என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 2, 2025

சாணக்கியன் 181

 

சாணக்கியரைப் பார்த்ததும் விஷாகா அடிவயிற்றில் கலக்கத்தை உணர்ந்தாள். இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. நாக்கு வாயிற்குள் ஒட்டிக் கொண்டது. அவர்கள் திட்டம் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார் என்று உள்மனம் அவளை எச்சரிக்க சிலை போல் சில கணங்கள் நின்றவள் பின் கஷ்டப்பட்டுச் சுதாரித்துக் கொண்டு கைகூப்பினாள். வார்த்தைகளாலும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவு அவசரப்படுத்தினாலும் நாக்கு அசைய மறுத்தது.  

 

சாணக்கியர் நிதானமாக அவளைக் கூர்ந்து பார்த்தார். தனநந்தனின் விசேஷ விஷ நர்த்தகி அவர் கேள்விப்பட்டதை விடவும்  பேரழகாய் இருப்பதைக் கண்டார். அங்கிருந்த இருக்கையில் நிதானமாக அமர்ந்தபடி அவர் மெல்லக் கேட்டார். ”எல்லா ஏற்பாடுகளையும் நீ கச்சிதமாகச் செய்து விட்டாயிற்றா பெண்ணே?”

 

அவர் எந்த ஏற்பாடுகளைக் கேட்கிறார் என்பதை அவர் முகத்தை வைத்து அவளால் ஊகிக்க முடியவில்லை. இரட்டை அர்த்தத்துடன் அவர் கேட்ட கேள்வி அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் வந்திருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது போல் அவளுக்குத் தோன்றியதால் அதிர்ச்சி கூடியது. இதயம் வெடித்து விடுவது போல அவள் உணர்ந்தாள். ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் தலையசைத்தாள். நடன ஏற்பாடுகளையே அவர் கேட்பதாக அவள் எடுத்துக் கொண்டதாக இருக்கட்டும் என்று நினைத்தாள்.

 

ஆனால் அவர் அவள் உத்தேசத்தை முழுதும் தெரிந்து கொண்டதை அடுத்த கேள்வியில் உறுதிப்படுத்தினார். “அரசனைக் கொல்ல முயற்சிப்பதற்கு என்ன தண்டனை என்பது உனக்குத் தெரியுமா பெண்ணே?”

 

அவள் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று மீண்டும் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. எல்லாம் அறிந்து கொண்டு வந்திருக்கும் மனிதரிடம் மறுக்க வழியில்லை. அது அவரை மேலும் கோபமூட்டலாம்... அவள் பலவீனமான குரலில் சொன்னாள். “இந்த அபலையை மன்னித்து விடுங்கள் பிரபு.”

 

அவர் ஒன்றும் சொல்லாமல் அவளையே அமைதியாகக் கூர்ந்து பார்த்தார். அவருடைய அமைதி அவளை மேலும் அதிகமாய் பயமுறுத்தியது. இனி இவரிடம் எதையும் மறைக்க முடியாது என்பது தெளிவாகப் புரிந்ததால் அவள் கனத்த மனதுடன் உண்மையைச் சொன்னாள். “நடந்திருப்பதை நான் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் இதற்குச் சம்மதித்தேன் பிரபு. சற்று முன் தான் இளவரசியின் விருப்பத்தினாலேயே இந்தத் திருமணம்  நடைபெறவுள்ளது என்பது தெரிந்தது. அந்த உண்மை தெரிந்தவுடனேயே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டேன். என்னால் இளவரசிக்கு எந்தத் துக்கமும் எந்தக் காலத்திலும் வராது என்பதைச் சத்தியம் செய்து கூறுகிறேன் பிரபு.”

 

சாணக்கியர் சொன்னார். “நீ இந்தத் திட்டத்தைக் கைவிட்டாலும் கூட, சந்திரகுப்தனின் உயிருக்கு இருக்கும் ஆபத்து நீங்கி விடாது பெண்ணே. அவனைக் கொல்ல உத்தேசித்திருக்கும் பர்வதராஜன் வேறு விதமான முயற்சிகளைக் கண்டிப்பாக மேற்கொள்வான். நீ மறுத்தால் வேறு ஒரு ஆளை வேறு விதமான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுத்துவான். இளவரசியையும், மகதத்தையும் தன் மகனுக்குப் பெற்றுத் தரும் சகல முயற்சிகளையும் அவன் எடுப்பான்...”

