றைக்கு பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் நிச்சயம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் அரசியல் சாராதவர்களும், பேரறிஞர்களும், அவரோடு பழகியிருந்த சாதாரண மனிதர்களும் கூட அவரை இன்றும் பெருமையாகத் தான் நினைவு கூர்கிறார்கள்.

 

இப்போதைய ஆளும் கட்சியான தமிழர் சமூக வளர்ச்சிக் கழகம் வாசுதேவன் ஆரம்பித்த கட்சி. அவர் கட்சி ஆட்சியைப் பிடித்த பின் மூன்றரை ஆண்டு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அந்த மூன்றரை ஆண்டு காலமும் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. மக்களுக்கு நீண்ட காலம் நன்றாக உதவக்கூடிய திட்டங்களை வாசுதேவன் அமல்படுத்தினார். அவர் ஆட்சியில் ஊழல் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். கட்சி ஆரம்பித்து கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் செலவு செய்து தன் சொத்தையே முழுவதுமாக அவர் இழந்து விட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அவர் முன்பு இழந்ததை சம்பாதிக்க முயலவில்லை. கடைசி வரை அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல் தலைவராகவும், மக்களின் முதல்வராகவுமே இருந்து அவர் காலமானார்.

 

அவருக்குப் பிறகு தமிழக அரசியல் களமே முற்றிலும் மாறியது. அவர் மரணமடைந்த பின் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தணிகாச்சலம் முதல்வரானார். அந்தக் காலக்கட்டத்தில் அர்ஜுனின் தந்தை ஞானமூர்த்தியோ, சித்தப்பா ராஜாராமோ நினைத்திருந்தால் அந்தக் கட்சியையும், முதல்வர் பதவியையும் எளிதாகக் கைப்பற்றியிருக்க முடியும். வாசுதேவனின் பிள்ளைகள் என்ற தகுதியே அன்று போதுமானதாக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் இருவருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. ஞானமூர்த்தி வக்கீல் தொழிலில் அப்போதே பிரபலமாக இருந்தார். ராஜாராமுக்கும் பதவி ஆசை இருக்கவில்லை.

 

அதனால் தணிகாச்சலம் கட்சியில் தன் செல்வாக்கை வேகமாக பலப்படுத்திக் கொண்டார், அடுத்த தேர்தலிலும் அவருடைய கட்சியே ஆட்சியைப் பிடித்தது. அதன் பின் மெள்ள அவர் தன் மகன் சரவணனை கட்சியில் பிரதானப்படுத்த ஆரம்பித்தார். கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில்  செல்வாக்காக இருந்த இளம் அமைச்சர் ரத்தினம் அதைக் கடுமையாக எதிர்த்தார். தணிகாச்சலத்தின் அந்த முயற்சியை அனுமதித்தால் காலமெல்லாம் தான் இரண்டாவது நபராகவே கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டி வரும் என்று சரியாக ரத்தினம் கணித்தார். அவர் எதிர்ப்பை தணிகாச்சலம் பொருட்படுத்தாமல் போகவே ரத்தினம் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார்.

 

அந்தச் சமயத்தில் தான் ராஜாராம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியலில் நுழைந்தார். அவர் ரத்தினத்தை ஆதரித்தார்.  ராஜாராமின் பேச்சுத் திறமையும், மக்களின் உணர்வுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அவரது சாதுரியமும் தமிழக அரசியல் களத்தில் ரத்தினத்தின் செல்வாக்கை அதிகரித்தது. தணிகாச்சலம் செய்த ஊழல்கள் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைக் குறைத்தது. அடுத்த தேர்தலில் ரத்தினம் முதல்வர் ஆனார். அப்போதும் ராஜாராம் பின்னணியில் இருந்தே அனைத்தையும் இயக்கினாரே ஒழிய கட்சியிலோ ஆட்சியிலோ எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரத்தை விரும்பாத வாசுதேவனின் இளைய மகனாக அவர் புகழ் மக்களிடம் மேலும் பரவியது.

 

அக்காலக்கட்டத்தில் அர்ஜுன் சிறுவனாக இருந்ததால் அரசியல் நிகழ்வுகளின் சூட்சுமமான பின்னணி காய் நகர்த்தல்கள் பற்றி அவனுக்குத் தெரிய வரவில்லை. அவன் வளர்ந்து பெரியவனான பின்னும் வெளிப்படையாக வரலாறான நிகழ்வுகள் மட்டுமே எல்லோரையும் போல் அவன் அறிய முடிந்தது. திரை மறைவில் நடந்தவை மூடுமந்திரமாகவே இருந்தன.

 

ராஜாராமின் தயவால் ரத்தினம் ஆட்சியைப் பிடித்து இரு முறை முதல்வரானார். ரத்தினத்தின் ஆட்சியிலும் ஊழலும் திறமையின்மையும் பிரதானமாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இரண்டு கட்சிகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருந்த ஞானமூர்த்தி மக்கள் நல்வாழ்வுக் கழகம் என்ற கட்சியைத் துவக்கினார்.  தந்தையைப் போலவே நேர்மையாளராக இருந்த அவர் அரசியலுக்கே தேவையான சிறிய சமரசங்களைக்கூடச் செய்து கொள்ளாதவராக இருந்தது, உடனடியாக செல்வாக்கு பெற அவருக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.   