 

விஷாகா யோசனையுடன் கேட்டாள். “உங்கள் கண்காணிப்பை மீறி அவர் அரசரை என்ன செய்து விட முடியும் பிரபு?”

 

எதிரிகளை எல்லா நேரங்களிலும் கண்காணிக்க முடியும் பெண்ணே. ஆனால் நட்பின் போர்வையில் இருந்து கொண்டு நம்மை வீழ்த்தத் திட்டமிட்டுக் காத்திருப்பவர்களை வெளிப்படையாகக் கண்காணிப்பது நமக்கிருக்கும் சந்தேகத்தை வெளிப்படுத்திவிடும். அதனால் அது உசிதமுமல்ல.”

 

அப்படியானால் என்ன செய்வது பிரபு?” என்று அவள் உண்மையான கவலையுடன் கேட்டாள்.

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார்.  ”நீ நினைத்தால் பர்வதராஜனின் சதிமுயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்

 

லை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்ததை பர்வதராஜன் கட்டளைப்படி நடப்பதாக வெளியாட்கள் நினைத்தாலும் என்ன நடக்கின்றது என்று பர்வதராஜனுக்கே புரியவில்லை. நிகழ்ச்சி நிரலே சற்று முன் தான் அவனுக்குச் சொல்லப்பட்டது. முதல் நாள் மாலை நிகழ்ச்சி நடன நிகழ்ச்சியாம். மறு நாள் காலை இசை நிகழ்ச்சிகளும், மாலை வாத்திய நிகழ்ச்சிகளும். அதற்கடுத்த நாள் காலை வாத்தியங்களின் இசை நிகழ்ச்சிகள் மாலை நாடக நிகழ்ச்சி. தன் கையில் நிகழ்ச்சி நிரல் கிடைத்ததும் முதல் வேலையாக பர்வதராஜன் அதை சந்திரகுப்தனுக்கும், மரியாதை நிமித்தம் சாணக்கியருக்கும் அனுப்பி வைத்தான்.

 

மலைகேது தாழ்ந்த குரலில் கேட்டான். “இதில் எந்த நிகழ்ச்சியில் சந்திரகுப்தனைக் கொல்வதாக இருக்கிறார்கள்?”

 

பர்வதராஜன் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “யாருக்குத் தெரியும்? ராக்ஷசரும், சாணக்கியரைப் போலவே இப்படி ரகசியங்களைக் காப்பதில் விவரமாகத் தான் இருக்கிறார். எதை எப்போது எப்படி செய்யப் போகிறோம் என்று சொல்ல மறுக்கிறார். முன்கூட்டியே நமக்குத் தெரிந்தால் முடிந்த வரை அந்த நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து தொலைதூரம் இருக்கலாம் என்று பார்க்கிறேன். ஆனால் நமக்கு இதில் சம்பந்தம் இருப்பது போல் கண்டிப்பாகத் தெரியாது என்று ராக்ஷசர் வாக்களித்திருக்கிறார். அதனால் எப்படியோ செய்யட்டும். நமக்குக் காரியமானால் சரி.”

 

மலைகேது தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “தந்தையே, உண்மையில் மகத இளவரசி மனமுவந்து தான் சந்திரகுப்தனை மணக்க சம்மதம் தெரிவித்தாள் என்பது பிற்பாடு ராக்ஷசருக்குத் தெரிய வந்தால் நமக்குப் பிரச்னை ஆகாதா?”

 

பர்வதராஜன் புன்னகைத்தபடி சொன்னான். “சந்திரகுப்தன் இறந்த பின் தெரிய வரும் விஷயங்களைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அப்படியே அவர் உண்மை தெரிய வந்து நம்மிடம் கேட்டாலும் நாமும் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளலாம். “உண்மை அதுவா? முன்பே தெரிந்திருந்தால் நாங்களே முன்வந்து இருவர் திருமணத்தையும் நடத்தி விட்டிருப்போமேஎன்று அங்கலாய்க்கலாம். கண்ணீர் விடலாம். பின் நடக்க வேண்டியதைப் பார்ப்பது முக்கியம் என்று தத்துவம் பேசி உங்கள் இருவர் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யலாம்.”

 

சாணக்கியர் சந்திரகுப்தன் மரணத்தைத் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது தந்தையே?”

 

மகனே ஒன்றை நினைவு வைத்துக் கொள். சந்திரகுப்தன் இல்லா விட்டால் சாணக்கியர் பூஜ்ஜியம் தான். இன்னொரு சந்திரகுப்தனை உருவாக்கும் அளவு அவரிடம் காலம் இல்லை. அதே போல் அரசன் இல்லாத ராக்ஷசரும் பூஜ்ஜியம் தான். அவரும் நமக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. சூழ்நிலை நமக்குத் தான் சாதகமாக இருக்கிறது மகனே. நீ அரியணையில் அமரும் போது அவர்கள் உன்னை அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கும். அதனால் நீ கவலைப்படாதே.”

 

மலைகேது கனவு காண ஆரம்பித்தான்.

 

சுசித்தார்த்தக் பரபரப்புடன் வருவதைப் பார்த்த பர்வதராஜன் கேட்டான். “என்ன சுசித்தார்த்தக், பரபரப்பாகத் தெரிகிறாயே?”

 

சுசித்தார்த்தக் புன்னகைத்தான். “நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றன. எல்லாம் நல்லபடியாக மாறப்போகின்றது. அந்த எதிர்பார்ப்பும், இன்று மாலையின் நடன நிகழ்ச்சியை எதிர்பார்த்தும் பரபரப்பை உணர்கிறேன் அரசே

 

நல்ல நிகழ்வுகள் நடக்கவிருப்பதன் எதிர்பார்ப்பு புரிகிறது சுசித்தார்த்தக். ஆனால் நடன நிகழ்ச்சியை எதிர்பார்த்து நீ பரபரப்படைவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லையே

 

சுசித்தார்த்தக் முகம் மலர்ந்து சொன்னான். “அரசே, இன்றைய நடன நிகழ்ச்சியின் பிரதான நர்த்தகி விஷாகா பேரழகி என்று சொல்வதே அவள் அழகைக் குறைத்துச் சொல்வது போல. அவளைப் போன்ற அழகியையும், நாட்டியமாடுபவளையும் நீங்கள் எங்குமே பார்த்து விட முடியாது. அவள் அரசர் தனநந்தரின் மனம் கவர்ந்தவள். அவள் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே நடனமாடுபவள். அவளுடன் சேர்ந்து மற்ற நர்த்தகிகளும் நடனமாடுவார்கள் என்றாலும் அரங்கில் இருப்பவர்கள் கண்களை அவள் மீதிருந்து விலக்க முடியாமல் தவிப்பார்கள்...”

 

அவன் சொன்னதைக் கேட்டு பர்வதராஜனும், மலைகேதுவும் ஆர்வம் கொண்டார்கள். சுசித்தார்த்தக் சொன்னான். “நீங்கள் சீக்கிரம் மதிய உணவருந்தி சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டு கிளம்பினால் தான் மாலை நடனத்திற்குப் புத்துணர்ச்சியோடு செல்ல முடியும். முழுவதுமாக ரசிக்கவும் முடியும்.”

 

அப்படியே செய்கிறோம். நீ நாங்கள் உணவருந்த ஏற்பாடுகளைச் செய்என்ற பர்வதராஜன் மிகவும் அன்னியோன்னிய பாவனை காட்டி சுசித்தார்த்தக்கிடம் ரகசியமாகக் கேட்டான். “அவர்கள் திட்டத்தை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?”

 

தெரியவில்லை அரசே. ஆனால் ராக்ஷசர் ஒரு நாள் கலைநிகழ்ச்சி போதாது, இரண்டு மூன்று நாட்கள் கலைநிகழ்ச்சிகள் வேண்டும் என்று பிரத்தியேகமாகச் சொன்னதை வைத்துப் பார்க்கையில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் உத்தேசம் இருக்கும் என்று இந்த அடியவனுக்குத் தோன்றுகிறது.”

 

அவன் சொன்னது பர்வதராஜனுக்கும் சரியாகவே தோன்றியது.


(தொடரும்)

என்.கணேசன்   





No comments:

Post a Comment