 

அந்த சமயத்தில் இரண்டு முறை முதல்வராக முடிந்தது தன் தனித்திறமையால் என்று நம்ப ஆரம்பித்திருந்த ரத்தினம் ராஜாராமுக்கு முக்கியத்துவம் தருவதைக் குறைக்க ஆரம்பித்திருந்தார். அதனால் ராஜாராமும் ரத்தினத்திடம் அதிருப்தியடைய ஆரம்பித்து இருந்தார். அதனால் அவர் அண்ணன் கட்சிக்கு ஆதரவு தருவார் என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினார்கள். ஏனென்றால் அண்ணனும் தம்பியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் இராம லட்சுமணர்கள் என்று கூடப் பலரும் சொல்வதுண்டு.

 

ஆனால் அந்த சமயத்தில் தணிகாச்சலம் காலமாகி அந்தக் கட்சியைக் கைப்பற்றிய அவருடைய மகன் சரவணன் ராஜாராமிடம் பணிந்து வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக ராஜாராம் சரவணனை ஆதரிக்க ஆரம்பித்தார். ரத்தினத்தின் மீதிருந்த அதிருப்தி, தணிகாச்சலத்தின் மரணம், சரவணன் அனைவரிடமும் காட்டிய பணிவு, ராஜாராமின் ஆதரவு எல்லாமாகச் சேர்ந்து தமிழர் சமூக வளர்ச்சிக் கழகத்தை, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. ரத்தினத்தின் தமிழின முன்னேற்றக் கழகம் வெறும் 45 இடங்களில் மட்டுமே வென்றது. ஞானமூர்த்தியின் மக்கள் நல்வாழ்வுக்கழகம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஞானமூர்த்தி போட்டியிட்ட தொகுதியில் மட்டும் ஓட்டெடுப்பில் அவர் இரண்டாமிடத்தில் இருந்தார். அவர் கட்சி பத்து தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தாலும் சுமார் 50 தொகுதிகளில் மூன்றாமிடத்தில் இருந்தது. அதையே ஞானமூர்த்தி பெரிய வெற்றியாக எண்ணினார்.

 

ஆனால் அர்ஜுனுக்கு அப்பாவின் தோல்வி சகிக்க முடியாததாக இருந்தது. அவர் தன் நேர்மையிலும், கொள்கைப்பிடிப்பிலும் உறுதியாயிருக்காமல், ஓரளவு சமரசம் செய்து கொண்டிருந்தால் கூட குறைந்தது பத்து தொகுதியிலாவது அவர் கட்சி வெற்றியடைந்திருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவர் தன் நேர்மையையும், கொள்கையையும் இழப்பதைத் தான் தோல்வியாக நினைத்தார். அப்படி நினைப்பவரிடம் அவனால் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல முடியவில்லை.   அவருடைய மதிப்பீடுகளும், அளவுகோல்களும் இன்றைய அரசியல் களத்தில் மதிப்பில்லாதவை. அவற்றை வைத்துக் கொண்டு இன்றைய அரசியலில் யாரும் வென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குச் சிறிதும் இல்லை. அதனால் தானோ என்னவோ அவனுக்கு அரசியல் கசந்தது.

 

அவன் சித்தப்பா ராஜாராமின் செல்லப் பிள்ளை. சென்ற தேர்தலுக்கு முன்பு வரை வாரம் ஒரு முறையாவது அவன் அவர் வீட்டுக்குச் சென்று வருவான். சில நாட்களில் அங்கேயே இரண்டு வேளைகளும் சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் அவன் வீடு திரும்புவதும் உண்டு. ஆனால் அவர் கடந்த தேர்தலில் ஞானமூர்த்தியை ஆதரிக்காமல் சரவணனை ஆதரித்ததை அர்ஜுனால் மன்னிக்க முடியவில்லை. இப்போதும் சித்தப்பா குறித்த பெருமை அவனுக்கு உண்டு. இப்போதும் அவன் வெளியாட்கள் யாரிடமும் பேசுகையில் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவனுக்கு அவர் மீது கோபமும் உண்டு. அவர் பல தடவை அவனிடம் அலைபேசியில் பேசிஏன் வீட்டுக்கே வருவதில்லைஎன்று கேட்டிருக்கிறார். அவன் ஒவ்வொரு முறையும் மழுப்பலாகத் தான் பதிலளித்திருக்கிறான்.

 

யோசித்துப் பார்த்தால் அவன் குடும்பத்திற்குள்ளேயே அவனுக்கு விடை தெரியாத புதிர்கள் பல இருக்கின்றன. முன்பு நடந்தவை பற்றி அவன் தந்தை ஞானமூர்த்தி அவனிடம் பேசியதில்லை. அதே போல சித்தப்பா ராஜாரமும் அவனிடம் பேசியதில்லை. பானுமதி சாதாரணமாகவே எதைப் பற்றியும் பேசாதவள். பாட்டி யசோதா பழைய நிகழ்வுகளின் நினைவில் அடிக்கடி மூழ்கியிருப்பவள் என்றாலும் அவற்றைப் பற்றிப் பேசுவது அபூர்வமே. இப்போது தாத்தாவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் சாக்கிலாவது குடும்பத்தினரிடம் பேச வேண்டும்,  கேள்விகள் கேட்க வேண்டும், பழைய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்று அர்ஜுன் மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

(தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment